தமிழருவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 12,720 
 
 

” தமிழருவி..”.. அம்மா…எனக் கத்தியவாறு தமிழருவி வீட்டுக்குள் ஓடி வந்தாள்.சமையலறையில் கோழிக்கறியை புரட்டிக்கொண்டிருந்த வாசுகி குழந்தைக்கு ஏதோ ஆயிற்று என்று தாய்க்கு உரிய பதட்டத்தில் அரக்கப்பரக்க ஓடி வந்தாள்.

குட்டி மானைப்போல ஓடி வந்து தாயை கட்டிக்கொண்ட தமிழருவி தனது மருண்ட விழியில் கண்ணீர் வழிய மெல்ல மெல்ல விசும்பினாள்.மனதுக்குள் பதட்டம் தொற்றிக்கொள்ள மூளை எல்லையற்ற கற்பனைகளை சித்தரித்துக் கொண்டிருந்தது.ஓரளவு குழந்தை சமாதானம் அடையும் வரை மூச்சை பிடித்துக்கொண்டு பொறுமையாக குழந்தையின் தலையை தடவிக்கொண்டிருந்தாள் வாசுகி.

மெல்ல மெல்ல தமிழருவி குழந்தைகளுக்கான இயல்புக்கு வந்தாள்.ஐந்து வயது நிரம்பிய தமிழருவி அழகான ஒரு குட்டித்தேவதை.அவளது கருமையான முடியும் மருண்ட பெரிய விழியும் பார்ப்பவர்கள் மனச்சுமையை ஒரு நொடிப்பொழுதில் மறக்க வைத்துவிடும்.எந்நேரமும் துடிதுடிப்பாக சுட்டித்தனத்துடன் இருக்கும் தமிழருவி பாலர் வகுப்பில் கல்வி பயில்கின்றாள்.வாசுகி சண்முகத்தைப் பொறுத்தவரை தமிழருவி ஒரு நடமாடும் சொர்க்கம்.

கண்ணா….செல்லம் அம்மு இப்ப சொல்லுங்கள் ..ஏன்அழுதீங்கள் என வாயால் கேள்வி கேட்டுக்கொண்டே அவளது விழிகளை குழந்தையின் உடலெங்கும் மேயவிட்டாள் வாசுகி.எந்த வித காயங்களையோ கீறல்களையோ அந்தப் பட்டுடலில் காணாது தாய்மனம் குளிர்ந்தது.

என்னம்மா ….என்றால் மீண்டும் பரிவாக..”அம்மா என் கூட யாரும் சேர்ந்து விளையாட மாட்டார்கள் அம்மா ..என் கிட்ட யாரும் வரமாட்டாங்க ..பிறகு சீலா ,சோபியா ,மைக்கல் எல்லோரும் என்னைப் பார்த்து பார்த்து கிண்டலாக சிரிக்கிறாங்க…” என்று சொல்லிக்கொண்டு அந்த நினைவில் மீண்டும் விசும்பத்தொடங்கினாள் தமிழருவி.

இன்று நேற்று அல்ல குழந்தை பாலர் வகுப்புக்கு செல்லத் தொடங்கிய இந்த ஆறு மாத காலத்தில் இதே பிரச்சனைதான்.இன்று சரியாகும் நாளை சரியாகும் என தன்னை சமாதனப்படுத்தும் வாசுகி தினமும் இரவில் படுக்கைக்கு போகுமுன் சண்முகத்திடம் இது குறித்து விவாதிக்கத் தவறுவதில்லை.

“இந்த நாட்டுக்கு வந்து படுகிற பாட்டைப்பாருங்க ..நம்ம நாட்டில் என்றால் மொழியும் பிரச்சினையில்லை நிறமும் பிரச்சினையில்லை எல்லோரும் தமிழ் பிள்ளைகள் என்ற மனநிலையே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும்.ஆனால் இந்த நாட்டில் காலநிலையில் தொடங்கி கலை கலாச்சாரம் மொழி பண்பாடு யாவற்றிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் போராட வேண்டியுள்ளது.அதிலும் சிறுவர்களைப் பொறுத்தவரையில் அதுவொரு சுமைதானே.”என தினமும் ஒரு குட்டிப்பிரசங்கம் செய்வாள் வாசுகி.சண்முகத்துக்கும் தந்தைக்குரிய வேதனை இருந்தாலும்”வாசு…இதெல்லாம் போகப்போக சரியாயிடும்.அதிலும் குழந்தைகளுக்கு இலகுவில் இடத்துக்கு ஏற்ப தங்களை இயல்பாக்கம் செய்ய கற்றுக்கொள்ளும் திறமை அதிகமாகவே உண்டு.நீ..ஒன்றும் யோசிக்காதே “என சமாதானம் செய்வான் ஆனாலும் அவனது மனமும் இதே கேள்வியை பலமுறை கேட்டுள்ளது.

எங்களது ஈழத்துப்பள்ளிப்பருவம் எவ்வளவு இனிமையானது.ஒரே கூரையின் கீழ் ஒரே மொழியில் ஒரே கலாச்சாரத்தில் எப்படி வளர்ந்தோம் கற்றோம்.ஆனால் புலம்பெயர் நாட்டில் நம் குழந்தைகளின் இளமைக்காலம்….ஏக்கங்களும் போராட்டங்களும் நிறைந்ததாக மாறிவிட்டது.சொந்தத் தாயகத்தில் சுதந்திரமாய் வாழ வழியற்றுப்போன சுதேசிகள் நாங்கள் .யாரைக் குற்றம் சொல்வது? ஆற்றமையின் வெளிப்பாடாக பெருமூச்சுதான் வெளியேறுகிறது.

இன்று வழமைக்கு மாறாக மிகவும் மனம் உடைந்து போயிருந்தாள் வாசுகி.”இங்க பாருடா தமிழ் அவங்க எல்லோரும் உன் கூட சேருவாங்க ..நீ அவங்க கூட சிரிச்சு பேசனும் பொருட்களை கொடுக்கனும் என்றாள் மிக பக்குவமாக குழந்தையின் முகத்தில் விழிபதித்து…”.கண்ணை விரித்து தாயின் முகத்தைப் பார்த்த தமிழ் கள்ளம் கபடமற்றவளாக “அம்மா எனக்குத்தானே அவங்க போல டொச்சுப் பேச (யேர்மன்மொழி)வராதே என்றாள்.

சுர் என்று ஏதோ மூளையில் போய் குத்தியது போல உணர்ந்தாள் வாசுகி.ஆனாலும் முகபாவனையை மாற்றாது “அவங்க கூட பேசிப்பேசி பழக வரும் கண்ணம்மா என்றாள் வாஞ்சையுடன்.” ஆனால் தமிழருவியோ ” அதெல்லாம் வருதில்ல அம்மா ரொம்ப கஷ்டமாக இருக்கு அம்மா எல்லோரும் நான் பேசும் போது சிரிக்கிறாங்க “என்றாள் முகம் சுருங்கி.

எங்கேயோ ஒரு குற்ற உணர்வு தோன்றிமறைவதை தன்னையறியாது உணர்ந்து கொண்டாள் வாசுகி.

எங்க பிழை? எங்களிடமா? இல்லை பாடசாலையில் கல்வி கற்கும் சகமாணவர்களிடமா ?அல்லது ஆசிரியரிடமா? என முதல் முறையாக சரியாக யோசிக்கத் தொடங்கினாள் வாசுகி.ஏதோவொரு தெளிவு பிறக்க குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடி இயல்பநிலைக்குள் தன்னை மாற்றிக் கொண்டாள் வாசுகி.

வீட்டுக்குள் நுழைந்த சண்முகம் வழமையை விட மனைவி அமைதியாக இருப்பதாக உணர்ந்தான்.ஏதோவொரு பிரளயத்துக்கான அமைதிதான் இதுவென்று யோசித்துக்கொண்டே உணவை உண்ணத் தொடங்கியவனிடம் பேச்சைத் தொடங்கினாள் வாசுகி.

நாங்க இரண்டு பேரும் ஒருதரம்,தமிழருவியின் ஆசிரியரை சந்திக்கவேண்டும் என்றவள் சாவகாசமாக நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கணவனிடம் ஒப்புவித்தாள்.சண்முகத்திடமும் அதே கவலை தொற்றிக்கொள்ள குழந்தைகள் கள்ளம் கபடம் அற்றவர்கள் ஆனால் அவர்களின் குழப்பத்துக்கான காரணத்தை கண்டு பிடித்து தீர்வு செய்யவேண்டியது பெற்றோராகிய நமது கடமை என உணர்ந்தவன் தொலைபேசியில் ஆசிரியருடன் தொடர்பு கொண்டு பெற்றோர் சந்திப்புக்கு நேரத்தை பதிவு செய்தான் .

ஆசிரியர் கிறிஷ்டியான் மிகவும் அமைதியாக இருவரது முகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார்.”சொல்லுங்க சண்முகம் என்னை சந்திக்க வந்ததுக்கான காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றேன் “என்றார்…தொடர்ந்து “எதுவாக இருந்தாலும் உங்களுக்கு உதவ நான் தயாராக உள்ளேன் “எனக்கூறி நட்பாக புன்னகைத்தார்.

இந்த ஆறுமாத காலத்தில் தமிழருவி தங்களிடம் பகிர்ந்ததை ஒன்றுவிடாமல் ஒப்புவித்தான் சண்முகம்.மிகவும் சிரத்தையுடன் செவிமடுத்த கிறிஸ்டியான் “நானும் இது குறித்து உங்களுடன் பேசவே இருந்தேன்.ஆனால் பெற்றோராகிய நீங்கள் பிள்ளையின் நலத்தில் என்னைவிட வேகமாக இருக்கிறீர்கள் ” எனக் கூறி அவர்களை பெருமைப்படுத்தியவர்….தொடர்ந்து “தமிழருவி அமைதியான அறிவான சிறுமி.ஆனால் அவளது எண்ணங்களையும் கருத்துக்களையும் தங்குதடையின்றி வெளிப்படுத்த அவளால் முடியவில்லை காரணம் “மொழி”.அவளால் ஓரளவு ஏனும் டொச்சு மொழியை பேசமுடியவில்லை அத்துடன் சக சிறார்களுடன் ஒன்றித்து போகவும் இயலவில்லை.இதற்கான காரணம் என்ன ?என்பதை ஆசிரியராகிய நானும் பெற்றோராகிய நீங்களும் சிந்திக்க வேண்டும்.கடந்த பத்து ஆண்டுகளாக புலம்பெயர் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்த அனுபவம் எனக்கு இருப்பதனால் ..சில கேள்விக்கான பதிலை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கின்றேன்.இதனூடாக தமிழருவிக்கு சிறந்த தீர்வினை ஏற்படுத்திக்கொடுக்கலாம் என்றார் கிறிஸ்டியான்.

எமது மகளின் நலனுக்காக உங்களுடன் ஒன்றித்து செயல்பட நாங்கள்தயாராக உள்ளோம் என இருவரும் ஒருமித்து பதில் அளித்தனர்.அவர்களது பாசத்தையும் ஆர்வத்தையும் கண்டு மனதுக்குள் மகிழ்ந்த கிறிஸ்டியான்

“தமிழருவி உங்களது முதல் குழந்தையை? ஆமாம் என்றனர் வாசுகியும் சண்முகமும் .வீட்டில் தாய் மொழிதானே பேசுவீர்கள் …ஆமாம் என்றனர்.

நல்ல விடயம் !தனது தாய்மொழியில் சிறப்பாக பேசும் குழந்தையால் இன்னுமொரு மொழியை இலகுவாக கற்றுக்கொள்ள முடியும்.இதனால் தமிழருவியாலும் சரளமாக டொச்சு மொழியை பேச முடியும்.சிறுவயதில் இருந்து வேற்றுக்குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட அவளுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்ததா? இல்லை என்றனர் இருவரும் தயக்கமாக… ஏன் என்றார் கிறிஸ்டியான் கண்களைச்சுருக்கி..அந்தப் பார்வையில் ஒரு அதிருப்தியை உள்வாங்கிய வாசுகியும் சண்முகமும்…ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

நிலமையை உணர்ந்து கொண்டு சண்முகம் மெல்ல ஆரம்பித்தான் “நாங்கள் ஒரு தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கின்றோம்.என் மனைவியால் ஓரளவுதான் டொச்சு மொழி பேச முடியும்.ஆனால் அங்கு வாழும் வேற்று நாட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் போது ஏதாவது பிரச்சனைகள் வரலாம் அத்துடன் குழந்தையும் சில தப்பான பழக்கங்களை மொழி ரீதியாக செயல் ரீதியாக கற்றுக்கொள்ளலாம் இதையெல்லாம் ஊகித்தே நாங்கள் சிறுவயது முதல் குழந்தையை சக குழந்தையுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்கவில்லை என்றான் குரலில் சுரத்தையின்றி.

ஆழமாக இருவரையும் ஊடுருவிய கிறிஸ்டியான்” என்னால் உங்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் நீங்கள் வாழ்ந்த வளர்ந்த நாட்டில் உங்கள் குழந்தை வாழவில்லை.அவளுக்கு சிறு வயது முதல் பெற்றோரைத் தாண்டிய சமூகத்தொடர்பு அவசியம் தேவைப்படுகிறது.தனது வயதொத்த சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடும் போது தன்னை அறியாமல் பலவற்றை அவள் கற்றுக்கொள்கிறாள்.குறிப்பாக மகிழ்ச்சி ,வெளிப்படை ,மொழி ,விட்டுக்கொடுப்பு ,புரிந்துணர்வு , என எண்ணிலடங்கதவை.அதைவிட தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் மனவுறுதியும் ஏற்படுகிறது.இதைத்தாண்டி நீங்கள் கூறுவது போல சில கெட்ட விடயங்களும் கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.ஆனால் பெற்றோராகிய நீங்கள் தக்கவாறு விளக்கமளித்து அதனை திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.மாறாக நீங்கள் நடந்து கொண்ட முறையால் தமிழருவிக்கு இன்னுமொரு மகிழ்ச்சிகரமான உலகம் உண்டு என்பதை அறிய இதுவரை வாய்பற்று போய்விட்டது.

இதைத்தாண்டி ஒருவித தாழ்வுமனப்பான்மையும் அவளுள் வளர்ந்து கொண்டு வருகிறது இதனை சிறுவயதிலிருந்தே போக்க வேண்டும்.அதற்கு பெற்றோராகிய நீங்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும்.உங்களது சமூகத்தொடர்பு உங்கள் மகளின் வாழ்வுக்கு உறுதுணையாக அமையும்.விளையாட்டு மைதானம் ,நூலகம் போன்ற இடங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள் அவள் வயது ஒத்த குழந்தைகளுடன் சுயமாக பழக அனுமதியுங்கள் அதைத்தாண்டி பயனுள்ள ஓய்வு நேரத்தை அவளுக்காக ஒதுக்குங்கள் என்றார் கிறிஸ்டியான்

எவ்வளவு அறிவு பூர்வமான விளக்கம் .சிறுவயது முதல் “நம் குழந்தை” என்று பாசத்தை மட்டுமே கொடுத்து வளர்த்தோமே தவிர வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப குழந்தையை வழிப்படுத்த தவறிவிட்டோமே ..என இருவரும் ஒரே கணத்தில் சிந்தித்தனர்.குற்ற உணர்வும்மனவேதனையும் ஒருங்கே தோன்ற மனைவியின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டான் சண்முகம்.அதனை ஓரக்கண்களால் கவனித்த கிறிஸ்டியான் தனது கருத்தை அவர்கள் உள்வாங்கியுள்ளனர் என மனதுக்குள் மகிழ்ந்தார்.தமிழ் போல தமிழருவியின் வாழ்விலும் இனிமை சொட்டும்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *