தபாற்காரச் சாமியார்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2022
பார்வையிட்டோர்: 4,545 
 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

அன்று காலையிலிருந்து சந்திரனின் மனம் ஒரு நிலையி லில்லாது தத்தளித்த வண்ணம் இருந்தது. தனது தொழிலுக்கான காக்கிச் சட்டையை அணிந்து கொண்ட போது, நெஞ்சில் ஏதோ குடைச்சல் ஏற்படுவது போல அவன் உணர்ந்தான்.

காற்சட்டைப் பையிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்து இரண்டு தம் இழுத்தான். அப்பொழுது கூட அவனைப் பற்றி நின்ற சோர்வுநிலை விட்டு நீங்கவில்லை.

முற்றத்திலே இறங்கி வேலியிலே சார்த்தியிருந்த சைக்கிளை எடுத்தபோது, வழக்கம்போல ஜிம்மி வாலையாட்டியபடி வந்து அவன் காலை நக்கியது. சந்திரன் எரிச்சலோடு ‘சீ! நாயே’ என்று அதைக் காலால் உதைத்தான். ஜிம்மி ஓலமிட்டபடி தலை வாயிலைப் பார்த்து ஓடியது.

“பாவம்! வாயில்லாச் சீவன். உங்கடை எரிச்சல் அதுக்குத் தெரியுமா?” என்ற மனைவியின் அனுதாபக் குரலைக் கேட்டும் கேட்காதவன் போல அவன் சைக்கிளில் ஏறினான். பழக்கப்பட்ட சைக்கிள், கால்களின் உந்தலால் ஓர் ஒழுங்கிற் சென்று தபாற் கந்தோரை அடைந்தது.

‘மெயில்’ பிந்திவிட்டது என்பதால் தபாற்காரர்கள் அங்கங்கே கூட்டமாய் நின்று உலக விவகாரங்களைப் பிளந்தெறிந்து கொண்டிருந்தார்கள்.

“மச்சான்! இதைக் கேட்டியே? கொழும்பிலையோ எங் கேயோ நம்ம சகோதரத் தொழிலாளி ஒருவனிலை, அவன் தபால்களைச் சரிவர ‘டிலிவரி’ பண்ணுறதில்லை எண்டு கொம்பி ளெயின்ற் வந்துதாம். சந்தேகப்பட்டு அவன்ரை வீட்டை போய்ப் பரிசோதித்துப் பார்த்ததிலை நூற்றுக்கணக்கான கடிதங்கள் டிலிவரி பண்ணப்படாமலே கிடந்ததாம். எப்பிடி வேலை? அங்காற் பக்கங்களிலே அவங்களெல்லாம் இப்பிடித்தான் போலை”. தனது ‘டக்ளஷ் பெயர்பிறாங்’ மீசையைப் பெருவிரலால் முறுக்கியபடி கதிரவேலு உதிர்த்த வார்த்தைகள் இவை.

“அதையேன் கேட்கிறாய்? அவங்கள் மணி ஓடர், போஸ்டல் ஓடர்களைக் கூடக் கள்ளக் கையெழுத்து வைத்து மாற்றிப்போடுவாங்களாம். இங்கை நாங்கள் தான் கடவுள், கடமை, மனச்சாட்சி எண்டு சாகிறது. என்ன சாமியார்! சொல்லும் பார்ப்பம்.” வந்த நேரத்திலிருந்து அத்துவானக் கிறக்கத்தில் மனத்தையும், சிந்தனையையும் ஓட்டிக்கொண்டிருந்த ‘தபாற் காரச் சாமியா’ராகிய சந்திரனை நோக்கிச் சுப்பிரமணியம் இவ்வாறு சொன்னான். நாள் தவறினாலும் கடவுளைப் பற்றியும், மனச் சாட்சியைப் பற்றியும், கடமையைப் பற்றியும் தவறாது தர்மோப தேசம் செய்யும் தன்னைச் சீண்டிவிடத்தான் சுப்பிரமணியம் இவ்வாறு பேசுகிறான் என்பதைச் சந்திரன் உணர்ந்தாலும், வழக்கத்திற்கு மாறாக அவன் மௌனம் சாதித்தான். இதனால் சுப்பிரமணியத்தின் ஆயுதம் ‘பூமறாங்’ ஆகிவிட, அங்கு அதிர்ச்சி யும், ஆச்சரியமும், அமைதியும் சில கணங்கள் நிலவின.

அந்த அமைதி கலைந்தபோது சந்திரன் அவ்விடத்தில் இல்லை. அவன் மெதுவாக அவ்விடத்திலேயிருந்து நழுவிக் கடிதப் பிரிப்பறைக்குச் சென்று ஒரு ஸ்டூலிலே அமர்ந்து கொண்டான்.

கட், கட், கட, கட என்று ஓய்வொழிவில்லாதபடி தட்டிக் கொண்டும், தந்திச் செய்திகளை அவ்வப்போது தந்திக்காரரிடம் கொடுத்துக்கொண்டும் டெலிபோனிஸ்டுகள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். “கொஞ்சம் பொறுமன் காணும். என்ன அவசரம்?… உங்களுக்கென்ன? முத்திரையோ… நீங்கள்? றிஜிஸ்றேஷனா? அடுத்த கவுண்டர்” என்று கதம்பமாக எழுகின்ற இலிகிதர்களின் ஒலி வேறு காதில் நாராசமாக விழுந்தது ஆனால். அவையொன்றும் சந்திரனின் ஏகாந்த யோகத்தைக் குலைக்க வில்லை .

‘வார்’ ஓட்டத்தில் எதிராளியின் கையிலே தட்டி விட்டு ஓட அவன் துரத்தி வருவதுபோலச் சிந்தனையைத் தட்டிவிட்டு அது தன்னைத் துரத்திவர ஒளிப்பதற்கே இடமின்றிச் சந்திரன் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

தான் செய்தது பிழை என்று முடிவு கட்டவுங் கூடவில்லை ‘சரி’ என்று தனக்குத்தானே ‘சபாஷ்’ போடவுங் கூடவில்லை.

சந்திரன், திரிசங்கு சொர்க்கத்தின் அந்தரத்திலே தொங்கித் தவித்தான்.

2

“பபா! தபாற்கார மாமாவாக்கும், போய்த் தபாலை வாங்கிக் கொண்டு வாங்கோ.” தனது மணியோசைக்குப் பதிலாக வீட்டி னுள்ளேயிருந்து வந்த குரலின் கனிவிலே சந்திரன் மெய்மறந்து போனான்.

“தபாற்காரன் வந்திட்டானே? தபாற்காரனோ? அவனிட் டைப் போய்த் தபாலை வாங்கு” என்றெல்லாம் அலட்சியமான குரல்களையும், வரவேற்புக்களையும் வீடுகள் தோறும் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்ட அவனுக்கு இந்த அனுபவம் புதுமையாக இருந்தது.

அந்தப் புதுமையனுபவத்தைச் சுவைத்தபடி அவன் நின்ற பொழுது, நாலே வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி வந்து, “மாமா! தபால் தாருங்கோ ” என்று தனது குஞ்சுக் கரங்களை நீட்டினாள். சந்திரன் தபாலைக் கொடுத்தபோது. ”நன்றி, வணக்கம்’ என்று சொல்லியபடி அவள் தபாலை மரியாதையோடு வாங்கிச் சென்றமையைச் சந்திரனால் என்றுமே மறக்கமுடியாது.

அன்றிலிருந்து சந்திரனது உலகத்தில் அந்தக் குழந்தையும், குழந்தையை ஏவிய அந்தத் தாயின் குரலும் இடம் பெற்றுச் சிறிது சிறிதாய் ஆக்கிரமிக்கக் தொடங்கி விட்டன. அந்தக் குடும்பத்திலே தானும் ஓர் அங்கத்தவனாகிவிட்ட உள்ளுணர்வு அவனுக்கே தெரிந்த பரமரகசியமாக அவனுள்ளே இதய அந்தரங்கத்தில் ஒளி விட்டு மின்னியபடி இருந்தது.

சிறுமி வராத நேரங்களில் தாயே வந்து தபாலை வாங்கிச் செல்வாள். மென்மையும், பெண்மையும் நெற்றியிலே குங்கும மாகத் திகழ, அதன் பின்னணியில் உலகின் பரிசுத்தமே ஓர் உருவமாகி வருவது போல அந்தப் பெண் வரும்பொழுது அவன் மானசீசமாக அந்தத் தாய்க்கு அஞ்சலி செய்யத் தவறியதேயில்லை .

சகோதர பாசமே இன்னதென்றறியாதவனும், குழந்தைப் பேற்றையே அடைமுடியாத மலடனுமாகிய தனக்கு ஒரு சகோதரி யும், ஒரு குழந்தையும் கிடைத்துவிட்டது போன்ற பைத்தியகாரக் கனவிலே சந்திரன் மிதந்து கொண்டிருந்தான்.

‘தபாற்கார மாமா’ என்ற சொல்லுதான் இத்தனைக்கும் காரணமா….?

‘இல்லை … இருக்க முடியாது. இது பல பிறவிகளின் சொந்தம்….. பிராரத்துவம் என்பது இது தான்’

சந்திரன் மனத்தினுள்ளே பலவாறு போராடிப் போராடி அந்த இருவரையும், தன் நெஞ்சிலே நிரந்தரமாகக் குடியேறி வாழ்வதற்கு அனுமதித்துவிட்டான்.

இத்தனைக்கும் அவன் அந்தப் பெண்ணோடு ஒரு வார்த்தை பேசியதில்லை. குனிந்த தலை நிமிராது வந்து கடிதத்தைப் பெற்று அவள் செல்லும் வரையில் ஏதோ ஒரு புனிதமான உலகம் தன்னைச் சூழ்ந்து நிற்பது போல உணர்ந்து அவன் பயபக்தியோடு குறுகி வளைந்து நின்று விடுவான்.

பபாவோடு ஒரு சிறு புன்னகை; செல்லமாக அவள் கன்னத் திலே ஒரு தட்டல்; அவ்வளவுதான்! ஆனால், இரண்டு அனுபவங் களுக்குமாகச் சந்திரன் தவமே கிடந்தான் என்று சொல்லவேண்டும்.

3.

இரண்டு வாரங்கள் வரை அவளின் விலாசத்திற்குக் கடிதம் ஒன்றும் வரவில்லை. சந்திரன் துடித்துப்போய் விட்டான். எந்த முகாந்திரத்தைக் கொண்டு அந்த வீட்டு வாயிலிலே போய் நிற்பது? சந்திரனுக்கு அந்தக் கச்சடா வேலைகள் ஒன்றும் செய்யத் தெரியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘மனிதன்’ என்ற முழுமையி லிருந்து இறங்கிவிட அவன் தயாராய் இல்லை . அதனால் அந்த வீதியாற் செல்லும் போது கூட மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு விறைத்த நேர்ப்பார்வையோடு அவன் சென்றான்.

அவளின் குரல் கேட்கவில்லை . அந்த ‘பபா’ வின் தரிசன மும் கிடைக்கவில்லை. சந்திரனின் நெஞ்சுக்குள்ளே சொல்லவும், மெல்லவும் முடியாத வேதனை குமுறிக்கொண்டு எரிமலையாய்க் கனிந்து கொண்டிருந்தது.

இந்த நிலை நீடித்தால் தனக்குப் பைத்தியமே பிடித்து விடுமோ என்று சந்திரன் சந்தேகப்படுகின்ற நிலைக்கு வந்த பொழுது அந்த வீட்டிற்கு மீண்டும் கடிதம் கொண்டு செல்ல வேண்டிய தேவை அன்று ஏற்பட்டது.

சீதை, இராமனின் கணையாழியைக் கண்டதும் அடைந்த மனநிலையில், சைக்கிள் புட்பக விமானமாகி விடச் சந்திரன் பறந்து சென்று ‘கிணிங், கிணிங்’ என்று அவர் வீட்டு வாயிலிலே மணி யோசை எழுப்பினான்.

அவன் எதிர்பார்த்த ‘பபா’ வரவில்லை . தாயும் வரவில்லை . மாறாக அவளின் கணவன், சந்திரன் கொண்டு சென்ற விலா சத்திற்கு உண்மையாகவே உரியவன் வந்து நின்றான்.

சிரிப்பே அறியாத கடுகடு என்ற முகம். காலத்திற்கு முன்பே நரைதட்டிப்போன தலையும், சோர்வும், களைப்பும் நிறைந்த உடலுமாக வந்து அவன் நின்ற பொழுது சந்திரனுக்குப் பேசவே தோன்றவில்லை. தாங்கமுடியாத அதிர்ச்சி ஏற்பட்டது. அவனுக்கு.

நளாயினி சாவித்திரி கதைகள் அவனுக்குத் தெரியாதன வல்ல. ஆனால், இன்று உண்மையிலேயே ஒரு நளாயினியின் கதைதான் தனக்கு முன் திரையில்லா நாடகமாக நடப்பது போன்ற எண்ணம் ஏற்படுவதினின்றும் அவனால் விலகிக் கொள்ளக் கூடவில்லை .

வந்தவன் கடிதத்தைப் பறிக்காத குறையாக வாங்கினான். கடித விலாசத்தைப் பார்த்தபொழுது அவனது முகம் ஏன் இப்படி மலர்கிறது? கடிதத்தைப் பிரிப்பதற்கு இவ்வளவு அவசரம் ஏன்? பதற்றம் ஏன்?

சந்திரன் தன் வாழ்நாளிலே செய்யாத ஓர் அருவருக்கத்தக்க செயலை அந்தக் கணத்திலே செய்துவிட்டான். வீட்டுக்குடையவன் திரும்பிச் சென்றபொழுது விரித்துச் சென்ற அந்தக் கடிதத்தின் தொடக்கத்தை அவனது கண்கள் கண்டுவிட்டன.

அதில்……. ‘என் ஆயிருர்க் காதல’, என்று எழுதப் பெற்றிருந்தது.

சந்திரன் ஒன்றும் குழந்தையல்ல. நாலும் மூன்றும் ஏழு என்று கூட்டிப் பார்க்க அவனுக்கு யாரும் சொல்லித் தரவேண்டியதில்லை. அந்தப் பெண்ணின் கணவன் “கடிதத்தை வேறோருவரிடமும் கொடுக்க வேண்டாம். என்னிடமேதான் தர வேண்டும்” என்று சொன்னதன் அர்த்தத்தை அவனால் புரிந்து கொள்ள முடியாமற் போய்விட்டது என்று சொல்வது, சந்திரனுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

‘அட பாவி! தெய்வம் பொல ஒரு பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு பேயின் பின்னால் அலைகிறாயே?’ என்று குமுறிக் கதறி ஓலமிட அவனது உதடுகளும், உள்ளமும் விரைந்தது உண்மைதான். ‘அந்த இடத்திலேயே அந்தப் பாதகனின் கழுத்தை முறித்துப் போட்டால் என்ன?’ என்று அவனது கைகள் துரு துருத்ததும் உண்மைதான். ஆனால் அந்த உணர்ச்சிகளை அவன் பலவந்தமாக அடக்கியது ஒரு மகத்தான சாதனையே.

‘இத்தனைக்கும் அவன் ஓர் ஆசிரியர்’ என்ற பொழுது ஆசிரியர் சமூகத்திலேயே சந்திரனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. சம்பள உயர்வுக்காகவும், இட மாற்றத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கும் சயநலக் கும்பல் தாம் ஆசிரியர்களென்றும், கடமையுணர்ச்சியற்ற ஏமாற்றுக்காரர்கள் தாம் அவர்களென்றும் அவ்வப்போது கேட்டும் கண்டும் வந்தவற்றை உண்மையல்ல என்று ஒதுக்க முயன்று வந்த அவனுக்குக் கண் முன்னால் காணு கின்ற உண்மை பயங்கரமாகத் தோற்றியதில் வியப்பதற்கு ஒன்று மில்லை. ஒரு காலத்தில் தெய்வங்கள் போல விளங்கி மாணவர் உள்ளங்களிலே அறிவொளியேற்றிய ஆசிரியர் கூட்டத்தில் இன்று புல்லுருவிகள் தாம் பெருகிவிட்டனர்’ என்பதற்கு அவனது மானச சகோதரியின் கணவன் ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கினான்.

அதைச் சந்திரனாற் சகிக்கக்கூடவில்லை . அநாதரவாக நிற்கப் போகும் அந்தப் பெண்ணையும் அவளது பபாவையும் நினைத்துக் கொண்டபொழுது அவன் நெஞ்சு குருதிக் கண்ணீர் வடித்தது.

4.

சந்திரன் தீர்மானித்துவிட்டான். தன் ‘சகோதரி’யின் வாழ் வைப் பாதிக்கும் எந்தச் தீயசக்திகளையும் அழிக்க அவன் கங்கணங் கட்டிக் கொண்டான். ஆனால் அது எவ்வளவு பயங்கரமான விஷயம்! நினைக்கவே அவன் நெஞ்சு நடுங்கியது.

எந்தத் தொழிலால் அவனது வயிறு கழுவப்படுகின்றதோ, எந்தத் தொழிலின் புனிதத்தையும், சிறப்பையும் பாதுகாக்க அவன் தன் சக தொழிலாளரோடு போராட்டம் நடத்தி வருகின்றானோ அந்தத் தொழிலுக்கே கறை ஏற்படுத்த அவன் துணிந்து விட்டான்.

கொழும்பிலிருந்து அவன் ‘சகோதரி ‘ க்குச் சக்களத்தியாக மாறிவிட்ட யாரோ ஒருத்தியின் கடிதங்களை அந்தக் கடிதத்தின் விலாசதாரர் அடைய முடியாத வகையைக் கையாள அவன் தீர்மானித்துச் செயற்படவும் தொடங்கியிருந்தான்.

விடுமுறைக் காலத்தில் கொழும்புக்காரி எழுதிய இரண்டாவது கடிதம் சந்திரன் கையில் கிடைத்ததும் அவன் அதை உடைத்து வாசித்து….

அது கடிதமா? ஏதோ ஒரு சுவை நிறைந்த நாவலில் எழுச்சி நிறைந்த அத்தியாயம் போல அந்தச் சிறுக்கி என்னவெல்லாமோ எழுதியிருந்தாள். தன் காதலுக்குரியவன் ஒரு குழந்தைக்குத் தந்தை என்பதையும் ஒரு பெண்ணின் கணவன் என்பதையும் அறிந்திருந்துங் கூட அவற்றின் புனிதத்தை, முக்கியத்தைக் குப் பையில் வீசிவிடுவது போல வீசிவிட்டுத் தனது அன்பையும், ஆசையையும் எல்லாம் சொல்லோவியமாக அவள் வடித்திருந் தாள்.

சந்திரனுடைய கையை அந்தக் கடிதம் நெருப்பாய்ச் சுட்டது. அடுத்த கணம் அது உண்மையான நெருப்பையே தஞ்சம் அடைந்து தகனமாயிற்று!

அன்று சம்பள நாள். சந்திரன் தனது சம்பளப் பணத்தைப் பெற்ற பொழுது அவன் கைகள் நடுங்கின. உள்ளம் நார் நாராய்க் கிழிந்து அவனைச் சித்திரவதை செய்தது. கடமை என்ற நூற்பாலம் அறுந்துவிட அதலபாதாளத்தில் தலைகீழாகத் தான் விழுந்து கொண்டிருப்பது போன்ற உணர்ச்சியிலே அவன் கலகலத்துப் போனான்.

அடுத்த நாள் ‘சகோதரி’யின் கணவனுக்கு அரசாங்கக் கடிதம் ஒன்றை அவன் கொண்டு சென்றான். சம்பளம் பணமாய் இருக்கலாம்.

அவனோ அதைத் திறந்துகூடப் பார்க்காமல் ‘வேறு கடிதம் இல்லையா?’ என்று ஆவலும் வேகமும் விழிகளிலே சுடர்விடச் சந்திரனைக் கேட்டான். சந்திரன் பதில் சொல்லவில்லை. கையை விரித்துவிட்டுத் திரும்பி வேகமாகச் சைக்கிள் பெடலை உதைத் தான்.

ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்ற ஆசிரியர் தனது குழந்தை யின் முதுகிலே ‘மொத்து மொத்து’ என்று அகாரணமாக அடித்த சப்தமும் குழந்தையின் அலறலும் அவனுக்குக் கேட்கவே யில்லை .

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று பல கடிதங்கள் வந்தன, கொழும்புக்காரியிடமிருந்து. அத்தனையும் ‘தூய’ காதலின் பரிசுகளையும், காணிக்கைகளையும், கண்ணீர்த் துளிகளையும் ஏந்தி வந்தன. தன்னால் இனியும் பொறுக்க முடியாதென்றும் தன் காதலன் அவனது விவாகத் தளையை அறுத்துக் கொண்டு தன்னிடமே நிரந்தரமாக வந்துவிடும் நாள் எப்பொழுது என்றும்

அவள் கேட்டுக்கேட்டு எழுதினாள்,

சந்திரன் கடிதத்திற்குரியவனது முகத்திலே ஏமாற்றக் கரியை அள்ளிப் பூசி அவனை ஏங்க வைத்துவிட்டுக் கிரமமாகக் கடித தகனம் செய்து கொண்டிருந்தான்.

சாடைமாடையாக ஆசிரியரது வீட்டின் அமைதியின்மையும், அவனது குரூரமான நடத்தைகளும் சந்திரனுக்குத் தெரியவந்தன. ஆனாலும், சந்திரன் பயங்கர பொறுமையோடு இதயச் சித்திர வதையையுந் தாங்கிக் கொண்டு தனது தகன காரியத்தை விடாது நடத்தியே வந்தான்.

அன்று சந்திரனது இரண்டாவது திட்டம் செயற்படும் நாள். என்றும் இல்லாதது போல “மாஸ்டர்! நீங்கள் எதிர்பார்த்த கடிதம் இதோ” என்று அவன் ஆசிரியரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்த பொழுது வாயெல்லாம் பல்லாக முத்திரையின் சீலைக்கூடக் கவனிக்காது, ஆசிரியர் கடிதத்தை உடைத்த காட்சியைச் சந்திரன் இரசித்தபடி தனது உற்சாகத்தை மணி அடிப்பதில் காட்டியபடி விரைந்தான்.

‘முட்டாள்! நான் கொழும்புக்காரியின் கையெழுத்திலே எழுதிய கடிதத்தை உண்மையென்று நம்பிவிட்டான். எல்லாம் நன்மைக்கே. இனி அந்தச் சாகசக்காரியை ஐயா திரும்பியும் பார்க்கமாட்டார். “என்னை மறந்துவிடுங்கள். நீங்கள் விடுமுறை கழிந்து திரும்பும் போது நான் ஸ்ரீமதி ஆக இருப்பேன்” என்று இருக்கும் போது வேறு என்ன தான் செய்வது?

சந்திரன் சிரித்தபடியே சைக்கிளில் ஒருநாளுமில்லாத பெரு நாளாய் விரைந்து சென்ற காட்சி பலருக்கும் வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை. நல்லூர் முருகன் சந்நிதியில் சந்திரனது ‘சகோதரி’யும் கணவனும் ‘பபா’வும் நின்று கும்பிட்ட வண்ணம் இருந்தனர். கண்களை மூடிப் பக்திபரவசனாய் நின்ற ஆசிரியரின் கன்னங்களிலே வழிந்த நீரில் அவனது குடும்பத்தின் நல்வாழ்வு மலர்வதைக் கண்ட சந்திரன் முருகனை நோக்கிப் பின்வருமாறு வேண்டிக் கொண்டான்.

“நல்லூரானே! எனது கடமையைப் புறக்கணித்து எனது மானச சகோதரியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தேன். ஆனால், இனியும் என் மனச்சாட்சியை ஏமாற்றமுடியாது. நான் செய்த பெரும் பிழைக்காக என்னையே தண்டித்துக் கொண்டேன். நான் இனித் தபாற்காரச் சாமியாரல்ல, வெறுஞ் சாமியார்தான்.”

– வீரகேசரி சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு-1966 – முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *