(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எரிந்து, புகைந்து கொண்டிருந்த ‘வெண் சுருட் டுத்’ துண்டை வெளியே விட்டெறிந்து விட்டு. நிமிர்ந்த என்னை ஏறிட்டு நோக்கியபடியே இருந்த இருவிழிகள்…, அவற்றின் கவர்ச்சி அப்படியே தம்பித்து விடச் செய் தன. சாளரத்தின் பின்னாக நின்று கொண்டிருந்த சரசா மெல்லப் புன்னகைத்தாள். என் சர்வாங்கமும் சிலிர்த்தது. சாய்வு நாற்காலியில் ‘தொப்’பென்று விழுந்தேன். நெஞ்சில் என்னென்னவோ நினைவுகள் ஊற்றெடுக்க ஆரம்பித்தன. சரசா, எதிர்வீட்டு ‘மோகினி! பருவமங்கை இளமை உணர்ச்சிகளின் ‘கிறக்க’த்தில் இலயிப்பவள்!
நான்…! முற்றும் துறந்த முனிவனல்லன், எப்போது ‘உருசி” கிடைக்கும் என்று விழிபிதுக்கித் திரியும் வேடனுமல்லன், மணமாகாத ஒரு வாலிபனுமல்லன். எனக்கும் உணர்ச்சிகளும் ஆசைத்துடிப்புகளும் இருக் கத்தானே செய்கின்றன !
அப்படியிருந்தும், சரசா எதற்காக இந்த விபரீதப் பரீட்சை நடத்துகிறாள்? என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்! பதில்…? சரசா விழியக்கட்டி என் வேதனைத்தீயை வளர்த்துவிடுகிறாள்! அதோ சாளரத்திற்குப் பின்னால் அவள் எழில்முகம், சதிராடும் விழி கள். கொவ்வையுதடுகள், குங்குமக் கலவையைப் பழித்து நிற்கும் கன்னக் கதுப்புக்கள் எல்லாம் என்னைக் கொல்லாமற் கொல்கின்றன!
எதிர்த்தாற் போலிருந்த அந்த இருமாடி வீடுகளுக் கும் இடையே குறுகலான பெரும் பள்ளம். ஒரு ஓரத் தில் அவள், மறுகரையில் நான். இடையேயிருப்பது அதளபாதாளம்-அது என்ன? வாழ்வின் எதார்த்தத் தையே எனக்குப் புலப்படுத்தவா செய்கிறது? என்னவோ! நான் விரும்பினால் என்ன. விரும்பாவிட்டா லென்ன அந்தப்பக்கமாகத் திரும்பினால் முதலிற் கண் ணிற் படுவது அந்தச் சாளரம். அதற்கு அப்பால் என்னென்னவோ இருக்கலாம். ஆனால் எனக்குத்தெரி வது, அவள்! அவளது நிழலுருவம்-அந்தக் கண்கள்- அவற்றின் கவர்ச்சிச் சிரிப்பு! அப்புறம் பார்க்கின்ற சக்தியே எனக்கு இற்றுப்போய் விடுகிறதா? இது என்ன சோதனையோ?
இந்த மாடி அறைக்கே வராமலிருந்து விடலா மென்றால் பாழும் மனது கேட்டாற்றானே! நான் வாசிக்கின்ற பத்திரிகைகள், புத்தகங்கள் எல்லாம் இந்த அறையுள் சிதறுண்டு கிடக்கின்றன. ஒழுங்கு செய்ய இரண்டு நாள் தேவையாயிருக்கும். யார் அவ்வளவு பொறுமையோடிருந்து, இதை ஒழுங்கு படுத்துவது? எப்படியோ இங்கு வந்து தானாக வேண்டும். எனக் குத்தான் இப்படியென்றால் இவள் சரசாவுக்கு அப்படி யென்ன தலைபோகிற அலுவல், அந்த மாடியறையில்? சதாசர்வ நேரமும் அங்கேயே வந்து கொண்டிருக்கி றாள். தகப்பன் கிழவனுக்கு எந்த நேரமும் வியா பாரமே கண். இரவு பத்து மணிக்குத்தான் வீடுவந்து சேரும். தாயோ சமையற் கட்டை விட்டு வெளிவராத அளவுக்கு அசல் வைதீகம்! அவள் தமையன்மார் என் கிற இரண்டு தடியர்களும் காலையில் நன்றாக உடுத்திக் கொண்டு வெளியே போகிறார்கள். எப்போது விடு திரும்புகிறார்களோ எனக்குத் தெரியாது. இவள், இந் தக் கிறுக்கிமட்டும் இந்த மாடியறையைப் படாதபாடு படுத்துகிறாள். அந்த அளவில் நிறுத்திவிட்டாற் போதாதா? என்னையுமல்லவா வம்புக்கிழுக்கிறாள். அந் தப் பள்ளம்! நிலை தவறிவிட்டால் எலும்புகூட மிஞ் சாது. அவளும் நானும்?
அவள்-என் மனைவி-ஊருக்குப் போய் ஒரு வார மாகிவிட்டது. அவள் இங்கிருக்கும் வரையும் எனக்கு இந்தச் சிரமமெல்லாம் அவ்வளவாகத் தெரியவில்லை. அவள் போனதிலிருந்து எல்லாம் ஒரே குழப்பமாகி விட்டது. உணவுவிடுதிச் சாப்பாடும், அலுவலக வேலை யும் கசந்துவிட்டன. உடலையோ, உணவையோ நன்கு கவனிக்க முடிகிறதா? அவளுக்கு கமலாவுக்குத்தான் என்மீது எவ்வளவு அன்பு! பிரசவத்திற்காக யாழ்ப் பாணத்திற்குப் புறப்படும்போது அவள் எனக்காகச் சொன்ன பரிகாரங்களைக் கேட்டபோது அவளா, நானா பிரசவப் பெண் என்ற ஐயம் எனக்கு வரத்தான் செய் தது. அந்த ஐயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவள் ஊர்போய்ச் சேர்ந்து விட்டாள். இங்கே தகிக் கும் தாபத்தில்… வறுத்தெடுக்கும் உணர்ச்சிப் பொசுக்கலில் நான்…?
அலுவலகம் செல்லவே மனம் ஒருப்படவில்லை, உயிரைவிட்டுழைத்து எந்தக் கோட்டையை வாங்கி விடப் போகிறோம். ஒரு நாலுநாள் ‘விடுமுறை’ போட் டால் என்ன கெட்டுவிடும்! அலுவலகத்திற்கு விடுமுறை கேட்டு எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டிலேயே குந்திக் கொண்டேன். மிக்க அலுப்பு, சலிப்பு!
யாரோ ஒரு பத்திரிகைக்காரர் கதை அனுப்பி வைக்கும்படி பல நாட்களுக்கு முன்பே கேட்டிருந்தார். இந்தத் ‘தொல்லைகளோடு’ கதை எழுதவா முடியும்? இந்த நாலுநாள் விடுமுறையில் அதை ” எழுதி அனுப்பி விடலாமென்றால்…சுலபமாகத் தெரியவில்லை! கதையெழுத நான் மாடிக்குவருவதற்கும், சரசா சாஸ ரத்திற்கு வருவதற்கும் சரியாக இருக்கிறதே! எப்படிக் கதையெழுத முடியும்? இந்தக் கதையை யார் எழுதுவது?
விசுவாமித்திர முனிவரின் தவத்தை மேனகை கெடுத்தாளாம். அவளைப் போலச் சரசாவும் என் தவத்தைக் குலைக்க முயற்சிக்கிறாளா? மிகப் பிரமாத மான கற்பனை எனக்கு! விசுவாமித்திர முனிவர் எங்கே? நானெங்கே? கவர்ச்சி நாகரிகத்தின் தொட்டிலாகத் திகழும். கொழும்பு மாநகரில் அந்த விசுவாமித்திர முனிவராற்கூட, ஒருநாளைக்குத், தாக்குப்பிடிக்க முடி யாது!
அவ்வளவு மோசம்! வசுவில், புகைவண்டியில் மட் டுமா, நடைபாதையிற் கூட இனக்கவர்ச்சி அலைமோது கிறது. ‘ஸ்பரிசசுகம்’ காண்பதில் தம்மை மறந்த இன் பத்தில் திளைக்கிறார்கள் ஆடவரும், பெண்களும், யுவர், யுவதிகள் மட்டுமா, பேரிளம் பெண்தொட்டு தலை நரைத்தும் ‘கலை’ நரைக்காத காமிகள் வரை இந்த வகையில் இன்பம் காணத் தவறுவதில்லையே!
இளமையின் தலைவாசலில் கால் வைத்து நிற்கும் கட்டழகி சரசா ……!
“பட்டும் படாமலும்” அனுபவித்திருக்கிற நான்…?
மதுவுக்கு மட்டுமா மயக்கும் சக்தி இருக்கிறது. பெண் – என்ற போதைப் பொருள் முன் மது, சூரியன் முன், மின் மினியாகிவிடாதா?
பெண்ணை அநுபவிப்பது மட்டுமா இன்பம்? அவள் கடைவிழிப் பார்வையில், இதழ்க்கடையின் புன்னகையில், மதுரமொழியில், மனமோகனத் தோற்றத்தில் ‘தோய்வது’ போன்ற சுகம் வேறென்ன இருக்கிறது?
எனக்கு நானே போதமும், வேதமுமாகிவிட்டேனா? சரசா, நீ ஒரு புதுமலர், மது நிறைந்த மலர், உன் அழைப்பைக் – குறிப்பை நான் ஏற்றுக் கொள்ளட்டுமா?
அந்தப் பள்ளம்! எலும்பு கூட மிச்சம் வைக்காத அதளபாதாளம்!!
வாழ்வைச் சுவைக்கத் தெரியாத கோழைகளின் மனப்பிரமையா இது? அப்படியானால் நானும் ஒரு கோழை! இல்லை! இல்லவே இல்லை!!
மீண்டும் ஒரு ‘வெண்சுருட்டைப் பற்றவைக்கிறேன். எண்ணத் தீயின் புகைச் சுருளை நெட்டித்தள் ளும் பெருமூச்சொன்று வெளிப்படுகிறது. எழுந்து நடைபயில்கிறேன்.
அந்தச் சாளரம், கண்ணில் பட்டுத் தொலைகிறது, அட, அவள் இன்னும் அங்கு நின்று கொண்டிருக் கிறாளா? போதைக்கிறக்கத்தில் கனலேறிவிட்ட என் கண்களை, அவள் கண்கள் விழுங்குகின்றன. ஐயோ…உடலெல்லாம், மின்னிசை வயப்பட்ட உணர்ச்சித் தாக்குதல்…!
சரசா….! உணர்ச்சிக் கனலேறிவிட்ட உதடுகள் ஒன்றுகூடிப் பிரிகின்றன. ஒரே மயக்கநிலை…. சாய்வு நாற்காலியில் சாய்கிறேன்…
உணர்வுக்குள் உணர்வற்று நின்ற, அந்த ஒரு கணத்தில் சரசா என் பக்கலில் நிற்கிறாள்!
கட்டுமீறிய உணர்ச்சிப் போதையில்…
‘சரசா..!’ அவள் என்னை விழுங்கி விடுபவள் போல உற்றுப் பார்க்கிறாள். அந்த ஒரு கணத்திலேயே இளமையின் முழு இன்பத்தையும் அனுபவிக்கச் சொல்கின்ற வெறிப்பார்வை…!
என் மனதில் ஒரு எண்ண இழை…!
கமலா, நீ என் மனைவி! இப்பொழுது ஊரில் என்ன நிலையிலிருக்கிறாயோ இங்கே நான்…. உன் அன்புக் கணவன்..?
இந்த மாடியறைக்கு நான் வந்து விட்டாற் போதும். நீ இங்கிருக்கிறபோது குட்டிபோட்ட பூனையைப்போல என்னை வளைய, வளைய வருவாயே. அது இதற்காகத் தானே ! தனிமையும், இளமையும் காவலற்ற புலமாகி விட்டதா உன் பிரிவுக்குப்பின் ?
கதையெழுதுகிற ஒவ்வொருவனுக்கும், அவன் வாழ்க்கைக்குப் பின்னாக ஒரு பெரிய கதைத் தொகுப்பே இருக்கும் என்று அடிக்கடி கூறுவாயே, இந்தக் கதையைத் தெரிந்துகொள்ளும் ‘தீர்க்கதரிசன’ அறிவு எப்படியடி உனக்கு வந்தது!
‘என்ன….பேசமாட்டீர்களோ.. ?’ சரசா என் எண்ண இழையை அறுத்தாள்!
அவள் கைகளைப் பற்றி, அவளை என் மடிமீதிருத்தி அவளது அழகுக் கன்னங்களை, என் பக்கம் சாய்த்து இளமை விம்மும் நெஞ்சோடு, நெஞ்சு சேர்த்துத்தழுவி முத்தமிட முயலுகையில், உணர்வுகள் தீப்பிழம்பாக கனன்று, உடல் எங்கும் பற்றி எரிகையில், ஒரு கணம் “”டிங் டிங்” என்ற மணி ஒலி! அதைத் தொடர்ந்து ‘தடதட’ வென்று ஆள் ஏறி வரும் அரவம். திடுக்கிட்டு ‘விழித்த’ எனக்கு உலகமே சுழல்வது போன்ற பிரமை. தளர்ந்து விட்ட அணைப்பிலிருந்து, விடுபட்ட சரசா எழுந்து சற்று எட்டி நிற்கிறாள்.
“ஐயா, ஊரிலிருந்து தந்தி வந்திருக்கிறது!”
தந்திச் சேவகன் எங்களிருவரையும் விகாரமாகப் பார்க்கிறான். பேச நா எழவில்லை! கையெழுத்தைப் போட்டுவிட்டுத் தந்தியைப் பெற்று வாசிக்கிறேன்.
“ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலம்.” சரசா! அவள் தந்தியைப் பறித்துப் படிக்கிறாள்.
தந்திச் சேவகன்! – அவன் அப்போதே போய் விட்டானே !
‘சரசா…!?
அவள் மாடிப்படிகளில் ‘தடதட’ என்று இறங்கி ஓடுகிறாள்.
சரசா…! பதில் இல்லை. என் குரலே எதிரொலித்து என்னை நகைக்கிறதா?
‘தொப்’பென்று அந்தச் சாய்வு நாற்காலியில் மீண்டும் சாய்கிறேன். மயக்கம் தெளிந்த நிலை!’
எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தேனோ தெரியாது. உத்துணர்வுடன் எழுந்து கீழே வர முயல்கையில் அந் தச் சாளரப் பக்கம், பழக்கப்பட்ட பார்வை மேய்கிறது. முகத்திலடித்தாற் போலச் ‘சடா’ரென்று சாளரத்தை மூடிச் செல்கிறாளே ஒருத்தி ; சரசாவா? சரசாவேதான்! இனி அந்தச் சாரளம் என்றுமே திறக்காது போலும்! கீழே குனிந்து, அதள பாதாளமான அந்தப் பள்ளத் தைப் பார்க்கிறேன். வானளாவும் நெடுஞ் சுவரொன்று இரு மாடி வீடுகளுக்குமிடையே, தோன்றுவதற்கான அத்திபார வேலையைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் பல தொழிலாளர்கள் ! இனிச் சரசா சாளரத்தைத் திறந்தாலும், சுவர் இருக்கிறதே, எதுவுமே தெரியாத படி மறைக்க. சரசா, உனக்கு உன் உறுதி சுவர்! எனக்கு…என் மகன்..! ‘விறுவிறெ’ன்று கீழிறங்கிச் சென்று விட்டேன். தவறு என்னவோ!
– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).