(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இறக்கமான வளையில் தலையை மோதாமல், அவதானமாகக் குனிந்து, முற்றத்தில் இறங்கிய பொழுது ‘கிசுகிசு’வென்று மெல்லிய சிலிர்ப்பான காற்று உடலைத் தழுவியது! நிமிர்ந்த பொழுது, ஈரமண்ணில் நின்று கொண்டு மெதுவாகத் தலையசைக்கும் குளிர்ந்த பச்சை நிற வெண்காயத் தார்கள்! கொஞ்சம் எட்டிப் பார்த் தால், தோட்டப் பாதையோரமாக வரிசைக்கு நின்று ‘சலசல’வென்று ஒலியெழுப்பி ஆரவாரம் செய்யும் வாழை மரங்களினிடையாக நாணிச் சிரிக்கும் சூரியன். வலது பக்கமாகத் திரும்பினால், தோட்டக் குடிசையை வளைத்துச் சிறைகொள்ளும் செவ்வந்திச் செடிகள் கூடவே மோதி நழுவும் மெல்லிய சுகந்தம்…
“அக்கா, அஞ்சு மணியாச்சு; ஏறுங்கோ” ராசன் கரியர் பூட்டிய சைக்கிளை வைத்துக்கொண்டு அவசரப் படுத்தினான்.
“இங்கை… இதிலை வந்து நிண்டு… இந்தத் தோட்டத்தை ஒருக்கால் வடிவாய்ப் பாரடா அசைய விடாமல் இழுக்கிற மாதிரி ஒரு அழகு..!” நான் மெதுவாக ஆச்சரியப்பட்டேன்.
“கால் மணித்தியாலமாய் உதிலேயே நிண்டு ரசித்துப் போட்டீங்களெல்லோ… சரி; இனி வாங்கோ” அவன் தனக்கேயுரிய நகைச்சுவைப் பாணியில் என் மனத்தைச் சீண்டினான். நான் இங்குத் தங்கி நின்ற இந்த இரண்டு நாட்களில் அவன் எப்படிச் சீண்டிய பொழுதிலும் எனக்குக் கோபம் வரவேயில்லை..!
அப்படியரு புதுமையான ரசனை எனக்கு அவனிடமிருந்தது! அரும்பு மீசை… துடிப்பு நிறைந்த மகிழ்ச்சியான முகம்… இளமையிலேயே முறுக்கேறிய உடல், ஆழ்ந்து நோக்கினால் கண்ணுக்குள்ளே இனம் தெரியாத மெல்லிய சோகம்! நன்றாகச் சிரித்தான்; சிரிக்கவும் வைத்தான்!
இரண்டு நாட்களுக்கு முன்னர் நானும் அம்மாவும் யாழ் பட்டணத்திலிருந்து என் சிறிய தாயாரின் இந்த தோட்டக் குடிசைக்கு வந்தபொழுது, வாழைப்பாத்திக்குத் தண்ணீர் மாற்றிக்கொண்டு நின்றிருந்த இவன் தான் “அம்மா… பெரியம்மாவும் அக்காவும் வருகினம்…” என்று ஆரவாரம் செய்து கொண்டு எங்களை வரவேற்றான். ஓடிவந்து எங்கள் கைகளில் தூங்கிய பயணப்பைகளை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு வீட்டிற்குள் ஓடினான்.
“ராசன்… டேய்… வாய்க்கால் உடைக்குதடா ஓடடா… பாத்தியை மாத்தி விடு” என்று வெண்காயத் தார்களின் மத்தியில் நின்று கொண்டு சத்தமிட்ட சித்தப்பாவின் கட்டளையை நிறைவேற்ற ஓடியவனும் இவன் தான்.
“ராசன்… இங்கை ஓடிவாடா… பூசணியெல்லாம் மாடு உழக்குது; பிடிச்சுக் கட்டு” என்று கிணற்றடியில் நின்று சட்டிபானை விளக்கிக்கொண்டிருந்த சித்தியின் குரலுக்குக் குடல் தெறிக்க ஓடியவனும் இவன் தான்!
“மழை பெய்யப் போகுது… மிளகாய் வத்தலை அள்ளிக் கட்டடா” என்று அவசரப்படுத்திய பாட்டியின் ஆசையை நிறைவேற்றியதும் இவன் தான்.
“ஐயையோ… நேரம் போச்சுது. ஜானுவைக் கொண்டு போய்க் கெதியாய்ப் பள்ளிக்கூடத்திலை விட்டிட்டு வாடா…” என்று ஒற்றைக் காலில் நின்ற ராஜி அக்காவின் விருப்பத்தை நிறைவேற்றியதும் இவனே தான்!
‘இங்கு எல்லாமே இவன் தான்’ என்று நான் இங்குத் தங்கி நின்ற இரண்டு நாட்களில் நன்கு புரிந்துகொண்டு விட்டதனாலோ என்னவோ, இனம் புரியாதவொரு பாசம் அவனில் எனக்கிருந்ததை மறுக்க முடியவில்லை.
“இங்கை… பெரியம்மாவும் வந்திட்டா அக்கா இன்னு மென்ன நிக்கிறியள்..? மினக்கடாமல் ஏறுங்கோ” அவன் மீண்டும் அவசரப்படுத்தினான். நான் பயணப்பைகளைச் சைக்கிளில் கொழுவிவிட்டு, பின்னால் கரியரில் ஏறிக்கொண் டேன். அம்மா கொஞ்சம் பயந்து, தன் பெரிய உடலுடன் சைக்கிள் பாரில் ஏறி அமர்ந்த பொழுது சைக்கிள் மெல்ல அசைந்ததை இவன் ஜாடை காட்டிச் சிரித்தான்.
நாம் விடைபெற்றுக்கொண்டு புறப்படும் பொழுது மாலை 5.30 மணியாகிவிட்டிருந்தது.
தோட்டப்பாதையால் சைக்கிள் மெல்ல நகரத் தொடங்கி யது. குனிந்து அசையும் வாழை இலைகள் என்னைத் தழுவின.
“ராசன்…”
“என்னக்கா?”
“இதெல்லாம் புளிவாழை தானே?”
“இல்லை… கப்பலும் புளியும் கலந்து நிக்குது”
“எல்லாம் ஒரே மாதிரித்தானே இருக்குது! எப்பிடி வித்தியாசம் கண்டுபிடிக்கிறது?”
“அங்கை பாருங்கோ… இதிலையிருந்து ஆறாவதாய் நிக்கிற வாழை கப்பல் வாழை; அந்த வாழை இலையின்ரை கீழ்ப்புறத்தண்டைப் பாருங்கோ வெள்ளை நிறமாய் இருக்கும். புளி வாழையெண்டால் இலைத்தண்டு சிவப்பாய்த் தெரியும்” ராசன் வடிவாக விளங்கப்படுத்தினான். அவன் குறிப்பிட்ட வாழையைச் சைக்கிள் அண்மித்த பொழுது, அந்த வாழை இலையின் கீழ்ப்புற நடுத்தண்டுகளை நன்கு அவதானித்து அவனின் விளக்கத்தில் திருப்திப்பட்டுக்கொண்டேன்.
சைக்கிள் தோட்டவெல்லையைக் கடந்து ஒழுங்கைக்கு ஏறியது.
“என்னடா இது? தச்சடம்பன் பாதைகள் எல்லாம் இப்பிடிப் பள்ளமும் திட்டியும் தானோ?” சைக்கிள் பள்ளங் களில் விழுந்தெழும்பும் பொழுது நான் கேட்டேன்.
“ஏனக்கா உங்கட யாழ்ப்பாணப் பக்கம் இப்பிடியரு பாதையுமில்லையோ?” அவனின் அந்தச் சிரமமான கேள்விக்குப் பதில் சொல்லத் தைரியம் இல்லாததால், “ஒருக்கால்… யாழ்ப்பாணப் பக்கம் நீயே வந்து பாரன்” என்றேன் சிரித்தவாறே.
“வரத்தான் எனக்கும் சரியான ஆசையக்கா! ஆனால்… என்ரை அம்மா என்னை இங்கை கொண்டு வந்து விடேக்கை என்ரை பிறந்த தேதி, பிறந்த இடம், அப்பாவின்ரை பெயர் ஒண்டையும் சொல்லாமல் போயிட்டா. அதால அடையாள அட்டை எடுக்கேலாமல் இருக்குது. சும்மா வந்தனென்றால், ஆனையிறவில வைச்சு அமத்திப் போடுவாங்கள்… அது தான் யோசிக்கிறன்”
“ஏண்டா… கொம்மாவிட்டை ஒருக்கால் போய், எல்லாத்தையும் வடிவாய்க் கேக்கிறது தானே..?”
“அம்மா இருக்கிற இடம் தெரிஞ்சிருந்தால்… நான் ஆடிக்கலவரத்துக்கு முன்னமே போய்ப் பார்த்திருப்பன். பஸ்க்குள்ளை வைச்சு வெட்டிப் போட்ட பிறகுதான் ‘அம்மா’ எண்டவள் இன்ன இடத்திலை இருந்திருக்கிறாளெண்டு தெரியும்.” அவனின் குரல் தொய்ந்து போனது. எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்ட மெல்லிய அதிர்ச்சியிலிருந்து நான் மீண்டவாறே,
“ராசன்… உப்பிடியான பிரச்சினை உள்ளாக்கள் அடையாள அட்டை எடுக்கிறதுக்கு ஏதோ ஒரு வழி இருக்கத் தானே வேணும்… பொறு… நான் ஆரையும் விசாரிச்சுப் பாக்கிறன்…” நான் அவனின் சோகத்தை மாற்ற முயற்சித்தேன்.
“உண்மையாத்தான் சொல்லுறியளோ?”
“பின்னை சும்மாவே சொல்லுறன்…”
அவன் மீண்டும் உசார் நிலைக்கு வந்து விட்டது போல் எனக்குப் பட்டது.
சைக்கிள் ஒழுங்கையைக் கடந்து முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் ஏறி, ஐந்து மைல் தொலைவிலிருக்கும் மாங்குளம் ரவுணை நோக்கி விரையத் தொடங்கியது. அங்குத் தான் சித்தியின் ஒரு மகள் திருமணம் செய்து, புது வீட்டில் குடியிருக்கிறாள். அங்குப் போய்த் தங்கி நின்று, அதிகாலை யாழ்ப்பாண பஸ் எடுப்பது சுலபம் என்பதனால் தான், பொழுது இருட்டிக்கொண்டு வந்துவிட்ட போதிலும் எங்கள் பயணம் தொடர்ந்தது.
சைக்கிள் இப்போது ஒலுமடு பேராத்துப் பாலத்தை அண்மித்துக்கொண்டிருந்தது.
“பாலம் வருகுது… கொஞ்சத் தூரம் இறங்கி நடந்து போகவேணும்” என்றான் ராசன்.
“ஏண்டா… பாலம் உடைஞ்சு கிடக்குதே?” அம்மா கேட்டா.
“இல்லை… மரப்பாலம் தானே மேடும் பள்ளமுமாய்க் கிடக்குது… அதுக்குள்ளை சைக்கிள் ஓடேலாது” என்றான் அவன்.
சைக்கிள் வேகம் குறைந்து, மெதுவாகப் பாலத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.
“இங்கையக்கா..! யானையின்ரை லத்திக் கும்பம் கிடக்குது; நேற்றிரவு இவ்விடத்திலை யானை வந்து போயிருக்கு” என்றவாறே வீதியின் இடது ஓரமாகக் கிடந்த யானை லத்தியை அவன் சுட்டிக் காட்டினான். மெல்லிய பச்சை நிறத்தில் முடியில்லாத தேங்காய் மாதிரி உருண்டை உருண்டையாகக் காய்ந்து கிடந்த லத்திக் கும்பங்களை அவதானித்த நான், தலையை நிமிர்த்தியபோது ‘பகீர்’ என்றது. கறுப்பாக, பிரமாண்டமாக…
“டேய் ராசன்… யானையடா..!” அவசரமாகக் கத்தினேன்.
“எங்கை..?” என்றான் அவன் மெல்லிய பதற்றத்துடன்.
“அங்கையடா… அங்கை பார்…” வீதியின் இடதுபுறக் காட்டிற்குள், வீதிக்கு மிகவும் அண்மையாக, கரிய பெரிய யானையன்று தனித்து நின்றிருந்ததைச் சுட்டிக் காட்டி னேன்.
சைக்கிள் பாலத்தை அண்மித்து விட்டதால் சைக்கிளி லிருந்து மூவரும் இறங்கி, அச்சத்துடன் அடிக்கடி திரும்பித் திரும்பி யானையைப் பார்த்துக்கொண்டு அவசரமாகப் பாலத்தால் நடக்கத் தொடங்கினோம்.
“தனியனாய் வந்திருக்குது! போன வருசமும் இந்தப் பாலத்தடியிலை தான் ரெண்டு பேரை யானை அடிச்சது..!” என்று முணுமுணுத்தவாறே ராசன் நடையை மேலும் துரிதப் படுத்தினான். பயத்தினால் என் கைகளும் கால்களும் உதறல் எடுத்தன! நான் மெதுவாக ஓடத்தொடங்கினேன். சற்றுத் தள்ளி. எம்மோடு சமமாக யானையும் வந்து கொண்டிருந்தது.
சுமார் பதினைந்து யார்டு நீளமான அந்தப் பாலம் கடந்ததும் மீண்டும் மூவரும் சைக்கிளில் ஏறிக்கொண்டோம். சைக்கிள் நகரத் தொடங்கியதும், ராசன் புதுத்தெம்பு வந்தவனாக,
“இனிப் பயமில்லை! டேய்… கள்ளவடுவா… இங்கை ஏண்டா வந்தனி..? …வாறன் பொறு… ஆய்… யாய்…” என்று அட்டகாசமாகக் காட்டுக் கூச்சல் போட்டவாறே யானைக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டு சைக்கிளை ஓட்டினான். இதுவரை நடந்து வந்து கொண்டிருந்த யானை, நடையை மெல்ல நிறுத்தி, நின்று திரும்பி மரங்களின் இடைவெளியால் எம்மைப் பார்த்துக் காதுகளை விசுக்கென்று அடித்து ஒலியெழுப்பியது.
என் இதயம் ஒரு கணம் நின்று, பின் ‘படபட’வென அடிக்கத் தொடங்கியது.
“அது… அது… எங்களைத்தான் பாக்குதடா” நான் பயத்தில் நாக்குளறினேன்.
யானை இப்போ, பத்து யார்டு இடைவெளியில் நமக்குப் பின்னால், நாம் சென்று கொண்டிருந்த பாதையை அண்மித்து வீதிக்கு ஏறியது.
“ஐயையோ… றோட்டுக்கு ஏறிட்டுதடா… சைக்கிளை ஸ்பீட்டாய் ஓடு…” நான் என்னை மறந்து கத்தினேன்.
“சும்மா பயப்படாதேங்கோ அக்கா அது எதிர்க்காட்டுக் குள்ளை இறங்கிப் போயிடும்” என்றான் அவன் மெதுவாகத் திரும்பிப் பார்த்தவாறே.
இப்போ யானை எமக்குப் பின்னே சுமார் பதினைந்து யார்டு தொலைவில், நடுவீதியில் நின்று காதுகளை விசுக்கிப் பிளிறியது!
“டேய்… ராசன்… ராசன்…” நான் பயத்தினால் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கத்தத் தொடங்கிவிட்டேன்.
“அது போயிடும். நீங்கள் விழுந்து போடாமல் அப்பிடியே இருங்கோ” என்றவாறே சைக்கிளை இயலுமான வரை வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்தான் அவன். எதிர்க்காற்று வீசியதால் சைக்கிள் நகர மறுத்து அடம் பிடித்தது.
யானை இப்போ நம்மை நோக்கி வீதி வழியாக நடக்கத் தொடங்கியது.
“ஐயோ… எங்களிட்டைத்தான் அது வருகுது; ஐயோ… ராசன் நாங்கள் இறங்கி ஓடுவமடா…” என்று கத்தினேன்.
இப்போ சைக்கிள் ஆட்டம் கண்டது. அவனுக்கும் வியர்த்துக் கொட்டத் தொடங்கியதை, அவனது முதுகுப்புறம் எனக்கு உறுதிப்படுத்தியது. காற்றுடனும் பயத்துடனும் போராட முடியாமல் சைக்கிள் வளைந்து, திரும்பிச் சரிந்தது.
நான் சைக்கிளில் இருந்து குதித்து ஓடத் தொடங்கி விட்டேன். அவன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடத் தொடங்கினான். அம்மா கடைசியாக ஓடிவந்து கொண்டிருந்தா. மூவர் முகங்களிலும் மரணக்களை!
“அம்மா… கவனம் அம்மா…” நான் குரல் கொடுத்த வாறே ஓடிக்கொண்டிருந்தேன். அண்ணளவாக ஒரு ஆறு நிமிடங்களின் பின்னர் திரும்பிப் பார்த்த பொழுது, யானை எதிர்க்காட்டிற்குள் இறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. இப்போதான் மூவர் முகங்களிலும் பழைய களை பிறந்தது.
“அப்பாடா…” என்றவாறே மூவரும் நின்று ஒன்று சேர்ந்து கொண்டோம். மூச்சு வாங்கியது. பயம் மாறியபோது இனம் புரியாத சிரிப்பு வந்தது. விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டோம்.
பழையபடி சைக்கிள் மூவரையும் சுமந்து கொண்டு ரவுணை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
“அக்கா, ஒரு பொம்பிளை இவ்வளவு வேகமாய் ஓடுறதை இண்டைக்குத் தான் நான் கண்டனான்…”
“சும்மாயிரடா… எனக்கு இப்பவும் அந்த ‘ஷொக்’ போகேல்லை” நான் சிரித்தேன்.
“லா…லா…லலலா…லா…லா…” அவன் இனிய மெட்டில் மெதுவாகப் பாடலிசைத்தான்.
சைக்கிள் மாங்குளம் ரவுணைக் கடந்து, வீட்டினுள் நுழைந்து, முற்றத்தில் கிறீச்சிட்டு நின்றது.
வீட்டினுள் இருந்தவர்கள் வெளியில் ஓடிவந்து, மகிழ்ச்சி யுடன் எம்மை வரவேற்றனர். நானும் அம்மாவும் உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக யானைக்கதையை ஆரம்பித்தோம்.
ராசன் வெளிமுற்றத்திலேயே சைக்கிளுடன் நின்றிருந்தான்.
“ராசன்… நீயேண்டா நிக்கிறாய்? நல்லாய் இருண்டு போச்சு! அங்கை அம்மா காத்துக்கொண்டிருப்பா… நீ கெதியாப் போய்ச் சேர்” சித்தியின் மகள், வீட்டு வாசலில் நின்றவாறே வெளியில் எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.
“சரி…” அவன் தலையசைத்து விட்டு ‘கேற்’ வாயிலை நோக்கி நடந்து, பின் தயங்கி நிற்பது வாசல் கதிரையில் அமர்ந்திருந்த எனக்கு நன்கு தெரிந்தது.
“என்னடா? பிறகுமென்ன யோசிக்கிறாய்?” சித்தியின் மகள் வாசலோடு அமர்ந்தவாறே மீண்டும் குரல் கொடுத்தாள்.
“பாவம்! நல்லாய்க் களைச்சுப் போட்டான்…” நான் மனம் பொறுக்காமல் மெதுவாகக் கூறினேன்.
“உவன் உப்பிடித்தான்… கதை குடுத்தால், இங்கேயே மினைக்கெடுவான்; அங்கை போய் மாடெல்லாம் பட்டியில சேர்க்க வேணும்… அவன் போய்ச் சேரட்டும்” அவள் அவனை அனுப்பி வைப்பதிலேயே கண்ணாயிருந்தாள்.
அவன் திரும்பி எதையோ எதிர்பார்ப்பது போல் என்னைப் பார்த்தான். நான் மெல்ல எழுந்து, முற்றத்தில் இறங்கி அவனை அண்மித்தேன்.
“ராசன்… என்ன யோசிக்கிறாய்?”
மெதுவாக. ஆதர வாகக் கேட்டேன்.
“ஒண்டுமில்லையக்கா… நீங்கள் போய்விடுவியள் தானே?”
“ஓம்… அதுக்கென்னடா இப்ப?”
“இல்லையக்கா நீங்கள் போகேக்கை நான் வழியனுப்ப நிக்க மாட்டன்… அது தான்…”
“அதுக்கென்னடா… இப்ப வந்து வழியனுப்பி வச்சிருக் கிறாய் தானே?” நான் சிரித்துச் சமாளித்தவாறே கேட்டேன்.
“சரியக்கா… சுகமாய்ப் போயிட்டு வாங்கோ கடிதம் போடுவியள் தானே?” “சுகமாய்ப் போயிட்டு வாறதிலையும், கடித மூலமாய்க் குசலங்கள் விசாரிக்கிறதிலையும் எனக்கிப்ப நம்பிக்கை இல்லையடா!”
“அது சரியக்கா… முடியுமானளவு முயற்சி செய்யிறது தானே?”
“சரி… கட்டாயம் முயற்சி செய்யிறன்…”
“ஊர் நிலைமையையும் மறவாமல் எழுதுங்கோ காத்துக் கொண்டிருப்பன்…”
நான் ஆச்சரியமாக அவனைப் பார்த்தேன்.
“நான் சாகிறதுக்கிடையில ஒருக்காலாவது அந்தப் பக்கம் வருவன் தானே” அவனது வார்த்தையில் தெரிந்த உறுதி, பார்வையிலும் தெறித்ததை அரைகுறை ஒளியில் அவதானிக்க முடிந்தது.
“அவனின் அடையாள அட்டை பற்றி அவசியம் விசாரிக்க வேணும்’ நான் உள்ளூரத் தீர்க்கமாக நினைத்துக்கொண்ட போது, “ராசன் இன்னும் போகேல்லையோ..?” என்ற குரல் வீட்டுக்குள்ளிருந்து வந்து நம் செவிப்பறைகளில் அறைந்தது.
“போயிட்டு வாறனக்கா” அவன் அவசரமாக விடை பெற்றுக்கொண்டு சைக்கிளில் ஏறியபோது, இடுப்பிலிருந்து கற்றையாக நழுவிய கடுதாசிச் சுருளை, சட்டென்று பற்றிய வன் மீண்டும் உள்ளே தள்ளிச் செருகிவிட்டுக்கொண்டான்.
“என்னடா… அது?”
“கடுதாசிகள்…” அவன் மெலிதாகப் புன்னகைத்தான்.
“சிவப்பு அச்சாய்த் தெரியுது..?”
“நாளைக்கு பஸ் ஏறேக்கை சந்திச் சுவரிலை வடிவாய்ப் பார்ப்பியள் தானே…”
சட்டென்று அதிர்ந்துபோன நான்,
“டேய்… என்ன சொல்லுறாய்?” அவசரமாகக் கேட்டேன்.
“பிளீஸ்… அவையளுக்குச் சத்தம் போடாதையுங்கோ… நான் போயிற்று வாறன்” – மெலிதாகக் கூறியவன் தலையை அசைத்துவிட்டுச் சைக்கிளைத் திருப்பினான்.
வாய் திறக்க முதல் சைக்கிள் வீதியில் ஏறிக்கொண்டிருந்தது. அவனின் ஷேட் வியர்வையில் ஒட்டிப் போயிருந்தது. தலைமுடி கலைந்து பறந்து கொண்டிருந்தது! சைக்கிளின் பின் சிவப்பு லைற் வேகமாக நகர்ந்து கொண்டிருக்க, நான் ‘கேற்’ வாயிலில் நின்றவாறே உள்ளே திரும்பிப் பார்த்தேன்.
அவர்கள் சாதாரணமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
– 1986
– நிழல்கள் (சிறுகதைகளும், குறுநாவலும்), முதற் பதிப்பு: ஒகஸ்ட் 1988, உந்தன் புத்தக நிலையம், பருத்தித்துறை.
– 1993ல் ஈழத்தின் சிறந்த சிறுகதைகள் தொகுப்பான ‘வெள்ளிப் பாதசரம்’ தொகுப்பில் இடம்பெற்றது.
– நிலவுக்குத் தெரியும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2011, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.