தனிமையில் ஒரு தமிழ்க்குரல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2018
பார்வையிட்டோர்: 6,599 
 
 

`நீங்க மட்டும் தனியா எதுக்குப்பா இங்க இருக்கணும்? வீணா கஷ்டப்படாம, எங்களோட வந்துடுங்க!’ ரகு கேட்டபோது, கிருஷ்ணனுக்கும் அது சரியான யோசனை என்றுதான் தோன்றியது.

மனைவி இருந்தவரை சமையலறைப்பக்கமே போகாதிருந்தவர். இப்போது தானே சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதை நினைத்தாலே பயமாக இருந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் குக்கரை உடனே திறந்து, நீராவி முகத்தில் அடித்ததும், `கத்தி என்ன,இவ்வளவு மொக்கை!’ என்று ஒரேயடியாகத் தீட்டி, முருங்கக்காயை நறுக்கும்போது விரலையும் சேர்த்து நறுக்கி, ரத்தம் கொட்டியதும் நினைவில் எழுந்தது. அப்போது, `உங்களுக்கு ஏன் இந்த வேலையெல்லாம்!’ என்று ஆறுதலாக ஓடி வர எவரும் இல்லை என்று உரைத்தபோது, தான் ஏன் இப்படித் தனித்துப்போனோம் என்று அழுகை வந்ததே!

இருபதாண்டு மண வாழ்க்கைக்குப்பின் மனைவியிடம் என்ன பேசுவது என்று புரியாது, அவர் ஒரு பக்கம், மனைவி சமையலறையில் என்று வாழ்ந்த சராசரி தம்பதிகள் அவர்கள். ஏதோ, அவள் இருந்தவரை சாப்பாட்டுக்காவது கஷ்டமில்லாது இருந்தது.

இருக்கிற சொத்தை ஏதாவது அனாதை ஆஸ்ரமத்திற்கு எழுதிவிட்டு, மகனுடன் ஒரேயடியாக வெளிநாட்டுக்குப் போய்விடலாம். மருமகள் ஒரு வேளை சோறு போடமாட்டாளா, என்ன! பேரனுடன் பொழுதை ஆனந்தமாகக் கழிக்கலாம்.

`வீட்டை விக்க வேண்டாம். நாம்ப இங்க வராமலேயாவா போயிடுவோம்? அம்மா தன்னோட நகையையெல்லாம் வித்து, எவ்வளவு ஆசைப்பட்டு இந்த வீட்டை வாங்கினாங்கன்னு எனக்குத் தெரியும்,’ என்று ரகு சொன்னபோது, அவருக்கு மறுத்துப் பேசத் தோன்றவில்லை.

அயல்நாட்டில் அக்கம்பக்கத்தில் யாருமே தமிழ் பேசவில்லை என்பது முதல் அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு ஏன், பேரனுக்கே தமிழ் புரியவில்லை.

இரண்டு வயதிலிருந்தே தன் அருமைப்பிள்ளை தொலைகாட்சியிலிருந்து ஆங்கிலம் பயின்ற பெருமையை ரகு கூறியபோது, அவருக்குப் பாராட்டத் தோன்றவில்லை.

“இங்கிலீஷ் என்னடா, இங்கிலீஷ்! நம்ப பாஷையைக் கத்துக்குடு மொதல்லே!” என்றார் அலட்சியமாக.

ரகு சுற்றுமுற்றும் பார்த்தான், அவர் கூறியது எங்காவது மனைவி காதில் விழுந்து தொலைத்துவிடப் போகிறதே என்று பயந்தவன்போல்.

“தமிழிலே பேசினா, இங்க அவன் வயசுப் பசங்களோட பழகவே முடியாதுப்பா,” என்று அவர் வாய்க்கு ஒரு பூட்டு போட்டான்.

அவர் முகம் போனபோக்கைப் பார்த்து, “அதான் தேவாரம் கிளாசுக்குப் போறானே!” என்றான், சமாதானப்படுத்தும் விதமாக.

கிருஷ்ணன் மென்று விழுங்கினார். `தேவாரம்’ என்ற பெயரில், என்ன சொல்கிறோம் என்றே புரியாது, அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் இன்ன மொழி என்றுகூட நிர்ணயிக்க முடியாது இருந்ததை வெளிப்படையாகச் சொல்லவா முடியும்!

தான் வாழ்ந்த சிற்றூரில், சாயங்கால வேளைகளில் காய்கறி வாங்கிவரும் சாக்கில் மார்க்கெட்டுக்கும், அதன்பின் கோயிலுக்கும் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் அவர்.

“இங்க.. பக்கத்திலே கோயில் எதாவது இருக்கா ரகு?” என்று கேட்டபோது, “கோயிலுக்குப் போக இருநூறு மைல்! மலைமேலே, ரொம்ப அழகா இருக்கும். எப்பவாவது லீவு நாளிலேதான் போகமுடியும். அதான் வீட்டிலே முருகன் படம் மாட்டி வெச்சிருக்கேனே!” என்றபோது, அவன் குரலில் சிறு எரிச்சல் இருந்ததோ?

முன்பு அவரையொத்த நண்பர்களுடன் கூடி, அரசியல், சினிமா, சமூகம் என்று அலசியதை எண்ணினார். எதையோ இழந்துவிட்டது போலிருந்தது. முன்பிருந்ததைவிட இன்னும் தனித்துவிட்டதைபோல் இருந்தது. யாரோ தன்னை ஏமாற்றிவிட்டதுபோன்ற உணர்வு.

`ரகு என்ன, என் கையைப் பிடிச்சு இழுத்தானா? நானேதானே வந்தேன்!’ தன் முட்டாள்தனத்துக்காக வருத்தம் ஏற்பட்டது.

“அப்பா! கடைக்குப் போய் கொஞ்சம் சாமான் வாங்கிட்டு வர்றீங்களா?”

`இவனுக்கு நான் எடுபிடியா!’ எழுந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, மகன் நீட்டிய பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். இப்போதெல்லாம் பசிகூட மந்தமாகியிருந்தது.

“குளிரும்பா. மஃப்ளர் கட்டிட்டுப் போங்க!” என்ற குரலை அலட்சியம் செய்தார்.

அங்குதான் சந்தித்தார் தேவியை.

“யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க ஸார்?” தமிழ்க் குரல் கேட்டு மெய்சிலிர்த்துப்போனார் கிருஷ்ணன்.

அவளுக்கு முப்பது வயதுதான் இருக்கும். நெற்றியில் பொட்டு இல்லை. `என்ன நாகரிகமோ!’ என்று மனதுக்குள் ஒரு சிறு வெறுப்பு.

மரியாதையை முன்னிட்டு சிறிது நேரம் பேசிப் பிரிந்தார்கள். இல்லை, அவளேதான் பேசினாள் — தான் படிப்புக்காக இருபது வயதில் வந்தது, கல்யாணம் செய்து ஒரு வருடத்துக்குள் கணவர் இறந்தது – என்று பல தகவல்களை மூச்சுவிடாமல் சொன்னாள். `தமிழ் பேசுகிறவர்களைப் பார்த்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது,’ என்றாள், தான் அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று நினைத்தவளாக.

விதவை, பாவம்! இவளைப்போய் திட்டி வைத்தேனே! தன்னைத்தானே வைதுகொண்டதில், அவள்மீது ஏதோ பிடிப்பு ஏற்பட்டது போலிருந்தது.

அடுத்த முறை, “எங்க வீட்டுக்கு வாங்களேன். பக்கத்திலேதான். நான் ஃபில்டர் காபி போட்டுத் தரேன்,” என்று தேவி சிரித்தபோது, “வரேன். ஆனா, சர்க்கரை வேண்டாம்,” என்றபடி அவரும் அவள் சிரிப்பில் கலந்துகொண்டார்.

`இந்தப் பெண்ணுடன் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேச முடிகிறதே!’ பிறர் சொல்லக்கூட கூச்சப்படும் விஷயங்களைக்கூட அறிவுபூர்வமாக, தைரியமாக, தேவி பேசியபோது பிரமிப்புதான் எழுந்தது.

`எனக்கும் ஒன்று வாய்த்திருந்ததே! வடிகட்டின முட்டாள்! எதைப்பற்றியும் எதுவும் தெரியாது!’

`தேவியும் தன்னைப்போல் தனிமையில் வாடுகிறவளோ? அதுதான் இவ்வளவு சீக்கிரத்திலேயே என்னுடன் நெருங்கிவிட்டாளோ?’

மனைவிக்கும் தேவிக்குமாக அவர் மனம் தாவியது.

இப்படி ஒரு படித்த பெண்ணை மணந்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும் என்று ஓர் எண்ணம் எழ, அதை அடக்க முடியாது பாடுபட்டார். குற்ற உணர்ச்சி மிகுந்தது.

மகனது வீட்டில் தொலைகாட்சியைத் தவிர வேறு துணை இல்லாதவராக இருந்தபோது எழுந்த விரக்தி சிறிது சிறிதாக மறைந்தது. முன்பு ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தபோது எழுந்திருப்பதுகூட பெரும் பிரயத்தனமாக இருந்தது. இப்போதோ, தினமும் காலார நடந்துபோனார்.

வழியில் தேவியைப் பார்க்க முடியுமா என்று மனம் துடிக்க, ஏதோ குற்றம் செய்வது போலிருந்தது. மனைவிக்குத் துரோகம் செய்கிறோமோ?

அந்த மனமே சமாதானப்படுத்தியது: மனைவிதான் போய் சேர்ந்துவிட்டாளே! இன்னும் எத்தனை காலம்தான் தனிமையிலேயே கிடந்து தவிப்பது!

அவரிடையே தோன்றியிருந்த மாறுதல்களை மகன் கவனிக்கத் தவறவில்லை. புன்னகையுடன், “யாருப்பா ஒங்க புது ஃப்ரெண்ட்?” என்று கேட்டான்.

விழிகள் விரிய, “தமிழ் பேசறாங்க!” என்று அவளைச் சந்தித்ததுபற்றி விவரித்தார்.

ரகு யோசனையுடன், “பொண்ணா! எத்தனை வயசிருக்கும்?” ன்று கேட்டான்.

அவருக்கு என்னமோ போலிருந்தது. அவனது கேள்விக்கு நேரிடையாகப் பதிலளிக்காது, “போடா! நான் என்ன, சின்னப்பையனா?” என்று தன் தடுமாற்றத்தை மறைக்கப்பார்த்தார்.

அன்று சாயந்திரம் வீடு இரும்புவதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. வீட்டுக்குள் நுழைய இருந்தவர், மருமகளின் குரல் உரக்க ஒலிப்பது கேட்டுத் தயங்கி நின்றார்.

“ஆனாலும், ஒங்கப்பாவுக்கு இந்த வயசிலே புத்தி இப்படிப் போகவேண்டாம். அவளோட அப்படி என்ன பேச்சும், சிரிப்பும்! என்னடா, தினமும், `கடைக்குப் போறேன். ஒனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமா?’ன்னு கரிசனமா கேக்கறாரேன்னு பாத்தேன். இந்த சாக்கிலே அவ வீட்டுக்குப் போறாருன்னு இப்பத்தானே தெரியுது!”

கிருஷ்ணன் திகைத்துப்போனார். யார் இவளிடம் ஒன்றுக்குப் பத்தாக வத்தி வைத்திருப்பார்கள்?

`இந்நாடு நாகரிகத்தின் உச்சம்!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டாலும், சிலருடைய மனப்போக்கு பின்தங்கியே இருக்கிறது!

இனியும் தான் இங்கு இருப்பதோ, தேவியுடன் பேசிப் பழகுவதோ தனக்குத்தான் கேவலம்.

தேவி!

சின்னப்பெண், பாவம்!

அவளுடைய எதிர்காலம் தன்னால் பாழாகக் கூடாது.

“எதுக்குப்பா இவ்வளவு அவசரமா திரும்பப் போகணும்னு துடிக்கறீங்க? எனக்கு லீவு வருது. ஒங்களைக் கோயிலுக்குக் கூட்டிப்போகலாம்னு இருந்தேனே!” மகனது குரலில் உண்மையான ஆதங்கம் இருப்பதாகத் தோன்றவில்லை அவருக்கு. அவருடைய முடிவால் ஏற்பட்ட நிம்மதியை மறைத்துக்கொள்ள அப்படிச் சொல்வதாகத்தான் நினைக்க, கசப்பு ஏற்பட்டது.

“நம்ப ஊருக்குப் போனா, தினமுமே கோயில் குளம்னு இருக்கலாம். பாக்கறவங்ககிட்டே எல்லாம் தமிழிலே பேசலாம்,” என்றவரின் குரலில் ஆதங்கம். “அங்கே வயலும், மரமுமா பச்சைப்பசேலுன்னு எப்படி இருக்கும்! இந்த கான்க்ரீட் காட்டிலே என்னால இருக்க முடியாது, ரகு!” என்றவரின் குரலில் தீர்மானம்.

இருந்தாலும், தான் செய்த காரியத்துக்கு அவன் மனம் நோவானேன் என்ற அலுப்புடன், “நல்லவேளை, நம்ப வீட்டை விக்கக்கூடாதுன்னு நீ சொன்னே!” என்று சப்பைக்கட்டு கட்டினார் கிருஷ்ணன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *