தற்காலிகமாய் நிறுத்தப்படும் ஆட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 6,864 
 
 

“ இனி உன்னோட ஆட முடியுமுன்னு தோணலே சுபா “

“ஏன் அப்பிடி சொல்றீங்க .”

“முடியாதுன்னு தோணுது. மனசு பலவீனமாயிருச்சு.”

அவரின் எதிரில் இருந்த குதிரைகளும் ராஜாக்களும் படைவீரர்களும் செயலிழந்தது போல் சதுரங்க அட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.இது இனி அவசியமில்லாதது என்பதாய் பார்த்தார்.அவளும் சட்டென திகில் அடைந்தவள் போல் பார்த்தாள்.அவர் தீர்மானத்தைச் சாதாரணமாய் சொல்லி விட்டது போலிருந்தது. நிலை கொள்ளாதவர்கள் மாதிரி இருவரும் முகம் பார்ப்பதைத் தவிர்த்து சுவர்களின் வெண்மையைப் பார்த்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள்.

படை வீரர்கள் கூடியதும் மூடியதுமான நிலையில் குதிரைக்கு மதிப்பு அதிகம். படை வீரர்கள் குறைவாக இருந்து திறந்த நிலை காணப்படும்போது மந்திரிக்கு கூடுதல் மதிப்பு வருவது பற்றி அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.அவர் யோசிப்பைத்தாண்டி வெறுமைக்குப் போய் விட்ட மாதிரி முகம் வெளுக்க உட்கார்ந்திருந்தார்.

அருட்செல்வம் மிகவும் சிரமப்பட்டுதான் அப்படியானத் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருந்தார்.வேறு வகையில் முடியாதா என்று ஓராயிரம் தடவை மனதில் கேட்டுக் கொண்டார். குழப்பமாகவே இருந்தது. வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டது போலிருந்தது. எப்பாவது நடக்கப்போகும் திருமண எல்லை அது . இது போல்தான் ஏதாவது எல்லைக்குப் போய் நடக்கப்போகிறது அந்த எல்லை இதுதானோ என்ற கடைசி என்பது போன்ற நினைப்பும் வந்தது.

வடவள்ளி குலதெய்வம் கோவிலில் கல்யாணம் வைக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது.கொஞ்சம் தமிழ்முறைப்படி திருமணம் தமிழ் மந்திரங்கள். அதிக சடங்குகள் இல்லாதத் திருமணம் என்றே கடைசியாய் சமரசம் செய்து கொள்வது என்று முடிவு செய்திருந்தார்.

எங்காவது திருமணம் வைத்துக் கொண்டு மாலையில் வெகு சிறப்பாக வரவேற்பு வைத்துக் கொண்டால் நல்லது என்று நினைத்திருந்தார். பூணூல் மாட்டிக் கொள்வது, சடங்குகள் செய்வது ஆகியவற்றை கொஞ்சம் தவித்து விட எண்ணியிருந்தார். எதுவும் அவர் நினைத்தது மாதிரி நடக்கவில்லை. அவர் பெயரை கருணாநிதி என்பதை அருட்செல்வம் என்று மாற்ற கூட அவர் சிரமப்பட வேண்டியிருந்தது.அவர் அப்பா இருந்த காலம். அப்பாவைத்தாண்டி வந்து , ஏகதேசம் குதித்துதான் அந்த மாற்றத்தைச் செய்திருந்தார்.

கொஞ்சம் முற்போக்காய் யாராவது மாப்பிள்ளை வீடு அமைந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று ஏக்கமாய் நினைத்திருக்கிறார் பல வருடங்களாய். சுபாவிற்குப் பெண் தேட ஆரம்பித்த இரண்டு வருடங்களில் அவரின் வைராக்யமெல்லாம் வெயிலில் பரிதவிக்கும் சிறு பூச்சி போல் சிதறிவிட்டது.அவரின் விருப்பப்படி எதுவும் நடக்கவில்லை.இம்மியளவு கூட கல் நகரவில்லை.நிலைத்து விட்ட தரையில் வேர்கள் பிடித்துக் கொண்ட கல்லாக இருந்தது.

” மொதல் பொண்ணெ காதல் கல்யாணமுன்னு பறி குடுத்தாச்சு. இதுவாச்சும் குடும்ப கவுரவத்துக்கு ஏத்தபடி சொந்தக்காரங்க மனசு நோகாதபடி அமையணும். இல்லீன்னா சொந்தம் விலகிப் போயிரும். ” .

