தள்ளி நில்லு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 17,560 
 
 

அவக் தொவக்கென்று அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மகன் முருகையாவையே கூர்ந்து பார்க்கிற சங்காண்டியின் கண்களிலேயே கண் வைத்திருக்கிற சின்னப் பாண்டியின் மனசெல்லாம் பெருமிதத் ததும்பல்.

முருகையா முழுத்த இளவட்டம். முறுக்கேறிய உடம்பு. கருவேலமரத் தூர்மாதிரி வைரம் பாய்ந்து இறுகிய திரேகம். சோறும் குழம்பும் பிசைந்த வாசம் கும்பாவிற்கும் வெளியே மணக்கிறது. சாப்பிட்டுக் கொண்டே அம்மாவைத் துரிதப்படுத்துகிற முருகையா.

அம்மே… தூக்குச் சட்டியிலே சோறு வைச்சுட்டீயா? வைச்சுட்டேன்ப்பா.

அஞ்சு லிட்டர் கேன்லே தண்ணி புடிச்சுட்டீயா?

புடிச்சுட்டேன்டா, துரட்டியையும் ரெண்டு அருவாள்களையும் பக்கத்துலே வைச்சுருக்கேன்ப்பா…

தண்ணீர்ச் செம்பை மகன் பக்கத்தில் குனிநது வைக்கிற ராசம்மா, சங்காண்டியிடமும், சின்னப் பாண்டியிடமும் தேயிலை போட்டுக் கொதிக்க வைத்த பால்காப்பித் தம்ளர்களை நீட்டினாள். இந்தாங்கண்ணே… மொதல்லே காப்பித் தண்ணி குடி.

வாய் கொப்பளிக்கணும். ஒரு செம்புலே தண்ணி குடும்மா.

தண்ணீர் கொண்டு வந்து தருகிற ராசம்மா. வாய்கொப்புளித்து, முகம் கழுவி, நாலு மடக்குக் குடித்துவிட்டு, ஆவி பறந்து கொண்டிருக்கிற தம்ளரை எடுப்பதற்கு முன்பாக, தோள்த் துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்ட சங்காண்டி.

ஏம்ப்பா… சைக்கிள்லே காத்து கீத்தெல்லாம் இருக்குதுல்லே? சரி பாத்துட்டீயா? என்று குறுக்குக் கேள்வி கேட்ட சின்னப் பாண்டியின் ரகசியப் பார்வை, சங்காண்டி கண்ணில் உட்கார்ந்திருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கிற முருகையாவையே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது, சங்காண்டியின் பார்வை.

முருகையாவுக்குத் தன் மகளைக் கொடுக்கலாம் என்றொரு நினைவு ஓடிக் கொண்டிருக்கிறது. சங்காண்டி குடும்பத்தில் தண்ணிவெண்ணி கலக்கணும் என்று சின்னப்பாண்டிக்கு ரொம்ப ஆசை. விவசாயக் குடும்பம். நிலபுலம் ஜாஸ்தி. வெள்ளாமை விளைச்சல் படு செழிப்பு. சங்காண்டி மகள் கருப்பாக இருந்தாலும் களையான முக லட்சணம். முறுக்கிப் பிழிந்த ஈரக் கூந்தல் மாதிரி இறுகலான திரேகம். களைப்பறியாமல் பாடுபடக் கூடிய உழைப்பாளி வம்சம்.

எம் பயலோட ஒம்ம பொண்ணை சேத்துவைச்சா… சோடிப் பொருத்தம் கச்சிதமாயிருக்கும்.

ஏங்கிட்டே பொண்ணு கேக்கீரா?

கேட்டுக்கிட்டுதான் இருக்கேன்.

நா… ஒம்ம மகனைப் பாக்கணும். ஒம்ம ஊரைப் பாக்கணும். எம் பொண்ணு வந்து, இருந்து, வாழப்போற ஊரையும், ஊரோட சுத்துவட்டாரத்தையும் பாக்கணும்.

எப்ப வாரீரு?

ம்… அம்மாசி முடியட்டும். வர்ற வளர்பிறையிலே வர்றேன்.

வந்திருக்கிறார். முருகையாவையே கவனிக்கிறார். சாப்பிடுகிற ஒழுக்கம், வேலைக்குப் புறப்படுகிற மும்முரம், அம்மா மீது இருக்கிற ஒட்டுதல் எல்லாவற்றையும் பார்க்கிற சங்காண்டி. அவருக்குள் கூர்மையாகிற மனப்பார்வை. குணபாவங்களை எடைபோட்டுக் கணிக்கிற மனத் தராசு.

வெறகு வெட்டுறதுக்கு எங்க போறாக, மருமகப்புள்ளை?

வலையபட்டிக் காட்டுக்கு.

ஊரைஒட்டி செந்தட்டியாபுரம். தாண்டுனா ஆமர்நாடு. அதையும் கழிச்சுப் போனா… சீமைக் கருவேலங்காடு. வலையபட்டி ஆளுகளுக்குச் சொந்தமான நெலம்.

சம்பளம்…?

எரநூத்தைம்பது ரூவா…

வெறகு வெட்டு இல்லாட்டா?

ஆமர்நாட்டு சம்சாரிகளோட காடுகரைகளுக்குக் கூலி வேலைக்குப் போகணும்.

கடைகண்ணிகள்லே அரிசி, பருப்பு வாங்கணும்னா?

ஆமர்நாடுதான் போகணும். அங்கதான் பெரிய பெரிய பலசரக்குக் கடைக இருக்கு.

ரெண்டு வடை திங்கணும், ஒரு டீ குடிக்கணும்னா, ஆமர்நாடுதான் போகணும்…?

ஆமா… அது பெரிய ஊரு. நிறைய தலைக்கட்டுக. நாலா சாதிச் சனமும் கலந்துருக்குற ஊரு.

ம… ம்… ம்…

நாடாக்கமாரு, தேவமாரு, நாயக்கமாரு, ஆசாரிமாரு, சக்கிலியச்சனம், சாம்பாக்கமாரு எல்லாரும் இருக்காக. சண்டை சத்தமில்லாம ஒத்துமையாயிருப்பாக… நம்ம ஊர்லே?

நம்ம ஆளுக மட்டும்தான். நமம தனி ராஜ்ஜியம்.

சங்காண்டி ஊருக்குள் சுற்றிப் பார்த்த ஞாபகம் வந்தது. மாடு வைத்து விவசாயம் பண்ணுகிற சில குடும்பங்கள். நிலம், காடு கரை வைத்திருக்கிற சில சம்சாரிகள். அப்புறம் பூரா ஜனமும் கூலி ஜனம்தான். ஆடு குட்டி மேய்ப்புத் தொழில்கள். வீடு வீட்டுக்குத் தாழ்வாரங்களும், எருமை மாடுகளும், பசு மாடுகளும்.

சின்னப்பாண்டி வீடு, பெரிய வீடுதான். ஒரு நடுத்தர சம்சாரி வீடு. கண்மாய்ப் பாசனத்தில் மூணு ஏக்கர் நஞ்சையும், பம்ப்ஷெட் மோட்டார் கிணற்றுப் புஞ்சையும் இருக்கின்றன. தனித்தாழ்வாரம். நாலு பசு மாடுகளும், சில வெள்ளாடுகளும், சில கிடாய்களும்.

சொநதப் புஞ்சையில் வேலையில்லாத நாளில் சும்மா இருக்காமல், கூலி வேலைக்குப் போகிற அக்கறை.

புளிச்ச தண்ணி பொங்கிப் பெருகுகிற பானை மாதிரியான செழித்த குடும்பம். தனது உழைப்பாளி மகளுக்கு ஏற்ற குடும்பம்தான்.

சங்காண்டிக்குள் நாலாதிசைகளிலும் ஓடிப் பாய்கிற நினைவுகள். ஆயிரம் காலத்துப் பயிர். ஆற அமர யோசிக்க வேண்டும். யோசனைகளின் நீட்சியில் ஒரு நெருடல்.

ஆமர்நாட்டை நம்பிய பிழைப்பு. நோய்நொடி என்றால் அங்குதான். கடைகண்ணிக்கும் அந்த ஊர்தான். பாடுசோலிகளுக்கும் அந்த ஊரையே நம்பின பாடு. எல்லாவற்றுக்கும் அதுதான். ஊர் வழி போவதென்றாலும் அங்குதான் போய் பஸ் ஏற வேண்டிய நிலைமை.

சண்டை சத்தமில்லாம, ஒத்துமையாயிருப்பாங்க இது ஒரு நல்ல அறிகுறி.

ராசம்மா சோறுவைத்து சாப்பிடச் சொன்னாள்.

அண்ணே சாப்புட்டுக்கிறீகளா?

ஆட்டும்மா…

நானும் மாடுகன்னுக்கு ரெண்டு புல்லுபுளிச்சி பாத்துட்டு வரணும். காட்டுக்குப் போய் வந்தாத்தான், ஆடுகுட்டிகளுக்கு கொழை ஒடிச்சுட்டு வரலாம்.

சாப்பிட்டு முடித்தனர். சங்காண்டி ஒவ்வொன்றும் உற்றுப் பார்த்தார். சந்தேகமான மனசோடு யோசித்தார். சரி… தங்கச்சி புஞ்சைக்குப் போய்ட்டு வரட்டும். நாம… அப்படியே காலாற ஆமர்நாட்டுக்குப் போய்ட்டு வந்துருவோம்.

அங்க என்னத்துக்கு?

சும்மாதான். அந்த ஊருலே போய் ஒரு டீயடிச்சுட்டு வெத்தலைபாக்கு வாங்கிட்டு வந்துருவம்.

மாப்பிள்ளை பார்க்கிற மாதிரி, மாப்பிள்ளை வீடு, ஊர் பார்க்கிற மாதிரி… அந்த ஊரையும் அளந்து பார்க்கவா? என்று யோசிக்கிற சின்னப்பாண்டி, சங்காண்டியின் முன்யோசனையை நினைத்து வியந்தான்.

நம்ம ஊரு பூராவும் நாம வைச்சதுதான் சட்டம். நானூறுக்கு மேலே தலைக்கட்டுக. நாம இங்க வலுத்த கூட்டமாயிருக்குறதுலே, சுத்துவட்டாரத்துக்கு நம்ம ஊராளுக்கு நல்ல மதிப்பு மருவாதி.

ம்…ம்…ம்… அப்படியா…?

அதுலேயும் ஆமநாடு, தங்கமான ஊரு. தங்கமான மனுசங்க… நம்ம ஊரு ஆளுகளை தாயாபுள்ளைகளா மதிச்சு பாசத்தோட பழகுவாக. தள்ளிநில்லுன்னு ஒருத்தருகூட சொல்லமாட்டாக…

டீக்கடைகளில் உட்காருகிற இடங்களில் வித்தியாசம் உண்டா, டீக் கிளாஸ்களில் வேறுபாடு உண்டா என்றெல்லாம் கேட்டு விசாரிக்கிற ஆர்வத்தை அடக்கிக் கொண்ட சங்காண்டி. அதான்… போய், நேர்லேயே பார்க்கப் போறோம்லே?

செந்தட்டியாபுரம் கழித்து, குறுகலான தார்ரோட்டில் பொடிநடையாக கடந்து கொண்டிருந்தனர். ஏறுவெயில் சுள்ளென்று காந்துகிறது. வெள்ளை வெயிலின் வெக்கையில் கண்ணெல்லாம் கிடந்து உறுத்துகிறது.

ஊருக்குள் நுழைந்தவுடன் – வாயா, சின்னப்பாண்டி… என்ன சௌக்யமா? கடைக்குப் போகவா, பஸ்ஸூக்கா…?

ஆமய்யா… பஸ்ஸூக்கெல்லாம் போகலே. சும்மா ஊருக்குள்ளேதான்.

ஏறக்குறைய எல்லாருமே மதிப்பு மரியாதையுடன் வரவேற்று, விசாரிக்கிறார்கள். நடுத்தர சம்சாரிக்குரிய மதிப்பு மரியாதை. சாதி வித்தியாசம் வார்த்தைகளில் தோன்றவில்லை.

அருஞ்சுனை பலசரக்குக் கடைக்குப் போனான். உற்சாகமாக வரவேற்கிற கடைக்காரர். அக்கறையான உபசரிப்புகள். இன்னின்ன சரக்குகள் வேணும் என்று சிட்டை சொல்லுகிறான்.

போட்டு வையுங்க… நாங்க நடுத்தெரு போய்ட்டு வாரோம்…

சரி… ஒரு கலரு குடிச்சுட்டுப் போகலாம்லே? ஒடைக்கட்டா?

வேண்டாம்யா.

விருந்தாளு கூட வந்துருக்கு. ஒடைக்குறேன்.

ரெண்டு பேரும் கலர் குடித்து முடித்து ஏப்பம் விட்டனர். எதிர்க்களித்த கலர் நுரைகள் நரம்பெல்லாம் சுறுசுறுத்து இனித்தன.

நல்ல ஊருதான்… மனுச மக்களை மதிக்கிற ஊருதான். சாதி வித்தியாசம் காட்டாத மனுசமக்கள். பொண்ணைக் குடுக்கலாம்னுதான் தோணுது…

சங்காண்டிக்குள் கலர் நுரைகளாக மொறு மொறுக்கிற நினைவுகளின் தித்திப்பு.

எல்லாமே சிமெண்டு ரோடுகளாகிவிட்ட ஊர்த் தெருக்கள். வழிநெடுக விசாரிப்புகளும், வரவேற்புகளும், உபசரிப்புகளும், சங்காண்டிக்குள் பூத்தூவலாக பாதை நீண்டது.

டீக்கடையில் பெஞ்சில் உட்காரச்சொன்ன சமத்துவம். எல்லோருக்கும் போலவே கண்ணாடிக்கிளாஸில் டீ தந்த மரியாதை. சங்காண்டிக்குள் வியப்பாக இருந்தது.

இங்க எல்லா சாதிக்கும் ஒரே மாதிரிதான்…

சாம்பாக்கமாரு, சக்கிலியருக?

அவுகளுக்கும் இப்படித்தான். பெஞ்சுலே உக்காந்து, கண்ணாடிக்கிளாஸ்லே டீக்குடிச்சுட்டு, சீரெட்டை ஊதிட்டுப் போகலாம்…

ஆச்சரியமாயிருக்கே…

சுடுகாடும், இடுகாடும்கூட இந்த ஊர்லே எல்லாருக்கும் ஒரே எடம்தான்.

பரவாயில்லையே…

நம்ம பயக தண்ணியைப் போட்டுட்டு சலம்ப மாட்டாங்களா?

இப்பத்தான் டாஸ்மாக் வந்துருச்சு. எல்லாச் சாதிகள்லேயும் குடிச்சிட்டு சலம்புறவுக சில பேரு இருக்காக. அதனாலே, அதெல்லாம் சகஜமாயிருச்சு…

சங்காண்டிக்கு இந்த ஊர் ரொம்ப புதுமையாக இருந்தது. எளிய சாதியை தள்ளி நில்லு என்று சொல்லாத ஊர். முருகையாவுக்கு மகளைத் தரலாம். சின்னப்பாண்டியின் குடும்ப மருமகளாக மதிப்பு மரியாதையோடு வாழ்வாள்.

பஸ் ஸ்டாண்டு பக்கம் போனார்கள். பால்பண்ணை வாசல்படியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். கதர்வேட்டி, கதர்ச்சட்டை, கதர்த்துண்டு, வலது கை விரலிடுக்கில் புகைகிற சிகரெட். முகத்தில் இனம்புரியாத சிடுசிடுப்பு.

அண்ணாச்சி, ராசபாளையம் பஸ் எப்ப வரும்? அவரிடம் கேட்ட சங்காண்டி, ஏற இறங்கப் பார்த்த பெரியவர். வெள்ளை வேட்டி. வெள்ளைச் சட்டை. கைகளில் மோதிரம், கடியாரம், காலில் செருப்பு. மதிப்பு மரியாதைக்குரிய கண்ணியமான தோற்றம்.

பெரியவர் முகத்தில் கடுகடுப்பு. கண்கள் இடுங்குகின்றன. கோபத்தின் முக இறுக்கம்.

சின்னப்பாண்டி கூட வந்த ஆளா? உறவுக்காரவுகளா?

ஆமா…ண்ணாச்சி.

அண்ணாச்சின்னு என்னைக் கூப்புடுதீயே… எப்படி? என்ன மொறையிலே? நீ எங்க அம்மா வவுத்துலே பெறந்தீயா? இல்லாட்டா… உங்காத்தா ஒன்னை எங்கப்பனுக்குப் பெத்தாளா?

சுரீரிடுகிற தீ வார்த்தைகள். சொற்கங்குகள். உள்மனவெப்பத்தை -உயிர்ச்சூட்டை – சூடுசுரணையை – சுள்ளென்று எழுப்பிவிடுகிற சுடுசொற்கள். தடிப்பான வார்த்தைகளுடன் சீறத் தயாராகிவிட்ட சங்காண்டி.

நாலெட்டு பிந்தி வந்த சின்னப்பாண்டி, நிலவரக் கலவரத்தைச் சட்டென உணர்ந்து கொண்டு சங்காண்டியின் வலதுகை மணிக்கட்டைப் பற்றி அழுத்திய அழுத்தத்தில் ஓர் அர்த்தம் தொனித்தது.

வாயைத் திறக்காமல் பேசாமலிரு என்று உணர்த்துகிற கைப்பாஷை. தொடுதல் மொழி.

அய்யா… அவரு வெளியூரு… தப்பா எடுத்துக்கிடாதீக என்று மிருதுவான குரலில் கூறிவிட்டு, சற்றுத் தள்ளி சங்காண்டியை அழைத்துச் சென்ற சின்னப்பாண்டி.

தர்மசங்கடமான மௌனம் நீடித்தது. கொதித்துக் கொந்தளிக்கிற சங்காண்டி முகம். உயிர்க்களையிழந்து முகம் குறாவிப்போன சின்னப்பாண்டியின் முகக் கருமை.

அங்கு நீடித்த மௌனம், மனசுகளைக் கிழித்து, உரித்து, மிளகாய்த் தூளை அப்பியது.

சங்காண்டி மகள், சின்னப்பாண்டி மகனுக்கு வாழ்க்கைப்பட்டு வரவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *