தலைமுறை இடைவெளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 719 
 
 

வழக்கமான காலை..

குளித்து, பூஜை முடித்து, ஹாட் பாக்ஸ்ஸில் காத்துக்கொண்டிருந்த இரண்டு தோசைகளை எடுத்துத் தட்டில் போட்டுக்கொண்டு தக்காளிச் சட்டினியுடன் டைனிங் டேபிளில் அமர்ந்தேன்.

என் மகளின் அறையிலிருந்து பலத்த வாக்குவாத சத்தம் காதுகளைத் துளைத்தது. பேத்தியுடன் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

தோசையை உள்ளிறக்க ஆரம்பித்தேன். சாப்பிட்டு முடிக்கும் போது எப்படியும் விஷயம் ஹாலுக்கு வந்துவிடும் என்று தெரியும். எனவே அலட்டிக்கொள்ளாமல் இருந்தேன்.

சாப்பிட்டு டேபிளைக் காலிசெய்து விட்டு BP மாத்திரையோடு ஸோபாவில் வந்து அமர்ந்தேன். மாத்திரை விழுங்கியதும் ஸோபா பலமாக அதிர்ந்தது. மறு முனையில் கடுங்கோபத்தில் பொத் தென்று வந்தமர்ந்தாள் என் பேத்தி.

ஒரு பிடி கடுகை முகத்தில் எறிந்தால் வெடித்துவிடும் போல் இருந்தது. என்ன என்று கேட்க வாயெடுக்கும் முன்பே கையால் சைகை காட்டி வாயை மூடச் சொன்னாள். சரி புயல் கரையைக் கடக்கும் வரை அமைதி காக்க முடிவெடுத்தேன்.

இறுகிய முகத்தோடு கண்களைத் தாண்டி வெளியேறத் துடித்துக்கொண்டிருந்தன கண்ணீர் முத்துக்கள். கோபம் ஏமாற்றம் என்று பல உணர்ச்சிக் குன்றுகளின் சிகரத்தில் ஏறி நின்றிருந்தாள் என் பேத்தி பாவனா.. 14 வயதாகிறது. ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கிறாள்.

எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.


சிந்தனை பின்னோக்கிப் பயணத்தைத் துவங்கியது. கடந்த கால நினைவலைகள்…

என் தந்தையார் தஞ்சை மாவட்ட விவசாய கிராமம் ஒன்றில் பண்ணையம் பார்த்துக்கொண்டிருந்தவர். 10 ஏக்கருக்கும் மேல் நிலம்,

பெரிய வீடு, பத்து பதினைந்து பசுமாடுகள், வேலையாட்கள் என்று மிகவும் வசதியாய் செல்வாக்காய் வாழ்ந்தவர்..

என்னோடு சேர்த்து 6 பிள்ளைகள். எனக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கை, 3 தம்பிகள். என் அம்மாவுக்கு 200 பவுண் நகை போட்டு என் அப்பாவுக்கு மணமுடித்து வைத்தனர். எனக்கும் என் தங்கைக்கும் மோதிரச்செயின் எல்லாம் கூட இருந்தது.

அந்த காலத்தில் பெண்களின் பாதி நகைகள் அடகில் தான் இருக்கும். அடகு வைத்து விதைத்து, விளைந்த பின் அறுவடை செய்து விற்று, அடகிலிருந்து மீட்டு, பிறகு மீண்டும் மறுபாதி நகைகளை அடகு வைத்து விவசாயம் பார்ப்பதே அன்றைய வாழ்க்கையாக இருந்தது.

முப்போகம் நன்றாக விளையும். நல்ல மகசூல் கிடைக்கும். மகிழ்ச்சியான வசதியான வாழ்வு தான். என் 13 வயது வரை..

நான் 8 ஆவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் வங்கியிலிருந்து எங்கள் வீட்டை ஜப்தி செய்ய அமீனா வந்தார். அடுத்த 5ஆவது நாள் 6 பிள்ளைகளையும் அம்மாவையும், அம்மாவின் அம்மாவையும் அழைத்துக்கொண்டு, அப்பா அவரது பூர்வீக நிலத்தை, அத்தனை காலம் விளைவித்த நிலத்தை விற்றதில் தன் பங்காகக் கிடைத்த சொற்ப பணத்தை எடுத்துக் கொண்டு கிராமத்தை விட்டு “வாழ்ந்து கெட்டவன்” என்ற பட்டத்தோடு வெளியேறினார்.

ஒரு அறை, பொது கழிப்பிடம் உள்ள ஒரு வீட்டில் 9 பேர் குடியேறினோம்.

மழையின்றி 5 ஆண்டுகள் தொடர்ந்து நிலம் விளையாமல் போனதாலும், இத்தனை ஆண்டுகளாக வந்த லாபத்தைத் தன் குடும்பத்துக்குக் கொஞ்சமும் எடுத்து வைக்காமல் அப்பா செலவிட்டுவிட்டதாலும், அம்மாவின் அம்மா நகைகளையும் சேர்த்து அடகு வைத்து மீட்க முடியாமல் மூழ்கிவிட்டதாலும், குடும்பம் வறுமையில் விழுந்திருப்பதைப் புரிந்து கொண்டோம் நானும் SSLC முடித்திருந்த என் அண்ணனும்.

மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாமல் போனதால் நானும், அண்ணனும், முதல் தம்பியும் கிடைத்த சின்னச் சின்ன வேலைகளைச் செய்யத் துவங்கினோம்.

தங்கையும், இரண்டாவது தம்பியும் மட்டும் பள்ளி சென்றனர். கடைசி தம்பி மூன்றரை வயது குழந்தை..

பொருளாதார நெருக்கடியின் உச்சத்தத்தை அனுபவித்த நாட்கள் திரைபோல் ஓடின..

சரியான போஷாக்கின்றி கடைசி தம்பி எலும்புருக்கி நோயினால் பாதிக்கப்பட்டான். என்பு தோல் போர்த்திய உடம்பாக இருந்த அந்த 4 வயது குழந்தைக்கு கட்டுக் கடங்காத வயிற்றுப்போக்கும் சேர்ந்துகொள்ளவே அம்மாவும் அப்பாவும் வீட்டை என் பொறுப்பில் விட்டுவிட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையோடு தஞ்சமடைந்தனர்.

வயதான கண் தெரியாத பாட்டி, பள்ளி செல்லும் இரு பிள்ளைகள், வேலைக்குச் செல்லும் அண்ணன், தம்பி, குடி நீர் பற்றாக்குறை என அனைத்தையும் 14 வயதை நெருங்கிக்கொண்டிருந்த நான் சமாளித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில், ஒரு பகல் பொழுதில், என் பாட்டி என்னை அழைத்து, தான் மரணிக்கும் நேரம் வந்துவிட்டதாக அறிவித்தார். தண்ணீர் கேட்டார். என் மடியில் படுத்துக் கொண்டு என் கையால் தண்ணீர் குடித்தார். அனைவரையும் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு ஆசி வழங்கிவிட்டு என் மடியிலேயே உயிர் விட்டார் என்னை அருமை பெருமையாய் வளர்த்த என் பாட்டி. தன்னந்தனியாய் நான் இருந்த போது நிகழ்ந்த மரணம்.

அழுதேன்..

பிறகு பாட்டியைத் தரையில் படுக்க வைத்துவிட்டு, கை கால் கட்டை விரல்களைக் கட்டி, சுற்றி மஞ்சள்பொடியால் எல்லை வரைந்துவிட்டு, கதவைத் தாளிட்டு பக்கத்து வீட்டிற்கு விரைந்தேன். நடந்ததைக் கூறிவிட்டு, “பார்த்துக்கொள்ள முடியுமா, நான் மருத்துவமனை சென்று அம்மா அப்பாவை அனுப்பிவைக்கிறேன்” என்று கோரினேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவே, விரைந்து மருத்துவமனைக்கு ஓட்டமும் நடையுமாக ஓடி, அம்மா அப்பாவிடம் விஷயத்தைக் கூறி அனுப்பிவிட்டு தம்பியைப் பார்த்துக்கொள்ள மருத்துவமனையில் தங்கினேன்.

அடுத்த 11 நாட்கள் மருத்துவமனையில் கழிந்தன. தம்பிக்கு வயிற்றுப்போக்கு நின்றது. பாட்டியின் காரியங்களும் முடிந்தது. வீடு திரும்பிய மறு நாள் தம்பி மீண்டும் வயிற்றிலும் வாயிலும் போனான். பக்கத்தில் இருந்த ஒரு மருத்துவர் வீட்டுக்கு அவனைத் தூக்கிக் கொண்டு ஓடினோம். அவர் தம்பி இறந்துவிட்டதாய் அறிவித்தார். அவனை அடக்கம் செய்து 2 நாட்கள் அழுது ஓய்ந்தோம்.

காலை நானே தூக்கத்திலிருந்து முதலில் விழித்தேன். அழுது அழுது கண்கள் ஒரே எரிச்சல். முகம் கழுவிவிட்டு வந்து நாள்காட்டியின் பக்கத்தைக் கிழித்தேன்..

16-03-1979,

என் 14 ஆவது பிறந்த நாள்..

வறண்ட உணர்ச்சிகளோடு கிழித்த காகிதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு வாசலைப் பெருக்கித் தெளிக்கக் கிளம்பினேன்..


“பா…….ட்டி” என்று பேத்தியின் குரல் கேட்க, நினைவலைகள் நிகழ்கால கரையில் சட்டென்று என்னை எறிந்தன..

“என்னடி… என்னதான் பிரச்சின?” என்றேன்..

“நாளைக்கு எனக்கு 14th birthday தான பாட்டி..”

“ஆமா..”

“அம்மா கிட்ட என் friend சுஷ்மிதா வச்சுருக்கறமாறி ஒரு i-phone கேட்டேன் பாட்டி..”

“எவ்வளவு அது?”

“just 43k தான் பாட்டி.. ஆனா அம்மா strictஆ வாங்கித் தரவே முடியாதுங்கறாங்க.. உங்க பொண்ணுக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல பாட்டி”

என்று அழுகைக்கு இடையில் சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்..

சில நொடிகளில் அவள் அறைக் கதவு அறையப்பட்ட சத்தம் கேட்டது..

அதே 14ஆவது பிறந்த நாள்.. இரண்டு தலைமுறையில் எத்தனை இடைவெளி என்று அளந்துகொண்டே அவளின் அறை நோக்கி நடந்தேன்.. சமாதானம் செய்வேனா அல்லது அவள் அழுவதைத் தாங்க முடியாமல் அவள் கேட்டதை வாங்கித்தந்துவிடுவேனா.. தெரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *