கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2024
பார்வையிட்டோர்: 225 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இஷ்டலிங்கம் பிள்ளையை ஒரு ‘வியாதி’ பற்றியிருந்தது. தனிமை எனும் நோய் தான் அது.

‘தனிமை இனியது. சாரம் நிறைந்தது’, என்றெல்லாம் சொல்வார்கள். உண்மையே. ஆயினும், தனிமை சிலருக்குச் சில வேளைகளில் தவிர்க்க முடியாத வியாதியாய்…தாங்க இயலாத சுமையாய்…மாற்றுக் காண முடியாத மனப் புழுக்கமாய் விளங்குவதும் உண்டு.

இஷ்டலிங்கம் பிள்ளைக்கு எவ்விதமான குறைவும் கிடையாது என்றே சொல்ல வேண்டும். பெரிய உத்தியோகத்தில் இருந்தார் அவர். எல்லோரும் கெளரவிக்கும்படியான அந்தஸ்து அவருக்கு இருந்தது. அவரைக்கண்டு-அவர் பெயரைக் கேட்டும் கூட- பயப்படுவதற்கும் பக்தி பண்ணுவதற்கும் பலர் இருந்தார்கள். ‘பெரியவர். கண்டிப்பானவர், தமது வேலைகளைக் குறைவின்றிச் செய்பவர். மற்றவர்களும் அவரவர் அலுவல்களை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்’ – இவ்வாறெல்லாம் அவரைப் பற்றிய அபிப்பிராயங்கள் நிலவின.

அதிகாரம், அந்தஸ்து, பெயர், பணம் இவற்றுக்கு ஏற்றாற் போல் ஆளும் வாட்டசாட்டமாக இருந்தார் அவர். நல்ல உயரம். அதற்குத் தகுந்த பருமன். கம்பீரமான தோற்றம். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிராதவர்கள் கூட ஆளைப் பார்த்ததுமே ‘யாரோ பெரிய மனிதர்’ என்று உணர்ந்து, பயம் அல்லது பக்தி அல்லது மரியாதை காட்டியே தீருவர்.

அவர் தெருவில் போனார் என்றால், எதிரே வருகிறவர்கள் கும்பிடும், சலாமும் அளித்து விலகிச் செல்வார்கள். மேலே கிடக்கிற துண்டை மரியாதையாக நீக்கிக் கையில் பிடித்துக்கொண்டு நடப்போரும் உண்டு. வீட்டுத் திண்ணைகளிலும் வாசல் முன்பும் அமர்ந்து வம்பு பேசிக் கொண்டிருக்கும் பெண்கள் பேச்சை நிறுத்தி விட்டு எழுந்து நிற்பார்கள். சில பெண்கள் ஒடி ஒளிந்து கொள்வதுமுண்டு.

இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று இஷ்டலிங்கம் பிள்ளை சொல்லவுமில்லை; எதிர்பார்க்கவும் இல்லை. இவ்வாறு மரியாதை காட்டாமல் இருந்தால் அவர் கோபித்துக் கொள்ளமாட்டார்; குறை கூறப் போவதுமில்லை. ஆனால், பக்தி பண்ணியும் பயந்து நடந்தும் சிலரைப் பெரிய மனிதராக்குவதும் – பெரிய மனிதரை மகாப்பெரிய மனிதராக்கி விடுவதும் – மனித சுபாவங்களுள் ஒன்று ஆகிவிட்டது.

குழந்தைகளைக் கூட அவ்விதமே பழக்கினார்கள் பெரியவர்கள். பக்தி பண்ணுவதற்குரிய பெரிய மனிதர் என்ற தன்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதால், குழந்தைகள் அவரைக் கண்டதும் ஒதுங்கிப் போவதே மரியாதை என்று கருதினார்கள்.

கொடிய வியாதி மனிதனைத் தனியனாக்கி விடுகிறது. பணமும் பதவியும் புகழும்கூட மனிதரைத் தனியராக்கிவிடும்.

பதவியாலும் அந்தஸ்தாலும் பெரிய மனிதராகியிருந்த இஷ்டலிங்கம் பிள்ளையையும் தனிமை, வியாதியாகப் பற்றிக்கொண்டது.

சில சமயங்களில் அதன் வேதனை எழுப்புகிற மனப் புழுக்கம் சகிக்க முடியாததாக இருக்கும். மற்றவர்களுடன் மனம் விட்டுப் பேசி, சிரித்துப் பழக விடாமல் அவரை அவருடைய அந்தஸ்து தடுத்தது. ‘நம்மைவிடப் பெரியவர். அவர் முன்னால் நாம் எப்படி சகஜமாகப் பேசிப் பழகுவது’ என்ற தயக்கத்தை மற்றவர்களுக்கு அளித்தது அது.

அவருடைய கறாரான போக்கும் கண்டிப்பான சுபாவமும் பிறரை அவரிடமிருந்து விலக்கியே வைத்தன. குழந்தைகளோடு விளையாடி மகிழலாம் என்று அவர் நினைப்பார். குழந்தைகளோ அவரை ‘பூச்சாண்டி’ என்று எண்ணி முகம் சுளித்தன. அவரைக் கண்டதுமே சில குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுவதுமுண்டு.

சிறுவன் ஒருவன் தெருவாசல் படியில் நின்று, அவர் போகும் பொழுதும் வரும் பொழுதும், ‘குட்மார்னிங் ஸார்!’ என்று சொல்லி, சலாம் போடுவதும் வழக்கம். ஒருசமயம் அவர் அவனோடு பேசலாமே என்று நின்றார், ‘ஏய் பையா, இங்கே வா’ என்றார். அவ்வளவுதான். அந்தப் பையன் பயந்து போய் எடுத்தான் ஓட்டம். அவருக்கு ஏமாற்றமாகி விட்டது. அதன் பிறகு அவன் அவர் வருகைக்காகக் காத்து நிற்பதும் இல்லை; ‘குட்மார்னிங்’ சொல்ல ஆசைப்படவுமில்லை.

தரித்திரம் மனிதனைத் தனியனாக்குகிறது. துயரம் அவனைத் தனியனாக்குகிறது. இன்பமிகுதியும் ஒருவனைத் தனியனாக்கி விடுகிறது.

வறுமை வெயிலில் வதங்குகிறவனும், துயர நெருப்பில் வதங்குகிறவனும், இன்பநிறைவால் துடிப்பவனும் தனது உணர்ச்சிகளைப் பற்றிப் பிறரிடம் பேச வேண்டும் என்று தவிக்கிறான். அவனோடு பொழுது போக்குவதற்கு எவரும் துணை சேராதபோது அவன் திண்டாட்டமே தனி வேதனையாகி விடுகிறது.

இஷ்டலிங்கம் பிள்ளைக்கு மனைவி இல்லை. இருந்தாலாவது அவளோடு பேசலாம். சண்டை பிடிக்கலாம். எரிந்து விழலாம். தன் குறைகளைப் புலம்பலாம். உவகை மிகுதியை எடுத்துச் சொல்லலாம். மனப் பாரத்தை இறக்கி வைப்பதற்கு ஏற்ற சுமை தாங்கியாகவும் அவளை மாற்றலாமே!

ஆனால், மனைவி என்றொருத்தி இருந்தால் அவர் அப்படி எல்லாம் அவளோடு பழகுவாரோ என்னவோ! அவரோடு ஒரு பெண் மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்ந்திருக்க முடியுமோ என்னவோ! தனது கொள்கைகளில் பிடிவாதமான பற்றுதலும், குறைபாடுகளை மன்னிக்க முடியாத சுபாவமும், உயர்ந்த பண்புகள், சுத்தம் சுகாதாரம் இவற்றில் தீவிர மோகமும் கொண்டிருந்தார் அவர். சகல குண நலன்களும் படைத்த பெண் எவளும் கிடைக்க மாட்டாள்; குறைகள் உடையவளை மணந்து கொண்டால்தான் தனது இஷ்டம்போல் வாழ முடியாது; அத்துடன் தன் மகிழ்வும் பாழ்பட்டுவிடும் என அவர் நம்பினார், அதனால் அவர் கல்யாணம் செய்யாமலே காலம் கழித்தார்.

முதலில் மனோகரமாகத் தோன்றிய இந்த நிலைமை காலப் போக்கில் அவருக்கு வெறுமை உணர்வு அளிக்கலாயிற்று அலுவல்களும் படிப்பும் தனிமைச் சூழலில் உலா போய் வருவதும் போதுமான திருப்தியை – மன நிறைவை – அளிக்கத் தவறின. பிறரிடம் சகஜமாகக் கலந்து பழகுவதற்கு அதுநாள் வரை அவர் தமக்குத்தாமே அமைத்துக் கொண்டிருந்த பழக்க வழக்கங்கள் எல்லாம் கனத்த வேலியாக நின்று தடை செய்தன.

வரவர அவர் உள்ளம் ஏக்கத்தை வளர்த்தது. தனது வாழ்விலே சிரிப்பும் இனிமையும் தோழமையும் வறண்டு கிடந்ததை உணர்ந்த இஷ்டவிங்கம் பிள்ளை அவற்றைப் பெற வேண்டும் என்று தவித்தார். முன்பு அவரால் ஒதுக்கப் பெற்ற அவை எல்லாம் இப்போது அவர் பிடிக்குள் அகப்படாத நிழல்களாக அவரை விட்டு ஒதுங்கியே சென்றன. அவருடைய மனப் புழுக்கம் அதிகரித்தே வந்தது.

இதே எண்ணத்தோடு தான் அன்றும் இஷ்டலிங்கம் பிள்ளை தனிவழி உலாவில் ஈடுபட்டிருந்தார். சித்தம் எங்கெங்கோ சஞ்சரிக்க, கால்கள் வழக்கமான தடத்தில் மெதுவாக நடந்தன. ஆற்றங்கரையை நோக்கித்தான். அழகும் அமைதியும் கொலுவிருக்கும் அருமையான இடம் அது. தினந்தோறும் அவர் அங்குதான் செல்வார்.

அன்று வழியில் ஒருவன் ‘வேர்க்கடலே வாங்குங்களேன், சாமி’ என்றான்.

அவருக்கு அது தேவை என்று தோன்றவில்லை. எனினும், அவனாக வலிய வந்து கேட்டதற்காக அவர் ஓரணாவிற்குக் கடலை வாங்கிக்கொண்டார்.

ஆற்றங்கரைப் புல் வெளியில் அமர்ந்ததும் இஷ்டலிங்கம் வேர்க்கடலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்தார். ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டு ரசித்துத் தின்றார்.

எங்கிருந்தோ அவரைக் கவனித்துவிட்ட காக்கை ஒன்று வேகமாக வந்து அவர் முன்னால் இறங்கியது. அவரைப் பார்த்து, ‘கா’ என்றது.

அதையே ‘தா’ எனும் கோரிக்கையாக ஏற்றுக் கொண்டு அவர் ஒரு கடலையைக் காகத்தின் பக்கமாக வீசினார். அது குதி நடை பயின்று நெருங்கி, கடலேயைக் கவ்வி நகர்ந்தது. தின்றது. ‘கா–கா’ என்று உரக்கக் கூச்சலிட்டது.

பிள்ளை மற்றொரு கடலையை விட்டெறிந்தார். அந்தக் காக்கை அதைக் கொத்தும் போதே இன்னுெரு காகமும் வந்தது. அதற்கும் ஒரு கடலை உதவினார் அவர்.

அப்புறம் இரண்டு மூன்று என்று பல காகங்கள் கூடிவிட்டன. அவரையே பார்த்தபடி இருந்தன.

அவர் ஒவ்வொரு காகத்தின் பக்கமும் கடலையை வீசினார். அருகாகவும், தூரத்தில் விழும்படியும், உயரமாகவும் விட்டெறிந்தார். காக்கைகளில் ஒவ்வொன்றும் குறி தவறாது கடலையை அலகுகளால் பற்றிக் கொண்டன. அவற்றின் செயல் அவருக்கு வேடிக்கையாக இருத்தது.

அவர் கடலையை ஆகாசத்தில் விட்டெறிவார். அது வேகமாக இறங்கிக் கீழ்நோக்கி வரும்போதே காக்கை ஒன்று மேலே பாய்ந்து ‘லபக்கென்று’ கடலையைக் கொத்திக் கொள்ளும். அதன் வேகமும், சிறகடிப்பும், கடலையைக் கவ்வும் நேர்த்தியும் அவருக்கு நல்ல தமாஷாகத் தோன்றின. ஆகவே, அவர் கடலை ஒவ்வொன்றையும் உயரே விட்டெறிந்தார். ஏதாவதொரு காக்கை முன்னே பாய்ந்து கடலையைக் கவ்விக்கொண்டு பறப்பதைக் காணக் கான அவர் உள்ளம் உற்சாகம் அடைந்தது. ‘கலகல’வென நகைத்தார். தனது தனிமை வேதனையை – வெறுமை உணர்வை – மறந்துவிட்டார் அவர் அவ்வேளையிலே.

பெரிய மனிதர் – அந்தஸ்து மிகுந்தவர் – இப்படிச் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்வது மற்றவர்களுக்கு வேடிக்கையாகப் படலாம். ஆனால் அவரை வேடிக்கையுறக் கண்டு நகைப்பதற்கு அங்கு யாருமே இல்லை. தன்னை யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்ற உணர்வும் அப்பொழுது அவருக்கு இல்லை. அவர் தன்னையும் சூழ்நிலையும் மறந்து விட்டார். தனது தனிமையைப் போக்கி, மனசுக்கு இனிமை தரக்கூடிய மருந்து ஒன்றை இஷ்டலிங்கம்பிள்ளை கண்டு பிடித்துவிட்டார்.

காக்கைகளும் அவரைக் கண்டு அஞ்சாமல் அவர் விளையாட்டில் பூரணமாக ஈடுபட்டன. அருகே நெருங்கி வந்தும், தூரப் பாய்ந்தும், மேலே பறந்தும் கடலை வராதா என்று காத்திருந்தும் அவருக்குத் தோழர்களாப் விளங்கிக் களித்தன.

கடலை பூராவும் காலியானதும் ‘இன்னிக்கு இவ்வளவு தான்!’ என்று இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டினார் பிள்ளை. அப்பொழுது அவர் உள்ளத்தில் நிறைந்து நின்ற ஆனந்த உணர்வை அவர் அதற்கு முன்னர் என்றுமே அனுபவித்ததில்லைதான்!

– 1959

– ஆண் சிங்கம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *