தவளை ஜபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2024
பார்வையிட்டோர்: 138 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழிப்போக்கனை ‘வாசல் திண்ணையில் உட்காராதே’ என்று விரட்டுகிற வீட்டுக்காரனும், வீட்டைக் குடிக்கூலிக்கு விட்டுப் பிழைப்பவனும் நத்தையாகப் பிறப்பார்கள்’ என்று சித்ரகுப்த புராணம் சொல்லுகிறது. ஆனால், சித்திரபுத்திர தந்திரத்தில், ‘சென்னை மாநகரில், வீட்டு முற்றத்தின் ஓரமுள்ள மூன்றரை அடி சதுரத்தை சமையல் கட்டாக மாற்றிக் குடிக்கூலிக்கு விடத் தெரியாத வீட்டுக்காரன், பாம்புக்குத் தண்ணீர் தூக்கிக் கொண்டு போகும் நத்தை யாகப் பிறக்கக் கடவன்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக, இந்த மாதிரி ஆராய்ச்சியில் நான் இறங்கு வதில்லை. ஆனால், நேர்ந்து விட்டால் என்ன செய்யலாம்! 

இந்த வம்பு நேற்று காலை பெய்த மழையால் ஏற்பட்டது. பட்டணத்து வீட்டு இரண்டாம் கட்டில், முப்பது ரூபாய் ஒற்றை அறையில் குடியேறிய பிறகு பேருண்மைகள் பல எனக்கு விளங்க ஆரம்பித்தன. ‘ஏற்பது இகழ்ச்சி’ என்ற பழமொழி, வீடுகளைக் குடிக்கூலிக்கு விடும சகாப்தத்திற்கு முன்னரே தோன்றி இருக்க வேண்டும் என்று விசதமாயிற்று. இல்லாவிட்டால் ‘ஒண்டுக் குடி இருத்தல் ஓயா இகழ்ச்சி’ என்ற பழமொழிதான் முதலில் தோன்றி இருக்கும். இந்த அறையில்தான் நாங்கள் சமைத்துப் சாப்பிட்டு, உண்டு உடுத்து, படித்து, படுக்கவேண்டும். 

நேற்று இரவு சாப்பாட்டுக்குப் பிறகு அவரவர்கள் படுக்கையைப் போட்டுக் கொண்டோம். ‘பிளாஷ்’ என்று தண்ணீரில் ஏதோ விழுந்த சப்தம் கேட்டது. என் பெண் எழுந்து பார்த்தாள். காலையில் சமைப்பதற்காக கங்காளத் தில் பிடித்து வைத்திருக்கும் பூச்சியில்லாப் புதுத் தண்ணீரில் ஒரு தவளை விழுந்து நீந்திக்கொண்டிருந்தது. 

‘நாயினா, தவளை’ என்றாள். சாக்கடை வழியாக வந்திருக்கும். எடுத்துப் போட்டுவிடு’ என்றேன். 

சொம்பால் தவளையையும் சேர்த்து ஜலத்தை மொண்டு போய்க் கொட்டிவிட்டு வந்தாள். 

சிறிது நேரம் சென்றது. ‘சொத் சொத்’ என்று ஏதோ தத்துவதுபோல் ஓசை கேட்டது. பார்த்தால் தவளை இரண்டு மூன்று. ‘இதை விரட்டு நாயினா என்றாள். சரப்பான்பூச்சியின் முள் கால்களுக்கும், தவளையின் ஜில்லிப் புக்கும் பயப்படாத ராணுவ வீரர்கள்கூட உலகத்தில் இல்லை. என் மனைவி பயந்து சுவரோமாய் ஒட்டிக்கொண்டு உட்கார்ந் தாள். சரி என்று தவளைகளை வெளியே விரட்ட ஆரம்பித் தேன். ஒவ்வொரு தவளையையும் அநேகமாக வாசல்படி வரையில் வெற்றிகரமாக விரட்டி விடுவேன். ஆனால், கருப்பு மொச்சைக் கொட்டைபைப்போல் அவ்வளவு பெரிய கண்கள் தவளைகளுக்கு இருந்தும் என்ன பயன்? வெளியே தத்திப் போகத் தெரியாது! வெளியே போகச் செய்யலாம் என்று அருகில் தரையில் தட்டினால், விறுக்கென்று வாசலி லிருந்து என் மனைவி உட்கார்ந்த இடத்தை நோக்கிப் பாயும். அவ்வளவுதான். அவள் எழுந்து அறையில் குறுக்கும் நெடுக்குமாக நாலுமூலைத் தாச்சி விளையாட ஆரம்பித்து விடுவாள். இந்த சந்தடியால் பாக்கித் தவளை களும் குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்து கலவரத்தை அதிகப்படுத்தின. வாத்து மேய்ப்பவனைப்போல் குச்சியால் தட்டி, தவளைகளை வெளியே விரட்ட மறுபடி எவ்வளவோ முயன்றேன். அறை வாசல்வரையில் எனக்கு வெற்றி தான். அதற்குப் பிறகு பழைய கதை. ஆஸ்திரேலியா தேசத்து ‘பூமராங்’கை எறிந்தால், அது எறிந்த இடத்திற்கே திரும்பி வந்துவிடும் என்பார்கள். அதைப்போல வாசற்படி அண்டை தவளைகள் போய்விட்டால், திரும்பவும் உள்ளே தத்த ஆரம்பித்தனவே அன்றி, வெளியே போக மறுத்து விட்டன. 

எனக்கும் களைத்து விட்டது. மனமும் சலித்துவிட்டது. அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றிற்று. ‘எல்லாக் காரியங்களுக்கும் முயற்சி தேவை என்று எண்ணுவது தவறு. சில காரியங்கள் தானாகத்தான் நடைபெற வேண்டும். வாழைத்தார் தானாகப் பழுப்பதற்கும் பழக்கடை வேலுவின் உத்தரவுப்படி குடாப்பில் பழுப்பதற்கும் வித்யாசம் இல்லையா? ஆகையால் இந்த விஷயத்தில் முயற்சி தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். மற்றவர்களையும் அமைதியாய் உட்கார்ந்து ஜபம் செய்யச் சொன்னேன். பதினைந்து இருபது நிமிஷங்களுக்குள் எப்படியோ தவளைகள் தாமாகவே வெளியேறிவிட்டன. ‘இனிமேல் எல்லோரும் பயமில்லாமல் படுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி விட்டு முப்பது ரூபாய் ஒற்றை அறை வாசலை மூடப் போனேன். 

‘ஏன் மாமா, அத்தனை தவளையையும் எங்க பக்கத்துக்கு விரட்டி விட்டீர்கள்?’ என்று வீட்டுக்காரி இடுப்பில் கையை வைத்துக்கொண்டு வந்து என்னைக் கேட்டாள். 

“அட பாவமே! எனக்கேது வீடும் தவளையும்” என்று பதில் கேள்வி கேட்டுத் திணற வைத்துவிட்டு, எதிரே கிடந்த சித்திர புராணத்தைப் புரட்ட ஆரம்பித்தேன். 

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *