தம்பியா? தங்கச்சியா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 184 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மகப்பேறு மருத்துவமனை (பிரசவ ஆஸ்பத்திரி) யில் மனைவியைச் சேர்த்துவிட்டுக் கவலையோடு நான் வீடு திரும்பிய நேரம்.

கதவைத் திறக்க கைவைத்த நான் ஒரு நிமிடம் அப்படியே அசந்து நின்றேன். வீட்டு முன்கூடத்தில் என் குழந்தைகள் உரையாடிக்கொண்டிருப்பது வெளியே எளக்குத் தெளிவாகக் கேட்டது. அந்தப் பேச்சுதான் என்னை அசையாத சிலை யாக்கியது.

அம்மா நாளைக்குப் பாப்பா கொண்டாந்துடுவாங்க!

பாப்பாவைத் தொட்டியிலே போட்டுப் பாட்டுப் பாடித் தூங்க வைப்பேன்!

நான் பாப்பாவை வண்டியிலே வைச்சுத் தள்ளிக்கிட்டு நடப்பேன்!

பாப்பாவை நான்தான் குளிப்பாட்டுவேன்!

பாப்பாவுக்குச் சட்டைபோடுறது என்னோட வேலை!

பாப்பாவுக்குப் பொம்மை குடுப்பேன்; மிட்டாய் குடுப்பேன்!

நான் புத்தகம் குடுப்பேன். பேனா குடுப்பேன்

பாப்பாவை நான்தான் மடியிலே தூக்கி வைச்சுக்குவேன்.

பாப்பா மடியிலே மூத்திரம் பேஞ்சு உன் பாவாடையை நனைச்சுடுமே…!

நனைக்காது. என்னோட தம்பிப்பாப்பா நான் சொல்றதை கேட்பான்!

தப்பு. தப்பு. தம்பிப்பாப்பா வரமாட்டான். தங்கச்சிப் பாப்பா தான் வரப்போகுது! இல்லையா அக்கா?

ஆமா. ஆமா. அப்பாகூட அப்படிதான் சொன்னாங்க! ஏண்டா தம்பி?

ஆமா அக்கா. எனக்குக்கூடத் தங்கச்சி பாப்பா தான் வேணும்.

நீங்க சொல்றது நடக்காது. எல்லாரும் நாளைக்கு பாருங்க அம்மா… தம்பிப்…. பாப்பாவைத்தான் கொண்டாருவாங்க!

ஊகூம். நீ நல்லா ஏமாறப்போறே!

இல்லே. இல்லே. நீங்கதான் ஏமாந்து அழப்போறீங்க, நீதான் அழுவே.

ஐய்யே…. வவ்வவ்வே…

ஐய்யே ஈ… ஈ…ஈ…

அதோடு அவர்கள் பேச்சு நின்றது. ஆனால், அடுத்த கணம் ஓவென்று அழுகுரல் எழுந்தது. ஒற்றைக்குரல்.

தம்பிப் பாப்பாவைத்தான் அம்மா கொண்டுவருவாள் என்று எதிர்பார்க்கும் செல்லக்கிளி தான் அழத்தொடங்கியவள். அவளுக்கு வைத்தபெயர் வேறு. ஆனால், எங்களுக்குச்செல்ல குழந்தை ஆனதால் இந்தப்பெயரே வழங்கியது

செல்லக்கிளிக்கு இன்னும் நான்கு மாதங்களில் நான்கு வயது நிறைவுறும். தங்கச்சிப்பாப்பாவை விரும்பும் மற்றக் குழந்தைகள் எல்லாரும் மூத்தவர்கள்.

கவலைக் கடலாயிருந்த என்நெஞ்சில் அந்தநிமிடம் திரண் டெழுந்த அலைகள் ஆனந்தஅலைகளாய்ப் பொங்கிப்புரண்டன.

கதவைத் திறந்துகொண்டு வீட்டினுள் சென்றதும் செல்ல கிளி குடுகுடுவென ஓடிவந்து என் கால்களை கட்டிபிடித்து கொண்டாள். விக்கி விக்கி அழுதுகொண்டே தன் மனக்குமுற லை என்னிடம் கொட்டினாள்; பாருப்பா… தங்கச்சி பாப்பா, தான் வரும்னு இவங்கள்ளாம் சேர்ந்துக்கிட்டுச்சொல்றாங்க…

அவளை வாரி எடுத்துக்கைகளில் ஏந்தியவாறு, அப்படியா சொன்னீங்க? என்று மூத்த பிள்ளைகளைக்கோபித்தேன்.

அது பொய்க்கோபம் என்பதைப் புரிந்துகொண்டு அவர் களும் எனக்குப்பயப்படுவது போலப்பாசாங்கு செய்தார்கள்.

செல்லக்கிளியின் அழுகை நின்றது. ஆனால், முகத்தில் இன்னமும் பெரியதொரு கேள்விக்குறி தொக்கியேயிருந்தது, ஏப்பா, அம்மா எனக்குத் தம்பிப் பாப்பாவைத்தானே கொண்டாருவாங்க?

கட்டாயம் தம்பிப் பாப்பாதான் வருவான்! என்று சொல்லி கொண்டே அவள் கண்ணீரைத் துடைத்தேன்.

அப்போ… எங்களுக்குத் தங்கச்சிப்பாப்பா வராதா? என்று உடனே மற்றக்குழந்தைகள் சேர்ந்து எழுப்பிய கூட்டுக்குரல் என்னைத் திடுக்கிடச் செய்தது.

நடுநிலை தவறினால் நாட்டுத்தலைவனைப்போல் வீட்டுத் தலைவனும் தடுமாறத்தான் நேரிடுகிறது!

உங்களுக்கொரு தங்கச்சிப்பாப்பாதானே வேணும்?-அதுவும் வரும்… என்று அவர்களுக்குப் பதில் சொல்லிச்சமாளித்தேன்.

செல்லக்கிளி இந்தப்பதிலைப் பேச்சளவில்கூடஅனுமதிக்க மறுத்தாள்! கூடாதுப்பா. ரெண்டு பாப்பா வரக்கூடாது. இவங் களுக்குத் தங்கச்சிப் பாப்பா வரவே கூடாது, எனக்கு மட்டும் தான் பாப்பா வரணும். அதுவும் ஒரே ஒரு தம்பிப்பாப்பா மட்டும் தான் வரணும்…?

அவளுடைய இந்தக்குழந்தைத்தனமான வார்த்தைகளில் ஊடுருவிய கடுமையான பிடிவாத உணர்வு என்னைத்திகைப் புக்குள்ளாக்கியது.

ஆசை தீவீரமாகி அளவை மிஞ்சினால் அதுதான் வெறி. பெரியவர்கள் சின்னவர்கள் என்கிற பாகுபாடு இதில் இல்லை.

செல்லக்கிளிக்குக் தம்பிப் பாப்பா வேண்டுமென்பது ஆசையா, வெறியா?

என்ன சொல்வது. என்ன செய்வது என்று புரிமாமல் தவித்த எனக்கு, சட்டைப்பைக்குள் இருக்கும் பால் சாக்லெட் பொட்டலம் சட்டென்று நினைவுக்கு வந்தது, அதை எடுத்து ஆளுக்குக் கொஞ்சம் கொடுத்து விட்டு உடைமாற்றிக் கொள்வ தற்காக அறைக்குள் சென்றேன்.

மற்றக் குழந்தைகள் மகிழ்ச்சியோடு சாக்லெட் தின்றார்கள் ஆனால், செல்லக்கிளி அதைக் கையில் வைத்துக்கொண்டே சிந்தனையில் ஆழ்ந்து நின்றாள். அவளைப் பார்த்தும் பார்க் காத பாவனையில் நான் வேறு வேலைகளில் ஈடுபட்டேன்.

தினமும் என்னிடம் கதைகேட்டுக் கொண்டே கண்ணயரும் வழக்கமுள்ள செல்லக்கிளி இன்று மௌனமாக என் பக்கத்தில் படுத்தாள். கதை சொல்லுப்பா என்று வழக்கம்போல் அவள் கூறவில்லை அந்தச் சித்திரப் பூ முகத்தில் கவிந்திருந்த சிந்தனை நிழல் என் நெஞ்சில் வேதனையை விளைவித்தது

‘கதை சொல்லட்டுமா, செல்லம்? ‘என்றேன்:

‘வேண்டாம்’ப்பா’

‘ஏன்மா?

‘வேண்டாம்னா வேண்டாம்’.

‘ஏன் வேண்டாம்?’

‘கொஞ்சம் முந்தி அக்கா கிட்டே ஏன் அப்படி சொன்னே?’

‘எப்படிச் சொன்னேன்’

‘தம்பிப் பாப்பா வருமா தங்கச்சிப் பாப்பா வருமா என்கிறது அம்மாவுக்கும் தெரியாது அப்பாவுக்கும் தெரியாது. கடவுள் நமக்கு எந்தப் பாப்பாவைத் தந்தாலும் பாப்பாவும் அம்மாவும் சௌக்கியமா வந்து சேரணும்னு சொன்னியே…’

‘ம்…ம் நான் இப்படிச் சொன்னது உன் காதிலேயும் விழுந்துச்சாம்மா?’

‘கதவுக்கு அந்தப்பக்கம் நின்னு நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன், ஏப்பா தம்பிப் பாப்பா வைத்தான் அம்மா கொண் டாரு வாங்கன்னு என் கிட்டப் பொய் சொல்லிட்டியே…! என்னை ஏமாத்திட்டியே….!’

செல்லக்கிளியின் கண்களில் நீர் முத்துக்கள் அரும்பி உதிர்ந்தன நான்… நான்… வாய்விட்டே அழுதேன்.

பொய் சொன்ன குற்றத்தைத் தெய்வமே சுட்டிகாட்டும் போதுஅழுவதை தவிர வேறோன்றும் எனக்குத்தோன்றவில்லை

அன்று இரவு முழுவதும் கொட்ட கொட்டக் கண்விழித்த படி படுக்கையில் புரண்டேன். கடிகார ஓசையை கணக்கிடு வதுதான் என் வேலையாகியது விடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது.

பக்கத்தில் செல்லக்கிளி நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். ஆனால்.முகத்தில் அதேகேள்விக்குறியும் சிந்தனைக்கோடுகளும் விடிவிளக்கின் மங்கலான வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தன

விழிகள் தாம்மூடியிருக்கின்றனவா, இதயம்’ தூங்கவில்லையா என்று எண்ணியப்படி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு நிகழ்ந்த ஒரு காட்சி என் உடலை ஒரு குலுக்கு குலுக்கியது அங்கு ஒலித்த ஒரு குரல் என்னை மெய் சிலிர்க்க வைத்தது

‘கடவுளே முருகா… எனக்குத் தம்பி பாப்பா தர்றதுக்கு அம்மாவாலேயும், அப்பாவாலேயும் முடியாதாம் உன்னாலேதான் முடியுமாம் அதனாலேதான் உன்கிட்டே கேக்கிறேன். ஆமா, நீ எனக்கு ஒரு தம்பி பாப்பாவைத் தரனும் கட்டாயம் தரணும்?

செல்லக்கிளியின் மணிவாய் திறந்து, மலர் இதழ்கள் விரி ந்து கனி நா அசைந்துகற்கண்டுத் துண்டுகளாக வீணையின் இன்னொலியாக சொரிந்தன சொற்கள்!

தம்பி வேண்டும் என்கிற நினைப்பிலேயே கண்ணுறங்கினாளா?

அந்த நினைவே அவளுக்கு கனவாக மலர்ந்ததா?

அந்தக் கனவில் முருகக் கடவுள் அவள் முன்னாள் வந்து நிற்கிறாரா? குழந்தையின் உருக்கமான வேண்டுகோளில் செந் தமிழின் இனிமையை சுவைக்கிறாரா?

என் உடம்பு ஏனோ இலேசாக நடுங்கியது

விடிந்ததும் மகப்பேறு மருத்துவமனையுடன் தொலைபேசித் தொடர்பு கொண்டேன்.

பதிவு இலக்கத்தையும் பெயரையும் தெரிவித்து பதிலுக்காக நான் காத்திருந்தது பதினைந்தே வினாடிகள். ஆனால் அவை பதினைந்து யுகங்கள். என் நெஞ்சில் எவ்வளவு தவிப்பு எவ்வளவு பதைப்பு எவ்வளவு துடிப்பு,

மருத்துவமனையிலிருந்து எனக்கு கிடைத்தசே தி-அப்பாடா “என் செல்லக்கிளியின் பிஞ்சு மனத்தில் தேன் வார்க்கும் சேதி தான்.

– சிங்கப்பூர்க் குழந்தைகள் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1989, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம், சிங்கப்பூர்.

சிங்கை பெர்னாட்ஷா சே.வெ.சண்முகம் சே.வெ.சண்முகம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெய்வாசலில் 1933ல் பிறந்தார். 1951ல் சிங்கப்பூருக்கு வந்த இவர், துறைமுகத்தில் பணியாற்றினார். 1961ல் கிடங்குப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்று 1991ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1949ல் எழுதத் தொடங்கிய இவரது முதல் சிறுகதை “வேறு வழியில்லையா?” மதுரையிலிருந்து வெளியாகும் “நேதாஜி” இதழில் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இவர், சிறுகதைகள், தொடர்கதைகள், குட்டிக்கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், மேடை நாடகங்கள், வானொலி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *