”பிள்ளை வீட்டுக்காரங்க நேரா மாடிக்குப் போயிட்டாங்க. நானும் உடனடியா அங்கே போறேன். வந்தவங்களக்கு காப்பி கொண்டு வா” என்று பெண்ணிடம் சொல்லிய அம்மா பர்வதம் வேகமாக வாயிற்பக்கம் இருந்த படியேறினாள்.
”மாப்பிள்ளை அளவுக்கு என் பொண்ணு படிக்கலை. ஆனா சமயோசிதமா நடந்துக்குவா” என்று சொன்ன பர்வதம் ஏதோ ஞாபகம் வந்தவளாக,’எத்தனை கப் காபி கொண்டு வரணும்னு சொல்லாமலேயே மேலே வந்துட்டேன்…நான் போய் சொல்லிட்டு வந்துடறேன்” என்று எழுந்தவள், மகள் பாக்கியம் வந்திருந்தவர்களுக்கு சரியாக 6 கப் காபி கொண்டு வந்திருந்ததைக் கண்டு ஆச்சிரியத்தை அடக்கிக் கொண்டாள்!
அதை கூர்மையாக கவனித்தபடி காபியை குடித்த மாப்பிள்ளை கேட்டார்…”நாங்க 6 பேர்தான்னு கரெக்டா எப்படி காபி கொண்டு வந்தீங்க?”
”அது வந்து…வந்து…’ என்று வெட்கித் தயங்கினாள் பாக்கியம்.
”ம்…தயங்காம சொல்லுங்க’ என்றார் மாப்பிள்ளை.
‘வாசல்ல கழட்டிப் போட்டிருந்த செருப்புகளை வைச்சுத்தான் கணிக்க முடிஞ்சது’ என்றாள் மெதுவாக.
”படிப்பு குறைச்சலா இருந்தா என்ன? இந்த மாதிரி சமயோசித புத்திதான் எங்க வியாபாரத்துக்குத் தேவை. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…பொண்ணையும்தான்!” என்றார் மாப்பிள்ளை.
– எஸ்.ராமன் (3-5-2010)