தணிகாசலத்தின் இறுதி யாத்திரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 6,813 
 

தணிகாசலம் இப்பவோ அப்பவோ என்று இழுத்துக்கொண்டு உள்ளார். அவரின் மகள்கள், மருமகன்கள்,சொந்த பந்தங்கள் அனைவரும் வந்து விட்டார்கள், ஆனால் அவர்தான் இந்த உலகத்தின் பந்த பாசத்திலிருந்து விடைபெற மறுத்து யாருக்கோ காத்திருக்கிறார்.

தணிகாசலத்துக்கு மாமன் முறை ஆகவேண்டும் ராமசாமி, அவர் ஒரு யோசனை சொல்கிறார். அதன்படி தணிகாசலத்தின் காதருகே சில்லறை காசுகளின் சத்தத்தை உண்டாக்கி பார்க்கிறார்கள், பிரயோசனைப்படவில்லை, பிறகு மண்ணின் மீது பாசம் கொண்டிருப்பதால் சிறிது மண்ணை கலக்கி ஒரு சொட்டு அவர் வாயில் ஊற்றுகிறார்கள். அதற்கும் பலன் பூஜ்யம்தான். என்னதான் செய்வது பெருசுகள் மண்டையை போட்டு உடைத்துக்கொள்கின்றன.

அந்த ஊரில் வயது குறைவாக இருந்தாலும் தணிகாசலத்துக்கு தனி மரியாதை உண்டு, காரணம் வாழையடிவாழையாக அவர்கள் விவசாயகுடும்பம் . அந்த ஊரில் மரியாதைக்குரிய குடும்பமாகவும் உள்ளது. அதன்படியே தணிகாசலமும் தன் தந்தையின் மரியாதையை காப்பாற்றிக்கொண்டு வந்தார்.அப்பா இல்லாத நேரங்களில் அவரை பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்லக்கூட அழைப்பதுண்டு.

தணிகாசலத்துக்கு நன்கு படித்த பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைத்தனர் அவரது பெற்றோர். திருமணம் முடிந்த கையோடு, தன் மனைவி தனிக்குடித்தனமாக டவுனில் தான் குடியிருக்க வேண்டும் என்று கூறிவிட்டாள். இவரும் பல முறை சொல்லிப்பார்த்தார், கேட்கவேயில்லை, என்ன செய்வது, திகைத்த பொழுது அவரின் பெற்றோரே மனமுவந்து அவரை அனுப்பி வைத்தனர். கூடவே வந்து தனிக்குடித்தனத்துக்கு தேவையான பொருட்களை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு வந்தனர்.

வாழ்க்கை இருவருக்கும் கொஞ்ச காலம் சுமுகமாக ஓடியது.மனைவி அளவுக்கு தணிகாசலத்துக்கு படிப்பு இல்லை. ஊரில் விவசாயம் பார்த்தவருக்கு இந்த டவுனில் வாழ்வதற்கு என்ன செய்யலாம் என திகைத்து நின்றார். மனைவியின் சொந்தக்காரர்கள் நிறையபேர் டவுனில் தான் குடியிருந்தனர். அவர்களில் ஒரு சிலர் இவரை வியாபாரம் செய்யச்சொல்லி யோசனை தெரிவித்தார்கள். இவர் வியாபாரம் செய்வதற்கு பயப்பட்டார்.

காரணம் அதற்கு வாய் வீச்சு வேண்டும், அதற்கு தான் லாயக்கில்லை என அவராக நினைத்துக்கொண்டார்.

எப்படியோ மனைவியின் தைரியம்,அவளது உறவினர்களின் ஆதரவு இவற்றைக்கொண்டு “பர்னீச்சர் கடை” ஒன்றை திறந்தார்.ஆரம்பத்தில் பயந்த அவர் பின்னர் படிப்படியாக நெளிவு சுழிவுகளை கற்றுக்கொண்டார்.கடை வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அவ்வப்போது மனைவியும் வந்து உதவி செய்ததால், அவரால் வியாபாரத்தை கவனிக்க முடிந்தது.

நானகைந்து வருடங்கள் ஓடிவிட்டது, அதற்குள் அவருக்கு இரு பெண்கள் பிறந்து விட்டார்கள், பெண்கள் பிறந்த வேளை அவருக்கு வியாபாரம் அமோகமாக வளர ஆரம்பித்தது.

ஒரு நாள் இவர் கடை வைத்துள்ள இடத்துக்கு சொந்தக்காரரும்,நண்பனும் ஆகிய நமசிவாயம், இவரிடம் மெல்ல வந்து, உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும் என்று தயங்கி தயங்கி சொன்னார்.அதற்கென்ன பேசு,என்றவரிடம் இல்லை சாயங்காலமா உன்னை வீட்டுல வந்து பார்க்கறேன். தாராளமாக வா, ஏழு மணிக்கு மேல வீட்டுலதான் இருப்பேன்.

வீட்டில் மதியம் சாப்பிட செல்லும்போது மனைவியிடம் கடை சொந்தக்காரர் சாயங்காலமா வீட்டுக்கு வரதா சொல்லியிருக்கறார் என்று சொன்னார்.

சாயங்காலம் ஏழு மணிக்கு இவர் வீடு சென்றபோது, நமசிவாயம் வந்து இவருக்காக காத்திருந்தார்.நேரமானதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட தணிகாசலம் குடிக்க ஏதேனும் கொண்டு வரச்சொல்ல மனைவியை அழைத்தபோது இவர் மறுத்து இப்பத்தான் உன் வீட்டுல குடிக்க ஏதாச்சும் கொண்டு வரவான்னு கேட்டாங்க, நான் வேண்டான்னுட்டேன். என்று அடுத்த வார்த்தை பேச சிறிது தயங்கினார்.

அவரது தயக்கத்தை புரிந்துகொண்ட தணிகாசலம், நாற்காலியை மெல்ல அவர் அருகில் நகர்த்தி தயங்காம சொல்லு என்ன விசயமா என் கூட பேசனும்னு
சொன்ன.

எனக்கு இப்ப ரொமப பண முடையா இருக்கு, பொண்ணு கல்யாணம் வேற பக்கத்துல நெருங்கிட்டு இருக்கு, பேசாம நீ இருக்கிற கடைய வித்திடலாம்னு
இருக்கேன், திடீருன்னு சொன்னா கண்டிப்பா உனக்கு சிரம்மாகத்தான் இருக்கும், எனக்கும் வேற வழி தெரியல, ஒரு பார்ட்டி நல்லா தகைஞ்சு வந்திருக்கு, அவங்க இதை ஒரு பொ¢ய ஓட்டலா மாத்தலாம்னு பிளான் பண்ணியிருக்காங்க, தயவு செய்து என்னை தவறா நினைச்சுக்க வேண்டாம்.

தணிகாசலம் பிரமை பிடித்தது போல இருந்தார், அவர் இதை எதிர்பார்க்கவில்லை, வாடகையை உயர்த்தத்தான் வந்திருப்பார் என நினைத்தார். சரி பார்ப்போம் முடிவு செய்தவர், பரவாயில்லை,உன் கஷ்டத்துக்கு நீ என்ன பண்ண முடியும்? நான் எதுக்கும் வீட்டுல கலந்து பேசிட்டு நாளைக்கு சொல்றேனே, தாராளமா யோசிச்சு சொல்லு, நான் வரட்டுமா கை குவித்து விடை பெற்றார்.

மனைவியிடம் இந்த விசயத்தைச் சொல்ல, அவளும் பிரமை பிடித்தது போல நின்று விட்டாள். உடனே சுதாரித்துக்கொண்டு ஏங்க,அந்த ஓட்டல்காரங்க எவ்வளவுக்கு பேசி முடிச்சிருக்காங்கலாம்? தெரியல, முதல்ல அத விசாரிங்க, அப்புறம் அவர் பொண்ணு கல்யாணத்துக்கு எவ்வளவு செலவாகும்னு நினைக்கிறாருன்னும் விசாரிங்க, சரி என்று தலையசைத்தார்.

மறு நாள் நமசிவாயத்திடம் விசாரித்த்பொழுது,ஓட்டல்காரர்கள் அதிக தொகையே சொல்லியிருப்பதும், ஆனால் இவர் கல்யாண செலவுக்கு சுமார் பத்து இலட்சம் மட்டும் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.மனைவி தந்த யோசனைப்படி முதலில் பத்து இலட்சத்தை நாங்கள் தந்துவிடுகிறோம், கடையை விற்கும் யோசனையை தள்ளிப்போடலாம் என்று சொல்ல நமசிவாயம் ஏற்றுக்கொண்டார்.

நமசிவாயத்தின் பெண் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தவுடன் நமசிவாயம் செய்த முதல் காரியம் கடையை இவர் பேருக்கு ஒத்தி வைத்ததாக எழுதிக்கொடுத்தார். வேண்டாம் என்று தணிகாசல்மும், அவ்ர் மனைவியும் சொன்ன போது நமசிவாயம் ஒரே வார்த்தைதான் சொன்னார்.கை நீட்டி காசு வாங்கினவன் நான் எந்த பேப்பரும் இல்லாமல் எனக்கு பணம் கொடுத்தீங்க, அந்த காரணத்துக்காகவாவது இதை நான் செஞ்சாகணும்.

அதற்குப்பின் நமசிவாயம் இவர்கள் குடும்பத்துடன் நல்ல நண்பனாக இருந்தார். ஏற்கனவே மனைவியை இழந்திருந்த அவருக்கு, மகளும் திருமணமாகி கணவனுடன் வெளி நாடு சென்றுவிட்டது வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி இருந்தது.இவர்கள் குடும்பம் தான் அவருக்கு ஆறுதலாய் இருந்தது.

வருடங்கள் ஓடிக்கொண்டே இருந்த்து, தணிகாசல்த்தின் பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. நமசிவாயம் திடீரென்று காலமாகிவிட்டார், பெண்ணுக்கு தகவல் சொல்லியும் அவளால் வரமுடியவில்லை, “அங்கிள்” நீங்களே அப்பாவுக்கு காரியங்கள் செய்துடுங்க, நான் வந்திடுறேன் என்று கதறியவாறு சொன்ன நமசிவாயத்தின் மகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இவரே நமசிவாயத்தின் உறவினர்களை கூட வைத்துக்கொண்டு அனைத்து காரியங்களையும் முன்னின்று நடத்திக்கொடுத்தார்.

காலங்கள் இவர்களையும், மூப்படைய வைத்திருந்த்து.தணிகாசலத்தின் மனைவியும் அவரை விட்டு மறைந்துவிட்டாள், மகள்கள் இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருந்தனர்.

இவரை கூட வந்து இருக்கும்படி கேட்டுக்கொண்டன்ர்.

இவர் மறுத்துவிட்டு இனி தன்னுடைய அப்பா, அம்மா வாழ்ந்த வீட்டுக்கே சென்று வாழ விரும்பி, அனைத்து சொத்துக்களையும் விற்று விட்டு சொந்த கிராமத்துக்கே வந்துவிட்டார். அதன் பின் நான்கு வருட காலங்கள் ஒடிய பின்… திடீரன ஒரு சல சலப்பு, ஒரு பெரிய கார் ஒன்று வந்து தணிகாசல்த்தின் வீட்டு முன் நின்றது, அதிலிருந்து ஒரு மாதுவும், அந்த மாதுவுடன் தோளுக்கு மேல் வளர்ந்த இரு இளைஞர்களும் உள்ளே வந்தனர். தணிகாசலத்தின் மகள்கள் இருவரும் வந்து அந்த மாதை கை பிடித்து அப்பாவிடம் அழைத்துச்சென்றனர்.

அப்பா நம்ம மாலதி அக்கா வந்திருக்காங்க அப்பா, உங்க நண்பர் நமசிவாயத்தின் பொண்ணு அப்பா, அவரின் காதருகே சென்று சொல்ல அவரிடமிருந்து மெல்ல அசைவு ஒன்று உண்டானது.கண்கள் மெல்ல திறந்தது, அந்தபெண்ணின் கையை தொட முயற்சி செய்தார். உடனே அந்தப்பெண் அவரின் கைகளை கெட்டியாகப் பற்றிக்கொண்டாள்.

அவர் அந்தப்பெண்ணின் கைகளை தலைக்கு பின்புறம் கொண்டு செல்ல முயற்சிக்க, சுற்றியுள்ளோர் நமசிவாயத்தின் மகள்களிடம் தலைகாணிக்கு கீழே ஏதோ வச்சிருக்காருன்னு நினைக்கிறேன், மெதுவா பாருங்க, அவரின் மகள்களும் அப்பாவை தொல்லைப்படுத்தாமல் தலைகாணிக்கு பின்புறம் மெல்ல கையை கொண்டு சென்று துழாவ ஒரு கவர் தட்டுப்பட்டது, அதை வெளியில் எடுத்து பிரித்து பார்க்க நமசிவாயத்தின் கடை பத்திரமும்,உடன் ஒரு கடிதமும்.நடுங்கும் எழுத்துக்களால் எழுதியிருந்த்து.

அதை மகள்களிடம் அந்தப்பெண்ணிடம் கொடுக்கும்படி சைகை காட்டினார்.

புரியாமல் வாங்கிப்பார்த்த அந்த்ப்பெண், பத்திரத்துடன் இருந்த கடிதத்தை படித்து கண்ணீர் விட்டாள்.

இது உன் தந்தையின் சொத்து, என்னுடைய காலம் முடிவதற்குள் உன்னிடம் ஒப்படைக்க காத்திருக்கிறேன்.

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் தணிகாசலம் இந்த உலகத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *