கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2023
பார்வையிட்டோர்: 3,605 
 
 

(2005ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7

சத்தியம் பலியாதோ
சாமி உன்னைக் கேளாதோ
திட்டுப் பலியாதோ 
தெய்வம் உன்னைக் கேட்டுராதோ? 
-நாட்டுப்புறப் பாடல்
 

வந்த அத்தனை சனமும் மூக்கு முட்ட சாப்பிட்டார்கள். ரொம்ப நாள் கழித்து இறைச்சி பிரியாணி. வகை தொகையாய்ச் சாப்பிடும் ஆசை எல்லோருக்குமே இருந்தாலும் வழி வகை இல்லாமல் கேவுறு கஞ்சி கம்பங்கூழு என்று பஞ்சப்பாட்டு நிதமும் பாடுவதால்-விருந்தில் ஒரு பிடி பிடித்தாயிற்று. 

“பத்து ரூவா மொய்யி வச்சேன்ல. அஞ்சு வாட்டியாச்சும் மட்டன் துன்ன வேனாமா? அப்பத்தாலே குடுத்த காசுக்குச் செரிமானம் கெடைக்கும்? இன்னொஞ்சம் பிரியாணி போடு..” 

சொல்லிச் சொல்லிக் கேட்டுத் தின்றார்கள், “இந்தத் தாவாங் குப்பத்திலேயே மட்டன் பிரியாணி போட்டது வேற யாருமில்ல முனியம்மா. ஒத்தப் பொண்ணு வச்சிருக்க. மூணு பசங்க தங்கச்சியத் தாங்க. விட்டு விளாசற-நாங்க எங்க போவ இப்படித் தாம்தூம்னு ஆட? வெறுங்கையி மொழம் போடுமா?” 

அதுஇது என்று வாய்க்கு வாய் பாராட்டு..

“ஆமாமா.நீங்கதான் மெச்சிக்கோணம்.மூத்ததால பைசாப் பெரயோசனம் கெடையாது. ரெட்டைப் பசங்கதான் நா கட்டைல போற வரைக்கும் கஞ்சி ஊத்துவானுக.ஆமா..” 

முனியம்மா.. வழக்கம் போல வெண்ணையும் சுண்ணாம்புமாய்ப் பீற்றினாள். 

சம்பத்தும் சுரேசும் சபையில் எல்லோரும் பார்க்க புடவையை வைத்துக் கொடுத்தார்கள். அத்தனை பேரும் மூக்கில் விரல் வைத்தார்கள். 

“பாருங்க..வளுவளுன்னு கத்தரிப்பூக் கலருல. அடி ஆத்தி இப்படி அண்ணாத்தை எனக்கு இல்லாமல் போயிருச்சே.” 

புடவையைக் கும்பலுக்கு விரித்துக் காட்டின மாரியம்மா பாடு பேசினாள்…. 

“சின்னது ரெண்டும் பண்ணிடுச்சு. மூத்தது என்னா பண்ணுச்சு?” 

ஆவலாதி கேட்டது ஒரு கும்பல். 

வெட்கமாய்த் தயங்கி நின்ற சின்னராசுவைத் தள்ளினார் தாத்தா.

“போ சின்ராசு மூத்தவன் கவுரதையாப் பண்ணு…” 

-பேத்தி சடங்குப் பிரியாணியை மூணு தடவை சாப்பிட்ட திருப்தி அவருக்கு இறைச்சித் துண்டைச் சுவைத்துச் சர்சர்ரென்று உறிஞ்சித் தின்ற திருப்தி அவருக்கு. 

முன்னால் வந்த சின்னராசு, சின்ன, கைக்கு அடக்கமான பெட்டியைத் திறந்து பளபளக்கும் தங்கமோதிரத்தை வெளியிலெடுத்தான். 

கூட்டத்தில் அத்தனை பார்வையும் அசந்து போனது. 

“யம்மாடி மோதிரம் போடுதான் மூத்தவன்..”

“அடி ராணி… நெசமாலுமே ராணிதான்ட்டி.”

“ஆமா..இது கவரிங்கா? பவுனா?”

கூட்டத்தில் பல கேள்விகள். 

“அடி செருப்பால.. எம்புள்ள சொக்கத் தங்கம்டி.. ஒத்தைக்கொத்த தங்கச்சிக்குக் காக்காப் பொன்னா போடுவான்? தங்கம்டி. தங்க மோதிரம்…” 

அப்படியே நாக்கைப் புரட்டிப் பேசினாள் முனியம்மா. 

ஆசையாய் தங்கச்சி கையில் மாட்டிவிட்டான் சின்னராசு. பொட்டென்று அவனின் கையில் ஒரு துளிக் கண்ணீர் விழுந்து தெறித்தது. 

“ப்ச்ச்ச்.அளுவாத ராணி.உங்கண்ணணுக்குப் பவுசு இருந்தா நெசமாவே உன்னை ராணி மாதிரி வச்சுப்பேன்.” 

“எப்படிண்ணே சம்பாரிச்ச? நானூறு ரூவாயாச்சும் இருக்குமே” 

ராணி, கரிசனமாய் கேட்டாலும்- முனியம்மாவுக்குக் கண்ணு முழி தெறித்து விழும்படி சந்தோஷம்தான். 

“கவலைப்படாத ராணி. ஒங்கண்ணன் திருடிச் சம்பாரிக்கல்ல.”

“அவன்- என்னோட பேரன்டி…. பொறம்போக்கு இல்ல. ரத்தம் சிந்தியாச்சும் சம்பாரிப்பான் அவன்” 

தாத்தாவின் பெருமையான கடுங்குரல் கும்பலைத் தாண்டி வந்தது. ஒருவழியாய்ப் பந்திக்குப் பத்தாய்.அஞ்சு பந்தி முடிந்தது. குஞ்சு குளுவான்கள் இளவட்டப் பயல்கள்.. பக்கத்து வீட்டுக் கருப்பன், மணி, மாரி, மாரியின் புருஷன் பழனி,மாமனார்..இப்படி எல்லோருமே ஒரு பிடி பிடித்தார்கள். 

இன்னும் மூணு பந்திக்கு ஆள் மொய்த்தது. 

“என்னடி மாரி? உங்க மாமாவக் காங்கல்ல? மூக்கு முட்டக் குடிச்சுப்புட்டுக் கண்ணு மண்ணு தெரியாம விழுந்து கெடக்குமோ? குடிச்சாவட்டுத்தேன்-ஒலகமே மறந்துருமே ஒங்க மாமாக்கு.”

மடி கனத்த மொய்ப் பணத்தை மஞ்சள் துணிப் பையில் போட்டு முடிந்து வைத்தாள் முனியம்மா. 

”ராவுக்குத்தேன் எண்ணிப் பாக்கோணும். இப்பு வெளில எடுத்தா- அத்தனை கொள்ளிக் கண்ணும் போட்டெரிச்சுப்புடும்.சாண்டு புடிச்ச பொறப்புங்க அத்தனையும்”. 

மனசு பாட்டுக்குக் கட்டவிழ்ந்த மாடாய்ப் பாய்ந்தது. 

“ஏ அத்தே.. இங்க இம்புட்டுக் கெக்கலிபாடுதீக. பிரியாணி திங்கீக. பட்டும் பவுசுமா அளப்பீறீக.. அங்கன நங்காட்டுல பாருங்க..மாமாவ ரவுடிக்கும்பல் அடிச்சுப் போட்டிருக்கானுவ.ஒரே ரவுசு..போலிசு கூட்டம் அது இதுன்னு ஒரே கூப்பாடு..பேச்சு மூச்சில்லாமல் கெடக்குது மாமோய்.” 

பதைபதைப்போடு ஓடி வந்தாள் சின்னப் பொண்ணு. சடங்கு வீடு ஒரு நிமிஷம் ஸ்தம்பித்தது. எதிர்பாராத நேரத்தில் அவளைப் பார்த்ததில் லேசான வெட்கம் கூட எட்டிப் பார்த்தது சின்னராசுவுக்கு. ஆனாலும் அவள் சொன்னதைக் கேட்டுப் பதைபதைப்பு. 

மருமகளாய் வர வேண்டிய பாத்தியதை உள்ள வீடுதான். ஆனாலும் இத்தனை வருஷம் போலப் படியேறாததால் ‘உள்ளார வா’ என யாரும் அழைக்காமல் காலடி வைக்கத் தயங்கினாள் சின்னப்பொண்ணு. நோட்டீசு கூட வைக்காமல் ராணிக்குச் சடங்கு கழித்ததில் வருத்தம். திரண்டு நிற்கும் ராணியைப் பார்க்கக் கண்ணுக்குள் ஆசை கெவுளியடித்தது. மாலையுங்கழுத்துமாய்ப் பார்க்க ஆசை. ‘நாந் தூக்கி வளத்த பொண்ணு. சமைஞ்சிருக்கு. கண்ணாரப் பாக்கணும்னுட்டுப் பாத்யதை இருக்கு. பாக்யம்தான் இல்ல. எங்குஞ்சுப் பொண்ணு வளர்ந்திருக்கற அளகைப் பார்க்கோணும். நாண்டுக்கிற மாதிரி அத்தே ஏதாச்சும் சொன்னாங்காட்டியும் பரவால்லேன்னு படியேறலாமா.’ 

குழப்பமாய் நின்றாள் சின்னபொண்ணு. 

“எலேய்…அந்தச் சிறுக்கிய அந்தாக்ல திரும்பிப் பாக்காம போவச் சொல்லு.. சேதி சொல்லுதேன்னு ஒட்டாக்க பாடவேணாம். பொலி போட்டுருவன் பொலி..ஒட்டாட்டம் போட வர்றீயா? நாத்தம் புடிச்சக் குடும்பம் வேணாம்னுதான் வெட்டிட்டு நிக்கோம். மாமம் பேரைச் சொல்லிட்டுப் படியேறாதே. ராணியைப் பாக்கோணும் கூனியப் பாக்கோணும்னுட்டு. தலைவாசல் மிதிக்காதட்டி கொடலை உருவி மாலை போட்டுருவன்..” 

உள்ளேயிருந்து முனியம்மாவின் குரல் இடியாய் வந்தது. 

“ஏய் முண்டச்சி..எம்புள்ளய அடிச்சுப் போட்டு உசிரு இளுத்துட்டுக் கெடக்கான்னு சொல்லுதா. என்ன ஏதுன்னு பாப்பியா..இங்க ஏறாத அங்க ஏறாதன்னுட்டு செல்லங் கொஞ்சுதாட்டியும். பிலாக்கணம் பாட இதுவாட்டி நேரம்? அடி செருப்பால பொட்ட நாயி..ஒட்றி…ஏய் சின்ராசு ஓடுல.. தம்பிங்களை இளுத்துட்டுப் போவு, வம்பு வளக்கா வம்பு.நேரங்கெட்ட நேரத்துல..” 

குருட்டுத் தாத்தாவுக்கு உடம்பு பதறிப் போட்டது. 


பெரீய பிரச்னைதான். பெரீய காயம்தான். 

“அட..இது ஒண்ணும் புதுசு இல்லியே தம்பி. ரெண்டு வருஷம் மின்னாடி.. சல்லடைக் கணக்கா என்னைக் குத்திப் போட்டாக…இப்ப.உங்கப்பன். இந்தத் தொழில்லே இது சகசந்தேன்..” 

சகவெட்டியான் தனவந்தன் பேசப்பேசப் பற்றிக் கொண்டு வந்தது. சின்னராசு, சம்பத்து., சுரேசு, சின்னபொண்ணு கூடநின்ற கூட்டத்துக்கு ஆங்காரம் மூக்குமுட்ட.
 
அலுவலர் மணிமாறன்..ரொம்பவும் அலட்சிய மனோபாவத்தில் இருந்தார். 

“சாரு நீங்களே நியாயம் சொல்லுங்க..ஏதோ பொணத்தைக் கட்டாயமா எரிக்க வச்சிருக்காங்க.எல்லாம் முடிஞ்சப்புறம் எங்கப்பாரை உருட்டுக் கட்டையால அடிச்சுப் போட்டிருக்காங்க. கட்சிகாரங்க வூட்டுப் புள்ளையாயிருந்தா எங்களுக்கென்னாச்சு? அவங்க தப்பை மறைக்கணும் எரிச்சு உருத்தெரியாமப் பண்ணிடனுன்னா..எங்கப்பாரு அதுக்குப் பலி கடாவா? பொணத்தை அந்த ராத்திரிலே முழுசுமா எரிக்க வச்சிருக்கானுவ. வெளில் சொன்னாக் கொன்னு போடுவோம். ஒன்னையும் இந்த நெருப்புல தள்ளி எரிச்சுடுவம்னு மெரட்டிருக்கானுவ. கூடவே அதுங்க தொணைக்குப் போலீஸ்காரனுங்க நிக்கறச்ச..வெட்டியானால் என்னத்த பேச முடியும் சாரு? மாட்டேன்னு சொல்ல முடியுமா? காலைல கொணாந்து ஆபீசரைப் பாருங்கன்னு ரூல்ஸு பேச முடியுமா.. “

சின்னராசுவுக்கு ஆத்திரம் சித்திரை வெயிலாய்க் கொளுத்தியது. 

“பொம்பளப் புள்ளிங்களை இவனுங்க சொகத்துக்கு மோந்துப்புட்டு.. பிரச்சனையாயிரக் கூடாதுன்னு எரிக்க வக்கறதே இவனுங்களுக்குப் பொழப்பாயிருக்சு..அந்தப் பொண்ணை எரிச்சு சாம்பலாக்கி இல்லாமப் பண்ணிப்புடலாம். ஆனா..மேலே ஒருத்தன் பாத்திட்டிருக்கானே.அவன் பார்வையிலிருந்து தப்பை மறைச்சுட முடியுமா? தப்பை மறைக்கத் தொணை போறத் தொளிலு இல்ல இது. ஒவ்வொரு பொணத்தை எரிக்கப்போவும் நா சாமிய வேண்டுதன். இந்தாளோட ஆத்மா நல்லபடியாச் சாந்தியடையணும்னுட்டு. எல்லாப் பொணத்துக்கும். கடைசிச் சொந்தக் காரங்க நாங்க தான் ஸார்..நாங்கதான் அவங்களை வழியனுப்பறோம். புனிதமா பண்ற தொளிலுசார் இது.அப்பேர்க் கொத்த வெட்டியானை இப்படி நாஸ்தி பண்ணீருக்கானுங்களே..” 

சின்னப்பொண்ணு வரிந்து கட்டிக் கொண்டு நியாயம் கேட்டாள். 

“நாளைக்கே..இந்த ரவுடிக்கும்பல் என்னை மெரட்டினா நா எப்படி எதிர்த்துப் பேச? பொட்டச்சியால ராட்சசக்கும்பலைச் சமாளிக்க ஏலுமா? உருட்டுக் கட்டை, குண்டாந்தடி, சைக்கிள் செயினுன்னு வாரவுகளை என்ன பண்ண? எங்க உசிருக்கு என்ன சார் ஜவாப்பு? ஏழைபாழைங்க உசிருன்னா அம்புட்டு சல்லிசாப் போச்சா?” 

மறுபடியும் சின்னப்பொண்ணு சீறினாள். 

பேச முடியாமல் உட்கார்ந்திருந்தார் அலுவலர். 

“நஷ்ட ஈடு குடுங்க சார். டாக்டர்ட்ட அளைச்சுட்டுப் போணும். . மருந்து மாத்திரை களிம்பு இதுக்கெல்லாம் காசுவேணும் ஒரு ஆயிரமாவது வேணும் சார். அம்புட்டுப் பணத்துக்கு அன்னாடங் காய்ச்சிங்க எங்க போக? அதுக்காவ மருத்துவம் பண்ணாம இருக்க முடியுமா? சொல்லுங்க ஸார். கண்ணுமுளிக்காம மூச்சுப் பேச்சில்லாமப் படுத்திருக்கே அப்பாரு ஒருவளி சொல்லுங்க” 

“மாமாக்கு ஒடம்பு தேர்ற வரைக்கும்..கஞ்சிக்கு வளி?பொணம் எரிக்கலேன்னான துட்டு கெடைக்காதே..? சுரேசு,சம்பத்துன்னு சின்னப் பசங்களுக்குப் பாதிக்கூலி கூட கெடைக்காதே இவங்க வூட்டாளுங்களுக்குப் பசிக்கக் கூடாதுன்னு ஒத்தரவ போடலாமா ஸாரு? கொளக்கட்டை அடைச்சு மாரியில்லா உக்காந்திருக்கீவ?’ 

பாவம். அலுவலர் என்ன பண்ணுவார்..? 

“உங்க கேள்விக்கெல்லாம் எங்கிட்ட பதில் இருக்கு, ரூல்ஸ்படி கெடையாதும்மா. நஷ்ட ஈடு குடுக்கல்லாம் வழி இல்ல. தெரிஞ்ச டாக்டர்ட்ட நா சொல்லியனுப்பறேன். அம்பது வாங்கற இடத்துல முப்பது வாங்கிப்பாரு. பெரிய காயம் தான். நல்லாக் கவனிங்க. எழுந்து நடமாடணுமே..நல்ல மனுசன் இருசப்பன்” 

விதி முறைகளைக் காட்டி கைகழுவி விட்டார். பொதுவாக அதிகாரிகளே அரூப விதிகளால் காட்டப்பட்டிருப்பவர்கள் தானே? 

முனியம்மா மடியை நிறைத்த மொய்ப்பணம் மருந்தாய் மாத்திரையாய் களிம்பாய்க் கரைந்தது. கந்து வட்டிக் கடனை எப்படி அடைக்க? அப்பாவின் வேலைக்கு மாற்றாய்த் தான் போகவா என்பதான கேள்விகள் தன் தோளில் ஏறி அமுக்க. அதிர்ந்தான் சின்னராசு. 

அத்தியாயம்-8

ஆத்துக்கு அந்தப்புறம்
ஆசக்குழல் ஊதயிலே
தவிக்குதில்ல தாயாரே 
தண்ணிக்குப் போய்வாரேன் 
தண்ணிக்குப் போமகளே
தலைகவுந்து வாமகளே 
மோட்டாரு டைவரக் கண்டா
மொகங் கொடுத்துப் பேசாத.. 
-நாட்டுப்புறப் பாட்டு 

கொள்கொளவென்று புளித்திருந்த கேப்பைக் கூழைத் தண்ணீர் விட்டுப் பெருக்கினாள் முனியம்மா. அலுமினிய லோட்டாவில் ஊற்றி, வாய்க்குக் கடிக்க ஒரு நெத்திலியும் வைத்தாள். பத்தாவது முறையாய். கூப்பிட்டாள்.. 

“ஏட்டி ராணி..எங்கேட்டி கெட்டழிஞ்சு போன? காது அவிஞ்சோச்சா என்ன? இத்த அப்பனுக்கும் கொண்டோயி குடு.. முந்தி குருட்டுக் கௌத்துக்கு சிசுருசை பண்ணேன். இப்ப.இன்னோரு ஆம்பளையும் மொடங்கிடிச்சி..பொட்டச்சி தான் ஒரு மொடக்கமும். வார வழி காங்காம கெடக்கா.பாடைல தூக்கிப் போறப்பு கூட ஏதாச்சும் மிச்ச சொச்ச சோலி பாக்கோனும் போல…” 

கொத்தமல்லிக் கட்டாய்ச் சிறுத்திருந்த செம்பட்டை முடியை வறட்வறட்டென்று தட்டி சீலை முந்தானையில் முகம், கழுத்து என அழுத்தித் துடைத்தாள்…தண்ணி கண்டு மாமங்கம் ஆகியிருந்தது அந்தச் சீலைக்கு. ஒரே கற்றாழை நாற்றம். 

“யப்பா. வேணாக் காயுதே வெயிலு. என்னா குடு..என்னா வெக்கை..ஏட்டி ராணி..இந்தக் கொதிப்பை விட கட்டைல போற சூடு இதமாத்தான் இருக்கும். ஒரேயடியாப் போய்ச்சேர்ந்துட்டா ஒரே நிம்மதி. சாக்கடைப் புளுவாச் சீரழிஞ்சு நாறவாடி நா பொறப்பேடுத்தேன்? அய்யோன்னு போயி விழ அப்பன் ஆயி இல்லாத அனாதையாயிட்டேன்.. கண்ட நாயும் என்னைக் கோவிக்குது.. ஓங்கோவம்.ஒங்கண்ணன் கோவம்.. அப்பன்.தாத்தா, எல்லாக் கோவமும் எந்தலையிலே விடியுது.ஒவ்வொருத்தனுக்கும் கஞ்சி வேணாம். கருவாடு விருந்துல்ல வேணும்னு சிலுப்பிட்டு போறானுவ.எஞ்சாமி எனக்கொரு சாவு வரமாட்டேங்குதே.”

ஒப்பாரி வைத்து மார்பிலடித்து அழுதாள். 

வாழ்க்கை கசக்கிறது தான். ஆனால் நினைத்த நேரத்தில் சாவு வந்திடுமா என்ன? நேரம் வரும் வரைக்கும் சுமக்க வேண்டிய வேதனையைச் சுமக்கத் தானே வேண்டியிருக்கிறது..? 

“சேத்து வச்ச மொய்யெல்லாம் சக்கரையாக் கரைஞ்சிட்டே எஞ்சாமி நாலுகாசு எங்கைல தங்க விட மாட்டியா..?” 

“த்தே..எவடி அவ தேவடியா? வூடான வூட்ல மாரடிக்கறவ? அப்பனும், புள்ளையுமா திண்ணைல கிடக்கோம்தான? கெழக்கால போற பொயிது வந்தாச்சா என்ன? எலலேன்னாலும் திண்ணைதால சுருண்டிருக்கம்? பேசாம. உருட்டுக் கட்டையால அடிச்சவனுக ஒரேமுட்டாப் போட்டிருந்தா ஒன் ஒப்பாரி கேக்கவேணாம். மொய்ப் பணத்தால் உசிரைத் தானே காப்பாத்தியிருக்கே.அப்பறம் என்னாவாம்..?” 

“ஆமாமா..சுருண்டுக் கெடக்கறதுதான வம்பு? ஒரேமுட்டாப் போயிருந்தா..பால் தெளிச்சுக் கண்ணு தொடைச்சிருப்பேன்… எனக்கில்லாமப் உங்க வயித்துக் கஞ்சிக்குப் பாடு போயிருக்கும். ஒத்தைக்கு மூணாப் பெத்துவச்சிருக்கன் ஆம்பளப்புள்ளைய. எவனுக்குக் கால்காசு சம்பாரிக்கத் துப்பிருக்கு? அவனவன் சிலுப்பிட்டு ஓடுதான். ரெட்டை நாய்ங்க சம்பாரிச்சதைக் கண்ணுலயா காட்டுதுங்க? மொத நாயி சம்பாரிக்கவே மாட்டேன்னு சண்டித்தனம் பண்ணுது ஒரேமுட்டாப் போவ எனக்குத்தான் வழி காணம்..” 

உள்ளும் வெளியுமாய் மாறிமாறிக் கத்தினார்கள். 

“இந்தப் பொட்டப் பொணத்துக்குக் காது அறுந்து போச்ச ஏ ராணி. இந்தக் கஞ்சியக் குடுடி உங்கொப்பன்ட்ட”

ம்ஹீம்…ராணி காதில் வாங்கினால்தானே? 

“இனிமே நீ இஸ்கூலுக்குப் போவேணாம் ராணி. பொட்டப்புள்ள. வூட்டோட இருந்து ஆக்கி எறக்கப்பாரு.. நாளைக்கே கட்டினவன் ஊட்டுக்குப் போயி சோறாக்கப் பேய்முளி முளிச்சேன்னு வையி. சம்பந்திக்காரி என்னைத்தான் சாடை பேசுவா..'”

இப்படிச் சொன்னதிலிருந்து ராணிக்கு மகா திருப்தி வைத்திருந்த புத்தகங்களைக் கட்டித் தூக்கிப் போட்டாள். 

எல்லா நேரமும் கையகலக் கண்ணாடியைப் பிடித்துக் கண்மை போட்டு ஸ்டிக்கர் பொட்டு வைத்து சடங்குக்கு வந்திருந்த நைலக்ஸ் புடவை சுற்றிக் கதம்பம்,டிசம்பர், கனகாம்பரம் என்று வைத்துக் கனவு காண ஆரம்பித்து விடுகிறாள். அவள் வயதொத்த பெண்களைக் கூட்டி வைத்து பத்திரிகையிலிருக்கும் சினிமா ஹீரோ ஹீரோயின்கள் கதையைப் பேசிப் பொழுது போக்குகிறாள். சாயங்காலத்தில் சமூகக் கூடத்திலிருக்கும் டி.வி. பார்க்கப் போய்விடுகிறாள். 

இரட்டக் குத்தற மாதவா
அறுப்பு அறுக்கிற சோதவா
மாட்ட மடக்குடா மாதவா.
முக்கோடு தக்கோடு 
மூணாம் பெரியகோடு 

நாங்கு நடலம் 
தேங்கா புடலம் 
அஞ்சல் கொஞ்சல் தட்டாத்தி 
அழுக்கெடுக்கும் வண்ணாத்தி
கோர் கோர் சித்தப்பா 
கூட வாடா பெரியப்பா… 

சின்ன வட்டமாய் அஞ்சாறு பெண்கள் உட்காரப் பாடியாடி ஏழாங்காய் ஆடிக் கொண்டிருந்தாள் ராணி. 

“ராணி.உங்கம்மை கூப்புடுது”

“ப்ச்..விடு மல்லி.அதுக்கு வேற வேலை இல்ல.” 

“ஏட்டி ராணி உள்ள வாட்டி.கஞ்சி குடுக்கோணும்.”

“போம்மா..ஆட்டத்தைக் கலைக்கறியே நீயே குடு.”

காதில் விழுந்தும் எழுந்திரிக்கப் பிடிக்காமல் விளையாட்டு மும்முரம்.

அலுத்துப் போனாள் முனியம்மா. பிலாக்கணம் வைத்து அங்கேயே சுருண்டு கொண்டாள். அவளுக்கும் பசி தான். எத்தனை நாள் தான் வயிற்றுப் பசிக்கு வெற்று மண்கலயத்தைக் காட்ட? இப்போதிருக்கும் கஞ்சி மூணு லோட்டாதான் தேறியது. அவளுக்கு இல்லை. 

மகன்களிடம் மடிப்பிச்சை மாதிரி காசு கேட்டுப் பார்த்தாயிற்று. சுரேசும் சம்பத்தும் கிடைக்கும் கூலியில் பத்து ரூபாயை அவள் மடியில் விட்டெறிகிறார்கள். அது ஏழு வயிற்றுக்கு எப்படி போதும்? மிச்சமெல்லாம் பீடி சிகரெட் கஞ்சா. வாய்க்கு இனிப்பு, வாரத்துக்கு அஞ்சாறு சினிமா; பான்பராக் என்று பதினெட்டு வயது இள வட்டப் பசங்களுக்குச் செலவா இல்லை? 

சின்னராசு – ஒவ்வொரு அலுவலகமாய் ஏறி இறங்குகிறான். போகிற இடமெல்லாம் கைவிரிப்புதான். எம்.ஏ. படித்தவர்கள் கூட பியூன் வேலைக்கு வந்து தவமிருக்கிறார்கள். 

“எந்த வேலையா இருந்தா என்ன? சோறுதிங்கச் சம்பளம் வேணும். ரூபா நோட்டுல முத்திரையா இருக்கு- இது பியூன் நோட்டு இது பணக்காரன் நோட்டுன்னு? அவனுக்கும் ஒரே அம்பது ரூவா நோட்டுதான் நமக்கும் ஒரே அம்பது ரூவா நோட்டுதான்.”

அவர்களின் வியாக்கியானம் நிதர்சன வாழ்வைச் சொன்னது. 

கஞ்சி குடிக்கப் பிடிக்காமல் – கால் போன போக்கில் நடந்தான் சின்னராசு. குப்பத்தின் கூவத்தைத் தாண்டிப் போகும் பாதையில் சின்னப்பொண்ணுவைப் பார்த்தான். 

பொதுவாக நிறையத்தரம் அங்கே நின்று பேசியிருக்கிறார்கள். குப்பத்துக்குள் பேசினால் – பார்ப்பவர்கள் போய் இருசப்பன் காதில் போட்டு வைப்பார்கள். 

“வீட்டு ஆம்பளை மொடங்கியாச்சுன்னா. ஆணு பொண்ணு அடங்காம அம்புட்டுமல்ல தறிகெட்டு அலையுதுங்க. தெரு நாய்ங்க.த்தூ. உப்பு போட்டுச் சோறு தின்னாவுட்டுல ரோசம் இருக்கும்? முறைப் பொண்ணுன்னா என்னா? ஆம்பளை மூஞ்சில சிரிப்பு தட்டுவாணி ஆடுது தூத்தேறி.”

இப்படி நாலும் கேட்க வேண்டியிருக்கும். இருசப்பன் உப்புக் கண்டை போடுவது மாதிரி வெட்டிப் பேசுவான். 

கூடையில் காகிதப் பொட்டலங்கள். 

“அரிசி..கேவுறுன்னு வாங்கியாரேன்..ஆமா..ஏதாச்சும் கெடைச்சுதா?” 

“ப்ச..வேலை என்ன முருங்கைக் காயா? வேணுங்கறப்பத் தொரட்டிக் கொம்பாலப் பறிச்சுக்கிட? எங்கிட்டுப் போனாலும் பெரிய படிச்சவனுங்கள்லாம் எனக்கு மின்னாடி நிக்கானுவ. எம்படிப்புக்கு எவன் வேலை வச்சிருக்கான்?” 

“மாமா தொளிலு நா பண்றேன். ஆ ம்பளை ஒன்னால முடியாதாங்காட்டியும்? எங்கூட ரெண்டு நா வா..பொணம் எரிக்க, சாம்பல அள்ளன்னு கத்தாரேன். நெளிவு சுளிவு புரிஞ்சுட்டா கைல காசு…” 

“ந்தா புள்ள –நீயும் பைத்தாரியாட்டம் பேசாத நடக்கறத பேசு – நாரத் தொளிலு வேணாம்.”

“ஆமாமா.பன்னீர்ல குளிக்கறவக நாரத்தொளிலு பண்ணலாமான யோசிக்கறா.நீ வேற ஆத்திக்கிடமாட்டாம ஒளராத.” 

எரிச்சலாய்க் கிளம்பினாள். 

வாடியிருந்த அவனின் முகம் ஏதோ சொன்னது. 

“இந்தா..பத்து ரூவா. செலவுக்கு வச்சுக்க..நேத்து ரெண்டு பொணம் விழுந்துச்சு, எனக்கு. மாமா சொஸ்தமாகி வார வரைக்கும் நெறைய வரும்..” 

முந்தானை முடிச்சிலிருந்து எடுத்தாள். 

“அட வேணாம்புள்ள. பொட்டச்சிக்கிட்ட காசு வாங்குற போக்கத்த பயலா நானு?” 

“சும்மா ஒண்ணுந் தரல்ல. கடன்தேன். நீ சம்பாரிக்க ஆரம்பிச்சப்புறம் திருப்பிக்குடு..ஆமா.மாமாக்கு எப்படிருக்கு? நடமாட்டம் இருக்கா? சோறு செல்லுதா?” 

“நடமாட்டம் என்னா நடமாட்டம். வெளில போக வர பத்துத்தப்படி நடக்காரு. கால்ல நல்ல அடில்ல? எலும்பு முறிஞ்சாவுட்டு இன்னும் சேரல்லியே. ரொம்ப நேரம் நிக்கமுடியாது. ஆட்டங்காணுது. சோறு செல்லுதுதான்.. சோறு தான் இல்ல..” 

கீழேயிருந்து சின்னக் கற்களைக் கூவத்தில் எறிந்தபடி புலம்பினான் சின்னராசு. 

“ஒண்ணுட்டு ஒரு நா வெஞ்சனம் பண்ணித் தாரேன்னா ஒங்கூட்டுல ஒத்துக்க மாட்டாக. என்னிய வேணாம் வேணாம்னுட்டுத் தள்ளிவச்சாக, அத்தையும் மாமாவும். மாமா அடிபட்ட சேதிய நாந்தானே சொன்னேன்? அதைத் தள்ளி வக்க முடிஞ்சுதா?” 

ஆற்றாமை சின்னப்பொண்ணுவின் குரலில். 

“ப்ச. ஒம்பேச்சு எடுத்தாவுட்டு…சென்மப் பகையாட்டம் கொரவளையப் புடிக்குறாங்க..என்னத்தைச் சொல்ல?” 

“மாமாவ ஒருநடை பாக்கோணும். விசாரிக்கோணும். ராணி பொண்ணு முந்தி இஸ்கோலு போக வர பாப்பேன். பேசாக்காட்டியும் பார்த்தாப் போறும்னு இருக்கும் இப்ப.கண்ணு அவளைத்தேடுது” 

ஆசாபாசமாய்ப் பேசும் சின்னப் பொண்ணுவைப் பார்க்கபார்க்க நெஞ்சுமுழுக்க ஆசை கும்மியடித்தது அவனுக்கு. 

என்ன பண்ண? 

‘இந்த சென்மத்துல ரெண்டு வூடும் ஒட்டிக்குமா? ஒண்ணுக்குள்ள ஒண்ணாவுமா? எந்நெனப்பு நெசமாவுமா?’ 

பாலத்தைத் தாண்டிப் போன சின்னப் பொண்ணுவையே பார்த்து நினைத்தான் அவன். 

பத்து ரூபாய் பெரிய உதவியாய் இருந்தது. 

டீக்கடையில் ரெண்டு பொறை ஒரு டீ, பெட்டிக்கடையில் காரமாய்க் கண்ணில் தண்ணீர் வர ஒரு சுருட்டு. இதையெல்லாம் முடித்து.மிச்ச அஞ்சு ரூபாயைச் சட்டைப் பையில் வைத்தான். நாளைக்கு டீ செலவுக்காச்சு. அப்புறம் என்ன பண்ண? குழம்பியபடியே நடந்தான். 

“ராணி சடங்குச் சீருக்கு ரூபா வேண்டி ரத்தம் குடுத்தேனே. மூணு மாசமாயாச்சே.. நாளைக்கு குடுக்கலாமா? சுளுவா ரூபா கெடைக்கும்..” 

நினைத்தபடியே பழனியிடம் உட்கார்ந்து ஓசிப் பேப்பர் படித்தான்.

பயாஸ்கோப்புக்காரன். பிளாஸ்டிக் சாமான்கள் வண்டிக்காரன். தண்ணீர் எடுத்து வரும் பெண்கள். இப்படி வேடிக்கை பார்த்தான் சின்னராசு அரசமரத்தடியில் உட்கார்ந்து எந்த வேலைக்குப் போக என்று கனவு கண்டு தூக்கம் போட்டான். 

வெயில் ஜாஸ்தியாய்க் கொளுத்தியது. வீட்டில் போய்த் தூங்கலாம் என்று வீட்டுக்குத் திரும்பி நடந்தான். 

தூரத்திலேயே பார்த்து விட்டான் 

கந்து வட்டிக்காரன் கோலால் தட்டிக் கொண்டே நாக்கைப் பிடுங்குவது மாதிரி கேட்டுக் கொண்டிருந்தான். 

வாசலில் ஏழாங்கல் ஆடின ராணி எழுந்து உள்ளே ஓடினாள்.

காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு ஈயம் காய்ச்சி ஊற்றுவது மாதிரியான வசவுகள்–திட்டுக்கள், ஏசல்கள் அதை வேடிக்கை பார்த்த அக்கம் பக்கத்து ஆட்கள், சின்னஞ்சிறுசுகள் கிழம் கட்டைகள். 

“த்தூ… நீயெல்லாம் ரோசமுள்ள மனுசனாங்காட்டியும்..” 

இருசப்பனைப் பார்த்து..வட்டிக்காரன் துப்பினது. தன் முகத்திலேயே காறி உமிழ்ந்த மாதிரி அதிர்ந்தான் சின்னராசு. 

– தொடரும்…

– தகனம் (நாவல்), முதற் பதிப்பு: 2005, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *