(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
குழந்தைகளின் கீச்சுக்குரல்களோ, இல்லாளின் இல்லை என்ற தாரக மந்திரமோ இன்றி, இன்று, வீடு வெறிச்சோடிக் கிடக்கின்றது. இந்தத் தனிமை சுகத்தை நிம்மதியாக அனுப விப்பதற்காக இன்று காரியாலயத்திற்கு லீவு போட்டுவிட் டேன். சதா இரைச்சலும் சந்தடியுமிக்க, தலை நகரின், கெடுபி டிக்குள் ஒரு நிம்மதியான சூழ்நிலைக்காக, வேண்டி மனம் பலநாளாய ஏங்கியதுண்டு.
என்னதான் கொழும்பு நகரம் கூக்குரலிட்டு ஒலியெழுப்பி னாலும், கதவை நன்றாகத் தாளிட்டு விட்டு தனிக் கட்டையாக வீட்டுக்குள் இருந்து ஓய்வெடுப்பதில் இருக்கும் அமைதி, கடற்கரையிலோ, பூங்காவிலோ, காண்பது அபூர்வம். இந்தத் தனிமையை ஆத்மார்த்தமாக அனுபவித்து விடவேண்டும் என்ற வேட்கையினால் என் மனைவியோடு ஒரு குட்டி யுத்தமே நடத்தி விட்டேன்.
“இந்த வீட்டுல ஒரு நிமிஷமாலும் நிம்மதியா இருந்து தொலைக்க முடியாது. ஒன்டு இந்த வீட்ட விட்டு நான் தொலைஞ்சி போகனும் இல்ல, உன்ன தொலைச்சிக் கட்டனும்!”
அடிக்கடி கூறும் இந்த வார்த்தைகளை நேற்று கொஞ்சம் காட்டமாகவே கூறிவிட்டேன்.
“ஒங்களுக்கு என்னையும் பிள்ளைகளையும் தொலைச்சிக் கட்டுறதில தான் கண். முன்பெல்லாம் எவ்வளவு அன்பா இருந்தீங்க…! இப்ப எங்கள அறவே பிடிக்கிறதில்லே. ஒங் களை… எவளோ… மயக்கி இருக்க வேண்டும்.”
“என்னடி சொன்னே? நாளைக்கு காலையிலே பிள்ளகளை கூட்டிக் கொண்டு ஊருக்கு கிளம்பிடு!…. பிறகு… நான் மனுஷனா இருக்க மாட்டேன்.”
நீங்களா கூப்பிடும் வரையிலே, ஊரில கெடந்து சாவோமே தவிர இங்க… வரமாட்டம்!
ஆத்திரத்தோடு கூறிவிட்டு கண்களையும் மூக்கையும் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.
பெண்களின் பிரதான தார்மீக ஆயுதம் கண்ணீர் தானோ? இரவு நடந்த வாக்குத் தர்க்கங்களும், அதைத் தொடர்ந்து அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்ததையும் இப்போது நினைக்கையில் என்னவோபோல் தான் இருக்கிறது.
இருந்தாலும் இந்தத் தனிமை எவ்வளவு இனிக்கிறது! குடும்பப் பிரச்னைகளும், வாழ்க்கை தொல்லைகளும், உந்தி உறுத்தும்போது, மற்ற குடும்பஸ்தர்களைப் போன்று வாலிப னாகவே இருந்திருக்கலாம் என்ற காலங்கடந்த ஞானோதயம் வருவதுண்டு. வரவு குறைவாய், சிலவு பெரிதாய், இருப்பதால் தானோ என் போன்ற நடுத்தர வருவாய் உள்ளவர்களின் வாழ்க்கை சிக்கல் நிறைந்த புதர்வெளியாய் காட்சி தருகிறது?
இதையெல்லாம் எங்கே என் காரியாலய வாலிப நண்பர்க ளுக்கு உறைக்கப் போகிறது. அவர்கள் கலியாணம் பற்றி பெரிய பெரிய கனவு காணுகிறார்கள். பட்டால் தான் தெரியும்.
யாரோ கதவு தட்டும் ஓசை கேட்கிறது.
எங்களுக்கு வழக்கமாக மரக்கறி விற்கும் பெண் கூடை யோடு வாசலில் நிற்கிறாள். காலைக் கதிரவனின் கிரண வெப்பம் என் உடலில் தாவ, மேனி சிலிர்க்கிறது.
‘வீட்டில் அம்மா இல்ல…!’ என்று கூற வாயெடுத்த நான், அதைக் கூறாமல் அவளது பாதாதி கேசத்தை ஆவலோடு வெறிக்கிறேன்.
கறுத்த மேனி, கட்டுக் குலையாத உடம்பு, அடர்த்தியாக வளர்ந்திருந்த புருவ ரோமங்களுக்குக் கீழே, துள்ளும் வசீகர மான நயனங்கள். இளம் வெய்யிலில் நடைபோட்டதால், உடம்பெங்கும் சிறிய வியர்வைத் துளிகளின் மதமதப்பு. வயிற்றின் சதைத் திரட்சி உடைக்குள் அகப்படாமல் திமிறி வெளியில் கிடந்தது.
வயது ஒரு இருபது இருக்குமா? அவளை இதற்குமுன்னும் பல தடவை பார்த்திருக்கிறேன். இவ்வளவு அழுத்தமாகக் கூர்ந்து பார்த்ததில்லை. அப்படிப்பட்ட அதீதமான ரசனை வராததிற்கு ஒரு காரணமொன்றும் இருந்தது.
எனது வரம்பு மீறிய ரசனையின் தாற்பரியத்தை என் தர்மபத்தினி உணர்ந்து விட்டால்…? பின் – பிரளயமே இங்கிருந்துதான் ஆரம்பிக்கும். இந்தப் பெண்கள் கணவனின் எல்லா பலவீனங்களையும் சகித்துக் கொள்வார்கள். பிற பெண்ணின் மீது வாஞ்சை கொள்வதை மட்டும் சகித்துக் கொள்ளவே மாட்டார்கள். அப்படி ஆகிவிட்டால், ஆளும்கட்சி எதிர்கட்சி, கோஷங்கள் வீட்டுக்குள்ளும் வந்துவிடும்.
என் விழிகளில் வக்கிரம் வழிந்தது.
மெதுவாக காய்கறிகளை பேரம் பேசிய நான் அவளது உள்மனதின் வேர்களைத் தொட முயன்றேன்.
‘ஒனக்கு கலியாணம் ஆயிடுச்சா?’ கேள்வியில் போலிப் பரிவு இழையோடியது. எனது பார்வையில், சொல்லில், பாவனையில், சங்கமமாகியிருந்த வெறித்தனத்தின் சுயத்தை அவள் இனங்கண்டாளோ என்னவோ?…
‘ஆகும்போது செல்லியனுப்பறேன்…!’ வார்த்தைகளால் முகத்திலடித்து விட்டு, பிருஷ்டம் குலுங்க விசுக், விசுக், என்று நடந்து சென்றாள்.
அந்த நடையை ஏமாற்றத்தோடு மென்று விழுங்கினேன்.
சே! இந்த மனம் ஏன் கட்டுப்பாடின்றி ஏங்குகின்றது. தோல்வியோடு வந்து கட்டிலில் விழுகிறேன். உணர்ச்சிகள் சர்ப்பங்களாக யாரையோ பழிதீர்கத் துடிக்கின்றன.
மீண்டும் யாரோ கதவைத் தட்டும் ஓசை! தனிமையின் கொடுமையும், உணர்ச்சிகளின் உந்துதலும் என்னிலிருந்து நீங்க மறுக்கின்றன. கதவருகில் பரிமளம் என்ற எதிர்வீட்டு சிறுமி நிற்கிறாள்.
“மாமா… பாட்டா…, பேப்பர், வாங்கிவரச் சொன்னார்!” அவள் சிந்திய வார்த்தைகள் என் செவியில் சரியாக விழவில்லை. குறுகுறுக்கும் விழிகளையும், பருவ வனப்பின் மென்மையையும் கழுகுக் கண்களால், வெறிக்கிறேன்.
உதய காலக் கதிர்கள், பிரியும் இரவைக் கட்டித் தழுவி விடை கூறுவதைப் போன்று, அவளை விட்டுப் பிரியும் பிள்ளைப் பருவம், தொடரும் வாலிபத்திற்கு விடை கூறிக் கொண்டிருந்தது. அவளது மென்மையான முகமும், வயதை மீறி மதாளித்த உடல் வளர்ச்சியும், என்னை கிறுகிறுக்க வைத்தன.
சீ! உணர்ச்சிகள் ஏன் இப்படி மட்டமாய் இயங்குகின்றன? ‘தனிமையில் மனிதன் பிசாசுக்குச் சமம்!’ என்று ஆங்கிலப் பொன்மொழி ஒன்று என் ஞாபகத்திற்கு வருகிறது.
‘மாமா! பேப்பர்!’ என்ற குரல் என் சிந்தனைக்குத் தடை போடுகிறது.
‘பரிமளா! பேப்பர், பாட்டாவுக்கு, குடுத்துட்டு வா! மாமியும் இல்லை. ஒரு சின்ன வேலை இருக்கு….!’ ‘சரி!’ என்று ஒப்புதல் தந்து விட்டு சிட்டாய் பறந்தாள் அவள்.
நீதி மன்றத்தில் பூரண அமைதி நிலவியது. என் முகத்தில் கொலைஞனின் விரக்தி படர்ந்திருந்தது. அவமானத்தால் உடல் குறுகி நிலம் நோக்கியவாறு நின்றிருந்தேன். நீதிபதி வழக்கை விசாரித்து முடித்து விட்டு குற்றப் பத்திரிகை வாசித்தார். என் உடலும் உள்ளமும் பதற ஆரம்பித்தது.
‘நான்கு பிள்ளைகளின் தந்தையாகிய நீர், ஒன்றுமறியாத சிறுமியிடம் நடந்து கொண்ட முறை, மன்னிக்க முடியாதது. உமக்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கிறேன்!’
இரண்டு பேர் என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஜீப் வண்டிக்கு கொண்டு வருகிறார்கள். என் மனைவியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் சக்தியற்றவனாய் தலையைச் சரிக்கிறேன். முகம் குப்பென்று வியர்க்கிறது. குழந்தைகளின் அழுகுரல் மண்டையில் எதையோ கொண்டு அடிப்பதைப் போன்று நிர்தாட்சண்யமாய் ஒலிக்கிறது.
‘ஐயோ! இந்த முகத்தை எடுத்துக் கொண்டு சிறையிலிருந்து மீண்டு வெளியில் எப்படி நடமாடுவேன் வேலை போய்விடும். மானமும் மரியாதையும் காற்றில் பறந்து விடும். என் குடும்பத்தின் எதிர்காலம்…?’ பீறிட்டு வந்து அழுகையை அடக்க இருகைகளாலும் முகத்தை மூடியவாறு, கலங்குகின்றன்.
அணை உடைத்த வெள்ளமாய் ஆத்திரமும் அழுகையும் பீறிட்டுப் பாய்கிறது.
ஜீப் வண்டி வேகமாய் விரைகிறது. அப்படி எவ்வளவு நேரமாக அழுதேனோ தெரியவில்லை. உச்சி வெய்யிலின் உஷ்ணம் முகத்தில் தாக்க மெல்ல பார்வையை நாலாபக்கமும் செலுத்தினேன்.
ஆச்சரியத்தால் அதிர்ந்து போனேன். நான் இதுவரை கண்டது கனவா? நினைவை நுட்பமாக்கி சிந்தித்துப் பார்க்கிறேன். பரிமளா பத்திரிகையை கொடுத்து விட்டு மீண்டும் வரவில்லை. அப்பாடா! இதயம் மெல்ல ஆசுவதமடைகிறது.
என்னைப் பொறுத்த வரையில் இது கனவல்ல! நினைவுகளின் பிரதிபலிப்புத்தான் கனவு. என் வாழ்வுப் பாதையில் நடக்கவிருந்த துர்பாக்கிய சம்பலத்திலிருந்து தப்பிவிட்டேன்.
கீழான உணர்ச்சிகள் என்ற கொடிய சர்ப்பங்களை இந்தக் கணமே கொன்று தீர்த்து விட்டேன். அவசரமாக எழுந்து தந்தித்தாள் ஒன்றை எடுத்து எதையோ எழுதுகிறேன். ஆங்கிலத்தில் எழுதிய வார்த்தைகளை மீண்டு படித்துப் பார்க்கிறேன்.
குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு உடன் வரவும். எதிர் பார்க்கிறேன்.
கனன்னு தகித்துக் கொண்டிருந்த தீ தணிந்து மனம் தெளிவடைந்தது.
– 12-10-1968 – ஜோதி – வாரஇதழ் – மீறல்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடு, முதற்பதிப்பு: நவம்பர் 1996