கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 14, 2024
பார்வையிட்டோர்: 8,564 
 
 

(மனவியல் சிறுகதை)

நற்றிணை 184

ஒரு மகள் உடையேன் மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையடு
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே

“ஃபிராய்டிஸத்தில் கரைகண்ட சைக்கோ அனலிஸ்ட் டாக்டர் நவீனன் ‘வளர்ச்சி உளவியல்’ என்கிற மூலப் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார்.

“என்னிடம் பால் மணம் மாறாத 12 பச்சிளம் குழந்தைகளைத் தாருங்கள், குழந்தைகளின் பின்னணி எதுவானாதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்தக் குழந்தைகளை நீங்கள் விரும்புகிறபடி; உதாரணமாக மருத்துவர், வக்கீல், ஆசிரியர், ஓவியர்,வியாபாரி ஏன்…? ஒரு பிச்சைக்காரனாக, திருடனாகக் கூட உருவாக்கிக் காட்டுகிறேன்.”

இப்படிப்பட்டச் சவாலுடன் கூடிய ‘ஜே பி வாட்ஸனின்’ கோட்பாடான நடத்தைவாதத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட மருத்துவர் டாக்டர் நவீனன்.


தனஸ்ரீ.

அன்பரசியின் ஒரே பற்றுக்கோடு.

தாலி கட்டவில்லை என்றாலும் ராஜசேகரனின் ‘எக்ஸ் குரோமோசோம்’ கொடுத்த பரிசு அவள்.

தாயின் நிழல் கூடப் படாமல் ஃபிரான்ஸில் வளர்ந்தாள்.

அந்தக் கலாச்சாரத்தோடு ஒன்றினாள்.

ஒரு பள்ளி நாளில் அவளுக்கு ‘பிஹேவியர் தெரபி’க்கு நிர்பந்தம் ஏற்பட்டது, தெரபிஸ்ட் கேட்ட குடும்பப் பின்னணியை சொல்ல மறுத்தாள் அன்பரசி.

தன் யவ்வன ஆட்டமும், தன் தாயின் குரூரப் பின்னணியும் அவளுக்குக் கலவரமூட்டின.

கல்லூரி நாட்களில்  தொண்டு இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள்.

பொதுச்சேவையில் தன்னை கரைத்துக் கொண்டாள் அவள்.

‘நான் யார்…?’ தேடல் தோன்றித் தொடர்ந்தது


பிரபல கட்டுமாகக் கம்பெனியும், பிரபல அறக்கட்டளையின் உரிமையாளறுமான டேவிட்’ன் தனிச் செயலராக இன்று தனஸ்ரீ.

‘பெற்றவளுக்குத் தெரிவிக்க வேண்டுமென்ற’ கடமை உணர்வில் திருமணம் என்ற தகவலையும், வருங்காலக் கணவர் டேவிட்’ன் புகைப்படத்தையும் மின்னஞ்சலில் அனுப்பினாள் தனஸ்ரீ.

மின்னஞ்சலில் தன் வாழ்த்தை இணைத்து  ‘ஃபார்வர்டு’ செய்தாள் அன்பரசி.

கனவுகளும், கவலைகளுமாக அன்பரசிக்கு நாட்கள் நகர்ந்தன.


‘நாளைக் காலை 11 மணிக்கு தன் மகளுக்கு பிரான்ஸ் நகர தேவாலயத்தில் மோதிரம் மாற்றிக் கல்யாணம். கையோடு திருமணப் பதிவு..

தனஸ்ரீ, நாளை இதே நேரத்தில் ‘தனஸ்ரீ டேவிட்’ ஆகிவிடுவாள். ஆகிவிட வேண்டும்…!’-

எதையெதையோ எண்ணி மனசு கலவரப் பட்டது. எல்லாம் நல்லபடியாக முடியவேண்டுமே என்ற கவலை வந்தது அன்பரசிக்கு.


“ஹலோ… டாக்டர் நவீனன்…?”

“யெஸ்…!”

“ஐ ம் அன்பரசி. கிளையண்ட் எண் 8882 .”

வாடிக்கயாளர் எண்ணை கணினியில் தட்டினார் நவீனன்.

“….”

“ஹலோ அன்பரசி மேடம்… வாட் எ சர்ப்ரைஸ்…! இவ்ளோ… வருஷம் கழிச்சி…? சொல்லுங்க…!”

“இன்னிக்கு சாயங்காலம் 6 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வேணும்; உங்களை மீட் பண்ணியே ஆகணும் டாக்டர் நவீனன்.”

“ரீசன் தெரிஞ்சிக்கலாமா…?”

“ம் …”

அன்பரசி சொன்ன விபரங்களைக் கவனமாகக் காதில் வாங்கினார் டாக்டர் நவீனன்.

“மேடம்… உங்க ‘மேரேஜ் ஈவ்’ஐ நினைச்சுக் குழம்புறீங்கபோல. கவலைப் படாம தைரியமா இருங்க.”

“….”

நீங்க சொல்றதை வெச்சிப் பார்த்தா, “அநேகமா உங்க ஸ்டைல்லதான் உங்க மகளும் வளர்ந்திருக்காங்க. கன்ட்ரிதான் வேற.” அப்படித்தானே..?”

“ம்…”.

“டோண்ட் ஒர்ரி…! வாங்க நேர்ல பேசிக்கலாம்.”


20 வருடங்களுக்கு முன் பதிந்த விபரங்களை மீள்பார்வை செய்தார் நவீனன்.

அன்பரசி, ஒரு பிரபல கம்பெனியின் எக்ஸிகியூடிவ். 

ஒரு மணி நேரத்தில் குறைந்தது மூன்று முறையாவது ‘மேக் அப்’ செய்து கொள்பவள். 

அவளது தனி அறையில் கோப்புகளின் இடத்தைக் ‘காஸ்மேடிக்ஸ்’ ஆக்ரமித்திருக்கும்

கணினியும் கைப்பேசியும் அவளின் காமக் கனைகள்

கிரக்கப் பார்வை, டச், லிப்லாக், ஹக், அந்தரங்க உரையாடல்… எல்லாம் சர்வ சாதாரணம் அவளுக்கு.

மேலதிகாரிகளை வளைத்துப் போடும் வல்லமைமிக்க வக்ரகுணவதி.


“வந்த முதல் நாளே அப்படி என்ன மேனாமினுக்கல்…?”

சக ஊழியர்களிடம் கமெண்ட் அடித்தாள் ‘சீனியர் புரோக்ராம் ஆபீசர்’ வினிதா.

அடுத்த நிமிடம் அவள் மீது பொய்க் குற்றம் ஜோடித்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வினிதாவை டிஸ்மிஸ் செய்தாள்.

“சீனியர் மோஸ்ட் நான்தானே…?”

உரிமைக்குரல் எழுப்பினான் ஹென்றி.

அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்தாள் அவனை.

மன்னிப்புக் கேட்டான்.

புதிய பதவியில் ‘ஜூனியர் மோஸ்ட்’ ஆக்கப்பட்டான்.


 “நேர்ல வரச்சொன்னா, மெயில்ல ரிப்போர்ட் அனுப்பறே..?”

‘கட்டை விரல் துருத்தி’, கெட்ட வார்த்தைக் கலந்து ஒருமையில் பேசினாள் அன்பரசி.

பயந்து நடுங்கினான், ‘டூட்டி காண்ஷஸ்’ நிறைந்த உண்மையான ஊழியன் சுகுமார்.

“ரிப்போர்ட்…கேட்கத்தான்… நீங்க…!” முடிக்கக் கூட இல்லை.

“மிஸ்டர்… இந்தக் கதையெல்லாம் வேணாம். வான்னா வரணும்… ….க்குக் கூப்டாலும் வரணும் அவ்வளவுதான்…!”

கடைசியில் சொன்ன அந்த அநாகரீகமான சொல் நடுக்கத்தைக் கொடுத்தது அவனுக்கு.

வாழ்க்கையில் இப்படிப்பட்ட பெண்ணை முதன்முதலாக சந்தித்த பயம்.

ப்ரொக்ராம் ஆபீசர் வினிதா போல, சீட்டு கிழிக்கப்படாமல் “இனிமே சொன்னதைச் செய் போ…” என்றாளே…’

அந்த ஆறுதலோடு வெளி வந்தான்.


அன்பரசியின் ‘நெறி பிறழ் நடத்தை’யும், ‘ஒத்தமையா நடத்தையும்’ அவளின் அலுவலக நிர்வாகத்தில் பிரதிபலித்தது.

வந்த முதல் நாளே மொத்த அலுவலகமும் அன்பரசியைக் கண்டு மிரண்டது.

ஆண் ஊழியர்கள் அச்சப்பட்டார்கள்.

பெண் ஊழியர்களை கலவரமானார்கள்.

ஆண் ஊழியர்களிடம் நேரில், அதுவும் அவள் மூச்சுக் காற்றின் வெம்மை உரைக்கும் நெருக்கத்தில் நிற்க வைத்துப் பேசினாள்.

பெண் ஊழியர்களிடம் மின்னஞ்சலில் மட்டுமே தொடர்பு கொண்டாள்.

அவளைப் பற்றி வெளிச்சமாகத் தெரிந்தாலும் எவரும் உரக்கக் கருத்து சொல்வதோ, கமெண்ட் செய்வதோ இல்லை.

‘கொள்ளிக் கட்டையை எடுத்து முதுகு சொறிவார்களா என்ன…?’


வீட்டில் அன்பரசியின் ‘க்ராஸ் டிரஸ்ஸிங்’ மற்றும் ‘போலிப்பொருள் வழிபாட்டை’ எந்த சூழ்நிலையிலும் வெளிப்படுத்தி விடாமல் பொறுத்துப் போனான், காரோட்டி கார்மேகம்.

அவனுக்கு எப்போதுமே அன்பரசியிடம் பயம். ‘வேலையை விட்டு மட்டுமல்ல… நிரந்தரமாகவே தூக்கி விடுவாளோ என்று.


அன்பரசியின் பெற்றோர் பற்றி இந்தக் கதை படிப்பவருக்கு அவசியம் தெரிய வேண்டும்.

அன்பரசியின் அம்மா வனமல்லி.

கிராமசபைக் கவுன்ஸிலர்.

அரசியல், அவளுக்குப் பேச்சு வன்மையை அளித்திருந்தது.

“தாயப்போல பொண்ணு….”

என்று வனமல்லியைப் பற்றி ஊர்வம்பு பேசிவிட்டாள் தனராணி என்ற பெண்.

விஷயம் அறிந்த வனமல்லி, கூலிப் படையை ஏவிவிட்டாள்.

தனராணி இன்றும் விந்தி விந்தித்தான் நடக்கிறாள் என்ற செய்தி பொய் கலக்காத உண்மை.


வனமல்லியின் தடாலடியின் மேல் ஒரு மோகம் அந்த ஊர் மிராசு மகன் தங்கராசுவுக்கு.

“மல்லியைத்தான் கட்டுவேன்” என்று பிடிவாதமாய் நின்றான்.

முனீஸ்வரன் கோவில் திடலில் ஊர் கூடி வெகு விமரிசையாக நிச்சயதார்த்தம் செய்தார் மிராசு.

ஆஸ்திக்கு ‘தங்கராசு’ ஒரே மகன் என்பதாலும், வரப்போகிற மருமகளின் அரசியல் செல்வாக்கை அனுசரித்தும், இருந்த நஞ்சை, புஞ்சை, மனைக்கட்டுகள் எனப் பூர்வீகச் சொத்துக்களை விற்று எல்லையில்லாமல் செலவு செய்தார் மிராசு.

மகனை பெற்றுப் போட்டுவிட்டு சொர்க்கம் சென்றுவிட்ட மனைவியின் ஒட்டியாணம், புல்லாக்கு உட்பட 80 பவுன் நகைகளை பாலீஷ் போட்டு வருங்கால மருமகளின் கையில் ஒப்படைத்தாகிவிட்டது.

‘நம்ம மருமவதானே…! எப்ப குடுத்தா என்ன…?’ என்ற பெரும்போக்கு மிராசுக்கு. 


“வரட்டுத் தவளைக் கணக்காக் கத்துறவளுக்கு வந்த வாழ்வைப் பாரேன்…!”

“அவளுக்கு எங்கியோ மச்சம்டீ!…”

“…..”

“….”

ஊர் வாய்க்கு ஊறுகாயானாள் வனமல்லி.


பரிசத்துக்குப் பிறகு, தன்னுடையவள் என்ற உரிமையில், தன் வருங்கால மனைவி வனமல்லியிடம் அரைமணி நேரம் தனியாக மனம் விட்டுப் பேசுவதற்காக ; வெட்கமும், நாணமும் கலந்த மகிழ்ச்சியோடு சென்றான் தங்கராசு.

இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தான்.

சுனக்கமாக இருந்தான்.

காலையில் முகூர்த்த நேரம் நெருங்கியும் மணவரைக்கு வரவில்லை தங்கராசு.

மணமகனை வலை போட்டுத் தேடினார்கள்.

“சந்தோசமாத்தானே பரிசம் போட்டான்…!”

“திடீர்னு ஏன் இப்படி…?”

“லட்சக் கணக்குல பணம், கிலோ கணக்குல தங்கம் வெள்ளினு கறந்துக்கிட்டு அடிச்சி விரட்டிட்டாளே…?”

“அவன் தலைமறைவானதுக்கு அந்தப் பொண்ணு என்னய்யா செய்யும்…?”

“மருந்து மாயம் வெச்சிருப்பாளோ …?”

 ஊர் வாய்க்கு சூயிங்கம் கிடைத்துவிட்டது. மென்றார்கள். 


என்ன நடந்ததோ ஆட்டவனுக்கே வெளிச்சம்.

தாலிகட்டும் முன் ஓடிப்போனவன் எனக்கு வேண்டாம் என்று உறுதியாக நின்றுவிட்டாள் வனமல்லி.

அதே முகூர்தத்தில் கூலிக்கு உழவடிக்கும் டிராக்டர் மாணிக்கத்தோடு கல்யாணம் முடிந்தது.

மூன்று மாதங்கள் மட்டுமே தாய்ப்பால் குடித்தாள் அன்பரசி.

தாய் வனமல்லி மாரடைப்பால் இறந்தபின் அன்பரசி வளர்ந்தது ஒரு தனிக்கதை.


கிராமத்து ஜனங்கள் ஏகமாய்ப் பேசினார்கள்.  

ஏச்சு பேச்சிலிருந்து பெற்ற மகளை எப்படி மீட்கப் போகிறோம் என்ற கவலை அப்பிக் கொண்டது மாணிக்கத்திற்கு.

வேறு வழி தெரியவில்லை.

மனதைக் கல்லாக்கிக் கொண்டான்.

டவுன் ஆஸ்பத்திரி வராண்டாவில் துண்டு விரித்தான்.

குழந்தையைக் கிடத்தினான்.

திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டான்.


‘தொட்டில் குழந்தைத் திட்டம்’

அன்பரசியை ஆளாக்கியது.

“கல்லூரி விடுதி”

நிறைய கற்றுக் கொடுத்தது.

பேராசிரியர்களின் பலவீனங்களைத் துல்லியமாக அளந்தாள்.

பலவீனங்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டாள்.

கடைசீ வருடம் பி ஈ கணினி அறிவியல் படித்த அவளைக் கேம்பஸில் தேர்ந்தெடுத்தது அந்த நிறுவனம். 


ஜி எம் ராஜசேகரன் ப்ராஜக்ட் பற்றி அவளிடம் பேசத்துவங்கினார்.

உடுத்திய முறை, சலங்கைக் குலுங்கல் சிரிப்பு, கண் சிமிட்டல், உடல் அசைவு, காந்தப் பார்வை… என பல்முனைத் தாக்குதலில் மயங்கி விழுந்தார்.

ப்ராஜக்ட்டின் திசை மாறியது.


நிப்போ மேனியா (மனநோய்) பீடிக்கப்பட்ட ரோமப் பேரரசர் அகஸ்டஸின் மகள் ஜூலியாதான் ரோல் மாடலோ அன்பரசிக்கு என்று தோன்றும் அவளிடம் பழகுபவர்களுக்கு.

அன்பரசி கொடுத்த ஸ்டேட்மெண்ட் பார்த்தார் ராஜசேகரன்.

“ஓகேவா டா..!”

கொஞ்சலாகக் கேட்டாள். டக் கென்று நாக்கை ஸ்டைலாகக் கடித்துக் கொண்டாள்.

“சாரி…! ஓகேவா சார்…!” என்று மாற்றிக் கொண்டாள்.

“சார்னு சொல்லாதே …‘வாடா போடா’னே சொல்லு அன்பு…!” இடம் கொடுத்தார் ராஜசேகரன்.

“ம்ஹூம்… அது தப்பு …!”

பொய் வெட்கம் காட்டினாள்.

கிறங்கினார்.

அவள் புறங்கைத் தொட்டார்.

‘ஃபைன் டச்’…

தண்டுவடத்தின் ‘சென்ஸிடிவ் ட்ராக்’ கைச் சிலுப்பியது.

பரவசமானார்.


அன்பரசி ஒரு “ப்ராடஜி”

புகழ்ந்தார்.

“கம்பெனிக்கு ‘அஸட்’

வர்ணித்தார்.

அவளின் மேற்படிப்பு, நிறுவனத்துக்கு அட்வான்டேஜ்’

போர்ட் மீட்டிங்’கில் வாதிட்டார்.

கம்பெனி செலவில் அயல்நாட்டில் அவள் மேற்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தார்.


அன்பரசியின் செல்வாக்கு ஒட்டு மொத்தக் கம்பெனியையும் உலுக்கியது. 

 “நான் ‘ஜி எம்’ ஆகணும்…”

“கல்யாணத்துக்குப் பிறகு நீயும் ‘ஜிஎம்’ தானே டியர்…”

“உன்னைச் சார்ந்து நான் ஜி எம்மா…?”

அன்பரசியின் ‘அவாய்டண்ட் பர்ஸனாலிடி’க்கு முன் , ஜி எம் மின் ‘டிபெண்டண்ட் பர்ஸனாலிடி’ தோற்றது.


மறுநாள் போர்டு மீட்டிங்’ ஏற்பாடானது.

ராஜசேகரனுக்குப் பின் அன்பரசிதான்  ஜி எம் என்று ‘மினிட்ஸ்’ எழுதினார்கள்.

உயர் மட்டக் குழு அதை அங்கீகரித்தது.

முற்பகலில் போர்ட் ஆஃப் டைரக்டராக பதவியேற்றாள் அன்பரசி.

மதியம் நடக்கப்போகும் திருமணப் பதிவிற்கு முன், ஜி எம் அறையில், ஒன்றரை மணி நேரம் ஏகாந்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள் அன்பரசியும் ராஜசேகரனும்.


பிற்பகலில் ‘ரிஜ்ஸ்தர் ஆபீஸ்’ போகும் வழியில் கார்விபத்தில் இறந்ததாக எப் ஐ ஆர் பதியப்பட்டது.

ராஜசேகரன் மார்சுவரியில் கிடந்தார்.

அன்பரசி ‘ஜி எம்’ ஆகப் பதவி ஏற்றாள்.

என்ன நடந்ததோ ஆட்டவனுக்கே வெளிச்சம்.

ஜி எம் அன்பரசி , ‘வுட் பி’ யின் திடீர் மறைவால் ஏற்பட்ட துக்கத்திற்கு மாற்றாக ஃப்ரான்ஸ் சென்றாள்.

பிறந்த உடனே அதை ‘க்ரீஷ்’ன் பாதுகாப்பில் விட்டுவிட்டு வந்துவிட்டாள்.

தன் நிழல் கூடத் தன் மகளின் மேல் படக்கூடாது என்பதில் உறுதியாக நின்றுவிட்டாள் அன்பரசி.

ஒரு சில நேரங்களில் நேரில் பார்க்க விரும்புவதாக தனஸ்ரீ கேட்டுக் கொண்டபோதும் கடுமையாக மறுத்துவிட்டாள் அன்பரசி.

பெற்ற தாயின் மறுப்புக்குக் காரணம் கேட்கவில்லை தனஸ்ரீ.


டிராஃபிக்கில் இனோவா.

கூகுள் 30 கிலோ மீட்டர் காட்டியது.

மணி சரியாக 6.00.

அன்பரசி படபடத்தாள்.

பரபரத்தாள்.

ரிங் செய்தாள்.

“—.”

“வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்…”

“—.”

“டயல் செய்த எண்ணை சரி பார்க்கவும்…”

“—.”

“எண் உபயோகத்தில் இல்லை…”

“—.”

“பிஸியாக உள்ளது. சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்…”

“—”

“சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது…”

பதிவு செய்யப்பட்ட சொற்றொடர்களை மாறி மாறி வெவ்வேறு மொழிகளில் கேட்டு எரிச்சலடைந்தாள்.


மணி 8.00

அன்பரசிக்கு ‘ எமோஷனல் ரிலாக்ஸ் ’ தெரபி செய்து கொண்டிருந்தார் நவீனன்.

கைப்பேசி அழைத்தது.

“சொல்லு தனஸ்ரீ…!”

பதற்றமானாள் அன்பரசி.

“ஸ்பீக்கர் ஆன்செய்ங்க”,

ரகசியக் குரலில் சொன்னார் அனலிஸ்ட்

“ரிலாக்ஸா பேசுங்க…”

ஜாடை காட்டினார்.

 “6 மணிக்கு நானும் டேவிட்டும் ‘டிஸ்கஸ்’ பண்ணினோம். அறக்கட்டளைக்கு என்னை ‘புரோப்ரைட்டரா’ நியமிக்கணும்னு கேட்டேன்.”

“—.”

“முதலில் யோசிச்சாரு.  நான் சுதந்திரமா செயல்படணும். முடியாதுன்னா சொல்லிடுங்க’னு பிடிவாதமா கேட்டதும்தான் ஒத்துக்கிட்டாரு…!”

தனஸ்ரீயின் குரலில் எந்தப் பதற்றமும் இல்லை.


 “இதுக்கு மேலே நீ எதுவும் சொல்ல வேணாம்” ஆவேசமாகக் கத்தியபடி போன் கட் செய்தாள் அன்பரசி.

“டாக்டர்…அதே டயலாக்,

ஜி எம் ராஜசேகரிடம் திருமணத்திற்கு முதல் நாள் மாலை நான் பேசிய அதே டயலாக்..;

எப்படி..? எப்படி..? இது சாத்தியம்…?”

கதறினாள் அன்பரசி.

“ஹார்மோன்கள் படுத்தும் பாடுதான் எல்லாமே’ன்னு ‘சைக்கோ செக்ஸுவல் அனாலிஸிஸ்’ மூலம் நிரூபித்த ஃபிராய்டு ஜெயிச்சிட்டார்.

சிம்பிளா சொல்லணும்னா ‘ஃபிராய்டிசம்’ ஜெயிச்சிடுச்சு.

‘நடத்தை வாதம்’ தோத்துடுச்சு.”

என்றார் அனலிஸ்ட்.


மீண்டும் தனஸ்ரீயின் போன்..

“பேசுங்க..”

மொபைல் ஆன் செய்தார் தெரபிஸ்ட்.

“அம்மா நான் சொல்ல வர்றதை முழுசா கேளும்மா..?”

“சொல்லு…! மொதல்ல நீ எத்தனை மாசமா முழுகாம இருக்கே அதைச் சொல்லு…”

“அம்மா ஷட் அப்…! என்னையும் என் உட்பீயையும் அவ்வளவு கேவலமா நினைக்காதீங்க…!”

“என்னடீ சொல்றே…?”

“ஆமாம்மா…! என் உட்பீ நடத்தற முதியோர் இல்லத்துல நான் தினமும் மூணு, நாலு மணி நேரம் தொண்டு செய்யறவ..

கல்யாணத்துக்குப் பின் முழுநேரமும் தொண்டு செய்யணும்னு ஆசைப்பட்டு கேட்டதால அவரும் மனமுவந்து ஏத்துக்கிட்டாரும்மா…!”

“—”

“எங்கள் திருமணத்தை யூ டியூப்ல பார்க்க ஏற்பாடு பண்ணியிருக்கோம் பாரும்மா..”

“—” அன்பரசியின் கண்களை கண்ணீர் மறைத்தது.

“ஃப்ராய்டிஸம் தோத்துடுச்சு, நடத்தைவாதம் வென்றுடுச்சு…”

என்றார் நவீனன்.

– கௌரா இலக்கிய மன்றம் 3வது பரிசு – 2023

இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *