கலியபெருமாள் பயந்து தயங்கித் தயங்கி விசயத்தைச் சொன்னதும் அந்த ரிக்ஸாக்காரன் அவனை ஏற இறங்க ஒரு மாதிரியாகப் பார்த்தான்.
கலியபெருமாளுக்கு உதறல் எடுத்து.
“ஆளு தெரியாம வந்து சொல்றே. அதோ அந்த ஆளுகிட்ட போய்ச் சொல்லு.”தூரத்தில் வேறொருத்தனைக் கை காட்டினான்.
அவன் ரிக்ஸாவில் அமர்ந்து ஆழ்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்தான்.
கலியபெருமாள் அவன் முன் நின்றான்.
“இன்னா…” – அவன் கேள்வியே தெனாவட்டாக இருந்தது.
“அ… அயிட்டம்…”
“ஓ…… அந்த கிராக்கியா..? “என்ற ரிக்ஸாக்காரன் வண்டியிலிருந்து கீழே சவகாசமாக இறங்கினான். பீடியைத் தூர எறிந்தான்.
“ஆ…. ஆமா…”
“இத்தினி வயசுக்குள்ள வோணும்…?”
“ஒரு இருபது, இருபத்தஞ்சி…தொழில்காரி வேணாம். குடும்பப் பெண்ணாய் வேணும்…”
ஐடியா…. நண்பர்கள் உபயம். சேவல் பண்ணையில் பேச்சு.
“மச்சி ! உனக்கு இன்னைக்கி இல்லேன்னாலும் என்னைக்காவது வெளியில போற ஆசை வந்தா…’ பலான ‘ அயிட்டம் வேணாம். எயிட்ஸ் அது இதுன்னு எமன் உன்னைத் துரத்துவான் வம்பு. குடும்ப பெண்ணா பார்…! ”
“எ.. எனக்கு அந்த மாதிரி எல்லாம் செட் பண்ணத் தெரியாதே..! ”
“உன்னை எவன் ஊடு பூந்து செட் பண்ணச் சொன்னா..? ரிக்ஸா, ஆட்டோ… இந்த மாதிரி கிராக்கி புடிக்கிற ஆளாண்ட போய் கேட்டால் அவனுங்க அழைச்சிக்கிட்டுப் போயிடுவானுங்க…”
“இப்படி எல்லாம் குடும்பப் பெண் நடப்பாங்களா…? ! “கிராமத்திலிருந்து வேலைக்கு வந்த இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“இருக்குடி. உதவாக்கரை ஊட்டுக்காரன். கட்டி விட்டுட்டு வெளிநாடு போய் உழைக்கிறவன் பொண்டாட்டிங்க. ஆடம்பரம், அது, இதுன்னு பணத்துக்கு ஆசைப்படுறதுங்க, கொழுப்பெடுத்த பணக்காரதுங்க… உனக்குத் தெரியாது. கிணத்துத் தவளை. ”
“செலவு அதிகம் ஆகுமோ…? ! ”
“உன் அதிர்ஷ்டம் உனக்கு செலவு பண்ணற ஆளே கிடைக்கும் !.”
“செலவு அதிகம் ஆகுமே…! “ரிக்ஸாக்காரன் அவன் நினைவைக் கலைத்தான்.
இவனுக்குத் திக்கென்றது.
“ப…. பரவாயில்லே….”இவன் பேண்ட் பாக்கெட்டைத் தடவிப் பார்த்துக் கொண்டு சொன்னான்.
“நீ இன்னா வேலை பண்றே..? ”
“ஏன்…???…”கலியபெருமாள் திகைத்தான்.
“உண்மையைச் சொன்னா உனக்குத் தக்கப்படி ஒழுங்கான ஆள் கிடைக்கும்..”
“அ….அரசாங்க வேலை…”
“ஐ.டி. கம்பெனி வேலை இல்லியா..? ”
“இல்லே..”
“அரசாங்கத்துல பெரிய வேலையா சின்ன வேலையா..? ”
“சின்ன வேலை. கிளார்க் ! ”
“எந்தத் துறை..? ”
‘ இவனுக்கு இந்தக் கேள்வி எல்லாம் தேவையா..? ‘ – இவனுக்குள் ஓடியது.
“சொல்லு..? ”
“வேளாண்துறை ..”
”கடற்கரையாண்ட இருக்கே. அந்த இடமா…? ”
“இதெல்லாம் ஏன் கேட்குறீங்க…? ”
“போற இடத்துல எசகு பிசகுன்னா நான் பதில் சொல்லி ஆகனும்…”
இவனுக்குப் புரியவில்லை.
“இன்னா யோசிக்கிறே.? அந்த இடமா….? ”
“ஆமா…”
ரிக்ஸாக்காரன் வானத்தைப் பார்த்தான்.
சிறிது நேரத்தில் ஒருமுடிவிற்கு வந்து…
“உட்காரு ! “ரிக்ஸாவின் இருக்கையைத் தூசு தட்டினான்.
கலியபெருமாள் ஏறி அமர்ந்தான்.
வண்டி வேகமாகப் புறப்பட்டது.
அரைமணி நேரத்தில் ஒரு அரை இருட்டு சந்தில் புகுந்து நின்றது.
கலியபெருமாளுக்கு அதிர்ச்சி.
ரிக்ஸாக்காரன் இவனைக் கவனிக்கவில்லை.
“நீ இப்படியே குந்து. ஆளிருக்கான்னு நான் பார்த்து வர்றேன்…! “சொல்லி இறங்கி நடந்தான்.
கலியபெருமாள் இறங்கவில்லை.
ரிக்ஸாக்காரன் சிறிது தூரத்தில் உள்ள வீட்டில் கதவைத் தட்டினான்.
இருபத்தைந்து வயது. வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.
ஆளைப் பார்த்த கலியபெருமாளுக்குத் தலை கிறுகிறுத்தது.
ரிக்ஸாக்காரன் அவளிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டுத் திரும்பினான்.
“அதுக்கு ஆயிரம். எனக்கு இருநூறு. இருக்கா…? “கேட்டான்.
“இ….இருக்கு..”
“சரி போ ”
கலியபெருமாள் இறங்கி அவனுக்கு இரண்டு நூறு ருபாய் தாட்களை நீட்டிவிட்டு நடந்தான்.
அந்த வீட்டு கதவு மெல்ல திறந்து உள்ளே நுழைந்தான்.
தாழிட்டான்.
ஆளைப் பார்த்த அவளுக்கு அதிர்ச்சி.
“அத்தான் ! !! “- அலறினாள்.
“பொறு..! “சொன்ன கலியபெருமாள் தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் விட்டு கத்தியை எடுத்தான்.
மாலதிக்கு முகம் வெளிறியது.
“நான் அலுவலகம் போனதும் நீ இப்படி தப்பா நடக்கிறதா எனக்கு மொதல்லேயே கேள்வி… நம்பலை. ஆனா… நான், உன்னை உத்துக் கவனிக்கும்போதுதான் வீண் அலங்காரம், ஆடம்பரத்துக்காக இப்படி செய்யறேன்னு புரிஞ்சிச்சு. வீண் அலங்காரம், ஆடம்பரம் வீண். இது உனக்கு சொன்னா புரியாது. கை மீறிட்டே. எல்லையைத் தாண்டி எங்கோ போயிட்டே. உன்னைக் கட்டின பாவத்துக்கு எனக்கு ஜெயிலுக்குப் போக ஆசை. ஆனா.. இப்போ அது வீண் ஆசை, பேராசையாய் என் மனசுக்குப் படுது. காரணம்…. தாலி கட்டிய பாவத்துக்காக நான் ஏன் உன் ஆசைக்கு குறுக்கே நிக்கணும்..? தப்பு..! மேலும் கொலையும் சரி இல்லே.அதனால் வீணா.. நிரபராதியான நானும் சிறைக்குப் போகனும். வேணாம்..! இந்த விவாகரத்து பத்திரத்துல கையெழுத்துப் போடு. இதுதான் உனக்கும் நல்லது.எனக்கும் நல்லது. நியாயம், நீதி, நேர்மை. ! “சொல்லி…தான் தயாராய் தயாரித்து எடுத்து வந்திருந்த விவகாரத்துப் பத்திரத்தை எடுத்து நீட்டி கத்தியைக் காட்டினான்.
மாலதி நடுக்கத்துடன் வாங்கி….பேனாவைப் பதிப்பித்தாள்.