தற்காலிக உன்னதங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 8,770 
 
 

இன்று ஞாயிற்றுக்கிழமை! விடுமுறை என்று பெயர் தான். ஆனால் இன்றும் ராபர்ட் வெளியே போய் விட்டான், யாரோ முக்கியமான கஸ்டமரை சந்திக்க வேண்டுமாம்!

ராபர்ட் சர்ச்சுக்கு வந்து எத்தனை நாட்களாகிவிட்டன என்று நினைத்து வருத்தத்துடன் பெருமூச்செறிந்தவாறே டேவிட்டை அழைத்துக் கொண்டு ஞாயிறு பிரார்த்தனை கூட்டத்திற்குக் கிளம்பினாள் ரெஜினா.

குழந்தை டேவிட் கர்த்தர் முன் மண்டியிட்டு கண்களை மூடி பிரார்த்தனை செய்யும் அழகை ஒரு கணம் ரசித்து விட்டு ரெஜினாவும் கண்களை மூடி பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.

‘எங்களுக்கு வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிற எங்கள் ஆண்டவரே! என் கணவரை இந்த கொடிய கெட்டப் பழக்கத்திலிருந்து மீட்டுக் கொடும்!’ என்ற வரிகள் மனதில் ஓட ஆரம்பித்தவுடனேயே கட்டுப் படுத்த முடியாமல் கண்ணோரம் நீர் வழிய ஆரம்பித்து விடும். அமைதியாக, ஆனந்தமாக சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையை கணவனின் குடிப் பழக்கம் எப்படிக் கெடுத்து நாசமாக்குகிறது என்று நினைக்கும்போதே வருத்தம் மேலிட அழுகை பீறிட்டுக் கொண்டு வரும்.

“தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்!” ஃபாதர் ஜேம்ஸ் ‘மைக்கை’ப் பிடித்து உரையாற்ற ஆரம்பிக்க அனைவரும் எழுந்து இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

“தேவனிடம் நம் அனைவரின் சார்பிலும் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். ‘சுனாமி’ வாயிலாக நீங்கள் எங்களுக்குப் புகட்டி விட்டுப் போயிருக்கும் பாடத்தை நாங்கள் உணரச் செய்யுங்கள். தேவனாகிய உங்களிடம் பூரண நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டு, இந்த தற்காலிக உலக வாழ்க்கையில் நீங்கள் எங்களுக்கு அளிக்கும் ஒவ்வொரு நாளையும் உன்னதமாக்கிக் கொள்ள நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம்….” ஃபாதர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

பிரார்த்தனை கூட்டம் கலைந்து வெளியே வந்தபோது, தூரத்தே வளசரவாக்கம் செல்லும் பஸ் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. டேவிட்டைத் தூக்கிக் கொண்டு நடையை விரைவாக்கி பஸ்ஸில் ஏறிக் கொண்டதும், ‘அப்பாடா!’ என்றிருந்தது.

வீட்டுக்குப் போய் தான் சமைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமையென்றால் நிச்சயம் ராபர்ட்டுக்குப் பிடித்த சமையல் தான்! கத்திரிக்காயும் முருங்கைக்காயும் போட்டு குழம்பு வைத்து, தொட்டுக் கொள்ள வஞ்சிர மீனை வறுத்து வைத்தால், நிச்சயம் ஒரு பிடி சோறு கூடவே இறங்கும். ‘ஆனால் குடிக்காமல் வீட்டுக்கு வர வேண்டுமே?’

பஸ்ஸிலேயே தூங்கி விட்ட டேவிட்டை கட்டிலில் படுக்க வைத்து விட்டு ‘ஏசுவே!’ என்று அரற்றியபடியே வீட்டுக் காரியங்களை ஒவ்வொன்றாக கவனிக்க ஆரம்பித்தாள்.

ஒரு வாரமாக ஓடி ஓடிப்போய்க் கேட்டு இன்று தான் ‘அப்பாயிண்ட்மென்ட்’ கிடைத்தது அந்தப் பெரிய மனிதரிடம். அந்த அலுவலுகத்தில் அவனை அலைக்கழித்த விதத்தை நினைத்த போதே கோபத்தில் குடிக்கத்தான் தோன்றுகிறது என்று நினைத்துக் கொண்டான் ராபர்ட்.

தன் அலுவலகத்திலிருந்து கிளம்பி அந்த ‘அப்பாயிண்ட்மென்ட்’ க் காகத்தான் சென்று கொண்டிருந்தான் ராபர்ட்.

தலை ‘விண்விண்ணென்று’ தெறிக்க ஆரம்பித்தது.

வழக்கமான தலைவலிதான்!

‘அந்த நேரம்’ வந்து விட்டது என்பதை அவனுக்கு உணர்த்தும் தலைவலி! நா வறட்சி!

வழியே தென்பட்ட ஒரு ஆளரவமில்லாத பூங்காவில் வண்டியை நிறுத்தி விட்டு, சுற்றுமுற்றும் எச்சரிக்கையோடு ஒரு பார்வையை வீசி விட்டு, ‘ஹிப் பாக்கெட்’ டிலிருந்து சப்பை வடிவ பாட்டிலை எடுத்து அப்படியே ‘ரா’வாக கால் பாட்டில் ‘விஸ்கியை’ த் தொண்டையில் இறக்கினான்.

உடம்பின் இறுக்கம் அணுவணுவாகத் தளரும் சுகத்தை ஒரு நொடி கண் மூடி அனுபவித்தான்.

அவனும் தினமும் காலையில் எழுந்ததும் இந்த பாழாய்ப் போன குடியை விட்டு விட வேண்டும் என்று தான் நினைத்துக் கொள்கிறான். ஆனால் இதோ இந்த ‘அப்பாயிண்ட்மென்ட்’ போல அலைக்கழிக்கும் சம்பவங்கள் அவனுக்கு வெறுப்பை ஏற்படுத்தி அவனைக் குடிக்க தூண்டுகின்றன.

இது மட்டுமா?

அவனுடைய அலுவலகத்திலேயே அவனுக்கு பின்னால் வந்தவன், அவனை விட கூடுதலாகப் படித்தவனாம், ‘சேல்ஸ் அதிகாரியாக’ பதவி உயர்வு பெற்று விட, தான் மட்டும் பழையபடி ‘சேல்ஸ்மேனாக’ நாள் தோறும் நாயாய் அலைந்து கொண்டு………………

‘இந்த ஒரு வெறுப்பு போதாதா குடிப்பதற்கு?’

போதாக்குறைக்கு சுத்தப் பட்டிக்காடாக கிராமத்திலிருந்து வந்திருக்கும் அவன் மனைவி ரெஜினா!

மனதில் மூண்டெழுந்த கோபத்தில் மீண்டும் மஞ்சள் நிறத் திரவம் தொண்டைக் குழியில் இறங்கியது.

‘குறித்த நேரத்திற்குள் அண்ணா நகருக்கு ‘அப்பாயிண்ட்மென்ட்’ குடுத்திருப்பவரைப் பார்க்கப் போக வேண்டுமே?’

வண்டியைப் பூங்காவுக்கு வெளியே கொண்டு வந்து அவசரமாக ‘ஸ்டார்ட்’ செய்தான். வழியில் ‘பீடா’ ஏதாவது போட்டுக் கொண்டு குடித்த வாடை தெரியாமல் அவர் முன் போய் நிற்க வேண்டும்.

ராபர்ட்டின் அண்ணன் எட்வர்ட் ஒரு வங்கியில் அதிகாரியாக பணி புரிகிறான். அவனுக்கு வசதியான இடத்திலிருந்து வரன் வந்தது. ஒரே தங்கை ஸ்டெல்லாவுக்கும் அவள் அழகுக்கும் அறிவுக்கும் ஏற்ற தேவசகாயம் கிடைத்தான். தனக்குத் தான் தாயார் சரியானபடி பார்த்துப் பண்ணி வைக்க வில்லை என்பது ராபர்ட்டுக்குத் தீராத குறை!

பாக்கியத்தம்மாளுக்கோ, சேல்ஸ்மேனாக அடிக்கடி வெளியூருக்கு போய், ‘சிகரெட்’, ‘குடி’ என்று கெட்ட பழக்கங்களைப் பழக்கி வைத்துக் கொண்டிருக்கும் தன் இளைய மகன் ராபர்ட் மீது தீராத மன வருத்தம். மிகவும் யோசித்து யோசித்து தூரத்து சொந்தமான ரெஜினாவை மணமுடித்து வைத்தாள். பாக்கியத்தம்மாளும் எல்லா தாய்மார்களையும் போலவே தன்னால் திருத்த முடியாத தன் மகனை அவன் மனைவி வந்து மாற்றி விடுவாள் என்று உறுதியாக நம்பினாள். அந்த நம்பிக்கையில் விளைந்த மனத்ருப்தியிலேயே ராபர்ட்டுக்கு திருமணமான சில மாதங்களுக்குள்ளாகவே பரமபிதாவின் சாம்ராஜ்ஜியத்தைப் போய்ச் சேர்ந்து விட்டாள்.

பாக்கியத்தம்மாள் விட்ட இடத்திலிருந்து ரெஜினா தொடர்ந்து கொண்டிருக்கிறாள். தினமும் கணவனை ‘இந்தப் பழக்கத்தை’ விட்டு விடும்படி கெஞ்சுகிறாள். அன்றாடம் கர்த்தரிடம் தன் கணவனை ‘குடிப் பழக்கத்திலிருந்து’ மீட்டுத் தரும்படி மன்றாடுகிறாள்.

அவளுடைய அழுகையும் கெஞ்சலும் பொறுக்க முடியாமல் ராபர்ட் ‘நாளை முதல் குடிக்க மாட்டேனென்று’ அவ்வப்போது அவளுக்கு சத்தியங்கள் செய்து கொடுத்துக் கொண்டு தானிருக்கிறான்.

கல்யாணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும், மகன் டேவிட் ‘எல்கேஜி’ போக ஆரம்பித்த போதிலும், ராபர்ட்டின் மனதில் மண வாழ்க்கையைப் பற்றி ஏதேதோ குறைகள், மன சஞ்சலங்கள்!

ரெஜினாவுக்கு எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசிப் பழகத் தெரியவில்லை. ராபர்ட்டின் எதிர்பார்ப்பிற்புக்கேற்ப நாகரிகமாக அலங்கரித்துக் கொள்ளத் தெரியவில்லை. ஏதோ வீட்டு வேலை என்பது அவளுக்கு விதிக்கப்பட்டது என்பது போல எப்போதும் வீட்டுக்குள் வேலை செய்து கொண்டிருப்பாள். வீட்டை சுத்தமாக நேர்த்தியாக வைத்துக் கொள்கிறாள். இதெல்லாம் எல்லா மனைவிமார்களும் செய்வது தானே? இதிலென்ன விசேஷமாக இருக்கிறதென்று தான் ராபர்ட்டுக்குத் தோன்றும். ஆனால் வேறு விதமான மனைவிகளும் இருக்கிறார்கள் என்று அவனுடன் வேலை செய்யும் மற்றொரு சேல்ஸ்மேன் ரகு சொல்லுவான். அவன் மனைவி சரியான அடங்காப்பிடாரியாம்! இஷ்டமிருந்தால்தான் சமைப்பதிலிருந்து எல்லா காரியங்களுமாம். மாலை நேரம் அவன் வீடு திரும்பும்போது தலையை விரித்துப் போட்டுக் கொண்டு அழுது கொண்டு உட்கார்ந்திருப்பாளாம். அவனுடைய ஒவ்வொரு செயலையும் விமர்சித்து, அவர்கள் வம்புக்கே வராமல் இருக்கும் ரகுவின் பெற்றோரை சீண்டி வம்புக்கிழுத்து செய்வது எல்லாம் செய்து விட்டு, கடைசியில் தான் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய் விடுவாளாம். இத்தனைக்கும் ரகுவிற்கு எந்த விதமான கெட்டப் பழக்கமும் கிடையாது. சுபாவத்திலேயே சாது வேறு! எல்லாவற்றுக்கும் குறைபட்டுக் கொண்டு, கோபித்துக் கொண்டு தினமும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் மனைவியால் அன்றாட வாழ்க்கையே நரகமாக இருக்கிறதென்று அலுத்துக் கொள்வான்.

முன்னிரவு முடியும் நேரம். திடீரென்று முன்னறிவிப்பே இல்லாமல் ஒரு பெரு மழை, இடி,மின்னல் இத்யாதிகளுடன்.

அன்றைய கடைசி வேலையாக இராஜா அண்ணாமலைபுரம் வரை வந்த ராபர்ட் மழையில் மாட்டிக் கொண்டான். ஏற்கெனவே ஒரு ‘பெக்’ உள்ளே போயிருந்தது. மழைக்கு ஒதுங்கிய இடமும் ‘டாஸ்மாக்’ கடையாகப் போய் விடவே போதையேற ஆரம்பித்தது. வளசரவாக்கத்திலிருக்கும் தன் வீட்டுக்கு எப்படிப் போவது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தபோது, ‘சட்’ டென்று மந்தவெளியில் ஸ்டெல்லா இருப்பது நினைவுக்கு வர, எப்படியோ சமாளித்து வண்டியை ஓட்டி அங்கே போய்ச் சேர்ந்தான்.

மணமாவதற்கு முன்பு ஸ்டெல்லாவைத் தான் எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்வான். அவள் தான் எப்படி இடத்திற்கு தகுந்தாற்போல நவநாகரிகமாக அலங்கரித்துக் கொண்டு, எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசி வளைய வருவாள்? ரெஜினாவை அது போல ஒரு இடத்திற்கு, ‘பார்ட்டிக்கு’ கூட்டிப் போக முடியுமா? சுத்தப் பட்டிக்காடு! யாரோடும் பேசாமல் மௌனமாக ஒரே இடத்திலேயே அமர்ந்திருப்பாள்.

சேச்சே! ஸ்டெல்லா எங்கே, ரெஜினா எங்கே? மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம்!

நிற்கக்கூட முடியாமல் ஸ்டெல்லா வீட்டு வாசற்கதவில் சாய்ந்தவாறே அழைப்பு மணியை அழுத்தினான்.

கதவைத் திறந்தவுடன் தன் மேல் சாய்ந்த ராபர்ட்டைப் பார்த்து திடுக்கிட்டுப் போனாள் ஸ்டெல்லா. குடிவாடையை சகிக்க முடியாமல் மூக்கைப் பொத்திக் கொண்டு, “இந்த நிலைமையில இங்கே ஏன் வந்தே ராபர்ட்?” என்றாள் கோபமாக.

“அவுரு மாடியில தான் கம்ப்யூட்டர்ல வொர்க் பண்ணிக்கிட்டிருக்காரு. கீழே வந்து இந்த நிலைமையில உன்னைப் பார்த்தா எனக்கு எவ்வளவு அவமானம்? போ! போ! ‘சட்’னு இங்கேயிருந்து போயிடு! நிக்காதே!”

ராபர்ட் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தான்.

“நாங்க கௌரவமாக வாழறவங்க, இங்கே இனிமே குடிச்சிட்டு வராதே ராபர்ட்!” என்று அவனைத் தள்ளாத குறையாக வெளியே விட்டு கதவைச் சார்த்தினாள் ஸ்டெல்லா.

கடிகாரத்தைப் பார்ப்பதும் வாசற் பக்கம் பார்ப்பதுமாகவே பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தாள் ரெஜினா. டேவிட் ‘டாடி’க்காகக் காத்திருந்து காத்திருந்து வரவேற்பறை சோஃபாவிலேயே தூங்கி விட்டான். வெளியே விடாது பெய்த மழை அவள் மனதில் கலவரத்தை உண்டு பண்ணியது.

‘குடித்து விட்டு இந்த மழையில் நிதானமில்லாமல் வண்டியை ஓட்டி, ஒரு வேளை…….ஒரு வேளை………விபத்து ஏதாவது……’

மனதில் எழுந்த எண்ணத்தை வலுக்கட்டாயமாகத் துரத்தி விட்டு ஜெப அறைக்குள் சென்று மண்டியிட்டு பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.

மழையின் தீவிரம் நன்றாக குறைந்து விட்டிருந்தது. ராபர்ட் நன்றாகத் தெளிந்தெழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான். தான் ஸ்டெல்லா வீட்டு வாசற்கேட்டைத் தாண்டி சாலையோரம் படுத்துக் கிடக்கிறோம் என்பதும், தன்னை ஸ்டெல்லா வெளியே தள்ளிக் கதவைச் சார்த்தியதும் நினைவுக்கு வர கைக்கெடியாரத்தைப் பார்த்தான்.

மணி பன்னிரண்டு! கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தன் சகோதரியின் வீட்டு வாசலிலே ஒரு அனாதை போல விழுந்து கிடந்திருக்கிறான்.

மெதுவாக எழுந்து வண்டியைக் கௌப்பினான்.

‘ரெஜினாவும் டேவிட்டும் தூங்கியிருப்பாங்களே’ என்ற நினைப்போடு வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியதுமே, முன்னறையில் விளக்கெரிய வாசற்கதவு திறந்து கொண்டது.

“ஏன் டாடி இவ்ளோ லேட்டா வந்தீங்க? நானும் மம்மியும் ஒங்களுக்காக ‘ப்ரே ‘ பண்ணிக்கிட்டே இருந்தோம் தெரியுமா?”

குழந்தையின் கண்களில் தூக்கக்கலக்கம்! தந்தையைக் கண்டதும் மகிழ்ச்சியோடு ஓடி வந்த டேவிட்டை இறுக அணைத்துத் தூக்கிக் கொண்டான் ராபர்ட்.

“டாடி இனிமே இந்த மாதிரி செய்ய மாட்டேன் டேவிட்! என் டேவிட் குட்டியைப் பார்க்க சீக்கிரமே வீட்டுக்கு ஓடி வந்து விடுவேன்!”

குழந்தை அவன் வார்த்தைகளை முழு மனதாய் ஏற்றுக் கொண்டது போல சந்தோஷமாகச் சிரித்து சொகுசாக அவன் தோளில் முகம் புதைத்து குதூகலமாய்க் கூவினான்.

“டாடி! ஒங்க டிரெஸ் ‘ஜில்’ லுனு இருக்கு. எனக்குக் குளிருது!”

“டேவிட்! கொஞ்சம் கீழே இறங்கு கண்ணா! டாடி டிரெஸ் மாத்திக்கட்டும். அவுங்களுக்கும் குளிரும் இல்லே?” ரெஜினா துண்டும், மாற்றுடையும் விரைவாக எடுத்து வந்தாள்.

தன் அண்ணன் கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருக்கிறானே என்ற இரக்கம் கிஞ்சித்தும் இல்லாமல், மூடிய கதவைத் திறக்காமல் வீட்டினுள்ளேயே இருந்த ஸ்டெல்லாவின் நினைவு தவிர்க்க முடியாமல் வந்து போக, கண்களை இறுக மூடிக் கொண்டான்.

மூடிய கண்களுக்குள் வெள்ளை உடையில் தேவதையாக, இரண்டு குட்டி தேவதைகள் பின் தொடர மேடையேறிய ரெஜினா அவனருகே வந்து மண்டியிட்டாள்.

“ஆகவே, தம்பதிகளாகிய நீங்கள் யெகோவா தேவனின் கட்டளைகளை மறக்காமல் எப்போழுதும் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த மரியாதை அளித்தும், விட்டுக் கொடுத்தும் என்றும் மாறாத அன்புடன் என்றென்றும் இன்புற்று வாழ தேவனைப் பிரார்த்திக்கிறேன்! ஆமென்!”

அவனும் ரெஜினாவும் திருமண பந்தத்தில் இணைந்த அந்த மகோன்னதமான மாலைப்பொழுதில் ஒலித்த ஃபாதர் ரிச்சர்ட்ஸின் குரல் திரும்பக் காதில் ஒலிப்பது போல பிரமையாக இருந்தது ராபர்ட்டுக்கு.

அவன் கண்களைத் திறந்தபோது, ஜெப அறையில் சிலுவைக்குறியிட்டுக் கொண்டு கணவன் பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததற்கும், இந்த நாளை உன்னதமாக ஆக்கியதற்கும் கர்த்தரை மனமுருகி ரெஜினா ஜெபித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, மெல்ல அவளருகே சென்று மண்டியிட்டான். பிரார்த்தனை முடிந்ததும் அன்புடன் அவள் கைகளைப் பற்றி சொன்னான்.

“இனிமே நா குடிக்க மாட்டேன் ரெஜி! இது கர்த்தர் மீது ஆணை!”

அவனுடைய குடிப் பழக்கத்தைப் பொறுத்துக் கொண்டு எப்போதும் அவனுக்காக கர்த்தரிடம் ஜெபிக்கும் ரெஜினாவின் தோளை ஆதரவாகப் பற்றி அணைத்து அவள் கண்களைப் பார்த்து ராபர்ட் பேசியபோது, அவன் வார்த்தைகளில் தொனித்த சத்தியத்தையும், அந்த தருணத்தின் உன்னதத்தையும் ரெஜினாவால் தரிசிக்க முடிந்தது.

அந்த மகத்தான நொடியில் குழந்தை டேவிட்டைப் போலவே ரெஜினாவுக்கும் ராபர்ட்டை முழு மனதாக நம்பத் தோன்றியது. கண்கள் நிரம்பி வழிய மெதுவாக அவனை ஏறிட்டுப் புன்னகைத்தாள்.

– லேடீஸ் ஸ்பெஷல் 2011 தீபாவளி மலரில் வெளியானது

சிறு குறிப்பு சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்ற்ருக்கிறார். இலைக்கிய பீடம் சிறுகதைப் போட்டியில் இரு முறை பரிசு, கலைமகள் சிறுகதை போட்டி, மற்றும் குறுநாவல் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது. இலக்கிய சிந்தனை அமைப்பின் மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *