சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் சிங்கப்பூர்-சென்னை விமானம் புறப்படத் தயாரானது.
ஏர்ஹோஸ்டஸ் பக்கத்துக்கு ஒருவராக நின்று கொண்டு ஆக்ஸிஜனுக்கு அழகாக அபிநயிக்க, விமானம் ரன்வேயில் மெல்ல ஊர்ந்தது.
ரகுராமன் சற்றுத் தளர்வாக அமர்ந்து கொண்டான். சென்னையை அடைந்தவுடன் அவன் நெல்லை எக்ஸ்பிரஸில் திருநெல்வேலி செல்ல வேண்டும். பெற்றோர்களையும், சகோதர, சகோதரியையும் பிரிந்து கடந்த நான்கு வருடங்களாக அமெரிக்காவில் வேலை செய்கிறவன் தற்போது மிகுந்த சந்தோஷத்துடன் ஒரு மாத விடுப்பில் தன் வீட்டிற்குச் செல்கிறான்.
ஆனால், ஒரு வாரத்திலேயே தான் அமொ¢க்கா திரும்பப் போவது, அவனுக்கு அப்போது தொ¢ந்திருக்க நியாயமில்லை.
ரகுராமன் மூத்தவன். கடந்த நான்கு வருடத்திய உழைப்பில் குறைந்தது பத்து லட்சம் தன் வீட்டிற்கு அனுப்பியிருப்பான். இவன் அனுப்பிய பணத்தில் குடும்பம் சற்று நிமிர்ந்து நிற்கிறது.
விமானம் சீராகப் பறக்கத் துவங்கி உணவு பரிமாறப் பட்டதும், ரகுராமன் சற்று கண்ணயர்ந்தான்.
நெல்லை எக்ஸ்பிரஸில் பயணித்து மறு நாள் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கியதும் தன் கிராமமான திம்மராஜபுரத்திற்கு டாக்ஸி ஒன்றை அமர்த்திக் கொண்டான்.
வெய்யில் உக்கிரமாகத் தகித்தது.
வீட்டு வாசலில் டாக்ஸி நிறுத்தப்பட, அவன் தந்தை ஓடி வந்து சாமான்களை இறக்க உதவினார். ராகுராமன் டாக்ஸிக்குப் பணம் கொடுத்து அனுப்பியதும், இருவரும் பெட்டிகளை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைய, கூடத்தில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த அம்மா, சந்தோஷத்துடன் திரும்பி, “வாடா ரகு, பயணமெல்லாம் செளகர்யமாக இருந்ததா? உன் உடம்பு செளக்கியமா?” என்றாள்.
கொல்லைப் புறத்தில் துணி தோய்த்துக் கொண்டிருந்த தங்கை சியாமளி, ஈரக் கையை பாவாடையில் துடைத்தபடி ஓடி வந்தாள்.
வீடு கலகலப்பானது.
டி.வியில் ஏதோ ஒரு சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.
“எங்கேம்மா ராஜாராமன்?” என்று தன் சகோதரனைப் பற்றி கேட்டான்.
“எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சுக்குப் போயிருக்கான், இப்ப வந்துடுவான்… நீ குளிச்சுட்டு வா ரகு, சமையலெல்லாம் ஆயாச்சு. ராஜராமன் வந்ததும் தட்டு வைக்க வேண்டியதுதான்” என்றாள் அம்மா, டி.வியிலிருந்து கண்களை அகற்றாமலே.
சியாமளி ஜில்லென்று குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வந்தாள்.
“அட •ப்ரிட்ஜ் வாங்கியாச்சா?”
ரகுராமனின் தந்தை பெருமை பொங்க, “ரகு நீ அனுப்பிய பணத்தில்தான் •ப்ரிட்ஜ், கலர் டி.வி., வி.ஸி.ஆர்., மிக்ஸி எல்லாமே வாங்கினோம்’ என்றார்.
இவர்களின் வசதிக்கும், சந்தோஷத்திற்கும் தான் காரணமாயிருப்பதை எண்ணி ரகுராமன் பூரித்துப் போனான்.
பெட்ரூமினுள் சென்று, கட்டிலின் மீது பெட்டிகளை வைத்துத் திறந்தான். ஆர்வத்துடன் தான் அமொ¢க்காவிலிருந்து வாங்கி வந்தவைகளை வெளியே பரப்பி விட்டுத் திரும்ப, அறையில் தான் தனித்து விடப் பட்டதை உணர்ந்து கூடத்திற்குச் சென்றான்.
அங்கு டி.வியில் ஒரு மெகா சீரியலை அனைவரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.
ரகுராமன் முதன் முறையாக சற்று ஏமாற்றத்தை உணர்ந்தான்.
குளித்து முடிந்ததும் ராஜாராமனும் வந்துவிட, சியாமளி பரிமாற, அம்மாவைத் தவிர அனைவரும் டைனிங் டேபிளின் முன் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர்.
அம்மா தற்போது டி.வியில் ஏதோவொரு பழைய தமிழ் சினிமாவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
என் அம்மாவா இப்படி? என்ன ஆயிற்று இவளுக்கு? நான் சாப்பிடும்போது அருகில் இருந்து வாஞ்சையுடன் பரிமாறுவாளே! இன்னும் கொஞ்சம் போட்டுக்கோடா என்று உபசா¢ப்பாளே… சாதம் சூடாக இருப்பின், பக்கத்தில் அமர்ந்து விசிறி விடுவாளே!
இந்த டி.வியின் வருகையினால் உறவுகள் அன்னியமாகிப் போய்விடுமா என்ன?
நான்கு வருடங்கள் கழித்து வீடு திரும்பிய மகனுக்குப் பரிவுடன் பரிமாறுவதை விட டி.வி பார்ப்பது முக்கியமாகி, தான் இரண்டாம் பட்சம் ஆகிப் போனது குறித்து, ரகுராமனுக்கு மனம் மிகவும் சங்கடப் பட்டது.
சாப்பிட்ட அசதியில் பெட்ரூமினுள் சென்று கட்டிலில் படுத்தவன், தான் தமிழ்ப் பத்திரிக்கைகள் படித்துப் பல வருடங்களாகி விட்டது நினைவுக்கு வர, “சியாமளி” என்று கூப்பிட்டான்.
“என்ன அண்ணா?”
“இந்த வார பொன்னி கொடேன்.”
“அண்ணா, இப்ப நம்மாத்துல பொன்னி, காதம்பரி எல்லாம் நிறுத்தியாச்சு… டி.வி வந்தப்புறம் நல்லா பொழுது போகுது.”
அதிர்ந்து போனான் ரகுராமன்.
ச்சே! நல்ல பத்திரிக்கைகள் வாங்குவதையும் நிறுத்தி விடக்கூடிய அளவிற்கு டி.வியின் தாக்கம் தன் வீட்டில் அதிகரித்திருப்பதை உணர்ந்து நிலை குலைந்தான்.
நன்றாகத் தூங்கி, பிற்பகல் மூன்று மணிக்கு எழுந்தவன், கூடத்தில் அனைவரும் ஒரு தமிழ்ப் படத்தின் க்ளைமாக்ஸில் லயித்திருப்பதைப் பார்த்தான்.
இவன் கூடத்திற்கு வந்து நிற்பதைப் பார்த்த அம்மா, “சியாமளி ரகுவுக்குக் காப்பி கலந்து கொண்டு வாயேன்” என்றாள்.
க்ளைமாக்ஸை விட்டு அசைய விரும்பாத சியாமளி சங்கடத்துடன் நெளிய, அவளின் அவஸ்தையைப் புரிந்து கொண்டவன், “பரவாயில்லை சினிமா முடிந்ததும் காப்பி கொடு” என்றதும் அவள் கண்களில் நன்றி கலந்த ஒளியைக் கண்டான்.
அம்மா டி.வியில் லயித்தபடியே, “சியாமளி அப்படியே ப்ரிட்ஜில தோச மாவு மிச்சமிருக்கு…ரகுவுக்கு ரெண்டு வாத்துக் கொடேன்” என்றாள்.
ரகுராமன் ஆடிப்போனான்.
தான் சம்பாதிக்காத காலங்களிலேயே, ரகு உனக்கு என்ன டிபன் பண்ணட்டும்? உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு…பண்ணித் தரேன் என்று பார்த்துப் பார்த்துச் செய்த அம்மாவா இவள்? எங்கே போனது அந்தப் பாசமும் நேசமும்?
அம்மா அதே அம்மாதான். ஆனால் இந்த டி.வியின் தாக்கம்தான் அவளைத் தன்னிடம் ஒட்ட விடாமல் தடுக்கிறது. வைத்த கண் எடுக்காமல் மெகா சீரியல்களையும், சினிமாக்களையும் தொடர்ந்து ஆசையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவிடம், ‘நீ டி.வியைப் பார்க்காதே, என்னிடம் பேசிக்கொண்டிரு, என்னைக் கவனி’ என்று எப்படிச் சொல்வது?
அன்று இரவு பதினோரு மணி வரை அம்மா ஒவ்வொரு சீரியலாக பார்த்து முடித்த போது, ரகுராமன் தூங்கிப் போயிருந்தான்.
இது அம்மாவின் தினசரிச் சடங்குகள் என்பதை சியாமளியிடமிருந்து பிறகு புரிந்து கொண்டான்.
மறு நாள்.
காலையிலேயே திருச்செந்தூர் கிளம்பிச் சென்று முருகப் பெருமானை தரிசித்து விட்டு மாலைதான் வீடு திரும்பினான். மனம் சற்று நிம்மதியாக இருந்தது.
அன்று இரவும், அம்மாவின் பரிந்துரைப்படி சியாமளி மிச்சமிருந்த தோசை மாவில் ஊத்தப்பம் செய்து கொடுத்தாள்.
சாப்பிட்ட பிறகு, ராஜாராமனை அழைத்து, “உன்னுடைய பயோடேட்டா காப்பி ஒன்றை என்னிடம் கொடுத்து வை. அமெரிக்காவில் உனக்கு ஒரு நல்ல வேலை தேடித் தரேன்” என்றான்.
“பயோடேட்டாவே என்னிடம் இல்லை.”
“அதனாலென்ன, இப்பவே ஒரு பேப்பர் பேனா எடுத்துண்டு வா.. உன்னோட ப்யோடேட்டாவை நாம் தயாரிக்கலாம்.”
“நாளைக்குப் பார்த்துக்கலாமே, நீதான் இருப்பியே, இப்ப ஈ.எஸ்.பி.என்ல வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் ஒன்டே கிரிக்கெட் மாட்ச் நேரடி ஒளிபரப்பு ஆரம்பிச்சுடும்.”
டி.வியின் சேனலை மாற்றத் தொடங்கினான்.
ரகுராமன் மிகவும் ஏமாற்றமடைந்தான்
அடுத்த நாள்…
பெருமாள் புரத்திலிருந்து, ரகுராமனைப் பார்க்க அவனுடைய அத்தை வந்திருந்தாள். கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சாயங்காலம் கிளம்பிச் சென்றாள்.
அனைவரும் அத்தையை வாசல் வரை வந்து வழியனுப்பினார்கள்.
அந்த வீட்டிற்கு வருபவர்கள் திரும்பிச் செல்லும் போது – வீட்டின் பக்கவாட்டில் உள்ள மண் ரோடு வழியாகச் சென்று திரும்பி, பிறகு வீட்டின் பின்புற தார் ரோடு வழியாகச் சென்றுதான் மெயின் ரோட்டை அடைய முடியும்.
அவ்விதம் திரும்பிச் செல்பவர்களை, வீட்டிலுள்ள அனைவரும் வாசலில் மட்டுமின்றி, மறுபடியும் கொல்லைப் புறத்திலும் நின்று கொண்டு டாட்டா காட்டுவது வீட்டின் பொதுவான நடைமுறை.
அவ்விதம் இரண்டு முறை டாட்டா காண்பிப்பதால், வீட்டுக்கு வந்து செல்பவர்களிடம் ஒரு நெருக்கமும், அன்னியோன்யமும் கிடைப்பது மட்டுமின்றி – ‘திரும்பவும் அந்த வீட்டிற்கு வந்து செல்ல வேண்டும்’ என்கிற எண்ணமும் வருபவர்களுக்கு ஏற்படும்.
ஆனால் அன்று ரகுராமனும், அவன் தந்தையும் மட்டுமே கொல்லைப்புறத்தில் நின்று கொண்டு, அத்தைக்கு கையசைத்து டாட்டா காட்டினார்கள்.
மற்ற அனைவரும் அத்தை கிளம்பிச் சென்ற நிம்மதியில், டி.வி பார்ப்பதைத் தொடர்ந்தார்கள்.
ரகுராமனுக்கு முதலில் இந்த டி.வியை வீட்டிலிருந்து வெளியேற்றினால்தான், பழைய ஒட்டுதலும், பரஸ்பர அன்பும், அரட்டையும், கிண்டலும், கேலியும்… விருந்தினர்களை அன்புடன் உபசரித்து வழியனுப்பும் பண்பும், நல்ல பத்திரிக்கைகளின் நடமாட்டமும் திரும்பி வரும் என்று தோன்றியது.
ஆனால் இது சாத்தியப் படுமா? என்று நினைக்கையில் வீட்டின் ஜீவ நாடியே டி.விதான் என்பது புரிய, மலைப்பாக இருந்தது.
தன் வீட்டில்தான் இப்படியா, அல்லது தமிழ் நாட்டின் எல்லாக் குடும்பங்களிலுமே இந்த எலக்ட்ரானிக் பெட்டியின் தாக்கமும், ஆதிக்கமும் உண்டா? என்று தனக்குள் மேலும் எண்ணிக் கொண்டான்.
தான் இங்கு இருந்த மூன்று நாட்களில் ஒருவரும் தன்னிடம் மனம் விட்டுப் பேசவில்லை, ஜாலியாக அரட்டை அடிக்கவில்லை என்கிற உண்மை நிதர்சனமாகப் புரிய, அது உவ்வா முள்ளாக உறுத்தத் தொடங்கியது.
இதே ரீதியில் அடுத்த சில தினங்களும் தொடர, ரகுராமனுக்கு வெறுத்துப் போனது.
அவன் விடுப்பைக் குறைத்துக் கொண்டு அமொ¢க்கா திரும்ப முடிவு செய்தான்.
டி.வி ஒரு பொழுதுபோக்கு சாதனமேயல்லாது, பொழுதே டி.விதான் என்கிற நிலைக்குத் தன் வீடு தள்ளப்பட்டதை எண்ணி வெட்கினான். தன்னுடைய அருகாமையின் அவசியம் கூட, இந்த வீட்டில் டி.வியின் முன் அடிபட்டுப் போனதை நினைத்து குறுகிப் போனான்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. ரகுராமன் அமெரிக்கா திரும்பும் தினம்.
அப்பாவும் ரயில்வே ஸ்டேஷன் வரை வருவதாக ஏற்பாடு. ராஜாராமன் ஆட்டோ பிடித்து வந்து வீட்டின் முன் நிறுத்தினான்.
அம்மா, அப்பாவை நமஸ்கா¢த்தான். தம்பி, தங்கையிடம் விடை பெற்றுக் கொண்டான். ஆட்டோவில் ஏறும் போது அனைவரும் வாசல் வரை வந்து வழியனுப்பினார்கள்.
ஆட்டோ கிளம்பி, வீட்டின் பக்கவாட்டு மண்ரோடில் பயணித்து, பின்புற தார் ரோட்டைத் தொட்டதும் ரகுராமன், “டிரைவர், கொஞ்சம் மெதுவாகப் போ” என்று சொல்லியவன் மிகுந்த ஆர்வத்துடன் தன் வலது கையை வீட்டை நோக்கித் தூக்கினான்.
அங்கு வீட்டின் கொல்லைப் புறத்தில் இவனுக்கு டாட்டா காட்ட எவருமே இருக்கவில்லை.
அப்பா மெல்லிய குரலில், “இன்னிக்கு சண்டே இல்லியா, டி.வில தமிழ் சினிமா அதான்” என்றார்.
தூக்கிய கையை மெதுவாக ஏமாற்றத்துடன் இறக்கிக் கொண்ட ரகுராமனுக்கு கண்களில் நீர்
முட்டிக் கொண்டு வந்தது.
ஆட்டோ ஸ்டேஷனை நோக்கி வேகமெடுத்தது.
– கலைமகள் – ஜூலை 2003
(கலைமகள் நடத்திய அமரர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசு பெற்ற கதை)
மிக நல்ல கதை. முதல் பரிசுக்கு தகுதியான கதைதான் என்பதில் ஐயமில்லை.
ஹாஜி ஸப்ரழ் மொதமேது கொழும்பு