கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2023
பார்வையிட்டோர்: 2,601 
 
 

(2005ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம்-11

நாற்றப் பாண்டம் நான்முழத் தொன்பது
பிற்றத் துண்டம் பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
ஓயா நோய்க்கிடம் ஓடும் மரக்கலம்
மாயா விகாரம் மரணப் பஞ்சரம். 
-பட்டினத்தார் பாடல் 

நல்ல வேளை கொள்ளையாய் அடித்த மழையில் பூமியே அடிவரைக்கும் ஈரமாகியிருந்தது. குளிர்ந்திருந்தது. நனைந்திருந்தது. கோடைக்கால நிலம் மாதிரி வறண்டு பாறையாய் இறுகியிருக்கவில்லை. கடப்பாரையால் பிளப்பது சுலபமாய்த்தான் இருந்தது. மூச்சை ‘தம்’ பிடித்து கடப்பாரையை இறுக்கித் தூக்கி, ஒரே போடாய் மண்ணில் போட்டுப் பிளந்தெடுக்கும் கஷ்டம் ஏதுமில்லை. ரொட்டி வெட்டுவது மாதிரி. வெண்ணெய் வெட்டுவது மாதிரி சுலபமாய் மண் பிளந்து போனது. மழை நீரால் சேறும் சகதியுமாய்ச் சொத சொதவென்றிருந்தது. சின்னப்பொண்ணு கடப்பாரையால் பிளக்க சுரேசு மண்வெட்டியால் அள்ள சம்பத்து பாண்டு நிறைய அள்ளிப் பக்கத்தில் குவித்தான். 

மண் வேண்டுமானால் வெட்ட சுலபமாயிருக்கலாம். 

அந்த நாற்றம்? துர்நாற்றம்? உயிரைப் பிடுங்கும் நாற்றம்? குப்குப்பென்று சூடாய்க் கிளம்பி மயக்கம் வரவழைத்துக் கிறுகிறுக்க வைத்த மண் வாயுவின் நாற்றம்…? 

வெயில் நேரத்தில் கூட இவ்வளவு நாரசாரமாக இருக்காது. நரகமாக இருக்காது. பீழை நாற்றம் பிணநாற்றம் குறைவாய்த்தான் இருக்கும். மழைக் காலத்தில் தாளமுடியாத அளவுக்குத் துர்நாற்றம்.

குழி ஓரடி… ஒன்றரையடி… ரெண்ட்டி என்று ஆழம் அதிகமாக நாற்றத்தின் அடர்த்தியும் ஜாஸ்தியானது. குடல் புரட்டிக் கொண்டு வந்தது. மார்புக்கூடு பெயர்த்தெடுத்து வாய் வழியே நாக்கு தள்ளி வெளியே விழுவது மாதிரி இருந்தது. வாயெல்லாம் நுரைத்தது. ரெண்டு நாள் அழுகின செத்த எலி நாற்றமே.. ஊரெல்லாம் மூக்கை மூட வைக்குமே. இது எவ்வளவு கொடுமை? பிணம்… ரெண்டாம் நாளே அழுகி நாறும் போது இது புதைக்கப்பட்ட பிணக்குழி. நாற்றத்தின் வீரியம் சும்மாவா.? 

மனிதக் கழிவு, அழுகிய முட்டை, செத்த பிராணி. குப்பைக்கூளம். புழுவும் பூச்சியுமாய் நாறும் சாக்கடை சகலமும் சேர்ந்த கலவை நாற்றம் அங்கே. 

நெளிநெளிவாய்ப் புழுக்கள் வேறு.. அவற்றின் நாற்றமும்… அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெளியே கிளம்பி, கொத்துக் கொத்தாய் முடிச்சு முடிச்சாய் சாரை சாரையாய் நெளிந்தன, மண்ணைக் குடைந்தன. 

நாலு நாள் முன்னால் புதைத்தது. 

சுழற்றியடித்த பேய்மழையில் எரிப்பது கஷ்டம். வேண்டா மென்று புருஷன்காரன் சொன்னதால்..புதைத்தது. இப்போது அப்படியேவா இருக்கும்? 

பிணத்தின் நெற்றியில் இடித்த கடப்பாரை நக்கென்று வழுக்கி உள்ளே போனது. சிதிலமடைந்த உடம்பு, மழையில் ஊதி புழுவில் நாடு கொளகொளவென்றிருந்த உடம்பு. மனித உடம்பு தான் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவுக்குக் குழைந்து போயிருந்த உடம்பு. நெளிந்த புழுக்கள் முகத்தை அரித்திருந்தன. புழுக்கள் மேய்ந்த தோலை துருத்திக் கொண்டு அழுகிய சதையைத் துருத்திக் கொண்டு எலும்புக் கூடு தெரிந்தது. 

முந்தானையால் மூக்கை இறுக்கிச் சுற்றி முகத்தைக் கட்டியிருந்தாள் சின்னப்பொண்ணு. சம்பத்தும் சுரேசும் சல்லாத் துணியால் மூக்கைக் கட்டியிருந்தார்கள். பாடு பேசாமல் அவரவர் வேலையில் சுறுசுறுப்பாயிருந்தார்கள். எவ்வளவு சீக்கிரம் முடிக்கிறோமோ அத்தனை நல்லது என்கிற நினைப்பு. 

காற்று- விர்விர்ரென்று சுழன்றடித்து நாற்றத்தைச் சுமந்து போனது காக்கைகள் சுற்றி நின்று காகாகாவென்று கத்தித் தீர்த்தன. நாய்கள் நாக்கைத் தொங்கப் போட்டு, புஸ்புஸ்புஸ்ஸென்று மோப்பம் பிடித்து உணவு தேடிச் சுற்றிச் சுற்றி வந்தன. பசி வெறி அவற்றின் கண்களில். 

சின்னப்பொண்ணுக்கு- இது தான் முதல் அனுபவம். புதைப்பதும் எரிப்பதுமாய்த்தான் இது நாள் வரை செய்திருக்கிறாள். இந்த வேலை தரும் கிறக்கத்துக்கும், மயக்கத்துக்கும் பயந்து மற்ற வெட்டியான்களே கூட அவஸ்தைப்படும் வேலை, தவிர்க்க இயலாமல் இன்றைக்கு வசமாய் மாட்டிக் கொண்டாள். 

கடப்பாரையைத் ‘தம்’ கட்டித் தூக்க முடியாத மாதிரி கைகால் வெலவெலத்தது. நடுங்கியது. அத்தனை குளிர்க்காற்றிலும் கூட வியர்த்துக் கொட்டியது. கண் இருண்டது சின்னப்பொண்ணுக்கு. நேற்று மதியம் குடித்த கேவுறுக் கஞ்சி கொஞ்ச நேரத்துக்கு முன்னால் சின்னராசு வாங்கித் தந்த தேநீர் என்று வயிற்றில் காலியிடம் நிறையவே இருந்ததில் கடபுடவென்று புரட்டியது. 

“நீத்தண்ணியாச்சும் ஒரு மடக்குக் குடிச்சிருக்கலாம். கெறக்கம் குறைஞ்சிருக்கும்…”

“வூட்டுல வெறவு நனைஞ்சி போச்சி. ஆக்கி எறக்க ஏதுமில்ல. டீக்கடைல ரெண்டு பன்னு தின்னோம். கொஞ்சமாச்சும் உசிரு இருக்கு இல்ல இந்த நாத்தத்துக்கு அப்பவே மயக்கமாயிருப்போம்..” 

சம்பத்து மண்வெட்டியால் மண்ணை அள்ளினான். 

“சுரேசு..இந்தா.’ 

மண்நிறைந்த பாண்டுவை நீட்டினான். 

“ப்ச.இரு வாரேன் மூச்சடைக்குது. கிறுகிறுப்பா இருக்கு. நாலெட்டு வெரசா வைக்க முடியல்ல..”

பதினெட்டு வயசு இளைஞர்கள் தான். ஆனாலும் உடம்பு நோஞ்சானாய் இருப்பதால் ரொம்பவே இளைப்புத் தெரிந்தது ரெண்டு பேரிடமும். 

“கொஞ்சோம்ல ஊத்திட்டு வந்திருக்கணும்ல… தாலியறுக்காமத் தாக்குப் புடிக்கலாம்..”

“இத்தினி நலி புடிச்ச சோலியால்ல இருக்கு. கூப்பிட்டனுப்பினாக. வந்தம். நம்பளையே உசிரோட பொதைக்கற மாதிரி சோலின்னு இப்பத்தான் தெரிஞ்சுது…” 

இதைப் பேசுவதற்குள் கூட நாற்றத்தில் மயக்கம் வந்தது. தலை சுற்றியது. கண் இருண்டது. நுரைத்துக்கொண்டு வயிறு புரட்டியது. அப்படியே தரையில் குத்த வைத்து உட்கார்ந்து வாந்தியெடுத்தான். குழுமியிருந்த நாய்கள் அவன் தள்ளிப் போகக் காத்திருந்த மாதிரி பாய்ந்து நக்கித் தீர்த்தன. இன்னும் ரெண்டு நாய்கள் குழிக்குள்ளிருக்கும் அழுகிய சடலத்தைக் குறி வைத்தன. தாவி ருசி பார்க்க ஏதுவாகக் குழி ஓரத்தில் நின்று குரைத்தன. 

“ப்சீ- தூரப்போ. இத்தாலேயே ரெண்டு போடுவேன்” 

குழிக்குள்ளிருந்து சம்பத்து மண்வெட்டியைத் தூக்கிக் காட்டி விரட்டினான். அதற்குள்ளாகவே நாக்கு குழறியது. 

“ஏய் சின்னப்பொண்ணு…வேலை முடிச்சியா..? அவங்க வர்ற நேரமாச்சு..” 

மணிமாறன் முன் ஜாக்கிரதையாகக் கைக்குட்டையால் மூக்கை இறுக்க மூடி அந்தக் கோடியில் நின்று குரலெடுத்துக் கத்தினார். 

உரக்கப் பதில் சொல்ல முடியாத மாதிரி துவண்டிருந்தார்கள் இவர்கள் 

“ஏய் பொட்டைப் பசங்களா சுணங்காதீங்கடா. எல்லோரும் வந்தபுறம் தோண்டிட்டிருந்தா நம்மளைக் குழி தோண்டிப் புதைச்சுடுவாங்க..ம்…ம்…வெரசாமுடிங்க…” 

நாலெட்டில் வேகமாய் நடந்து போனார். 

சின்னப்பொண்ணு தோண்டத் தோண்ட கால், கை, உடம்பு, முகம் என்று சகல இடத்திலும் புழுக்கள் ஏற ஆரம்பித்தன. 

வேகவேகமாய் மண்ணை அள்ளினான் சம்பத்து. நாலடிப் பள்ளத்திலிருந்து மேலே தூக்கி நீட்டினான். உடம்பு மேலேயே நிறையப் புழுக்கள் கொத்தாய் விழுந்து நெளிந்தன. சுரேசு குனிந்து பாண்டு வாங்கினான். 

“வெரசாப் போயிட்டு வா சுரேசு. இந்தக் கண்ராவியெல்லாம் வேணாம்னுட்டுத்தேன் சின்ராசு இந்த நாரத்தொளிலு வேணாங்குது… நாம மாட்டிக்கிட்டோம்.. விட்டா நரகத்துக்குப் போயி உசிரைப் புடிச்சிக் கொண்டான்னுவாங்க நம்ப ஜனங்க..யாருக்கு வேணும் இம்புட்டு நலி…” 

சம்பத்து மாதிரி புலம்பும் சக்தி கூட சின்னப்பொண்ணுக்கு இல்லை. கடப்பாரையால் வெட்டி வெட்டித் தோள்பட்டையே கழன்று போனது. எக்கி எக்கித் தோண்டி வயிறு வலித்தது. நாற்றம் தாங்க முடியாமல் வாய் நுரைத்துக் குழறியது:. தலையோடு காலாய் அருவருப்பு ஒவ்வொரு அங்குலத்திலும் ஆக்கிரமித்தது.

“எக்கோவ். ம்ஹீம் முடியல்ல. புழு அரிக்குது, கால் சொரியது நா மேல் ஏறவா? நாத்தம் குடலைப் புடுங்குது. மயக்கம் வருதுக்கா” 

சம்பத்தின் கண்கள் கிறங்கின. 

“ம்.. நீ மேலே ஏறு சம்பத்து இந்தக் கடப்பாரையைப் புடிச்சுக்க பல்ட்டி அடிச்சு ஏறு….ஏறு..”

சம்பத்தை ‘தம்’ பிடித்துத் தூக்கி விட்டாள். 

நாக்கு வரண்டது. தாகம் வாட்டியெடுத்தது. ஆனாலும் ஒரு சொட்டுக் கூட குடிக்க முடியாது. அடி நாக்கின், மேல் அண்ணத்தின், குடலின், உயிரின் நுனி வரைக்கும் நாற்றத்தின் வாசனைத் துளி பச்சக்கென்று ஒட்டிக் கொண்டிருந்தது. 

அழுகின பிணம் தயாராய் இருந்தது. 

“சுரேச கீழ இறங்கச் சொல்லு..ஒரு கை தூக்கணும்.” இழுத்துச் செருகிய புடவையும், நைந்த பிளவுஸும், வியர்வைக் குளியலும், பரட்டைத் தலையும். களைத்த முகமும், நலிந்த உடம்புமாய் சின்னபொண்ணு உழைப்புக்கு அஞ்சாமல் பரபரத்தாள். 

சாக்கு மூட்டையில் சுரேசும் இவளுமாய்ப் பிணத்தைத் தூக்கினார்கள். மழை நீர் சொதசொதசொதவென்று கீழே சொட்டியது. கூடவே புழுக்களும் கொத்து கொத்தாய்ப் பொலபொலவென உதிர்ந்தன. பிணத்தில் இருந்த மண்ணிலும் புழுக்களின் ராஜ்ஜியம் நூறு, ஆயிரம், லட்சம். கோடியாய்ப் புழுக்கள். அழுத்தமாய் நின்ற காலின் அடியில் குறுகுறுகுறுவென்று ஊர்ந்தன.

வாயை இறுக்கி முடி மூச்சைப் பிடித்துத் தூக்கினார்கள். வழியும் நீர் வாய்க்குள் இறங்கி விடக் கூடாதே.? மேலே சம்பத்து பிணத்தைப் பிடித்து இழுத்துச் சம பரப்புக்குக் கொண்டு வந்தான். அதற்குள் குடலின் பித்தநீர பந்தாய்ச் சுருண்டு வாய்க்குள் வந்தது. அருவருப்பு. குமட்டல். குபுக்கென்ற வாந்தி. மறுபடியும் இவனின் முறை. 

சுற்றியிருந்த நாய்களுக்குக் கொண்டாட்டம் தான். 

இளகியிருந்த மண் – கைபிடிக்க வாகாக இல்லாமல் வழுக்கியதில் ரெண்டு தரம் மல்லாக்கக் கீழே விழுந்தாள் சின்னப்பொண்ணு. முதுகில் புழுக்கள் ஊர்வலம். கையில் தட்டினால் காலில் ஏறுகிறது. காலில் தட்டினால் தலையில் ஏறுகிறது. எங்கேயென்று தட்ட.? 

சுரேசு தூக்கி விட மேலேயிருந்து சம்பத்து கை கொடுக்க மூச்சைப் பிடித்து மேலே ஏறினாள். அப்படியே தவழ்ந்து நகர்ந்து மரத்தடியில் சுருண்டு விழுந்தாள். 

“சம்பத்து கை குடு” 

“ம்.நீ மேல வா..” 

நீட்டின கையைப் பிடித்து எக்கினான் சுரேசு. பாதி ஏறும் போது மண் பாளமாய்ப் பிளந்து அவன் முகத்தில் விழுந்தது. கண்களில் விழுந்தது. மூக்கில் விழுந்தது. திறந்திருந்த வாயில் விழுந்தது. உடம்பு அருவருப்பில் சிலிர்த்தது. கை நழுவியது. பதறிப்பதறித் தாவி மண்ணைப் பிடிக்க, சம்பத்தின் கையைப் பிடிக்க நிமிஷத்தில் எல்லாமே கை நழுவ..தலை குப்புறக் கீழே விழுந்தான் சுரேசு. 

கொழகொழவென்றிருந்த சேற்று மண். நசநசத்த புழுக்கள், அழுகின் பிணத்தின் சதை எல்லாம் கலந்திருந்த மண்ணில் முகம் அழுந்தப் போய் விழுந்ததில் அடுத்த நிமிஷமே மயக்கமானான் சுரேசு. 

சம்பத்தும் சின்னப்பொண்ணும் கிறக்கம் கலைந்து ஆசுவாசப்படுத்தி எழுந்திருப்பதற்குள் மணிமாறன், பெருங்குரலெடுத்துக் கத்தினார் பின்னாலேயே பெருங்கூட்டம். 

“என்னங்கடா பண்றீங்க? ஆளாளுக்குச் சுருண்டு ஓய்வெடுக்கறீங்களா.?” 

நிலமை புரியாமல் அதட்டியவரை வெறுப்போடு பார்த்தாள் சின்னப்பொண்ணு.

அத்தியாயம்-12

அந்தப் பாடையைச் சுற்றிலும்
உற்றார் சூழ்ந்து வர 
அந்தப் பெற்றோர்கள் சூழ்ந்துவர
உறையோரும் முறையோரும் சூழ்ந்துவர… 
செத்த பிணம் சிவலோகம் போக
மாண்ட பிணம் வைகுந்தம் போக
அரிச்சந்திரா வழி விடு…. 
-அரிச்சந்திர புராணம் 

“ஐயோ ராசாத்தி இப்பிடி நாத்தம் புடிச்சு அழுகிப் போகவா உன்னைப் பெத்தேன்? தூசி கூடப் படாம ராணி மாதிரி வளர்த்தேனே. தறுதலையக் கல்யாணம் பண்ணாதேன்னு தலைதலையா அடிச்சுக்கிட்டேன். கேக்காம அழுகிப் போயிட்டியே. அடிச்சே கொன்னுருக்கானுங்களே. அவங்க நாசமாப் போகணும்…விட மாட்டேன். விட மாட்டேன். அவனோட அப்பன் ஆத்தா குடும்பமே களி திங்கணும். ஊருக்குப் போயிட்டு வர்றதுக்குள்ளே உன்னை வழியனுப்பிட்டானுவளே… வக்கீலம்ம…அவனுங்க குடும்பம்….. வேரறுத்துப் போவணும். எவ்வளவு செலவானாலும் பரவால்ல. அனாதைப் பொணமா பொதைச்சிருக்கானுவளே எம்பொண்ணை..”

இன்னும் இன்னுமாய்ப் புலம்பல். 

அப்பா போலிருக்கிறது. குமுறிக் குமுறி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினார். அரற்றினார். புலம்பினார். 

“கடைசியா உன் முகத்தைக் கூட பார்க்க முடியாத படிக்கு நாஸ்தியாக்கிட்டானுங்க…அம்மா இல்லாத பெண்ணை அருமை பெருமையா வளத்தேன். ப்ச நிமிசமா நாசமாயிடுச்சு…எல்லாம் போச்சு ” 

முகத்திலறைந்துகொண்டு கதறினார்.

ரெண்டு ஏட்டு, வக்கீல் பெண்மணி, நண்பர்கள் என்று  சூழ்ந்த கும்பல் அவரைத் தள்ளி நகர்த்தியது, அவர்களுக்கும் கூட நாற்றம் தாங்கமுடியவில்லை. 

“ஏம்மா சின்னப்பொண்ணு சட்டுப்புட்டுனு சோலிய முடிம்மா “

மணிமாறன் அவசரப்படுத்தினார். 

“என்னா சார் அநியாயம்? பொணத்தை எடுத்தும் போட்டாச்சு. அந்தப் பையன் சுரேசு பள்ளத்துல விளுந்துட்டான். சின்னப்பையன் சார். அவனைத் தூக்க ஒரு வழியும் பண்ணலே சீக்கிரம் சீக்கிரம்னு அவசரப்படுத்தறீங்களே.” 

பசி மயக்கம்.. வேலை மயக்கம்..எல்லாமாய்ச் சேர்ந்து வாய் குழறினாள் சின்னப்பொண்ணு. 

“இருங்க சார்.ஏணி கொணாந்து குழில இறக்கணும் அந்தப் பையனைத் தூக்க வேணாமா? போலீஸ்காரரே ஒரு கை குடுங்களேன்..” 

“யாரு நானா? குழிலேர்ந்து தூக்கணுமா..?” 

அந்தப் பெண்ணின் பிணத்தை லத்தியால் புரட்டினவர் அதிர்ந்து போய்க் கேட்டார். 

புழுக்கள் நெளுநெளுவென்று நெளிந்தன. வெட்டுக் காயம், அரிவாள் . வெட்டு, குத்து, ரத்தம், விபத்து. அனாதைப்பிணமென்று ஆயிரம் பார்த்த அவருக்கே ஒரு தரம் உதறிப் போட்டது. 

“நீயாம்மா டூட்டி?” 

தலையசைத்தாள் சின்னப்பொண்ணு 

“ஆம்பளைங்க யாருமில்லியா? வெட்டியானுங்க எங்க போயிட்டானுங்க? இந்தப் பொணத்தை தூக்கி வேன்ல வை. நாங்க கிளம்பணும். அப்புறமா நீ குழில எறங்கு. பள்ளத்துல எறங்கு. நாங்க போஸ்ட் மார்ட்டத்துக்குப் போவணும்…” 

அவரின் அவசரம் அவருக்கு. 

“போலீஸு எனக்கே நாத்தம் தாங்கல்ல நீ எப்படித் தாங்கற? வேற ஏதாச்சும் வேலைக்குப் போவக் கூடாதா.?” 

“அட. இன்னா சார் நீங்க? இந்த நாத்தம் தான் சோறு போடுது எங்களுக்கு. பசியும் பட்டினியும் குடலைத் தின்னுச்சுன்னா என்ன தொளிலு வேணாம் பண்ணலாம். கொலைக் குத்தம், திருட்டு. அவுசாரி இதெல்லாம் 
தான் நாறத் தொளிலு. இது புண்ணியத் தொளிலு என்னா கொஞ்சம் அசிங்கம் பார்க்காமப் பண்ணணும், அம்புட்டுத்தேன். ஒரு கை குடு சாரு…”

தம்பிடித்துத் தூக்கி ஒற்றை ஆளாகவே ஆஸ்பத்திரி மார்ச்சுவரி வேனில் வைத்தாள். 

“ஒத்தைக்கொத்தைப் பொண்ணைப் பறிகுடுத்துட்டு நிக்கறவருட்ட என்னத்தக்கேக்க? குழி தோண்ட பொணத்தை மேலே தூக்கன்னு முனு ஜீவனுங்க வேலை பண்ணோம். புளு.. சேறு, சகதி, அழுகின பொணம்னு முகம் சுளிக்காம வேலை பண்ணோம். ஆம்பளை வெட்டியானுங்க கூலி எம்புட்டுக் கேப்பாங்க தெரியுமா? மொதல்ல அழுகின பொணத்தைத் தொடக் கூட மாட்டனுவ. நானாக் கண்டு செஞ்சு முடிச்சேன்.இந்தா.அந்தப் பையன் குழிக்குள்ள கெடக்கானே.அவனுக்கு மருந்து மாத்திரை வாங்கித் தரக் கூடப் பைசா இல்ல. ” 

இவளின் முணுமுணுப்பு கூட்டத்துக்கும் எட்டியது. 

“வக்கீலு கோர்ட்டு போலீஸுன்னு கட்டுக்கட்டாச் செலவழிக்கற ஜனம் கூட..எங்க கஷ்டத்தை ஏன்னு கேக்காது…நாற ஜென்மங்க நாங்க.. “

“இந்தாம்மா பொலம்பா.. இந்தா அம்பது ரூவா..மூணு பேரும் எடுத்துக்கோங்க.” 

அப்பாக்காரர் தந்தார். 

அடுத்த வினாடியே வண்டிகள் பறந்து விட அதிர்ந்து போனாள் சின்னப் பொண்ணு. 

“ஹும்ம் இவன் பொண்ணு சடலத்தைக் கூட இவனே தொடமாட்டான். அப்படி நாறுது. புழுல நீந்தி சகதில நனைஞ்சு தொட்டுத் தூக்கினதுக்குக் கூலி அம்பது ரூபா…பிசுநாறிப் பசங்க. அதான்..சொத்தெல்லாம் கோர்ட்டுக்கே அழிஞ்சு போவுது…”

வெட்டின குழி பக்கத்தில் குனிந்தாள். 

“சுரேசு. சுரேசு…” 

வெட்டிக் கம்பால் அவனைப் புரட்டினாள். முகமெல்லாம் சேறு அப்பிப் புழு நெளிந்தது கூடத் தெரியாமல் மயங்கியிருந்தான். 

“ஐயோ..தம்பி சுரேசு கண்ணமுளிச்சுப் பாருப்பா.யாராது வாங்களேன். இவனைத் தூக்கி விடுங்க..” 

ம்ஹீம் அவளின் கூக்குரலுக்குப் பதில் சொல்ல நாதியில் மணிமாறன் கூட வந்த கும்பலின் பின்னால் ஓடியிருந்தார். 

சுருண்டிருந்த சம்பத்தை எழுப்பிக் கைகொடுக்கச் சொன்னா சுரேசைத் தூக்கி மேலே வந்தாள் சின்னப்பொண்ணு. 


அப்புறம் சுரேசைப் பொறுத்த வரைக்கும் சகலமும் போனதாயிற்று. 

கண்கள் நிலைகுத்த உட்கார்ந்தால் கொஞ்சமும் பிரக்ஞை இல்லாமல் அப்படியே உட்கார்ந்திருப்பான்.. சோறு. தண்ணி, மூத்திரம் சகலமும் உணர்வில்லாமல் தான் நடந்தது. 

தாத்தா, அப்பா என்று திண்ணையிலிருந்த கும்பலில் இன்னுமொரு உருப்படியாய் சுரேசு. சுவாசம் மட்டும் உடம்பில் தங்கியிருந்தது. அது தவிர, பேச்சில்லை. சிரிப்பில்லை.. நடமாட்டம் இல்லை. சுயநினைவே இல்லை.

குழியினுள்ளே விழுந்த அதிர்ச்சி. கோடி கோடியாய்ப்  புழுக்களின் மேல் விழுந்த அதிர்ச்சி இப்படிச் சகலமும் அவனை நிலை குலைய வைத்தாயிற்று. மனசு பேதலித்துப் போயிற்று. 

தினக்கூலி ஜீவன்கள்… மருந்து மாத்திரைக்குச் செலவு பண்ண முடியுமா? வேலையும் நிரந்தரமில்லை.. ஒப்பந்தத் தொழில் மாதிரி தானே மணிமாறன், உதவி ஏதும் பண்ண வழியில்லை. விதிகள் அனுமதிக்கவில்லை என்று கைவிரித்து விட்டார். 

வந்துகொண்டிருந்த கூலியில் சுரேசு கூலியும் அடிபட்டுப் போக சம்பத்தின் சுண்டைக்காய்க் கூலிக்காசு வைத்து நாக்கு வழிக்கவா? 

முனியம்மாவுக்கும் வரவர இயலவில்லை. ஒன்று இரண்டாகி ரெண்டு மூன்றாகி திண்ணையை ஆக்கிரமித்த மூணு ஆம்பிளைகளுக்கும் வேளா வேளைக்குக் கஞ்சி ஆக்கித் தருவதற்குள்ளேயே தாலி அறுந்துவிடுகிறது.

சம்பத்தின் அரைக்கால் கூலியில் வாங்கும் நொய்யரிசி ரெண்டு வேளைக்குக் கூடக் காணாது. சின்னராசு ரெண்டு மூணு வாரத்துக்கொரு தரம் வருவான். அம்பது, நூறு என்று தருவான். பொட்டிக் கடை, மளிகைக்கடை என்று அதற்கும் முன்னாடியே கடன் வந்து குதிக்கும். ராணிக்கு சதாப் பொழுதும் அலங்காரமும் ஊர் சுற்றலும்தான். சீவிச் சிங்காரித்து. கண்மை கனகாம்பரம், தாவணி சகிதமாய்ச் சுத்துப்பத்துப் பெண்களோடு குப்பத்தைச் சுத்தி வர ஆத்துப் பாலம் போக ஆலமரத்தடியில் பாண்டி ஆட, அம்மாக்காரி ஒளித்து வைத்திருக்கும் அஞ்சு ரூபாயை லவட்டிக் கொண்டு மத்தியான ஆட்டம் போக என்று பொழுது போனது. அம்மாவுக்கு உதவி-யாய்ச் சின்னதாய்க் கிள்ளிக் கூடப் போட மாட்டாள். 

“ஏய் ராணி…சுரேசுக்கு இந்த கஞ்சிய ஊட்டி விடேன்டி கண்ணாடில என்னத்தான் இருக்கோ? கண்ணு முளிச்ச நேரத்துலேர்ந்து இம்மா நேரமா ரவுசு பண்றியே..கூட மாட தொவையலு அரையேண்டி பாவி. ” 

“ப்ச.. கூவாதம்மா… கஞ்சிய அண்ணங்காரன் சொட்டுச் சொட்டா . முளுங்கும். அது குடிச்சு முடிக்கறதுக்குள்ள பொளுது விடிஞ்சுடும்..எனக்கு இந்தச் சோலியெல்லாம் ஆவாதும்மா ஆளவுடு.” 

ஏதோ ஒரு சினிமாப் பாட்டை முனுமுனுத்தபடி முழு. அலங்காரத்தோடு கிளம்பி விட்டாள். 

தட்டிக் கேட்க ஆண் பிள்ளை யாருமில்லாத தைரியம்… ரொம்பவும் துளிர்த்துப் போனாள்… அப்படி இப்படி என்று அங்கங்கே பார்த்துச் சிரித்துப் பழகினதில் பக்கத்து வீட்டுக் கருப்பனும் இவளும் கொஞ்சம் நெருக்கமாகிப் போனார்கள் தான். 

சுற்றியிருந்த தோழிகளும் தூபம் போட- உற்சாகமூட்ட, ரொம்பவே தைரியம் வந்து விட்டது. 

”எண்ணண்ணே? ராணியோட ஜல்சா?” 

சின்னப் பையன் மணிக்குக் கூட விஷயம் தெரியும்படி நெருக்கம்.

இன்னமும் யாரும் முனியம்மாவின் காதுக்குப் போடவில்லை.

யாரும் பார்த்து விடுவார்களோ என்று பயந்து ஒளிந்து ஓடிவந்து அந்தத் திரையரங்கின் முன் வரிசை டிக்கெட்டில் ஜோடியாய்ப் போய் உட்கார்ந்தார்கள் ராணியும், கருப்பனும். 

அஞ்சு வரிசை தள்ளியிருந்த மாரியம்மா பார்த்துப் பக்கத்திலிருந்த பழனியிடம் காட்டினாள். 

“ஏங்க அது. முனியம்மாக்கா பொண்ணு. ராணி தானே.?”

“ம்.. பிஞ்சுல பழுத்திருச்சு பொண்ணு…’ 

ராணியின் காதல் நாடகம் திரையரங்கில் வெட்ட வெளிச்சமானது. 

– தொடரும்…

– தகனம் (நாவல்), முதற் பதிப்பு: 2005, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *