தகப்பனின் மாற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2023
பார்வையிட்டோர்: 2,606 
 
 

கண்ணாயிரத்துக்கு காலையிலேயே சுருதி ஏறி விட்டது, மனுஷன் நாஷ்டவுக்கே தகிடத்தோனம் பண்ணறானாம், இதுல இவனுக்கு ஆயிரம் ரூபா வேணுமாம், போடா கஸ்மாலம், காசு என்ன அச்சடிச்சுக்கினு இருக்கேன்னு நினைச்சிகினியா?

நைனா ஸ்கோலுக்கு பீசு கட்டலைன்னா வுள்ளே வுடமாட்டாங்க நைனா,

ஏண்டா பேமானி உன் ஆயா கிழவி உனை இஸ்துங்கினு போயி “அந்த ஸ்கோலுல ஸேத்துனோமுன்னு” அடம் புடிச்சுகினு சேர்த்தாலே, இப்பா என்னாண்ட எதுக்கி வந்து பிசாத்துக்கினி நிக்கறே,

‘அயே நைனா’ ஆயா இருந்தா உன்னாண்டை எதுக்கி நிக்கறேன், அது பாவம் உன்னாண்டை சீரழிஞ்சு போயி சேர்ந்துக்கினுச்சு,

உங்க அம்மாண்டை கேளேண்டா, எங்கிட்ட இன்னாத்துக்கு வந்துக்கினே?

‘அயே’ அம்மாண்ட கேட்டா உங்கப்பன் கிட்ட கேளுங்குது, சாயங்காலாமானா சாராயம் அடிச்சுக்கினு கவுந்திகினிருக்கான், இதுக்கெல்லாம் துட்டு எங்க வச்சிக்கினிருக்கான், அவனாண்டை வாங்கினூ போன்னுடிச்சு.

இன்னாடா இது உங்கூட பெரிய ரோதனையா கீது, என்னாண்டை ஏதுடா துட்டு?

‘இதா கத விடாதே, நீ ‘முதலியார்ண்ட’ பணம் கொடுத்து வச்சிக்கினு இருக்கேன்னு அம்மா சொல்லுச்சு,

டேய் முகரைய பேத்துடுவேன், இன்னா நினைச்சுகிணிருக்கீங்க, ஆத்தாளும் மவனும், ரவு பகல் பாக்காம உய்ச்சு, ஆட்டொ வாங்க சேத்துக்கின பணத்தை கேக்கறேயே, இன்னொரு தபா இதாங்க்கொட்டி பேசுனே.

என்னா பண்ணுவே நைனா ? இம்மாந்தூரம் பேசுனியே, நீ எப்படி இருக்கேன்னு பார்த்துக்கினியாய், இராத்தியானா கை நோவுது, காலு நோவுதுன்னு அம்மாகிட்டே புலம்பிகின்ருக்கறது, போயி வைத்தம் பாருன்ணு அம்மா சொன்னா காசை புடுங்கிடுவானுங்கன்னு பம்முறதும், நைனா சும்மா சும்மா காசை முடிச்சு போட்டு இன்னா பண்ணப்போறே? படிப்புக்கு காசு கொடுத்தா உனக்கு புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?

“எடங்கொப்பன் மவனே நல்லாத்தான் பேசுக்கிறே”, எட்டாம் வகுப்பு பயனாட்டமா பேசுக்கினிருக்கே, அரசியல்வாதி மகனாட்டாம் பேசிக்கினு இருக்கே,

பேச்சை மாத்தாதே நைனா ! சாயங்காலம் பணத்தை முதலியார்ட்டருந்து வாங்கினு வா,

இந்த கண்ணாயிரம் ஒரு தபா சொன்னா மறு பேச்சே கிடையாது, எங்கிட்டே பணம் பைசா கிடையாது, நீ உங்கம்மா கிட்டே வாங்கினு போ, அவ்வளோதான்..!

அங்கிள்..அங்கிள்..

இன்னாடா வெளிய யாரோ கூவிக்கறாங்கோ, போய் பாரு

என்னால முடியாது நைனா, நீ பணம் தர்றாங்காட்டி நான் எதுக்கு போகோணும்

இன்னாடா உங்கிட்ட பெரிய பேஜாரா இருக்குது, சலிப்பாய் சொல்லியபடி வெளியே வருகிறான். வெளியே நல்ல உடையணிந்து “டிப்-டாப்” ஆக இரு சிறுவர்கள், தங்கள் அருகில் சைக்கிளை வைத்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

அங்கிள் ராஜகணபதி இல்லையா?

அங்கிள்..தன்னையா தன்னையா ? தனக்குள் கேட்டு கொண்டவன், அவர்களின் நாகரிகமான உடையை கண்டு கொஞ்சம் மிரண்டு, இருக்கான், இருக்கான், கூப்பிடறேன்

அங்கிள் அவன் படிச்சுகிட்டிருந்தா தொந்தரவு பண்ண வேண்டாம், இந்த நோட்டை அவன் கிட்டே கொடுத்துடுங்க, அவன் கிட்டே இருந்து நேத்து வாங்கியிருந்தேன், எனக்கு டீச்சர் சொல்ல, வேகமா எழுத வராது, ராஜகணபதி வேகமாவும் அழகாவும் எழுதுவான், அதனால நேத்து அவங்கிட்டே வாங்கிட்டு போயி இராத்திரி எழுதி முடிச்சு கொண்டு வந்து தர்றேன். அவனுக்கு ‘ரொம்ப தேங்ஸ்’ சொல்லுங்க அங்கிள், நாங்க, நாளைக்கு அவனை ஸ்கூல்ல பார்க்கறோம். அவர்கள் வந்த சைக்கிளை திருப்பி அதில் ஏறி பறந்து சென்றார்கள்.

நோட்டை வாங்கி தயங்கியபடி மகனிடம் செல்கிறான், இந்தா நோட்டு உன் ஸ்கோலு பசங்க கொடுத்தானுங்க..அப்புறம்..அப்புறம்

நைனாவின் முகத்தை பார்க்க விருப்பமில்லாமல் தலை குனிந்து நின்றான்..

சாயங்காலம் பணம் கொண்டு வந்து தர்றேன், அப்புறம் உங்கம்மாவை கூட்டிக்கினு கடைக்கு போய் நல்ல துணியா எடுத்துக்க, அந்த பஸங்க உன்னோட ஸ்கோலுல படிக்கிற பசங்க எம்மா நல்ல தூனீ போட்டுக்கினங்க, நீயும் அது மாதிரி தச்சு மாட்டீக்கோ, புரியுதா, அப்புறம் நம்ம முதலியார்ட்ட சொல்லி உனக்கு சைக்கிள் ஒண்ணு வாங்கி தாறேன், ஸ்கோலுக்கு அதுலயே போய்க்கிவயாம்.

தன் தகப்பனின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் புரியாமல் விழித்தான் ராஜகணபதி.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *