ஏண்டி!, மீனாட்சி, நீ வேலை செய்யற ஆபிசர் காலனி வூட்டிலே கல்யாணமாமே, சொல்லவே இல்லே.
ஆமா யக்கா,அது சொல்ற மாதிரி ஒன்றும் இல்ல ,என பீடிகை போட்டாள். நல்ல வூடு, நல்ல அம்மா, நல்லப் பொண்னு எல்லாமே என்கிட்டே பாசமாத்தான் இருக்கும்.
ஐயாதான் கொஞ்சம் கோவக்காரரு, வேலை டான் டான்னு நடக்கனும், கொஞ்சம் பேசினாலும், என்ன வம்புப் பேச்சுனு அம்மாகிட்ட சண்டைப் போடுவாரு, வேலை செய்யறவங்க எல்லாம் புறம் பேசுவாங்க, நம்ம வீட்டு விஷயமும் தான் வெளியே பேசுவாங்க, அதனால், எதுவும் பேசாதே என்பார்.
நானும் பயந்துதான் வேலையைப் பார்க்கனும். ஆனா யக்கா, மாச சம்பளத்தை மட்டும் உடனே கொடுக்கனும்னு சொல்லிடுவாரு.
கோவம் இருக்கிற இடத்திலேதான் குணம் இருக்குமுன்னு சொல்லுவாங்க. அதே மாதிரிதான்.
யாருக்கு கல்யாணம்?
அவங்கப் பொண்னுக்குத்தான், வர ஐப்பசியிலே கல்யாணம். நாளை கழித்து நிச்சயம் பண்றாங்க!
நகையெல்லாம் எடுத்துட்டாங்களா? எவ்வளவு எடுத்தாங்க? என விசாரித்தாள் சங்கரி.
அவள் கேட்பதின் நோக்கம் புரிந்தது இவளுக்கு.
அதை தவிர்த்து விட்டு, எனக்கும் புடவையெல்லாம் எடுத்துருக்காங்க. யக்கா! என பேசிக்கொண்டே போனாள்,
மீனாட்சி. கொஞ்சம் வாய்தான் அதிகம். ஆனா கவுடு சூது தெரியாத குடிகார கணவனின் கடமை தவறா மனைவி.
சரிடி, அத வுடு, விட்டா வூர் கதையெல்லாம் சொல்லுவே! வெறும் பாத்திரத்திலே வுட்ட கரண்டி மாதிரி…
அதைத்தானே இம்புட்டு நேரம் கேட்டுகிட்டு இருந்தே! ம்.க்கும் என முகம் நொடித்தாள்.
வாசலில் ஏட்டு ஒருவர் வந்து, யாரும்மா? இங்க! சங்கரி. எனக்கேட்க.
யான், நான்தேன்! என முன்னே வந்தாள் .
ஐயா,சொல்லி இருந்தாரில்ல, காவல் நிலையத்தை சுத்தம் பண்ணனும், அதற்குத்தான் கூப்பிட்டு வரச்சொன்னாரு. நாளைக்கு வந்திடு! என சொல்லிவிட்டுச் சென்றார்.
ஏய்! நீயும் நாளைக்கு உன் வீட்டு வேலைகளை முடிச்சிட்டு வா, ஒரு எட்டு ஸ்டேசன் போய் சுத்தம் செஞ்சிட்டு வந்திடுவோம்,
சங்கரிக்கு கட்டாயம் போயே ஆகனும். அவ புருசன் மேலே நிறைய கேசு இருக்கு. அப்பப்ப வந்து போயி பழக்கமாயிடுச்சு.
மீனாட்சி புருஷனோ, குடிப்பானே தவிர, மத்த எந்த தப்பான வேலையும் செய்யாது.
சரியக்கா! போவோம் எனக் கூறி கிளம்பினாள்.மீனாட்சி.
மறுநாள் மதிய நேரம் ..
