தந்திக்கம்பி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 17, 2013
பார்வையிட்டோர்: 6,893 
 

கருப்பும்,வெளுப்பும்,சிவப்பும்,பிங்குமாய் கரைந்தோடுகிற சிந்தனையுடன் சாலை கடக்கிற இருசக்கர வாகனமும் அதன் மீது அமர்ந்து வருகிற இவனுமாய் எட்டித் தொட வேண்டிய இலக்காய் இருக்கிற தூரம் எவ்வளவாய் இருக்கும்?

இருந்துவிட்டுதான்போகட்டுமே, தூரம் எவ்வளவாக வேண்டுமானாலும்? கடப்பதும் எட்டித்தொடுவதும் மட்டுமே உளகிடக்கையாய் இருக்கிற போது,,,,,,?

பாலமேடு டூ மேட்டமலை சாலையது. மிஞ்சிப்போனால் ஐந்து கிலோ மீட்டர்கள் இருக்கலாம் என சிலரும் இல்லையில்லை இருக்காது அதெல்லாம் அதற்குள்ளாகவே அடங்கிப் போகிற தூரம் அது என பலருமாய் கருத்துரைக்கிறார்கள்.

அவிழ்ந்து கிடக்கிற சாலை,அள்ளி முடியப்படாமல் நீண்டு தெரிவதால் அப்படி காட்சிப் பட்டுத்தெரிகிறது. கருநிறம் பூசிக்கொண்டு பூத்துக்கிடக்கிற சாலை. கற்களையும், மண்ணையும்,தாரையுமாய் பூசிகொண்டு உடல் காட்டி படுத்து கிடக்கிற நீளத்தின் ஓரத்தில்தான் அடர்ந்து கிடக்கிறது புல்லும், புதரும் செடிகளுமாய்.

போன வருடத்தின் மழைக்காலத்தில் முளைத்தெழுந்து அடர்ந்திருந்த கோரைப் புல் சாலை மறைத்து இரு ஓரமுமாய் வளர்ந்து பரவிக்கிடந்தது. அதை அகற்றி சுத்தம் செய்ய சாலைப்பணியாளர்கள் வேட்டையும், ராஜுவுமாய் மிகவும் சிரமப் பட்டுத்தான் போனார்கள்.

அதோ தெரிகிறதே அந்தக் கல்ப்பாலத்தின் ஓரம் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த நாளில்தான் அவர்கள் அறிமுகம் இவனுக்கு.

ஒரு மிதமான மழை நாளின் மாலை வேலையது. வந்து கொண்டிருக்கிறான் அலுவலகம் விட்டு. இவனது அதிர்ஷ்டமா அல்லது அவர்களது வேலையின் நீட்சியா தெரியவில்லை.

செயின் கழண்டு ஓட வழியற்று நின்று விட்ட இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டே வந்து கொண்டிருந்த வேளைஎன்ன சார் என உதவிக்கு வருகிறவர்களாக வேட்டையும், வீரணனும், ராஜீவுமாய் ஆகித்தெரிகிறார்கள். எதற்கும் இருக்கட்டுமே என வீரணன் குறித்து வைத்திருந்த ஒர்க்‌ஷாப் போன் நம்பர் கை கொடுக்கிறது. அவரது செல்லிலேயே போன் பண்ணி விடுகிறார் இவனது அனுமதியுடனும்,அவசரமாயும்,

அவரின் சொல் தாங்கிய ஒர்க ஷாப்க்காரரின் வருகை நிகழ்வதற்குள்ளாய் பாலத்தின் கைபிடிச்சுவரில் அமர்ந்திருந்த வேளை வேட்டைதான் பேச்சை துவக்குகிறவராய் இருக்கிறார்..

நாங்கள் அனைவரும் சாலைப்பணியாளர்கள்.இதோ நிற்கிறதே எங்களது காலடியில் தலை நிமிர்ந்தும், உடல் சிலிர்த்துமாய் கோரைப்புல் ஒன்று, இதிலிருந்து சாலையின் இரு புறமுமாய் இயற்கை அரவணைத்துக் கட்டியிருக்கிற முட்செடிகள், மற்றும் புதராய் மண்டிக் கிடக்கிற இன்னபிற செடிகொடிகளை அகற்றுவதிலிருந்து சாலையில் பெயர்ந்து தெரிகிற சிறு சிறு பள்ளங்களிலிருந்து, யானை பிடிக்கிற மாதிரியாய் விழுந்து கிடக்கிற பள்ளம் வரை செப்பனிடுவதும், பஞ்சர் ஒட்டுவதும் எங்களது வேலையாகிப் போகிறது. ஆகவே நாங்கள் சாலைபணியாளர்கள் என்கிற அவரது சுய அறிமுகத்துடனான இறுக்கப்பட்ட அவர்களது நட்பின் கண்ணிதெரிப்படுகிற நேரம் ஒர்க்‌ஷாப்க்காரர் வந்து வேலை முடித்துப் போய் விடுகிற சடுதியாகி போகிறது.

அன்றிலிருந்து இன்று வரை அந்த சாலையில் பயணிக்கிற நேரங்கள் யாவும் அவர்கள் கூட வருகிறதாகவே நினைவவனுக்கு.வாழ்வின் கீழ்த்தளங்களிலிருப்பவர்கள்தான் இம்மாதிரியாய் ஈரம் பட்டுத்தெரிகிறவர்களாக.

வருகிற வழியெங்குமாய் ஊர்ந்த எறும்புகளோடும், பூச்சிப் புழுக்களுடனுமாய் விரைகின்ற சாலை அழுக்காயும், அழகாயும் தன்னை கோடிட்டுக் கொண்டு நகர்கிறதாய்.

பெர்மிஷன் போட்டுவிட்டு இன்று சீக்கிரம் கிளம்பி விட வேண்டும் அலுவலகத்திலிருந்து என்கிற நினைப்பு வழ்க்கம் போலவே பொய்த்துப் போய்விட அலுவலகம் முடிந்து விட்ட பொழுதிலிருந்து அரைமணி கழித்துக்கிளம்புவனாக.

மழை வந்து விடுமோ என்கிற அளவு கட்டியிருக்கிற கருங்கலர் பூசி, உறுமல் காட்டிய மேகத்தை கைபிடித்து வழி சொல்ல போய்க் கொண்டிருக்கிறான் ஆக்ஸிலேட்டரை முடுக்கி விட்டவனாயும், பாதை மேல் விழிபதித்தவனாயும்.

மதியத்திலிருந்து உறுமிய மேகம் எப்பொழுது மழை பெய்ய வைக்கும் எனத் தெரியவில்லை.

போகிற வழியில் பாலமேட்டில் ஒரு வாழைப்பழம் சாப்பிடவேண்டும். சக்தி கடையில் டீசாப்பிடும் முன்பாக.

நாகர் கோவிலில் பணிபுரிந்த தினங்களில் தினசரி மாலை ஒன்று அல்லது இரண்டு வாழைப் பழங்கள் சாப்பிட்டு விடுகிற வழக்கம் இவனுள் குடிகொண்டிருந்ததுண்டு. வாரங்களில் சில நாட்களில் இந்த நடை முறையில் சில மாறுதல்கள் இருந்தாலும் பெரும்பாலுமாய் தவறாமல் கடைபிடித்து வந்தான். பாய் கடையில் தான் தவறாமல் சாப்பிடுவதும், வாங்குவதும்.இரண்டு பழங்கள், ஒரு டீ.

எப்படி பற்றிக்கொண்டது அந்தபழக்கம் எனத் தெரியவில்லை. அலுவலகம் முடிந்து ஆயாசமாய் வருகிற மாலை வேளைகளில் டீ மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாய் வைத்திருந்த இவன் ஒரு பெரியவர் சொல்லக் கேட்டுத்தான் இந்தப் பழக்கத்தை கைக்கொண்டான்.

ஒரு வெயில் காலத்தின் வெக்கை மிகுந்த நாள் அது. வழக்கம் போலவே அன்றும் அலுவலகம் முடிந்து டீக்கு சொல்லி விட்டுகடையின் ஓரமாய் கைகட்டி நிற்கிறான். எதிர்சாரியிலிருந்த பெட்டிக் கடைகள் ஹோட்டல், மற்றும் சலூனை வேடிக்கை பார்த்தவனாயும், சாலையின் நெரிசலை கண்ணுற்றவனாயும்.

அப்பொழுதுதான் ஒரு தீர்மானமான குரல் பின் தோள் தொட்டுத் திருப்புகிறது. தம்பி, பெரும்பாலுமா தினசரி ஒங்கள இங்க பாத்துருக்கேன். டீ மட்டுமே விரும்பி ச் சாப்புடுற நீங்க கூட ரெண்டு வாழைப்பழம் சாப்புட்டுக்கங்க, காலையிலயிருந்து யெழந்த சக்திய மீட்க ஏதாவது ஒரு வழியில ஒதவுமில்ல.என்கிறார்.

அவர் சொல்லின் ஞாயம் சட்டென தட்டுப்பட்டுத்தெரிய அன்று ஆரம்பித்த பழக்கம் இன்று வரை தொடர்வதாக.

என்ன,,,,?இப்போது அந்தப்பழக்கத்தில் கொஞ்சம் தொய்வு விழுந்து போனதாக அதை திரும்பவுமாய் தொடரவேண்டும்.இன்றே அதற்கு பிள்ளையார் சுழிபோட்டு விடலாமே.

வாழைப் பழம் சாப்பிட்டால் டீக்கடையில் பஜ்ஜி சாப்பிடுவது அடி பட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. கிராமத்துப் பலகாரம் என்கிற பெரும் ஆசையிலும் மனக்கோளாறிலுமாய் டீ சாப்புடுகிற தினங்களில் பஜ்ஜி சாப்பிடுவதுடன் வீட்டுக்கு பார்சலாய் பஜ்ஜிகள் வாங்கிப் போகிற பழக்கமும் இவனுள் புதிதாய் குடி கொண்டிருக்கிற வாழைப்பழ பழக்க நடை முறையில் அடிபட்டுப் போகக்கூடும்.

வண்டியை 40 கிலோமீட்டர் ஸ்பீடில் வைத்து ஓட்ட முடியவில்லை.சற்றே பயமாகவும், மன உதறலுடனுமாய்.

முன் டயர் வழுக்கை விழுந்து விட்டது. அதை நம்பி திருப்பத்தில் வேகமாய் திருப்பவோ அல்லது பள்ளம் மேடுகளில் கூச்சமில்லாமல் இறக்கி ஏற்றி ஓட்டவோ முடியவில்லை. தவிர வேகமாய் போகையில் டயர் வெடித்து வண்டியை இழுத்து விட்டால் ஏதாவது ஒரு திசை நோக்கி.

தன்னந்தனியாக ஆரவமற்றசாலையில் நடந்து போய்க் கொண்டிருப்பவர் யாராக இருக்க முடியும்?

முகம் தெரிந்தவராகவே இருப்பார்.அல்லது பழக்கமற்றவராகவும் இருக்கலாம்.

காலனி வீடு,அது தாண்டி பனை மரங்கள்,இன்னமும் பிளாட் போடப் படாமல் தரிசாக கிடக்கிற கரிசல் காடுகள் எல்லாம் தாண்டி வந்து கொண்டிருக்கையில் தெரிந்த அவரது ஆகுருதியான உருவம் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் என அடையாளம் சொல்லியது. தொங்கிப் போயிருந்த இடது கையை உடலோடு ஒட்டி வைத்துக் கொண்டும்,இடது காலை லேசாக இழுத்தவாறுமாய் நடந்து போய்க் கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தின் வேகத்தை மெதுவாக்கி மட்டுப்படுத்தி “வருகிறீர்களா?” எனக் கேட்டதற்கு ”இல்லை நான் சென்று கொண்டிருப்பது நடைப்பயிற்சிக்காய்.நீங்கள் செல்லுங்கள். உங்களது மதிப்பு மிகுந்த கேட்டலுக்கு நன்றி. இப்பொழுது நீங்கள் செல்வதன் மூலம் எனக்கும் விடை கொடுப்பவர் ஆகிப்போகிறீர்கள். விடை கொடுங்கள் எனக்கு தொடர்கிறேன் எனது வாக்கிங்கை” என்கிறார்.

பாலத்தின் பணிகள் இன்னமும் முடிவடையவில்லை போலிருக்கிறது, அன்று வேட்டை யும், இவனும்இன்னமுமான சாலைப் பணியாளர்களுடன் அமர்ந்திருந்த ஓடு பாலத்தைத் தான் இப்போது இடித்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உயர்த்திப் போடப் போகிறார்களாம் மழைகாலம் வந்தால் தண்ணீர் ரோட்டை மூடி ஓடி அந்த வழியே பஸ்சைகூட போக விடுவதில்லை.

பக்கவாட்டிலேயே மண் ரோடு போட்டிருந்தார்கள் தற்காலிகமாக.அது ஒரு மழை நாளில் அரித்துக்கொண்டு போய்விட இரு சக்கரவாகனமும், பாதசாரிகளும் தவிர்த்து யாரும் போகவில்லை அவ்வழியே அது தெரியாமல் அன்று பஸ்சில் போன இவன் பாலமேட்டில் இருந்து இருசக்கரவாகனமொன்றில் லிப்ட் கேட்டுப் போனான்.

தினசரி 500 பேருக்கும் குறையாமல் வெளியேறிப் போய் வருகிற மெயினான சாலையிது. இதைப்போய் இப்படிச்செய்தால்,,,,,?இது தவிர இந்த வழியாகப் போகிற பஸ்,லாரி, இருசக்கர,நான்கு சக்கர வாகங்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்டு பணியை ஆரம்பித்திருக்க வேண்டும்.அதை விடுத்து இந்த மழைக்காலத்தில் போய் ஆரம்பித்து,,,,,,,,,,என்றவராய் பேசிக்கொண்டே வந்தார் இவனை ஏற்றிகொண்டு வந்தவர்.

பக்கத்து ஊரில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கிறார். கல்யாணம், காதுகுத்து, விஷேசங்களில் சுத்துப்பட்டு 25 கிலோமீட்டர் வரை எனது கேமராவிலிருந்து பாயும் ஒலி விரவிக்கிடக்கி றது என்கிறார்.

மேட்டமலை தாண்டி காலனி வீடுகள், அது தாண்டி நிற்கும் பனைமரங்கள், சுடு காடு, காட்டோடைகள், காடுகள், பாலம் பெட்ரோல்பங்க் என இத்தியாதி இத்தியாதியாய் எல்லாம் தாண்டி பாலமேடு வந்ததும் வாழைப்பழம் விற்கிற கடை நோக்கி செல்கிறான்.

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)