இன்று மேகலாவின் பள்ளியில் பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் அனுபவங்களைப் பகிரும் நாள். பத்தாண்டுகளுக்கு முன்பு அப்பள்ளியிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுச் சென்ற அவர்கள் முதன் முதலில் மீண்டும் சந்தித்த போது மகிழ்ச்சிப் பெருமிதத்தில் நனைந்தனர்.
மேகலா தான் முழு ஏற்பாட்டையும் செய்திருந்தாள்.
‘ஒவ்வொருவரா வந்து அவரவர்களுடைய குடும்பத்தப் பத்தி சொல்லிட்டு தங்களோட அனுபவத்த பகிர்ந்துக்கலாம்.’ முதலில் நான் ஆரம்பிக்கிறேன்.
மேகலாவுக்குப் பின் ஒவ்வொருவராகத் தொடர்ந்தனர்.
இப்பவும் முன்னால நின்னு பேசரது பிரச்சினையா. பேசாம மோட்டுவளய பாத்து பேசுடா. அனைவரும் கலாய்க்க ஆரம்பித்தனர் சுந்தரை.
யாரெல்லாம் பேசி முடித்தார்கள் என குறித்துக் கொண்டே வந்த மேகலா.
இன்னும் என்ன வசந்தனைக் காணோம் என்றவுடன் அனைவரும் ஒருசேர கிளம்ப நேரமாகியிருக்கும் வந்து விடுவான் , வீடு நடக்கும் தூரத்தில் தானே இருக்கிறது என்றனர்.
நேரம் போகப் போக அனைவருக்கும் ஒரே குழப்பம். வசந்தனுக்கு என்னவாயிற்று. ஏன் வரவில்லை என்று.
ஒருவாறு விளையாட்டு, சாப்பாடு என அனைத்து நிகழ்வுகளும் முடிந்த பின்னும் அவன் வராமல் போகவே
இனிப்புப் பொட்டலங்களுடன் அவன்வீட்டிற்குப் படையெடுத்தனர் நண்பர்கள்.
மிகுந்த தயக்கத்துடன் அனைவரையும் வரவேற்றான் வசந்தன். எல்லாக் கேள்விகளுக்கும் மென்று முழுங்கி சரியாகப் பதிலளிக்காதது நண்பர்களுக்கு வருத்தத்தைத் தந்தது.
நம் வசந்தனா இவன். கூத்தும் கும்மாளமுமாக அனைவரையும் வம்பிழுத்துக்கொண்டே அலைவான்.
‘விரல்களை வாயில் வைத்து விசிலடிக்க ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டான்.’ ஞாபகம் இருக்கிறதா?
‘எப்படி இவ்வளவு மாற்றம். வேட்டி சட்டை அணிந்து திருநீறு பட்டை போட்டு பழுத்த ஞாநி போல’.
கவனித்தாயா. அவன் மனைவியைக் கூட சரியாக அறிமுகப் படுத்தவில்லை.
நன்றாக அவமானப் படுத்திவிட்டான்.நாம் அவன் வீட்டிற்குபோயிருக்கவே கூடாது.
அவன் வீட்டருகே இருந்த குளக்கரைப் படிகளில் அமர்ந்துஅங்கலாய்த்துக் கொண்டிருந்தனர் நண்பர்கள்.
இனியும் அமைதியாக இருப்பது தவறு. தீர்மானித்தாள் மேகலா.
‘உங்களுக்கென்ன தெரியும் வசந்தனைப் பற்றி. காலையில் பேசினீர்களே. கனவுகளைப் பின் தொடர்ந்து ஓடினோம். வாழ்க்கையைஅமைத்துக் கொண்டோம். ஆனால் காலம் நிற்க வில்லை. பத்து ஆண்டுகள்வினாடிகள் போல் கழிந்துவிட்டது. இனியாகிலும் ஒவ்வொரு வருடமும் தவறாது சந்திக்க வேண்டுமென்று.’
நீங்கள் சொன்ன அந்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் ஆகிவிட்டது தெரியுமா?
பொதுத் தேர்வுக்குப்பின் மார்பகப் புற்று நோய் பாதித்ததால் அவனின் தாயார் இறந்து விட்டாள். அவனின் தாய் வழிப் பாட்டி சொத்துக்கள் கைவிட்டுப் போகக் கூடாது என்பதைக் காரணம் காட்டி பத்தொன்பதே வயதான தன் சொந்தக்காரப் பெண்ணை இரண்டாம் தாரமாக அவன் தந்தைக்கு மணமுடித்துக் கொடுத்தாள்.
தன்னை விட ஒரு வயதே மூத்த செல்வியைத் தந்தையின் இரண்டாம் மனைவி என ஏற்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலை ஆசிரமத்தில் சேர்ந்தான் வசந்தன். அதன் பின் நல்ல வேலை திருமணம் என யோசிக்கும்போது
முன் நின்று திருமணம் நடத்தி வைக்க சொந்தங்களும் முன் வரவில்லை. ஊர்க் காரர்களின் தொந்தரவு வேறு.
காலம் அவனை நிம்மதியாக விடவில்லை. இரண்டே வருடத்தில் தந்தை நோய்வாய்ப் பட்டு இறந்து விடவே, சொத்துக்கள் அனைத்தையும் விற்று மருத்துவச் செலவு செய்தது போக மீதத்தை செல்வியின் குடிகார மாமன் பிடுங்கிக் கொண்டு தொல்லை தருவதைக் கேள்வியுற்று மனமிரங்கி அவளுக்காக மீண்டும் இந்த ஊருக்கே வந்துவிட்டான்.
ஊர்க் காரர்கள் மட்டும் சும்மா விட்டார்களா என்ன.
என்ன தம்பி. உங்கப்பாருக்கு ரெண்டு வருசம் பொண்டாட்டியா இருந்திட்டா, அதனால நீ கட்டிக் கிடலாம் னு நினைப்பு வச்சு வந்திருந்தா அத மறந்திடு.
ஒரு புறம் ஊர்க் காரர்களின் வம்புப் பேச்சு, மறுபுறம் செல்வியின் அழுகை. இரண்டிற்கும் முடிவு கட்ட சிவன் கோவிலில் ஓதுவாராகச் சேர்ந்துவிட்டான்.
தம்பி சாமி கோவில்ல வேல செய்யுது. தப்பு செய்யாது என ஊர் மக்களும் ஏற்றுக் கொண்டதால் அவனால் நிம்மதியாக செல்வியுடன் இந்த ஊரில் காலம் தள்ள முடிகிறது. . இந்நிலையில் அவனால் எப்படி அவளை அறிமுகப் படுத்த முடியும்.
மாற்றாந்தாய் என்றா? தந்தையின் மனைவி என்றா? சுருக்கென உறைத்தது நண்பர்களுக்கு.