கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2024
பார்வையிட்டோர்: 956 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மூளை முடிச்சிலிருந்து கால் கட்டை விரல்வரை பின்னிய நரம்புக் கோலத்தில் வால் நக்ஷத்ரம் சீறி யெழுந்து, பிரிக்குப் பிரி எரித்தபடி மண்டைக்கேறி புருவ மத்தியில் வெடித்தது. 

இது என்ன என் பூகம்பமா? 

மண்டையின் உள் கவானில் பல்லாயிரம் பொறிகள், பல்லாயிரம் வர்ணங்களில் அவன் மேல் குடையிறங்கின. தகதகப்பில் கண் இருண்டது. நினைவு தன் ஊன்றல் அற்றுப் போய், அந்தரத்தின் இன்ப பயங்கரத்தில் தத்தளிப்பு தாங்காது, ‘இதோ போனேன். இதோ இதோ இதோ, எனத்தானும் தப்பிக் கொண்டிருக்கையில் மேல் கவிந்த நக்ஷத்ரக்குடையின் நெருப்புச் சரங்களிலிருந்து அமுத தாரைகள் சொரிந்து வெள்ளம் வீங்கி, நினைவைத் தன்னோடு அடித்துச் சென்றுவிட்டது. 

இது என்ன காலம் அவிந்ததா? 

என் கண் அவிந்ததா? 

இந்த இருள் என் பிரமையா? 

அல்ல இதுதான் உண்மையா?

இப்போது உலக உற்பவமா? 

அல்ல அதற்கும் முன் அதையும் தன்னுள் அடக்கிய கர்ப்பமா? 

பூமி என்னைத்தாங்கிய தருணமே தகர்ந்து இது என் ப்ரளயமா? 

பாம்புப் படம் போல் அலைகள் மீண்டும் மீண்டும் தலை தூக்கிச் சீறியெழுந்து விசிறி ஆடிக் குலைந்து அவன் மேல் சரிந்தன.

இதென்ன அனலுக்கு 
ஆஹூதி ஆனதற்குப் பின் 
புனலில் மூழ்கிப் போனேனா? 

ஆயினும் நினைவு இன்னும் தன் குமிழி குலையவில்லை சாறு பிழிந்து எறிந்த சக்கையாய், அலைகள் அலைத்த வழி நினைவு மிதக்கும். 

இன்ப அசதியில் 
அச்சமய மயக்கத்தில் 
மயக்கம் தந்த இருள் காட்டும் மருளில்
மண்டையுள் கண்ட வான விளிம்போரம்
ஒரு தோற்றம் அலை நடுவே படர்ந்தது,
முகம் தெரியவில்லை. 
முதுகுதான் காட்டிற்று. 
அதையும் அலையில் அவிழ்ந்து நனைந்து 
அடையாய்க் கனத்த கூந்தல் அடைத்தது; கிண்ணம் 
வழிய நிறைந்த திரவத்தின் சாயம் 
கிண்ணத்தின் கண்ணாடியை மறைத்தாற் போல் 
முகம் லேசாய்ப் பக்க 
வாட்டில் திரும்பிற்று. 
நெற்றியின் கோடு இறங்கி 
மூக்கின் கூர்ப்பில் முனைத்து 
வாயில் வழிந்து 
புன்னகையின் வில்லில் வளைந்து 
வலது தோள் குமிழில் ஏறிக் 
கொண்டிருக்கையிலேயே 
உருவக் கோடு, வரைவு கலைந்து, 
இருளோடு இருளாய் 
அலையோடு அலையாய்க் கரைந்து விட்டது. 

என்ன ஆச்சர்யம்! இது நான் நேற்று மாலை ஆபீஸிலிருந்து திரும்பி வருகையில் – அவள் உடல் ஒரு தரம் குலுங்கி நெஞ்சு விம்மிற்று. 

யார் இப்படித் தன் தோளைக் குலுக்குவது? 

“முழிச்சுக் கோங் கோன்னா !” 

இமைச் சிமிழ்கள் மணமிலாது திறந்தன.
அவனுக்கு இன்னும் போதை கலையவில்லை.
பொன்னா என்ன பவுடர் உபயோகிக்கிறாள்?

இந்த நெருக்கத்தில் பொன்னாவின் கன்னங்களில் மல்லி கமழ்கிறது. இல்லை, பொன்னாவின் கொண்டைச் சரம் மலர்ந்ததா ? இல்லை பொன்னா, உன் வேர்வை இப் படி என் நெஞ்சுவரை மணக்க வெறும் உன் பூச்சும் பூவால் மட்டும் ஆகாது. இது உன் இளமை அல்லது என் ஆசை.

திடீரென பொன்னா அவன் கன்னத்தில் தன் கன்னம் அழுத்தி மீண்டாள். 

‘அப்பா! இது கன்னமா ? சப்பாத்தியா?’ தன் இடது கன்னத்தைச் செல்லமாய்த் தடவிக் கொண்டாள். “ரத்தம் வந்துடுத்தா பாருங்களேன் !” 

எதிரே பீரோ கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் பார்க்கப் கொண்டான். கண்ணாடி நல்ல கண்ணாடி. பார்க்க அலுக்காத கண்ணாடி. கலியாணத்தில் அவளு டைய ஆபீஸ் சிநேகிதிகளின் கூட்டுப்பரிசு. 

“பொன்னா உன்மோவாய்க் குழி இப்படி இவ்வளவு அச்சாய்ப் பிளந்து இருக்கிறது ! முகத்தைச் சரிபாதியாய் தனித் தனியாய்ச் செய்து இணைத்தாற் போல்! 

“Factory Assembly யா?” 

அவள் கவனம் இன்னும் கண்ணாடியிலிருந்து மாறவில்லை. 

‘இருக்கலாம். எவ்வளவென்றுதான் அவன் தனித்தனி யாய்ப் பண்ணுவான்!”

பொன்னா தன் மோவாய்க் குழியைச் சிந்தனையாய்த் தடவிக் கொண்டாள். 

இருந்தாலும் முகத்துக்கு முகம் வேறாய்த்தானிருக்கு! அது எப்படி? ஒண்ணுக்கொண்ணு எவ்வளவு அச்சாய் இருந்தாலும் ஏதோஒரு இம்மி பிசகில் முகத்துக்கு முகம் தனியாத்தான் இருக்கு!’ 

“அதுதான் சிருஷ்டியின் பெருமை!” 

“இதுவும் பிறவி மருத்தான்!” பொன்னா தன் மோவாய்ப் பிளவைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள். 

“அதனால்தான் அவ்வளவு நன்றாயிருக்கு!” 

“ஏதேது,இன்னிக்குப் பேச்சு என்னென்னவோ புதுசு புதுசா வரதே! பேத்தலா! அல்லது நமக்கு மணமாகி இன்னும் மூணு மாதம் ஆகலேன்னா?’ 

“மூணு மாதம் என்ன கண்ணு?” 

”மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்!” 

புன்னகை புரிந்தான். “இல்லை பொன்னா, உன் அவலக்ஷணம் கூட எனக்கு அழகாய்த் தானிருக்கும்”. 

“இது என்ன விடுகதை?’ 

“இல்லை, பிறவி குரூபத்திற்கும் கவர்ச்சி உண்டு.”

அவள் முகம் சற்று விழுந்தது. 

“ஆசை மீறிப் போனதால் என்னைப் புகழறேளா? அவமானப்படுத்தறேளா?” 

நான் என்ன சொல்ல வந்தேன்? எனக்கே தெரிய வில்லை. 

இருவரும் மெளனமாயினர். வேளையின் நளினத்தில் மேகம் படர்ந்துவிட்டது. இருவருமே உணர்ந்தனர், அது நெஞ்சை அரித்தது. புரியவில்லை. ஆனால் அரித்தது. 

எவர் வீட்டிலோ கடியாரம் ஒரு தரம் அடிக்கிறது. ஒரு மணியா, அரை மணியா? பழுக்கக் காய்ச்சி வார்த்த உருக்குப்போல் நாதம் செவியுள் இறங்குகையில் செவி சுட்டது போலவே ஒரு ப்ரமை. 

தெரு முனையிலிருந்து ஒரு ஆட்டு மந்தையின் கனைப்புகளும், குளம்போசையும், கழுத்து மணியின் அலறல்களும் நெருங்குகின்றன. இந்தத் தெருவில் இது ஒரு கண்ணராவி. ஒரு நாள் விட்டு ஒரு நாள், நள்ளிரவில் பலிகளின் ஊர்வலம். நாளைக் காலை தனக்கு நேரப் போகும் கதியைப் பற்றி இதுகளில் ஒன்றுக்கேனும் ஒரு. இம்மி சந்தேகமேனும் இப்போது தட்டியிருக்குமோ? 

ஆனால் த்ரோகம் தெரியாமல் இருப்பதே தேவவை?

அவ்வழி எண்ணத்தின் ஓட்டத்தினின்று மனம் மருண்டு அவனிடம் செல்லமாய் நெருங்கிக் கொண்டாள். 

“ஆமாம், அது யார் தரிசனி?” 

“…?”

“என்ன, பூலோகமா, கைலாசமான்னு முழிக்கிறேள் கண்ணில் மண்ணைத் தூவப் பாக்கறேள்? உங்கள். வாயிலிருந்துதானே அந்தப் பேர் வந்தது?” 

“நானா?” 

“ஆமாம். நீங்களேதான்! அது யார் தரிசனி? எனக்கு அப்பவே தோணித்து, என்ன அழகான பேர்!” 

தரிசனி 

தரிசனி 

தரிசனி 

மண்டையில் பாய்ந்த ரத்தக் குபீரில், உடல் பூரா அந்த ஊடுருவல் தாங்க முடியவில்லை. தேன் கூடு உடைந்து போனாற்போல், உடற் கண்கள் அத்தனையும் திறந்து கொண்டு ரத்தம் பொங்கி விட்டதா? 

திகில். 

தொண்டையின் அடிவாரத்தினின்று நுனிவரை நாறு கிழித்தாற்போல், நாக்கு நடுவே ஒரு தித்திப்புக் கோடு. குமட்டல். 

“என்ன வாயடைச்சுப் போச்சு?” 

மெய்யாகவே எனக்கு நாக்கு எழவில்லையே! என்னுள் என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது! திகைப்பில் இரு கைகளும் விரிந்தன. 

“என்ன, என்னிடம் சொல்லக் கூடாத ரகஸ்யமா?” 

தொண்டையினின்று ஒரு தேம்பல் கிளம்பிற்று. அவன் விழிகள் கலங்கின 

“நான் ஒன்றும் அறியேன்.” 

நாக்கு மீண்டதும் கண்டது திரும்பத் திரும்ப: 

“நான் ஒன்றும் அறியேன்!” 

“நான் ஒன்றும் அறியேன்!” 

“நான் ஒன்றும் அறியேன்!”

“எனக்கு தெரிஞ்சு போச்சு.என்னவோ மறைக்கப் பார்க்கறேள்.” 

“நான் ஒன்றும் அறியேனே!” 

“நீங்கள் சொன்னால் நான் நம்புவேனா? நீங்கள் மறைச்சாலும் உங்களைத்தான் தூக்கம் காட்டிக் கொடுத்து விட்டதே! நான் காத்திராமல் போனேன். இருந்தால் இன்னும் கொஞ்சம் விவரம் கிட்டியிருக்கும். ஆனால் நானே எழுப்பிவிட்டேன். தூக்கத்தில் பேத்தறவாளைக் கண்டாலே எனக்குப் பயம்.” 

“நீ என்னை எழுப்புமுன் நான் ஒரு கனவு கண்டேன். கனவு என்று கூட எப்படிச் சொல்வேன்!” 

“எண்ணம் என்று சொல்லிக் கொடுக்கட்டுமா? பழைய ஏடு என்று அடி எடுத்துக் கொடுக்கட்டுமா?” 

அவள் குரலில் சிந்திய கேலியை அவன் வாங்கிக் கொள்ளவில்லை. 

“சற்று முன் நம் வெறி தணிந்த சோர்வு மயக்கத்தில் ஒரு தோற்றம் தெரிந்தது. முகம் தெரியவில்லை. முதுகு தான் காட்டிற்று. அதையும் அவிழ்ந்த கூந்தல் அடைத்துக் கொண்டது.உடனே மறைந்துவிட்டது.”

“யார் அது?”
 
“அதுதான் தரிசனி என்று என் வாய் மூலம் நீ கேட்ட தாக நீ சொல்லி நான் தெரிந்து கொண்டேன்.” 

இதை நான் நம்பணுமா?’ 

அவள் கேள்வி அவன் செவிக்கெட்டியதாகத் தெரிய வில்லை. அவனிடமிருந்து பதில் வரவில்லை. 

தலையணை மீது அவன் முகம். ஏதோ ஒரு தினுசில். தலையணை உறை மீது தைத்த சித்திரம்போல், தலையணையோடு இழைந்திருந்தது. இன்னும் கலையாத கனவில் கண்கள் மூடியிருந்தன. கனவில் கண்டு, வெளியில் விண்டுதர இயலாத ரகஸ்யம் உதட்டில் புன்னகையாய்ப் பூத்து, முகமே மெதுவிட்டிருந்தது. என்றுமே அந்த நெற்றியில் ஒரு வரி- கன்னத்தில் ஒரு அம்மை வடுக்கூட கிடையாது ஒரு ஆண் முகம் அப்படி ஒரு பொளிசல் கூட இல்லாது இருப்பது அவளுக்கு வியப்பாய் இருந்தது. அந்த வகையில் அந்த முகம் நம்பும்படியில்லை. வங்காள பாணியில் தீட்டிய ஓவியத்தில் தவத்தில் அமர்ந்த சிவத்தின் முகம். முடியில் ஒரு கங்கைதான் பாக்கி. கங்கையின் வாயிலிருந்து அருவியின் பீச்சல்தான் பாக்கி. 

அந்த உருவகம் மனதில் எழுந்ததும் அவளுக்குச் சிரிப்பு பீறிட்டது. அவள் வாயின்று அதன் கண்ணாடிச் சுக்கல்கள் உதிர்ந்ததும் அவளுக்குத் ‘திக்’ கென்றாகி விட்டது.ஏதோ பீதி. அவனை உற்று நோக்கினாள். அவன் முகம் மாறவில்லை. ஆழ்ந்த தூக்கமா? 

தரிசனியில் அவசமா? 


மேஜை மீது குவிந்து விட்ட வேலை மீது மனம் குவிய மறுத்தது. தஸ்தாவேஜுக் கட்டுகளில் எழுத்துக்களும் எண்களும் வெறும் அர்த்தமற்ற கோடுகளும் கீறல்களு மாய்த் தத்திக் குதித்துப் பச்சைக் குதிரை விளையாடின. 

நானா? 

என்னிலிருந்தேயா ? 

இல்லையென்றால் இல்லை. 

உண்டு என்றால் உண்டு. 

எனும் சூத்திரத்தின் இயக்கமாய், நினைக்க மனம் ஒன்று வேண்டும். இல்லாவிடில் நீ எங்கிருந்து வந்தாய்?

கனவுகள், நம் ரகஸ்ய ஆசைகள் தம் நிறைவு காணத் தேடும் ஒரு வழியென்று கொண்டால், நீ என் எந்தப் பிறவியின் எந்த ஆசை ? 

ஒவ்வொரு ஆசையும் ஒரு பிறவி. 

ஒவ்வொரு பிறவியும் ஒரு ஆசை; பிராணனின் பிம்பம். 

ஆதி மண்ணின் துல்லியத்தில் ஒற்றியெடுத்த முதற் பிம்பம். 

வாழ்வே கேள்வியாய், உயிரின் மூச்சே அர்ச்சனை யாய், பிம்பம் பிம்பமாய்க் கடைசல் ஏறி, இன்னமும் தன் ஸ்தூலம் காணத் துடிக்கும் தவிதவிப்பின் குவிப்பாய், தரிசனி ஆனாயா? எத்தனை நாட்கள் எத்தனை ஜன்மங்க ளாய் என் பூர்வ சந்ததியின் உள் பிரக்ஞையின் அடிவாரத் தில் மூழ்கிக் கிடந்து, என்னில் உன் முகத்வாரம் கண்டு புறப்பட்டாய்? 

அத்தர் பிறந்ததுபோல். 

அபிஷேக தீர்த்தத்துடன் ஆண்டவன் முடியிலிருந்து அடித்துக்கொண்டு வரும் மலர் போல். 

பொருளின் உருவெடுப்பின் முன் சொல்லின் பராக்கு. நெஞ்சப் புதைவில் உன்னைப் புரிந்துகொண்டேன்.

ஆனால் தெரிந்துகொள்ள முடியவில்லை. 

உன்னைத் தெரிந்து கொள்ளும்வரை, எனக்கு வாயி ருந்தும், நீ எனக்கு ஊமை கண்ட கனாத்தான். 

கண்டது நான். ஆனால் உன் பெயர் சொன்னது. பொன்னா. அதுபோல், ஒரு வேளை உன் முகம் பார்த்திருந்தால், உனக்கே நீ யார் என்று சொல்வேனோ என்னவோ? 

ஆனால் நீ முகம் காட்டவில்லை. முதுகுதான் காட்டினாய். 

எனக்குத் தோன்றுகிறது. உன் முதுகும், அதன் மேல் உன் கூந்தலின் இருளும், நான் உன் முகம் காண, நீ எனக்குக் காட்டிய விளிப்பா? 

உன் பெயரைத் தந்தாய், சைகையும் காட்டினாய், அப்படியும் உன்னைத் தெரிந்துகொள்ள இயலாது நான் தவிக்கும் வேதனைதான் உன் ரகசியமோ ? என் அந்தரங்க ஆசையோ? 

விழிகள் துளும்பின. 

தரிசனி. 

கண்ணீரின் ஸ்படிகம். நாம ஜெபமனிகளாய்க் கன் னங்களில் உருண்டு உதிர்ந்து, எழுந்து கரைந்து, உலகம் அழிந்தது. 

இப்படியும் நேர்வது உண்டோ? 

அடுப்பை ஊதி ஊதிப் பொன்னாவுக்கு முகமே ஊதி விட்டது. 

பொன்னா. 

புகை கண்ணை அடைத்துக்கொண்டு மூச்சுத் திணறிற்று. நெஞ்சு எரிந்தது. 

-பொன்னி. 

இன்றைக்கு விறகும் வேடிக்கை காட்ட வேளை பார்த் துக் கொண்டதாக்கும். 

அதற்குக்கூட என்னைப் பார்த்தால் இளப்பமாயிருக்கு. 

-பொன்னு. 

இதுவரை அடுப்பில் ஊதியிருக்கும் மூச்சில் ஊரையே எரித்திருக்கலாம். 

ஆனால் ஜ்வாலை எழும்பவில்லை. 

தானே உள் வெந்தாள். 

  • பொன்னாயி. 

பொன்னம்மா. 

இதென்ன மூச்சுக்கு மூச்சு எனக்கே என் பேர் உருவேற் றம்? என் தஹிப்பில் என் பேர் புழுவாய் நெளியறதே! ஐயோ, தாங்க முடியல்லியே ! 

பொன்னுத் தங்கம். 

வீட்டுக்கு ஒரே பெண். செல்லப் பெண். அஞ்சு அண்ணன்மாருக்கப்புறம் அருமைப் ‘பொன்னுத் தங்கை’. 

பொன்னக்கா. 

அவளுக்கு முன் பிறந்தவன் வேணுமென்றே அவளை அக்கா’வென அழைப்பதற்கு அவள் கோபிக்கும் போதெல் லாம்: 

”அம்மாவுக்கப்புறம் அப்பா உள்பட எங்கள் அத் தனை பேருக்கும் எல்லாமே நீதானே, – குழந்தை, அம்மா அக்கா, அங்கச்சி!” 

அப்படி அவன் கெஞ்சுகையில் அவனுக்கு மூச்சு லேசாய்த் திணறும், 

கோபுவுக்கே குழந்தைபோல் தாளாத மனசுதான். அம்மா செல்லம். 

கொழு கொழுவென்றிருந்தவன், அம்மா செத்துப் போனதும், பக்கென்று ஓட்டை விழுந்தமாதிரி எப்படி வாங்கிப் போயிட்டான்! ஒரு சமயம் அரை சமயம் எச்சில் நுரையில் சிவப்பு நரம்பு தெரிந்தது. 

”ஆபத்து ஒன்றுமில்லை. Rest, Rest, Rest தான் Cure!” என்று டாக்டர் தைரியம் சொன்னாலும், கோபண்ண வுக்குப் பழைய உடம்பு வரவேயில்லை. வரவும் வராது. 

அவள் கணவன் வீட்டிற்குக் கிளம்பியதும், ரயிலடியில், ஜன்னலுக்கு வெளியே நின்றபடி, “நீயும் போனபின் இங்கே என்ன இருக்கிறது!” என்று மூச்சு தேம்புகையில், அவள் தொண்டையில் எழுந்த அடைப்பு என்றும் மறக்காது. அந்த முகத்தை அப்படியே இழுத்துத் தோளில் அழுத்திக் கொண்டால். அவன் குழந்தை; அவள் தாய். 

ஆனால் அம்மா, ஏதோ பெயரும் தெரியாத மூணு நாள் ஜுரத்தில் திடீரென்று போனதும், எல்லோருக்குமே காலை வாரித்தான் விட்டது. அதுவும் தக்க பெண் துணை வேறு இல்லாத இடத்தில் – அவளுக்கு இன்னும் பாவாடை சட்டைப் பருவம் மாறவில்லை. அவரவர் தம் தம் நிலை மீள்வது சுளுவாயிருக்கிறதா? 

ஆனால் மீளாமல் இல்லை. துக்கத்திலிருந்து மீளத் தான் மீள்கிறோம். இல்லையென்கவில்லை. அம்மா போனவிடத்தில் சமையற்காரப்பாட்டி சம்பளத்துக்கு வருகிறாள்.பாட்டிக்கு இருந்தாற் போலிருந்து கொஞ்ச நாட்களுக்குப் பிறகு காசி நினைப்பெடுத்துக்கொண்டு நின்றுவிட்டால், ஒரு மாமி வருகிறாள். 

“தள்ளி வெச்ச ஆம்படையான் என்னைத் திரும்ப அழைக்கிறான். எனக்கு செலவு கொடுங்கள்” என்று கேட்டால், அவள் வாழ்க்கைக்குக் குறுக்கே நிற்க முடியுமா?

மாமி போன பிறகு ஒரு பையன் வருகிறான். 

அவன் வெந்ததும் வேகாததும், உண்டையும் உருளையு மாய்ப் பண்ணிப் போட்டதையும், ‘கண்டேன்.’ ‘கண் டேன்’ என்று உண்கிறோம். 

“எல்லோரும் போட்டதைச் சாப்பிடுங்கள், சொல்லி விட்டேன். நீங்கள் ஏதேனும் மூச்சு விட்டேளோ, கேசவன் இன்னி சாயங்காலமே பெட்டிம் படுக்கையுடன் கிளம்பி விடுவான். எனக்கு Hotel De Dwarakaவில் இடம் கிடைச்சுப் போச்சு சார் 8 Hours duty. Weekly One Day off Salary + 2 meals + 2 டிபன் + வாரம் ஒரு எண்ணெய், தவிர Over time என்ன, அதுதானே பாடம், கேசவா ? அரிசியாய் வாங்கிப் போட்டதை மண்ணாய் ஆக்கிப் போடுகிறான். நானே தின்கிறேன்; உங்களுக் கென்ன, வாய் கல்லை ஜரிக்கிற வயதில்?” 

அப்பா அப்படி வேடிக்கை பண்ணுகையில், ரஸக் கரண்டியுடன் பந்தி நடுவில் நின்றபடி கேசவனும் எல்லோருடனும் சேர்ந்து சிரிக்கிறான். 

எப்படியேனும் துக்கம் மறக்க, எப்படியேனும் சிரிப்பு, ஏதேனும் வழி, வெளியூர் போகிறோம்; வேடிக்கை பார்க் கிறோம். திரும்ப வருகிறோம். 

துக்கம் மறக்கிறது ; ஊசியாய்த் தேய்ந்த உடம்பில் சதை பிடிக்கிறது. 

“என்ன கேதா, பொன்னு கொஞ்ச நாளாய் மேனி ஒரு தினுசாய் மினு மினு என்கிறாள், இல்லை ?” 

“அது தங்க ஊசிடா, தினமும் கண்ணில் குத்திக்க றோமே, உனக்கு இன்னமும் தெரியவில்லையா ? இதோ பார், என்னை அடிக்க வரான் : இல்லேடி பத்ரகாளி, இல்லேடி!” 

ஒரு கையில் ஒரு செருப்பு ஏந்தி, ஒரு கால் வெறுங் கால், மறுகால் செருப்புடன் விந்திக்கொண்டே, நாற் காலிக்கும் சோபாவுக்குமாய் வளைய வளைய அவனைத் துரத்துகையில் கன்னத்தில் கோபக் கண்ணீர். வாயில் சிரிப்பு. இப்போ நினைத்தாலும் தன்னை அறியாமலே வாயில் புன்னகை காண்கிறது. 

இடக்குப் பேச்சில் அப்பாவுக்குக் கேது இடது கண், வலது கண்தான். ஆனால் அவன் சொன்னத்தில் பிசகு; இல்லை. 

மாவடுவைக் கடித்தாற்போன்று, வெடுக்கு வெடுக் கெனப் பேச்சில் ஒரு துடுக்கு. தொட்டதற்கெல்லாம் செவி மடல் செவந்து, மூக்கு நுனி துடிக்கும் கோபம். அண்ணன்மார் அத்தனைபேரையும் “QUITLIT”, ‘போடா’. கேதாரியைக் ‘கேது “, ராகவனை “ராகு” அப்பாவைக்கூட நீ தான். யாரையும் தூக்கியெறியும் Cusa. Don ‘t Care. 

அப்பாவுக்கு அவள் “பொன்னுத்துரை” 

பெயரின் அன்பு இன்பமாயிருந்தாலும், அதில் ஏதோ சிலாம்பு குத்திற்று. 

“என்னப்பா, வர்க்கத்தையே மாத்திட்டே?”

அப்பா பத்திரிகைமேல் ஓடிய கண்கள் மாறாமலே:

“இந்த நாளில் எது நடக்கவில்லை ? அதுவும்தான் நடக்கிறது!” 

“பொன்னு பெண்ணாவா வளர்கிறாள் ? என்று மற்றவர் பேசிக் கொள்வதும், காதுக் கெட்டாமல் இல்லை. 

‘Don’t care’. 

ஆனால் அதற்கென்ன செய்வது? தாயில்லாக் குழந்தை. அதிலும் கடைக் குட்டி. விதை விழுந்த இடத்தில், விட்ட வேரின் கெட்டிக்கேற்றபடி முளைத்த செடி போல், தாயின் பயிரும், பதியமும், வேலியும், பதியமும்,வேலியும், இல்லாது வளர்ந்தால் அப்படித்தான். ஆண்களுக்கு நடுவே, ”நீ குடுமியைத் தட்டி முடிந்தால், நான் கொண்டையை எடுத்துக் கட்டிக்கறேன் : உனக்கு நான் தோற்றேனா?” என்கிற ரீதியில் வளர்ந்தால், அப்படித் தான். அதுவும் அவளுக்கே தெரிந்தது. 

முதலில் இந்த நாளில் குடுமி ஏது? 

ஆனால் கொண்டையும் ஏது? சவுரியும், கொண்டை போன்ற கலவடையும் தான். 

எதிலும் மெய்யென்று ஒன்று உண்டு என்பதே மறந்து போனவரை போலி பெருகிப் போன வாழ்நாள். அதன் சூத்திரம் : 

Don’t care. 

முதல் சூடு சரியானபடி விழுந்துவிட்ட தோஷம், நெருப்பையே மறுத்து, சூழ இருந்தவர் அவர் சொல்லுக்கு எதிர்ச் சொல் இல்லாது, செல்லம் காட்டிக் காட்டி மேலும் மேலும் அவள் மேல் நெய்த இன் மொழிக் கூட்டில் இயங்கி இயங்கி, எதையும் விரும்பிக் கேட்கும் தேவையே அற்றுப்போய், உலகமே தனக்குரிய கப்பமாய் மடியில் விழுந்துவிட்ட பட்சியாய்த் தோன்றிய சூழ்நிலை யில் அவள் மொழியறிந்த நாளிலிருந்து, ‘Don’t care’க்கு அடுத்தபடி ‘bore’ என்ற வார்த்தையை அர்த்தத்தின் முழுச்சுமையோடு உணர்ந்தாள். 

“மணி அய்யர், (கேசவன் போய் வருடக் கணக்காச்சு) இன்னிக்கென்ன டிபன்? கேசரி, பஜ்ஜியா? bore!” 

“இன்னிக்கு என்னத்தை உடுத்திக்கலாம்? ஜவுளிக் கடையையே பிரிச்சுப்போட்டாலும் bore ஆய்த்தானிருக்கு!” 

“கேது, இன்னிக்கு Paradise இல் என்னடா ப்ரோக் ராம்? அதுவேதான் தொடர்ந்து ஓடறதா? bore!” 

“ராகு, இன்னிக்கு சபாவில் கச்சேரியா? டான்ஸா? உன் favourite பித்துதான் பாடறதா? ஹாலையே வாங் கிட்டையா? உனக்குத்தான் பிடிக்கும், படு bore!” 

“அப்பா இன்னிக்கென்ன கிழமை? இப்பத்தான் புதனா? ஐயோ, இந்த வாரம் போக இன்னும் மூணு நாள் இருக்கே!” 

“ஏன் மூணு நாளைக்கப்புறம் ஏதாவது ப்ளான் போட்டிருக்கையா?” 

“இல்லேப்பா, அது தெரிஞ்சால்தான் தேவலையா? ஒரே bore அடிக்கிறதேப்பா. எங்கேதான் போவது?” 

சதுப்பில் கட்டிய கட்டடம். 

காலை, பல் துலக்கும் வேலைக்கு, சமையலறை நிலை வாசற்படியில் சுண்டு விரலால் நகத்தகலத்திற்கு மண் தெரிந்தது.பால் காய்ந்து காப்பி கலக்கக் காத்திருக்கும் நேரத்திற்குள், கால் பந்தளவுக்குப் பெரிதாய், அசிங்க மாய், பயங்கரமாய் வீங்கிப்போன கரையான் புற்று. 

தெவிட்டலின் குமட்டல். 

காது அறத் தொங்கும் செட்டி நாட்டுத் தோடு போல் கழுத்தில் கட்டிக் கல்லாய்ச் சுமக்கும் நாட்கள். 

படிப்பு முடிந்ததும் வேலையில் அமர்ந்தாள். நாளொரு அணியாய், ஏதேனும் சாக்கில் அண்ணன் மாரும், அப்பாவும் மேலே தங்கக் கவசமாய்ப் பூட்டிக் கொண்டிருக்கையில் அவள் வேலை செய்து கூலி கொண்டு வரத்தேவையே இல்லை. ஆனால் யாரேனும் பொழுதுக்கு ஒரு வழி சொல்லுங்கள்! 

ஆனால் எதுவுமே அதன் புதுமை பூக்காத வரை தான். உடனே, நாருடன் மயிரில் சிக்குண்ட நேற்றைய மலர்ச்சரம் போல், அதன்மேல் சீற்றம்தான் எழுகின்றது. மயிர்க்கால் போனாலும் பிய்த்தெறியத்தான் தோன்று கிறது. லகுவாய்க் கழற்றப் பொறுமையில்லை. நேற்று மணம் தந்ததற்கு நன்றியில்லை, வாடலைக் கண்டாலே திகில். ஆண்டே பழகிப்போய், வளைந்து கொடுத்து அனுபவிக்கத் தன்மையில் இணக்கமில்லை. வேரில் ஆழமில்லை. 

வேளை மூலையில் அலுப்பு, தன் கபடச்சிரிப்புடன், அவள் கையும் ாலுமாய் கட்டப் பட்டுக் கயிறுடன் காத்திருந்தது. அதன் அணைப்புக்குப் பயந்து, அடுத்து அடுத்து மாறுதலைத் தேடி, அதில் தஞ்சம் புகுந்தாள். உண்மையில், அவள் தன்னிடமிருந்து ஓடிக்கொண்டேயிருந்தாள். 

ஆகவே ஒரு நாள் பிற்பகல், அவள் டொமாட்டோ கலர் நைலான் புடவை ஒன்று புதிதாய் உடுத்திக் கொண்டு இடுப்பில் சரிப்படுத்திக் கொண்டே மாடிப் படி ‘திடு திடு’வென இறங்குகையில், மணி அய்யர்! இன்னிக்கென்ன டிபன்?” என்று கூவியதும், சமையலறை யிலிருந்து அவர் மணிக் குரல், ”கேஸரி! பஜ்ஜி!” என்று எதிர் கூவியதும், உள் பொங்கிய உவகை சிரிப்பாய்ப் பீறிட்டது. 

அடுப்பங்கரையிலிருந்து மணி அய்யர் வெளி வந்தார். ஆள் சரியான உருட்டுக் கட்டை, மார்பிலும் முதுகிலும் மயிர் அடர்ந்து சுருண்டது. ‘மொச மொச வென ரோம ரிஷி! 

“இன்னிக்கு டிபன் உனக்கு bore அடிக்காதுன்னு எனக்குத் தெரியுமே! உனக்குப் பிடிக்காவிட்டாலும், பெண் பார்க்க வரவாளுக்கு இந்த டிபன்தான் ஸம்பிரதாயம்!” 

விஷமக்கார மனுஷன். 

ஏழைக் குறும்பன். 

விழியிலிருந்து சதையை உரித்தாற்போல் கண்ணுக் கொரு பச்சை. உலகம் ஒரு பளிச்சு. அதுவே உடலுக்கும் மனதுக்கும் ஒரு தென்பு. கூடவே, “இது இன்னும் எத்தனை நாளைக்கு?” என்ற பயம் தலைக்காட்டி னாலும், இப்போதைக்கு change இருக்கோன்னோ! 

இந்த நாளில் பெண்ணானாலும் சரி, பிள்ளையா னாலும் சரி, யாருக்குத்தான் சுருக்க கலியாணம் நேர்கிறது. காலத்தையும், ஆபீஸில் சில சினேகிதிகளின் கதியையும் உத்தேசித்தால், அதிர்ஷ்டம் அவள் பங்கில் தான் இருந்தது. 

அவருக்கும் பெற்றோர் இல்லை. நெருங்கிய உறவினர் யாருமில்லை. அந்த முகத்தில் தெரிந்த சாந்தம், நெஞ்சின் அலைகளின்மேல் எண்ணெயை ஊற்றினாற்போல் ஒரு இதவு தந்தது. முழுக்க முழுக்க இவர் எனக்கேதான். இவரை ஏற்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். 

இந்தக் கலியாணம் கூடாமல் இருந்தால், இன்னும் வேளை எட்டப் போயிருந்தால், என் அலுப்பு முற்றி என்ன ஆகியிருக்குமோ? 

“என்னப்பா, இன்னும் எத்தனை நாள் என்னை இப்படியே வைத்திருப்பதாய் உத்தேசம்? யாருக்கேனும் சட்டு புட்டுன்னு முடித்து வைத்து, என்னை அனுப்புங் களேன்!” என்று கேட்டு, என் பெண்மை பிசகும் தருணக் கோட்டில் தவித்திருப்பேனோ? 

ஆனால் அதெல்லாம் பற்றி இப்போ என்ன? ஆசை தப்பிச்சாச்சு.”அத்தைக்கு மீசை முளைச்சால்-” என்கிற ரீதியில், பயங் கழன்று, இப்போதைய நெஞ்சு நிறைவில் நினைப்புக்கு ஒரு பொழுது போக்காச்சு. என்றேனும் ஒரு நாள் அவரிடமே சொல்லி, இருவரும் சிரிக்க, சேமித்து வைக்கும் சரக்காச்சு. 

Don’t Care 

Bore 

Change 

அலட்சியத்தின் வழி அலுப்புக்கு வந்து, அது முற்றி, மாறுதல் நாடித் திருமணத்திற்கு வந்திருக்கும் இந்த யாத் திரையில், தனக்கொரு கணவன், அவன் மேல் ஆசை, எந்த சபையிலும் தாலிக்குரிய தனி மதிப்பு, முதற் தாம்பூலம், இயற்கையின் வேட்கை, குடும்பம், குழந்தை, வீடு, வாசல் தனக்கொரு நிழல், என மணக்கோலம் காட்டிய பல கோணங்களின் ஒளி நடுவே, கலசமாய் வீசியது ஒரு எண்ணம் ஒரே எண்ணம். 

Change 

கைப்பொம்மை சலித்த குழந்தைக்குக் கடையிலிருந்து ஒரு பொம்மை. 

தரிசனி– 

அடுப்பு வாய் கவிந்த முகத்தில், திடீரென ஜ்வாலை குபீரிட்டதும், பொன்னி ‘திக்’கிட்டுப் போனாள்.புருவம். தீய்ந்து விட்டதோ? தடவிப் பார்த்துக் கொண்டாள். 

அந்தப் பெயரிலேயே ஒரு magic இருக்கா? அல்லாமல் இத்தனை நாழி இடக்குப் பண்ணின விறகுக்குத் தன் நினைவில் அந்தப் பெயர் தோன்றியதுமே திடுக்கென ஏன் பயம் வந்தது? 

அவளுக்குத் திடீரெனத் தன் பெயர்மேல் இதுவரை அவள் கண்டிராத ஒரு அலுப்பு – வெறுப்பு உண்டாயிற்றுக் பொன்னி என்ன பொன்னி? சொன்னவர் வாயில், அவரின் அந்தச் சமயத்தின் குணத்திற்கும், எண்ணத்துக்கும், நாக்குழலுக்கும் ஏற்ப, இழுபட்டு, பேரில், பேருக்குப் பேர் தன்மானம் கெட்ட பேர்! 

ஆனால், தரிசனி, 

ஒரு பொருளுக்கு ஒரே சொல் நாக்கில் திருப்பத் திருப்ப, எல்லாப் பொருளையும் தன்னுள் அடக்கிய ஒரு உருவேற்றம். அது என்ன தரிசனம்? நினைப்பில் ஒரு. அச்சம். நாக்கு நுனியில் ஒரு விறுவிறுப்பு. என்ன அழகான பேர்! எனக்குப் பெண் பிறந்தால் இதைத்தான் வைக்கணும்….

பொன்னி கன்னத்தடியில் ரத்தத்தின் குறுகுறுப்பு பரவுவது உணர்ந்தாள். சென்ற ஒரு வாரமாய்ச் சந்தேகம், தனக்கே நேற்றுத்தான் நிச்சயமாயிற்று. நேற்றிரவுதான், சிப்பியின் முத்து ரகஸ்யத்தை, அவர் செவி மடுத்த காற்றில் மூச்சோடு மூச்சாய் வெளியிடச் சமயத்திற்குக் காத்திருந்தாள். ஆனால் தரிசனி வந்து கெடுத்துவிட்டாள். அந்தக் கவிதா நேரம் இனி வராது. தரிசனி வந்த பிறகு, தன்வாயால் இனி தெரிவிக்கப் போவ தில்லை. ரகஸ்யம், தன் ஒளி மறைவு தானே கெட்டு, எல்லோருக்கும் அம்பலமாகும் போது ஆகட்டும். Don’t Care. 

யார் இவள் தரிசனி? பெயர் வாயில் வந்ததிலிருந்தே மனுஷன் சரியாயில்லை. காலையிலேயே கிளம்பி ஆபீஸுக்குப் போயாச்சு. சாப்பாட்டை எடுத்துப் போக டவாலி வந்தால் உண்டு இல்லாட்டா இல்லை. உண்மையில் வேலையா? இல்லை, என்னிடமிருந்து ஓடி ஒளிகிறானா? 

யார் அவள்? வீட்டு வேலைக்காரியா? ஆ பீ ஸி ல் ஸகியா? கலியாணம் ஆனவளா? ஆகாதவளா? ஸினிமா எக்ஸ்ட்ராவா? அவாளுக்குத்தான் இந்த மாதிரி உலகத்தில் ஓட்டாத பேர். வெச்ச பேர் காத்தாயி, கருவேப்லை என்றிருக்கும். நானே பொன்னிதானே! 

எந்தைய நாள் தொடர்போ நான் வந்தபின் அறுந்ததோ, அல்ல, ஒளி மறைவில் இன்னும் கெட்டிப் பட்டிருக்கோ? 

இம்மாதிரி இரட்டைக் குடித்தனம் நடத்துபவர் கலியாணத்துக்கு முன் அவளுடைய ஆபீஸ் நாளிலேயே அவளுக்குத் தெரியும். சம்பள தினத்தன்று ‘சொசைடி’யில் கடன் பிடிப்பு, ஈட்டிக்காரன் பிடுங்கிக் கொண்டது. அக்கம் பக்கத்தில் கைமாற்றாய் வாங்கினது எல்லாம் பட்டுவாடா ஆகிப்பாக்கி ஒரு ரூபாய் மிஞ்சும். அதைக் கவலையில்லாமல் ‘ஹாய்’யாக ‘கான்டீ’னில் மாணிக்கம் நாஸ்தா பண்ணிக் கொண்டிருப்பான். 

“என்னடா மாணிக்கம்?” 

“என்னம்மா பண்றது? நீங்களா சொல்லுங்க. இதைப் பெண்சாதிக்குக் கொடுப்பேனா? தொட்டுத் தாலி கட்டினவ இப்ப மூணாவது உண்டாயிருக்கு. இன் னொண்ணுக்கு என்னண்டை வரபோதே ரெண்டு இளஞ் ஜீவனோடு வந்துட்டுது-என்னா அப்படி முளிக்கிறீங்க? முளி தக்காளியாட்டம் கீளே விளுந்துடப் போவுது! 

என்னத்தப் பண்றது சொல்லுங்க. நம்மை நம்பி வந் துட்டுது. கைவிட்டுட முடியுங்களா ? அத்தாலேதான் அல்லாடறேன். நாளைக்கு வரப்போ கியாபகமா ஒரு பத்து ரூவா நோட்டு கொண்டு வாங்க அஞ்சு தேதிக் குக்கொடுத்துடறேன். தேதி குறிச்சுட்டால் தவற மாட் டேன். மறுபடியும் கேட்டால் நீங்க கொடுக்க வேணாம்?” 

அவளுக்குப் பக்கத்து ‘ஸீட்’ ஸீதாவின் ‘கேஸ்’ மாத் திரம் என்ன, அதுவும் ‘தோசையைத் திருப்பிப் போடு தான்’. 

“இதோ பார் பொன்னி. நீ கலியாணமாகி, குடும்பமா வாழறப்போ, உன் குழந்தை குட்டி ஏதுக்கேனும் ‘ஸீதா’ன்னுமாத்திரம் பேர் வெச்சுடாதே, அது அத்தனை அபாக்கியம். அதுக்கு நான் சாக்ஷி. இத்தனைக்கும் எங் கப்பா ஜோஸ்யத்தில் புலின்னு பேர். எல்லாப் பொருத்த மும் பார்த்துத்தான் கொடுத்தா பேர் கூடப் பொருத்தம் போயேன். அவர் ராமச்சந்ய்ரன். நான் ஸீதை. ஆனால் அப்புறம் தான் தெரிஞ்சுது நான் ஸீதை. அவர் பேரளவில்தான் ராமச்சந்த்ரன், லீலையில் சுப்பிரமணிய ஸ்வாமி. நானே உங்கிட்டே சொல்றேனேன்னு சங்கோ சப் படவேண்டாம். மறைச்சு வெக்கற நாளெல்லாம் மலையேறிப்போச்சு உலகம் தெரிஞ்ச விஷயமாப் போச்சு. இப்போ நானே ஒரு தினுசா சமாதானமாயிட்டேன். ‘உங்கள் மேரிக்குப் பிடிக்குமே’ன்னு குடலை இட்டிலியோ, அரிசி அப்பளாமோ, வடுமாங்காயோ, நானே கொடுத் தனுப்பறேன், ஏனம்தான் லேசில் திரும்பி வராது. பத்து நாள் கழிச்சு வரப்போ, அதற்குள் அதில் மீனைத்தான் அலம்பித்தோ, நண்டைத்தான் நறுக்கித்தோ. மட்டனைத் தான் வறுத்ததோ, முட்டையைத்தான் வேக வெச்சுதோ, ஈசுவரனுக்குத்தான் வெளிச்சம், அவனுக்குத்தான் அர்ப்பணம்.” 

ஸீதா சிரிக்கிறாள். ஆனால் விழி தளும்புகிறது. 

“இத்தனைக்கும் என் தாய் வழி வைதீக பரம்பரை. தாத்தா யாகமே பண்ணினவராம். இருந்தாப் போலிருந்து ஒரு நாள் பழசு எல்லாம் நினைப்பெடுத்து விடும். உட்கார்ந்தால் அப்படியே உட்கார்ந்து போயிடுவேனோ என்கிற திகிலில் வேலைக்கு ஓடி வந்துடறேன், இல்லாட்டா, எல்லாம் நேரும் கூறுமாயிருந்தால். கலியாணம் ஆனபிறகும் நமக்கு உத்யோகம் ஏதுக்கடி?”

– த்வனி (சிறுகதைகள்), இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 1990, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *