தாத்தாவும், பாட்டியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 18,434 
 
 

என் தாத்தா இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும், உடனே சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு கிளம்பினேன். கிடைத்த வோல்வோ பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.

தாத்தாவுக்கு பேரன் பேத்திகள் அதிகம். அனால் நான் மூத்தமகன் வழிவந்த, மூத்த பேரன் என்பதால் என்னிடம் எப்போதும் வாஞ்சையாக இருப்பார். எங்கே சென்றாலும் கூட்டிச் செல்வார். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து நான் தாத்தாவுடன்தான் அவரின் குதிரை வண்டியில் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்புறம் இருபத்திரண்டு வயதில் சென்னையில் வேலை கிடைத்து வந்துவிட்டேன். தற்போது எனக்கு இருபத்தியேழு வயது.

தாத்தா ரொம்ப ரசனையுள்ளவர். தினமும் ஷேவ் பண்ணிக்கொண்டு, தலைமயிரை வகிடு. எடுத்து அழகாய்வாரி, மெல்லியதாக முகத்துக்கு பவுடர் போட்டு, வெள்ளைச் சட்டையில்தான் எப்போதும் காணப்படுவார். சிரித்தமுகம். அதிர்ந்து பேசமாட்டார். கம்பீரமாக இருப்பார்.

அவர் திம்மராஜபுரத்தில் பிறந்து வளர்ந்து தற்போது இறந்தும் போனார். ஊரில் என் தாத்தாவை எல்லோரும் ‘ஷோக்’ பேர்வழி என்பார்கள். அதற்கு காரணம் அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததுதான்.

அவர் தன்னுடைய முப்பது வயதிலிருந்து அறுபது வயது வரை பாளையங்கோட்டையில் ஆரம்பித்து நடுவக்குறிச்சி, கொட்டாரம், கீழநத்தம், பொட்டல் வரை பல பெண்களிடம் தொடுப்பு வைத்திருந்தாராம்.
குதிரைவண்டி பூட்டிக்கொண்டு அவர்களை முறைபோட்டுக்கொண்டு சந்தித்து குலாவிவிட்டு வருவாராம். இது பாட்டிக்கும் அரசல் புரசலாகத் தெரியுமாம். இதெல்லாம் மற்றவர்கள் சொல்லிக் கேள்வி.

ஆனால் எனக்கு விவரம் தெரிந்து தாத்தா, கிருஷ்ணாபுரம் பட்டத்தியிடம்தான் சொக்கிக் கிடந்தார். பட்டத்தி சமாச்சாரம்தான் பேரப் பிள்ளைகளாகிய எங்கள் வரைக்கும் வந்துவிட்டது. அது பாட்டிக்கு மிகுந்த அவமானமாகி விட்டது.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது… முதன் முதலில் பாட்டிக்கு இந்த விஷயம் தெரிந்ததும். பாட்டி தன் தாலியைக் கழட்டி வீசி எறிந்தாள். தன் புருஷனுக்கு இன்னொருத்தி இருக்கிறாள் என்கிற கோபத்தில் பாட்டி அதைச் செய்யவில்லை. பேரப்பிள்ளைகளே வளர்ந்து விட்டார்கள் – எனக்கு அப்போது பன்னிரண்டு வயது – இப்பப் போய் இந்த மனுஷருக்கு புத்தி இப்படி நாயா அலையுதே, என்கிற அவமானத்தில்தான் தாலியைக் கழட்டிவீசினாள்.

பாட்டி பாவம், பேரப்பிள்ளைகளிடம் அவ்வளவு பிரியம். பாட்டிக்கு பிரியமென்றால், தாத்தாவுக்கு அதைவிட எங்களிடம் கொள்ளை ஆசையும் அன்பும். அதனால்தான் எங்களை அவர் தைரியமாக குதிரைவண்டியில், அந்தப் பட்டத்தி வீட்டுக்கு ஒருநாள் கூட்டிப்போனார். அந்தக் காலத்தில் வைப்பாட்டியின் வீட்டுக்கு தன் பேரப்பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போனது, எவ்வளவு பெரிய துணிச்சலான விஷயம்!? இப்படி ஒரு தாத்தா எங்கேயாவது உண்டா?

அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் நான் முதன் முதலில் பட்டத்தியைப் பார்த்தேன். பட்டுச்சேலை கட்டி, ரெண்டு கண்களிலும் அழகாக மைதீட்டி, கொண்டையில் ஏராளமான மல்லிகைப் பூவுடன், நெற்றியில் பெரிய பொட்டுடன், புன்னகையுடன் எங்களை வரவேற்றாள்.

என்னுடைய பன்னிரண்டு வயதிலேயே பட்டத்தி அழகான பெண் என்பதை என்னால் உணரமுடிந்தது. அவளை எனக்கு ரொம்பப் பிடித்தும் விட்டது. அங்குபோன முதல்நாளே எங்களுக்கு கோழியடிச்சு சடச்சுட சோறு ஆக்கிப்போட்டாள். நாங்கள் உண்ட களைப்பில் அந்த வீட்டின் பெரிய கூடத்தில் ஜமுக்காளம் விரித்து படுத்து தூங்கினோம். தாத்தாவும் பட்டத்தியும் மட்டும் தூங்கவில்லை.

நாங்கள் தூங்கி எழுந்தவுடன், எங்களுக்கு காப்பி போட்டுக்கொண்டு வந்தாள். எங்களுக்கு முகம் கழுவி, தலைவாரி, பவுடர்போட்டு நன்றாக ஜோடித்துவிட்டதும், தாத்தா அங்கேயே தங்கிக்கொண்டு, எங்களை முதலில் குதிரை வண்டியில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

வீட்டில் பாட்டி என்னிடம், “எங்கடா போனீங்க? பவுடர் கிவுடர்லாம் அப்பியிருக்கே !?” என்றாள்.

நான் ஏராளமாக பீற்றிக்கொண்டு, “நாங்க கிருஷணாபுரம் போனோமே..அங்க கோழியடிச்சு சாப்பிட்டோமே” என்றேன்.

“அங்க எங்கேடா போனீங்க?”

“அவங்க வீட்டுக்கு போனோமே!”

பாட்டிக்கு சந்தேகம் வந்துவிட்டது. என்னை முறைத்துப் பார்த்தாள்.

“தாத்தா எங்கடா?”

“அவுக வீட்லதான் இருக்காரு.”

“வரட்டும் அந்த மனுசன். அறிவு இருக்கா…இதென்ன பள்ளிக்கூடமா உங்கள அங்க கூட்டிப்போக?”

“எங்கள ரொம்ப நல்லா கவனிச்சாங்க பாட்டி. என்னைமட்டும் இன்னொரு நாளைக்கு வரச்சொன்னாங்க.”

“இன்னொருதடவ நீ அங்கபோன உன் கால உடச்சி அடுப்புல வெச்சிருவேன்.”

அன்று மாலை பாட்டி என்னிடம், “அவ சிவப்பா, கருப்பா? குண்டா, ஒல்லியா? பாக்க எப்படிடா இருப்பா? நல்லா பேசினாளா?” என்று ரகசியக் குரலில் நிறையக் கேள்விகள் கேட்டாள்.

அன்று இரவு தாத்தா வீட்டுக்கு வந்ததும் பாட்டி அவரிடம் பெரிய சண்டை போடுவாள் என்று நினைத்து நான் ஏமாந்தேன்.

அதன்பிறகு தாத்தா என்னை அடிக்கடி பட்டத்தி வீட்டுக்கு கூட்டிப்போனார்.
பட்டத்தி என்னைப் பார்க்கும்போதெல்லாம் அன்புடன் இழுத்து கட்டியணைத்துக்கொள்வாள். அப்போது அவளிடமிருந்து பாண்ட்ஸ் பவுடர் ஸ்மெல் வரும். எனக்கு அவளின் அந்த அணைப்பும், சிரிப்பும், உபசரிப்பும் வாசனையும் ரொம்பப் பிடிக்கும்.

தாத்தா எதையும் ஒளிவுமறைவின்றி தைரியமாகச் செய்வார். அதனால் நாளடைவில் பட்டத்தியும் எங்கள் குடும்பத்தில் ஒருத்தி போலத்தான் ஆகிவிட்டாள். ஆனால் அவள் எங்களுடைய வீட்டிற்கு வந்ததே கிடையாது. தாத்தாவின் நெருக்கத்தால் அவளுக்கும் ஒரு அந்தஸ்து ஊருக்குள் வந்துவிட்டது. ஒருகட்டத்தில், தாத்தா தலைமைதாங்கும் ஊர்க்கூட்டங்கள், பட்டத்தி வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டன. அவள்தான் அன்று அனைவருக்கும் சமையல் பண்ணுவாள். நான் அந்த கூட்டங்களுக்கு எல்லாம் தவறாமல் செல்வேன். பட்டத்தி என்னைக் கட்டியணைத்து முத்தமிடுவாளே, அதற்காக.

நான் வேலைகிடைத்து சென்னைக்கு கிளம்பும்போது பட்டத்தியிடம் சொல்லிகொண்டுதான் கிளம்பினேன்.

நான் சென்னைக்கு கிளம்பும் முந்தையதினம் இரவு தாத்தா மொட்டை மாடியில் தனித்து இருந்தபோது அவரிடம் தயக்கத்துடன், “தாத்தா உங்களைப்பற்றி ஊரில் நிறையப் பேசுகிறார்கள். இப்ப பட்டத்தியுடன் உங்களின் தொடர்பையும் நான் பார்க்கிறேன். பல பெண்களுடன் நீங்கள் தொடர்பில் இருப்பது தப்புதானே… பாட்டிக்கு செய்யும் துரோகமாகாதா? இந்த அறுபத்தி ஐந்து வயதில் உங்களுக்கு ஏன் செக்ஸ்?” என்று கேட்டேன்.

தாத்தா கோபப்படாமல், புன்னகையுடன், “தப்பு, ரைட்டு, நேர்மை, துரோகம் அப்படியெல்லாம் நான் சிந்தித்துப் பார்ப்பதேயில்லை. எனக்கு கில்டி பீலிங்கே கிடையாதுடா. எல்லாப் பெண்களும் அன்பானவங்க, பாசமானவங்க, வாஞ்சையானவங்க. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமான தங்கச் சுரங்கம். அவர்கள் ரசனைக்குரியவர்கள். பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பையும், பண்பையும், மரியாதையையும்தான். செக்ஸ் என்பது அவர்களின் கடைசி விருப்பம். அதுகூட ஆண்கள் அதை விரும்பிக் கேட்டால், அவர்களை சந்தோஷப்படுத்தும் பொருட்டுதான் தன்னையே அர்ப்பணிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அது புரிவதில்லை.

“என்னுடைய வயதைப்பற்றி சொன்னாய். இறக்கும்வரை நான் மாற மாட்டேன். என் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம். பெண்களின்மீது என்னுடைய தொடுதல்களும்; அணைப்புகளும், சில்மிஷங்களும், இன்னபிற விளையாட்டுகளும் கண்டிப்பாக அன்பையும், பண்பையும், பாசத்தையும்தான் அவர்களிடம் வெளிப்படுத்தும். அவர்களுக்கு அது ரொம்பப் பிடிக்கும். கலவி என்பது ஒவ்வொரு தடவையும் அவசியமல்ல. கலவிக்கான ஆயத்தப்பணிகள் மட்டுமே ஒரு வித்தியாசமான ரசனையுள்ள அனுபவம்.”

“………………………….”

“உனக்கு சின்ன வயது. அனுபவத்தில் நான் சொல்வது எல்லாம் உனக்குப் புரியும். நீ நாளைக்கு சென்னை போகிறாய். அங்கு நீ பார்க்கிற எல்லாப் பெண்களிடமும் மரியாதையாக இரு. அவர்களிடம் மிகவும் பண்பாக நடந்துகொள். அவர்களுக்கு பொய் சொல்லுவது, ஏமாற்றுவது என்பதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. பெண்கள் அனைவரும் ஒரு நேர்மையான, வித்தியாசமான மனிதப்பிறவி. இவ்வளவு உன்னிடம் சொல்கிறேனே, உன் பாட்டியிடம் நான் இதுவரை பொய் சொன்னதில்லை. எதையும் மறைத்துப் பேசியதில்லை. அவளையும் நான் மிகவும் நேசிக்கிறேன். மரியாதையாகத்தான் நடத்துகிறேன்.”

மறுநாள் மாலை என்னை நெல்லை எக்ஸ்பிரஸ்சில் ஏற்றி வழியனுப்பினார். அதுதான் நான் அவரை கடைசியாகப் பார்த்தது.

பதினைந்தாம் நம்பர் டவுன்பஸ் பிடித்து திம்மராஜபுரம் வந்துசேர பகல் ஒரு மணியாகிவிட்டது. வெய்யில் உக்கிரமாகத் தகித்தது. தாத்தாவின் மூக்கில், காதுகளில் பஞ்சடைத்து, கட்டைவிரல்கள் சேர்த்து கட்டப்பட்டு கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். தலைமாட்டில் ஒருபெரிய குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது.

என்னைப் பார்த்ததும் பாட்டி என்னைக் கட்டிப்பிடித்து பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். தாத்தாவின் தலையை அடிக்கடி வருடிக் கொடுத்தாள்.

மாலை நான்கு மணிக்கு எடுப்பதாக ஊர்ப் பெரியவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

மூன்றுமணிக்கே தாத்தாவின் மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகள் அனைவரும் வந்துவிட்டோம். தாத்தாவை குளிப்பாட்டி நெற்றியில் வீபூதி இட்டார்கள். நான்குமணிக்கு சங்கு ஊதி, சேண்டி அடித்து வீட்டிலிருந்து வெளியே கொண்டுவந்து பாடையில் கிடத்தினார்கள்.

பாட்டியும் அழுதுகொண்டே படிகளில் இறங்கி தெருவில் வந்து நின்றாள்.

அப்போது யாரும் எதிர்பாராது புயலென ஒரு ஆட்டோ சீறிவந்து நிற்க, அதிலிருந்து பட்டத்தி இறங்கி தாத்தாவைநோக்கி ஓடிவந்து மண்டியிட்டு தலைவிரி கோலத்தில் பெரிதாக “என் மகாராஜா” என்று ஓலமிட்டு அழுதாள்.

அதைப்பார்த்த எங்களுக்குப் பயமாகிவிட்டது. எங்கே, பாட்டி எதாவது அவளைக் கூச்சலிட்டு அவமரியாதை செய்து விரட்டி விடுவாளோ என்று.
பிணத்தின் முன்னால் சக்களத்தி சண்டை எவ்வளவு கேவலம் !?

ஆனால் பாட்டி அவளருகில் சென்று குனிந்து அவள் தலையை வருடிக்கொடுத்து தானும் அழுதாள். பட்டத்தி எழுந்து நின்றதும் பாட்டி அவளைக் கட்டிப்பிடித்து அழுதாள்.

பாட்டியின் செய்கையை ஊரே வியப்புடன் பார்த்தது….

தாத்தாவின் இறுதி ஊர்வலம் கிளம்பிச் சென்றதும், பாட்டி அழுதுகொண்டே பட்டத்தியை வாஞ்சையுடன் அணைத்தபடி எங்கள் வீட்டிற்குள் மெதுவாக அழைத்துச் சென்றாள்.

அந்த வித்தியாசமான காட்சி இன்னமும் என் கண்களைவிட்டு அகலவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *