மனசுக்குள் வலியாக இருந்தது. அறையில் வந்து மல்லாந்து படுத்தேன்.
அறைக்கு வெளியே கூடத்தில் தம்பி, தம்பி குடும்பம் . பார்க்க வந்த எங்களுக்கு அறையை ஒழித்துக் கொடுத்து விட்டு அங்கே படுத்திருந்தார்கள்.
புரண்டு படுத்தேன்.
எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அவனுக்கு இரண்டும் பெண்.
அவனுக்குப் பாரம் குறைக்கலாம் என்ற எண்ணத்தில்…
“ஒரு பெண்ணை நான் வளர்த்து ஆளாக்கி நல்லது கேட்டது செய்யிறேன்டா.! “என்று பல நாட்களாக மனதில் நினைத்திருந்த ஆசையை அவனிடம் சொன்னேன்.
“அது சரிபடாதுண்ணே. என் குழந்தை என்கிட்டேயே இருக்கட்டும். “சொன்னான்.
“வ…வந்து…..”
“நீ ஒன்னும் சொல்ல வேணாம். உன் அன்பு, அக்கறை எல்லாம் எனக்குத் தெரியும். என் குழந்தை என்கிட்ட இருக்கிறதுதான் சரி.”என்றான்.
‘இதற்கு மேல் என்ன பேச… சொல்ல…?’ அதுதான் வலி, வருத்தம்.
‘ஏன் கொடுக்கவில்லை..? பெற்ற பாசமா… இன்றைக்குப் பெற்ற பாசம். நாளைக்குக் கஷ்டப்படும்போது வலிக்கும் !’
‘மறுக்கமாட்டான். சுமை நீங்கினால் போதுமென்று நினைத்துக் கொடுத்துவிடுவான்.!’ என்று நினைத்திருந்த ஆசை மீது மண்.
வெளியே தாய் தந்தையுடன் தூங்கும் தேன்மொழி, என் செல்லக் கிளி என் கண்ணில் வந்து சிரித்தாள்.
பிறந்து விழுந்த மறுவினாடியே … என் கைகளில் தவழ்ந்தவள் இந்தக் குழந்தை.
தம்பி பிரசவத்திற்காக மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு , என்னை துணை இருக்கச் செய்துவிட்டு முக்கிய வேலையாக வெளியூருக்குச் சென்றுவிட்டான்.
அதனால் அந்த பாக்கியம்.
தேன்மொழியின் கண்ணும், மூக்கும், சிகப்பும்… அப்போதே முடிவெடுத்துவிட்டேன். இது நம் குழந்தை. நாம் வளர்க்கப்போகிறோமென்று.
அதையும் காலையில் பிள்ளையைப் பார்க்க வந்த மனைவியிடம் சொன்னேன்.
“ரொம்ப ஆசை வேணாம். அடுத்து எப்படி பொறக்கும்ன்னு பார்த்துக்கிட்டு ஆசை வைக்கலாம். ! “சொன்னாள்.
அவளுக்கும் பெண் குழந்தை என்றால் இஷ்டம். எங்களுக்கு இரண்டாவதாய்ப் பையன் பிறந்ததில் வருத்தம்.
“அடுத்து…..” இழுத்தேன்.
“அதுவும் பொண்ணாய்ப் பிறக்கும்ன்னு என்ன நிச்சயம்.? ஆணாய் ப் பிறந்தால்…? இது போதும். இதோடு நிறுத்திக்குவோம்.! “முற்றுப் பபுள்ளி வைத்து… அப்போதே குடும்பக்கட்டுப்பாடு செய்து வந்து விட்டாள்.
தன் தாக்கத்தை, ஏமாற்றத்தை,, பையனுக்கு சடை பின்னி, பூச் சூட்டித் தீர்த்துக்கொண்டாள். ஆனாலும் திருப்தி இல்லை. என்னதான் வேசம் போட்டாலும் ஆண் ஆண்தான்!. பெண் பெண்தான் ! !
தம்பிக்குச் சொல்லி வைத்தது மாதிரி இரண்டாவதும் பெண்ணாய்ப் பிறக்க… அவனுக்குக் கலக்கம்.
எங்களுக்கு மகிழ்ச்சி.
‘முதல் குழந்தை தேன்மொழி தான் வேண்டும் !’ என்பது என் விருப்பம்.
‘யாருக்கும் முதல் குழந்தையை அண்ணனே ஆனாலும் அடுத்தவங்ககிட்ட கொடுக்க மனசு வராது. இரண்டாவதாய்ப் பிறந்த கனிமொழியாக் கொடுத்தாலும் எனக்கு இஷ்டம். !’ – என்பது என் மனைவியின் எண்ணம்.
‘பால் மனம் மாறாமல் இப்போதே எடுத்துச் சென்றால்தான் குழந்தை நம்மை சொந்த குழந்தையாய் ஓட்டும் !’ நினைப்பில் குடும்பம் சகிதம் கிளம்பினோம்.
தம்பி மறுத்து விட்டான்.
என்னதான் சமாதானம் சொல்லியும் மனசு ஆறவில்லை.
“சரி விடு. அவன் குழந்தை அவன் விருப்பம் !’ உதறி எழுந்து உலவிய நான் கட்டிலில் வந்து படுத்தேன்.
மனைவி மகன்களிடமிருந்து குறட்டை ஒலி வந்தது.
‘இவளால் எப்படி இந்த ஏமாற்றத்தைக் தாங்கிக் கொள்ள முடிந்தது..? ஒரு வேளை இது முன் கூட்டியே தெரிந்து குழந்தை மீது ஆசை வைக்காமல் விட்டுவிட்டாளா..? அடுத்தவர் பொருளுக்கு குறிப்பாய் குழந்தைகள் மேல் ஆசை வைக்கக் கூடாது என்று இருந்து விட்டாளா..? அதனால்தான் இது மாதிரி எது கொடுத்தாலும் சம்மதம் என்று தன் ஆண் குழந்தைகளை ஏற்றுக் கொண்டாளா..?’ – விட்டம் வெறித்தேன்.
கூடத்தில் பேச்சுக்கு குரல்.
“ஆனந்தி !”
“………………….”
“என்ன கம்முன்னு இருக்கே…?”
ஒ… ஒண்ணுமில்லே..”
“இல்லே. என்னமோ கஷ்டம். மனசு சொல்லுது. உன் முகத்துல தெரியுது. என்ன சொல்லு…?”
“உங்க மேல வருத்தம்..”
“என்ன வருத்தம்…?”
“உங்க அண்ணன் நம்ப மேல அக்கறை வைச்சி ஆசைப்பட்டுத்தானே ஒரு குழந்தை கேட்டாரு. கொடுத்தா என்ன..?”
”வேணாம் ஆனந்தி !”
“ஏன்…?”
“அண்ணனுக்கும் அண்ணிக்கும் பெண் குழந்தைன்னா ரொம்ப விருப்பம். கொடுத்தா…எடுத்துப் போற பொண்ணு மேல அன்பு, ஆசை வச்சி.. பெத்தப் புள்ளங்களை ஒதுக்கிடுவாங்களோன்னு பயமா இருக்கு. அதுமட்டுமில்லே… பொட்டைப் புள்ளைங்களைக் கண்டிச்சி வளர்க்கனும். அண்ணனும், அண்ணியும் ஆசையில் சுதந்திரமா விட்டுடுங்க. இப்படி நாலையும் யோசிச்சுதான் மறுத்தேன். தப்பா.”
“இல்லேங்க…”
‘குழந்தை கொடுக்கவில்லை என்று வருத்தப் பட்டோமே. தம்பி… எப்படி எப்படி எல்லாம் யோசித்து நிராகரித்திருக்கிறான்.!’ – நினைக்க….. வியப்பாய் இருந்தது.
‘அவன் நினைப்பதில் தவறே இல்லை. இரவல் பிள்ளை என்கிற பயம் பாசம். மேலும் பெண் குழந்தை என்கிற அதிக செல்லம். பெண்ணின் எதிர்காலத்திற்கு… பெண் என்ன எந்த குழந்தை எதிர்காலத்திற்கும் சரி இருக்காது.!’என்கிற உண்மை நிலவரம் உள்ளுக்குள் வர…. வலி விலகியது.
‘குழந்தையை எடுத்துப் போய் வளர்த்தால்தான் வளர்ப்பா..? இங்கு வந்து அடிக்கடி பார்த்து அன்பு, பாசம் கொட்டி சரியாய் வளர்க்கலாமே !’ என்கிற நினைப்பு வர….வலி வருத்தம் எல்லாம் சுத்தமாக மறைந்து மனம் தெளிந்த நீராகியது.