சோபாவில் சாய்ந்தபடி மிகப்பெரிய பிளாஸ்மா, “டிவி’யில் ஆங்கில நியூஸ் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சனா, எதையோ நினைத்துக் கொண்டவளாய், “விருட்’டெனத் திரும்பினாள்.
“”அம்மா… தாத்தா எங்கே?”
“”கொஞ்சம் வெளிய போயிருக்கார் கண்ணு; இப்ப வந்துடுவார்…” என்று ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.
கையில் காகிதக் கற்றையோடு பெரியவர் உள்ளே நுழைந்தார்.
“”ஈஸ்வரி… ஊர்ல இருக்கற அத்தனை புரோக்கர்களையும் பார்த்து, கெடைச்ச ஜாதகங்களை வடிகட்டி, இருபது ஜாதகங்களைக் கொண்டாந்திருக்கேன். எல்லாம் டாக்டர், இன்ஜினியர், ஆடிட்டர், கம்பெனி மொதலாளிங்க! நீயும், நிரஞ்சனாக் கண்ணும் இதுகள்ல யாரையாச்சும் செலக்ட் பண்ணுங்க, நான் பேசி முடிச்சுடுறேன்…”
தாத்தா சொன்னது, நிரஞ்சனாவுக்கும் கேட்டது; அவள் முகத்தில் கோபத்தின் அனல்…
“”போறதுக்கு முன்னால எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்க வேணாமா தாத்தா? சொல்லியிருந்தீங்கன்னா, எனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்ன்னு சொல்லியிருப்பேன்ல…”
பெரியவர் சற்று அதிர்ந்தாலும் சமாளித்தபடி, “”நான் தப்பாவா கண்ணு மாப்பிள்ளை பாப்பேன்… உன் அழகுக்கேத்த, பர்சனாலிட்டியான மாப்பிள்ளைகளோட ஜாதகங்களைத்தான் கொண்டாந்திருக்கேன்…” என்று சொன்னார்.
“”என் தகுதிக்குக் கூடுதலான எந்த மாப்பிளையும் வேணாங்க தாத்தா. பின்னால பிரச்னை வரும்…” என்று, முகம் சுளித்தாள் நிரஞ்சனா.
“”யாரும் உன்னைவிடத் தகுதி கூடினவங்க கெடையாது கண்ணு… எல்லாரும் போஸ்ட் கிராஜிவேட்ஸ்னாலும், நீ டாக்டர்ரேட்டும்ல வாங்கியிருக்க… அதனால, எல்லாரும் உன்னைவிட ஒருபடி கீழதான் கண்ணு…”
“”நான் படிப்பைச் சொல்லலை தாத்தா…”
“”பர்சனாலிட்டியைச் சொல்றியா கண்ணு… உன் அழகுக்கு முன்னால எவனால நிக்க முடியும்? அழகிலயும் நீ தான் டாப்…”
“”சே… எல்லாத்தையும் உங்களுக்கு விளக்கமாய்ச் சொல்லணும்…” என்று சலிப்புற்றாள் நிரஞ்சனா. பின், முகத்தைத் திருப்பி, கண்களை மூடியபடி சொன்னாள்…
“”அழகோ, படிப்போ, வசதியோ, என் தகுதியில்லே தாத்தா. என், “ஒரிஜினல் தகுதி’ முன்னால இதுகல்லாம் மறைஞ்சே போகும்!
“”நான் பொறந்த அன்னைக்கே என்னையும், அம்மாவையும் தவிக்க விட்டுட்டு, இன்னொருத்தன் பெண்டாட்டியை இழுத்துக் கிட்டு ஓடிப்போன புண்ணியவானோட மகள்ங்கிறதுதான் என்னோட அசல் தகுதி!
“”எங்கயோ, எவள் கூடவோ, கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்திக்கிட்டிருக்கவரோட மகள்ங்கிறதுதான் என்னோட, “பெரிய’ தகுதி. இந்தத் தகுதிக்கேற்ற மாப்பிள்ளை பாருங்க தாத்தா போதும்…”
“”என்ன கண்ணு இப்படியெல்லாம் மனசைப் போட்டுக் குழப்பிக்கிடுறே… அப்பா இல்லாட்டி என்ன? அப்பாவுக்கு அப்பாவா, அம்மாவுக்கு அம்மாவா உன் அம்மா இருக்கா… இந்த அம்மாவுக்கும் மேலா நான் வேற இருக்கனே…
“”நாங்க ரெண்டு பேரும் இருக்கிறப்ப உனக்கென்ன குறை கண்ணு? இப்படி ஒரு அம்மா, இப்படி ஒரு தாத்தா வேற யாருக்கும் கெடைக்க மாட்டாங்க… உன் தகுதி ரொம்ப பெருசு கண்ணு…”
“”அது எனக்குத் தெரியுங்க தாத்தா… ஆனா, மத்தவங்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவங்க கேள்வியெல்லாம், “அப்பா எங்கே?’ங்கிறதாத்தான் இருக்கும். அந்தக் கேள்விக்குப் பின்னால கேலியும், நக்க<லும், இளக்காரமும்தான் நெறைஞ்சிருக்கும்...'' ""அதெல்லாம் அக்கம்பக்கம், சொந்தபந்தம் எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதானே கண்ணு. இனி யாரு அப்படிக் கேக்கப் போறா? இனிமே சம்பந்தம் பேசுறவங்கட்டயும் நாம உண்மையைச் சொல்லிட்டாப் போச்சு... இதெல்லாம் உன் கல்யாணத்தில் பெரிய பிரச்னையா இருக்காது கண்ணு...'' ""இல்லீங்க தாத்தா... நம் சொத்து பத்துக, பங்களா, கார் வசதிகளைப் பாத்து, "அப்பா ஓடீட்டா என்ன...'ன்னு கல்யாணத்துக்கு ஓ.கே., சொல்லுவாங்க. ஆனா, ஒரு நாலு மாசம்தான் வாயை மூடிக்கிட்டிருப்பாங்க. ""அப்புறம், "<உங்கம்மா ஒரு வாழா வெட்டி... உ<ங்கப்பா எவ கூடயோ வாழ்றான்...'பாங்க... இப்படிப்பட்ட சுடு சொல்களையெல்லாம் என்னால இனியும் கேக்க முடியாதுங்க தாத்தா... இதுவரைக்கும் கேட்டதே போதும்...'' ""என்ன சொல்றே கண்ணு... இதுவரைக்கும் கேட்டதே போதுமா... அப்படி எவன் உன்னைச் கேலி பேசினான்? சொல்லு கையை முறிச்சுடுறேன்...'' ""இளக்காரமாப் பேசினவங்க கையையெல்லாம் முறிக்கணும்ன்னா நம்ம உறவுக்காரங்க அத்தனை பேர் கையையும் முறிக்கணும்க தாத்தா... நான் கொழந்தையா இருந்தப்ப, "பாவம், தகப்பனில்லாதவ...'ன்னு என்னைக் கொஞ்சுவாங்க... ""அம்மாட்ட, "தகப்பனில்லாத கொறை தெரியாம இவளை வள...'ம்பாங்க. இதுகளுக்கெல்லாம் என்னங்க தாத்தா அர்த்தம்? "இவ தகப்பன் ஓடிப் போயிட்டான்...'ன்னு; தெரியாதவங்களுக்கும் தெரிய வைக்கிற ஈன ஆசைதான் தாத்தா, இதுகளுக்குப் பின்னால இருக்கு! ""அப்பல்லாம் என் மனசுல வலிக்கிற வலி, எனக்கு மட்டும்தான்க தாத்தா தெரியும். அவர் பாட்டுக்கு எனக்கென்னன்னு ஜாலியா ஓடிப் போய்ட்டார்... இங்க நாங்க கெடந்து வதைபடு றோம்...'' ""கண்ணு... உன் மனசுல இப்படியெல்லாம் வலி இருக்குன்னு எனக்கு இப்பத்தான் தெரியும். ஏதோ சந்தோஷமாப் படிச்சுப் பட்டங்க வாங்கிட்டிருக் கேன்னு நெனைச்சுக் கிட்டிருந்துட் டேன்...'' ""எங்கேங்க தாத்தா சந்தோசமாய் படிக்க விட்டாங்க? ஸ்கூல் கேர்ல்ஸ் கூட எப்படியோ மோப்பம் பிடிச்சுட்டு சுத்திவளைச்சு நெஞ்சில குத்துவாங்க... "நிரஞ்சனா... பேரண்ட்டேக்கு உன்னோட அம்மா மட்டும் வந்திருக் காங்களே... அப்பா எங்கே? தெனமும் உன்னை ஸ்கூல்ல கொண்டு வந்து விட உன்னோட அம்மாவோ, தாத்தாவோதானே வர்றாங்க... ஏன் அப்பா வர்றதில்லே?' இப்படி... "இந்த டிரஸ் எங்கப்பா வாங்கித் தந்தது, இந்தச் செயின் எங்கப்பா செலக்ட் பண்ணினது...'ன்னு அவங்க எங்கிட்டச் சொல்றதுக்குப் பின்னால கூட குத்தலும், கேலியுந்தான் இருக்கும்! ""காலேஜ் கேர்ல்ஸ் ஒருபடி மேல... "உங்க புது மில் திறப்பு விழாவுக்கு எங்கப்பா வந்திருந்தாராம், அங்க உங்கப்பா இல்லையாமே; எங்கயும் வெளிநாடு போயிருக்காரோ? உன் டீ.சி.,யில் உங்கம்மா கையெழுத்து இருக்கே; ஏன் அப்பா போடலை?'ன்னெல்லாம் கொக்கி போடுவாங்க. ""ஏதோ சமூக அக்கறை இருக்கிறவங்க மாதிரி, பொதுப்படையா, எனக்குக் கேக்கிற மாதிரி, "பெண்டாட்டியைக் கை விட்டுட்டு ஓடுறவனையெல்லாம் செருப்பால அடிக்கணும்...'பாங்க! "ஓடிப் போனவனைத் தொரத்தீட்டுப் போய் சாகடிக்காம, ஒரு பொம்பளை இருக்காள்னா, அவபக்கம் வீக்னஸ் இருக்குனு அர்த்தம்...'ன்னு அம்மாவைக் கூட மறைமுகமா அசிங்கப்படுத்தீருக்காங்க...'' ""போதும் நிறுத்து கண்ணு...'' என்று தழுதழுத்த தாத்தா, தள்ளாடியபடி சோபாவில் விழுந்தார். ஆனால், நிரஞ்சனா நிறுத்தவில்லை, ""நல்ல வேளையா எங்களை நீங்க ஆதரிச்சுக்கிட்டிருக்கீங்க தாத்தா. வசதியான ஒரு அப்பாவுக்கு பொறந்தது அம்மா செஞ்ச புண்ணியம். நீங்க ஏழையா, வசதியில்லாதவரா இருந்தா எல்லாரையும் போல, "எங்கயாவது போய்ச் செத்துத் தொலைங்க...'ன்னு எங்களை உதறியிருப்பீங்க... அம்மா என்னைக் கெணத்தில வீசி, தானும் விழுந்து எப்பயோ செத்திருப்பா...'' ""நிரஞ்சனா... என்ன பேசுறே? வாயை மூடு...'' என்று, இடைமறித்து அதட்டினாள் அம்மா. ""இன்னும் ஒரே ஒரு நிமிஷம்மா...'' என்று அனுமதி கேட்டு விட்டு நிரஞ்சனா தொடர்ந்தாள்... ""தற்கொலை செஞ்சுக்கிடுறவங்களைக் கவனிச்சீங்கன்னா, அதில பெரும்பாலானவங்க, புருஷனால கைவிடப்பட்ட பெண்களாத்தான் இருப்பாங்க. இந்த சொசைட்டி அவங்களை வாழவிடாது; கேலி பேசியே கொன்னுடும்! ""எல்லாருக்கும் உங்களை மாதிரி மனசு இருக்காதுங்க தாத்தா. தங்களுக்கு எதுக்குச் சுமைன்னு ஒதுங்கி ஓடிடுவாங்க. சொந்த பந்தம், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைன்னு யாருமே ஆதரிக்க மாட்டாங்க. "செத்துக் போ... செத்துப்போ...'ன்னு சொல்லாமச் சொல்லிகிட்டே இருப்பாங்க. ""இந்தக் கொடுமையைத் தாங்கமாட்டாம எண்பது சதவீதப் பேர், கிணறு, ரயில், விஷம், தீன்னு ஏதோ ஒன்றைத் தேடிக்கிடுவாங்க. உலகமே ஆதரிக்காட்டாலும் சரி... சுத்தி நின்னு கேலி பேசினாலும் சரி... "பிச்சை எடுத்தாச்சும் எம்பிள்ளகைளைக் காப்பாத்துவேன்...'னு வைராக்கியமா சில பேர் வாழ்வாங்க. ""அவங்களால அவங்க பிள்ளைகளைப் பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க முடியாது; பத்தாவது தாண்ட வைக்கிறதே அபூர்வம். பொண்ணுக தையல், எம்பிராய்டரின்னு கத்துக்கிட்டு, தாயாருக்கு உதவுவாங்க. பையன்க ஓட்டல்ல சப்ளையராகவோ, பலசரக்குக் கடைல பொட்டலம் கட்டுறவங்களாகவோ, தெருவில ஐஸ் விக்கறவங்களாகவோ, சைக்கிள் ரிப்பேர் பாக்கிறவங்களாகவோ பிழைப்பை ஓட்டி, குடும்பத்துக்குக் கஞ்சி ஊத்துவாங்க. ""தாத்தா... இந்த நசுக்கப்பட்ட பையன்களுக்குத்தான், என்னைப்போல உள்ள பொண்ணுகளோட மனசுல இருக்க வேதனை புரியும். இவங்க எந்தக் காலத்திலயும், "உங்கப்பா எவ கூடயோ ஓடீட்டாராமே?'ன்னு கேக்க மாட்டாங்க. "உங்கம்மா வாழாம இருக்காங்களே...'ன்னு குத்திக்காட்ட மாட்டாங்க. ""அதனால, தாத்தா, அப்பா இருக்கற குடும்பத்தில எனக்கு மாப்பிள்ளை பாக்காதீங்க. அப்பா ஓடிப்போய், அதனால பாதிக்கப்பட்ட குடும்பத்தில எனக்கு மாப்பிள்ளை பாருங்க. இந்த மாப்பிள்ளைகளுக்குப் படிப்பிருக்காது; நல்ல சம்பாத்தியம் இருக்காது... ""வறுமையிலயே வாழ்ந்ததால எலும்பும், தோலுமா, சோகமே உருவாத்தான் இருப்பாங்க. அதையெல்லாம் பொருட்படுத்தாதீங்க. இதுகளுக்கெல்லாம் பெரிய தகுதியான நான் சொன்ன, "அந்தத் தகுதி' ஒண்ணு இவங்களுக்கு இருக்குல்ல அதைமட்டும் கவனியுங்க...'' நிமிர்ந்து உட்கார்ந்தார் தாத்தா. கையிலிருந்த ஜாதகக் கற்றையைக் குப்பைக் கூடையில் வீசினார். ""சரி கண்ணு... உன், "தகுதி'க்கேத்த, "தகுதி'யுள்ளவனாப் பாக்கிறேன்...'' என்றார். - ஜூலை 2010