எதற்கும் ஆறுதலுக்கென்று கூட வராதவர்கள் இந்தத் தீர்மானத்தைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.தீர்மானத்தில் அவரை நிற்கும்படி ஆளாக்கி விட்ட்து தனக்குள் நிகழ்ந்த பெரும் சரிவு என்று சொல்லிக்கொண்டார். உடலை உலுக்கிவிட்டுப்போகும் இருதய வலி போல் என்பது ஞாபகம் வந்து போகும்.

சரி என்று ஒத்துக் கொண்டு விலகி இருந்தார். ஜாதகம் எங்கே என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். பிறந்த தேதி போட்டு கனிணியில் 25 ரூபாயில் ஜாதகம் கிடைத்துவிட்டது. பெரியண்ணன் காதும் காதும் வைத்தமாதிரி “ அதெல்லாம் வேண்டாம். நல்ல ஜோசியகாரர்கிட்ட குடுத்து எழுதிக்கறேன் “ என்று கிளம்பி விட்டார். தேவைப்படுகிற மாதிரி எழுதிக் கொள்வதற்கான சவுகரியங்கள் இருப்பதைச் சொல்லிக்கொண்டார். அப்படி வாழ்ந்து பேர் சொல்லும் உறவினர் கூட்டங்களையெல்லாம் சொன்னார். “ செகடந்தாளி முருகேசன் வூட்லே என்ன நடந்தது..”

அவர் ஜாதகம் கிடைத்த கையோடு சொந்த சாதியின் கல்யாணமாலையிலும் பதிவு செய்து விட்டார். ராகு கேது தோசம் இருந்தது. ” அது மாதிரிதா அமையணும். இல்லீன்னா வர்றவங்க உசுருக்கு ஆபத்து. மாங்கலயம் நிலைக்காது. ” .

மாங்கல்யம், நிலையாமை என்பது பற்றியெல்லாம் நினைக்கையில் உடம்பு சாதாரணமாகவே தளரும்.

சோர்வு வந்து விடும் அவருக்கு.

பெண்ணின் திருமண ஏற்பாடுகள் பற்றி கேட்கிறவர்களிடம் அது தன் கையில் இல்லை என்பதாய் சொல்லிக் கொண்டார் அருட்செல்வம்.தன் எல்லையை மீறி குடுமபம், பெரியவர்கள், குடும்பக் கட்டுக்கோப்பு எல்லாம் அதை எடுத்துக் கொண்டதில் அவருக்கு வருத்தம் அதிகமானது. இப்படி எத்தனை தோல்விகளை இனி சந்திக்க வேண்டியிருக்குமோ. சமரசம் தற்கொலை மாதிரிதானா. இனி நிறைய சமரசங்கள் செய்ய வேண்டியிருக்குமா..

“ மொதல் பொண்ணு கல்யாணம் சாதி மறுப்பு. அது பெரிய தோல்விதா. அதனாலே என்னெ தலையிட வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க “ என்றும் உண்மையைச் சொல்லி வைத்தார். தோசம், சடங்குகள் என்று பேச்சு அடிபடுகிற போதெல்லாம் கண்களை மூடிக் கொண்டார்.காதுகளைப் பொத்திக் கொண்டார். வாயையையும் மூடிக் கொண்டார்.காந்திய வாதியானார். மற்ற சமயங்களில் காந்தியத்திற்கு எதிராக இருப்பவர் ஆனால் வேறு வழியில்லாமல் காந்தியின் மூன்று பொம்மைகளை மனதில் இருத்திக் கொண்டார். அதில் கொஞ்சம் சுகம் இருந்தது.

“இது தோற்கறவர்களின் ஆட்டமா “

“ என்ன “

“ இந்த சதுரங்கம் “

“ நீங்க நேரிடையா செஸ்சைப்பத்திக் கேக்கறீங்களா “

“ எப்படி வேண்ணா வெச்சுக்கலாம் “

“ நீங்கதானே இது ஜெயிக்கிறவங்க ஆட்டம்ன்னு சொல்லிகிட்டிருப்பீங்க ”

தோற்போ ஜெயிப்போ அதில் தன் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். சாம்பியன்சிப்பைப் பெறுவது என்பதெல்லாம் அவருக்கு ஆசை இருந்ததில்லை.பல்வேறு நகர்வுகளைப் புதிதாய் கண்டவர்கள் என்ற பெயர்ப் பட்டியலில் அவரது பெயர் வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.போடென் மேட், லஸ்கர் பாத் என்பதெல்லாம் அவருக்குப் பிடித்திருக்கின்றன.அவர்கள் புதிய நகர்வுகளுடன் தங்கள் பெயர்களைப் பதித்தவர்கள்.

ரேட்டிங் ஆயிரத்திற்கும் மேல் இருந்தவர்களுடனே அவர் ஆட ஆரம்பிப்பார். காம்பினேசன், செக்மேட் என்பதெல்லாம் அவருள் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும்.புதிய நகர்வுகள், புதிய அனுபவங்கள் என்று நினைப்பார். ஆனால் இந்த புதிய நகர்வுகள் அவரை இம்சித்தன. மூச்சு, விடுதலை இன்னும் சிரமமாக்கின.

சுபா கந்த புராணம் படித்துக் கொண்டிருக்கிறாள் நான்கு நாட்களாய். அவருக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் நிலை கொள்ளவில்லை. உடம்பு பரபரப்பாக்கி விடுகிறது. ஏதோ மருந்தில்லாத வியாதி வந்தது போலாகி விடுகிறது. அதைக் கட்டிலுக்கடியில் ஒழிந்து போகக் கடவது என்று ஒதுக்கி வைத்தார், அது கண்ணில் படாமல் அவ்வளவுதான் செய்ய முடியும். கர்ப்ப காலத்தில் அவளை கந்த புராணம் படிக்கச் சொல்லி யார் சொல்லி இருப்பர்களோ.அது என்ன லாபமெல்லாம் தரும் என்று சொல்லியிருப்பார்கள்.

“ என்ன படிக்கறதுன்னு நான் தீர்மானம் பண்ணக்கூடாதா “ என்றும் அவரை முறைத்தபடி சொன்னாள்.இந்த முறைத்ததில் வெறோருவனின் மனைவி என்ற அடையாளமும் இருந்தது.

பேருந்து நிலையத்திலிருந்து வீடு வரும் போதுதான் ஒருநாள் தன் கர்ப்பம் பற்றிச் சொன்னாள். முன்பே கிரிஜாவிடம் சொல்லியிருப்பாளா. வீட்டிற்குப் போன பின் சொல்லிவிடுவாளா. எப்படியும் கிரிஜாவிற்குத் தெரிந்திருந்தால் அவள் சொல்லீயிருப்பாள்.இதற்குக்கூட ஜாதகம் பார்த்து நல்ல நேரம் பார்த்து , யாரிடம் முதலில் சொல்வது என்ற மங்கலத்தன்மை பார்த்து சொல்கிறாளா என்றிருந்தது.

அவள் வேலைக்குப் போகும் போதும், மாலை அலுவலகம் விட்டதும் பேருந்து நிறுத்தத்திற்கு வரும்படி சொல்லிருந்தாள். பேருந்து நிறுத்தத்திலிருந்து வீடு முக்கால் பர்லாங் இருந்தது.

” கூப்புட வருவது தேவையா ‘ என்றும் கேட்டுவிட்ட ஒருமுறை முறைத்தாள்.

“ விஆரெஸ் வாங்கிட்டு என்ன பண்றீங்க . சும்மாதானே இருக்கீங்க “ சும்மா என்ற வார்த்தை அவரை இம்சித்தது. ரொம்பவும் இம்சைப்பட வேண்டாம் என்று தினமும் மாலை, இரவுகளில் சுபாவைக் கூப்பிட்டு வர ஆஜராகி விடுபவராக இருந்தார்.

இரட்டைச் சக்கர வாகனத்தில் உட்கார அவளுக்கு லகுவாகவே இருந்தது. இன்னும் சில மாதங்கள் கழித்து இது அவளுக்குச் சிரமமாகிவிடலாம்.

பரிக்சா சாமி வந்திருந்தார். ராத்திரியின் கோதுமை உப்புமாவே போதும் என்றார். காலை நேரம் என்பதால் கொஞ்சம் சாதமும் போட்டு கட்டாயப்படுத்தினாள் கிரிஜா.அவர் கூச்சத்துடனே சாப்பிட்டு முடித்தார். மனைவி இறந்த பின் எந்தக்கூச்சமும் இல்லாமல் அவர் நல்ல ருசியான சாப்பாட்டைச் சாப்பிட்டிருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது..பலருக்கும் அம்மாவோடு சமையல் ருசி போய் விட்டிருக்கும். அவருக்கு மனைவியோடு போய் விட்டிருக்குமா,.

“ 23 வருசமா சொல்லித்தந்ததெல்லா வீணாப் போச்சு. புருசன் வீட்டுக்கு போயிட்டு திரும்பறப்போ என்ன கொண்டுட்டு வருவாளோன்னு பயந்திட்டிருக்க வேண்டியிருக்கு. போன தரம் கந்தப் புராணத்தோட வந்தா. பகுத்தறிவு, பெரியார், புத்தகங்கள், உலக சினிமான்னும் ஒவ்வொரு பருக்கையா திணிச்சது. ஒண்ணும் உள்ளே போகலையா. எல்லாம் வீணாப்போச்சா ”

“ கேட்கறது அவங்க கடமைன்னு வெறுமனே கேட்டுட்டு இருந்தாஙக போலிருக்கு..இப்போ சொல்றதுக்கு வேற ஆள் வந்தாச்சு. இருபத்தி மூணு வருஷத்தெ விட இனியும் இருக்கற காலம் பெரிசுன்னு முடிவு பண்ணீட்டங்க போல ;;”

“ துளி துளி ரத்தமா சொன்னதெல்லா ஒடம்புலே ஊறியிருக்கும்ன்னு நெனச்சா கதையே வேற மாதியில்லே இருக்குது.. “

“ எல்லா வீட்லியும் இதே பிரச்னைதா. “

பரிக்சா சாமி மனைவியை இழந்தவர். பையன் காணாமல் போய் விட்டான். காணாமல் என்றால் நகரின் வேறு பகுதியில் வாழ்கிறான்.அவரைப் பார்ப்பதில்லை.பார்ப்பதைத் தவிர்க்கிறான். அவரையும், அவர் மகள் குடும்பத்தையும் சந்திக்க விரும்பாதவன் மாதிரி வேறு பகுதியில் இருக்கிறான். அவர் நண்பர்களிடம் மட்டுமே பகுத்தறிவு , இலக்கியம் என்றெல்லாம் பேசுவார். மற்றபடி சாதாரண மனிதனாக உலவ அவருக்குச் சாதகங்கள் இருந்தன.அதையும் வேதனையுடன் சாதாரணமாக சொல்லிக் கொள்வார். அந்த சாதாரணம் தனக்கும் வந்து விடக்கூடாது என்ற பயம் இருந்து கொண்டே இருந்த்து.

* * *

“ இனி உன்னோட ஆட முடியுமுன்னு தோணலே சுபா “

“ஏன் அப்பிடி சொல்றீங்க அப்பா .”

“ இனி முடியாதுன்னு தோணுது. மனசு ரொம்பவும் பலவீனமாயிருச்சு. கந்த புரணத்துக்குள்ளே அடைக்கலமாகறவங்கிட்டே ஒத்துப் போகமுடியுமுன்னு தோணலே ”

“ ஊர் உலகத்திலே எத்தனையோ பேரோட ஒத்துப்போறீங்க. இங்க வீட்லே முடியாதா”

“ வீட்லே எதைஎதையோ சொல்லி வளர்த்தேன். பிரயோசனமில்லைன்னு தோணுது. அதுதா ஒத்துப் போக முடியும்ன்னு தோணலே. ஒரு எதிர்ப்பாவாவது இதைச் செய்யணும்ன்னு தோணுது. இதைச் சொல்லக்கூட வேண்டியதில்லை.டக்குன்னு எந்திரிச்சு போயிர்லாம். ஆனா விளக்கம்ன்னு சொல்லிட்டுப்போறது உனக்கு குழப்பமில்லாமெப் போகும் பாரு.. அதுக்குத்தா “

கிரிஜா குறுகிட்டாள். “ அவளுக்குப் பொறக்கற பையன் உங்க கூட உக்கார்ந்து செஸ் ஆடுவான். நீங்க சொல்றதேக் கேப்பான். ”.

ஆறுதல் மொழி கேட்பதே அபூர்வம். கிரிஜா ஆறுதலாய் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆறுதலுக்காகவே அப்படி சொல்கிறாள் என்றிருந்தது.

பிறக்கப் போகும் அவனுக்காக செஸ் போட்டை பத்திரப்படுத்தலாமா என்பது பற்றி நினைத்தார். அவன் ரேட்டிங் ஆயிரம் என்பதைக் கடக்கையில் அவன் முன் உட்காரலாம் என்று இப்போதே நிபந்தனை போட்டுக் கொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *