(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சதாப்தி ரயிலில் பதிவுப் பட்டியலில் ராம்ஜீ என்கிற பெயரைப் பார்த்து இருக்கை எண்ணைச் சரிபார்த்து, தன்னுடைய பெட்டியை மேலே வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார் ராம்ஜீ. பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த ஒருவர் தன் முகத்தை மூடியிருந்த புத்தகத்தை எடுத்துவிட்டு நிமிர்ந்தார். வாங்க ராம்ஜீ எப்பிடி இருக்கீங்க என்றார் அவர். அதில் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்தது. ஹும் சௌக்கியம், மிஸ்டர் முத்துஸ்வாமி. நீங்க சௌக்கியமா என்று கேட்டுவிட்டு இருக்கையில் சாய்ந்தார் ராம்ஜீ.
ராம்ஜீ பணி புரிந்த ஆலையில், அவருக்கு மேலாளராகப் பணியாற்றியவர் இந்த முத்துஸ்வாமி. ராம்ஜியின் மனம் சதாப்தியை எதிர்த்து அதே வேகத்தில் பின்னோக்கிச் சென்றது. அவருடைய பழைய நினைவுகள் மேலே வரத் தொடங்கின. அந்தப் பிரபலமான நிறுவனத்தில் அவர் பணியாற்றிய காலங்கள் மனக் கண்ணில் தெரிந்தன. ராம்ஜீ உண்மையாகத் தொழிலை மதித்து நடந்தவர். பலவிதமான ஆபத்துகளில் நிர்வாகத்துக்கு உதவியவர். ஒரு தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாது, தீயை அணைத்து நிர்வாகத்திற்கு ஏற்பட இருந்த பெரும் இழப்பைத் தடுத்தவர் என்கிற முறையில் ராம்ஜீயைப் பாராட்டியது நிர்வாகம். ஹும் அதெல்லாம் பழைய கதை.
அப்படிப்பட்ட நிர்வாகத்தில் திடீரென்று பழைய மேலாளர் வயதானதால் பணி ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக வந்த புதிய பொறுப்பாளர்தான் இந்த முத்துஸ்வாமி. நேர்மையாக இருந்த காரணத்தால் ராம்ஜீ யாரிடமும் தலை வணங்கியதில்லை. வீண் கர்வத்துக்கும் தலைக்கனத்துக்கும் மொத்த உருவமாக வந்த இந்த முத்துஸ்வாமிக்கும் ராம்ஜீக்கும் அடிக்கடி தகராறுகள் தோன்ற ஆரம்பித்ததில் வியப்பில்லைதான். ராம்ஜீ அந்த நிறுவனத்தை விட்டு, தானாக விலக வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திய முத்துஸ்வாமி இவர்தான். இந்த முத்துஸ்வாமி அளித்த தொல்லைகள் கணக்கில் அடங்காதவை. அத்தனையும் பொறுத்துக்கொண்டு தன் வீட்டுச் சூழ்நிலை காரணமாகத் தாங்கிக்கொண்டு பணிபுரிந்துகொண்டிருந்தார் ராம்ஜீ.
ஒரு நாள் மேலாளர் அழைக்கிறார் என்று கூறிய பணியாளரை அனுப்பிவிட்டு, முத்துஸ்வாமி இருந்த அறைக்குள் ‘உள்ளே வரலாமா’ என்று அனுமதி பெற்று, நாற்காலியில் உட்கார்ந்தார் ராம்ஜீ. ‘என் அனுமதி இல்லாமல் என் அறையில் உட்காரக் கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா அது இருக்கட்டும். எல்லாருமே நான் சொன்னாக் கேக்கறாங்க. நீங்க மட்டும் தொழிலாளருக்குப் பரிந்துகொண்டு என்னை எதிர்க்கிறீங்களே. இது தப்புன்னு உங்களுக்குத் தெரியலையா’ என்றார் முத்துஸ்வாமி எழுந்து நின்ற ராம்ஜீ, ‘சார், என்னிக்கும் எப்பவும் நான் நியாயத்துக்குத்தான் தலை வணங்குவேன்.
அநியாயத்துக்கு நான் தலை வணங்க மாட்டேன்’ என்றார்.
அன்றிலிருந்து ராம்ஜீக்கு ஆரம்பித்தது தலைவலி. ஒரு நாள் கூட அவரை நிம்மதியாய் விடவில்லை. அத்தனையும் நினைவுக்கு வந்தது, கடைசியில் ஒரு நாள் ராம்ஜீயை அழைத்து இன்னும் ஒரு வருட காலத்துக்குள் உனக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தி, பணியிலிருந்து அனுப்புகிறேன் என்று வாய்விட்டு சொல்லவிலையே தவிர, எவ்வளவு தொல்லை தர முடியுமோ அவ்வளவு தொல்லை தந்தார் முத்துஸ்வாமி. அதிகார பலமும் ஆணவமும் இருக்கும் ஒருவரிடம் நேர்மையான ராம்ஜீ போன்றவர்கள் எத்துணை நாள் தாக்குப் பிடிக்க முடியும்? அதற்கேற்றாற்போல் ஆலையில் ஆட்குறைப்பு செய்யவேண்டிய கட்டாயம். அந்தப் பொறுப்பை இந்த முத்துஸ்வாமியிடம் கொடுத்தார்கள் நிறுவன உரிமையாளர்கள். ஏற்கெனவே மந்தி, அதற்கு கள்ளும் ஊற்றிக் கொடுத்தால்? இந்தக் முத்துஸ்வாமிக்கு இன்னும் வசதியாகப் போய்விட்டது. யார் யாரை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்னும் ஒரு பட்டியலைத் தயார் செய்தார் முத்துஸ்வாமி. அந்தப் பட்டியலில் ராம்ஜீயின் பெயர் முதலில் இருந்தது. யாரோ ஒரு புண்ணியவான் ராம்ஜிக்கு இந்தச் செய்தியை ரகசியமாகக் கூறினார்.
ராம்ஜியும் முடிவெடுத்தார், முத்துஸ்வாமி தன்னை அனுப்பு முன் தானே பணியை உதறி வெளியே வருவதென்று. அதே போல் தன்னுடைய விருப்ப ஒய்வு விண்ணப்பத்தைத் தானாகவே இவரிடம் அளித்தார் ராம்ஜி. முத்துஸ்வாமிக்கு மிகவும் சந்தோஷம். மறு நிமிடமே அதற்கு வேண்டிய அனைத்துப் பணிகளையும் செய்தார். ராம்ஜி இந்த ஆலையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியவர். அவர் பணி செய்யாத பகுதியே இல்லாத ஆலையை விட்டு, தாயைப் பிரிவது போன்ற துக்கத்துடன் பிரிந்தார்.
இன்றும் அந்த வழியாகப் போகும்போது என்னை வளர்த்த தெய்வமே, உனக்கு நன்றி என்று சொல்லாமல் போவதில்லை ராம்ஜி. அப்படிப்பட்ட ஆலையை விட்டு வேறு வழியில்லாமல் வெளியே வரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கினவர் இந்த முத்துஸ்வாமி. அது ஒரு கொடுமையான காலம். அராஜகமும் அதிகாரமும் ஆணவமும் தான்தோன்றித் தனமும் நேர்மையை வெற்றிகொண்டன.
தான் தோற்றதற்குக் கூட ராம்ஜி கவலைப்படவில்லை. ஆனால் தருமமும் நியாயமும் என்றுமே தோற்கின்றவே என்கிற மன வருத்தத்துடன் ஆலையைப் பிரிந்து வெளியே வந்தார். அதற்குப் பிறகு அவருடன் பணி புரிந்தவர்கள், அடிக்கடி ராம்ஜியிடம் வந்து ‘முத்துஸ்வாமியின் ஆட்டம் அதிகமாகிவிட்டது, அவருடைய அராஜகம் மிகவும் அதிகரித்து விட்டது’ என்று சொல்லுவார்கள். என்ன செய்ய முடியும், வருத்தப்படுவதைத் தவிர. பலபேர் இந்தக் முத்துஸ்வாமியால் பாதிக்கப்பட்டு ஆலையை விட்டு வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
ராம்ஜி நிகழ்காலத்துக்கு வந்தார். தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த முத்துஸ்வாமியைத் திரும்பிப் பார்த்தார். இவரைப் பார்த்து சுமார் பத்து வருடங்கள் ஆகின்றன. பத்து வருடங்கள் கழித்தும் இன்னும் அதேபோல் கொஞ்சமும் கர்வமும் மிடுக்கும் குறையாமலிருந்தார் முத்துஸ்வாமி. பார்வையிலும் உதட்டுச் சுழிப்பிலும் ஏளனம் தொக்கி நிற்கும் அதே திமிர்த்தனமான பார்வை. முத்துஸ்வாமி, ராம்ஜீயைப் பார்த்து, “என்ன ராம்ஜீ எப்பிடி இருக்கீங்க?” என்றார். புன்னகையுடன் நல்லா இருக்கேன் என்ற ராம்ஜீ ஆமாம் நீங்க எப்பிடி இருக்கீங்க என்றார்.
எனக்கென்ன நான் எப்பவுமே நல்லாதான் இருக்கேன்” என்றார் முத்துஸ்வாமி. சிறிது நேரம் சென்றது. முத்துஸ்வாமி, ராம்ஜியைப் பார்த்து நான் கொஞ்ச நேரம் மேல் பர்த்திலே தூங்கறேன். கீழே இருக்கிற சிவப்புப் பெட்டி என்னோடது. ஒரு கண்ணு வச்சுக்கங்க என்று சொல்லிவிட்டுத் தூங்க ஆரம்பித்தார். சிறிது நேரம் விழித்திருந்த ராம்ஜீயும் லேசாகக் கண்ணயர்ந்தார். திடீரென்று பூகம்பம் வந்தாற்போல் ஒரு குலுக்கல், ஒரே கூக்குரல்கள். ராம்ஜீயும் சரிந்து விழுந்தார்.
முத்துஸ்வாமியும் விழுந்தார். அவருக்குப் பலத்த அடிபட்டு, நெற்றியிலிருந்து ரத்தம் பொங்கி வர ஆரம்பித்தது.
பிரயசைப்பட்டு எழுந்து கதவு வழியே எட்டிப் பார்த்தார் ராம்ஜீ. லெவல் கிராசிங்கில் பழுது பட்டு நின்று போன ஒரு பேருந்தின்மேல் மோதாமல் இருக்க, ரெயில் ஓட்டுநர் போட்ட பிரேக், ரெயில் பெட்டிகளை அதிர வைத்திருக்கிறது என்று உணர்ந்தார். உடனடியாக யாரேனும் மருத்துவர் இருக்கிறாரா வண்டியில் என்று கேட்டு, நல்ல நேரமாய் ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்து, முத்துஸ்வாமிக்கு முதல் உதவி செய்து படுக்க வைத்துவிட்டு, முதுகு வலி தாங்காமல் அவரும் உட்கார்ந்தார்.
மீண்டும் அனைவரும் சுதாரித்துக்கொண்டதும் ரயில் ஓடத் தொடங்கியது. டெல்லியை சமீபித்து டெல்லி நிலையத்தில் நின்றது. ஒரு வாலிபன் வந்து, முத்துஸ்வாமியைப் பார்த்து அப்பா என்ன ஆச்சு தலையிலே கட்டு போட்டிருக்கீங்க என்று பதறினான்.
அவருக்கு லேசா அடி பட்டுதுப்பா. பயப்படறா மாதிரி வேற எதுவுமில்லே என்ற ராம்ஜியைப் பார்த்து, அங்கிள் நீங்களா நான் பதறிப் போய்ட்டேன். நல்லா இருக்கீங்களா?” என்றான். அடேடே அக்க்ஷய், எப்பிடிப்பா இருக்கே நல்லா இருக்கியா? எப்போ அமெரிக்காவிலிருந்து வந்தே என்றார் ராம்ஜீ.
“போனவாரம் தான் வந்தேன் அங்கிள் என்று கூறிவிட்டு முத்துஸ்வாமியின் திரும்பி, “அப்பா உங்களுக்கு ஒண்ணும் இல்லையே என்று கேட்டுவிட்டு, இவர் என்று ஆரம்பித்தான்.
அதற்கு முத்துஸ்வாமி தெரியும் அக்ஷய் ராம்ஜி எங்கிட்ட வேலை பார்த்தவர் என்றார். அது மட்டுமில்லே எனக்கு அடிபட்டதும் ஒரு டாக்டரைத் தேடி, முதல் உதவி செஞ்சார் என்றார். உடனே அக்க்ஷய் அட அப்பிடியா, என்ன அதிசயம் பாருங்கப்பா. இப்போ இவரோட மகன் விஸ்வநாதன் தான் என்னோட மேனேஜர்,
அமெரிக்காவில. எங்க கம்பனி முதலாளியோட வலது கை. ரொம்ப நல்ல மனுஷன். இவரை மாதிரியே என்றான்.
“என்னோட திறமைகளை எல்லாம் எங்க நிறுவனத்திலே எடுத்துச் சொல்லி எனக்குப் பணி உயர்வெல்லாம் வாங்கித் தந்தவர் இவரோட மகன் விஸ்வநாதன் தான் என்றான் அக்க்ஷய். முத்துஸ்வாமியின் முகம் இருண்டது. ஒரு கண நேரத்துக்குள் முத்துஸ்வாமிக்குப் பயம் வந்தது. தன் மகனை இந்த ராம்ஜீ பழிவாங்கி விடுவாரோ என்று. இன்னும் முத்துஸ்வாமியின் முகம் இன்னும் இருண்டே இருந்தது.
ரெயிலை விட்டு கீழே இறங்கிய ராம்ஜீ, மெதுவாக முத்துஸ்வாமியின் கையைக் குலுக்கிவிட்டு உங்கள் மகன் மிக திறமைசாலி வேலையில் கெட்டிக்காரன் என்று என் மகன் சொல்லுவான். உங்கள் மகனுக்கு உதவியாக என் பிள்ளை இருப்பான், கவலைப்படாதீங்க என்று அக்க்ஷயின் காதில் விழாதபடி சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்..
இறைவனின் கணக்கு என்றுமே தவறுவதில்லை.
– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.