காவல் நிலையத்தில் ஆள் அரவமே இல்லை, எழுத்தர் ஒருவர் இருக்க, காவலர்கள் இருவர் வாசலிலே நின்று இருந்தனர்.
முதன் முதலாக காவல் நிலையம் வருகிறாள் மீனாட்சி.
வாசலில் ..
‘திருடர்கள் ஜாக்கிரதை’ என சங்கரி புருஷன் போட்டோ இருக்க, அதை பார்த்து சிரித்தபடி உள்ளே நுழைந்தனர் இருவரும்.
உள் சிறை, ஆய்வாளர் அறை எல்லாம் சுத்தம் செய்து முடித்தபோது தேநீர் வந்து இருந்தது. அதை குடிக்க உட்கார்ந்தனர். வாசலில் உள்ள போட்டோவைப் பார்த்தபடி இருக்க, மீனாட்சி எல்லா போட்டோவையும் பார்த்தாள்.
அதில் காணவில்லை, ஜாக்கிரதை, அடையாளத் தெரியாத சடலம் என எத்தனையோ போட்டோக்கள் ஒட்டி இருக்க.. ஒன்று மட்டும் அவளை கூர்ந்து நோக்க வைத்தது,
அதில் உள்ள ஒருவன் படத்தைப் மட்டும் பார்த்து,
எங்கோ இவனைப் பார்த்து இருக்கேனே? என நினைவு கூற முயன்று தோற்றாள் மீனாட்சி
சங்கரியிடமும் சொன்னாள்.
இரு, நான் கேட்டுச்சொல்கிறேன் என்றாள்.
ஐயா, இது யாரு போட்டா? எனக்கேட்டாள் எழுத்தரிடம்.
ந்தா! வேலையைப் பாரு! சும்மா! வந்தாமா, வேலையைப் பார்த்தமான்னு இருக்கனும்.சும்மா பேசிகிட்டு, என அதட்டினார்.
அட,என் புருசன் கூட இருக்கேனு ஒரு ஆர்வத்திலே கேட்டா,, இவருடைய பெரிய ஆபிசர் மாதிரி இல்ல அதட்டறாரு…
வேலைகளை முடித்துவிட்டு கூலிக்கு ஒரு மணி நேரம் உட்கார்ந்து, அரைக்கூலியை மட்டும் திட்டுதலோடு, வாங்கி மொத்தத்தையும் மீனாட்சியிடமே கொடுத்தாள்.சங்கரி.
இவங்க எல்லாரும் அப்படித்தான்!
இரெண்டெடத்திலே நியாயம் பாக்கக்கூடாது. ஒன்னு போலிசு, இன்னொன்னு கோர்ட்டு. என வாழ்க்கை நடைமுறையை உதிர்த்துக்கொண்டே போனார்கள்.
மறுநாள் காலை, மீனாட்சி வீட்டு வேலைக்கு வந்தாள்.
வா மீனாட்சி! நாளைக்கு பாப்பாவுக்கு நிச்சயம் பண்ணப் போறோம்!
நாளைக்கு வேலைக்கு வர வேண்டாம்.
அவசியம் வீட்டுக்கு வந்திடு, நாம சேர்ந்து போயிடுவோம்.என்ன? என்றாள்.
நான் வாரேன்மா, எல்லா வீட்டு வேலையும் நான் செஞ்சுத் தாரேன்.
ஆமாம்,அக்கா, நீங்க அவசியம் வரணும் நீங்க, எனக்கூறி உள்ளே குளிக்கச் சென்றாள்.சுமதி.
செல் ஒலிக்கவே..
பாப்பா, உங்க போன்! எனச் சொல்ல
எடுத்துட்டு ரூமுக்கு வாக்கா! என்றாள்.
ஒளிர்ந்த செல்லின் திரையில் படத்தைப் பார்த்து அதிர்ந்தாள்.
செல் ஒருமுறை மட்டுமே அடித்து ஓய்ந்துப் போனது.
கொடுத்துவிட்டு, வந்தாள். மீனாட்சி அம்மா… என அலறியபடி…
மாப்பிள்ளை யாரும்மா? எனக் கேட்டாள்.
அவ வேலை செய்யுற இடத்தில பழக்கம் ஏற்பட்டு இருக்கு, தாய் தந்தை டில்லியிலே இருக்காங்களாம். பையன் மட்டும் இங்கு வேலை பார்ப்பதாக தெரிவித்தாள். பிடிச்சுருக்குனு வந்து கேட்டாங்க, ஜாதகம் எல்லாம் பொருந்தவே , சம்மதம் சொல்லி நிச்சயம் வரை வந்து இருக்கு.
தான் காவல் நிலையத்தில் பார்த்த போட்டோ மாதிரியே இருக்கு! என்பதைத் கூறி, நல்லா விசாரிங்கம்மா! பாப்பாவோட வாழ்க்கையம்மா!
என்னது? என பயந்தாள். நல்லா பார்த்தியா? அவர்தானா?
ஆமாம்மா, ஆனா ஏன் அங்க அந்த போட்டோ இருக்குன்னு எனக்கு தெரியாதும்மா!
தகவலை கணவரிடம் தெரிவிக்க,
இதுக்குத்தான் அதிகம் அவகிட்டே பேசாதே, வேலையை மட்டும் வாங்குன்னா கேட்டாத்தானே? வேலைக்காரியை அவ இடத்திலேதான் வைக்கனும்.
நேற்றுக் கூட ராஜேஷ் மாப்பிள்ளை என்கிட்டே பேசினார்.
அவளை முதலில் வேலையை விட்டு நிறுத்து எனப் ஆத்திரத்தில் பொங்கினார்.
இருக்கட்டும், அது அப்புறம். நம்ம பெண்னு விஷயங்க, முதல்லே காவல் நிலையம் போய்தான் என்னன்னு விசாரியுங்களேன் எனக் கெஞ்சினாள்.
போறேன்! நான் வருவதற்குள் அவளை அனுப்பிடு. இல்லைன்னா எனக்கு கெட்டக் கோபம் வரும் சொல்லிட்டேன், என எச்சரித்து விட்டுக் கிளம்பினார்.
இரண்டு மணிநேரம் கழித்து திரும்பினார்.
வேலை முடித்து மீனாட்சி கிளம்ப இருந்தாள்.
வந்தவர் நேராகச் சென்று சாமி ரூமுக்கு சென்று அடியற்ற மரம் போல் விழுந்து, எந்திரித்து, மீனாட்சி எங்கே? போயிட்டாளா?என்றார்.
அய்யா! என பயந்தப்படியே வந்தாள்.மீனாட்சி.
நீ இன்னும் போகலையா?எனக் கேட்டபடி அவள் காலில் விழப்போனார்.
என்னை மன்னித்துவிடம்மா! என்னை மன்னித்துவிடு! நீ எங்க குலதெய்வம். அந்த மீனாட்சியே நேரிலே வந்து சரியான நேரத்திலே வந்து காப்பாத்திட்டா.
என்னங்க பார்த்திங்களா, அவர் போட்டாதானா? என்றாள் மனைவி்.
போட்டோவா? அவனே அங்கேதான் இருந்தான். இன்றைக்கு காலையிலேதான் அவனை அரெஸ்ட் பண்ணினாங்களாம். அவன் ஏற்கனவே இரண்டு பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய தேடப்படும் குற்றவாளியாம்.
அக்கா! என ஓடி வந்து கட்டிக்கொண்டாள் சுமதி.
நானும் உங்க வூட்ல மிச்ச மீதியை சாப்பிட்டு இருக்கேனம்மா. உனக்கு ஒன்னுன்னா எனக்கில்லையாம்மா? என அழத் தொடங்கியது அந்த தகவல் எந்திரம்.