தாத்தா எப்ப வருவார்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 2,946 
 

தொலைபேசி ஒலித்தது

பாத்திபன் கனவு படித்துக் கொண்டிருந்தேன். யார் இந்த நேரத்தில்? என்று எண்ணியபடி தொலைபேசியை எடுத்தேன். மகன்தான் பேசினான்.

“அப்பா மதியை பள்ளியில் சேர்க்க வேண்டும். காலை ரயிலுக்கு புறப்பட்டு வண்டலூர் இறங்கி கொளப்பாக்கம் வந்துருங்க… என்றான்.

“மதிக்கு இன்னும் நாலு வயது கூட ஆகலேயே இதற்குள்ளாகவா சேர்க்க வேண்டும்” என்றேன்.

“சரி வரேன்பா” என்று தொலைபேசியை வைத்தேன்.

மீண்டும் பாத்திபன் கனவில் மூழ்கினேன்.

மனைவி வந்தாள்… “எங்கிருந்து போன் என்றாள்”

“மகன்தான் பேசினான். மதியை பள்ளியில் சேர்க்கப்போகிறார்களாம்.”

“இதற்குள்ளாகவா.. மூணரை வயசுதானே ஆகிறது.”

“அங்கு மூணு வயது பிள்ளைகளே பள்ளிக்குப் போறாங்களாம் நான் காலை ரயிலுக்குப் போகிறேன்…” என்றேன்.

“மதிக்கு ஏதாவது செய்து தருகிறேன் எடுத்துக்கொண்டு போங்க…” என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள் மனைவி.

காலை ரயிலில் கிளம்பி வண்டலூரில் இறங்கி கொளப்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறி கொளப்பாக்கத்தில் இறங்கினேன். மகன் வந்திருந்தான். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வீடு இருந்தது. மோட்டர் பைக்கில் சென்றோம்

பேரன் வீட்டு வாயிற்படியிலேயே கூடையோடு பள்ளிக்குச் செல்லத் தயாராக உட்கார்ந்திருந்தான். தாத்தா எப்ப வருவார்னு? காத்திருப்பது போல உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும்…. “தாத்தா வந்துட்டாங்க…”ன்னு குதித்து கும்மாளம் போட்டான் அருகில் சென்று தூக்கிக் கொண்டேன்.

“ஸ்கூல் போவலாம் தாத்தா” என்றான் மழலை மொழியில்.

அவனது ஆர்வம் கண்டு மகிழ்ந்தேன்.

வாங்கிச் சென்ற ஆப்பிள் பழங்களில் ஒன்று எடுத்து நறுக்கிக் கொடுத்தேன்… மதிக்கு ஆப்பிள் தின்பதில் கவனம் சென்றது.

மருமகள் கொடுத்த குளிர்ந்த பழச்சாற்றை குடித்தேன்.

இங்கே நிறைய கான்வென்ட் பள்ளிக்கூடம் இருக்குதுப்பா… நீங்க போய் பார்த்துவிட்டு எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்று சொல்லுங்கள் சேர்த்துவிடலாம்… என்று மகன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “போகலாமா தாத்தா” என்றான் மதி.

“இன்னிக்கு லீவுடா… தாத்தா நாளைக்கு அழைச்சிட்டு போவார்டா” என்றான் மகன் மதி அமைதியானான்.

மகன் அலுவலகம் சென்றுவிட்டான்.

பட அட்டைகள் வாங்கிப் போயிருந்தேன்… அதைப்பார்த்து பெயர்களைச் சொன்னான். தமிழிலும், ஆங்கிலத்திலும் இருந்த பட அட்டைகளை அவன் ஒவ்வொன்றாக எடுத்து படம் பார்த்து சொன்னான். மதிய உணவு இருவரும் சாப்பிட்டு விட்டு சற்று ஓய்வுக்குப் பின் எழுந்தேன். மதி தூங்கிக் கொண்டிருந்தான். ஓசை படாமல் எழுந்து பள்ளிகளைப் பார்த்து வரக் கிளம்பினேன்.

வீட்டு அருகிலேயே அரசு தொடக்கப்பள்ளி இருந்தது. வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. கட்டிடத்தின் உள்ளே மூன்று வகுப்புகளும் வேப்பமரத்து நிழலின் இரண்டு வகுப்புகளும் இயங்கி வந்ததைப் பார்த்தேன். பள்ளிக்கு எதிரில் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்பட்டது.

சிறிது தூரம் சென்றேன். JAMES CONVENT SCHOOL என்ற பெயர்ப்பலகை காணப்பட்டது. உள்ளே சென்றேன். ஒருவர் வரவேற்று உட்கார வைத்தார்.

“இங்கு என்னென்ன வகுப்பு உள்ளது என்று கேட்டேன்.”

பிரிக்கேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி., மூன்று நிலை வகுப்புகள் என்றார் அவர் வகுப்புகள் குறைவாக உள்ளதே என்றேன்.

சென்ற ஆண்டுதான் தொடங்கப்பட்டது. இதன் பிரதானப் பள்ளி தாம்பரத்தில் உள்ளது. அதில் இதுவும் ஒன்று என்றார். அவரைச் சேர்த்து நான்கு பேர்களே இருந்தனர். மாணவ – மாணவியர் கீழே சிப்பு டிராயரும் மேலே மஞ்சள் சட்டையும் போட்டிருந்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் முப்பது முப்பத்தைந்து பேர்கள் இருந்தனர். கட்டணம் எவ்வளவு என்று கேட்டேன். மயக்கமே வந்துவிட்டது. அதை நடத்துபவர் ஆசிரியர் பயிற்சி பெற்றவரும் அல்ல. மின்சார இலாக்காவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதில் வேலை செய்யும் மூன்று பெண்களில் இருவர் அவரது மகள்கள். ஒருவர் வெளியூர் பெண். அனைவருமே மேனிலைப்பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். வியாபார நோக்கில் இயங்கும் பள்ளி என்று உணர்ந்தேன்.

அந்தப் பள்ளிக்கு ஒரு வேனும் நிறுத்தப்பட்டிருந்தது. சொந்தமாக வாங்கியதாக இருக்காது. மாணவ – மாணவிகளின் மாதாந்திர வசூலில் தவணை முறையில் வாங்கியது என வேனில் இருந்த டிரைவரிடமிருந்து தெரிந்து கொண்டேன்.

பிரதான சாலையைக் கடந்துசென்றேன். அங்கே John kennedy matriculation school என்ற பெயர்பலகை கண்ணில் பட்டது. கூரைக் கொட்டகை அங்கும் இங்கும் தனித்தனியே இருந்தன. ஒரு புதிய கட்டிடம் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது. சில ஆசிரியைகள் நின்றிருந்தனர். ஓடு போட்ட சில கொட்டகைகளிலும் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன விசாரித்தேன்.

எல்.கே.ஜி படிப்புக்கட்டணம், கட்டிடநிதி, சிறப்புக் கட்டணம், வேன் கட்டணம் என்று பெருந் தொகையும். சீருடையும் பள்ளியிலேயே வாங்க வேண்டும் என்ற கண்டிப்பும் எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. இந்த பள்ளியை நடத்தும் ஒரு அம்மையார் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்றவர். குழந்தைகள் மண் தரையில்தான் உட்கார்ந்திருந்தனர். ஆசிரியை ஒருவரை விசாரித்ததில் ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ஐநூறு மட்டுமே என்பதும் இரண்டு பேர்கள் மட்டுமே பட்டப்படிப்பு மற்றவர்களில் ஒருவர் ஆசிரியர் பயிற்சி பெற்றவர் மற்றவர்கள் அனைவருமே மேனிலைப் பள்ளிக்கல்வி முடித்தவர்கள்.

ஆங்கிலக்கல்வியை பயன்படுத்திக் கொண்டு அவரவர்கள் விருப்பதிற்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கிறார்கள். அரசு இதை முறைப்படுத்தவும் மனமில்லை. வேதனையோடு சாலையிலேயே மற்றொரு பள்ளி இருப்பதாக கேள்விப்பட்டுச் சென்றேன். அது ஒரு கிறிஸ்த்துவப்பள்ளி. ஊரில் இருந்து சற்று தொலைவில் இருந்ததால் அது பற்றி விசாரிக்காமலேயே திரும்பினேன்.

பேருந்துக்குக் காத்திருந்த ஒருவரை இது பற்றி விசாரித்தேன். வண்டலூர் பகுதியில் நல்ல பள்ளிகள் இருப்பதாகவும். வேன் வசதி இருப்பதாகவும் கூறினார். மறுநாள் சென்று பார்க்கலாம் என்று வீட்டிற்குச் சென்றேன். மகனிடம் சொன்னேன். நாளை வண்டலூர் சென்று பார்த்து விட்டு வரச்சொன்னான்.

வண்டலூர் சென்றேன். பெயர்பலகை காணவில்லை, சுவற்றில் எழுதி இருந்தார்கள். உள்ளே சென்று விசாரித்தேன். பிறந்த சான்றிதழ், பள்ளி சேர்க்கை விண்ணப்பத்திற்கு தனி கட்டணம் பெற்றோர் படித்தவர்களாக இருக்க வேண்டும், பட்டம் பெற்றிருந்தால் முதல் சலுகை, பருவக் கட்டணம் மிகவும் கணிசமான தொகை தெரிவிக்கப்பட்டது. புத்தகங்கள், நோட்டுகள் தனி கட்டணம், வேனுக்குத்தனி கட்டணம், எல்லாம் கூட்டிப்பார்த்தேன் பள்ளியில் சேர்க்கும் போது ஆயிரத்தி நானூறு ரூபாய் ஆயிற்று; வேன் கட்டணம் தனி.

இந்தப் பள்ளியை நிர்வகித்தவர்கள் ஒய்வு பெற்ற கல்வி இலாகா எழுத்தர் என்று கேள்விப்பட்டேன். அங்கு வேலை செய்பவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆனால் சிலர் மட்டுமே பி.எட்., படித்தவர்கள். மற்றவர்கள் அஞ்சல் வழியில் பட்டப்படிப்பு முடித்தவர்கள். இப்பள்ளியின் சீருடை கோடு போட்டிருந்தது… படிப்புக் கட்டணம் மிகமிக அதிகம்.

விடைபெற்று வெளியே வந்தேன். மனம் மிகவும் அழுத்தமாக இருந்தது. கிராமப்புற பள்ளிகளில் ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கும்போது குருதட்சணை என்ற பண்பாட்டுடன் வெற்றிலை பாக்கு, மிட்டாயுடன் தட்சணையாக ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் வைத்து உயிர் எழுத்துக்களைச் சொல்லச் செய்து கலைமகள் படத்திற்கு முன்பு வணங்கி பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இலவச சீருடை, இலவச சத்துணவு, புத்தகங்கள் எல்லாம் அரசுப்பள்ளிகளில் இலவசமாகவே கிடைக்கும்.

மாவட்டத் தொடக்ககல்வித் திட்டத்தின் கீழ் கிராமப்புறப் பள்ளிகள் அனைத்தும் இன்று மிகவும் சிறப்பாக நடைபெறுவதைக் காண முடிந்தது. அரசின் இலவசக் கல்வி என்பது நடுத்தரக் குடும்பத்திற்கு “முகச்சுளிப்பை” ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்டணம் வசூலித்தால் கூட நல்லது என்று எண்ணவேண்டியுள்ளது.

அதன் பிறகு இரயில்வே பாதையைத் தாண்டி ஒரு பள்ளி இருப்பதாக அங்கு சென்றேன். கட்டணம் குறைவாகவே இருந்தது. பள்ளியும் எனக்கு பிடித்திருந்தது. ஆசிரியர்கள் அனைவரும் பட்டம் பெற்றவர்கள். அதை நிர்வகிக்கும் ஒரு அம்மையாரை சந்தித்தேன்.

அவர் அனைத்து விபரமும் கூறினார். வேன் உண்டு. வேலை கிடைக்காத பட்டதாரி ஆசிரியைகள், ஆசிரியர் பயிற்சி பெற்ற வேலை கிடைக்காதவர்கள் பணியாற்றுவதாகவும், அவரும் சகோதரர்களும் கூட அங்கே பணியாற்றுகின்றார்கள் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ந்தேன்.

பள்ளித் தூய்மையாக வைக்கப்பட்டிருந்தது. பேரன் மதிநிலவனுக்கு விண்ணப்பப் படிவம் வாங்கிக் கொண்டு வந்தேன் மகனிடம் சொன்னேன்.

“அங்கேயே சேர்த்துவிடலாம் அப்பா” என்றான்.

மறுநாள் மதியை சேர்க்க பேருந்தில் சென்றோம். மதிய உணவு கையிலேயே எடுத்துக் கொண்டு போனோம். பேருந்தில் போகும் போது வேறு பள்ளியில் படிக்கும் தன் மகனை அழைத்துக் கொண்டு அவன் தாயும் பேருந்தில் வந்தாள். வண்டலூர் மிருகக் காட்சிசாலை ஒட்டி குருவிகள் மற்றும் பறவைகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதைபார்த்த யு.கே.ஜி. மாணவன்.

“அம்மா, அம்மா அதோ பாருங்கள் பறவைகள்” என்றான்.

உடனே அந்தத் தாய் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு “ஆயிரம் ஆயிரமாய் செலவு செய்து கான்வென்டில் படிக்க வைக்கிறேன் மம்மின்று சொல்லாமே அம்மாவாம் அம்மா… சொல்லு Mummy, There are Birds” என்றாள்”. குழந்தை தேம்பிக் கொண்டே தாய் சொன்னதைத் திருப்பிச் சொன்னான்.

மிகவும் வேதனைப்பட்டேன்… ஆங்கில மோகம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே சான்று, தாயை “அம்மா” என்று கூப்பிடுவது கூட அந்தத் தாய்க்கு விருப்பமில்லை… ஆங்கிலத்திலேயே கூப்பிட வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு கொடுமை!

பேருந்தில் உள்ளவர்களுக்கும் அந்தத் தாயின் மேல் கோபமே ஏற்பட்டது… அந்தக் குழந்தையின் கன்னத்தில் கைவிரல்கள் அப்படியே பதிந்திருந்தன. மன வேதனையுடன் வண்டலூரில் இறங்கினேன்.

வண்டலூரில் இறங்கி, இரயில்வே தண்டவாளங்களை கடந்து சென்றோம். நாங்கள் சென்றபோது பள்ளியில் இறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு பாடலும் சில சமஸ்கிருத சுலோகங்களும் மாணவிகள் சொல்ல மற்றவர்களும் சொன்னர்கள். மாணவர்கள் மத்தியில் இதை ஏன் திணிக்கிறார்கள் என்று எண்ணினேன்.

முடிந்ததும் பள்ளி நிர்வாக அறைக்குக் சென்றோம். உரிய கட்டணங்களைக் கட்டி விட்டு விண்ணப்பத்துடன் கொடுத்தோம். LKG வகுப்பில் மதியை அழைத்துப் போய் உட்காரவைத்து விட்டு திரும்பியதும் “தாத்தா” என்று அழுதுகொண்டே என்னை நோக்கி ஓடி வந்தான். அவனை மீண்டும் அழைத்துச் சென்று உட்கார வைத்தேன், அழுகை நிற்கவில்லை. ஆசிரியை வந்து அவனை தூக்கிக் கொண்டார்…. என்னைப் போகச் சொன்னார்… நான் வந்துவிட்டேன்.

மகனுக்கு அலுவலக நேரமானதால் சென்று விட்டான்.

முப்பது நிமிடங்கள் கழித்து வகுப்பறை பக்கம் இருந்த சன்னல் வழியே பார்த்தேன். ஆசிரியை ஏதோ வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தார். மாணவ-மாணவிகள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மதியின் சிரிப்பை பார்த்து மனம் அமைதி அடைந்தது.

மதிய உணவுக் கூடையை எடுத்துக்கொண்டு நின்றிருந்த வேனில் போய் உட்கார்ந்தேன். ஓட்டுநர் என்னிடம் சிநேகமாகப் பேசினார். மதியை தினமும் கொளப்பாக்கம் அழைத்து கொண்டு வந்து, திரும்பவும் கொண்டுவந்து விடுவதாகவும் கூறினார். மகன் குடியிருக்கும் வீட்டுப் பையன்களும் அந்த வேனில் வருவதாகக் கூறினார். மகிழ்ந்தேன்.

பள்ளியிலேயே நின்றிருந்த வேனில் காலைப்பிரிவு வேளை பள்ளி முடியும் வரை ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மணி அடித்ததும் எழுந்து போனேன். மாணவ-மாணவிகளோடு ஒரு கையில் பையை குடுவையை இழுத்துக் கொண்டு மதி வந்த காட்சி சிரிப்பூட்டியது. பையையும் குடுவையையும் வாங்கிக் கொண்டு பள்ளி எதிரில் இருந்த மரத்தடி நிழலுக்குச் சென்றோம்.

துண்டு ஒன்றை விரித்து நானும் அவனும் உட்கார்ந்தோம். உணவை ஊட்டினேன். பிறகு அவனே சாப்பிட்டான்.

“மதி… என்ன படிச்சியா?” என்று கேட்டேன்.

“தாத்தா… பாட்டு சொன்னேன்…”

“சொல் பார்க்கலாம்” என்றேன்.

அவன் மழலை மொழியில் ஏதோ சொன்னான், ஒன்றும் புரியவில்லை.

சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தான். அந்த பள்ளியில் LKG முழு வேலையும் நடந்ததால் மதிய வேளை பள்ளித்துவங்கும் வரை அங்கேயே இருந்தோம். வேனுக்கு அவனை அழைத்துச் சென்று ஓட்டுநரிடம் மதியை அறிமுகப்படுத்தினேன்.

சிறிது நேரத்திலேயே ஓட்டுநருடன் நட்பாகப் பழகினான் மணி அடித்தது. வகுப்புக்கு அழைத்துச் சென்றேன். மீண்டும் அழுதான் சமாதானப்படுத்தி உட்காரவைத்தேன்… பையையும் தண்ணீர் குடுவையையும் வைத்துவிட்டு எழுந்து ஓடி வந்தான். ஆசிரியை வகுப்பில் நுழைந்ததும்.

“மதி வா… நல்ல பிள்ளையாச்சே… வா.” என்று கனிவுடன் கூப்பிட முரண்டு பிடித்தான். அதே போல சில குழந்தைகளும் அழுது கொண்டு உட்கார்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்து மதியும் அழுதான். ஆசிரியை என்னைப் பார்த்து போகும்படி சைகைக் காட்டினார். நான் அங்கிருந்து நழுவினேன். ஆனால் அவன் “தாத்தா… தாத்தா….” என்று அழுதது என் காதில் ஒலித்தது.

மாலை 3-45 அளவில் பள்ளி முடிவுற்றது. மதி மற்றொரு கையில் தண்ணீர் குடுவையுடன் சிரித்துக் கொண்டே வந்தான். வந்தவன் என்னிடம் வராமல் ஆசிரியை உட்கார வைத்த வரிசையில் உட்கார்ந்தான். என்னைப் போலவே பல தாய்மார்களும், தாத்தாமார்களும் பிள்ளைகளை அழைத்துப் போக காத்திருந்தனர்.

வேனில் போக வேண்டியவர்களின் பெயர்களை ஆசிரியை படிக்க அங்கிருந்த பணியாளர் அவர்களை அழைத்துக் கொண்டு வந்தார். மதியும் அவர்களுடன் வந்தான். என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தான். குடுவையைத் திறந்து தண்ணீர் கொடுத்தேன். குடித்தான்.

வேனில் தூக்கி உட்காரவைத்தேன். மகன் குடி இருக்கும் வீட்டுப்பிள்ளைகள் இருவரும் வேனில் உட்கார்ந்தனர். மதி அவர்களுடன் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். வேன் ஓட்டுநர் அவனை அவர் அருகில் உட்கார வைத்துக்கொண்டார். மற்ற குழந்தைகள் ஏறி உட்கார்ந்தனர்.

“தாத்தா ஏரிக்கோ…” என்றான் மழலை மொழியில், ஓட்டுநர் அவனிடம் ஏதோ சொன்னார். வேன் புறப்பட்டது நான் கையை அசைத்தேன். அவனும் அவ்விதமே அசைத்தபடி சென்றான்.

நான் அவ்வூரைத்தாண்டி, இரயில்வே தண்டவாளங்களை கடந்து, சென்னைக்குச் செல்லும் சாலையைக் கடந்து பேருந்துக்காக நின்றிருந்தேன். பேருந்து வர காலதாமதம் ஆனதால் தனியார் வேனில் ஏறி கொளப்பாக்கம் சென்று மகன் குடியிருந்த சந்திரபுரத்துக்குச் சென்றேன்.

மருமகள் மதியைப்பற்றி, கேட்க நடந்தவைகளைச் சொன்னேன் அதற்குள் மகனும் அலுவலகத்தில் இருந்து வந்தான்.

மதியின் முதல்நாள் பள்ளி வாழ்க்கை பற்றி அவனும் ஆர்வத்துடன் கேட்டான். சொன்னேன். அதற்குள் வேன் வரும் ஒலி கேட்கவே நாங்கள் மூவரும் மதியை வரவேற்க இறங்கிபோனோம்.

மதி சிரித்துக்கொண்டே புத்தகப்பையுடன் தண்ணீர் குடுவையுடனும் இறங்கி வந்தான். அவனுடன் இந்த வீட்டு பிள்ளைகளும் இறங்கி வந்தார்கள்.

“ஏன் இவ்வளவு நேரம் ஆயிற்று என்று ஓட்டுநரைக் கேட்டேன்”. ஊராப்பாக்கம், வண்டலூர், கொளப்பாக்கம் பிள்ளைகளை இறக்கி விட்டுவிட்டு சந்திரபுரம் வரவேண்டும். அதனால்தான் லேட் என்றார் ஓட்டுநர்.

மறுநாள் காலை எட்டரை மணிக்கெல்லாம் வேன் வந்துவிட்டது. அவசர அவசரமாக அவனை எழுப்பி குளிப்பாட்டி, சாமி கும்பிடவைத்து, இரண்டு இட்லி ஊட்டி விட்டு பள்ளிச்சீருடை போடும் போது அழத்தொடங்கி வெளியே பையோடு அழைத்து வர மருமகள் பாடு திண்டாட்டம் தான்.

வீட்டைவிட்டு வெளியே வந்ததும். விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கும் போது வேன் வந்துவிட்டது. உடனே துள்ளிக் குதித்தான். ஓட்டுநர் அவனை சிநேகமாக அழைக்க மகிழ்ச்சியுடன் அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். வேன் புறப்பட்டதும் கை அசைத்தபடி சென்றான் மதி.

நான் பதினோரு மணியளவில் அவனுக்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு வழக்கம் போல் கொளப்பாக்கத்தில் இருந்து பேருந்தில் வந்து இரயில்வே தண்டவாளம் தாண்டி பள்ளிக்குச் சென்று காத்திருந்தேன். காலைப் பள்ளி வேளை முடிந்து மணி அடித்ததும் மதி வந்தான். உடனே என்னிடம் வராமல் மாணவ – மாணவியுடன் அமர்ந்தான். ஆசிரியை போகச் சொன்னதும். தண்ணீர் குடுவையை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தான். வழக்கம்போல் மரத்தடியில் சாப்பிட்டுவிட்டு, விளையாடி விட்டு மதியம் பள்ளித் தொடங்கியதும் அழத்தொடங்கினான். சமாதானப்படுத்தி உட்கார வைத்துவிட்டு வந்தேன். பின்னாலேயே தாத்தா… தாத்தா… என்று அழு குரல் கேட்டது. ஆசிரியை அவன் கைகையப்பற்றி அழைத்துப் போவதைக் கண்டேன். சிறு பிள்ளைதானே அப்படித்தான் இருப்பான் என்று எண்ணியபடி வீடு வந்தேன்.

இந்த நடைமுறை வழக்கம்போல் இருபது நாட்கள் நீடித்தது. சில நாட்கள் அழுவான், சிலநாட்கள் பள்ளிக்கு போக முரண்டு பிடிப்பான், சில நாட்கள் உற்சாகமாகப் போவதும் உண்டு. ஒருநாள் வேன் ஓட்டுநர் ஒரு தமிழ் வழிப் பள்ளியைப் பற்றிக்கூறினார். அங்கு போய் பார்த்துவரச் சென்றேன்.

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதி. ஒரு வீட்டின் மொட்டை மாடி, கீற்று வேயப்பட்ட கொட்டகை. செங்குத்தான படிகளில் ஏறிப்போய் பார்த்தேன். மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது. அத்தனையும் சின்னஞ்சிறு அரும்புகள். இளஞ்சிவப்பு வண்ணச் சீருடையில் ஆயிரம் பூக்கள் மலர்ந்தது போல் இருந்தது. பெயர்பலகையில் “தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளி” என எழுதப்பட்டிருந்தது உள்ளம் மகிழ்ந்தது.

ப்ரிகேஜியை-அரும்புகள் என்றும் எல்.கே.ஜி.யை மொட்டுக்கள் என்றும் யூ.கே.ஜி.யை மலர்கள் என்றும் அழகு தமிழால் பெயரிட்டு அழைப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். கட்டணம் அரும்புகளுக்கு மாதம் ரூ.25, மொட்டுகளுக்கும் ரூ.25, மலர்களுக்கு ரூ.30, முதல் வகுப்பு மாதம் ரூ.40, சேர்க்கைக் கட்டணம் ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படுவதையும் அறிந்து வியப்படைந்தேன். மற்றபடி எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. மூன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. மாணவ, மாணவியரை அழைத்து வரும் மூதாட்டியை ஆயா என்று அழைக்காமல் “தாயம்மா” என்று அழைக்கிறார்கள். அதேபோல “மிஸ்” என்றோ “மேடம்” என்றோ அழைக்காமல் “ஆசிரியை” என்றே மாணவ, மாணவிகள் அழைப்பது வித்தியாசமாக இருந்தது. ஐந்தாம் வகுப்புவரை நடப்பதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன். வாழ்க தமிழ் வழிப்பள்ளி என்றும் மனம் வாழ்த்தியது.

திடீரென்று மகனுக்கு அரசு குடியிருப்பிலேயே வீடு கிடைத்ததால் பேரன் மதியின் படிப்பு அப்பள்ளியில் நின்றது. பள்ளி, அலுவலகம், வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்ததால் மத்திய அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய சீருடை தைத்து புதிய புத்தகங்கள் வாங்கி மதியை மீண்டும் L.K.G. யில் சேர்க்கப்பட்டான். வகுப்பில் உட்கார முரண்டு பிடித்தான். அழுதான்…. வழக்கமான விசும்பல் நீடித்தது.

இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குப் போவதும் அவனே கூட நடந்தே வீட்டுக்கு வந்து விடுவதும் கண்டேன். நான் ஊருக்கு வந்துவிட்டு ஒரு மாதம் கழித்துச் சென்றேன். நான் வருவதை அறிந்து குட்டி சைக்கிளில் என்னை வரவேற்று அழைத்துப் போக அந்த வளாகத்தின் வாயிற்படியிலேயே காத்திருந்து அழைத்துச் செல்ல வந்தவன் “தாத்தா எப்ப வருவார்” என்று வாயிற்படி காவலரைக் கேட்டபடி இருந்தானாம். நான் சென்றதும் சைகிளை விட்டு விட்டு ஓடி வந்து கட்டி கொண்டான். “ஸ்கூல் போறேன் தாத்தா” என்றான் தங்கப் பேரன்.

நன்றி: உப்புநீர்ப் புன்னகை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *