தரி-சினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 1,668 
 
 

காயடிக்கப்பட்டுபின்னர்தான் காளைமாடுகளுக்கு கொம்பில் குஞ்சம் கட்டி அழகு பார்க்கிறார்கள். பார வண்டி இழுக்கும் வாயில்லா ஜீவனுக்கு ருசியாக மணிலா பிண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் பச்சரிசி தவிடும் தின்பதற்கு வைத்து, கருப்புக்குக்கயிறோடு வெண்சங்கும் அதன் கொம்பில் கொலுவிருக்கிறது என்றால் ஒன்றும் சும்மா இல்லை.

அரசாங்க ஊழியர்கள் பெறும் சலுகைகள் கூட இந்த வகைதானோ என்னவோ. எத்தனையோ சலுகைகள். விடுப்பில் பயணம் என்பதும் ஒரு சலுகை. கேள்விப்பட்டுதான் இருப்பீர்கள். நான்காண்டுகளுக்கு ஒரு தடவை இந்தியாவில் எந்த மூலைக்காவது சென்று திரும்பலாம். எந்த ஊர் போக முன்பணம் வாங்கினீர்களோ அந்த ஊர் மட்டும்தான் போகலாம். அங்கு பூகம்பம் வந்துவிட்டது ஆக அந்த ஊர் போகவில்லை. இந்த ஊரோடு திரும்பிவிட்டேன் அங்கு ஒரே வெள்ளக்காடு, சொன்ன இடம் போகமுடியவில்லை எனக்கு உடம்புக்கு முடியாமல்தான் நான் போகவில்லை குழந்தைக்கு முடியாமல் போய்விட்டது ஆகவே நாங்கள் சொன்ன ஊர் போகாமல் சொந்த ஊருக்கே திரும்பினோம். வேறு என்ன செய்ய என்று உள்ளதைச் சொன்னால் கணக்கு அதிகாரிகள் ஒத்துக்கொள்ளமாட்டர்கள். அங்கு அப்படி அது இது நடந்தது என்பதற்கெல்லாம் ‘என்ன அய்யா ஆதாரம்’ என்று அனுப்பிவைத்த எல்.டி.சி பயண பில்லை குறுக்கும் நெடுக்கும் சிவப்பு மையால் கோடு போட்டு நமக்குத்திருப்பி அனுப்பி விடுவார்கள். கிரகங்கள் சரியாக இருந்து குரு பார்வையும் விழுந்து அனுப்பி வைத்த எல்.டி.சி பில் செட்டில் கிட்டில் ஆகிவிட்டது என்றால் வேண்டிக்கொண்ட பிள்ளையாருக்கு கொழுக்கட்டை செய்துவைத்து வேண்டுதலை முடித்தவர்கள் உண்டுதான்.

இப்படியாகவும் இன்னும் பலப்பல மாதிரியாகவும்தானே மத்திய அரசு ஊழியர்களுக்குச் சலுகைகள் உண்டு. சமீப காலமாய்த்தான் ஒரு குறை. யார் கண் பட்டதோ இல்லை, பில்லி சூன்யம் வைத்தார்களோ, ஏவல் கீவல் உண்டோ, சாமி குத்தமோ இல்லை பிதுர்கள் விட்ட சாபமோ, காராம் பசுவை ஏதும் பட்டினித்தான் போட்டுவிட்டார்களோ அந்த விஷயம் மட்டும் இன்னும் சரியாப் பிடிபடவில்லை. வயதான காலத்தில் கொஞ்சம் மரியாதையாக அரை வயறு சோறு கிடைக்கும் என்றால் அதுவும் கிடையாதாம் இனி. அந்த வெள்ளைக்காரன் கொடுத்த ராஜ மரியாதை (என்கிற) பென்ஷன் காலியாகிவிட்டது.

பெண்கொடுப்பவர்கள் ‘அரசாங்க வேலைன்னா பார்க்கிறான் என் மாப்பிள்ளை’ என அண்ணாந்து அண்ணாந்து அந்த ஆகாயம் பார்த்து பேசவும் முடியாது.

எல்.டி.சி யாகப்பட்டது என்னவென்றால் அரசாங்கம் கொடுக்கின்ற ஒரு பத்து ரூபாயுக்கு நூறு ரூபாய் செலவு வரும். கீழ்வீடு மேல் வீடு இன்னும் சுற்றும் முற்றும் இருப்பவர்கள் ‘போகிறான் பார் எல்.டி.சி’ எனக் கொஞ்சம் வயறு எரியத்தான் செய்வார்கள்.

எந்த அலுவலத்திலும் தடுக்கிலும் கோலத்திலும் நுழைந்து வெளி வரும் ஆசாமிகள் அங்கிங்கெனாதபடிக்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அலுவலத்தில் கை நீட்டி வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்வதைவிட எந்த ஒரு சலுகையை எப்படிப் பெறலாம் என்கிற நுணுக்கம் தெரிந்த அவர்களுக்குத்தான் மதிப்பும் மரியாதையும் அப்பப்பா எக்கச்சக்கம்.

‘இந்த டிசம்பரோட முடியுது இந்த பிளாக் எக்ஸ்டென்ஷன். எல்.டி.சி போகணும்னா நீர் சட்டுனு போயி வந்துபுடும்’ என்று நண்பன் எச்சரிக்க அவன் அப்பா அம்மாவோடு தங்கையைக் கூட்டிக் கொண்டு சின்ன எல்.டி.சியாக திருப்பதிக்குப் போய்வரலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தான்.

பெற்றோர்களிடம் இது விஷயம் விளக்கமாய்ச் சொன்னான். கல்யாணத்திற்கு இருக்கும் அவன் தங்கைக்கும் இந்த சலுகை உண்டென்பதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி. அலுவலத்தில். எல்.டி.சி அட்வான்ஸ் கொடுத்தார்கள். சலுகையில் போகும் அந்த ஊர் டிக்கட் வாங்கியதைக்காட்டினால் அட்வான்ஸ் அவ்வளவு, காட்டவில்லை என்றால் இவ்வளவு, அது எவ்வளவு என்று மட்டும் கேட்கவும் கூடாது ஒருவர் சொல்லவும் கூடாது. சொல்லிவிட்டால் கதையில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது. அதனை மட்டும் கொஞ்சம் விட்டுவிடுங்கள்.

தருமங்குடியிலிருந்து அவர்கள் மூவரும் ஏழுமலையானை த்தரிசிக்க எல்.டி.சி பயணம் புறப்பட்டனர். புறப்படும் முன் ஒரு கடிதம் ‘நாங்கள் புறப்பட்டு விட்டோம்’ என அலுவலகத்தில் சடங்குக்காக அவன் எழுதிக்கொடுத்தான். தருமங்குடியிலிருந்து புறப்பட்டு மூவரும் திருமுதுகுன்றம் வந்தார்கள். விழுப்புரத்திற்கு ஒரு பஸ் பிடித்து பின் விழுப்புரம் பேருந்து நிலையம் வந்தார்கள். அந்தக் காலத்தில் தகரக்கொட்டகை போட்டுக்கொண்ட விழுப்புரம் பஸ் நிலையம், ஊசி மணி பாசி மணி விற்கும் குறத்திகள் ஜனத்தொகையும் அங்கு சற்று அதிகம்.

அந்தக் காலத்தில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு ஒரு பாசெஞ்செர் ரயில் போய் வந்து கொண்டிருந்தது. எல்லா ஊரிலும் நின்று நின்று போகும் அந்த ரயில்தான். விடியற்காலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் அந்த மூவரையும் விழுப்புரத்திலிருந்து ஏற்றிக்கொண்டுபோய் இறக்கி பின் ஒரு பெரும் மூச்சு விட்டது. ஸ்டேஷனுக்குப் பக்கமாய் இருந்த ஜிலுக்கு புலலுக்கு மின்சார சிறு பல்புகள் ஓயாமல் எரியும் ஒரு உணவு விடுதி பார்த்து காபி சாப்பிடப்போனார்கள். அங்கு அவர்கள் காபி என்று பெயர் சூட்டிக்கொண்ட ஒன்றைத்தான் வாங்கிச் சாப்பிட்டார்கள். யாரும் காபியைக் குடிப்பதில்லைதானே. பல்லும் துலக்கவில்லை ஒன்றும் இல்லை அப்போதைக்கு. வேறு வழிதான் என்ன.

குட்டி நடையில் திருமலைக்குச்செல்லும் பஸ் நிலையம். ஒரு பஸ் பார்த்து அதனுள் ஏறி அமர்ந்து கொண்டார்கள். கதவு மூடிக்கொண்ட குட்டி குட்டி பஸ்கள் திருமலைக்குப் போய் வருகின்றன. மலைப்பாதை வளைவு வளைவு வளைவு ஒரு வழியாய் திருமலை வந்தது.

தேவஸ்தான ஓசி.ரூமுக்கு ஒரு மைலுக்குக் க்யூ இருந்தது. அவனுக்குக் கால் வலித்தது. க்யூவில் நின்ற அவனுக்கு ஓ சி அறை சாவி ஒன்று கடைசியாய்க் கைவசமானது. ராட்சசத்தனமாகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு அவை சிறு அறைகள் அறைகளாகக் கத்தரிக்கப்பட்டு ‘வா வா’ என அழைத்துக்கொண்டு காட்சி தந்தன. சாவி யோடு இணைந்த அந்த ஒரு தகரத்தில் அறை எண் எழுதி இருந்தது.

அவனின் அப்பா கோவிந்தா கோவிந்தா என அடிக்கொரு தரம் சொல்லிக்கொண்டே வந்தார்.அவன் அம்மாவுக்கு எத்தனையோ சகஸ்ர நாமங்கள் மனப்பாடம். தண்ணீர்பட்ட பாடாக (அந்த கால பழ க்கத்தில் சொன்னது) விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்ல ஆரம்பித்தாள் அம்மா. அவன் அறையைக்கண்டு பிடித்து அந்தச் சாவியை க்கொண்டு பூட்டைத் திறந்தான்.மூட்டை முடிச்சுகள் எடுத்துக்கொண்டு வந்ததை அலமாரியில்வைத்துக் காலை நீட்டிக்கொண்டு மூவரும். சிரம பரிகாரம் செய்து கொண்டார்கள்.

‘புஷ்கரணியில ஸ்நானம் செய்யாலாமா’

என்று கேட்ட தந்தையிடம் ‘ புஷ்கரணியில இறங்கி தலையில் கொஞ்சம் தீர்த்தம் மட்டும் புரோக்ஷித்துகொண்டால் போதுமப்பா, இங்கேயே ஸ்நானம் பண்ணிட்டு போயிடலாம்’ அவன் பதில் சொன்னான். அவ்விதமே அறையில் கொட்டும் ஜில்பு நீரில் குளித்துமுடித்து புஷ்கரணிக்குப் போய் தலையில் தீர்த்தம் தெளித்துக்கொண்டு கோவில் க்யூ வரிசையில் நிற்கப்புறப்பட்டனர்.

‘மொட்ட அடிச்சிகறது எல்லாம் உண்டா?’

‘நம்மாத்துல ஒரு மொட்டைதான் நம்ம குலதெய்வ்ம் ஸ்வாமி மலைல அதுவும் ஒரு வயசுலதான். காது குத்தறதுக்கு முன்னாடி தலமுடியும் இறக்கி ஆயிடும். மற்றபடி புருஷான்னா தாடியும் கூடாது மொட்டையும் கூடாது, குடுமியோ கிராப்போ குடும்பத்துல இருக்கறவான்னா அப்பிடிதான் இருக்கணும்’

தந்தை அவனுக்கு விளக்கம் தந்தார்.

‘இந்தபடிக்கு சட்டமா பேசறது மாத்ரம் அப்பிடியே போய்விட்ட எம் மாமியாரை எனக்கு ஞாபகப்படுத்திண்டே இருக்கு’. அவன் தாய் சொல்லிக்கொண்டாள்.

காத்திருப்பு. தெய்வ தரிசனத்துக்காகத்தான். அறைகள் நிறைந்து நிறைந்து மனிதர்கள். எத்தனை எத்தனை விதமாய் முக தேஜஸ்கள். கோவிந்தா கோவிந்தா என்கிற ஒலி. காலம் டி.வி பிறப்பதற்கு முன்.

வரிசையில் நிற்க இல்லை உட்கார்ந்திருக்க கோவில் நிர்வாகம் என்ன வித்தை காட்டினால் என்ன மக்கள் அறை அறையாய் அமர்ந்து நெளிந்து துவண்டு கிடந்தனர். பத்து மணி நேரம் அடைபட்டுக்கிடந்த மக்களுக்கு ஏழுமலையான் திவ்யமாய் தரிசனம் தந்தார். தரிசனம் முடித்து மூவரும் கோவில் உள் பிராகாரத்தைச்சுற்றி வந்தனர். நெட்டை உண்டியலில் காசு போட்டனர். நாமதாரி அய்யங்கார் எந்திரமாய் பிரசாதம் வழங்கியது சன்னதியிலே வாங்கிக்கொண்டனர். திருப்பதிப்பிரசாதம் திருப்பதி லட்டும் அவர்களுக்கு எத்தனை விதிக்கப்பட்டதோ அத்தனை வாங்கி பத்திரம் செய்து கொண்டார்கள்.

திருக்கோவிலை விட்டு வெளிப்பட்டு கண்கள் நாமத்தால் மூடிய வெங்கடாசலபதி போட்டோவும் திருப்பதி கயறும் வாங்கி அவன் அம்மா பத்திரப்படுத்தினார். ‘நான் போயி ரூமைக்காலி பண்ணிண்டு வந்துடறேன் நீங்க இங்க இருங்கோ’ அவன் தன் தங்கையிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் கிளம்பினான்.

‘சந்தனக்கல் சந்தனக்கட்டை’ விற்பவர்கள் சுற்றி சுற்றி வந்து நச்சரித்தனர்.

‘அது சந்தனமரைக்கும் கல்லுமில்லை சந்தனக்கட்டையுமில்லை’ அவன் தந்தைக்கு எச்சரித்தான்.

‘சந்தனக் கல்லும் கட்டையும் நம்ப ஆத்துல இல்லையா என்ன’ தந்தை அவனுக்குப்பதில் சொன்னார்.

அந்த நேரம் பார்த்து திருப்பதி தேவஸ்தானத்து சிப்பந்தி ஒருவர் இலவச உணவுக்கு டோக்கன் கொடுத்துக்கொண்டே வந்தார்.அவன் மூன்று டிக்கட் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டான்.

‘நாம கோவில்ல போடற அந்த சாப்பாட்டயே சாப்பிடலாம்கறயா’ தந்தை கேட்டார்.

‘ஏன் சாப்பிட்டா என்ன’ அவன்.

‘இல்ல நம்ப காசுல சாப்பிட்டாதான் அது புண்ணியம்பா பெரியவா’

‘அந்த பகவான் தான் எல்லாருக்கும் எப்பவும் சாப்பாடு போடறான்’

‘அப்படி சுத்தி இப்படி வரயாப்பா நீ பரவாயில்லேயே’

‘சித்த வாய மூடிண்டு வரப்பிடாதா அவ்னுக்கு த்தெரியாதா நச நசன்னு என்ன பேச்சு வேண்டி இருக்கு இன்னும் அவனென்ன விரல சூப்பிண்டு பச்ச குழந்தையா’ தாய் தந்தையக் கடிந்து கொண்டாள். அவன் எதுவும் காதில்போட்டுக்கொள்ளாமல் அவர்கள் தங்கி இருந்த அறையைக்காலி செய்யப்புறப்பட்டான்.

‘என்ன வெங்கடாஜலபதி பெருமாளை நன்னா சேவிச்சேளா’ அம்மா தான் அவன் தந்தையை க்கேட்டாள்.

‘மொதல்ல வெங்கடாசலபதின்னு சொல்லத்தெரிஞ்சுகோ அசலம்னா அது மலை, வெங்கடா ஜலமும் இல்லே விருத்தா ஜலமுமில்லே இல்லே’

‘சலம்னா சொன்னா அது என்னமோ மாதிரி சரியா வருமா என்ன’

‘காகம்னு சொல்லற அதுல முதல் ‘கா’ எப்படி, ரெண்டாவது ‘க’ எப்படி சொல்லற அப்படி சலத்தை சலம்னு சொல்றச்ச அந்த ச எழுத்தை அழுத்திச்சொல்லணும்’

‘இந்த நக்கீரர் வியாக்கியானம் எல்லாம் தெரிஞ்சிதான் கெடக்கு, பெருமாள சேவிச்சேளான்னு கேட்டேன் அதுக்குப்பதிலு வரல’

‘எங்க சேவிச்சேன் கொஞ்ச நாளா நேக்கு தூரத்துல இருக்கறது எல்லாம் சரியா தெரியல. கண்ணுல காடராக்ட் ஏதும் ஃபார்மாயிருக்கல்லாம்னு தோண்றது’

‘சன்னதியிலயே நான் பாத்தேன். கக்கிரி பிக்கிரின்னு அங்க முழிக்கச்சேயே நேக்கு விஷயம் தெரிஞ்சிட்து அதான் கேட்டேன். இப்பக்கி கண்ண டெஸ்ட் பண்ணிட்டு ஒரு கண்ணாடியானு மாட்டிண்டு இந்த சுவாமி தரிசனத்துக்கு வந்து இருக்கலாம் இல்லயா’

‘செஞ்சி இருக்கலாம்’

‘என்ன செஞ்சி இருக்கலாம் கிஞ்சி இருக்கலாம்’

‘பின்ன நான் என்னத்தை சொல்லுணும்கற’

‘துளி கூடவான்னா தெரியல அங்க ஸ்வாமி நிக்கறது ஜகஜ்ஜோதியா மின்னித்தே நீங்க பாக்கலேன்னா அது என்ன பாவமோ’

அவர் பதில் சொல்லாமல் இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருந்தார்.

மூவரும் திருமலயைவிட்டு இறங்கத்தயாரானார்கள்.

‘இந்த திருப்பதி மலையத்தொட்டாலே போறும் இந்தப் புஷ்கரணியில ஒரு மீனா பொறந்தாலே அதுவே புண்ணியம்பா’ அவன் தந்தை சொல்லிக்கொண்டே வந்தார்.

‘திருமலையில ஏறி ஸ்வாமிய நேறா போய் சன்னதியில சேவிச்சுட்டு வந்து திருப்பதி மலயத்தொட்டாலே புண்ணியம் அது இதுன்னு பேசினா என்ன அர்த்தம்னு கேக்கறேன்’ அவன் தந்தையிடம் கடுப்பாகிக் கேள்வி வைத்தான்.

‘கொஞ்சம் வயசானேலே இப்படி புருஷா படுத்தறது எல்லாம் சகஜம் விடுடா’ தாய் மகனிடம் சொல்லிக்கொண்டாள்.

அவருக்கு அதுவும் காதில் விழத்தானே செய்தது. அவன் பயண சீட்டுக்களை எல்லாம் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டே வந்தான். எங்க சுத்தினாலும் அந்த ரெங்கன சேவிக்கணும். அவனும் ஊர்போய் அந்த அக்கவுண்ட்ஸ் அதிகாரிகளுக்கு எல்.டி.சி பயண பில்லை ஒட்டி கட்டி சமர்பித்தாக வேண்டும்தானே.

அவன் அப்பாவுக்கு ஸ்வாமியை சரியாய்ப்பார்க்காத குறை ஏதும் இல்லை. அவன் தாயுக்கு மட்டும் அடி மனத்தில் இன்னும் அது உருத்திக்கொண்டே இருந்தது. நடந்த எல்லாம் தெரிந்த அவன் தங்கை எப்பவும் போல் மவுனமாகவே பேருந்தில் அமர்ந்து கொண்டிருந்தாள். இந்த முன்கோபி அண்ணனை வைத்துக் கொண்டுதானே அவளும் கரை ஏறி வேறு ஒரு ஊர் போய்ச் சேரணும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *