(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நானும் கணபதி சாரும் பாலூர் சர்க்கிள் முன் வந்து இறங்கும் போது, அங்கே பள்ளி இடுகாட்டில் ஏராளமான பேர் கூடி நின்றும்கூட சொல்லத் தெரியாத ஒரு ஏகாந்த சோகம் எனக்கு அனுபவமானது. ஜார்ஜ் சாரைக் காணவில்லை.
சிலர் அடக்கமான குரலில் வார்த்தையாடிக் கொள்கிறார்கள். மனிதர்களோடு மனிதர்களாய், சிலுவைகள் மண்ணில் எழும்பி நிற்கின்றன. ஒதுக்குப்புறமாய் பச்சை மண்ணில் புதிதாய் வெட்டப்பட்டிருக்கும் ஒரு குழியும் தென்படுகிறது…
முடிந்துபோன உயிர்களைத் தன்னகத்தில் கொண்டிருந்த மண்ணின்மீது முளைவிட்டுக்கொண்டிருந்த பச்சைப் புல் நுனிகளைப் பார்வையிட்டவாறு, மூச்சடக்கி நிற்கும் சாவின் களையில் சொட்டச் சொட்ட நனைந்துபோய், மௌனமாய் ஒன்றும் பேச இயலாமல் ஒதுங்கி நின்றுகொண்டிருந்தேன் நான்.
காரை ஒதுக்கி நிறுத்திவிட்டு வந்த கணபதி சார் பக்கத்தில் நின்றவரிடம், ‘இன்னும் வரவில்லையா?’ என்று கேட்டார்.
‘இல்லை…’ என்று பதில் வந்தது.
அவரும் என் பக்கத்தில் வந்து ரோட்டோரத்தில் ஒதுங்கி நின்றார். தூரத்து வளைவில் பார்வையைச் செலுத்தி எதிர்பார்த்தவாறு நிற்பவர்களின்கூட நாங்களும் சேர்ந்துகொண்டோம்.
இலாகாவில் தலைமைப் பொறியாளராகச் செயலாற்றும் போதும், பிறகு ஏழு ஆண்டுகளுக்கு முன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின், ஒரு தனியார் கம்பெனியின் பிரதம டெக்னிக்கல் ஆலோசகராகப் பதவியேற்ற பிறகும், சதா சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் யூ.இ. ஜார்ஜ் சாரைச் சுற்றியே என் மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவர் கீழ் நான் அதிக நாட்கள் வேலை பார்த்ததில்லை. ஆனால், வேலை பார்த்த சொற்ப சில காலத்திலும் அவருடைய சோர்வோ, சோம்பலோ இல்லாது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் அந்தச் சுறுசுறுப்பு மிக்க திறமை, என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. உதவி என்ஜினியரான எனக்கே இப்படியென்றால், சர்வீஸில்
என்னைவிடக் குறைந்தது பதினைந்து ஆண்டுக்கு ஸீனியரான என் சூப்பரண்டிங் என்ஜினியர் கணபதி சாருக்கு ஜார்ஜ் சார்மீது எவ்வளவு அபிமானம் இருக்கும்.
தூரத்து வளைவைத் தாண்டி ஒரு வேன் வருவது தெரிகிறது.
வேன் இங்கே வந்து நின்றதும், உள்ளே புடை சூழ்ந்திருந்த மாணவர்கள் கீழே இறங்குகிறார்கள். வேனைப் பின் தொடர்ந்து நாலைந்து கார்களும் வேகமாய் வந்து நின்றன.
அதுவரை அமைதியாக இருந்த சூழ்நிலை இப்போது சுறுசுறுப்பாகியது. வேனிலிருந்து ஸ்ட்ரெச்சரில் ஜார்ஜ் சாரின் மகனின் பூத உடம்பை வெளியே எடுத்து வருகிறார்கள்.
பதினைந்து வயது பாலகனின் களங்கமற்ற முகம்…
ஒரு பார்வையில் உயிரில்லாத சடலம் என்று சொல்ல முடியாது.
முகத்தில் சோக பாவம் சூழ, அவன் பள்ளிக்கூட சக மாணவர்களும் சர்ச்சு காம்பவுண்டுக்குள் செல்கிறார்கள்.
காரிலிருந்து இறங்கும் ஜார்ஜ் சாரைக் கண்டதும் நானும் கணபதி சாரும் ஒன்றும் பேசத் தோன்றாமல் சூனியத்தில் கண்ணை நட்டவாறு அப்படியே நின்றோம். ஆனால், அவர் எங்களைக் கவனித்து விட்டார். பக்கத்தில் ஓடி வந்தார்.
‘என்ன கணபதி?’
அவர் விழிகள் செக்கச் சிவந்து காணப்பட்டன. இங்கே வருமுன் அவர் ரகசியமாக நன்றாக அழுதிருக்கவேண்டும்… ஆனால்… மிகவும் சகஜ பாவத்துடன்தான் அவர் இப்போது வார்த்தையாடுகிறார்… துயரம் என்பதும் பிறத்தியார் அறியாமல் மிக மிக ரகசியமாக, தனக்குத்தானே, மானசீகமாய் பாராட்டப்பட வேண்டிய ஓர் அந்தரங்க உணர்ச்சிதானா!
எங்களுக்கு அவரிடம் ஒன்றுமே விசாரிக்கத் தோன்றவில்லை. அங்கே நின்ற ஏனையோர்களையும், தம் குடும்ப விசேஷத்திற்கு வந்திருப்பவர்கள் என்ற ஹோதாவில் வரவேற்று குசலப் பிரச்னம் செய்ய வேண்டியது தன் கடமை என்ற உணர்வில் அவர் சுறுசுறுப்பாக இயங்குவதாக எனக்குப் பட்டது.
எனக்கு இதுவரை நேரடியாகக் கிடைத்திருக்கும் துஷ்டி வீட்டு அனுபவங்களிலிருந்து நேர் விரோதமான இந்தக் காட்சி என்னை ஸ்தம்பிக்கச் செய்து விட்டிருந்தது.
இறுதிச் சடங்கு நடந்துகொண்டிருந்தது…
மலர் வளையங்கள்…
சிலுவைக் குறி…
சவப் பெட்டி…
பைபிள் வாசிப்பு…
பிரார்த்தனை…
‘சாருக்கு அது பெரிய அதிர்ச்சிதான்…!’
எத்தனை நேரம்தான் மௌனத்தின் பயங்கரச் சுமை அழுந்த இப்படி நிற்பது என்று இப்படிச் சொன்னேன் நான்.
‘அதிர்ச்சி என்பது அப்படியொன்றும் எனக்குப் புதிதல்லவே… இல்லையா கணபதி…?’ என்று கேட்டுவிட்டு அவர் சிரித்தார். இப்போது பிராந்தி வாடை லேசாகத் தெரிகிறது. அதை மீறி அவர் கேள்வியின் அர்த்த வியாபகத்தில் என் மனம் அழுந்தியது.
பிரபலமான பழம் பெருமை வாய்ந்த, கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்-எல்லோருமே படிப்பில் மகா கெட்டிக்காரர்கள். மூத்த சகோதரன் ஏ.ஜி. ஆபீஸில் ஆடிட்டர். இரண்டாவது அண்ணன் யூ.இ. தோமஸ் சார் எங்கள் இலாகாவிலேயே டெக்னிக்கல் மெம்பராக இருந்து ஓய்வு பெற்று, இப்போ ஒரு பிரைவேட் கம்பெனியில் தலைமைப் பொறியாளராக வேலை பார்க்கிறார்… பிறகு இவர், ஜார்ஜ் சாரின் தம்பி பிலிப்பு இப்போது இருந்திருந்தால் இலாகாவில் சீஃப் என்ஜினியராகியிருப்பார்… அத்தனைக்கு இளமை… அபார அறிவாற்றல் உடையவர். நாலைந்து ஆண்டுகளுக்கு முன், சூப்பரண்டிங் என்ஜினியராக இருக்கையில், ஒருநாள் ஆபீஸிலிருந்து வந்து டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தார். திடீரென்று டென்னிஸ் மட்டையைக் கீழே போட்டுவிட்டு, ‘நெஞ்சு வலி’ என்றார். அவ்வளவுதான். அவர் கதை முடிந்துவிட்டது. அது ஜார்ஜ் சாருக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்குமோ…!
இப்போது ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து வயதான ஒரு ஆங்கிலோ இந்திய மாதும், ஒரு பெரியவரும் இறங்கி வருகிறார்கள்.
ஜார்ஜ் சார் அவர்களை நோக்கிச் செல்கிறார்.
‘அவுங்க யாருண்ணு தெரியுமில்லே?’ என்று கேட்டார் கணபதி சார். தெரியாது என்று நான் தலையாட்டுகிறேன்.
‘ஜார்ஜ் சாரின் மனைவியின் உறவுக்காரங்க…’ என்று அவர் சொன்னபோது எனக்கு ஞாபகம் வருகிறது.
ஆமாம்… ஜார்ஜ் சாரின் திருமணமும் அதன்பின் நடந்தவைகளும் பெரிய அதிர்ச்சி அளிப்பவைகள்தான்… இவர் ஏதோ புராஜக்ட் பிரதேசத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில், அப்போது இவர் உதவி என்ஜினியர். வீட்டில் பெரிய பெரிய இடத்துச் சம்பந்தங்கள் இவருக்காக ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள். இவர் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணைக் காதலித்து, பதிவுத் திருமணம் செய்துகொண்டாராம்.
அந்தஸ்தும் பழம் பெருமையும் இருந்த யாராலும் இந்தக் கல்யாணத்தை அங்கீகரிக்க முடியவில்லை. குடும்பத்தில் இருந்து இவரை நீக்கி வைத்துவிட்டார்கள். இரண்டு குழந்தை கள் பிறந்தது வரையிலும் குடும்பத்துடன் ஒரு தொடர்பும் இருக்கவில்லை. பிறகு இவர் இரண்டாவது அண்ணன் தோமஸ் சார், கொஞ்சம் முன்னேற்ற மனப்பான்மையுடையவர், அவர் மூலம்தான் குடும்பத்துடன் உறவு சரிக்கட்டப்பட்டது.
இவ்வளவுக்கு மன உளைச்சலை உருவாக்கிய அந்தத் திருமண வாழ்வோ, சென்ற ஆண்டு புற்று நோய் காரணமாக அவர் மனைவியின் மரணத்தில் முடிவடைந்தது.
இப்படி அதிர்ச்சிமேல் அதிர்ச்சியில் வாழ்ந்துகொண்டே வந்தவருக்கு இப்போது மகனின் துர்மரணத்தின் அதிர்ச்சி, அவரே கேட்டதுபோல் அப்படியென்ன புதிதா?
அவர் கேள்வியில் என் மனம் முக்குளித்து எழுந்து கொண்டிருந்தது. மீண்டும் எங்கள் பக்கத்தில் அவர் வந்தபோது, ‘எப்படி சார், இது நடந்தது?’ என்று கணபதி சார் கேட்டார்.
‘ஒண்ணும் சொல்ல வேண்டாம் கணபதி! மூத்த பையன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டலில்தான் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறான். இவன் இங்கே என்கூட தங்கித்தான் லயோலாவில் படித்துக் கொண்டிருந்தான். அவள் – எங்க மோளி – இறந்த பிறகு, இங்கே வீட்டில் வேறு யாரும் இல்லை. எனக்கோ எப்போதும் டூர்… படிப்பிலும் மற்ற ஆக்டிவிட்டிகளிலும் இவன் மூத்தவனைவிட மிகக் கெட்டிக்காரன்.
அதனால் தனிக் கவனம் கிடைக்குமே என்று பீர்மேடு பப்ளிக் ஸ்கூலில் இவனைச் சேர்த்திருந்தேன். அங்கே ஸ்கூல் பக்கத்தில் ஒரு குளம் இருக்குது. கரையில் தாழ்ந்த கிளையுள்ள ஒரு மரம்… பசங்களுக்கு டைவ் பண்ணிக் குளிக்க வசதியாக இருந்தது அது. மாலையில் அந்தப் பையன்கள் குளத்தில் டைவ் பண்ணி விளையாடுவது வழக்கம். இவன் நல்ல ஸ்விம்மர்… இங்கே லயோலாவில் படிக்கும்போதே நிறைய பதக்கங்கள் வாங்கியிருக்கான்… நேற்றைக்குச் சாயந்திரம் அந்த மரத்திலிருந்து டைவ் பண்ணியிருக்கான். தண்ணீரில் முழுகி விட்டு, தலை மேலே வந்தபோது ‘ஹெல்ப்… ஹெல்ப்…’ என்று இவன் சத்தம் போடுவதைக் கேட்டு, கரையில் நின்ற கூட்டாளிகள் ‘இவன் பெரிய ஸ்விம்மர், சும்மா ஜோக் பண்ணுகிறான்’ என்று நினைச்சு, சும்மா நின்றிருக்கிறாங்க. கடைசியில் தண்ணீருக்குள் முழுகி ரொம்ப நேரமாகியும் ஆளைக் காணாததால் எல்லோருமாக நீரில் குதிச்சு இவனைத் தேடிப்பிடித்து தூக்கி எடுத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க… போஸ்ட் மார்ட்டம் செஞ்ச டாக்டர் சுவாசப் பையில் ஒரு துளி நீர்க்கூட நுழையவில்லை என்று சொன்னார்.’
‘பிறகு எப்படி சாவு நேர்ந்தது?’
‘அதுதான் டாக்டரும் ஆச்சரியப்படுகிறார். பீர்மேடு குளிர்ப் பிரதேசமல்லவா? மேல் நீர்ப் பரப்பில் தண்ணீர் மிகுந்த குளிராக இருந்திருக்கும். கீழே ஒருவேளை டெம்பரேச்சரில் பெரிய வித்தியாசம் இருந்தால், அதனால் இதயம் நின்றுவிடக் கூடும். இல்லாவிட்டால் டைவ் பண்ணிய வேகத்தில் தலைபோய் கீழே ஏதாவது பாறையில் மோதி, அந்த அதிர்ச்சியில் உறுப்புகள் யாவும் ஸ்தம்பித்து விடலாம்… உள்ளே தண்ணீர் புகாமல் நேர்ந்த இந்தச் சாவுக்கு டாக்டர் இப்படி ரெண்டு காரணங்களை ஊகிக்கிறார்… எது எப்படியோ, இப்போ இப்படி ஆயாச்சு…!ஹும்… இப்படிப்பட்ட சாவு யாருக்கானாலும் சரி, நல்லது இல்லை… இல்லையா?’
இவரால் எப்படி இப்படி உணர்ச்சிகளை அடக்கி ஆண்டு விவரமாய்ப் பேச முடிகிறது என்று மலைத்துப்போய், அவருக்காகக் கசிந்துருகும் உணர்வுகளுடன் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
அவர் நிலைமையைக் கற்பனை பண்ணியபோது என்னாலேயே தாங்க முடியவில்லை. ஆனால், நேரடியாகத் தாக்கப்பட்டதனால் பாதிக்கப்பட்ட இவரால் எப்படி இவ்வளவு அமைதியாக இந்தப் புத்திர சோகத்தை எதிர்கொள்ள முடிகிறது.
‘உங்களுக்கு எப்போ தெரிஞ்சுது?’
‘நான் டூரில் இருந்தேன். எனக்குத் தகவல் கொடுத்திருக்கிறாங்க… வழியில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் ட்ரெயின் நின்ன போது, ஸ்டேஷன் மாஸ்டர் என்னைத் தேடிக் கண்டுபிடிச்சு, ‘குளிக்கும்போது ஒரு சின்ன விபத்து, ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க’ என்று மட்டுமே சொன்னார். ஆனால், அப்போதே எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது…’ என்னால் தாங்க முடியவில்லை. என் நெஞ்சுக்குள்ளிருந்து தொண்டையை உடைத்துக்கொண்டு அழுகை வெளியில் வந்து விடும்போல பயமுறுத்தியது…
எல்லாம் முடிந்து, சற்றுக் கழித்து நாங்கள் திரும்பும்போது, எங்கள் பக்கத்தில் ஓடி வந்து எங்கள் கரங்களைப் பற்றி, ‘சிரமம் எடுத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வந்ததுக்கு மிகவும் நன்றி’ என்று கூறி எங்களுக்கு விடை தரும்போதும், என் உள்ள உணர்ச்சிகள் உடைப்பெடுத்து விடாமல் இருக்க அவர் விழிகளை என் விழிகள் வேண்டுமென்றே தவிர்த்தன.
– 16.03.1973
– சுதேசமித்திரன் 11.1973.
– இரண்டாவது முகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2012, கிழக்கு பதிப்பகம், சென்னை.