தவிட்டுப் பிள்ளை..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 3,716 
 

காலை 7.00 மணி.

நாற்காலியில் அமர்ந்து காபி குடித்து முடித்துவிட்டு தினசரியை விரிக்கும்போதே….அருகிலிருந்த கைபேசி சிணுங்கியது.

எடுத்துப்பார்த்தால் வெறும் எண்கள். அறிமுகமில்லா நபர் !

‘எவர்…?’- என்று யோசிக்கும்போதே…

“சார் ! மணிமாறனா…?” – குரல்.

“ஆமாம்..!”

“உங்க சகோதரன் மிதுரன் மரணம். சேதி சொல்லச் சொன்னாங்க. வந்துடுங்க…”அடுத்த வினாடி துண்டிப்பு.

குண்டுமில்லாமல் மருந்துமில்லாமல் வெடித்தது போல்….

‘யார் இந்த மதுரன்.? செய்தி சொல்லியது யார்… ?’ கேள்வி மண்டையைக் குடைய….

‘அதுவும்..சகோதரன் !??!’ எனக்குள் யோசனை ஓடியது.

சிறிது நேரத்திலேயே அதற்கான விடையும் கிடைத்தது. ஆள் அடையாளமும் தெரிந்தது.

அதே சமயம்…

‘இந்த துக்கத்திற்கு நாம் செல்ல வேண்டுமா…?’ நினைவும் சட்டென்று எழுந்தது.

அப்படியே மனம் பின்னோக்கி சென்றது.

இருபது ஆண்டுகளுக்கு முன் அப்போது நாங்கள் கிராமத்துக் குடித்தனம். நாங்களென்பது…அம்மா, அப்பா, ஐந்து தங்கைகள், ஒரு அண்ணன், ஒரு தம்பி என்று பெரிய குடும்பம். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

அப்பா மிராசு. என்றாலும் பக்கத்து நகரத்திலுள்ள பணக்கார ஆள் ஒருத்தர் என் அப்பாவிற்குப் பழக்கம். அப்பா மாலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் நண்பருடன் பேசிவிட்டு வர… மணி எட்டரை (அ ) ஒன்பது ஆகும். தினம் அப்படி என்ன பேசுவார்களோ…? அப்படியோர் அன்யோன்யம் !

அன்று ஒருநாள் அப்பா ஒன்பது தாண்டி பத்து நிமிடங்கள் கழித்து வீடு திரும்பினார்.

வாசலைத் தாண்டும் போதே…

“ராஜா, ராணி, என் புள்ளைங்க எல்லாரும் ஓடி வாங்க….”குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தார்.

அப்பா உற்சாகமாய் இருந்தாரென்றால் எங்களையெல்லாம் இப்படித்தான் அழைப்பார். ஏழெட்டுப் பிள்ளைகள் பெற்றிருந்தாலும் அவருக்கு நாங்கள் எப்போதும் ராஜா , ராணிகள்தான். அம்மா மகாராணி !

அந்த’ மகா….ராணி !!’ தோரணை விளிப்பே ஒரு மாதிரியாக இருக்கும். அப்பா புளகாங்கிதமாக சொல்லுவார். அம்மா முகம் சிவந்து போகும்.

உள்ளே உறக்கத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்த கொண்டிருந்த நாங்கள்…அப்பா அழைப்பைக் கேட்டு உன்னைப் பிடி, என்னைப் பிடி என்று முண்டியடித்துக் கொண்டு அவர் முன் வந்து அமர்ந்தோம். எங்களுடைய குட்டித்தங்கை சுதா கூட குடுகுடு வென்று ஓடி வந்து எங்களுக்கு முன்னால் அமர்ந்தாள். அப்பா அவளை ஆசையாத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டார்.

பின்னாலேயே வந்த அம்மாவிற்கும் அப்பா சந்தோசத்தில் ஆவல். குட்டியின் பின்னாலேயே வந்து எங்களுக்குப் பின் நின்றாள்.

அப்பா எங்கள் எல்லோரையும் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தார்.

“ஒரு சந்தோசமான சேதி…!” என்றார்.

எங்கள் எல்லோர் கண்களிலும் மின்னல்.

‘என்னப்பா…?’ என்று எங்களில் எவரோ ஒருவர் கேட்பதற்கு முன்பே…

“நாளைக்கு நம்ப வீட்டுக்கு ஒரு புதுப்பையன் வர்றான் !” சொன்னார்.

“புதுப்பையனா… யாரவன்..?” பெரிய தங்கை கேட்டாள்.

“மிதுரன் !”

“பேரா…?”

“ஆமாம். என் நண்பரோட பிள்ளை.” குரலில் பெருமை வழிந்தது.

“ஏன் வர்றான்…?” பெரியவளுக்கும் அடுத்தத் தங்கை கேள்வி

“அண்ணனைத் தவிர மத்த யாரும் அவனை மரியாதை இல்லாம பேசக் கூடாது. மிதுரன் எல்லாருக்கும் பெரியவன். இருபது வயசு.”

எல்லோரும் வாயை மூடிக் கொண்டார்கள்.

“நான் அவனைத் தவிட்டுக்கு வாங்கப்போறேன். !” என்றார்.

பிள்ளைகள் எல்லாரும் புரியாமல் ஒருவர் முகத்தைப் பார்த்தார்கள்.

அம்மா மட்டும் அப்படி பார்க்கவில்லை.

“எதுக்கு..?” கேட்டாள்.

“சொல்றேன். மிதுரன் என் நண்பருக்கு ஒரே பிள்ளை. நாலு அடுத்தடுத்துப் பொறந்து செத்துப் போச்சு. மிஞ்சினது இவன் ஒருத்தன் மட்டும்தான். இப்போ இவனுக்கும் ஆபத்துன்னு சோசியர் கணிப்பு..”நிறுத்தினார்.

“அப்படியா…?” – நான் பார்த்தேன்.

“ஆமாம். அவனுக்குக் காலநேரம் சரி இல்லையாம். பெத்தவங்க பிள்ளையாய் இருந்தால் இன்னும் ஒரே மாதத்தில் அவன் சாவுன்னு சோசியக்காரன் பெத்தவங்க தலையில இடியை இறக்கிட்டான்.”

“ஐயையோ..! அப்புறம்..?” திடுக்கிட்டு அலறினான் அண்ணன்.

“அதுக்குப் பரிகாரம்…?” – இது அம்மா.

“அதனாலதான் நண்பர் அவனை எனக்கு தவிட்டுக்கு விக்கிறார்.”என்றார் அப்பா.

“புரியலப்பா..?” தம்பி குழம்பினான்.

“அதாவது…. பொருளைப் பணம் கொடுத்து வாங்குறது மாதிரி…நான் மிதுரன் அம்மா அப்பாகிட்ட ஒரு மரக்கால் தவிட்டைக் கொடுத்து நானும் அம்மாவும் சேர்ந்து அவனை எங்கள் பிள்ளையாய் வாங்கிடுவோம். இதனால் அவன் வாங்கின நேரத்திலிருந்து அந்த வீட்டுப் பிள்ளை இல்லே. இந்த வீட்டுப் பிள்ளை. உங்களில் ஒருத்தன். இதனால் அவன் உயிருக்கு வரும் ஆபத்து நீங்கி… சாக மாட்டான்.”

“அப்போ… அவன் நம்பளோடேயே இருப்பானா…?!” இன்னொரு தங்கை கண்களை அகலவிரித்துக் கேட்டாள்.

“இருக்க மாட்டான். இந்த கொடுக்கல் வாங்கல் முடிந்ததும்…ஒரு மணி நேரம் இருந்துட்டு அவன் திரும்ப அங்கேயே போயிடுவான். அங்கே… அவர்கள் வீட்டுப் பிள்ளை நம்ம வீட்டுப் பிள்ளையாய் வளர்வான்.”

“இது சட்டப்படி சரியாப்பா…?” கல்லூரியில் முதலாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் அண்ணன் கேட்டான்.

“நீ எதுக்குக் கேட்கிறேன்னு எனக்குத் தெரியும்..?” சொல்லி அவனைப் பார்த்தார்.

“எதுக்குங்க…?” அம்மா புரியாமல் கேட்டு அப்பாவைப் பார்த்தாள்.

“அதுவா…?! பின்னால சட்டப்படி நம்ம சொத்துல அவனுக்குப் பங்கு உண்டான்னு தெரிய கேட்குறான்.!” சொல்லி அப்பா நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.

“அவன் கேட்கிறது நியாயம்தானே…”என்றாள் அம்மா.

“நியாயம்தான். இது அப்படி இல்லே. இது பழங்காலத்து தத்து, பரிகார பழக்க வழக்கம். இப்போ இந்த தத்து சட்டப்படி செல்லாது. முறைப்படியான தத்துதான் சட்டப்படி செல்லும்.!”

எல்லோர் முகத்திலும் திருப்தி வந்தது.

“அண்ணன் அழகா இருக்குமாப்பா…?” ஒரு தங்கை கேட்டாள்.

“பணக்கார வீட்டுப் பிள்ளை வெயில் படாத உடம்பு. செக்கச் செவேர்ன்னு நல்ல நிறம். சரி சேதி முடிஞ்சாச்சு. எல்லாரும் புறப்பலாம். !” அப்பா அறிவித்தார்.

நாங்கள் வந்தது மாதிரியே எழுந்து படுக்கைக்குச் சென்றோம்.

ஆளாளுக்கு அவன் எப்படி இருப்பானென்று கனவுலகத்தில் மிதப்பு.

அடுத்த நாள் காலை. ஞாயிற்றுக் கிழமை.

நாங்கள் எழும்போதே… அடுப்படியிலிருந்து கமகமவென்று கேசரி மணம் மூக்கைத் துளைத்தது. நாங்கள் ஆவலாய்ச் சென்று பார்க்க அம்மா செய்து கொண்டிருந்தாள். இன்னும் இட்லி, வடை, சாம்பார், பஜ்ஜி என்று பலகாரங்களும் பக்கத்திலிருந்து.

‘மிதுரனுக்கு இந்த ஏற்பாடு !’ எங்களுக்குப் புரிந்தது. நாக்கில் எச்சில் உரியது.

அம்மாவிடம் தொட அனுமதி கிடைக்காது என்பது அறிந்து பின் வாங்கினோம்.

பின்னால் வந்த அப்பா..

“எல்லாரும் குளிச்சி, புதுத்துணி போட்டு பளிச்சுன்னு இருங்க. பத்தரை பன்னிரண்டு நல்ல நேரம் அவுங்க வந்துடுவாங்க…”சொன்னார்.

அவர் சொல்படி எல்லாரும் ஆயத்தமாகி இருந்தோம்.

சரியாய் பத்தரை மணிக்கெல்லாம் எங்கள் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அப்பா பின்னால் நாங்களெல்லாம் எழுந்து ஆவலாய் வாசலுக்கு வந்தோம்.

காரின் பின் கதவைத் திறந்து கொண்டு அப்பாவின் நண்பர், அவர் மனைவி இறங்கினார்கள்.

முன் கதவைத் திறந்து…அப்பா சொன்னபடியே செக்கச் செவேர் நிறத்தில் கழுத்தில் தடியாய் பத்துப் பவுன் அளவிற்குச் சங்கிலி, கையில் அதே அளவு தடிமனில் கைச்செயின், தங்கநிற கடிகாரம்…பையன் இறங்கினான்.

“வாங்க… வாங்க….” அப்பா வரவேற்றார்.

தயாராய் இருந்த அம்மா அவர்களைக் கிழக்கு முகமாக நிறுத்தி வைத்து ஆரத்தி எடுத்தாள். அதன் பிறகே அவர்கள் அனைவரும் உள்ளே வந்தார்கள். நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.

அப்பா அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் எங்களைப் பார்த்தார்களேத் தவிர அறிமுகமில்லாததால் எதுவும் பேசவில்லை. நண்டும் சிண்டுமாய் சின்னஞ்சிறு குழந்தைகள்.என்ன பேச..?

அடுத்து சடங்கு..!.

அம்மாவும் அப்பாவும் சேர்ந்து ஒரு மரக்கால் தவிட்டை அளந்து மிதுரன் அப்பா, அம்மா கையில் கொடுத்தார்கள். அவர்கள் பவ்வியமாக வாங்கிக்கொண்டு… மகன் கையைப் பிடித்து….

“இவன் இனி எங்கள் பிள்ளை இல்லை. உங்களுக்கே சொந்தம். !” சொல்லி எங்கள் அப்பா, அம்மா கையில் ஒப்படைத்தார்கள். . அதை அடுத்து மிதுரன் அவன் அம்மா அப்பா பக்கமிருந்து எங்கள் அம்மா அப்பா பக்கம் வந்து எங்களோடு நின்றான். முகத்தில் மலர்ச்சி, தளர்ச்சி எந்தவித உணர்ச்சியும் இல்லை.

அடுத்து பட்சண, பலகாரங்கள் பரிமாற்றம். அதன் பிறகு பெரியவர்கள் பேச்சு. பெரும்பாலும் அப்பாவே அவர்களோடு பேசினார். அப்பாவைத் தவிர வேறு யாருக்கு அவர்களைத் தெரியும்..?

மிதுரன் புது இடம், அறிமுகமில்லாத நபர்கள். யாருடனும் பேசாமல் எங்களைப் பார்த்துக்கூட புன்னகைக்காமல் , சிரிக்காமல் வெறுமே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

பெரியவனான தான் பேசாமல் இருக்கக் கூடாது என்பதற்காக அண்ணன் தான் அவன் அருகில் சென்று….

“என்ன படிக்கிறே..?” கேட்டான்.

“பத்தாம் வகுப்பு !” சொன்னான்.

“எந்த பள்ளிக்கூடம்..?”

பேர் சொன்னான்.

“நல்லா படிக்கிறீயா..?”

“ம்ம்….”‘

அதற்கு மேல் என்ன பேசுவதென்று அவனுக்கும் தெரியவில்லை. இவனுக்கும் மேற்கொண்டு பேச வாய் வரவில்லை.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு… அவர்கள் வந்தபடியே ஏறி காரில் சென்றுவிட்டார்கள்.

இருந்தவரை…. மிதுரன்… எங்கள் அம்மா அப்பாவை…. தவிட்டுக்கு வாங்கிய பிறகு….அம்மா அப்பா என்று அழைக்கவில்லை.

அண்ணன் தம்பி, தங்கைகள் என்று எங்களோடும் ஒரு வார்த்தைப் பேசவில்லை.

மூன்றாம் மனிதனாக வந்தான். அமர்ந்தான். சடங்கு முடிந்ததும் சாப்பிட்டான் சென்றான்.

அடுத்து நாலைந்து வருடங்கள் கழித்து அப்பா இறந்த துக்கத்தில் வந்து தலை காட்டினான். அடுத்து அம்மா…!

யாருக்காவும் ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை. யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை.

அவனைப் பொறுத்தவரையில் அது ஒரு சடங்கு. உயிர் காப்பிற்கு ஒரு கழிப்பு. என்பதே நினைவு. எங்களுக்கும் அதே எண்ணம்.

அவன் இதோ இறப்பு. இறந்ததாய் செய்தி!

எல்லோரும் திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் திக்கிற்கொருவராய் இருக்கிறோம். எல்லோருக்கும் சகோதரன் என்கிற வகையில் செய்தி போயிருக்குமா..? தெரிவித்திருப்பார்களா..? எல்லோர் தொலைபேசி, கைபேசி எண்களும் அவர்களுக்குத் தெரியுமா…? தெரிய வாய்ப்பில்லை. நான்தான் அருகே பக்கத்து ஊர் என்பதால் செய்தி வந்திருக்கிறது. என்ன செய்ய..?

“என்னங்க யோசனை..?” கமலம் எதிரில் வந்து கேட்டாள். அவளுக்கு இந்த செய்தி தெரியுமென்பதால் கேட்டாள்.

“எப்படி போறதுன்னுதான் யோசனை..?” என்று ஆரம்பித்து விபரம் சொன்னேன்.

“போய் வாங்க…” என்றாள்.

“ஒட்டில்லை, உறவில்லை..” இழுத்தேன்.

“அப்படி சொல்லாதீங்க. அது ஒரு சடங்காய் இருந்தாலும் அது முறைப்படி அவர் உங்க அம்மா, அப்பா பிள்ளை. உங்களுக்கெல்லாம் சகோதரன். இந்த சடங்கால்தான் உயிர் பிழைச்சோம்ன்னே உங்களையும் ஒரு நிமிடமாவது நினைச்சுப் பார்த்திருப்பார். பெற்றால் தான் பிள்ளை இல்லே. நினைச்சாலும் பிள்ளை, சகோதரன்தான். இந்த தவிட்டு விசயம், மத்தவங்களுக்குத் தெரிஞ்சிருக்கிறதால்தான் உங்களுக்கு செய்தி வந்திருக்கு. போய் வாங்க. நானும் வர்றேன்.” சொல்லி கூந்தலை அள்ளி முடித்தாள்.

எனக்குள் இப்போதுதான் உடம்பு தானாக ஆடியது. அழுகை முட்டியது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *