கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 11,054 
 

பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. தெரு விளக்குகள் வழக்கம் போல் இருட்டுக்குத் துணையாக எரியாமல் நின்றிருந்தன. கோயிலுக்குப் போன அம்மா இன்னும் வரவில்லையே என்று வீட்டை விட்டு வெளியே வந்தேன். குளிர் காற்று முகத்தில் அறைந்தது. டிசம்பரில் போனால் போகிறது என்று எப்போதாவது தலை காட்டும் ஈரப் பசை கலந்த காற்று.

“”உங்க மதுரைல வருஷத்துக்கு மூணு ஸீசன் தான். ஹாட், ஹாட்டர், ஹாட்டஸ்ட்” என்று என் நண்பன் மூர்த்தி சொல்லிச் சிரிப்பான். மூர்த்திக்கு அப்படி ஒன்றும் சொந்த ஊர் ஊட்டியோ கொடைக்கானலோ இல்லை. பக்கத்திலிருக்கும் தேவகோட்டைதான். மானம் பார்த்த பூமி. இருந்தாலும் மதுரை என்றால் அப்படி ஒரு கேலி.

கைக் கடிகாரம் மணி ஆறரை என்றது. பெங்களூர் பஸ் ஒன்பது மணிக்கு. அம்மா வந்ததும், சாப்பிட்டு விட்டு சொல்லிக் கொண்டு போக வேண்டும். எட்டு மணிக்குக் கிளம்பினால் சரியாக இருக்கும்.

தடுமாற்றம்அம்மா வருகிறாளா என்று இருட்டைத் துளைத்துக் கொண்டு வலது பக்கம் பார்வையைச் செலுத்தினேன். “”என்ன கண்டு கொள்ளாமல் நிற்கிறீர்கள்?” என்று அரை இருட்டிலிருந்து குரல் வந்தது. தொடர்ந்து, தலையில் சுற்றிய மப்ளருடன், எதிரே பெரிய மீசையும், சிறிய முகமுமாய்…

“”அட, ஆரோக்கியமா, இந்த இருட்டுல தெரியலே” என்றேன்.

“”உங்க தமிழ்தான் காட்டி குடுத்துடுத்து”. ஆரோக்கியம் உள்ளூர் பள்ளியொன்றில் தமிழாசிரியர். சிறு வயதிலிருந்தே சுத்தத் தமிழில்தான் பேசுவான்

“”அப்படியென்றால் நாங்கள் மட்டும் உங்களை எப்படி பார்த்தோம்? அதாவது, நீங்கள் மிகவும் சிகப்பு, நான் இருட்டு வண்ணம், அப்படித்தானே?” என்றபடி ஒரு இடிச் சிரிப்புடன் என்னைத் தழுவிக் கொண்டான்.

“”நீ எப்போது பெங்களூரிலிருந்து வந்தாய்?” என்று இருமிக் கொண்டே கேட்டான்.

“”நேத்தி காலம்பற”

“”அதுதானே பார்த்தேன், நேற்றைக்கு முன் தினம் நான் கடைத் தெருவில் அம்மாவைப் பார்த்த போது நீ வரப் போவதாகச் சொல்லவில்லையே”

“”ஆமா, திடீர்னு கிளம்பி வந்தேன். நான் வரப் போறது அம்மாவுக்கு முன்கூட்டியே தெரியாது” என்றேன்.

“”எவ்வளவு நாட்கள் இங்கே தங்குவாய்?” என்று கேட்டான் ஆரோக்கியம்.

“”இன்னும் ரெண்டு மணி நேரம், ஒம்பது மணிக்கு பஸ்” என்று சிரித்தேன். ஆரோக்கியமும் இருமிக் கொண்டே சிரித்தான்.

“”என்ன இப்படி இருமறே, ஆரோக்கியம்னு பேர் வச்சிண்டு, ஏதாவது மருந்து சாப்பிடறயா?”

“”டாக்டரிடம் தான் போய்க் கொண்டிருக்கிறேன் இந்த இரவுப் பனியின் தொல்லைதான் இருமலுக்கு காரணம்” என்றான்.

“”பனியா, இதெல்லாம் ஒரு குளிரா? வேடிக்கைதான் போ” என்றேன்.

“”நீ பெங்களூர் குளிரில் ஊறி விட்டு இப்படித்தான் பேசுவாய்” என்றான் ஆரோக்கியம். “”ஒரு முறை, அம்மாவிடம் இங்கே எதற்கு தனியாக இருந்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள், இருந்து இருந்து ஒரு மகன், மருமகள், அவர்களுடன் கூட சுகமாக இருந்து பேரக் குழந்தையை வைத்துக் கொண்டு நேரம் போவது தெரியாமல் கொஞ்சி விளையாடிக் கொண்டு இன்பமாக இருக்க வேண்டியதுதானே என்று கேட்டேன். இல்லை, அங்கே குளிர் மிக அதிகம். பகல், இரவு என்று எந்தப் பொழுதிலும் கை, கால் உடம்பு எல்லாவற்றின் மீது ஐஸ் கட்டிகளை வைத்துக் கொண்டு இருப்பது போல அப்படி ஒரு குளிர். எனக்கு ஒத்துக் கொள்ளாது என்று சிரித்தார்கள்” என்று ஆரோக்கியம் சிரித்தான்.

நானும் சிரித்தேன்.

“”சரி, நான் வருகிறேன். அடுத்த முறை வரும்போது அமைதியாக மிகுந்த நேரம் பேசலாம்” என்று விடை பெற்றான்.

நான் மறுபடியும் தெருக் கோடியைப் பார்த்தேன். அம்மா இன்னும் வந்த பாடில்லை. நான் வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன். ஆரோக்கியத்திடம் அம்மா பெங்களூருக்கு போகாததற்கு சொன்ன காரணம் மனதை நெருடிற்று. ஆனால் உண்மையான காரணத்தை, அந்த வெட்கங்கெட்ட கதையை வெளியே சொல்ல முடியுமா என்ன? கடந்த வருடங்களில், எவ்வளவோ தடவை நினைவுக்கு வந்து என்னைச் சித்திரவதை செய்த காட்சிகள், மறுபடியும் இப்போது, உட்கார்ந்திருக்கையில் கூடவே வந்தன.

அன்று நடக்கக் கூடாதது நடந்து விட்டது. அன்று என்றால் மூன்று வருடங்களுக்கு முன்பு. ஒரு பின்னிரவில். இரவு எப்போதும் மயக்கத்தைத் தரக்கூடியது. அதனுடன், ராமாமிருதத்தின் வீட்டில் அளவுக்கு மீறிக் குடித்த விஸ்கியும் சேர்ந்து கொண்டதில் நான் அதிகமாகவே மயங்கிக் கிடந்தேன். நடப்பதற்கு கூட, சற்று கஷ்டமாயிருந்தது. மணி பன்னிரெண்டுக்கு மேலாயிடுத்து, இங்கேயே படுத்துக்கோ, காலம்பற ஆத்துக்கு போ என்று ராமாமிருதம் சொன்னான். ஆனால் காலையில் சீக்கிரம் ஆபீஸூக்குப் போகணும் என்று கிளம்பி விட்டேன். ஒன்பது மணிக்கு போர்டு மீட்டிங். பாஸ் போவதற்கு முன் அவனுக்குக் கிளிப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போல் தயார் செய்து கொடுக்க வேண்டும். மத்தியானம் அவனுடன் சண்டை போட வேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டான். மாலை ஐந்தரை மணிக்கு ஆபிஸ் விடுகிறது என்றால், ஐந்து மணிக்கே கிளம்பி விடும் அவன் என்னைப் பார்த்து, கொஞ்சம் லேட் ஆனாலும் உட்கார்ந்து வேலையை எல்லாம் முடிக்கணும்பா, சின்ன வயசிலேயே முன்னுக்கு வரணும்னா நல்லா கஷ்டப் பட்டு உழைக்கணும், கெடியாரத்தைப் பார்த்துக் கிட்டே வேலை செய்யக் கூடாது என்று உபதேசம் செய்தான். எனக்கு ரொம்பவும் கோபம் வந்து விட்டது. ஒரு வாரமாக காலையில் சீக்கிரம் வந்து, இரவு பத்து, பத்தரை என்று வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். போதாக் குறைக்கு ஞாயிற்றுக் கிழமையிலும் வந்து வேலை செய்தவனிடம் இப்படிப் பேசினால்….. வாக்கு வாதம் வளர்ந்து விட்டது. அந்த அசம்பாவிதத்தை மறக்கத்தான் ராமாமிருதம் வீட்டில் மயங்கிக் கிடக்கிற மாதிரி ஆகி விட்டது.

வீட்டில் என்னை இறக்கி விட்ட டிரைவரிடம் காரை எடுத்துக் கொண்டு போய் விட்டு, மறுநாள் காலையில் சீக்கிரம் வந்து விடச் சொன்னேன். லிஃப்டில் ஏறி மூன்றாவது மாடியில் இருந்த வீட்டை அடைந்தேன். நல்ல வேளையாக கதவுச் சாவி என்வசம் இருந்தது. இந்த நேரத்துக்கு சரோஜா தூங்கி விட்டாளோ அல்லது எனக்காக விழித்துக் கொண்டு இருக்கிறாளோ என்ற குற்ற உணர்ச்சியுடன் நினைத்தபடி சப்தமில்லாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றேன், நாலடி நடப்பதற்குள் ஹால் லைட் திடீரென்று எரிந்தது. திடுக்கிட்டுப் பார்த்தேன்.

அப்பா!

அவர் உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்த மாதிரி எனக்குத் தோன்றிற்று. அது ஒரு வேளை என் மயக்கத்தில் எழுந்த பிரமையோ?

“”நீங்க தூங்கலையாப்பா?”

“”எப்படி எனக்கு தூக்கம் வரும்?” என்று அவர் கேட்டார் சற்றுக் குரலை உயர்த்தி..

“”ஏன், என்ன ஆச்சு, உடம்புக்கு எதாவது பண்ணறதா ஜுரம் கிரம்னு?”

“”அப்படி ஏதாவது வந்து, சீக்கிரம் மண்டையை போட்டுட்டா தேவலையே. இந்த கண்றாவியை எல்லாம் பாக்காம ஒழிஞ்சுட்டா உனக்கும் நிம்மதியா இருக்கும்…”

அவர் உதடுகள் கோபத்தில் நடுங்குவதைக் கவனித்தேன்.

“”சரி, இப்ப நீங்க போய் படுத்துக்கோங்கோ கார்த்தால எழுந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்.”

அப்போது எங்கள் பெட் ரூமில் விளக்கு எரிந்தது. சரோஜா எழுந்து விட்டாள்.

“”எதைப் பத்தி நீ டெய்லி எப்ப குடிச்சிட்டு, எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவேங்கறதை பத்தியா?”

கையைப் பற்றி அறைக்கு அழைத்துச் செல்லலாம் என்று அவரருகே சென்றேன்.

“”என்னமா நாத்தம் வாயிலேர்ந்து, தள்ளி நில்லுடா” என்றார் அப்பா

எனக்குள் கோபம் முளை விடுவதை உணர்ந்தேன், இது என்ன நடுராத்திரி நாடகம்?

இருந்தும் கட்டுப் படுத்திக் கொண்டு, சற்றுப் பரிவான குரலில், “”அப்பா, நீங்க போய் படுத்துக்கோங்கோ, கார்த்தால பாக்கலாம்” என்றேன்.

கிழவர் மசிந்து போவதாக இல்லை.

“”ஏன்டா இப்படி கெட்டழிஞ்சு போயிண்டிருக்கே? உன்னைப் படிக்க வச்சு மேலே கொண்டு வந்ததுக்கு பதிலா இப்படி தலை குனிவா என்னை நிக்க வைக்கணும்னு உனக்கு எப்படி தோணித்து? நீ என்னதான் நினைச்சிண்டு இருக்கே உன் மனசிலே? குடிச்சு கூத்தடிச்சிண்டு நடுராத்ரிக்கு வரே, இங்க நாங்கள்லாம் தூங்காம, கொட்ட கொட்ட முழிச்சிண்டு…. உன் பொண்டாட்டியானா பிள்ளத்தாச்சி, அவ நேரத்துக்கு சாப்பிட்டுட்டு, தூங்க போகாம உனக்காக முழிச்சிண்டு இருக்கா.. அவ எவ்வளவு சந்தோஷமா இருக்கணும் இந்த சமயத்திலே, யாரும் கேப்பார் இல்லேன்னு ஆயிடுத்தா உனக்கு? நீ அவ பக்கத்திலே இருந்து பாத்துக்கிறதுக்கு பதிலா குடிச்சிட்டு நாறிண்டு வந்து நிக்கறே….”

இதையெல்லாம் சரோஜா கேட்டுக் கொண்டிருப்பாள் என்கிற நினைப்பே, எனக்குள் மிகுந்த ஆத்திரத்தைக் கிளப்பி விட்டது. என்ன ஒரு அவமானம்?

“”ஷட்டப்” என்றேன்.

“”என்னது”

“”ஆமா, பேசாம உங்க ரூமுக்கு போய் படுக்கைல விழுங்கோ”

“”டேய், என்னடா, மரியாதை இல்லாம பேசறே?”

“”நீங்க இப்ப இதோட நிறுத்திண்டு உங்க ரூமுக்கு போனா, மரியாதை கெடாம இருக்கும்.

போகலேன்னா, என்ன பண்ணுவே?”

நான் பேச வாயைத் திறக்கும் முன், சரோஜா அறையில் இருந்து ஓடி வந்தாள்

“”என்ன இது அப்பா கிட்ட இப்படி பேசிண்டு. உள்ளே வந்து படுங்கோ” என்றாள்.

“”சரியா பேசினா எல்லாம் சரியாய் இருக்கும்” என்று முணுமுணுத்தேன்.

“”யார் சரியா இல்லே? நானா? ஓஹோ, உன்னை மாதிரி குடிச்சுட்டு வந்து பேசினாதான் உனக்கு சமதையா நான் இருக்க முடியுமாக்கும்” என்று சிரித்தார்.

“”சும்மா குடி குடின்னு உளறிண்டு இருக்காதேங்கோ. ஐ நோ மை லிமிட்ஸ்” என்றேன் மறுபடியும் முளைத்தெழுந்த கோபத்துடன்.

“”ஐயோ, இதென்ன பேச்சுக்குப் பேச்சு பேசிண்டு, உள்ளே போய்ப் படுங்கோ. அப்பா, உங்களுக்கு ஏற்கனவே பிரஷர் ஜாஸ்தி, எதுக்கு இப்படி உங்களை போட்டு வருத்திக்கிறேள் கொஞ்ச நேரம் நிம்மதியா படுத்து தூங்குங்கோ. கார்த்தால எழுந்து பார்த்துக்கலாம்” என்றாள் சரோஜா

“”இல்லம்மா, இந்த கச்சடாவுக்கு ஒரு முடிவு கட்டிடணும். ஆத்துக்கு பெரியவனா இருந்துண்டு, நீ இந்த சமயத்திலே இப்படியெல்லாம் கஷ்டப் பட்டுண்டு நிக்கறதை என்னால சகிச்சுக்க முடியாது. இப்படித்தான் நடந்துண்டே இருக்கும்னா நான் வேறே எங்கேயாவது போயிட வேண்டியதுதான்?” என்றார்.

“”சரி போங்கோ” என்றேன்.

சரோஜா வேகமாக என்னருகே வந்து என் வாயைப் பொத்தினாள். என்னை அப்படியே தள்ளிக் கொண்டு எங்கள் அறைக்குச் சென்றாள். நான் ஓரக் கண்ணால் அப்பாவைப் பார்த்தேன். சக்தியெல்லாம் கரைந்து கீழே விழுந்து விடுபவர் போல் நின்றார். பிறகு ஹாலில் இருந்த நாற்காலியில் சாய்ந்து கொண்டார்.

என்னைப் படுக்கையில் உட்கார வைத்து விட்டு சரோஜா வெளியே சென்றாள். அவள் அப்பாவிடம் பேசுவதும், அவர் நாற்காலியில் இருந்து எழும் சத்தமும் கேட்டன. சரோஜா திரும்பி வந்தாள்.

என்னைப் பார்த்துக் கோபத்துடன், “”உங்களுக்கு எதாவது பைத்தியம் பிடிச்சுடுத்தா? என்ன பேச்சு பேசிட்டேள்? அதுவும் சொந்த தகப்பனாரிடம்” என்று அடிக்குரலில் இரைந்தாள்

“”அவர் பேசினது எல்லாம் உன் காதுக்கு ரொம்ப வேண்டியிருந்ததாக்கும்?”

”அதுக்காக என்ன வேணுமானாலும் சொல்லிடறதா, நீங்க பேசினதை திரும்ப நினைச்சு பாக்கறதுக்கே எனக்கு கூசறது”

”சரி நினைக்காதே” என்று திரும்பிப் படுத்தேன்.

“”இப்பன்னு பார்த்து அம்மா வேறே மெட்ராசுக்கு போயிட்டா சித்தி பொண் கல்யாணத்துக்குன்னு. நாளைக்கு ராத்திரி அவ வர்ற மட்டுக்கும் ஒண்ணும் வினையாகாம இருக்கணும்” என்றாள் சரோஜா பெருமூச்சுடன்.

நான் பேசாமலிருந்தேன்.

“”அம்மா இருந்திருந்தா இந்த கலாட்டாவே ஆயிருக்காது” என்றாள்

நான் சரோஜாவின் கையைப் பற்றிக் கொண்டேன்.

“”சரி, நீ படுத்துக்கோ, கார்த்தால நான் சரி பண்ணிக்கிறேன் எல்லாத்தையும்” என்றேன்.

“”அப்பாவின் மூஞ்சியைப் பார்க்கச் சகிக்கலை. நீங்க கார்த்தால அவர் கிட்டே போய் சமாதானமா பேசி சரி பண்ணிடணும். சரியா?” என்றாள் சரோஜா.

படுக்கையில் புரண்டேன். சரோஜா சொன்னது சரிதான். அம்மா இங்கே இருந்திருந்தால் இவ்வளவு கலாட்டா நடந்திருக்காது. அப்பாவின் கோபத்தைத் திசை திருப்பி, நான் வந்த நேரத்துக்குள் அவரைத் தூங்கச் செய்திருப்பாள். அப்படியே அவர் நான் வந்த சமயத்துக்கு ஹாலில் இருந்திருந்தாலும் அவர் வாயிலிருந்த வார்த்தைகள் உருமாறி திசை மாறி வெளியே வந்து பறந்திருக்கும். அம்மாவிடம் அத்தகைய சூட்சமம் நிறைந்திருந்தது.

எதிராளியிடமிருந்து எப்போதும் மரியாதையை வரவழைக்கும் தோற்றத்தையும் செயல்பாடுகளையும் கொண்டிருந்தாள்.

காலையில் நான் எழுந்த போது அப்பா வெளியே வாக்கிங் போயிருப்பதாக சரோஜா சொன்னாள். அன்றைய தினசரியை மேய்ந்தேன். இருபத்தாறு வருஷங்களுக்கு முன்பு, போபாலில் பல்லாயிரக்கணக்கான ஜனங்களின் உயிரைக் குடித்த விஷ வாயு வழக்கில் இரண்டு பேரைக் குற்றவாளியெனக் கருதி இரண்டு வருஷ தண்டனையை நீதிமன்றம் அளித்ததாக முழுப் பக்கச் செய்தி. அன்றே கொல்லும் அரசனே இருபத்தியாறு வருஷங்கள் எடுத்துக் கொண்டால் நின்று கொல்லும் தெய்வம் எவ்வளவு வருஷங்கள் எடுத்துக் கொள்ளுமோ என்று பேப்பரை விட்டெறிந்தேன். பிறகு நான் குளித்து முடித்து, சாப்பிட உட்காரும் போது டிரைவர் வந்து விட்டான். ஏழரை ஆகியும் அப்பா திரும்பி வந்த பாடில்லை.

நான் சீக்கிரம் ஆபிஸ் செல்ல வேண்டிய அவசியத்தை சரோஜாவிடம் கூறி விட்டு கிளம்பினேன். ஆபிஸ் சென்றதும், வேலைகள் என்னைக் கபளீகரம் செய்து விட்டன. போர்டு மீட்டிங் முடிந்து என் பாஸ் திரும்பி வந்து அன்று எல்லாம் நல்லபடியாக முடிந்ததென்று எனக்கு நன்றி சொல்லி விட்டுப் போன போது மத்தியானம் இரண்டரை மணி ஆகி விட்டது. சாப்பிடும் போது வீட்டு ஞாபகம் வந்து சரோஜாவின் செல்லுக்கு போன் செய்தேன். விபரீதமாக அன்று எதுவும் நிகழவில்லை என்றும் அப்பா வழக்கம்போல் குளித்து, பூஜை பண்ணி விட்டு, அவளுடன் வழக்கம் போல் சாப்பிடும் போது அரட்டை அடித்து விட்டு, வழக்கம் போல் ஈ. டி. நௌவில் ஷேர் மார்க்கெட் பார்த்து விட்டு….

“”úஸா வழக்கத்துக்கு விரோதமா ஒண்ணும் நடக்கலை. வெரி குட்” என்றேன்.

“”இப்ப என்ன பண்ணிண்டு இருக்கார்?” என்று கேட்டேன்.

”தூங்கிண்டு இருக்கார்”

“”ஓகே, அதுவும் வழக்கம் போலத்தான்” என்று சிரித்தேன். சரி, சாயந்திரம் பார்க்கலாம் என்று போனைக் கீழே வைத்தேன்.

அன்று மாலை நான் சீக்கிரம் வீட்டை அடைந்த போது, அப்பா வீட்டில் இல்லை. ஜெயநகரில் இருக்கும் அவரது நண்பர் சதாசிவம் வந்து அவரது காரில் அழைத்துச் சென்றதாகவும், மறுநாள் திரும்புவார் என்றும் சரோஜா கூறினாள். ஒரு வேளை அப்பா என்னைத் தவிர்க்க முயலுகிறாரோ என்று சந்தேகம் ஏற்பட்டது. அன்றிரவு, ஸ்டேஷனுக்குப் போய் அம்மாவை அழைத்து வந்தேன்.

நாங்கள் மூன்று பேரும் உட்கார்ந்து சாப்பிடும் போது அம்மா என்னைப் பார்த்து, “”நேத்திக்கி என்ன நடந்தது?” என்று கேட்டாள். நான் திடுக்கிட்டு சரோஜாவைப் பார்த்தேன். அவளும் என்னைப் போலவே அதிர்ச்சியுடன் அம்மாவைப் பார்த்தாள்.

“”இன்னிக்கி கார்த்தால அப்பா என்னை கூப்பிட்டு பேசினார்” என்றாள் அம்மா. “”முதல்ல, இன்னிக்கி ராத்திரிதான் நான் திரும்பி வரப் போறேனே, அதுக்குள்ளே என்ன அவசரம் டெலிபோனுக்குன்னு நினைச்சேன். அப்புறம் அவர் சொன்னதை கேட்டதும் ச்சேன்னு ஆயிடுத்து”.

அம்மாவின் அந்த “ச்சே’ ஒரு க்ஷணத்தில் என்னைக் கடையனாக்கி தெரு மூலையில் தூக்கி எறிந்தாற் போல் இருந்தது.

“”அம்மா, நீங்க பெரியவா, ஒண்ணும் சொல்லிடாதீங்கோ” என்று சரோஜா நடுங்கும் குரலில் கூறியபடி அம்மாவை நெருங்கி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“”அட அசடே, தன் குட்டியை தானே நக்கி சாப்பிடற பாம்பு மாதிரியா நான் இருக்கேன். நாங்க வளர்த்த பிள்ளை இவ்வளவு படிச்சிருக்கான், பெரிய உத்தியோகத்துல இருக்கான், இவன் வாயிலேர்ந்து அப்படி ஒரு வார்த்தை வரலாமா? அப்ப நாங்க சரியா வளர்க்கலேங்கற மாதிரின்னா ஆயிடறது. மனுஷன் ரொம்ப நொறுங்கிப் போயிட்டார். போன்ல அவர் குரலை கேக்க சகிக்கலை. அழுதுடுவார் போல இருந்தது. நான் யாருக்குன்னு தாட்சண்யம் பாக்கறது?”

நான் பேசாமலிருந்தேன். அப்பா மட்டும் என்னிடம் அந்த மாதிரி பேசாமல் இருந்திருந்தால், நான் ஏன் கட்டற்ற வார்த்தைகளை என் வாயிலிருந்து துப்பியிருக்கப் போகிறேன்? என்று மனதோரத்தில் ஒரு முனகல் கேட்டது.

சில வினாடிகள் மெüனத்தில் தத்தளித்தன.

“”அம்மா எங்களை மன்னிச்சிடுங்கோ” என்றாள் சரோஜா. அம்மாவின் கை சரோஜாவின் தலையைத் தடவிக் கொடுத்தது. பின் அவள் என்னைக் கூர்ந்து பார்த்தாள். நான் அவள் பார்வையைச் சந்திக்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டேன்.

“”சரி, சாப்பாட்டு கடையை முடிச்சிண்டு சீக்கிரம் படுத்துக்கலாம், எனக்கும் ஒரே டயர்டா இருக்கு” என்று அம்மா எழுந்தாள்.

அன்றிரவு நான் தூங்க வெகு நேரமாயிற்று. சரோஜாவும் ஒன்றும் பேசாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். அவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது அவள் நடுக்கத்துடன் அம்மாவின் கையைப் பற்றிக் கொண்ட காட்சி நினைவுக்கு வந்து என்னைச் சங்கடப் படுத்திற்று. அவள் அம்மாவிடம் கேட்ட மன்னிப்பை நான் கேட்கவில்லை என்று என் கூடப் பேசாமல் இருக்கிறாளா அல்லது தானும் ஏதாவது பேசி, என்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று எச்சரிக்கையுடன் பேசாமல் இருக்கிறாளா….

மறுநாள் காலையில் வழக்கம் போல் அலுவலகம் சென்றேன். பதினோரு மணி வாக்கில் சரோஜா போன் செய்து அப்பா திரும்பி வந்து விட்டார் என்று தெரிவித்தாள். எனக்குள் இனம் புரியாத நிம்மதி பரவியது போல உணர்ந்தேன். அன்று மாலை வீடு திரும்பிய போது அப்பா என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தார். அம்மா உள்ளேயிருந்து வந்து ஏதோ பேச்சை ஆரம்பித்து, என்னையும் சரோஜாவையும் அப்பாவையும் இழுத்து விட்டதில், கொஞ்ச நேரத்தில் ஒரு மாதிரியான சகஜ நிலைக்கு எல்லோரும் திரும்பி விட்டாற் போலிருந்தது.

ஆனால் அந்த நிலை புயலுக்கு முன் வரும் அமைதி என்று அடுத்த நாள் மாலையில் தெரிந்தது. நான் அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும்போது ஏழு மணியாகி விட்டது. எல்லோரும் சாப்பிட்டு விட்டு ஹாலில் உட்கார்ந்த போது, அப்பா என்னைப் பார்த்து, “”ராகவா நாளைக்கு நானும் உங்க அம்மாவும் இங்கேர்ந்து கிளம்பி போலாம்னு இருக்கோம்” என்றார்.

நான் சரோஜாவைப் பார்த்து, “”நீ ஒண்ணுமே சொல்லலையே” என்றேன்.

“”எனக்கே இப்பதான் தெரியறது” என்று கண்ணை அகல விரித்தாள் சரோஜா. பிறகு அம்மா பக்கம் திரும்பி அம்மா, “”நீங்க கூட ஒண்ணுமே சொல்லலையே இன்னிக்கி இதை பத்தி” என்றாள்.

“”ராகவனும் வந்ததுக்கப்பறம் பேசலாமேன்னார் அப்பா. அதுதான் சொல்லலை” என்றாள்.

“”எந்த ஊருக்கு போறேள்?” என்று கேட்டாள் சரோஜா

“”மதுரைக்கு”.

“”என்னது, மதுரைக்கா?”

“”ஆமா, அதுதானே என்னோட சொந்த ஊர். அங்கேதானே என் சொந்த வீடு இருக்கு?”

எனக்கு “சுருக்’ கென்றது.

“”எப்போ திரும்பி வருவேள்?” என்று கேட்டாள் சரோஜா

“”பாக்கலாம். எப்போ விதிச்சிருக்கோ அப்போ வந்தா போச்சு?” என்று சிரித்தார் அப்பா.

சரோஜா என்னைப் பார்த்து கண்ணால் விரட்டினாள்.

“”அம்மா, இப்ப மதுரைக்கு போய் என்ன பண்ணணும், இங்கே, சரோவுக்கு நீ இருக்கறது பெரிய பலமா இருக்கு” என்றேன்.

“”சரி, அப்ப நீ இங்கேயே இரு கல்யாணி, நான் மட்டும் கிளம்பறேன்” என்று அம்மாவைப் பார்த்து விட்டு எழுந்து கொண்டார் அப்பா. அவர் குரலில் தென்பட்ட நிர்தாட்சண்யம் என்னை உலுக்கிற்று.

அம்மா என்னைத் துச்சமாகப் பார்ப்பது போலிருந்தது. எதுவும் பேசாமல் அவளும் எழுந்து கொண்டு அப்பாவுடன் அவர்களது அறைக்குச் சென்றாள்.

சரோஜா என்னைப் பார்த்து, “”போய் அப்பா கால்லே விழுந்து மன்னிச்சிடச் சொல்லுங்கோ. வீண் பிடிவாதம் பிடிச்சிண்டு தலைக்கு மேலே வெள்ளம் போக விடாதேங்கோ” என்று என்னை உலுக்கினாள்.

“”நீ சும்மா இரு. இந்தத் தப்பை நானா ஆரம்பிச்சேன்”

“”இது என்ன கோர்ட்டு விவகாரமா, வக்கீல் மாதிரி வாதாடிண்டு மல்லு கட்டறதுக்கு, பெரியவா வயசுக்கும், அனுபவத்துக்கும் மரியாதைன்னு நினைச்சிண்டு போய் அப்பாகிட்டே பேசுங்கோ”

நான் பதில் எதுவும் பேசாது எங்களது பெட்ரூமுக்குச் சென்றேன். சரோஜா என்னைப் பின் தொடரவில்லை.

மறுநாள் அவர்கள் கிளம்பிப் போய் விட்டார்கள்.

“”என்ன வாசல்லியே உட்கார்ந்து தூங்கியாறது?” என்று அம்மாவின் குரல் என்னை எழுப்பிற்று.

“”ஏம்மா இவ்வளவு நேரம் ஆயிடுத்து?” என்று எழுந்து கொண்டேன். இருவரும் உள்ளே சென்றோம்.

“”இன்னிக்கி யாரோ கிருஷ்ணனுக்கு வெண்ணை சாத்தறேன்னு வந்தாளாம். திரையைப் போட்டு அலங்காரம் பண்ணி தீபாராதனை காமிக்கிறதுக்கு கொஞ்சம் நாழி ஆயிடுத்து”.

நான் தட்டை எடுத்து வைத்துக் கொண்டேன்.

பரிமாறிக் கொண்டே, “”ராகவா, கிளம்பி வரச்சே கோயில் குருக்கள் சொன்னார் இங்கே வசந்த நகர்லயே யாரோ ஆச்ரமம் மாதிரி நடத்தறாளாம். சின்ன வயசிலேயே அனாதையாயிட்ட குழந்தைகள், புருஷன் கைவிட்டுட்ட படிக்காத சின்னப் பெண்கள் இவாளுக்கு எல்லாம் கை வேலை கத்து கொடுத்து, வேலை வாங்கி குடுத்து உதவறாளாம். முடிஞ்சா பண உதவி பண்ணுங்கோன்னார். அதுக்கென்ன பேஷா பண்ணினா போச்சு, அவா ஒத்துண்டாண்ணா வாரத்தில ரெண்டு நாளோ மூணு நாளோ, நான் அங்கே வந்து என்னால முடிஞ்சதை கத்து குடுக்கறேன்னு சொன்னேன். அவருக்கு பரம சந்தோஷம்” என்றாள் அம்மா.

நான் அம்மாவை உற்றுப் பார்த்தேன்.

“”நீ ஏன் அப்படி பாக்கறேன்னு எனக்கு தெரியும். நாம கூப்பிட்டுண்டே இருக்கோம், சொந்த பிள்ளையை விட்டுட்டு ஊருக்கு பண்ணறேங்கறா, என்ன கண்றாவின்னு தானே?”

“” அம்மா, நீ என்மேல இரக்கம் காமிக்கலேன்னு நான் வருத்தபடலே. ஏன்னா, அதுக்கு எனக்கு தகுதி இல்லேன்னு எனக்கு நன்னாவே தெரியும்”

“”நீ அப்படி நினைச்சிண்டு இருக்கறதே தப்பு” என்றாள் அம்மா. “” இரக்கம்னு நினைச்சு நான் எதுவும் பண்றதில்லே. ஒவ்வொருத்தர் அவாவா புரிஞ்சிண்டதுக்கு ஏத்தாப்பிலே தான் செய்யறதுக்கு ஒரு பேர் குடுத்துடறா”

“”நான் மன்னிப்புக் கேக்கலேன்னு உனக்கு கோபம் இல்லையா?”

“”ஒருத்தர் கோபத்துக்காகவோ, தயவுக்காகவோ, யாராவது மன்னிப்பு கேட்டா, அதிலே அர்த்தமே இல்லே. மன்னிப்பு கேக்கறது, கேக்கறவனோட மனசுலேர்ந்து வரணும். மன்னிப்புங்கறதை யார் தப்பு செஞ்சாளோ, அவாளே அதை பத்தி யோசிச்சு, தப்புன்னு புரிஞ்சுண்டு மன்னிப்பு கேக்கறதிலேதான் அர்த்தம் இருக்கு”.

நான் பேசாமலிருந்தேன்.

“”அப்பாவும் இப்படிதான் நெனைச்சிண்டிருந்தார். நீ மன்னிப்பு கேட்டிருந்தா கூட அதை அவர் ஒத்துண்டு இருப்பாரோ என்னமோ, ஒரு தடவை சொன்னார், அவன் மனசுல இருந்ததுதான் ஒரு நா வார்த்தையா வந்து விழுந்ததுன்னு அதெல்லாம் பத்தி இப்போ பேசி என்ன? நீ சாப்பிடு, ஊருக்கு கிளம்ப டயமாயிடுத்து” என்றாள் அம்மா.

நான் எழுந்து கையை அலம்பிக் கொண்டு வந்தேன். ஹாலில் இருந்த ஊஞ்சலில் என் கைப்பை இருந்தது. எடுத்துக் கொண்டேன்.

“”என்ன ஒரே கனமா இருக்கு?” என்றேன்.

“”சரோவுக்குப் பிடிச்ச ரவாலாடு பண்ணி வெச்சிருக்கேன். அப்படியே கொஞ்சம் திரட்டுப் பாலும் குழந்தைக்கு இருக்கட்டுமேன்னு பண்ணினேன்” என்று அம்மா சிரித்தாள்.

நான் காலில் விழுந்து நமஸ்கரித்தேன். நானும், சரோவும், குழந்தையும் தீர்க்காயுசுடன் இருக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்தாள்.

பிறகு என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “”ஒவ்வொரு தடவையும் சொல்லிண்டு இருக்கேன். சரோவையும் குழந்தையையும் அழைச்சிண்டு, நீயும் லீவு போட்டுட்டு, ஒரு மாசம் நிம்மதியா இங்க வந்து என் கூட இரு” என்று இறுக்கினாள்.

“”வெளியே போ” என்று வாசலைக் காண்பித்த கைகளை எதற்காக இறுகப் பிடித்துக் கொண்டு….மனதின் வலி உடம்பின் வழியே கீழிறங்கி கால்கள் இற்று விடுவது போல் தடுமாறின.

– ஜனவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *