கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 27, 2021
பார்வையிட்டோர்: 7,360 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கைத்தறி லுங்கியை , செம்மண் நிறத்துப் பேண்ட்டால் அகற்றிவிட்டு, பாடாவதி பனியனை வெளுத்துப்போன வெள்ளைச் சட்டையால் மறைத்துக் கொண்டு, ஒப்புக்குத் தலையை வாரியபடியே கண்ணாடியை வேண்டா வெறுப்பாய்ப் பார்த்த விசுவநாதனை, செந்தாமரையும் அவனை மாதிரியே பார்த்தாள். ஸ்டவ்வில் பூனை குத்துக் காலிட்டு உட்கார்ந்திருப்பதை சொல்லத்தான் போனாள். ஆனால் –

அதற்குள், வீட்டிற்கு வெளியே நடுரோட்டில் டெப்டி டைரக்டரின் கார், கரடுமுரடாய்ச் சத்தம் போட்டபடியே நின்றது. காருக்குக் குறைச்சலில்லை. வழக்கமாய் வருவதுதான். ஆனால் அன்று ஏனோ, காரின் குரல் படபடத்தது. டிரைவர் ஹாரனை வயலின் வாசிப்பதுபோல் உசுப்பினார்.

விசுவநாதனிடம் சொல்லப்போனதை மறந்து, செந்தாமரை அவன் கையில் காகிதப் பார்சலைத் திணித்தாள். அவள் புடவை மாதிரியே கசங்கிய அந்தப் பொட்டலத்தை தூக்கு பையில் போட்டபடி, விசுவநாதன் காருக்கு அருகே போய் சல்யூட் மாதிரி வலது கையை வளைத்தான். உள்ளே இருந்த வயிறுபெருத்தடெப்டி

டைரக்டர் , கார் கதவைத் தள்ளிவிட, அவன் உள்ளே போனான்.

செந்தாமரை தத்தளித்தாள். எப்படியாவது சொல்லியாக வேண்டும். அவள் முகபாவனையை விசுவநாதன் பார்க்கவில்லை. டெப்டி டைரக்டர் பார்த்து விட்டார். “என்னம்மா விஷயம்… வெளில போறியா?”

“ஆமாங்க ஸார், கடைக்குப் போகணும். கெஸ்ட்ஸ் வாராங்க.”

“கார்லே ஏறிக்கோம்மா.”

“வேண்டாம் ஸார்.”

“தானாப் போற கார்ல் நீயும் வாரதுல தப்பில்லமா. நீ என் மகள் மாதிரி. வாம்மா..”

அவர்களின் உரையாடலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது மாதிரி, விஸ்வநாதன் காருக்குள் இருந்த ஒரு கோப்பை எடுத்துப் புரட்டினான். செந்தாமரை, அந்த அதிகாரியை அதிகமாகக் காக்க வைக்கக் கூடாது என்று, கதவை வேக வேகமாய் இழுத்து மூடப்போனபோது, மீண்டும் வீட்டுக் கணக்கு நினைவுக்கு வந்தது. காருக்குள் அவரிடம் பேசமுடியாது. இப்போ எப்படி… சட்டென்று ஓர் எண்ணம்….

“ஏங்க, கதவைப் பூட்ட முடியல. கொஞ்சம் வாரீங்களா?”

எழுந்து வந்த விஸ்வநாதன் கதவைப் பூட்டியபடியே கேட்டான். “கதவு ஈசியாத்தானே பூட்டுது?”

“ஒங்களுக்கு எல்லாமே ஈசிதான். இதனாலதான் எனக்கு எல்லாம் கஷ்டமாகுது.”

“என்ன பூடகமா பேசுறே… என்ன விஷயம்?”

“மத்தியானம் ஒங்கண்ணாவும் அண்ணியும், குழந்தை குட்டிகளோட வீட்டுக்கு வரப்போறது தெரியுமா? அவங்களுக்கு ஆக்கிப்போட அரிசி இல்லன்னு தெரியுமா?”

கோபமாகச் சொன்னவளைப் பார்த்து, விஸ்வநாதன் சிரித்தான். அந்தச் சிரிப்பு அவளையும் தொற்றியது. விஸ்வநாதன் பிசிறில்லாமலே பதிலளித்தான்.

“ஸாரி மேடம்! வழக்கமாய்த் தினமும் நீ தருகிற ரெண்டு ரூபாயைக் கூட நான் கேட்காததிலிருந்து ஒன்னோட பட்ஜெட் நிலைமையை நான் எப்படிப் புரிஞ்சிட்டிருக்கேன்னு உனக்கே தெரியும். நாளைக்குத்தான் சம்பளம்.”

“விருந்தாளிகள் இன்னைக்கே வாராங்களே?”

“எப்படியாவது சமாளிம்மா”

செந்தாமரை, ஏதோ கோபமாகச் சொல்லப் போனவள். அப்போது காருக்குள் அடைபட்டுக் கிடந்த டெப்டி டைரக்டர் வெளியே வந்து நின்று , நேரமாவதைச் சொல்லாமல் சொல்வதுபோல் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இங்கிதம் தெரிந்த செந்தாமரை, அது தெரியாத விஸ்வநாதனை விலாவில் இடித்தபடியே காருக்குள் கூட்டிப் போனாள்.

அந்தக் கடை முன்னால், பிரேக் போட்டு, அந்தப்பகட்டு கார் நின்றது. காரில் இருந்து இறங்கிய செந்தாமரையை அந்தக் கடையை மொய்த்த பெண்கள் வியந்து பார்த்தார்கள். இவ்வளவு பெரிய காரில் வந்தாலும், எவ்வளவு அடக்கத்தோடு இருக்கிறாள்!

பெண்கள் இரண்டாகப் பிரிந்து, செந்தாமரைக்கு வழி போட்டுக் கொடுத்தார்கள். ஆனால் கடைக்காரர் அசகாய சூரர். மஞ்சள் மசாலா மளிகைக் கடைக்கு முன்னாலேயே ஒரு மேஜைமேல் வியாபித்த பிளாஸ்டிக் விரிப்புமேல் விதவிதமான காய்கறிகளை அடுக்கி வைத்திருந்தார். ஒரு பக்கம் ஐஸ் மோர். இன்னொரு பக்கம் மூன்று அரிசி மூட்டைகள், கோணி வாயில் வெள்ளைப் பற்களைக் காட்டிக் கொண்டிருந்தன.

செந்தாமரை கடனுக்குப் பீடிகையாய், என்ன அண்ணாச்சி.. ஊர்ல மழை பெய்துதாம்மா? எப்போ போறீங்க என்று கேட்கலாமா என்று நினைத்தாள். சீச்சீ… இந்தப் பசப்பு வார்த்தையைப் பேசுகிற வாய் பட்டினி கிடக்கலாம். அது சரி… நான் பட்டினி கிடக்கலாம்… விருந்தாளிகளையுமா….சகலகலா மண்டி வியாபாரியான கடைக்காரர், செந்தாமரையைக் கவிழ்கண் போட்டுப் பார்த்தார். அவளைப் பார்த்த கண்ணோடு, அங்குள்ள அத்தனை பெண்களையும் பார்த்தார். இச்சையாக அல்ல – எது எது கடன் பாக்கி என்ற ஆய்வோடு. செந்தாமரை உதட்டைக் கடிப்பதிலிருந்தும், கால் பெருவிரலால் தரையில் கோடு போடுவதிலிருந்தும் அவர் புரிந்து கொண்டார்.

கடைக்காரர், ஒரு பாட்டி மீது பாய்ந்தார்.

“என்ன ஆயா நீ… கொசுருன்னு சொல்லிட்டு அவ்வளவு கறிவேப்பிலையும் எடுத்தா எப்படி? மாட்டுக்குத் தீவனமா போடப் போறே? ஏய் செங்கணி! ஒங்க வீட்டுக்காரம்மா எப்போதான் அந்தப் பாக்கியைத் தரப் போறாங்களாம்?”

“வந்து… சாயங்கலாமாய்த் தருவாங்களாம்.”

“நீயும் சாயங்காலமாவே வா. போன மாசத்துப் போடு கணக்குத் தீர்க்கும் முன்னால், ஒரு அரிசிகூட போடமாட்டேன். பேரெடு கணக்கில் முந்நூறு ரூபாய் தாண்டுற எந்த அம்மாவுக்கும் அதுக்குமேல கடன் கிடையாது”

கடையைச் சுற்றி நின்ற அத்தனை பெண்களும், தத்தம் கரங்களில் இருந்த கைக்கு அடக்கமான நோட்டு புத்தகங்களைப் பயபக்தியோடு பிரித்துப் பார்த்தார்கள். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளிலும் அவர்கள் வாங்கிய பொருட்களும், அவற்றின் விலையும் எழுதப்பட்டுக் கடைக்காரரால் கையெழுத்திடப் பட்டிருந்தன. கடைக்காரர் கொடுத்திருக்கும் ஒருவிதமான பாஸ்

புத்தகங்கள்.

முந்நூறு ரூபாய்க்குமேல் போன பெண்கள் முகம் சுழித்தும், அதற்கு உள்ளேயே இருந்த பெண்கள், முந்தைய பெண்களின் முகக் கலவரத்தை ரசித்தபடியும் நின்றபோது, ஒரு மாமி வந்தாள்.

“என்ன கடைக்காரரே, சௌக்கியமா?”

“ஒங்க கடன் பாக்கி நானூறு ரூபாயாய் நிற்கும்போது நான் எப்படி சௌக்கியமாய் இருக்க முடியும்மா? நான் ஏதோ தமாஷ் பேசுறமாதிரி சிரிச்சு மழுப்பாதீங்கம்மா! ஸ்கூட்டர்ல போகத் தெரியுது. சினிமாவுக்குப் போகமுடியுது. ருசிருசியாய்ச் சாப்பிடத் தெரியுது. கடைப் பாக்கியை மட்டும் தரத் தெரியலை.”

“ஏன் இப்படி தெரியாதது மாதிரி பேசறேள்? ஒங்க காசைக் காக்கா கால்லே கட்டி அனுப்புவேனாக்கும்?”

“அதைச் செய்யுங்க முதல்ல. வியாபாரத்துல தெரிஞ்ச வங்கன்னு யாரையும் பார்க்கப்படாதும்மா. அப்படிப் பார்த்தால், நான்தான் தெரியாமப் போயிடுவேன். அதோ அந்த அம்மாக்கூட ஒங்களைவிட எனக்கு அதிகமாய்த தெரிஞ்சவங்க தான். எங்க ஊர்ப்பக்கம் வேற. அவங்க கேட்டால் கூடக் கடன் கொடுக்கப் போறதில்ல. உங்களுக்கோ அவங்களுக்கோ கொடுக்கப்டாதுன்னு அர்த்தமில்லே. நான் அவ்வளவு தூரம் நொடிச்சிட்டேன்னு அர்த்தம். ஏய் மூதேவி தக்காளியை ஏன் அப்படிப் பிசுக்கிறே? உடைச்சிட்டால் ஒப்பனா காசு தருவான்? செந்தாமரையம்மா, ஒங்களுக்கு எந்தக் காய் எத்தனை கிலோ வேணும்மா? சில்லறையாக் கொடுங்க. அம்பது ரூபாய் கொடுத்துச் சில்லறை கேட்டு… அவஸ்தைப் படுத்தாதீங்க…”

பாம்புபோல் நெளிந்தபுடலங்காய்களையும், பல்விதைகளைக் காட்டிய தார்பூசணியையும், கண்டெலிபோல் தோன்றிய சேப்பன் கிழங்குகளையும், தன் முகம் போல் காட்டிய உருளைக் கிழங்கு களையும் தொலைநோக்காய்ப் பார்த்த செந்தாமரை, கடைக்காரரைப் பார்த்துவிட்டு, ஏதோ ஒரு வைராக்கியத்தோடு , நடக்கப் போனாள். கடைக்காரர், அவளைச் சாய்த்துப் பார்த்தபோது, “அரிசி வாங்குறதுக்கு தூக்குப்பை எடுத்துட்டு வரேன்” என்று சொன்னபடி நடந்தாள்.

செந்தாமரை வீட்டுக்குப் போய்த்தான் என்ன ஆகப்போகிறது என்பதுபோல், மெள்ள நடந்தாள். பிறகு, இவரோட பவிக, விருகம்பாக்கம் அண்ணனுக்கும் தெரியட்டும் என்று அதைத் தெரியப்படுத்தப் போகிறவள் போல் வேகமாய் நடந்தாள். ஊரில் அம்மா, கழுதை வயசுக்கு வந்த பிறகும் தனக்கு உணவூட்டி விட்டது மனதிலே நினைவுகளாய், வாயிலே பெருமூச்சாய், கண்ணிலே நீராய் உருமாறின. பழைய இனியவை, புதிய கசப்போடு வந்தன.

ஒன்றரை வருடத்திற்கு முன்புதான், அப்பா வில்லாதி வில்லனாக ஆகாமல் போன இந்த விஸ்வநாதனிடம், அவளைத் தள்ளினார். மூன்று பெண் மக்களை வியாபாரிகளுக்குத் கொடுத்த தந்தை, ஒரு சேஞ்சுக்காக இவளை பட்டதாரியும், அரசாங்க ஆசாமியுமான இந்த விஸ்வநாதனிடம் ஒப்படைத்தார். பிளஸ்டூ’ செந்தாமரைகூட தனது அக்காக்களுக்காக அனுதாபமும், தனக்காகப் பெருமிதமும் கொண்டாள். அப்புறந்தான் தெரிந்தது – அப்பா சேஞ்சுக்காகப் பிடித்த மாப்பிள்ளை மாதக் கடைசியில் சேஞ்சே இல்லாதவர் என்று. வியாபாரி – மச்சான்களின் ஒருநாள் சம்பாதனை, இவரின் ஒரு மாதச் சம்பளம்.

செந்தாமரை, வீட்டுக் கதவை திறந்து, அதைக் காலாலேயே உதைத்தாள். ஒரு முக்காலியில் இருந்த டெலிபோனைத் தூக்கி எறியப் போனாள். ‘நீங்க கெட்ட கேட்டுக்கு…’ ஒங்களுக்கு டெலிபோன் ஒரு கேடா?’ என்று அவனிடமே கேட்பதற்காக டயலைச் சுற்றினாள்.

‘ஹலோ… ஆபீஸ் சூப்ரின்டென்ட், மிஸ்டர் விஸ்வநாதனோட பேசணும்.”

“அவரு வேறடெலிபோன்ல பேசிட்டு இருக்கார். லைன்லேயே இருங்க.”

செந்தாமரை டெலிபோன் குமிழைக் காதில் பட்டுப் பட்டென்று அடித்துக் கோபத்தைக் கொட்டியபோது, விஸ்வநாதன் குரல் தெளிவாகக் கேட்டது.

“ராமச்சந்திரனோட ஆறு லட்சம் ரூபாய் கொட்டேஷடன் லோவஸ்ட்தான். ஆனாலும், கொடுக்கணுமுன்னு கட்டாயம் இல்லையே? போன பைனான்ஷியல் வருஷத்திலேயும் இதே மாதிரி லோவஸ்ட் ரேட் செய்து அப்புறம் பாதி பீரியட்ல… விலைவாசி கூடிட்டு என்கிற சாக்கில் அதிகமாய் மூன்று லட்சம் கேட்ட கம்பெனி. அது தேவையில்லை. கோபி கம்பெனி ஆறு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கேட்டாலும் குவாலிட்டி கம்பெனி. சொன்ன சொல்லில் நிற்கிற நிறுவனம். முப்பதாயிரம் அதிகமாய் இருக்கட்டுமே. ஆப்டர் ஆல் முப்பதாயிரம் ரூபாய்… பட்ஜெட்ல சரிக் கட்டிக்கலாம்.”

செந்தாமரை மனம் குமுறியது. அவன் பேசுவது அவள் காதுக்கு நன்றாகவே கேட்டது. இவளும் தனக்குள் பேசிக் கொண்டாள்.

‘ஆப்டர் ஆல் ரெண்டு கிலோ அரிசி வாங்க வக்கில்ல. ஒரு வாழைக்காய் கூட வாங்குறதுக்குத் துப்பில்ல…. ஆப்டர் ஆல் முப்பதாயிரம் ரூபாய்னு பேசறதைப் பாரு. வீட்டு பட்ஜெட்டை சரிகட்டாத மனிதருக்கு, கவர்மெண்ட் பட்ஜெட் எப்படி வரும்? இதனாலதான் நாடு உருப்படல..’

விஸ்வநாதன் குரல் அழுத்தமானது. அவள் தன்னிடம் தான் பேசுகிறாரோ என்பதுபோல் செந்தாமரை உற்றுக் கேட்டாள். அவன், இன்னும் அதே போனைத்தான் கட்டியழுதான்.

“ஐ ஆம் ஸாரி ஸார். நான் பிழைக்கத் தெரியாதவனாவே இருந்துட்டு போறேன் ஸார். அடுத்தவர் காசு எனக்குத் தேவை இல்லை ஸார் என் ஒய்ப் நச்சரிப்பு இல்ல ஸார். என்னோட நேர்மையைத் தன்னோட தாலி பாக்கியமாய் நினைக்கிறவள். யாரோட பட்டுச் சேலைக்கும் பகட்டுக்காருக்கும் பணம் கேட்டுத்தாலி யைக் கழட்டி எறிகிறவள் இல்ல ஸார். ஐ ஆம் ஸாரி ஸார். உங்க வீட்டு இன்சிடென்டைச் சொல்லல ஸார். குடும்பத்தையும் கவனிக்கணுமுன்னு நீங்க சொன்னதால்… இப்படிச் சொன்னேன்….படபடத்துப் பேசிய விஸ்வநாதன், எதிர்முனை பதிலை எதிர்பார்த்தபோது, அதே முனையில் டங்கென்று ஒரு சத்தம்.

“அடடே… அஸிஸ்டெண்ட் டைரக்டர் போனை டப்புன்னு வச்சுட்டாரே. இந்த லைன்லே யாருய்யா இருக்குது? ஹலோ ஸாரி… பார் கீப் யூ வெயிட்டிங். யார் பேசுறது?” என்றான் விஸ்வநாதன்.

செந்தாமரையால், பேச முடியவில்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒன்று காற்றா புனலா – கதகதப்பான சூடா , ஏதோ ஒன்று உட்சென்று அவளை உறுதிப்படுத்துவது போல் இருந்தது. அத்தனை கோபதாபங்களும், ஆக்கபூர்வமாய், நேர்மை வேள்விக்கு எருக்களாயின. விஸ்வநாதன் உதவியாளரிடம் பேசுவது கேட்டது.

“என்னப்பா, இது ராங் நம்பரா?” செந்தாமரை உரக்கவும், உற்சாகமாகவும் கூவினாள் “ரைட் நம்பர், ரைட் லேடி. என்னங்க…. ஒங்களத்தான்…”

– குமுதம், 25.8.88

– தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.

சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *