பேப்பர் போடும் பையன், மாதத்தின் முதல் வாரத்தில் பில் கொண்டு வருவான். அவனது கடை முதலாளி போட்டு அனுப்பும் பில் அது.
இந்த மாதம் தமிழ், ஆங்கில தினசரிகள், வாராந்திரப் பத்திரிகைகள் எல்லாமாகச் சேர்த்து 201 ரூபாய் என பில்லில் கூட்டிப் போட்டிருந்தது. அதை என் மனைவியிடம் நீட்டினேன். பணம் எடுக்க உள்ளே போனவள், என்னை அழைத் தாள்.
“இங்கே பாருங்க, மொத்த டோட்டல் 301 வருது. தப்பா கூட்டி 201-ன்னு போட்டிருக்கார். பேசாம 201 ரூபாயே கொடுத்தனுப்புவோம். நமக்கு 100 ரூபாய் லாபம்!” என்றபடி பணத்தை எண்ணத் தொடங்கினாள். நான் பில்லைக் கொண்டு போய் மேஜையில் வைத்தேன்.
அங்கு வந்த என் எட்டு வயதுப் பெண் அதை எடுத்துப் பார்த்து, பின்பு சத்தமாக, “அப்பா! இங்கே பார், தப்பா கூட்டிப் போட்டிருக்காங்க. மொத்த டோட்டல் 301 வருது” என்றாள்.
கடைப் பையன் சுதாரித்துக்கொண்டு பில்லைக் கேட்டு வாங்கிப் பார்த்து, “ஆமாங்க, பாப்பா சொல்றது சரிதான். 301 ரூபாதான்!” என்றான்.
பில்லிலேயே திருத்தம் செய்து பணம் கொடுத்தனுப்பிவிட்டு, கடுகடுவென்ற முகத்துடன் என் மகளை நோக்கித் திரும்பிய என் மனைவி, “ஏய் அதிகப்பிரசங்கி…” என்று கோபமாகத் திட்டத் தொடங்குவதற்குள் குறுக்கிட்டு,
“குழந்தையைத் திட்டாதே! பில்லில் இருந்த தப்பை மட்டும் அவ திருத்தலே, நம்ம தப்பையும் சேர்த்துதான். புரிஞ்சுக்கோ!” என்றேன்.
– செப்டம்பர் 2007