கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,727 
 

(1956 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாடசாலைக்கு வெளியே, உச்சிப்போ தின் கொடுங் கிரணங்களைத் தடுத்து வீழ்த்தும் புனித சேவையோடு, கர்மயோக சாதகஞ் செய்து கொண்டிருந்த வேப்பமரத் தின்கீழே, பிறைச் சந்திரனாக வளைந்து நிற்கும் சின்னஞ் சிறுசுகட்கு மத்தியில் நின்றுகொண்டு ஜமீலா பாடிக் கொண்டிருந்தாள்;

கன்னத்தில் முத்தமட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவடிலோ-மனது –
உன்மத்த மாகுதடி –

மகாகவி பாரதியாருக்கு இந்தப் பாட்டு ஆத்ம திருப்தியைக் கொடுத்திருக்கும். ஜமீலாவிற்கு ஆத்ம திருப்தியை, மட்டுமல்ல வயிற்றுப் பிழைப்புக்கும் வழி காட்டிற்று.. ஆனால் கைப்பிடிச் சுவர் வைத்த பாட சாலைக் கட்டிடத்துள், தன்னை மறந்து, தன் சூழலை, மறந்து, அசுணமாச் செவியராகி விட்டிருந்த ஆசிரியர் ஜபாருக்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்ததோ என்னவோ, அதற்கு மேலாக, புழுதியையும் சருகுகளையும் சுழற்றிக் கிளப்பி அல்லாட வைக்கும் புதுக் கச்சான் காற்றைப் போல, அந்தப் பாட்டு அவர் மனதின் அடித்தளத்தையே சுழற்றி எண்ணப் புழுதியை-இறந்த காலச் சருகுகளை-‘ அலையவிட்டு வேடிக்கை பார்த்தது.

பாட்டின் நயத்திலும், பாடம் நடத்தும் கடமை உணர்ச்சியிலும் தன்னை மறந்து ஒன்றிவிட்ட ஜமீலா’ திரும்பத் திரும்ப அந்த அடிகளையே பாடிக்கொண்டு (இ தந்தாள். அவளைத் தொடர்ந்து ‘அரிவரி’ப் பிள்ளைகளும் பாடினார்கள். வைகாசி மாதத்துப் புதுத் தளிர் பரப்பிய வேப்பமரத்தின் அடர்த்தியான கிளைகட் கூடாக, வெள்ளிப் பரிபோன்று ஒழுகும் சூரிய கிரணங் கள், ஜமீலாவின் வட்டித்து நீண்ட முகத்தில் எறிக்கையில் இயற்கையாகவே பளிச்சென்றிருக்கும். அவள் யௌவன முகத்தில், ஓர் அமைதியான சோபை மின் வெட்டிற்று. ஜமீலா அழகிதான். அதுவும் கொண்டற் காற்றிற் குருத்துக்களை ஆட்டி விகசிக்கும் தென்னஞ்சோலை நிழல் கட்டிக் காத்து வளர்த்த ஈழநாட்டுக் கீழக்கரை அழகி அவள். அலையாடும் தெளித்த குளத்தின் உள்ளே ஆடி அசையும் நெடுங்கழியின் நிழலைப்போன்ற உருவம். கண்ணைப் பறிக்கும் கார்த்திகைப் பூவைப் போன்ற கொழுந்து விட்டெரியும் நெருப்புச் சுவாலையைப் போன்ற நிறம். அவள் அழகு யாரையும் மயக்காது. ஆனால் வசீகரிக்கும்.

ஆனால் அவள் அழகு ஆசிரியர் ஜபாரை வசீ கரித்ததோ அல்லது மயக்கியதோ! ஆனால் மூன்று மாதங்களுக்கு முன் ஜமீலா முதன் முதலாக அந்தப் பாட சாலைக்கு ஆசிரியையாக வந்தபோது, ‘ நமது பெண்களும் ஆண்களோடு சரிநிகர் சமானமாக’ ஆகிவிட்டார்களே என்ற பெருமிதத்தில் அவர் தன்னையே மறந்துபோனார். அன்று தொடங்கி ஒவ்வொரு நாளும் ஜமீலா, வளர்ந்து வரும் முஸ்லிம் பெண்மையின் இலட்சியமாகப் பாட சாலைக்கு வருவாள். பாடம் படிப்பிப்பாள். பாட்டுப் பாடுவாள். அவசியமேற்பட்டால் தலைமை ஆசிரியர் ஜபாரோடு பேசுவாள். பின்னர் எப்படி வந்தாளோ அப்படியே போய்விடுவாள். ஆனாய் அவள் வரவு, புதிதாக வந்த மதயானையின் வரவைப்போல ஜபாரின் மனக்குளத்தைக் கலக்கியது.

இன்றைக்கும் அப்படித்தான். : ஜமீலா பாடினாள். பாரின் உள்ளம் கலங்கியது.

ஆனால் இந்தக் கலக்கத்துக்கு ஜமீலா மட்டுந்தான் காரணமா?

ஜபார் ஆசிரிய கலாசாலையிற் படிக்கையில் எத் தனையோ இலட்சியக் கனவுகளைக் கண்டிருக்கிறான். காதலைப்பற்றி மணித்தியாலக் கணக்கிற் பேசியிருக் கிறான். எத்தனையோ அறிஞர்களின் அடுக்குத் தொடர் வாக்கியங்கள் அவனுக்கு மனனமாகக்கூட இருந்தன. அவன் கல்லூரியைவிட்டு வெளியேறுகையில் யாராவது ஒரு பெண்ணை -அவள் ஏழையாகவே இருந்தாலும் காதலித்துச் சீதனமில்லாமல் மணந்துகொண்டு வாழ வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.

ஆனால் அவன் தன் கனவுலகிலிருந்து வெளிப்பட்டுப் பிரத்தியட்ச உலகிலே ஆசிரியராக வாழத் தொடங்கிய போது தான், தன் கனவுகளின் செயலற்ற தன்மையை விளங்கிக் கொண்டான். அப் பலவீனமான கனவுகளின் விளைவுகளை அவன் அனுபவிக்கவும் வேண்டியிருந்தது. ஆம்; அவன் புத்தகங்களிற் படித்திருந்த கதாநாயகர்களில் ஒருவனைப் போல எவளாவது ஒரு பெண்ணைக் காத லிக்க மட்டக்களப்பு முஸ்லிம் சமுதாயத்தின் சூழ்நிலை இடந்தரவில்லை. எட்டணா அட்டைப் படங்களிலே காதலனும் காதலியும் கடற்கரைமிற் சந்திக்கலாம். ஆனால் மட்டக்களப்புத் தென் கடற்கரைகளிலே ஜபாருக்கு அப்படியொரு காதலி கிடைக்க முடியுமா? –

நாட்டுக் கவிகளில் வரும் காதலைப்போல ‘வாய்க் காலில், வயலோரம்-களத்துமேட்டில்’ எழுத்தறியாக் கவியரசிகளைக் காதலிக்க ஜபாரின அந்தஸ்து அவனை விடவில்லை .

முடிபாக ஜபாரினால் எவரையுமே காதலிக்க முடிய வில்லை. சாந்தமான மட்டக்களப்பு வாவியிலே தண்ணெற் றெறிக்கும் வெண்ணிலவும், மோனமும் தனிமையும் சேர்ந்து நீட்டி நிற்கும் மாலைவேளைகளும் அவன் மட்டில் எத்தகைய பயனுமின்றி அவமே கழிந்தன. இதனால் ‘ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே” என்று பாடிய பாரதியைத் ‘ தீயிற் போடு’ என்று சொல்ல ஓர் புது இயக்கமே நடத்தி விடுவானோ என்ற அளவிற்கு ஜபாரின் மனம் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்து விட்டது.

ஆனாலும் அந்த முஸ்லிம் கிராமத்தின் ஒரே ஓர் ஆசிரியர் என்ற முறையில், கலியாணச் சந்தையில் ஜபாருக்கு நல்ல மதிப்பு இருந்தது. அவன் மட்டும் விரும் பினால் அக்கிராமத்தின் ‘பொலிகாளை’யாகவே இருக் கலாம்போல இருந்தது. ஆனால் அவ்வூர் மக்கள் எல்லாரும் ‘கல்யாணத்திற்குப் பிறகு தான் காதல் பிறக்கிறது’ என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டார்களோ என்னவோ, அவர்கள் ஜபாரைக் கல்யாணத்திற்குக் கேட்டார்களே தவிர எவருமே ‘காதல் செய்வதற்கு’ வழி செய்து வைக்கவில்லை.

இப்படியே இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.

இப்போதெல்லாம் ஜபாரின் மன திலே, சொல்லிலே ‘சிறை செய்ய முடியாத மெல்லிசை போன்ற இன்ப நினைவுகள் மெல்ல மெல்லத் தேய்ந்துவிட்டன. ஆனால் அம்மென் நினைவுகளே வயது முற்றிய உடலின் வேட்கை பாகத் தசையின் பிடுங்கலாய்த் திரிந்து அவனை வருத் தின. இயற்கை உணர்ச்சிக்கு வகை சொல்லவும், தன் தாய் தந்தையரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவும் கடைசியாய் அவன் பாத்தும்மாவைக் கல்யாணம் செய்து கொண்டான்.

பாத்தும்மாவும் அழகிதான். ஆனால் அவள் அழகு களியாட்ட விடுதிகளில் தொங்கும் கண்ணைப் பறிக்கும் மின்சார வெளிச்சமல்ல. இருண்ட அறையின் நடுவே, சேவை வைராக்கியத்தோடு அமைதியாகச் சுடர்விடும் குத்துவிளக்கின் ஒளிதான் அவள் அழகு. ஆனாலும் ஏமாறி, விரக்தியடைந்து இருளோடிப் போயிருந்த ஜபாரின் மனத்தை அது ஒளி செய்யவில்லை.

இந்த அழகில் குடும்பம் நடந்துகொண்டுதான் இருந்தது.

கெட்டழிந்து திரிபவனுக்குக் கல்யாணஞ் செய்து வைத்தால் அவன் திருந்தி விடுவான் என்று சொல் கிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மையோ எனக்குத் தெரியாது. ஆனால் ஜபாரைப் பொறுத்த அளவில் இந்தக் கல்யாணம் அவன் மனதில் குறைந்து கிடந்த ஆசைக் கனவுகட்கு மீண்டும் இயக்கத்தைக் கொடுத்துவிட்டது. அதன் பலன்…….

சை! என்ன அநியாயம்! அம்பலவாணனும் அவ னொடுதான் கல்லூரியில் படித்தான். அயல் கிராமத் திற்றான் அவனும் இப்போகிருக்கிறான். அவன் எவ் *வளவு குதூகலமாய்த் தன் மனைவியோடு பட்டினத்திற்குப் படம் பார்க்கப் போகின்றான்…… கடைக்குப் போகிறான்…… ஆனால் ஜபார்…….?

அவன் மனைவியோடு கூடிக்கொண்டு எங்காவது போக முடியுமா? தன் இன்ப துன்பங்களிலெல்லாம் மனைவியும் பங்குபற்ற வேண்டும் என்ற நல்லெண்ணம் ஜபாருக்கு இருக்கலாம். தன்னைப் போலத் தன் மனைவிக் கும் எல்லா உரிமைகளும் அளிக்க அவனுக்கு மன திருக்க லாம். ஆனால் தன் உரிமைகளைக்கூடப் பாத்தும்மா வேண்டாம் என்கிறாளே அது ஏன்?

வீட்டிலேகூட அவளோடு நாலு வார்த்தைகள் இன்பமாகப் பேச முடிகிறதா? ‘மனைவி படுக்கையறை யில் விபசாரி மாதிரி இருக்கவேண்டும்’ என்று யாரோ ‘ஒருவன் எழுதி வைத்திருக்கிறானே. அடடா இந்தப் பாத்தும்மா எப்போதுதான் முக்காட்டைத் திறக்கப் போகிறாளோ …

பாத்தும்மா-ஏன் முஸ்லிம் பெண்கள் எல்லாரையுமே – சித்திரவதை செய்து அந்த வாதையைப் பார்த்துப் பேய்ச் சிரிப்புச் சிரிக்க வேண்டும்போல இருந்தது ஜபாருக்கு.

தன்னைத்தானே சாந்தப்படுத்திக் கொண்டு, எப்போ தாவது பாத்தும்மாவிடம் தன் ஆசைகளை வெளிப்படுத் தினால் அதற்கு மௌனமாகக் கண்ணீர் வடிப்பதே அவள் பதிலாக இருந்தது.

ஜபாரின் மனம் அமைதியற்றுத் தவித்தது!

எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி மனம் குழம்பிக் கொண்டபோது ஆயிரங் சங்குகட் கிடையே முழங்கும் பாஞ்ச சன்யச் சங்குபோல அந்த எண்ணம் தலை தூக்கியது: ‘இவளைத் தலாக் பண்ணி விட்டால் என்ன?’

இந்த நிலையில் ஜமீலா அவன் பாடசாலைக்கு உதவி ஆசிரியையாக வரவே பாத்தும்மாவைத் தலாக் (விவாக ரத்து) பண்ணிவிடும் எண்ணம் அவனுள் நாளுக்கு நாள் வலுவடைந்தது. ஆம்; ஜமீலா அவனோடு எத்தனை சரளமாகப் பழகுகிறாள்! சிரிக்கச் சிரிக்க எப்படி யெல்லாம் பேசுகிறாள். படித்த பெண்ணல்லவா? இவள் மட்டும் என் மனைவியாகி விட்டால்…ஜமீலாவைக் கட்டியணைத்து அவள் அழகான கன்னத்தில் முத்தமிட வேண்டும் போல இருந்தது ஜபாருக்கு.

பாடசாலை மணியடித்தது. ஜமீலா பாட்டை முடித். தாள். அடுத்ததாக ஓய்வு நேரம்.

மனதில் ஓடி நெளிந்த எண்ணங்களை அறுத்துவிட்ட ஜபார், எதையோ தீர்மானித்தவராய் ஜம்லாவிடம் வந்து நின்றார்.

ஜமீலா மாரியாதைக்காக எழுந்து நின்றாள். “இருக் கலாமே” என்றான் ஜபார்.

“காரியமில்லை”

“நீங்கள் வந்தபின்பு எவ்வளவோ ஆறுதலாக இருக்கிறது.”

“தங்கள் வேலையின் பாரத்தைப் பகிர்ந்து கொண்டதாலிருக்கலாம்.”

“நன்றாகப் பேசுகிறீர்கனே. தங்களைப் போன்ற ஒருவரைத்தான் நானும் காத்துக் கொண்டிருந்தேன்.” “எதற்கு ?”

“ஒன்றிற்குமில்லை. பெண்களும் நன்றாகப் பேச வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்.”

“அப்படியா? துணிந்து ஆசிரியையாகி விட்டேன், பேசாமலிருப்பது எப்படி? அப்படி இருக்கவும் நீங்கள் விட மாட்டீர்களே.”

“பேசியாவது இன்பமாயிருக்கலாமல்லவா?”

“ஐயோ! அப்போது தாங்கள் இப்போது துன்பமாயிருக்கிறீர்களாக்கும்?”

“துன்பப்படாமலிருக்க முடியுமா? முஸ்லிம் பெண்கள் எல்லாருமே தங்களைப்போல் இருந்தால்…”

”ஏன்! அவர்கள் எப்படியிருக்கிறார்கள்?” என்று இடைமறித்துக் கேட்டாள் ஜமீலா.

ஜபாரின் சுற்றி வளைத்த பேச்சுக்களின் அர்த்தத்தை ஜமீலா வெகு நாட்களுக்கு முன்னமே விளங்கிக் கொண்டி ருந்தாள். இப்போதெல்லாம் அவன் உணர்ச்சிகளைக் கிண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது அவளுக்கு ஒரு ஓய்வு நேர உபயோகம். ஜமீலா இன்றைக்கும் அப்படித்தான் பேசினாள்.

“எப்படியாயினும் அவர்கள் இருக்கட்டும். ஆனால் அவர்கள் எல்லாரும் தங்களைப் போல இருந்தால், என்னைப் போன்ற பலர் ‘தலாக்’ பண்ணவேண்டிய அவசியமே இராது” என்றான் ஜபார் நயமாக.

“ஓ! அப்போது ‘தலாக்’ பண்ண முடிவு செய்து விட்டீர்களா?” என்றாள் ஜமீலா விஷமத்தோடு.

“தாங்கள் மட்டும் இஷ்டப்பட்டால் இன்றைக்கென்றாலும் சரிதான். ஏன் நம் மதமும் அதை அனுமதிக்சின்றது தானே”

ஜமீலா அடிபட்ட பெண் புலியைப்போல ஜபாரை முறைத்துப் பார்த்தாள். அவள் உதடுகள் துடித்தன. புருவங்கள் விறைத்து நிமிர்ந்தன; பொங்கியெழுந்தன. ஆத்திரத்தையெல்லாம் சேர்த்துத் தன் முன்னால், நியாய் வாதியின் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கும் குற்ற வாளியைப் போல நிற்கும் ஜபாரைப் பார்த்து ‘நீரும் ஒரு ஆசிரியரா? நம் சமுதாயத்தையே சீர் திருத்தும் புனிதமான ஆசிரியத் தொழிலைச் செய்யும் நீரா இப்படிப் பேசுகிறீர். பலதார மணத்தையும் விவாகரத்தையும் எத்தனையோ காரணங்களுக்காக மதம் அனுமதித்திருக் கலாம் ஆனால் உங்கள் சௌகரியத்திற்காகப் பழைய சட்டையைக் கழற்றி எறிவது போல, நினைத்தவுடனேயே ஒரு பெண்ணைத் தள்ளிவைக்க உன் மனச்சாட்சி இடந் தருகிறதா? சரளமாகப் பேசினால் உடனே நப்பாசை கொள்ளும் உம்மைப் போன்றவர்கள் நம் சமூகத்தில் இருக்கும்வரை முஸ்லிம் பெண்கள் வாய்மூடி ஊமை களாகவே இருந்து விடட்டும். இனிமேற் பாடசாலை விஷயத்தைத் தவிர வேறு எதையுமே என்னிடம் பேச வேண்டாம். போம், போம்” என்று பொரிந்து தள்ளினாள். மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது வகுப்பறை. சூடுகண்ட பூனையாய் நழுவினார் ஜபார்.

இப்போது ஜபார் பாத்தும்மாவைத் தலாக் பண்ணி விட்டாரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் அதன்பிறகு அவர் ஜமீலாவிடம் நெருங்கவில்லை என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.

– ஈழகேசரி வெள்ளி விழா மலர் ’56

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *