தாமரை பெண் பார்க்கப் படுகிறாள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 5,950 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கழுத்தைச் சுற்றியிருந்த அங்கவஸ்திரத்தால் – முகத்தில் அரும்பிய வியர்வையை ஒற்றிக்கொண்டே அப்பா என்னிடம் பட படத்தார்.

“என்னம்மா தாமரை? இன்னமுமா நீ ரெடியாகலை? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சரியா நாலரை மணிக்கு வந்துடு வாங்கம்மா பார்க்க வரப்போறது உன்னைத்தாங்கிற நினைப்பே கொஞ்சம் கூட இல்லாத மாதிரி முகத்தைக்கூட அலம்பிக்காம் இருக்கியேம்மா? போம்மா போ. சீக்கிரமா ரெடி. பண்ணிக்க”.

பஜ்ஜியையும். கேசரியையும் ஒரு வழியாய் முடித்துவிட்டு மூக்கின் மேல் படிந்த கரி மசியோடு சமையலறையிலிருந்து வெளிப்பட்ட என் அம்மாவும் அப்பாவுடன் சேர்ந்து கொண்டாள். “நானும் அப்பவே பிடிச்சு சொல்லிச் சொல்லிப் பார்த்துட்டேன். நகர மாட்டேங்கறா… சுவத்துக்குச் சாஞ்சிகிட்டு. நகத்தைக் கடிச்சுக்கிட்டு பாழாப்போன கதைப் புத்தகத்தைப் படிச்சுக்கிட்டே இந்நேரம் வரைக்கும் உட்கார்ந்திருந்தா. இப்ப உங்க தலையைப் பார்த்ததும்தான் எந்திரிச்சு நின்னிருக்கா….”

“சரி…சரி… குழந்தையை பார்க்க வர்ற நாள்லே அநாவசியமா அதைக் கரிச்சுக் கொட்டாதே…” ஒரே மகளான என்னை யாராவது இரண்டு வார்த்தை கடுமையாப் பேசினா அப்பாவுக்குப் பொறுக்காது.

“இப்பக் கல்யாணம் பண்ணினா அடுத்த ஏழாவது மாசம் சீமந்தத்துக்குத் தயாரா வந்து நிப்பா…இவ! குழந்தையாம்… குழந்தை…” அம்மா சிடுசிடுத்தாள்.

அப்பா கோபமாய் அம்மாவைப் பார்த்தார், “முதல்லே உன்னோட மூஞ்சியை அலம்பிக்கோ, மூக்கு மேலே வாணலி கரி அட்டையாட்டம் ஒட்டிக்கிட்டிருக்கு. வரப் போற மாப்பிள்ளைப் பையன் சிரிக்கப் போறான்…”

அம்மா முகத்தை நொடித்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைத்து கொண்டாள். அப்பா வாசல் பக்கமா நகர நான் சிரித்துக் கொண்டே கொடியில் காய்ந்து கொண்டிருந்த டவல் ஒன்றை எடுத்துத் தோளில் போட்டபடி குளியலறைக்குள் நுழைந்தேன்.

இன்றைக்கு என்னைப் பார்க்க வருகிற இந்த மாப்பிள்ளையைப்பற்றி எனக்கு முன்பே தெரியும். வெங்கடேஸ்வரன் என்கிற இதே மாப்பிள்ளைதான் பக்கத்துத் தெருவில் இருக்கும் என் தோழி உதயாவைப் போன மாதம் பெண் பார்த்துவிட்டுப் போய் – அவளைப் பிடிக்கவில்லை யென்றும் உதயாவின் தங்கை பிரியாவைப் பிடித்திருப்பதாகவும் வேண்டுமானால் அவளைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கடிதம் போட்டிருந்தார்கள்.

உதயா பிரியாவை காட்டிலும் அழகில்ஒரு மாற்றுக் குறைவுதான். என்றாலும் பார்ப்பதற்கு இருவரும் லட்சணமாகத்தான் இருந்தார்கள். இருந்து என்ன செய்ய? அந்த வெங்கடேஸ்வரன் என்கிற மாப்பிள்ளைத் தடியனுக்குப் பிரியாவைத்தான் பிடித்திருக்கிறதாம். மூத்தவள் இருக்க இளையவளைக் கல்யாணம் செய்து கொடுக்கும் வழக்கம் எங்கள் குடும்பத்தில் இல்லை யென்று உதயாவின் பெற்றோர் உதட்டைப் பிதுக்கிவிட வேறு எங்கேயெல்லாமோ படையெடுத்துப் பெண் பார்த்து யாரையும் பிடிக்காமல் இப்போது என்னை இலக்காக வைத்துக் கொண்டு வரப் போகிறார்கள்.

போன வாரம் உதயாவைச் சந்தித்த போது என்னிடம் நடந்ததை யெல்லாம் கூறி அழுது தீர்த்தாள். அவளை அழவைத்த அந்த வெங்கடேஸ்வரன் இன்றைக்கு என்னைப் பார்க்க வரப் போகிறான். பொள்ளாச்சி சந்தையில் மாடு பிடிக்கப் போகிறவனுக்கும் பெண் பார்க்கப் போவதாய்ச் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு வீடு உலா வந்து பொழுதைப்போக்கிக்கொண்டிருக்கும் இந்த வெங்கடேஸ்வரனுக்கும் என்ன வித்தியாசம்?

***

ஒரு வழியாய் ஆகாய வர்ணப் பட்டுப் புடவையில் அடக்கமாகி, அம்மா வைத்து விட்ட குங்குமப் பொட்டிலும் சூடிவிட்ட மல்லிகைப் பந்திலும் செயற்கையாய் வர வழைத்துக் கொண்ட ஒருவித அடக்கத்திலும் ஒருவனால் ‘நான்’ பார்க்கப்படுகிற அந்த நிகழ்ச்சிக்குத் தயாரானேன்.

கையைச் சொடுக்கி. திருஷ்டி கழித்து, ‘ராஜாத்தி மாதிரி இருக்கே… என் கண்ணே பட்டுடும் போலிருக்கு’ என்று அம்மா தன் மாமூலான வசனத்தைச் சொல்லிய அதே நேரம்…

வாசலில் டாக்சி ஒன்று வந்து நிற்கும் சத்தமும், இரண்டொரு நிமிடங்களுக்குப் பிறகு டாக்ஸியின் கதவுகள் திறந்து அறையப்படும் சத்தமும் கேட்டது.

“வாங்கோ…வாங்கோ.” – அப்பா எப்படி இவ்வளவு பவ்யமாய்க் கும்பிடு போடக் கற்றுக் கொண்டார்! மத்திய சர்க்கார் அலுவலகம் ஒன்றில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கீழ் பணிபுரியும் மிடுக்கான அப்பா இப்படி முன் பின் தெரியாதவர்களைத் தெய்வமாய்ப் பாவித்துக் கொண்டு சேவிப்பது போல் கைகளைக் குவிப்பது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. முகத்தில் இருந்த மலர்ச்சியைக் குறைய விடாமல் பார்த்துக் கொண்டார் அப்பா.

”சொன்னபடி கரெக்டா ஃபோர் தர்ட்டிக்கே வந்துட்டீங்களே! ஐ அப்ரிஷியேட் யுவர் பங்க்சுவாலிடி…” அப்பா தேவையில்லாமல் ஐஸ் வைத்துப் பேசினார்.

சமையலறை ஜன்னல் வழியே கழுத்தை எக்கிப் பார்த்தேன். மாப்பிள்ளை வெங்டேஸ்வரன் போட்டோவில் பார்த்த மேனிக்குப் பழுதில்லாமல் – வாட்ட சாட்டமாய் கிரீம் கலர் சபாரி டிரஸ்ஸில் – முகத்தில் பவுடர் பூச்சுக் கொஞ்சம் அதிகமாகத் தெரிய அசட்டுத்தனமாய்ப் புன்னகைத்தபடி சோபா கம் – பெட்டில் சாய்ந்திருந்தான்.

எனக்கு மாமனாராகப் போகும் எண்ணத்தோடு வந்திருந்த மாப்பிள்ளையின் வழுக்கைத் தலை அப்பாவும் மாமியார்க்கே உரித்தான உர்ராங் முகத்தோடு மாப்பிள்ளையின் அம்மாவும் தங்களுடைய இரட்டை நாடி சரீரங்களை எங்கள் வீட்டுத் தளர்ந்துபோன பிரம்பு நாற்காலிகளில் ஆரோகணிக்க வைத்திருந்தார்கள்.

“தலையைக் குனிஞ்சிக்கோ! போனதும் பெரியவங்களுக்கும் மாப்பிள்ளைக்கும் நமஸ்காரம் செய்; மாப்பிள்ளையின் அம்மா ஏதாச்சும் கேட்டா கேட்ட கேள்விக்கு மாத்திரம் வாயைத் திறந்து அடக்கமா பதில் சொல்லு. வழக்கமா எல்லார் கிட்டேயும் வாய் ஆடற மாதிரி அவங்ககிட்ட ஆடாதே. பாடச் சொன்ன பிகு பண்ணிக்காம பாடு. சேலைத் தலைப்பை நல்லா இழுத்து விட்டுக்கோ.” – அம்மாவின் வாயிலிருந்து சரமாரியான புத்திமதிகளை இடது காதில் வாங்கி வலது காதில் விட்டுக் கொண்டே தாம்பூலத் தட்டோடு மாப்பிள்ளையின் முன்னால் வந்தேன். பொதுவாய் எல்லோருக்கும் சேர்த்து ஒரு சாதாக் கும்பிடு போட்டேன்.

மாப்பிள்ளை வெங்கடேஸ்வரன் என்னை இமைக்காமல் பார்ப்பது எனக்குத் தெரிந்தது. கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாத பார்வை. அடித்துச் சாப்பிடப் போகும் கோழி எவ்வளவு கிலோ தேறும் என்று பார்ப்பது போல் ஒரு கணிப்பு அந்தப் பார்வையில் தெரிந்தது.

“வாம்மா… உட்கார்….” எனக்கு ‘மாமியார்’ ஆவதற்காக அப்ளிகேஷன் போட வந்த அந்த அம்மாள் என்னைக் கையைப் பிடித்து உட்கார வைத்தாள்.

உட்கார்ந்தேன்.

“உன்னோட பேரென்னம்மா?” – அந்த அம்மாள் கேட்டாள்.

“தாமரை….”

“என்ன படிச்சிருக்கே?”

“பி.எஸ்.ஸி.” – தான் பதில் சொல்லச் சொல்ல அந்த அம்மாளின் கண்கள் சரசர வென்று என் உடலை மேய ஆரம்பித்தது. காதிலும் மூக்கிலும் கழுத்திலும் இருந்த ‘தங்கச் சமாசாரங்கள்’ எவ்வளவு தேறும் என்று கணக்கு பார்த்துத் திருப்தியாய்ப் புன்னகைத்துக் கொண்டாள். என் அம்மா இருந்த பக்கமாய்த் திரும்பிச் சொன்னாள்:

“பொண்ணு எங்களுக்கு ரொம்பவும் பிடித்தம்…இதுவரைக்கும் நாங்க பெண் பார்க்கப் போன இடங்கள்லே பெண் பிடிச்சிருக்குன்னு உடனே சொல்லிட மாட்டோம். ஊருக்குப் போய்க் கடிதாசு போடற தாத்தான் சொல்லுவோம்… ஆனா உங்க பொண்ணு எங்களை இங்கேயே ‘சம்மதம்’ சொல்ல வைச்சுட்டா.”

என்னுடைய மாமனார்(?) கைகளில் ஜால்ரா கட்டைகள் இல்லாமலே “ஆமா..ஆமா…” என்று தலையை ஆட்டித் தாளம் போட்டார்.

என்னுடைய அம்மா வாயெல்லாம் பல்லாகச் சிரிக்க அப்பா தம் முகமெல்லாம் வாயாகப் பூரித்துப் போனார்.

“என்னடா வெங்கடேஷ்… பொண்ணு உனக்குப் புடிச்சிருக்கா?” – மாப்பிள்ளையின் அம்மா கண்களைச் சிமிட்டியபடி தன் மகனைக் கேட்க –

“ரொம்ப…” – பெண் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டுப் போய் புது மனிதர்கள், புது வீடு என்கிற ஒரு இங்கிதம்கூட இல்லாமல் மாப்பிள்ளை ‘ஈ’ யென்று இளிக்க –

என்னுள் பற்றி எரித்தது.

அம்மா சின்னப் பெண்ணாய் ஓடியாடிப் பரிமாற ஆரம்பித்தாள், விரல் நுனிகளில் கேசரித் தட்டைக் காலி செய்துவிட்டு வெங்காய பஜ்ஜிகளைக் கெட்டியான தேங்காய் சட்னியில் ஆழமாய்த் தோய்த்து வாய்க்குள் திணித்து ‘பேஷ் பேஷ்’ என்று ராக ஆலாபனை செய்து சுடச் சுடக் கள்ளிச் சொட்டாய் இருந்த காப்பியைத் துளித் துளியாய் வயிற்றுக்குள் இறக்கிக் கொண்டு வாசனைப் பாக்காலும் ஒரு கவுளி வெற்றிலைக் கொழுந்து களாலும் வாயை லிப்ஸ்டிக்காய்ச் சிவக்க வைத்துக் கொண்டு புறப்பட எழுந்தவர்களை “ஒரு நிமிஷம்!” என்று கூறி நிறுத்தினேன். எல்லோரும் முகம் மாறித் திகைத்துப் போய் என்னைப் பார்க்க –

நான் மாப்பிள்ளையின் அம்மாவிடம் கேட்டேன். ”உங்களுக்கு இவரைத் தவிர்த்து கமலேஸ்வரன் என்கிற பேரில் இன்னொரு மகன் இருக்கிறார். இல்லையா?”

“ஆமா, இருக்கான். அவன் சின்னவன். இவன் பெரியவன். ஏம்மா கேக்கறே?”

“ஒண்ணுமில்லை…போன வாரம் அவரை ஒரு இண்டர்வ்யூல பார்த்தேன். உங்க பெரிய மகனைக் காட்டிலும் சின்ன மகன் கொஞ்சம் நிறம் கூடுதல், சுருண்ட கிராப் இல்லையா?”

“ஆமா….ஆமா…”

“எனக்கு அவரை ரொம்பவும் பிடிச்சிருக்கு… உங்களுக்கு ஆட்சேபணை இல்லையானா உங்க சின்ன மகனுக்கு என்னைப் பாருங்களேன்….”

“தாமரை! என்ன பேச்சுப் பேசறே?” அப்பாவின் குரலில் கோபம் வெடிக்க –

அம்மா பதற்றத்தோடு ஓடிவந்தாள்!.

“மிஸ்டர் வெங்கடேஸ்வரன் சார்! நீங்க மட்டும் ஒரு இடத்துல அக்காவைப் பெண் பார்க்கப் போயிட்டு அழகா இருக்கிற தங்கச்சியைப் பார்த்த பின்னாடி அவளை கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியுமான்னு கேக்கலாம். அதையே நான் மட்டும் திருப்பிக் கேட்கக்கூடாதா? தனக்கு வரப்போகிற மனைவி அழகா இருக்கணும்னு நினைக்க உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே மாதிரி தனக்கு வரப்போகிற கணவனும் அழகா இருக்கணும்னு ஒரு பெண் நினைக்க உரிமை இருக்கு. நீங்க அக்காவைப் பார்க்க வந்துட்டு அழகா இருக்கிற தங்கச்சி மேலே ஆசைப்பட்டா. இன்னொருத்தி உங்களைத் தவிர்த்துவிட்டு உங்க தம்பி மேலே ஆசைப் படக் கூடாதா என்ன? என்னோட பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆத்திரமும் கோபமும் அவமானமும் ஒண்ணாக் கலந்து வரலாம். ஆனா இதே கோபமும் ஆத்திரமும் அவமானமும் நீங்க நிராகரிச்ச அந்த உதயாவுக்கும் ஏற்பட்டிருக்கும்கிறதை மறந்துடாதீங்க….நான் பேசின இத்துணை பேச்சுக்குப் பின்னாடியும் நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புவீங்கன்னு நான் எதிர்பார்க்க மாட்டேன். உங்க கிட்ட ஒரு சின்ன ரிக்வஸ்ட் மட்டும் கேட்டுக்கறேன். கல்யாணமாகாத என்னை மாதிரி இருக்கிற ஆயிரக் கணக்கான பெண்களின் சார்பில் கேட்டுக்கிறேன். பெண் பார்க்கிற வைபவத்தை ஒரு ஹாபியா நினைச்சுக்கிட்டு பல பெண்களோட கண்ணாடி மனசுகளை நொறுங்கடிச்சுக்கிட்டு இனி மேலும் வீடு வீடாப் புகுந்து வராதீங்க…ப்ளீஸ்!”

நெற்றியில் வியர்வை துளிர்க்கப் பேசி முடித்தேன்.

இருண்டுபோன முகங்களோடு அவர்கள் டாக்ஸியை நோக்கி நடக்க –

அம்மாவும் அப்பாவும் பிரமித்து நிற்க –

நிறைந்துபோன மனத்தோடு நான் என் அலங்காரங்களைக் களைய ஆரம்பித்தேன்.

– 02-11-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *