தமையன் அளித்த காணிக்கை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 2, 2023
பார்வையிட்டோர்: 3,849 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பல மாதங்களாகத் திறவாத தன் பச்சை நிற டிரங் பெட்டியை இடுப்பு ஓடிய எடுத்து வந்து ஓலைப்பாயின் மீது வைத்தபோது சலீமா பேகத்துக்கு நெடுமுச்சு வாங்கியது. ‘அல்லாவே’ என்று அலுப்புடன் கூறிக்கொண்டு அதன் அருகில் சோர்வுடன் அமர்ந்தாள். பூட்டைக் கழற்றிவிட்டுப் பெட்டியைத் திறந்தாள். தன் கல்யாண தினத்தன்று தான் உடுத்திருந்த பொன்னிறப் பூக்கள் போட்ட கொடுக்காப்புளி வர்ண ஜிமிக்கித் தாவணியைக் கண்டதும் அவ் வணங்கின் செம்பவழ இதழ்களில் மந்தஹாஸம் உலாவியது. கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு, வெகு ஜாக்கிரதையாக அந்த ‘மடி’யை எடுத்துத் தன் மடிமீது வைத்துக்கொண்டாள்.

அந்த நங்கையின் தளிர்மேனி உவகையினால் துள்ளியது. அந்த அணியை மடி கலையாது வெகு நாசுக்காக அகற்றியபோது அதற்கடியில் காட்சியளித்த சிறு பெட்டியின் மீது அவள் பார்வை விழுந்ததும் சலீமா பேகம் சற்றுக் கலக்கமடைந்தாள். அதைத் திறப்பதற்கு முயன்றபோது அந்த எழிலரசியின் காந்தள் விரல்களில் நடுக்கம் ஊர்ந்தது. பெட்டிக்குள்ளிருந்த கணையாழியை நோக்கியதும் அக்காரிகையின் கருவிள மலர்போன்ற விழி கள் சுழன்றன. நெடுமூச்சு அவள் மார்பகத்தை மேலும் கீழும் அழுத்தியது. நினைவு நாகங்கள் அவள் நெஞ்சில் படமெடுத்தாடின.

சலீமா பேகத்தின் மருதாணியிட்ட விரல்களுக்கிடையில் சிக்கித் தத்தளித்த பச்சைக்கல் பதித்த அந்த மோதிரம் அந்த ஏந்திழையாளுக்குக் காணிக்கையாகக் கிடைத்த கதை ஒரு வேடிக்கையாகும்!

உருது மொழியைத் தாய் பாஷையாகக் கொண்ட ‘தக்கனி’ப் பிரிவைச் சேர்ந்த வடஆர்க்காடு ஜில்லா, மஞ் சம்பேட்டை ஆதம்சா சாஹேப் மூன்று புத்திரர்களுக்கும் ஒரே ஒரு செல்விக்கும் தகப்பனாராக இருந்தார். அவரு டைய முதல் ‘பீபியான பாத்திமா பேகம் ரஹ்மானை ஈன்றெடுத்துத் தன் நாயகனிடம் ஒப்படைத்து விட்டு இந்த ‘உலகத்துக்கு இறுதி சலாம் வைத்துவிட்டு மறைந்துவிட்டாள். இந்த அதிர்ச்சியிலிருந்து பல மாதங் களாக மீள முடியாத வேதனை வெள்ளத்தில் மூழ்கி விட்ட ஆதம்சா , உற்றார் உறவினர்களின் பிடுங்கலைத் தாளாது குல்ஸும் பேகத்தைத் துணைவியாக ஏற்றுக் கொண்டு விட்டார். இளையவளின் மூலம் இரு குமாரர் களையும் ஒரு புத்திரியையும் தாம் அடையும்படியான பாக்கியத்தையும் பெற்றுவிட்டார்!

தாயை இழந்த மூத்த மகன் ரஹ்மானைச் செல்லமாக ஆதம்சா வளர்த்து வந்ததன் பலன் அந்த இளைஞன் ஒரு தம்பிடிக்கும் பிரயோசனமில்லாமல் போனதுதான்! கெட்டவர்களின் சகவாசத்தினால் குடியாத்தம் தாலூக்காவில் ‘கேப்மாரி’ என்ற விருதைப் பெறுவதில் ரஹ்மான் ‘பிறைக்கொடி’ நாட்டி விட்டான். இந்தச் செய்தியைச் செவி மடுத்ததும் ஆதம்சாவின் தலைமீது பேரிடி விழுந்தது போல் ஆகிவிட்டது.

சோதாக்களின் கும்பலில் கும்மாளம் அடித்துக்கொண்டும், காலாடிகளின் கோதாவில் தன் வஸ்தாத் வேலைகளைக் காட்டியும் வந்த மூத்த மகன் யாரோ ஒரு பெண் வீசிய வலையில் மாட்டிக்கொண்டு ஊரை விட்டு விலகி ஏதோ ஒரு குக்கிராமத்தில் குடியேறிவிட்டதாகத் தெரிய வந்ததும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த ஆதம்சா வெல வெலத்துப் போனார். அவமானம் அவர் மாசற்ற ‘நெஞ்பர்தஸ்த்’ கட் உண்டாக்கி விடிவு ஊரில் ஓர் சைத் துண்டு துண்டாக நறுக்கித் தள்ளியது. துயரம் அவர் இதயத்தைக் கௌவியதும் அவர் உடல் காந்தியது. ரஹ்மான் தன் வீட்டின் வாசற்படிக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்று வீட்டில் உள்ளவர்களுக்குக் கடுமை யான உத்தரவு போட்டார். தமக்கும் தம் மூத்த மகனுக்கும் யாதொரு தொடர்பும் இல்லையென்று ஊரில் நகாரா அடிக்கச் செய்தார்.

அவர் செய்துவிட்ட இந்த விபரீத முடிவு ஊரில் ஓர் சிறிய பூகம்பத்தை உண்டாக்கி விட்டது, தந்தையின் ‘ஜபர்தஸ்த்’ கட்டளையைக் கேட்டுத் திகிலடைந்த தனயன், தான் பிறந்து வளர்ந்த இல்லத்தைவிட்டு எவருடைய கண்களுக்கும் தென்படாமல் இரவோடு இரவாக மறைந்து விட்டான்.

தந்தை அயலூருக்குப் போயிருந்த சமயங்களில் யாரும் அறியாத வண்ணம் தன் மனைக்குச் சென்று வருவது ரஹ்மானுக்குச் சிறிது காலம் வழக்கமாக இருந்தது. இந்த வழக்கத்தை மாத்திரம் ரஹ்மானால் நிறுத்திக் கொள்ள முடியாததற்கு முக்கிய காரணமாக இருந்தவள் சலீமா பேகந்தான்! அந்த மாற்றாந்தாய் குழந்தைக்கு ரஹ்மான் என்றால் உயிர் ! இளம் பிராயத்தில் வெளியே சென்று திரும்பி வரும்போதெல்லாம் பஞ்ச வர்ண அஞ்ச றைப் பெட்டியையாவது, பட்டு நூல் உருண்டையை யாவது, வண்ண ரிப்பன்களையாவது வாங்கிக் கொண்டு வந்து தன் தங்கைக்குக் கொடுக்காமல் இருக்கமாட்டான் ரஹ்மான். இப்பொருள்களைத் தன் சகோதரனிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக வழிமேல் விழிவைத்து வாசற் காதவுக்கருகில் மணிக்கணக்காக அவன் வரவுக்குக் காத் திருக்கும் அப்பேதை, அண்ணன் தென்பட்டவுடன் அவன் கையிலுள்ள சாமான்களை ‘லபக்’ என்று பிடுங்கிக் கொண்டு மான் குட்டி போல் துள்ளிக் குதித்து வீட்டுக் குள் ஓடிவிடுவாள்.

தகாத சகவாசத்தினால் ரஹ்மானின் நடத்தை சீர ழிந்து கொண்டிருந்த நாட்களிலும் சலீமா பேகத்துக்கு அண்ணனிடமிருந்த வாஞ்சை ஓர் அணுக்கூடக் குறைந்து போய்விட வில்லை . அவனைச் சந்தித்து ஓர் அன்புச் சொல்லை உதிர்க்காது போனால் அவளுக்கு ஒரு வேலையும் ஓடாது!

முன் கோபியான தன்னுடைய தந்தை. பாசத்தையும் பந்தத்தையும் ஆசையையும் ஆதங்கத்தையும் உதறிவிட் டுத் தன் அண்ணனை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார் என்ற கொடூரச் செய்தி சலீமாவின் செவிகளை மோதிய தும் அந்தப் பேதையின் மனம் படீரென்று வெடித்து விட்டது. விதிர் விதிர்த்துப்போன அவளுடைய நயனங் களிலிருந்து வழிந்தோடியது சோகம் தோய்ந்த கண்ணீர்.

தம் மகனின் இழிவான வாழ்க்கையினால் மனம் ஒடிந்துபோன ஆதம்சா நடைப்பிணம் போல் நாட்களைப் போக்கி வந்த வேளையில் மற்றொரு மின்னல் அவரைத் தாக் கியது. குடியாத்தத்தில் நடந்து வந்த தம்முடைய வியா பாரம் திடீரென்று முறிந்துவிட்டதாகவும், கிடைத்த தைச் சுருட்டிக்கொண்டு கணக்குப்பிள்ளை கம்பி நீட்டி விட்டதாகவும் கேள்விப்பட்டவுடன் ஏற்கனவே புண் பட்ட அவர் இதயம் இரு கூறுகள் ஆகிவிட்டது.

எஞ்சி நின்ற சொத்தில் தம் மகளின் திருமணத்தை விரைவில் நடத்திவிடத் தீர்மானித்தார் ஆதம்சா . வாணி பம் தமக்குக் கற்பித்த படிப்பினையை உணர்ந்த அவர், அரசாங்க உத்தியோகத்தில் மாதம் மாதம் ‘சுளையாக’ ஊதியம் பெறும் வாலிபனைத் தம் அருமை மகளுக்காகத் தேடி அலைந்தார்.

மரம் வைத்தவன் அதற்கு நீர் ஊற்றத் தவறாதது போல அந்த வடிவழகி சலீமா பேகத்தைச் சிருஷ்டித்த அல்லாஹுத்தாலா அந்தத் தளிர்க் கொடியைத் தாங்கிக் கொள்வதற்கு அதே சீமையில் ஒரு கொழுகொம்பை வளர்த்து வைக்க மறக்கவில்லை. சடாவா செருப்புகள் தரையோடு தரையாகத் தேய்ந்து விட எங்கெங்கேயோ திரிந்து உறவினர்களை அணுகாது, அயலார்களிடம் கடன் வாங்கித் தம் புனிதக் கடமையை ஒருவாறு செய்து முடித் தார் ஆதம்சா. வளத்தூர் சத்தார் சாஹேபுக்கும் சலீமா பேகத்துக்கும் நடந்த நிக்காஹ் பந்தலில் பெரிய பெரிய ‘சஹன்’ பாத்திரங்களில் பரிமாறப்பட்ட நறுமணம் வாய்ந்த பிரியாணி’ சோற்றை வயிறு புடைக்க உண்டு. மணத் தம்பதிகளை வாயாற வாழ்த்திச் சென்றனர் கிராம மக்கள்.

இந்த மங்களகரமான நிகழ்ச்சி நிரலின் துயரம் கசிந்த அத்தியாயம் என்ன வென்றால், ஆதம்சாவின் மூத்த குமாரனான ரஹ்மான் தன் உயிருக்கு உயிரான தங்கை யின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ளாததுதான்! உடனே கிளம்பி வரும்படி தந்தையிடமிருந்து வந்த கடி தத்தைப் பெற்றுக்கொண்டபோது ரஹ்மான் தடுமாறிப் போனான்.

அந்தச் சுப வைபவத்தில் தன் தலையைக் காட்டு வதற்கு அவன் மனச்சாட்சி தடையாக நின்றது. தன் கேவலமான வாழ்க்கையை நன்றாக அறிந்த சில கிழங்கள் கல்யாண வீட்டில் தன்னைப்பற்றி இழிவாகப் பேசி எக்களிக்கத் தயங்க மாட்டார்கள் என்ற பீதி ரஹ் மானின் உள்ளக் குகையில் பூதாகாரமாகச் சிரிப்பை எழுப்பியது.

ஆனால் தங்கையின் இன்முகம் மனக்கண் முன் வட்ட மிட்டு வதைக்கத் தொடங்கியவுடன், பாசம், அன்பு ஆகிய இத்தளைகளை உடைத்தெறிய முடியாது தத்தளித்தான் ரஹ்மான். வெறிபிடித்தவன் போல் எழுந்தான். அன்று காலையில் துவைத்து உலர வைத்த உடைகளைத் தரித்துக் கொண்டான். தன் தங்கைக்கு ஏதாவது பரிசை வாங்கிச் செல்ல அவன் உள்ளம் ஏங்கித் துடித்தபோதிலும், அவ னுடைய பரிதாபகரமான பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. வெளி மாடத்திலிருந்த சில அணாக்களை எடுத்துக்கொண்டு மஞ்சம்பேட்டையை நோக்கி அவன் விறுவிறுவென்று நடந்து கொண் டிருக் கையில் பகலவன் தன் பணியை முடித்துக்கொண்டு குட வாயிலில் பதுங்கிக்கொண்டிருந்தான்.

நிக்காஹ் நடந்த அன்று, மாதர் குழாம் மணமக்களைக் குதர்க்கமாகவும் வேடிக்கையாகவும் பேசி ‘மஜாக் – கேலி – பண்ணிக் கொண்டு கொல் என்ற சிரிப்பொலியைக் கிளப்பிய வண்ணம் இருந்தது. மணமக்களுக்குப் பரிசுகள் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிடவே, அந்த இடத்தில் கூட்டம் நிரம்பிவிட்டது. பன்னீர்ச் செம்பு . சந்தனப் பியாலா, சில்க் – உருமால், பெட்டகம், கடிகாரம், வெள்ளிச் சாமான்கள் ஆகியவைகளைத் தங்கள் தங்கள் பரிசுக ளாகத் தம்பதிகளுக்கு உற்றார் உறவினர்கள் அளித்தார் கள். சிரிப்பொலியும் கூக்குரலும் செவிகளைத் துளைக்கும் படி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அந்த மண்டபத்தில் அழுக்கேறிய உடைகளுடனும், சோகம் கப்பிய வதனத் துடனும் தன் முன்னால் சிரம் கவிழ்த்து நின்ற ரஹ்மானைக் கண்டதும் சலீமா பேகம் அசந்துவிட்டாள். பல நாட் களாகக் காணாத தன் சகோதரனைப் பார்க்கப் பார்க்க அவ்வநிதையின் உள்ளம் ஊசலாடிற்று.

தன் இடுப்பைச் சுற்றியிருந்த பச்சைநிறச் சிங்கப்பூர்ப் பெல்டின் தோல் பையை மெல்லத் திறந்தான் ரஹ்மான். அதிலிருந்த மோதிரத்தை எடுத்தபோது அவன் மேனி சிலிர்த்தது. தங்கையின் கரத்தை ஆசையுடன் பற்றித் தன் காணிக்கையாக அந்தக் கணையாழியை அவள் விரலில் அன்போடு பொருத்தியபோது அவன் இதயம் படக் படக் என்று அடித்துக்கொண்டது. நுதலில் கசிந்து வழிந்தோடிய வியர்வையைச் சுண்டு விரலால் நீக்கிவிட்டு ஒரு வார்த்தையும் பேசாது வெறிச்சோடிய விழிகளுடன் அவ்விடத்தை விட்டு மறைந்தான் ரஹ்மான்.

இந்த ஒரு நிகழ்ச்சி சலீமா பேகத்தின் நினைவில் சுழன்றபோது அவள் திக்பிரமையுடன் ஓலைப் பாயில் தன் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்திருந்ததை முன்பே சொன்னோம். அந்தச் சம்பவம் நடந்து எத்தனையோ மாதங் கள் உருண்டோடிய போதிலும் ஏதோ நேற்று நடந்தது போல் சலீமாவுக்குப் பட்டது.

அண்ணன் அளித்த காணிக்கையை நீர் சுரந்த தன் கண்களில் ஒற்றிக்கொண் டிருக்கையில் வாசல் கதவை யாரோ இடிக்கும் ஓசையைக் கேட்டுச் சுய உணர்வு பெற்றாள். தாவணியின் தலைப்பினால் நயனங்களைத் துடைத்துக்கொண்டாள் . சலீமா, வாசற் கதவைத் திறந்த போது, அங்கு அவள் கண்ட காட்சி அவளை அதிர வைத்துவிட்டது. எந்தச் சகோதரனை நினைந்து குடம் குடமாகக் கண்ணீர் வடித்தாளோ, அவன் பரிதாபக் கோலத்தில் வாசற்படியில் நின்று கொண் டிருந்ததைப் பார்த்ததும் சலீமா மலைத்துப்போனாள்.

“வாங்கோ பாய் … உள்ளே வாங்கோ” என்று தழுதழுத்த தொனியில் பரிவுடன் வரவேற்றுத் தன் அண்ணனைக் கூடத்துக்கு அழைத்துச் சென்றாள் சலீமா பேகம்.

“பாய் சொக்காயைக் கழற்றிவிட்டு முக்காலியில் உட்காருங்கோ . பசியாற ஏதாச்சும் கொண்டு வாரேன்” என்று கனிவுடன் பகர்ந்தாள் சலீமா . மாடத்திலிருந்த கோழி முட்டைகளையும் வாணலிச் சட்டியையும் எடுத்துக் கொண்டு கொவ்வை அதரங்களில் குறுநகை தவழ, குவ ளைக் கண்களில் களிப்பு நீர் ததும்ப அடுக்களைக்கு ஓடி னாள். பத்து நிமிஷம் கழித்து, ‘பாய் நாஸ்த்தா (சிற் றுண்டி) தயாராயிடுச்சு. கை கால் கழுவிவிட்டுப் பாயில் வந்து உட்காருங்கோ” என்ற தங்கையின் பாசம் நிறைந்த குரலைக் கேட்டு எழுந்தான் ரஹ்மான்.

தரையில் நேர்த்தியாக விரிக்கப்பட்டிருந்த தஸ்தரில்’ (விரிப்பு) அமர்ந்தான். தன் சகோதரியின் கைகளினாலே பரிமாறப்பட்ட பணியாரங்களைச் சாப்பிட்டபோது தங்கையின் வாஞ்சை ரஹ்மானை ஓர் உலுக்கு உலுக்கி விட்டது .

திண்ணையில் ஏதோ ஆரவாரம் கேட்டு வாசற் கத வைச் சாத்துவதற்கு விரைந்தாள் சலீமா. கூடத்தில் தாறுமாறாகத் தரையில் பெட்டியைச் சுற்றிச் சிதறிக் கிடந்த ஆடைகளின் மீது பார்வை வீழ்ந்ததும் அவள் நெஞ்சு திக்கென்றது. அவைகளைப் பொறுக்கி யெடுத்துப் பெட்டிக்குள் திணித்தாள். மோதிரத்தை வைக்கும் பெட் டகத்தை எடுத்துத் திறந்தாள். ஓலைப்பாயில் தான் வைத்துச் சென்ற கணையாழியைக் காணாததும் அவள் நெஞ்சு பகீரென்றது! பெட்டிக்குள் திணித்த துணி மணி களை எடுத்து உதறிப் பார்த்தாள். ஓலைப்பாயை எடுத்து உதறினாள். மூலை முடுக்கெல்லாம் துழாவிப் பார்த்தும் அந்த மோதிரம் தென்படவில்லை/ நாகூர் மினாரா’ – ஸ்தூபி – போல் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள் சலீமா.

யார் அதை எடுத்திருப்பார்கள்? அந்தச் சமயத்தில் கூடத்தில் தன்னையும் தன் சகோதரனையும் தவிர வேறு யாரும் இல்லையே! வாசற் கதவு திறந்து கிடந்தபோது, எதிர் வீட்டுப் பித்துக்குளி மூஸாவோ அல்லது அடுத்த வீட்டு அந்தப் பொல்லாத கிழவி ஜைனப்பீவியோ வீட்டுக்குள் புகுந்து அதைத் திருடிக்கொண்டு போய்விட்டார்களா? ‘அட, அல்லாவே! இது என்ன சோதனை?’ என்று ஈனக்குரலில் புலம்பிக்கொண்டு மனமொடிந்து விரல்களை அவள் நொடித்துக்கொண் டிருந்த வேளையில், ‘சலீமா குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று தமையன் எழுப்பிய குரலைக் கேட்டு ஒருவாறு தன்னைச் சுதாரித்துக் கொண்டாள். மனப் பதற்றத்தை வெளியே காட்டாது உள்ளே சென்றாள். ”சலீமா! போன பக்ரீத் பண்டிகை யில் உன்னைப் பார்த்தவன் தான் ! சரி. மச்சான் எங்கே?” என்றான் ரஹ்மான்.

“அவர் பீமாபுரத்துக்கு டியூட்டியில்’ போய் இருக் கிறார். நாளைக் கருக்கல்லே வந்துடுவேன்’ என்று சொல் லித்த்தான் போனார்” என்றாள் சலீமா, சிரத்திலிருந்து நழு விய தாவணியைச் சரிப்படுத்திக்கொண்டு.

“நீ செய்த பணியாரம் ஒன்றையும் மீத்துவைக்க வில்லை” என்று சொல்லி, கலகலவென்று உரக்கச் சிரித்து விட்டு, ”சலீமா , ஒரு சின்ன விஷயமாகத்தான் நான் இங்கே வந்து சேர்ந்தேன்” என்றான் கம்மிய குரலில்.

சலீமா மௌனம் சாதித்தாள். “உன் நிக்காஹின் போது காலையில் வந்து புலவுச்சோற்றைச் சாப்பிடுவதற் குப் பதிலாக இரவு அங்கே வந்தது உனக்கு நினைவு இருக்க லாம்” என்று பீடிகை போட்டான் ரஹ்மான்.

“ஆமாம்… ஞாபகம் இருக்கு” என்று கூறி அண்ண னை அன்புடன் பார்த்தாள் சலீமா.

‘பெற்றெடுத்த தகப்பனாரே என்னை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார். ஊர்க்காரர்களும் என்னென்னவோ என்னைப்பற்றிக் கேவலமாகப் பேசிக்கிட்டார்களாம். அமீராக வாழ்ந்த நான் எதோ வழிதவறிப் பக்கிரியாகப் போய்விட்டேன். ஏழையாகிக் கஷ்டப்பட்ட நான் என் னிடமிருந்த சில காசுகளைப் போட்டு மோதிரம் ஒன்று வாங்கி உனக்கு என் கல்யாணப்பரிசாகக் கொடுத்து என் கடமைமையத் தீர்த்துக்கொண்டேன்” என்றான் ரஹ்மான்.

“பாய் அப்போது நான் எவ்வளவு சந்தோஷப்பட் டேன், தெரியுமா” சலீமாவின் வதனத்தில் களிப்பு மிதந்தது.

“நான் இப்போது இங்கே வந்த விஷயமும் அதைப் பற்றித்தான் சலீமா”

“சொல்லுங்கோ பாய்” என்றாள் . சலீமாவின் தொனி யில் ஆவல் பிரதிபலித்தது.

“நான் எந்தப் பொருளை என் பரிசாக உனக்குக் கொடுத்தேனோ, அந்த மோதிரத்தை எடுத்து வா. ஒரு முறை பார்த்துவிட்டு நான் போய்விடுகிறேன்” என்று ரஹ்மான் கூறியதும் சலீமாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது! ஆயிரம் கருந்தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டினாற் போல் வேதனை உண்டாயிற்று.

சற்று முன் காணாமல் போன அந்தக் கணையாழி யைப்பற்றித் தன் சகோதரனிடம் ஏதாவது காரணம் கூறி மழுப்பிவிட வேண்டும் என்று அப்பேதை நினைத் தாள்.

“பெரிய பாய்! நீங்கள் அளித்த அந்தக்கணையாழியை அழித்துக் காதுக்கு மாட்டல் செய்து போட்டுக்கிட்டேன்.” தட்டுத் தடுமாறிக்கொண்டு சொல்லி மழுப்பினாள் சலீமா .

“அப்படியா செஞ்சுட்டே நல்லதாகப் போச்சுப் போ” என்று சாவதானமாக உரைத்துவிட்டுக் கை கழுவ எழுந்தான் ரஹ்மான். நீர் நிறைந்த செப்பு லோட்டாவை எடுத்துக்கொண்டு சகோதரனைத் தொடர்ந்து சென்றாள் சலீமா.

“சலீமா … உள்ளூரில் கொஞ்சம் வேலை இருக்கு. மத்தியானம் சூரியன் சாய்ந்த பிறகுதான் வருவேன். எனக்காக ஒன்றும் சமைத்து வைக்காதே” என்று கூறி விட்டு ரஹ்மான் புறப்பட்டு விட்டான்.

அண்ணன் சந்தின் முனையைக் கடந்த பின் வாசல் கதவைச் சாத்தினாள் சலீமா. துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வீடு முழுவதையும் பெருக்கிக் குப்பையை ஒரு மூலையில் குவித்தாள். அதைச் சல்லடை போட்டு அலசிப் பார்த்தும் மோதிரம் கிடைக்கவே இல்லை!

மாலை ஐந்து மணிக்கு ரஹ்மான் திரும்பினான். வாழைப் பழங்களையும் கொய்யாக் கனிகளையும் நுங்கு களையும் கொண்ட கூடையுடன் சகோதரன் வீடு வந்து சேர்ந்ததும் சலீமாவுக்குப் பேரானந்தம் உண்டாயிற்று.

“சலீமா ! இன்னும் கால்மணி நேரத்தில் பஸ் வந்து விடும். நான் அதற்குள் கிளம்பியாக வேண்டும்” என்றான் ரஹ்மான்.

“ராத்திரி ஆற அமர இருந்துதான் போங்களேன் பாய். எந்த ஹிஜ்ரி வருஷமோ உங்களைப் பார்த்தது ”

“இருக்கட்டும். இன்னொரு நாள் வந்து சாவதான மாக மச்சானோடு சேர்ந்து உட்கார்ந்து பசியாறிப் போகி றேன்” என்று சொல்லிவிட்டுப் பிறகு தொடர்ந்தான்:

“சலீமா ! நான் உனக்குத் திருமணப் பரிசாகக் கொடுத்த மோதிரத்தை நீ அழித்துவிட்டதாகச் சொன்ன போது எனக்கு என்னமோ போல் இருந்தது. அதற்காக மற்றொரு கணையாழியை வாங்கி வந்திருக்கிறேன். இதை வாங்கிக்கொள்” என்று தன் மடியிலிருந்த கணையாழியை ரஹ்மான் எடுத்துக் கொடுத்ததும் சலீமா திகைத்துப் போய்விட்டாள்.

“அண்ணே…ஏன் இதை வாங்கினீங்கள்?” என்றாள் சலீமா உணர்ச்சி வசப்பட்டு.

“சலீமா, நான் அளித்த அந்த மோதிரத்தை அழித்து. மாட்டலாகச் செய்து போட்டுக்கொண்டாய் என்று நீ சொன்னது பொய்தானே ! மறைக்காதே!” என்று சொல் லிச் சிரித்தான். சலீமா திடுக்கிட்டாள்.

“நான் உன் அண்ணன் என்பதை மறந்துவிடாதே. சலீமா ! நிகழ்ந்து மறைந்த ஒரு கதையை உனக்கு நான் சொல்லும்படியான தருணம் வந்துவிட்டது.’

“கதையா?”

“ஆம்! இத்தனை நாட்களாக என் நெஞ்சில் புகைந்து கொண்டிருந்த கதைதான். சலீமா ! உன் முகத்தில் தைரி யத்துடன் விழிப்பதற்கு ஓர் ஏற்பாடு செய்து கொண்டு வந்தேன்.”

“என்ன சொல்றீங்க, பாய்”

“கேள் சலீமா , கேள் . நான் வீட்டில் நுழைந்தபோது களைப்பாறும் பொருட்டு என்னை நீ கூடத்தில் உட்காரச் செய்தாய் அல்லவா? அப்போது ஓலைப்பாயிலிருந்த பெட் டியைச் சுற்றிக் கிடந்த சாமான்களின் மீது என் பார்வை விழுந்தது. எந்தப் பொருளை நாடி இங்கே வந்தேனோ. அதை இங்கே கண்டதும் எனக்குக் கட்டுக்கடங்காத குஷி உண்டாயிற்று. நான் உனக்குப் பரிசாக அளித்த அந்த மோதிரம்….ஆம் … பச்சைக்கல் பதித்த அதே மோதிரம், பெட்டியருகில் கிடந்ததைப் பார்த்ததும் அதை எடுத்து என் பைக்குள் போட்டுக்கொண்டேன்!”

“நீங்களா”

“ஆமாம்…. உன் அண்ண ன் தான்! அது என் பிடிக் குள் வந்த பிறகுதான் என் மனத்தில் அமைதி ஏற் பட்டது.

“என்ன ….”

“அந்த மோதிரத்தை ஏதாவது ஒரு குட்டையில் எறிந்துவிடத்தான் நான் வெளியே புறப்பட்டேன்.”

“அப்படியே செஞ்சுட்டீங்களா பாய்?” வாய்விட்டுக் கதறிவிட்டாள் சலீமா.

“தூக்கி எறிந்தும் விட்டேன். அதற்குப் பதிலாக இந்தக் கணையாழியை வாங்கி வந்தேன். இதை நீ உன் கைகளினாலே பெற்றுக்கொண்ட பிறகுதான் என் இதயப் படபடப்பு அடங்கியது” என்றான். கற்சிலையைப் போல் செயலற்று நின்று கொண் டிருந்த தன் தங்கையை நீர் மல்கிய நேத்திரங்களால் பாசம் பொங்கப் பார்த்தான்.

“சலீமா! இனி இந்தப் பாவியை நீ மன்னித்துவிட வேண்டும்” என்று ரஹ்மான் கூறியதும் சலீமா அதிர்ந்து போய்விட்டாள்.

“நான் மன்னிப்பதா! உங்களையா ! மோதிரத்தை எடுத்துச் சென்றதற்காகவா?’ என்றாள். அவள் நெஞ்சு படபடத்தது.

“அது மாத்திரமல்ல. உனக்கு நான் இழைத்துவிட்ட மற்றொரு குற்றமும் இருக்கிறது.” என்றான் ரஹ்மான்.

இதைக் கேட்டதும் சலீமாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கண்களில் அந்தகாரம் சூழ்ந்து கொண்டது.

“சலீமா ! இத்தனை நாட்களாக அதை வெளிப்படுத்த என் நாக்குப் புரள மறுத்துவிட்டது. இனி எனக்குப் பய மில்லை. தங்கையாகிய உன்னிடம் மானத்தையும் வெட்கத் தையும் காற்றில் பறக்கவிட்டுத் திடமனத்துடன் சொல்லி விடத் துணிந்துவிட்டேன். கடந்த காலத்தில் நான் அனுப வித்த ஏழைமையான நிலை உனக்குத் தெரிந்திருக்க நியாய மில்லை. பெற்ற தகப்பனாரே என் காலை வாரிவிட்ட காலம் சலீமா ! அந்தச் சமயத்தில் தான் உன் நிக்காஹ் பத்திரிகை என்னைத் தேடி வந்து சேர்ந்தது. என் உயிருக்கு உயிரான தங்கைக்கு அண்ணனான நான் ஒரு கல்யாணப் பரிசு கொடுக்காமல் இருந்தால் இந்த மனித ஜன்மம் எடுத்துத் தான் என்ன பிரயோசனம்? இந்த எண்ணந்தான் என் னைச் சைத்தான் மாதிரி பிடித்து ஆட்டிவிட்டது. ஏதோ என்னிடம் மீந்திருந்ததே நாலைந்து அணாக்கள்! அவற்றை எடுத்துக்கொண்டேன் ; கிளம்பினேன். ஒரு கணையாழியை வாங்கிக்கொண்டேன். இரவு வேளையாகப் பார்த்து உன் மணப்பந்தலில் நுழைந்தேன். கூட்டத்தின் சந்தடியிலே உன் விரலில் அந்த மோதிரத்தை ஆசையுடன் பொருத்தி விட்டு, உடனே அவ்விடத்தை விட்டு ஓசைப்படாது நான் நீங்கியது உனக்கு நினைவு இருக்கும். அப்படி நான் செய்த அந்த ஒரு காரியந்தான் இன்று வரை என் நெஞ் சைச் சித்திரவதை செய்து வந்தது. சலீமா ! எந்தக் கணை யாழியை என் காணிக்கையாக உனக்கு அளித்தேனோ அதன் தரத்தை மாத்திரம் நீ அறிந்திருப்பாயானால் இந்தப் பாவி அண்ணன் முகத்தில் கூட நீ விழித்திருக்க மாட் டாய்! நான் செய்துவிட்ட இந்தச் செயலுக்குப் பிராயச் சித்தமாக ஒரு வழியைத் தேடினேன். மாதம் மாதம் ஐந்து ரூபாயாக ஒரு வருஷகாலமாகச் சேர்க்கலானேன். அந்தத் தொகையைக் கொண்டு ஒரு நல்ல தங்க மோதிரத்தை வாங்கினேன். அதை உன் விரலில் பொருத்தியும் விட் டேன். இப்போது என் மனத்திலும் சாந்தி நிரம்பிவிட்டது” என்று கூறி முடித்தான் ரஹ்மான்.

“அட என் அருமை அண்ணாவே! இதற்காகத்தான் இவ்வளவு மனவேதனைப் பட்டாயா? எந்த நிமிஷத்தில் உன் காணிக்கையை நான் மகிழ்வுடன் பெற்றுக்கொண் டேனோ, அதே கணத்தில் அந்தக் கணையாழி ஒரு பித்தளை மோதிரம் என்று நான் அறிந்துகொள்ளாமல் போக வில்லை. என் அண்ணன் அளித்த பரிசு, பித்தளையாக இருந்தாலென்ன? அல்லது ஓட்டாஞ்சல்லியாகத்தான் இருந்தாலென்ன? எனக்குப் போட்ட தங்க நகைகளை விட அது மிக மிக உயர்ந்தது. இத்தனை மாதங்களாக அதை என் உயிர்போல் காப்பாற்றி வந்தேன் என்பதைத் தெரிந்துகொள். நீ என் பெரிய பாய்! உன் அன்பு ஒன்றே எனக்குப் போதும்” நீ நல்லா இரு என்று இதமாகக் கூறிக்கொண்டே சகோதரனின் சீரடிகளைக் குனிந்து வணங்கினாள் சலீமா.

ரஹ்மானின் இதயம் பாகாய் உருகிவிட்டது. வாயடைத்துவிட்டது. நயனங்களில் பாசம் மிதக்க, நெஞ்சில் அன்பு சுரக்க அவ்விடத்தைவிட்டு அகன்றான் தமையன்.

– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

– ‘கல்கி’யில் மாதச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு ஒன்றைக் காணிக்கையாகப் பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *