கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2023
பார்வையிட்டோர்: 4,548 
 
 

(2005ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம்-1

தஞ்சம் உலகினில் எங்கணும் இன்றித் 
தவித்துத் தடுமாறி, 
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன் 
பாரம் உனக் காண்டே! ஆண்டே! பாரம் உனக்காண்டே! 
-பாரதியார்
 

“ஏலேய் சின்ராசு, தண்ணி பீய்ச்சியடிக்குது பாரு. செங்கல்ல அடுக்காம விட்டியோ? கூட ரெண்டு வரட்டி வையி. கட்டையும் வையி இல்லேன்னா தண்ணிய இழுக்காது. சீக்கிரம் வேகாது. மணிக்கணக்காவா நிக்க. ஒரு பொணம் எரிக்க..?” 

இருசப்பனின் பதட்ட அதட்டல் கேட்கும் முன்பாகவே சடாரென்று விலகிப் பின்னால் வந்தான் சின்னராசு. எரிந்து கொண்டிருந்த பிணத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பிய திரவம் இவன் மீது தெளித்து விழுந்தது. துர்நாற்றம் வயிற்றைப் புரட்டியது; குமட்டியது. குடல் வெளியே வந்து விடும்படி ஓங்கரிப்பு வந்தது. 

“உவ்வேவ்” என்று ஓங்கரித்தான். கிறக்கமாய் வரவே கையிலிருந்த வெட்டிக் கம்பைப் பிடித்தபடிக் குத்துக்காலிட்டு உட்கார்ந்தான் சின்னராசு. அனலின் தகிப்பு முகத்தில் வீசி உடம்பிலும் எரிச்சலைக் கிளப்பியது. தலை சுற்றியது. கண் இருண்டது. முதல் தடவையாய்ச் செய்யும் இந்த ரெண்டு மணி நேரத்துக்கே ஆளை இப்படிப் புரட்டிப் போடுகிறதே. அப்பா எப்படி இத்தனை வருஷமும், இந்தக் சகித்தார்? 
புகையும், தணலும் எப்படிப் பொறுத்தார்? யார் யார் வீட்டும் பிணங்களையோ இத்தனை அக்கறையாய்க் கிளறிப் போட்டு புரட்டிப் போட்டு தலையோடு காலாய் வேக வைக்கிறாரே. .. எப்படி? எப்படி? 

“தொழில்ல அக்கறை வேணும் சின்ராசு. கூடவே வந்து தொழிலு கத்துக்கோன்னு கத்தினப்போ.. வேணாம்னு உதறின. இப்பப்பாரு ஒண்ணுந்தெரியலை. இத்தனி நேரம் எரிச்சும் முழுசா வேகலை பொணத்தோட பவுசுபவுசுன்னு கொஞ்சினா இருவத்து நாலு மணிநேரமும் இது வேகாது. பால் தெளிக்க உறவு சனம் வரும் போதும் வேக வைச்சிட்டு நிக்கவா…?” 

வரட்டியை மேலே அடுக்கினான். மண்ணெண்ணையும் சம்பிரதாயத்துக்காக உறவுக் கும்பல் தந்திருந்த சின்ன டப்பா நெய்யையும் வீசித் தெளித்தான் இருசப்பன். 

புகையும் நெருப்புமாய்க் குப்பென்று ஆளுயரத்திற்குக் கிளம்பியது. மறுபடியும் சடலத்திலிருந்து பீறிட்ட திரவம்..இருசப்பன் மீது தெளித்தது. அதைப் பற்றிய, பிரக்ஞையே இல்லாமல் வெட்டிக் கம்பால் கால் பகுதி, மார்புப் பகுதி, தலைப் பகுதி இப்படிக் கிளறி விட்டான். 

“ஏழை பாழை யாராயிருந்தா என்ன? மிச்ச சோகத்தோட உறவுக்காரங்க வருவாங்களே. எலும்புஞ் சாம்பலுமா கலயத்துல நல்லபடியாச் சேத்துத் தர வேணாமா…? நகரு..நகரு..வேலை கிடுகிடுன்னு ஆவணும்…. நாத்தம் நாத்தம்ன்னு மூக்கைப் புடிச்சு நின்னா சோலியாகுமா? சோறு கிடைக்குமா..?” 

சடாரென எழுந்து உட்கார்ந்த பிணத்தை வெட்டிக் கம்பால் அழுத்திக் கீழே சாய்த்தான் இருசப்பன் சாமானியமாய்க் கீழே தள்ள முடியவில்லை உதட்டைக் கடித்து, மூச்சை ‘தம்’ பிடித்து வயிற்றை எக்கித்தான் அமுக்க முடிந்தது. 

பார்த்துக் கொண்டிருந்தான் சின்னராசு. காற்றை நிறைத்த துர்நாற்றத்தில் சுவாசிக்கவே முடியவில்லை அவனால். தலை சுற்றிக் கண் இருண்டு மயக்கமாய் வந்தது. ஐம்பத்தஞ்சு வயசு அப்பாவுக்கு இருக்கும் வலு எனக்கில்லையா..? இருபத்து மூணு வயசில் என்னால் எப்படிக் கம்பை அமுத்திப் பிடிக்க முடியவில்லை? கை வலி உயிர் போகிறதே..அப்பாவால் எப்படி முடிகிறது…? 

“ஏலேய் சின்ராசு, ஒடம்பு பலமிருந்தால் போதும். இந்தச் சோலிய சுளுவாய்ப் பண்ணலான்னு நினைக்காதே. மனசு பலம் தான் வேணும். செத்தவனெல்லாம் எஞ்சொந்தம்னு நினைப்பு வேணும். எந்த ஜென்மத்தில எனக்காக நீ அடுப்புப் பத்த வச்சியோ..இந்த ஜென்மத்துல உன்னை அனுப்ப நெருப்புப் பத்த வக்கேன்னு நினைப்புவேணும்.குலத் தொழிலு கூட எல்லாருக்கும் வந்துடுமா என்ன.? தொழிலு சுத்தம் வேணும். மனசு சுத்தம் வேணும். பொறுப்பு வேணும். அரைகுறையா. முன்னப் பின்ன முடிக்க… மத்த சோலியா இது? ம்?” 

கண்கொட்டாமல் பார்த்த மகனின் மனசு ஒட்டம் புரிந்த ரீதியில் சொன்னான். அக்கறையாய்ப் புரட்டிப் போட்டான். 

மேலே வெயிலின் உக்கிரம்.
கீழே அனலடிக்கும் நெருப்பு. 
எதுவுமே இருசப்பனைச் சுடவில்லை.
வேலையிலேயே குறியாய் இருந்தான்.. 

“நீ வேணா வெளில போய் நில்லு. இதை முடிச்சுட்டு வாரேன்.” மகனின் இருப்புக் கொள்ளாத நிலை புரிந்தது இருசப்பனுக்கு. 

“சின்னப்புள்ள நீ. இளரத்தம். அப்பன் தொழிலு அசிங்கம் ஆபிசர் உத்தியோகம் தான் அழகுன்னு ஒத்தக்கால்லநின்ன. கைல தொழிலு எப்பவுமே சோறு போடும். நாத்தம் புடிச்ச தொழிலானா என்ன? இது குடுக்கிற சோறு நாறுமா? துணி நாறுமா? நாம தான் ராஜா. எவனுக்கும் கை கட்டிச் சேவகம் பண்ணாத உத்தியோகம். புண்ணியம். ஒவ்வொருத்தனோட மொவத்தையும் உலகத்திலேயே கடைசியாப் பார்த்து அனுப்பற பாக்கியம் எத்தினி பேருக்கும் கெடைக்கும்லே? க்க்லெ லொக் .” 

சிதையிலிருந்து ரெண்டெட்டு தள்ளி நின்று இருமினான் இருசப்பன். இழுத்து இழுத்து வயிற்றை எக்கி எக்கி இருமியதற்குள் குடல் வாய் வழியே வெளியே வந்துவிடும் போலிருந்தது. 

கேட்பதற்கும் நாரசாரமாய் இருந்தது. வறட் வறட் வறட்..டென்று தகரத்தை கல்லால் தேய்ப்பது மாதிரி.. கேட்பதற்கே காது வலித்தது. 

“மாத்திரை சாப்பிடல்லியா..? இவ்ளோ இருமற..?” “ப்ச.. மருந்துக்கு கேக்கிற நோவு இல்ல இது..பரம்பரை நோவு. உங்க தாத்தாவையும் காசம் தானே அரிச்சிட்டிருக்கு… வாரிசுக்கும் வந்தாச்சு. சுடுகாட்டுப் புகைக்கு ஆஸ்த்துமா தானே தோஸ்த்…யாரு முந்தின்னுதான் தெரியல்ல? அப்பாவா? நானா..?” 

கேட்டதும் திக்கென்றானது சின்னராசாவுக்கு.

அப்படியென்றால் அடுத்தது நானா? எனக்குமா.? 

“எத்தினி வருசமா இந்த மசானப் புகைல நிக்கேன். மழை, வெயிலுன்னு தள்ளுபடி உண்டா? நல்ல நாளா? கெட்ட நாளா? எல்லா நாளும் சுடுகாடு தான வீடு? நா இங்கப் பொணம் எரிச்சாத்தான் வீட்டுல அடுப்பெரியும்.” 

வாய் பேசப் பேசக் கை பரபரப்பாய் இயங்கியது. 

“நேத்துச் சாயங்காலம் ஏழு மணிக்குச் சிதைல ஏத்துனது இதோ சூரியன் உச்சிக்கு வந்துட்டான். ராவெல்லாம் காத்து அணைச்சுது. காலைய மழை மூட்டம். இப்பத்தான் பத்திச்சு.நாஸ்டா துன்னலே. டீத்தண்ணி கூடக் குடிக்கலை. மயக்கமா வருது…” 

தோளிலிருந்த அழுக்குத் துண்டால் வியர்வையை, அழுந்தத்  துடைத்தான் இருசப்பன். 

“நீயும் ஏன் கஷ்டப்படறே. வெளில நில்லு வாரேன். ஆறடியாயிருந்த பிணம் ஒன்றுமேயில்லாமல் கருகி, சுருங்கி, கரிக்கட்டையாய் வெந்துவிட துர்நாற்றம் சுமந்த காற்று மேலே மேலே மெல்ல கிளம்பியது. 

அந்தச் சுடுகாடு முழுதும் மண்மேடுகள். அங்கங்கே பிணங்களை எரிந்து கொண்டிருக்க, வேறு வெட்டியான்களும் அவரவர் வேலையில் மும்முரமாயிருந்தார்கள். கூடவே மகன் அல்லது தம்பி அல்லது அண்ணன் வந்தால்தான் வயிற்றுக்கு கஞ்சி. யாராவது துணைக்கு உதவ, சின்னப்பசங்கள் கூட வெட்டிக் கம்பை கமாய்ப் பிடித்துப் பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் போட..சின்னராசு மாதிரி வெறுப்பும் எரிச்சலும் அருவருப்பும் அவர்களிடம் இல்லை.

அங்கங்கே ரெண்டு மூணு காக்கைகள். நாலைந்து நாய்கள் இறுக்கமான காற்று. இலையசையாத மரங்கள். சூழல் கூட உயிரற்று இருந்தது போலிருந்தது சின்னராசுவுக்கு. வழியில் மரத்தடியில் சின்ன பையன் மணி. 

“என்ன மணி? இங்கியே தின்றே? அவ்ளோ பசியா?”

“இல்லண்ணே..வீட்டுல தம்பி தங்கச்சிங்களுக்குப் பங்கு குடுக்கனு கொஞ்சம் தான் எனக்குக் கிடைக்கும். அதான் ஒருவாய் இங்கரே தின்னுக்கறேன்…” 

வாய் நிறைய அடைத்துக் கொண்டான். 

காக்கா பலகாரம். 

ஜிலேபி, மைசூர்பாகு, லட்டு இப்படி இனிப்புகள். வடை, முறுக்கு. தட்டை கார வகைகள். கக்கத்திலிருந்த துணிப்பையில் தேங்காயைத் திணித்து எழுந்தான் மணி. 

“இந்தாண்ணே ஒரு வாய் தின்னு.நெய்வாசம்.” 

மைசூர்பாகை நீட்டினான். குச்சி குச்சியாய்க் கைகள், மெல்லிய கால்கள். ஒட்டிய கன்னத்தில் தெறித்து விழும்படிக் கண்கள். கிழிஞ்ச டிராயர் சட்டை பக்கத்து வீட்டுப் பையன். பள்ளிக்கூடம் படிப்பு எதுவும் கிடையாது. இந்த வயசிலேயே குலத்தொழில். 

“வேணாம்…நீயே தின்னு மணி…”

“வீட்டுக்காண்ணே?” 

“ம்…வர்றியா..?” 

“இல்ல .இப்பத்தான் புதைக்க ஒரு கிராக்கி வந்திருக்கு. குழி வெட்ட அப்பாவுக்கு ஒரு கை குடுக்கணும்… “

கேட்டபடி நகர்ந்தான் சின்னராசு. 

“அண்ணே.” 

“என்ன..?” 

“அத்தை அரிசி எடுத்தாரச் சொல்லிச்சு. வந்தாத்தான் கஞ்சியாம்..”

மணியிடம் அம்மா தான் சொல்லிவிட்டிருக்கிறாள். வாய்க்கரிசி வந்தால்தான் வயிற்றுக்கு கஞ்சி.

‘டுர்ர்ர்….’ ரென்று வெட்டிக் கம்பை வண்டி மாதிரி ஓட்டி ஓடினான். 

மெதுவாய் நடந்து வெளியே வந்தான் சின்னராசு.

உச்சி வெயிலில் ஊர் காய்ந்து கொண்டிருந்தது. 

என்ன வெயிலடித்தாலும் உச்சியில் வாங்கிக் கொண்டு கடைகள், மக்கள், மாடுகள், நாய்கள், வண்டிகளும் வேகத்தோடு. 

போன உயிர் வந்தது மாதிரி இருந்தது சின்னராசுவுக்கு. வெளியேயிருந்த காற்றில் உயிர்த்துடிப்பும் ஜாஸ்தியாயிருந்தது மாதிரிப்பட்டது அவனுக்கு. உயிர் வாசனையுள்ள காற்று. துடிப்புள்ள தென்றல். காற்று கூட இடத்துக்கேற்ற மாதிரி குணம் மாறுவது ஆச்சர்யம்தான். 

கடைசியாய் வரும் வரைக்கும் இந்த இடத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஓடத் தானே வேண்டும் என்பது புரிந்த மாதிரி எல்லோரும். மூச்சு விட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள். 

வாசலில் படுத்திருந்த நாய் மெதுவாய்த் தலை தூக்கி இவனைப் பார்த்து மறுபடியும் படுத்துக் கொண்டது. 

அப்புறம்…படுத்த நிலையிலேயே ரெண்டு தரம் மூக்கைச் சுருக்கி மோப்பம் பிடித்தது. அசுவாரசியமாய் எழுந்து பக்கத்தில் வந்து அவவைச் சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்தது. இவன் மீது வீசிய பிண வாசனை அதற்கும் பிடித்திருந்தது. 

கசகசவென்று எரிச்சலாயிருந்தது சின்னராசுவுக்கு. ஊரிலிருந்து காலையில் வந்ததுமே ‘அப்பாரு… நேத்து ராவே மயானத்துக்குப் போச்சி, இன்னங் காங்கலே. நீ போயி பார்த்து வா தம்பி..’ என்று முனியம்மா சொன்னதும் இங்கே வந்து விட்டான். குளிக்கவில்லை. சாப்பிடவில்லை. எத்தனை சோப்புப் போட்டுத் தேய்த்தாலும் வீச்சம் போகுமா? அவன சுற்றியிருந்த காற்றிலும் நாற்றம் பிரிக்க முடியாத மாதிரி கலந்திருப்பதாய் உணர்ந்தான். 

மரத்தடியில் நின்று கொண்டான். 

எதிர்ச் சாரியிலிருந்த டீக்கடையில் சின்னப் பொண்ணு டீ குடித்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்தே கண்ணைச் சுருக்கி, இவனைப் பார்த்து அடையாளம் கண்டதும் சிரித்தாள். 

அதிர்ந்து போனான் சின்னராசு. 

அத்தியாயம்-2

இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான்
இனிமையுடைத்து. காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று. திங்களும் நன்று. 
-பாரதியார். 

“டீ குடிக்கிறியா?” 

வாகனங்களின் சப்தத்தை மீறி, சாலையைக் கடந்து அவனின் காதில் விழும்படி உரத்துக் கேட்டாள் சின்னப் பொண்ணு. 

அவளின் கத்தலில் திடுக்கிட்ட நாய்.கண்விழித்து லொள் லொள்ளென்னு குரைத்து விட்டுப் படுத்துக் கொண்டது. 

“டீ வோணுமா?” 

மறுபடியும் சைகை செய்தாள் சின்னப் பொண்ணு. டீயா? ஐயோ… பைசா? என் கையில் வெறும் எட்டணாதான் இருக்கிறது. அப்பாவிடம் சில்லறை இருக்குமா? இவள் வாங்கித் தருவாளா? பொட்டச்சி வாங்கிக் கொடுத்து நான் குடிக்கவா? 

“மாமா இருக்காவுளா உள்ளாற?” 

மறுபடியும் கத்தல். 

“ம்…” 

தலையசைத்த போது அவனைக் கடந்து லாரி ஒன்று போனது பெரும் சப்தத்துடன் 

“ரெண்டு டீ என் கணக்கில எழுதிக்கோ நாயரே.” 

கடைக்காரனிடம் அவள் சொன்னது கேட்டதும் தான் கவலை விட்டது. டீ குடிப்பதற்கு முன்பே டீ குடித்த நிம்மதி. 

ஆனாலும் நெருடல் அவளின் கணக்கில் டீ குடிக்க அப்பா ஒத்துக்கொள்வாரா. காரி உமிழ்வாரே? என்ன பண்ணலாம்? என்னத்தான் மாமன் மகள் என்றாலும் எதிரும் புதிருமான உறவாயிற்றே?. 

ரெண்டு வருஷம் முன்னால் புத்தி பேதலித்துப் போய், திடீரென்று கோவிந்தன் காணாமல் போன நாளிலிருந்து இவளும் ரெண்டு தங்கைகளுமாய்ச் சுடுகாட்டு வேலை தான். ஆண் வாரிசு இல்லாததால் குலத்தொழிலைப் பெண்கள் செய்கிறார்கள். 

ஒரே ஒரு நாள் வந்ததற்கே எனக்குக் குமட்டுகிறது. மயக்கமாய் வருகிறது. தலை சுற்றுகிறது. கண் இருண்டு போகிறது. இவள் எப்படிச் சுடுகாட்டு வேலை செய்கிறாள்? ஆச்சரியமாயிருந்தது சின்னராசாவுக்கு. அதைவிட ஆச்சர்யம் ரெண்டு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தை இல்லை. ஒட்டு உறவு இல்லை. கொடுக்கல் வாங்கல் இல்லை. விட்டேத்தியாய் இருக்கும் நிலையில் சின்னப் பொண்ணுவின் சிரிப்பு. டீ உபசரணை எல்லாமே புதுசாய், வித்தியாசமாய்ப் பட்டது சின்ன ராசாவுக்கு. 

“அத்தே சவுக்கியமா?”

ஏதேதோ நினைத்தவனைக் கலைத்துப் போட்டது சின்னப் பொண்ணுவின் குரல்.

இதற்குள் சாலையைக் கடந்து இவன் பக்கம் வந்திருந்தாள். கேட்டது நினைவில்லாமல் அவளையே வெறித்தான் 

“அத்த. சுகமா? 

அவள் – மறுபடியும் உரத்துக் கேட்ட போது குழப்பம் அவனுக்கு. பேசுவா? பேசியது தெரிய வந்தால் அம்மா கோவிக்குமே? அப்பா எரிச்சல்படுமே? என்ன பண்ண? பதில் சொல்லவா? 

“காது கேக்கலையா? அத்த எப்படியிருக்காக?”

“ம்..” 

“யம்மாடியோவ்.. இந்த ஒத்த வார்த்தைக்கி இம்புட்டு யோசனையா? உருப்பட்டாப்புலதான்..”

அவனின் கவலை அவளுக்கு எங்கு புரியும்? ரொம்ப வருஷம் கழித்து அவள் குரலைக் கேட்டதில் சந்தோஷம் கொஞ்சம் எட்டிப் பார்த்தது 

என்ன தான் குடும்பப் பகை என்றாலும் மாமன் மகள் உறவு சுகம் தானே… ரெண்டு வருஷம் முன்னால் கூட நேருக்கு நேர் பார்த்தாலும், முகம் திருப்பி. வெறுப்புக் காட்டி, உதடு பழித்து ரெண்டு துருவமாய் விலகிப் போனவர்கள் தான் ரெண்டு குடும்பமும். ஏதோ மரியாதைக் குறைவான வார்த்தையை யாரோ சொல்லப் போக எண்ணையும் தண்ணீருமாய் நிற்கிறது ரெண்டு குடும்பமும். 

இத்தனை ஏன்? 

கோவிந்தன் காணாமல் போனதற்குக் குப்பமே திரண்டு போய் விசாரித்தது. போய் விசாரித்து வந்தவர்களெல்லாம் இவர்களின் காதில் விழும்படி இருசப்பனின் குடிசை வாசலில் நின்று கூடிச் சாடை பேசியது நினைவிருக்கிறது. 

“ஒண்ணுமே சொல்லாமயா ஒருத்தன் ராவிருட்ல ஓடிப் போயிடுவான்? திடுதிப்புன்னு ஒரு மனுசன் காலங்கார்த்தாலக் கரைஞ்சுடுவானா என்ன? அண்ணங்காரன் மேல அக்கறை வேணும்ல.” 

இப்படி ஒரு கும்பல். 

“ஏண்டி. முன்னப் பின்ன ஒண்ணுஞ் சொல்லலயாமே கோவிந்து? கண்ணு தொறந்து பாக்கறதுக்குள்ள காணாடைஞ்சுட்டான்…”

இப்படி ஒரு கும்பல் 

“அத்தினியும் பொட்டைக் குட்டிங்க. கரைசேக்காம திமிசுக்கட்டையாய் நிக்குதுங்க. கரை சேர்க்கல. கை தூக்கி விடல்ல. கல்யாணங் காச்சி காங்கல்ல..என்னாங்கடி பண்ணப் போறீக..” 

இப்படி ஒரு கும்பல் ஆவலாதி பேசியது. 

“கட்டிக் காக்க வேண்டிய உடம்பொறப்பும் வெட்டிமுறிச்சி நிக்குது. இனிமேயாச்சும் ஒட்டப் பாருங்களேண்டி..” 

இப்படி ஒரு கும்பல் அவல் மென்றது. 

ஆனாலும் இருசப்பனின் குடும்பம் அசரவில்லை. நல்லது கெட்டது எதற்கும் வீடு தேடிப் போய் விசாரித்ததேயில்லை. விட்டேத்தியாகவே ஓட்டியாயிற்று. 

”த். தூ.. சோத்துல உப்புப் போட்டு திங்கறவன் அந்த வாசப்படி மிதிப்பானா..?” 

என்று காறி உமிழ்ந்து கரித்துக் கொட்டியது உறவு. ரத்தபாசம் விசாரிப்பு எதுவுமில்லாமல் ஓட்டியது மாறிவிட்டதா? சின்னப் பொண் விருந்துபசாரமும் சிரிப்பும், விசாரிப்பும் அப்பா பார்த்தால் என்ன சொல்லுமோ? கையிலிருக்கும் வெட்டிக்கம்பால் உயிரோடு புரட்டிப் போடுமோ? பொலி போடுமோ? – அம்மாவுக்குத் தெரியவந்து கோபிப்பாளா? திட்டுவாளா?

“நீ ஏண்டா வெக்கங் கெட்டுப் பேசின? பொட்டப்புள்ள பல்லிளிச்சா மயங்கிடுவாயா? பொசக்கெட்டவனே.” 

இப்படி ஏசுவாளா? 

“என்னாச்சு? இவளோட கதை பேசிட்டு நின்னா.. அப்பங்காரன் என்ன சொல்லுவான்னு பயமா இருக்கா? அத்தைக்காரி தட்டுக் கோலால இளுத்துருவான்னு நடுக்கமா?” 

சின்னராசு திடுக்கிட்டான். அதெப்படி நான் நினைப்பதையெல்லாம் இவள் சொல்லிவிடுகிறாள்? 

“இப்ப எதிரியா அடிச்சிக்கிட்டாலும்.. சின்னப்புள்ளையா அத்தை மடில உருண்டது மறக்கல்லியே… மாமா தோள்ல தலை சாஞ்சி ஒறங்கினதும் மறக்கல்லியே… ரெண்டு வார்த்தை மாமம் பொண்ணுங்க எப்படியிருக்குன்னு கேக்கப்படாதோ? ஓங்க அத்தைக்காரி எப்படியிருக்குன்னு கேக்கப்படாதோ?. அப்பா.. காணாடைஞ்சதிலேர்ந்து அரை உசிராக் கரைஞ்சுட்டா அம்மா அதை விசாரிக்கலாமே.. ஏன் இப்படி மொகஞ் சுளிக்கீக? கடுவம் பூனையா மொறைக்கீக? எதிரிப் பொறப்பாட்டம் பாரா மொவம் எதுக்கு? கட்டைல போற வரைக்கும் வெட்டு குத்துனு நிக்கவா?” 

படபடவென்று பொரிந்தாள் சின்னப்பொண்ணு. 

கறுப்பு தான் அவள். வெயிலுக்கு முகம்- எண்ணெய் வழிந்து, சாயம் போன நீலப்புடவையும் மெலிந்த உடம்புமாய் இருந்தாலும் இத்தனை பக்கத்தில் மாமன் பொண்ணைப் பார்ப்பது ஒரு மாதிரியாய்த்தான் வந்தது சின்னராசுவுக்கு. திரும்பி அப்பா வருகிறாரா என்று பார்த்து, எச்சில் முழுங்கிப் பதில் சொல்ல எத்தனிப்பதற்குள்- 

“ம்ஹும். மாமா வரல்ல. பயமில்லாம பதிலச் சொல்லலாம்..”

களுக்கென்று சிரித்தாள். 

சிரிப்பால் உச்சி வெயிலுக்கும் ஜில்லென்று குளிர்ந்தது சின்னராசுவுக்கு ஆனாலும் பதில் சொல்லவோ பேசவோ வார்த்தை கிடைக்கவில்லை. 

“அப்ப சேரி கெளம்பிடலாம். அப்பனுக்கு நெருப்புல வேல ராவாப் பகலா நெருப்புல நிக்கணும். மவனுக்கு மாமன் பொண்ணோட பேசினாவுட்டு நெருப்புல நிக்கற மாதிரி இருக்கா?” 

எரிச்சல்பட்டாள். 

“நா வாரேன்…” 

நகர எத்தனித்தாள். 

“எம்புட்டோ பாடு பேசணும். ஒம்ம மனசு ஒப்பிப் பேசினாத்தான..? பொட்டச்சி எம்புட்டுதான் வளைச்சி வளைச்சிக் கேள்வி கேக்க.” 

“ம்…ஆங்.. அது… அது வேறொண்ணுமில்ல சின்னு, இம்புட்டு வருஷங் களிச்சுப் பேசுறதில கையும் ஓடல்ல…காலும் ஓடல்ல..” 

“செரி… செரி…கையுங்காலும் ஓட ஆரம்பிச்சப்புறம் சொல்லியனுப்பு. வந்து பாடு பேசறேன். ஆமா எஞ்செல்லப்பேரு கூட நினைப்பிருக்கா..?” பேச்சுக்கு பேச்சு நக்கல், கிண்டல். சிரிப்பு ‘சின்னு’ என்று சின்னராசு கூப்பிட்டதில் அவளுக்கும் சந்தோஷம். 

பேசும் போதே… ஓர் ஊர்வலம் வருவது மாதிரி தூரத்தில் சப்தம் கேட்டது. பேச்சை நிறுத்திப் பார்த்தார்கள். தாரை, தப்பட்டை, வெடிவேட்டு, பசங்கள் ஆட்டம், தெருவெல்லாம் பூ இறைப்பு, பூப்பல்லக்கு இப்படிக் கொண்டாட்டம். வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஊர்வலம் கடப்பதற்காகக் காத்திருந்தன. ஊர்வலச் சப்தத்தில், படுத்திருந்த நாய் தூக்கம் கலைந்து எழுந்து உடம்பை முறுக்கியது. ‘ஆவ்’ என்று வாயைத் திறந்து கொட்டாவி விட்டது. படுத்த இடத்திலேயே காலைத் தூக்கி ஒண்ணுக்கு போனது. அப்புறம் ‘லொள் லொள் லொள்…’ என்று குரைத்தது. ஊர்வலத்தில் புகுந்து நுழைந்து ஓடியது. தாரை தப்பட்டைச் சப்தத்தில் பயந்து போய்க் காலுக்கிடையில் வாலைக் கீழ்ப்பக்கமாய்ச் செருகி ‘ஊ ஊ’ என்று ஊளையிட்டது. கண்ணீர் விட்டது. 

“த்தே…சும்மாக் கிட நாயி..பாரேன் சின்னு என்னவோ உடம்பொறப்ப தவறின மாதிரி இது அளுவுது..” 

“அது அப்படித்தான். யாரு செத்ததுக்கும் இது அழும். போன ஜென்மத்தில மனுச சாதியோ என்னமோ… நினைப்பு வந்து அழுவுது.. நல்ல வேளை இப்ப நாயாப் பொறப்பெடுத்துடுச்சு நிம்மதியா இருக்கு. கிடைச்சாத் தீனி. இல்லேன்னா பட்டினி. நாம தான் மனுசனாப் பொறந்து நாய்ப் பொழப்பா அல்லாடறோம்.” 

புடவைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்தாள். 

“கல்யாணச் சாவு போல. ஒருத்தன் கண்ணுலயும் தண்ணியக் காணோம். இந்தக் கிராக்கி எனக்குத் தான் வரும். என் டர்ன் தான் இனிம எரிக்கணும்கறாங்களோ… புதைக்கணும் கறாங்களே… வாரேன். ஆபிஸ் ரூம்ல கேக்கணும். ஆளைக் காங்கலேன்னா அடுத்த டர்னு ஆளைப் போட்டுடுவாக. அப்புறம் சோத்துக்குத் ததிங்கிணத்தோ தான்.” 

ஊர்வலம் முழுசும் உள்ளே நுழைவதற்காகக் காத்திருந்தார்கள்.

“இப்பப் பரவாயில்ல. பெரிசு எரிக்க நானூறு ரூவாக் கூலி. வரட்டி, கெரசின், கட்டையெல்லாம் போவ நூத்தம்பது ரூவாயாச்சும் கைல நிக்கும். இந்த வார ரேசனுக்காச்சு..” 

விரலை மடக்கிக் கணக்குக் போட்டாள் சின்னப்பொண்ணு. வறுமை.. மரணத்திலும் லாபம் பார்க்க வைத்தது. 

“நாத்தத்துல எனக்கே நிக்க முடியல்ல… குமட்டுது… நீ எப்படிப் பண்றே” 

“க்கும்….உசிரோட இருக்கிற மனுசங்களோட பொய்யி. திருட்டுத்தனம்…ஏமாத்து, களவாணித்தனம் இந்த நாத்தத்தை விடவா பொணம் நாறுது? செத்தவங்கல்லாம் சாமிக்குச் சமானம். பொய்யி, பொரட்டு எதுவுங்கிடையாது. பசிச்ச வயத்துக்கு சோறு தான் வேணும். நாத்தம் புடித்து வேலைன்னு பசிக்காம இருக்குமா…?” 

மயானமே போதி மரமாய் அவள் பேசப் பேச சிலை மாதிரி உறைந்து போனான் சின்னராசு.

– தொடரும்…

– தகனம் (நாவல்), முதற் பதிப்பு: 2005, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *