தண்ணீர்… தண்ணீர்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2024
பார்வையிட்டோர்: 655 
 
 

வீட்டு ஜன்னலிலிருந்து சாரா எட்டிப் பார்த்தாள். தண்ணீருக்காக பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் தெருவில் நிறைந்து கிடக்க… வாகனப் போக்குவரத்துக்காக இடம் விட்டு தண்ணீர் லாரிக்காகக் காத்து நிற்கும் பெண்கள்… அக்கம் பக்க கதைகள் பேசுவது ஒருபுறம் என்றால், சீரியல் கதைகள் பேசுவது மற்றொரு புறம். தண்ணீர் லாரி எந்த நேரத்திலும் வந்துவிடலாம். ஆனால் சரியான நேரத்திற்கு முன்பாக ஆஜராகிவிடும் அவர்கள் வீட்டு வேலைக்காரி மகேசுவை இன்னும் காணவில்லை. சாராவின் கணவர் ஜான்சன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சாராவும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவள். அவர்கள் வீடு நல்ல வசதியுடன் மிக முக்கியமான இடத்தில் இருந்தபோதும், தண்ணீர் வற்றிய பழைய ‘போரை’ ஆழப்படுத்தவோ அல்லது புதிதாக போர் போட இடவசதியோ இல்லை.

மெட்ரோ வாட்டர் அடிபம்பிலும் தண்ணீர் வருவதில்லை. மெட்ரோ வாட்டர் தண்ணீர் லாரி நான்கு ஐந்து நாட்கள் என்று எப்போதாவது ஒருநாள் எட்டிப்பார்த்தது. லாரி தண்ணீர் வாங்கி ஊற்றிக்கொள்ளவும் ‘சம்ப்’ வசதியில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டிய காலத்தில் எண்பது அடி ஆழம் வரையே போடப்பட்ட ‘போர்’. அந்தக்காலத்தில் அஸ்திவாரம் தோண்டும்போதே சில அடிகள் ஆழத்திலேயே தண்ணீர் வந்துவிடும். இப்போது வசதி படைத்த அக்கம்பக்கத்தினர் இருநூறு அடி ஆழத்திற்கும் அதிகமாகவே ‘போர்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மெட்ரோ வாட்டர் டிபார்ட்மென்டு ‘போர்’ அமைக்க விதிமுறைகள் நிர்ணயித்திருந்தாலும் அதை யாரும் பின்பற்றாமல் பூமத்திய ரேகையைத் தொடும் அளவிற்கு ‘போரை’ இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வசதியிருந்தும், புதிய போர் இறக்க இடவசதி இல்லாத காரணத்தால் சாராவும் ஜான்சனும் லாரி தண்ணீரை எதிர்பார்த்து… மகேசு இவர்கள் வீட்டு வேலைக்காரி. பல வீடுகளில் பத்து பாத்திரம் தேய்க்கும் வேலை பார்த்தாலும், ஜான்சன் – சாரா தம்பதியினர் வயதானவர்கள் என்பதால் இவர்கள் வீட்டை மையமாய் வைத்து வந்து போவாள். அவள் வந்துதான் லாரியிலிருந்து பத்து இருபது குடங்கள், சின்னஞ்சிறு பாத்திரங்களில் எல்லாம் நீர் நிறைத்து வைப்பாள்.

நான்கைந்து நாட்கள் தண்ணீர் வராவிட்டாலும் சமாளித்துக் கொள்வார்கள்.‘‘சாரா, மாடியில் வேலை செய்யும் தேவானை வந்துட்டாளா? அவளையாவது நமக்கு தண்ணீர் பிடித்துத் தரச்சொல்வோம்…’’ என்ற ஜான்சன் தன் மழிக்கப்படாத தாடியை நீவிவிட்டபடி, சாய்வு நாற்காலியில் தன் மூக்குக் கண்ணாடியை சரிபார்த்தபடி சாய்ந்திருந்தார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். நால்வரும் வெளிநாடுகளில் தத்தமது குடும்பத்தோடு ஐக்கியமாக… தாயும், தந்தையும் இங்கே இப்படி அல்லாடி அல்லல்பட்டு…‘‘மார்னிங் அவ வந்தப்பவே கேட்டேன். அவ பெண்ணுக்கு பிரசவமாம். சீக்கிரம் போகணும்னு சொல்லிட்டு மாடியிலிருந்து போயிட்டா…’’லாரி வந்து தண்ணீர் பிடித்து நிறைத்ததும், இவர்கள் வீட்டு மாடியில் குடிவந்துள்ள பெண்ணும் தன் பணிக்குப் புறப்பட்டு விடுவாள்.

இதுதான் நடைமுறை. மாடியை யாருக்கும் குடித்தனம் விடாமல், பிடிவாதமாக காலியாகவே வைத்திருந்தாள் சாரா, தங்கள் தனிமைக்கு குந்தகம் வருமோவென்று. குடித்தனத்திற்காக வந்த மனோன்மணி என்ற பெண்ணின் வற்புறுத்தலால் மனம் மாறி அவளுக்கு மாடிப்பகுதியை வாடகைக்கு விட்டாள். குடிவந்த பெண் இளவயதினள். வயது முப்பது இருக்கலாம். தன் கணவன் தனியார் கம்பெனியில் வேலை செய்வதாகவும் தானும் ஒரு கம்பெனியில் வேலை செய்வதாயும் சொன்னாள். பார்க்க அழகாய்… நல்ல பெண்போல சுடிதார் உடுத்தி முடியை முன்னும் பின்னும் புரளவிட்டு… மாத வாடகை பத்தாயிரம் ரூபாய்.

அட்வான்ஸ் பணமாக ஒருலட்ச ரூபாயைக் கொடுத்துவிட்டு மனோன்மணி மாடிப்பகுதிக்குக் குடிவந்தபோது தங்கள் தனிமை தொலைந்ததாய் நினைத்தார்கள். மனதிற்குள் மத்தாப்பாய் சிறு சந்தோஷம். அவள் தங்களுடன் நன்கு பழகுவாள் என்றிருந்தார்கள். ஆனால், அவள் வீட்டு வேலைக்காரி தேவானைதான் அதைச் சொன்னாள். ‘‘அந்த அக்கா சினிமாவிலே நடிக்கறாப்பல… வேண்டியவங்க அழைச்சா டிவி சீரியல்லே கூட போய் நடிக்குமாம். சொந்த வீடெல்லாம் இருக்காம். ஷூட்டிங்குக்கு போக வசதியா, இங்கே குடிவந்திருக்காங்களாம்…’’போயும் போயும் ஒரு நடிகைக்காக மாடிப்பகுதியை வாடகைக்கு விட்டோம். தாங்கள் மாடிப்பகுதியை எத்தனை நாள் பூட்டியே வைத்திருந்தோம்.

அவள் வற்புறுத்தலுக்காக மனம் மாறி வாடகைக்கு விட்டால்… சினிமாவைப் பார்க்காத, பார்க்க விரும்பாத இவர்கள் வீட்டில் ஒரு நடிகை குடிவருவதா. அவளது கார் வேறு இவர்கள் காருக்குப் பக்கத்தில் போர்ட்டிகோவில் நிற்கிறது.‘‘நடிகையின்னா எங்கும் வாடகைக்கு வீடு குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களாம். அதான் கம்பெனியிலே வேலை செய்யறதா உங்ககிட்ட பொய் சொல்லி வந்திருக்கு. கல்யாணம் ஆயிருச்சாம். லவ் மேரேஜாம். இப்ப விவாகரத்துக்காக கோர்ட்டுக்குப் போயிருக்காம்…’’கூடுதல் தகவலாய் தேவானை இதை வேறு சொன்னாள். கேட்டதும் மூக்குக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு ஸ்வெட்டருக்கு பட்டன் தைத்துக்கொண்டிருந்த சாராவுக்கு இரத்தம் கொதித்தது.

‘‘ஓகே. காலைல நல்லா கேட்டுட்டு வீட்டை காலி பண்ணச் சொல்லிரலாம். பி காம் சாரா… அப்புறம் பிபி எகிறிடும்…’’ ஜான்சனின் ஆறுதல். பிள்ளைகள் வந்தால் தங்கிக் கொள்ள வசதி என மாடிப் போர்ஷனை வைத்திருந்தார்கள். வசதி படைத்த பிள்ளைகளும் பண உதவி செய்வதில்லை. இவர்களுக்கு எந்த ஓய்வூதியமும் கிடையாது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கவும், பணியில் இருந்த காலத்தில் வீட்டுக்கடன் பெற்று வீட்டை கட்டி, வட்டியுடன் திருப்பிச் செலுத்தியதிலும் பொருளாதாரம் சரிப்பட்டு விட்டது. வயதான காலத்தில் உணவைவிட மருந்து மாத்திரைகளின் செலவு அதிகமாகிறது. அதை ஈடுகட்ட எண்ணி வாடகைக்கு விட்டால்… இப்படியா?

மாடி போர்ஷனுக்குச் செல்ல படியும் வழியும் தனியாக இருக்கும். இவர்கள் தூங்கியபின் மனோன்மணி எப்போது வருகிறாள் எனத் தெரியாது. சில நேரம் தன் போர்ஷனில் மனோன்மணி ஆண்களுடனோ பெண்களுடனோ பேசிக்கொண்டிருப்பாள். இவர்களுக்கு ஏதும் புரியாது. கண்டிக்க இயலாமல் சங்கடப்பட்டார்கள். துணிந்து அவளிடம் பேசிவிடலாம் எனக் காத்திருக்கும்போது அவளது கார் அவர்கள் கேட்டை கடந்துவிட்டிருக்கும். அலைபேசி யில் தொடர்புகொண்டு பேசலாம் என்றால் அது எப்போதும் உபயோகத்தில் இருப்பதாய் புலம்பும். இப்படி அவர்கள் அவளது தொடர்புக்காகக் காத்திருந்தபோது… இரண்டு வாலிபர்களுடன் அவள் காரில் வந்து இறங்கினாள். போர்ட்டிகோவில் நின்றிருந்த சாரா, ‘‘பிளீஸ் உள்ளே வந்துட்டு போறீங்களா மனோன்மணி?’’ என அழைத்தாள்.

அந்த முதியவளால் அவளைப் பார்த்துப் புன்னகைக்க முடியவில்லை. மனதில் குமுறல். பொய் சொல்லி குடித்தனம் வருவதென்றால்… என்ன சாமர்த்தியம்?‘‘என்ன ஆன்ட்டி… வாடகைக்கு உண்டான செக்கைக் கூட உங்க போஸ்ட்பாக்சிலே இரண்டு நாளைக்கு முன்னர் போட்டேனே… வேறு என்ன விசேஷம்?’’ உடன் வந்தவர்களிடம் தன் போர்ஷனின் சாவியைக் கொடுத்து மேலே செல்லுமாறு சைகையால் சொல்லிவிட்டு சாராவைப் பின்தொடர்ந்தாள் மனோன்மணி. அவர்களிருவரையும் சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்த கணவரிடம், ‘‘ஜான்சன் சொல்லிருங்கப்பா… நமக்கு சினிமா அது இதுவெல்லாம் சரிப்பட்டு வராது. பொய் சொல்றது பாவம் என்கிறார் தேவன்…’’ சொன்ன சாராவின் முகத்தில் சிடு சிடுப்பு எட்டிப் பார்த்தது.

“எஸ்… மிஸ்… நீங்க மிஸ்ஸா… மிஸஸ்ஸா… என்ன சொல்றது? ஏதோ கம்பெனியிலே வேலை செய்யறதா சொன்னீங்க. நாங்களும் நம்பி வீட்டை வாடகைக்கு விட்டோம். ஆனா நீங்களோ…’’ஜான்சனின் பேச்சைக் கேட்ட மனோன்மணியின் முகம் கருத்தது.

“ஸாரி… ஸாரி… அங்கிள். சினிமாவிலேயும் சீரியல்லேயும் நடிக்கிற எனக்கு வாடகைக்கு வீடு தர யாரும் தயாராயில்ல. உங்க வீட்டை வாடகைக்கு பார்க்க வந்தப்ப ஆன்ட்டியையும் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி. அதான்…”

“பொய் சொல்லலாம்னு தோணுச்சி. அப்படித்தானே? ஸாரிமா. நீ எவ்வளவு முடியுமோ அவ்வளவு குயிக்கா காலி பண்ணிரு. அட்வான்ஸையும் வாங்கிப் போயிடு…” சிடுசிடுத்தார் ஜான்சன்.

முகத்தைத் திருப்பிக்கொண்டாள் சாரா. ஒருவாரம் ஆயிற்று. மனோன்மணி சப்தம் போடாமல் போவதும் வருவதுமாய் இருந்தாள். இவர்கள் தூங்கி எழுவதற்கு முன் போய்விடுவாள். ஒருமுறை அலைபேசியில் வீடு காலி செய்வதை நினைவூட்டினார்கள். சில நாட்களில் தண்ணீர் லாரி வரும்போது, தண்ணீர் பிடிக்கும் கெடுபிடியில் இவர்கள் இருக்க ஓசையின்றி அவள் போய்விடுவதுண்டு. விடுமுறை நாட்களிலோ அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலோ அல்லது இவர்கள் ‘சர்ச்’சுக்குப் போயிருக்கும்போதோ நான்கைந்து கார்கள் வீட்டின் முன் நிற்கும். இவர்கள் ‘சர்ச்’சுக்குப் போய் இறைவனை வழிபட்டுவிட்டு, காலைச்சிற்றுண்டியை நல்ல ஒரு உணவு விடுதியில் முடித்துக்கொண்டு வீடு திரும்பினால் இவர்கள் காரை போர்ட்டிகோவிற்கு கொண்டு செல்ல முடியாமல் ஏகப்பட்ட கார்கள் இவர்கள் வீட்டு வாசலில் நிற்கும்.

வீட்டிற்குள் நுழைந்தால் மாடிப் போர்ஷனிலிருந்து வரும் சப்தமும் சலசலப்பும் மனதுக்கு சற்றும் பிடிக்கவில்லை. அமைதிக்காக மனம் ஏங்கிற்று. மனோன்மணி வீட்டில் இருக்கும்போதெல்லாம் ‘ஹோம் தியேட்டரி’லிருந்து திரைப்பட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். இல்லாவிட்டால் அவள் அலைபேசியில் மலையாளம், தெலுங்கு, தமிழ் என ஏதாவது ஒரு மொழியில் சரளமாய் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பாள். அப்போதெல்லாம் அவள் கணவன் – மனைவி எனப் பொய் சொல்லி வீட்டுக்கு குடிவந்தது அவர்கள் கண்முன் தோன்றி தங்கள் கையாலாகாத செயலை எண்ணி உள்ளத்தை கோபம் பிறாண்டும். அவள் இல்லாத வேளையில், அவளைத்தேடி ஆணோ பெண்ணோ யார் வருவதும் பிடிக்கவில்லை.

சிடுசிடுப்பாய் அவர்களிடம் பதில் சொல்வார்கள். தங்கள் தனிமையையும் அமைதியையும் குலைக்க வந்தவளாகவே அவர்களுக்கு அவள் தோன்றினாள். ‘‘சாரா… தண்ணி லாரி வந்து நிக்குது. எல்லாம் பிடிச்சிட்டுப் போறாங்க டார்லிங். மகேசு வந்திருவாளா?”

“அவ புருஷனுக்கு பஸ்ஸில் அடிபட்டுடுச்சாம். ஹாஸ்பிடலுக்குப் போறாளாம்… வரமுடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டா…”

“இப்ப வாட்டருக்கு என்ன பண்றது? அந்த மனோன்மணி என்ன பண்ணுவா?”

“விடுப்பா… அவ எங்காவது போய் குளிப்பா.. சாப்பிட்டுக்குவா. இல்ல தண்ணீர் வச்சிருப்பா…”

“சாரா டார்லிங்… ஒண்ணு செய்வோமா. நீ லாரியிலிருந்து தண்ணி பிடிச்சி அப்படியே இழுத்து வச்சிடு. நான் மெல்ல எடுத்து வந்து உள்ள ஊத்திடறேன்…”

“என்ன ஜான்சன்… உமக்கு ஹார்ட் வீக்கா இருக்கு. பி கேர்ஃபுல்னு டாக்டர் சொல்லலை. மறந்து போச்சா… வேணாம்பா. நான் ரெண்டு ரெண்டு பக்கெட்டா பிடிச்சிட்டு வரேன்…”

“நோ… நோ… உனக்கே உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு… அதெல்லாம் சரி வராது…’’

வாசற்படியிலிருந்து மனோன்மணி குரல் கொடுத்தாள்.

“அங்கிள்.. நாளைக்கு நான் என் போர்ஷனை காலி பண்ணிடறேன். அட்வான்ஸ் கூட உடனே தரணும்னு இல்ல… ஆனா, செக்கா தராதீங்க…” என்றவள் தன் தோள் பையையும் குளிர் கண்ணாடியையும் மேசையில் வைத்தாள். இடது கையில் ஒன்று, இடுப்பில் மற்றொன்று, வலது கையில் இன்னொன்று என மூன்று பிளாஸ்டிக் குடங்களை அவர்கள் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு தெருவுக்குச் சென்றாள்.

தாங்கள் சீரியல்களிலும், திரைப்படங்களிலும் பார்க்கும் நடிகை தங்களுடன் சேர்ந்து லாரித் தண்ணீர் பிடிப்பாள் என தெருப்பெண்கள் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எல்லாரும் நகர்ந்து மனோன்மணிக்கு வழி விட்டு சிரிப்பும் பூரிப்புமாய் நிற்க… சில பெண்கள் அவளுக்கு தண்ணீர் பிடித்துத் தந்து உதவினார்கள். இருபது நிமிடங்களில் சாரா – ஜான்சனுக்கு தேவையான நீரை நிறைத்து விட்டாள். சொன்னபடி மனோன்மணி மறுநாள் வீட்டை காலி செய்தாள். சாரா – ஜான்சன் மகளாக அவர்கள் வீட்டில் குடிபுகுந்தாள்!

– Feb 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *