“சாந்தா, ரெடியா?”
“ஒரு நிமிஷங்க. டாக்சி வரதுக்கு அஞ்சுநிமிஷம் ஆகும்னு போன் காட்டுது. அதுக்குள்ளே ஏன் அவசரப்படுத்துறீங்க?” என்று அவளுடைய படுக்கை அறையிலிருந்து குரல் குடுத்தாள் என் மனைவி சாந்தா.
“ஓகே. ஓகே. டோன்ட் ஒர்ரி. பி ஹாப்பி” என்று சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தேன்.
“டோன்ட் ஒர்ரி. பி ஹாப்பி” என்பது சாதாரண வார்த்தைகள் அல்ல. அது என் வாழ்க்கையின் சாரத்தை வெளிப்படுத்தும் குறியீடு. என் வாழ்வின் மந்திரம்.
இரண்டு நிமிடங்களில் புடவை மாற்றிக்கொண்டு சாந்தா வெளியில் வந்தாள். அறுபத்தெட்டு வயது ஆனாலும் சாந்தா எனக்கு அழகாகவே தென்பட்டாள். அந்த இளகிய மெல்லிய கன்னங்கள் என் நிழல் தெரியுமோ என்பதுபோல் நளினமாக இருந்தன. வாரிப் பின்னிய கூந்தல் வெண்மைக் கிரீடத்தை நிரந்தரமாக அணிந்தது போல் அவளுடைய அழகைப் பெருக்கியது என்றே சொல்ல வேண்டும். அவளுடைய மெலிந்த உடலாலும் என்னுடைய தொப்பை காரணமாகவும் என்னை விட உயரமாகத் தென்படுவாள்.
“ஹாய் பியூட்டீ” என்றேன் அவளை காதலோடு பார்த்தவண்ணம்.
“சரி. சரி. கிளம்பலாம் வாங்க. டாக்சி இன் டூ மினிட்ஸ்” என்று கூறிக்கொண்டே கண்ணாடி அணிந்து கொண்டாள்.
“யார் உன்னை கிழ ப்யூட்டின்னு சொன்னவன்? என்கிட்டே சொல்லு. அவனை ஷூட் செய்துடறேன்”
“அன்னிக்கு ஒருநாள் நீங்கதான் சொன்னதா ஞாபகம்” சாந்தா சிரித்துக் கொண்டே வீட்டைப் பூட்டினாள்.
“எனக்கு விதிவிலக்கு உண்டு. நான் உன்னை என்ன வேணும்னாலும் சொல்லலாம்” என்றேன் சிணுங்கலாக.
நாங்கள் எங்கள் நான்காவது மாடியிலிருந்து லிப்டில் கீழே இறங்கியபோது வாடகைக் கார் ரெடியாக இருந்தது. பஞ்சாராஹில்ஸ் சிட்டி செனட்ரல் மால் அருகிலிருந்த வங்கியை அடைந்தவுடன் பேடிஎம் வழியே காருக்குப் பணம் கட்டினாள் சாந்தா.
முதலிலேயே கூறியிருந்ததால் வங்கியில் மேனேஜர் மூர்த்தி எங்களுக்காகக் காத்திருந்தார். மூர்த்தி, நாங்கள் பணிபுரிந்த பல்கலைக்கழகத்தில் எங்கள் இருவருக்குமே மாணவராக இருந்தவர்.
“மூர்த்தி சார். எங்க அகௌண்ட்ஸ் எல்லாத்துக்கும் நாமினேஷன் இருக்கா இல்லையான்னு ஒருதடவை செக் செய்யணுங்க. எங்களுடைய தனித்தனி அகௌண்ட்ஸ் எல்லாத்தையும் ஜாயின்ட் அகௌண்டாக மாற்றி எங்கள் இருவரில் யார் வேணுமானாலும் ஆபரேட் செய்து கொள்ளும் விதத்தில் எய்தர் ஆர் சர்வைவர் ஆக மாற்ற வேண்டும். லாக்கர் அகௌண்ட்டை கூட ஜாயின்ட் அகௌண்டாக மாற்றணும். எல்லா டாக்குமெண்ட்சும் எடுத்து வந்திருக்கேன். அவசரம் ஒன்றுமில்லை. நாங்க வெளியே வெயிட் பண்றோம். ஆனால் எல்லாத்தையும் செய்துடுங்க” என்றேன்.
சாந்தா என் பக்கம் விந்தையாக, நம்பமுடியாமல் பார்த்தாள்.
“பரவாயில்லை சார். நீங்க இங்கேயே என் சேம்பர்லயே உட்காருங்க. காபி வித்தவுட் சுகர் அனுப்பி வைக்கிறேன்” என்றார் மூர்த்தி.
“ஓகே. டோன்ட் ஒர்ரி. பி ஹாப்பி” என்றேன்.
மூர்த்தி அறையில் இருந்து வெளியில் சென்றார்.
“என்னங்க இதெல்லாம்?” என்ற சாந்தா பதற்றத்தோடு என் கைகளை பிடித்துக் கொண்டாள். நான் பதில் கூறுவதற்குள் அவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.
நான் புன்னகைத்து விட்டு “அட பைத்தியக்காரி. டோன்ட் ஒர்ரி. பி ஹாப்பி. ஏன் அழறே? எனக்கு ஒண்ணும் ஆகலை. பாரு. பாறாங்கல்லு மாதிரி இருக்கேன். மேனேஜர் மூர்த்திதான் போன் செய்து நாமினேஷன் இல்லைன்னு அவங்க ஆடிட்டர்ஸ் மறுப்பு சொல்றாங்கன்னு சொன்னார். அதுதான் உடனே உன்னையும் அழைச்சுட்டு வந்தேன். அதைத் தவிர வேறொன்றுமில்லை. நீயா எதேதோ யோசிக்காதே. வேணும்னா நீயே மூர்த்தியிடம் கேட்டுப் பார்” என்றேன் சமாளித்தபடி.
அவள் என்னை அவநம்பிக்கையோடு பார்த்தாள். “நாமினேஷன் சரி. ஜாயிண்ட் அகௌண்ட் சங்கதி என்ன?” என்று முக்கியமான பாயிண்டைக் கையில் எடுத்தாள்.
என் தொண்டையில் விளாம்பழம் அடைதாற்போலிருந்தது. அதற்குள் சட்டென்று ஒரு ஐடியா வந்தது.
“வந்துட்டோமே. எதற்கும் இருக்கட்டுமேன்னுதான். இப்போதெல்லாம் ஜாயிண்ட் அகௌண்ட் இருந்தால்தான் நல்லது என்று நம்ப ஆடிட்டர் அட்வைஸ் பண்ணினார்”. என்றேன்.
“நான் நம்ப மாட்டேன்” என்றாள் கோபமாக. அவள் குரலில் உறுதி தெரிந்தது…
“அப்படின்னா? எதற்காக இதெல்லாம் செய்றேன்னு நினைக்கிறே?” நானும் விடாமல் கேட்டேன். என் குரலில் எரிச்சல் வெளிப்பட்டது.
அதற்குள் மூர்த்தி சில விண்ணப்ப படிவங்களை எடுத்து வந்தார். “என்ன சார்? எனி ப்ராப்ளம்?” என்று கேட்டுச் சிரித்தார்.
“நோ. நோ. நோ ஒர்ரீஸ். பி ஹாப்பி. மேடத்துக்கு நீங்களாவது சொல்லுங்க, மூர்த்தி. நீங்க வரச் சொன்னதால்தானே நாங்க வந்தோம்? இவள் ஏதேதோ யோசிக்கிறாள்” என்றேன்.
“ஆமாம். மேடம். எங்க இன்டர்நேஷனல் ஆடிட்டர்ஸ் ஒவ்வொரு அகௌண்டுக்கும் நாமினேஷன் இருக்கா இல்லையான்னு செக் பண்ணி நோட் அனுப்பியிருக்காங்க. இல்லாதவங்க எல்லோரையும் கூப்பிடறோம். அது போலத் தான் உங்களையும் கூப்பிட்டோம். நத்திங் ஸ்பெஷல். இது ரொட்டீன் ப்ரொசீஜர்” என்றார்.
“பின்னே இந்த ஜாயிண்ட் அகௌண்ட்ஸ் எல்லாம் எதற்கு?”
“எனக்கு அது பற்றி தெரியாதுங்க. ஆனால் இட்ஸ் ஆல்வேஸ் சேஃப் அண்ட் பெட்டர்” என்று புன்னகைத்தார்.
சாந்தா மௌனமானாள். அவள் முகத்தை பார்த்தால் இனி இங்கே இந்த விஷயம் பற்றி பேசுவது சரியாக இருக்காது என்று நினைத்து சும்மா இருப்பதாகத் தோன்றியது. கையெழுத்து போடுவது எல்லாம் முடிந்தபின் லாக்கர் அறைக்குச் சென்றோம்.
அண்மையில்தான் லாக்கருக்கு புதிய டிஜிட்டல் பூட்டு சிஸ்டம் புகுத்தியிருந்தார்கள். ஒரு அதிகாரி, மாஸ்டர் சாவியில் திறந்து, “உங்க பாஸ்வேர்டு பிரஸ் செய்தால் லாக்கர் ஓபன் ஆகும். உங்க வேலை முடிந்ததும் கதவை மூடி உங்கள் கீயை நீங்க எடுத்துக்கலாம். ஆடோமேடிக்கா லாக் ஆயிடும்” என்று கூறிவிட்டு வெளியில் சென்றார்.
நான் சாந்தாவிடம் இருந்த என் ஸ்மார்ட் போனை வாங்கி நோட்ஸ் உள்ள ஃபோல்டரைத் திறந்து பாஸ்வேர்ட்ஸ் என்று எழுதி இருந்த பக்கத்தைத் திறந்தேன். அதில் கடைசியில் இருந்த நம்பரை சாந்தாவிடம் காட்டினேன்.
“இதுதான் நம் லாக்கர் கோட் நம்பர்” என்று சொல்லி போனை ஆஃப் செய்துவிட்டு அவளிடம் தந்தேன். “இப்போ சொல்லு லாக்கர் கோட் நம்பர் என்ன?” என்று கேட்டேன். சாந்தா குழப்பமாகப் பார்த்தாள்.
“சரி. போன் ஆன் பண்ணி நோட்ஸ் ஃபோல்டருக்குப் போ. பாஸ்வேர்ட்ஸ் பேஜ் ஓபன் பண்ணு. பாஸ்வேர்டு எதுன்னு சொல்லு” என்றேன்.
சாந்தாவுக்கு சமீபத்தில்தான் ஸ்மார்ட் போன் ஆபரேட் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தேன். ஸ்மார்ட் போன் சரியாக பயன்படுத்தத் தெரிந்தால் தினசரி வாழ்க்கை எளிதாகி விடும் என்பதை எடுத்துக் கூறினேன். அவளும் கற்றுக் கொள்ள முயன்றாள். அதனால்தான் டாக்சி புக் செய்வது, பேடிஎம், கூகுள் பே போன்ற ஆப்களை பயன்படுத்துவது, பணம் செலுத்துவது என்று ஒவ்வொன்றாகச் சொல்லி வருகிறேன். அவளுக்கு ஸ்மார்ட் போன் தனியாக இல்லை. என் போனைத்தான் அவளும் பயன்படுத்துகிறாள்.
சாந்தா மிகவும் கஷ்டப்பட்டு அந்த பேஜைப் பார்த்து S2611969 என்று கூறினாள்.
“திற” என்றேன். கீ போர்டில் அந்த நம்பரை பஞ்ச் செய்து லாக்கரைத் திறந்தாள் சாந்தா.
“குட். இந்த கோட் நம்பர் நம் இருவருக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்டு. யாருக்கும் சொல்லிவிடாதே. டாப் சீக்ரெட். பிள்ளைக்கோ பெண்ணுக்கோ கூட சொல்லக் கூடாது” என்றேன்.
அதற்குள் இருந்த நகைகள், வீட்டு பத்திரம், ஃபிக்ஸட் டெபாசிட் சர்டிபிகேட்ஸ், இன்கம்டாக்ஸ் ரிடர்ன்ஸ், பென்ஷன் பேப்பர், உயில் எல்லாம் வெளியில் எடுத்து அவளுக்குக் காட்டி விவரித்தேன். ஒரு ஒழுங்கு முறையில் அவற்றை வைத்த ஃபைல் போல்டரைக் காண்பித்தேன். ஒரு புறமாக இருந்த கேஷ் கட்டுகளைக் காட்டினேன். அதன் பின் எல்லாவற்றையும் உள்ளே வைத்து அவளை லாக் செய்யச் சொன்னேன்.
சாந்தா, “கிளம்பலாம்” என்று எழுந்தாள்.
அவள் கையைப் பிடித்து நிறுத்தினேன். அவள் கையை ஆதரவோடு வருடினேன். தங்க வளையல்கள் எத்தனை இருந்தாலும் கண்ணாடி வளையல்களே அவளுக்குப் பிடிக்கும். அவள் உடலின் மஞ்சள் நிறத்தின் மீது பச்சை நிற வளையல்கள் அழகாக அமைந்திருந்தன. சாந்தா ஆச்சரியமாக பார்த்தாள்.
“இந்த நம்பர் என்ன என்று தெரியுமா?” என்று கேட்டேன்.
“ஊஹும்” என்று என்னைக் குழப்பமாகப் பார்த்தாள்.
“யுனிவெர்சிடியில் மட்டும் மெடல்ஸ் அத்தனையும் நீயே அடிச்சிட்டு போயிட்டு என்னை பைத்தியக்காரன் ஆக்கினாய். இந்த நம்பர் என்ன என்று தெரியாதா? யோசிச்சுப் பாரு. அதற்குள் இன்னொரு காபி அனுப்பச் சொல்லி மூர்த்தியிடம் சொல்லிவிட்டு வரேன்” பெருமூச்சோடு எழுந்து செல்ல எத்தனித்தேன்.
“ஐயோ. போறும் உங்க புத்திசாலித்தனம். நோ காபி. ஏதாவது குடிப்பதாக இருந்தால். கிரீன் டீ. இல்லாவிட்டால் அரை மணியில் சாப்பாடு சாப்பிடலாம்” என்றாள்.
பேச்சால் மயக்கி என்னை அமர்த்தி விட்டாள் என் மனைவி. இன்னொரு காபி சாப்பிடலாம் என்ற என் ஆசை நிறைவேறாததால் சற்று எரிச்சலடைந்தேன்.
“சரி. சரி. இது என்ன நம்பர்னு சொல்லு” என்றேன்.
அவள் என் முகத்தருகில் நெருங்கி என் தலை முடியில் விரல்களை விட்டுத் துழாவினாள்.
“இப்போ காபி சாப்பிட்டால் சாப்பாடு இறங்காது. அப்புறம் நீங்கதான் சிரமப்படுவீங்க” என்றாள் கவலையோடு.
அதுவும் உண்மைதான். என் ஆரோக்கியம் மிகவும் நாசூக்கானது. அது எங்கள் இருவருக்குமே தெரிந்ததுதான். என்னால் வாயைக் கட்ட முடியாது. எப்போதும் என் மனம் உணவின் மீதும் காபியின் மீதும் செல்லும் இயல்புடையது. அவள் அணைக்கட்டு போட்டு என் சாப்பாட்டு விஷயத்தில் கடினமாக இல்லாவிட்டால் ஹாஸ்பிடலில் சேர வேண்டிய நிலைதான் ஏற்படும். அப்போது அவள் மனம் காயமடையும். துடித்துப் போவாள். அவள் முகத்தில் கவலை மேகம் சூழ்ந்தால் என் இதயம் துடிதுடித்துப் போகும். அதனால்தான் முடிந்தவரை அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக என்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பேன்.
“ஆமாண்டா செல்லம். ஓகே. டோன்ட் ஒர்ரீ. சரி நம்பர் என்னாச்சு?” என்றேன். அவள் இடுப்பை கையால் வளைத்து அருகில் இழுத்தேன்.
அவள் உடல் என் மேல் பட்டது. அது ஒரு சொர்க்க சுகம். உடலிலிருந்து உடலுக்கு ஒரு சைதன்ய நதி பிரவகிப்பது போல் தோன்றியது. அவளிடமிருந்து பாயும் ஜீவசக்தி எனக்கு அளவுக்கு அதிகமான பலத்தை அளித்தது.
“என்னங்க இது? ரொம்ப வரம்பு மீறி போறாப்போல இருக்கு. இது பேங்க் என்பதை மறந்துட்டீங்களா என்ன?” என்றாள் சிரிப்பை மறைத்துக் கொண்டு. சிறு கோபத்தோடு. அவள் இடுப்பை சுற்றி இருந்த என் கையை விலக்கினாள்.
“இது லாக்கர் ரூம். நாம் வெளியே செல்லும் வரை யாரும் உள்ளே வர மாட்டாங்க. பஞ்சாரா ஹில்ஸ் நடு மத்தியில் இத்தனை பேர் நடுவில் தைரியமா ரொமான்ஸ் செய்யக்கூடிய ஒரே ஆண் உன் கணவன்தான். நீ ஒண்ணும் பயப்படாதே” என்றேன்.
கையை மீண்டும் அவள் இடுப்பை சுற்றி இறுக்கினேன். அவள் என் கையை மீண்டும் தள்ளி விட்டாள்.
“ஆமாமாம். போதும் விளையாட்டு. எனக்கு நீங்க கேட்ட நம்பர் எதுவும் புரியவில்லை.. நீங்களே சொல்லுங்க. இல்லாட்டா போகலாம். கிளம்புங்க. இன்னும் சமையல் கூட ஆரம்பிக்கல” என்று கூறி என் கையை விலக்கினாள்.
நான் புன்னகைத்தேன். “பைத்தியக்காரி. இது நான் உனக்கு முதல் முத்தம் கொடுத்த நாள். என் வாழ்க்கையில் முதல் முறையாக கிடைத்தற்கரிதான ருசியை அனுபவித்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வரவேற்பு கூறிய கொண்டாட்டமான நாள்” என்றேன்.
சாந்தா அழகாக வெட்கப்பட்டாள். நாங்கள் இருவரும் உஸ்மானியா யுனிவர்சிடியில் தாவரவியல் பிரிவில் எம்எஸ்சி படித்தபோது காதலித்தோம். ஜாதி பிரச்சனை இல்லாததால் முறையாக கரீம்நகர் ஜில்லாவில் அவர்கள் ஊருக்குப் பெண் பார்க்கச் சென்றோம். பெரியவர்கள் மற்ற விஷயங்களை பேசிக் கொண்டிருக்கையில் சாந்தா என்னைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். பெண் பார்க்கும் படலத்திற்கு சாந்தா அழகாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். தலைக் குளித்த கூந்தல், கைக்கு வங்கி, இடுப்பில் ஒட்டியாணம், இளம் ரோஸ் நிற பட்டுப் புடவையில் அப்சரஸ் மாதிரி பளபளவென்று இருந்தாள். நான் பட்டென்று அவளை என் அணைப்பில் இறுக்கி முத்தம் கொடுத்து விட்டேன். இப்போதுபோல் அல்ல. அப்போது அவள் கதவை சற்று மூடி எனக்கு ஒத்துழைத்தாள்.
“உண்மையாகவே நீ கிழவியாயிட்டே, சாந்தா. இது உன்னை நான் முதன்முதலில் முத்தம் கொடுத்த நாள். உங்க வீட்டில் உன் அறையில். ரோஜாப்பூ நிற பட்டுப் புடவையில் 26 ஜனவரி 1969. அதாவது சாந்தாவை 26-1-1969 முத்தம் கொடுத்த நாள். இப்போதாவது நினைவு வந்ததா?” என்றேன்.
“உங்களுக்கு அந்த விஷயம் இன்னும் நினைவிருக்கா? நிஜம்மாகவா?” என்றாள் ஆச்சரியமாக.
“அது ஒன்று மட்டுமல்ல. உன் தொடர்பான பல விஷயங்கள் எனக்குத் தெளிவா நினைவிருக்கு. எங்கே, ஒரு தடவை அந்த சீன் ரிப்பீட் செய்வோமா இப்போ? உன் உதடுகளில் அப்போதும் இப்போதும் டேஸ்ட் ஒரே மாதிரி இருக்கான்னு பார்த்து விடலாம்” என்றேன்.
“சீச். சீ” என்று தூரமாக நகர்ந்தாள்.
“அடிப்பாவி. ஏதோ தெலுங்கு சினிமாவில் வரும் வில்லனைப் பார்க்கிறார்போல் சீச்..சீன்னு விரட்டுறியே. நான் உன் புருஷண்டீ. ஏதோ வாய்ப்பு கிடைத்ததால் கேட்டேன். அவ்வளவுதான்” என்றேன் விளையாட்டாக.
“என்னங்க இது? ரொம்பத்தான் துள்றீங்க? நீங்க என் புருஷன்தான். பேங்கில் இருக்கோம் என்பதைக் கூட மறந்துட்டீங்களா?” என்று கிசுகிசுப்பாகச் சிரித்தாள்.
“டோன்ட் ஒர்ரி. பி ஹாப்பி. அப்படின்னா, வீட்டுக்கு போன பின்னால் டேஸ்ட் செய்யலாம்” என்றேன்.
“சீச்சி.. நீங்க என்ன இன்னைக்கு கூச்சமில்லாமல் நடந்துக்கிறிங்க?” என்றாள் சாந்தா.
“என் தப்பு எதுவுமில்லை. எல்லா தப்பும் உன்னுடையதுதான். ஏன் இத்தனை அழகா இருக்கே இன்னைக்கு?” என்றேன் குறும்பாக.
சாந்தா வியப்போடு பார்த்தாள்.
“டோன்ட் ஒர்ரி. பி ஹாப்பி” என்று அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினேன் .
வீட்டுக்கு வரும் போது ஹோட்டலில் உணவருந்தி விட்டு, அருகிலிருந்த ஒரு மொபைல் போன் கடையில் சாந்தா தடுத்தும் அவளுக்காக நல்ல ஸ்மார்ட்போன் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு டாக்சியில் கிளம்பினோம். காரில் அசதியோடு கண் மூடி உறங்கிய சாந்தவையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.
பூமியின் அடுக்குகளில் டெக்டானிகஸ் அசைவதால்தான் பூகம்பம் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதுபோல் இன்று சாந்தாவைப் பார்க்கையில் என் மனதின் அடுக்குகளில் பலப்பல கிளுகுளுப்புகளும் அசைவுகளும் ஏற்பட்டன. அவற்றால் என் இதயத்தின் ஆழத்தில் காதல் பூகம்பம் ஏற்பட்டது. அவற்றின் தீவிரத்தை அளக்கும் எந்த ரிச்செட் அளவுகோலும் என்னிடம் இல்லை. வெறும் என் கண்ணின் ஓரங்களில் இருந்து வழியும் காதல் மழையே அவற்றின் தீவிரத்திற்கு அளவுகோல்கள். சாந்தாவிற்கு இந்த நவீன பொருட்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றின் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லை. அவை இல்லாத காலத்தில் சரி. ஆனால் இப்போது இந்த வசதிகள் இருக்கும்போது அவற்றை உபயோகித்து, சுகமாக வாழ வேண்டும் என்பது என் எண்ணம்.
இதற்கு முன்பு வாடகைக்கு வண்டியை வரவழைக்க வேண்டும் என்றால் ரொம்பச் சிரமமாயிருக்கும். அதற்காக ஆட்டோக்காரரிடம் பேரம் பேசுவது, அவர்களுக்கு அட்ரஸ் சொல்வது, அவர்கள் அந்த அட்ரசுக்கு வர மாட்டோம் என்று முரண்டு பிடிப்பது போன்ற எரிச்சலூட்டும் சூழ்நிலைகளுக்கு விடிவு காலமே இந்த ஸ்மார்ட்போன்கள். கண்மூடித் திறக்கும் நேரத்தில் கேப் புக் செய்யலாம். ஒரே கணத்தில் கார் வீட்டின் முன் வந்து நிற்கும். அட்ரஸ் ஒவ்வொரு தடவையும் சொல்ல வேண்டியதில்லை. வேண்டும் என்கின்ற இடத்தில் இறங்கலாம். சார்ஜ் கூட பேரம் பேசத் தேவையில்லை.
எனக்குச் சொந்தமாக கார் இருக்கிறது. ஆனால் பர்மனென்ட் டிரைவர் இல்லை. சின்ன வேலைகளுக்கு அருகில் இருந்தால் நடந்தே சென்று விடுவோம். இல்லாவிட்டால் கேப் புக் செய்து கொள்வோம். ஏதாவது பங்ஷனுக்கோ, சபைகளுக்கோ, சன்மானங்களுக்கோ செல்ல வேண்டி இருந்தால் டிரைவரை ஏற்பாடு செய்து கொள்வோம். கம்ஃபர்ட் ஜோனில் வாழும் விதமாக எங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளோம்.
மரணம் வரும் வரை மரணித்துக் கொண்டு வாழாமல், மரணம் வரும் வரை வாழ்க்கையைப் பண்டிகைக் கொண்டாட்டம் போல் வாழ்ந்து பின் மரணமடைய வேண்டும் என்பது என் வாழ்க்கைத் தத்துவம். அதனால்தான் நான் ஒவ்வொரு முறையும் டோன்ட் ஒர்ரி. பி ஹாப்பி என்று சொல்வது வழக்கம். இந்தச் சொல் அடுத்தவருக்காக மட்டுமல்ல. எனக்கும் கூட நான் சொல்லிக் கொள்வது. சாந்தா என் வார்த்தையை நம்புவாள். ஆனால் டெக்னிகல் வேலையையெல்லாம் நான் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.
நாங்களிருவரும் பதவி ஓய்வு பெற்று ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. நான் பதவி ஓய்வு பெற்ற போது அவளுக்கு இன்னும் இரண்டு ஆண்டு சர்வீஸ் இருந்தாலும் நான் தனியாக வீட்டில் இருக்க வேண்டுமே என்று விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டாள். எங்களுக்குப் பண விஷயத்தில் பெரிதாக பிரச்சனை எதுவும் இல்லை. குழந்தைகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்கள். பையன் ஹைதராபாத் நகரத்திலேயே இருந்தாலும் அவன் அலுவலகத்திற்கு அருகில் ஹைடெக் சிட்டியிலேயே வீடு வாங்கிக் கொண்டு வசித்து வருகிறான். ஒருவேளை அப்படியில்லாவிட்டாலும் அவனுக்குத் திருமணம் ஆனபின் நாங்கள் தனியாக இருக்கவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே நினைத்துக் கொண்டிருந்தோம்.
ஏனென்றால் நாங்கள் இருவரும் சுதந்திரத்தை விரும்புபவர்கள். ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தியவர்கள். எங்கள் வாழ்க்கையை எவ்வாறு நடத்த வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்.
சாந்தாவும் இயல்பாகவே சுதந்திரத்தை விரும்புபவள். யாரேனும் அநாவசியமாக ஒரு வார்த்தை சொன்னாலும் பொறுக்க மாட்டாள். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உயிராக இருந்தாலும் இந்த ஐம்பதாண்டு திருமண வாழ்வில் எங்கள் இருவரிடையேயும் கூட எத்தனையோ முறை மனப் போராட்டங்கள், தவறாகப் புரிந்து கொள்ளுதல், சந்தேகங்கள், தகராறுகள், ஊடல்கள் நடந்துள்ளன. ஆனால் அவற்றை அறுந்து போகும் வரை இழுக்காமல் உடனுக்குடன் மறந்து போய் சிரித்து விடுவோம்.
ஆனால் உயிருக்கும் மேலாக அன்பு செலுத்தும் பிள்ளைகள் கூட அண்மை காலத்தில் ஈகோவில் சிக்கி விட்டார்கள். இதயத்தில் அன்பு வெள்ளம் பெருகினாலும் அவர்களின் ஈகோ அடிபடுகிறது என்று தோன்றி விட்டால் போதும், பாசத்தையே வெட்டி விடுவதற்கு அவர்கள் தயாராக நின்றார்கள். உண்மையில் ஈகோ, அன்பு என்ற இரண்டு உணர்ச்சிகள் ஒரு மரத்தின் இரண்டு கிளைகள் போன்றவை. தாயின் அன்பு ஒவ்வொரு முறையும் மன்னிப்புக் கேட்க விழைகிறது. ஈகோ மட்டும் ஒவ்வொரு முறையும் பிறர் ‘சாரி’ சொல்லிக் கேட்கவே விழைகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என்பதால்தான் இத்தனை வேறுபாடுகளும். மேல் ஓடுகளை நீக்கிப் பார்த்தால் அன்பு, ஈகோ இரண்டு உணர்வுகளும் ஒன்றுதான். ஆனால் அத்தனை பொறுமை இளைய தலைமுறைக்கு இருப்பதில்லை. அதற்கும் காரணம் உண்டு. இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் பொருளாதாரத் தன்னிறைவு, வேகமாக மாறுகின்ற சமுதாயச் சூழல்கள், நவீன வாழ்க்கை முறையின் அழுத்தங்கள், பன்முகச் செயற்கை வாழ்வு வாழ வேண்டி வருவது, சிறு வயதிலேயே பணிநிமித்தம் பெரிய பெரிய இலக்குகளைத் தீர்மானித்து அவற்றின் வேட்டையில் ஈடுபட்டு கடினமான அழுத்தத்தில் இருப்பது போன்றவற்றால் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்..
ஒரு கணமேனும் ஓட்டப் பந்தயத்தை நிறுத்தி வாழ்வின் அழகை அனுபவிக்க இயலாமல் போகிறார்கள். அதனால்தான் இவற்றையெல்லாம் புரிந்துகொண்ட பெரியவர்களான நாம் அவர்களுக்கு குறுக்கே நிற்காமல் அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ விட வேண்டும். நிசப்தமாக ஓரமாக ஒதுங்கி அவர்களின் பாதையில் அவர்களைப் பயணிக்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் இரண்டு தலைமுறைகளுக்குமிடையே போராட்டம் நிச்சயம்.
அப்படிப்பட்ட சூழ்நிலை எதிர்ப்படக்கூடாது என்றுதான் ஓய்வு பெற்ற பிறகு நாங்கள் இருவரும் சுதந்திரமாக எங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டும் என்று தீர்மானித்தோம். தனியாக இருக்கிறோம். இப்போது ஈகோவுக்கு இடமின்றிப் பாசம் பொங்கி எழுகிறது என்பது உண்மைதான்.
மீதி உள்ள வாழ்க்கையை ‘சேஷ ஜீவிதம்’ என்று சொல்லவே எனக்குப் பிடிப்பதில்லை. அறுபது வயது வரை அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து விட்டோம். பின்னர் மீதி உள்ளது பொறுப்புகள் தீர்ந்த, திருப்திகரமான வாழ்க்கை, சிறப்பான ‘விசேஷ ஜீவிதம்’ என்பது என் கருத்து.
ரிடையரான நாங்கள் ஒன்றும் ஓய்வாக வீட்டில் உட்கார்ந்து காலம் கழிக்கவில்லை. அந்தந்த சீசனைப் பொருத்து காலத்துக்கு ஏற்றவாறு அனுகூலமான இடங்களுக்குச் சென்று விடுவோம். உலகின் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டோம். எங்களின் உடல் ஆரோக்கியம் ஒத்துழைக்கும் வரை எல்லாம் பார்த்து அனுபவித்து விட்டோம். ஆசிரியர் பணியில் எங்கள் சப்ஜெக்ட் தாவரவியல். அதன்மூலம் எங்கள் இருவருக்கும் உலகமெங்கும் நண்பர்களும் எங்களிடம் படித்து வெளிநாட்டு யுனிவர்சிடிகளில் நல்ல பதவியில் இருக்கும் எங்கள் பழைய மாணவர்களும் நிறைய பேர் உள்ளார்கள். அவர்கள் எங்களை அவ்வப்போது விசிடிங் ஆசிரியர்களாக அழைப்பார்கள். நிறைய நாடுகளைச் சென்று பார்த்துள்ளோம். பல கோடிக்கணக்கானோருக்கு சாத்தியப்படாத அழகான அற்புதமான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து விட்டோம்.
“சார். வந்துவிட்டோம்” என்று டாக்சி டிரைவர் கூறியதால் நான் திடுக்கிட்டு நடப்புலகிற்கு வந்தேன். வீட்டிற்குள் நுழைந்த உடனே சோர்வாய் இருந்த சாந்தா சோபாவில் விழுந்தாள். வெயிலில் அவள் முகம் வாடி இருந்தது. குளிர்ந்த யுடிகொலானில் நனைத்த கைகுட்டையால் அவளுடைய முகத்தையும் கைகளையும் துடைத்தேன். கண்களை மூடியபடியே “தேங்க்ஸ்” என்றாள். நான் அவள் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டேன். “டோன்ட் ஒர்ரி. பி ஹாப்பி” என்று கூறிவிட்டு அவளருகில் மெளனமாக சற்று நேரம் அமர்ந்திருந்தேன்.
“அவள் மௌனத்தின் சன்னிதி. என் காதலின் பெருநிதி” என்ற பாடல் நினைவுக்கு வந்தது.
என் அறைக்கு வந்து உடைமாற்றிக் கொண்டு படுத்தேன். ஆனால் உறக்கம் வரவில்லை.
“என்னங்க இதெல்லாம்?” என்று சாந்தா வங்கியில் கேள்வி கேட்டபோது புத்திசாலித்தனமாக பதில் சொல்லிச் சமாளித்தாலும் அந்தக் கேள்வி என் முன்பாக ஆயிரம் மடங்கு பெரிதாகி வளர்ந்து வளர்ந்து இப்போது என் முன் நின்று பதில் கூறச் சொல்லி வற்புறுத்துவதாகத் தோன்றியது. இந்தப் பிரச்சனை ஓராண்டுக்கு முன் ஆரம்பமானது.
ஒரு நாள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ஒரு அறிவியல் இதழுக்குக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த போது மூளையில் ஒரு கணத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதி நேரம் ஏதோ வெடித்தாற்போலிருந்தது. கண்களை இருள் மறைத்தது. கண் முன்னால் இருந்த எதுவும் கண்ணில் தென்படவில்லை. உடல் காற்றில் மிதப்பது போல் இருந்தது. ஆனால் உடனே சரியாகி விட்டது.
உண்மையில் அது போன்ற அனுபவம் எனக்கு நேர்ந்ததா அல்லது நானே அவ்வாறு பிரமையில் ஆழ்ந்தேனா? எனக்குப் புரியவில்லை. உடனே அது குறித்து சாந்தாவிடம் கூற வேண்டும் என்று எழுந்தேன். ஆனால் நின்று விட்டேன். எனக்கே சரியாகப் புரியாத இந்தப் பிரச்சினையை அவளிடம் சொல்லி அவளைக் கவலையில் ஆழ்த்த வேண்டுமா? தேவையில்லை என்று முடிவு செய்தேன்.
அன்று இரவு கூட அதே போல் மறுமுறை நடந்தது. ஆகாயத்தில் ஒரு மின்னல் தோன்றி அது பல கிளைகளாகப் பிரிந்து ஒளிமயமான அந்த மின்னற்கம்பிகள் எங்கும் வியாபிப்பது போல் என் மூளை எங்கும் பரவி வெடித்துச் சிதறியது போலிருந்தது. மூளையின் ஆழமான அடுக்குகளில் ஒரு இடி விழுந்தது போலானது. என் உடல் நடுங்கியது. அன்று காலை நிகழ்ந்த அனுபவம் உண்மைதான் என்று அப்போது புரிந்தது. முதல் முறையை விட இரண்டாவது முறை கொஞ்சம் அதிக நேரம் அந்த மின்னல் தொடர்பான வலியை உணர முடிந்தது. கையும் காலும் குடைந்தது. ஆனால் இரண்டு நிமிடங்களில் எழுந்து அங்கும் இங்கும் நடந்தேன். தண்ணீர் குடித்தேன். பின்னர் எல்லாம் நார்மலாகவே உணர்ந்தேன்.
அடுத்து ஒரு வாரத்திற்குப் பிறகு காலையில் பூங்காவில் வாக்கிங் போகும்போது ஒரு முறை அதேபோல் நேர்ந்தது. நடை தடுமாறியது. அடி எடுத்து வைத்ததாக நினைத்தேன். ஆனால் கால் நகரவில்லை. உடல் ஆடியது. கீழே விழப் போனேன். என் பின்னாலேயே நடந்து வந்தவர்கள் என்னைப் பிடித்துக்கொண்டனர். “ஆர் யூ ஓகே?” என்று கேட்டார்கள். அருகிலிருந்த பெஞ்சின் மீது அமர வைத்தார்கள். நான் சற்றைக்கெல்லாம் தேறி, “டோன்ட் ஒர்ரி பி ஹாப்பி” என்று தம்ஸ் அப் குறியை விரலால் காட்டினேன்.
ஆனால் என்னிடம் ஏதோ பிரச்சனை உள்ளது என்பது எனக்குப் புரிந்து போனது. அன்று யுனிவர்சிடி செல்வதாகக் கூறிவிட்டு என் நண்பனான நியூராலஜிஸ்டைச் சந்தித்தேன். சில டெஸ்டுகள் ஸ்கேன், எம்ஆர்ஐ எல்லாம் எடுத்தான். அவற்றின் ரிசல்டைப் பார்த்தவுடன் அவன் முகம் மாறியது. எதோ சீரியசாகதான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அவன் தயங்கித் தயங்கிச் சொன்னான்.
“உனக்கு மூளையில் ஒரு இடத்தில் ரத்தம் கட்டி உள்ளது” என்றான். கரைவதற்குச் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தான். இது குறித்து என் மனைவியிடம் கூறக்கூடாது என்று வாக்குறுதி வாங்கிக்கொண்டு அவனிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பினேன்.
அந்த விஷயத்தை ரகசியமாக சாந்தாவுக்கு தெரியாமல் மறைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். நான் ஒரு சர்வதேச இதழுக்கு ஆர்டிகிள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இரவு பகலாக எழுத வேண்டும் என்றும் சாந்தாவுக்குத் தொந்தரவு கொடுக்காமல் கம்ப்யூட்டரில் வேலை பார்க்க வேண்டும் என்றும் கூறி என் படுக்கையை வேறு அறைக்கு மாற்றிக் கொண்டேன்.
நாங்களிருவரும் சேர்ந்து இருக்கும்போது எனக்கு ஏதாவது நேர்ந்து, என் ரகசியம் வெளிப்பட்டு விடுமோ என்று கடந்த ஓராண்டாக பயந்து கொண்டே வாழ்ந்து வருகிறேன். ஆனால் இறைவன் அந்த விஷயத்தில் கருணை காட்டினான். என் நோயின் ரகசியத்தை சாந்தாவிடமிருந்து மறைப்பதில் இறைவனும் உதவினான் என்றே கூறவேண்டும். வியாதி முற்ற, முற்ற எனக்கு அது போன்ற அட்டாக் வருவதற்கு முன்பே சில அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. கால்கள் பலவீனமாவது, உதடுகளும் கைவிரல்களும் நடுங்குவது போன்றவை நேர்ந்தன. அந்த அறிகுறிகள் தென்பட்ட உடனே நான் என் அறைக்கு விரைந்து சென்று கதவை சாத்திக் கொள்வேன். ஐந்து நிமிடங்களுக்குள் அட்டாக் வருவதும் நின்று விடுவதும் நிகழ்ந்துவிடும். நான் பழையபடி வெளியே வந்து விடுவேன். சாந்தா ஆச்சரியமாகப் பார்ப்பாள்.
“நல்ல ப்ரிலியன்ட்டான ஐடியா வந்தது. மறந்து போவதற்குள் அதை கம்ப்யூட்டரில் எழுதி வைத்துக் கொண்டேன்” என்று கூறுவது என் வழக்கமாகிப் போனது. ஆனால் என்றாவது அறைக்குள் சென்ற நான் திரும்பி வராவிட்டால் சாந்தா எவ்வாறு தாங்கிக் கொள்வாள் என்ற பயம் என்னைத் துளைத்தெடுத்தது. என் நோயைப்பற்றி அவளிடம் கூறி விடலாம் என்று எண்ணினேன். டாக்டரிடம் என் வியாதியின் தீவிரம் பற்றி அறிவுரை கேட்டேன்.
“உலகம் முழுவதிலும் உனக்குள்ள நோய்க்கு இது ஒன்றுதான் ட்ரீட்மென்ட். உன்னை விட அதிகமாக நான்தான் கவலைப்படுகிறேன். கடவுள் அருள் இருந்தால் இந்த மருந்துகளால் உனக்குச் சரியாகிவிடும். இல்லாவிட்டால்” என்று கூறி என்னை அணைத்துக் கொண்டான். அவன் குரலில் கவலை எட்டிப் பார்த்தது.
ஆனால் மருந்துகளால் அந்தக் கட்டி கரையவில்லை. நாளுக்கு நாள் வளர்ந்து பெரிதானது. அதோடு அது தன் குணங்களை மேலும் தீவிரமாகக் காட்ட ஆரம்பித்தது.
“இந்த வயதில் ஆபரேஷன் செய்யக்கூடாது” என்றான் என் டாக்டர் நண்பன். அவன் கண்கள் கலங்கின.
“ஓஹோ. அப்படீன்னா விடைபெறுகிறேன், நண்பா” என்று கூறி விட்டு வெளியே வந்தேன். எனக்குப் புரிந்து போனது. என் மூளை, பாதுகாப்பு முள்ளை எடுத்துவிட்டு வீசி எறிந்த வெடிகுண்டு போல் உள்ளது. அது எந்த நேரத்திலும் வெடிப்பதற்குத் தயாராக இருந்தது. வீட்டிற்கு வந்தவுடனே பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள் எல்லோருடனும் ஆசை தீர வாட்ஸ்அப் லைவ் வீடியோவில் பேசி மகிழ்ந்தேன்.
தாவரவியலில் உயர்ந்த சிகரங்களைத் தொட்ட என் மதி இப்போது என்னை மரண குகைக்குள் தள்ளப் போகிறது. மரண தேவனின் வரவை எதிர்பார்த்து ஒருகணம் ஒரு யுகமாக நேற்றிரவைக் கழித்தேன்.
“ஏன் இறைவா? என்னை ஏன் அழைத்துச் செல்ல விரும்புகிறாய்? இன்னும் சில நாட்கள் வாழ விடக்கூடாதா? ப்ளீஸ்” என்று மனதிலேயே இறைவனை வேண்டிக் கொண்டேன். இறைவன் கருணை புரிந்தாற்போல் அந்த இரவு ஒன்றும் நடக்கவில்லை. மறுநாள் புத்தம்புது சுகந்தங்களோடு பரிமளிக்கும் இனிய காலையை விரும்பி வரவேற்றேன். ஆழ்ந்து அனுபவித்தேன். இன்று முதல் எனக்கு ஒவ்வொரு காலையும் அபூர்வமானதே. இரவில் மரண பயம். காலையில் வாழ்வின் கொண்டாட்டம். தினசரி கணக்காக என் ஆயுளையும் எண்ண வேண்டி வந்தது.
இது ஒன்றுதான் நான் அவளிடமிருந்து மறைத்த விஷயம். இது தெரியாத சாந்தா நான் அவளோடு சரசமாடுகிறேனென்றும் வரவர சின்னப் பையனாக மாறி வருகிறேன் என்றும் என்னை அன்பாக வங்கியில் கோபித்துக் கொண்டாள். ஆனாலும்… ஐ ஆம் நாட் ஒர்ரீட். ஐ ஆம் ஹாப்பி. எழுபது வயது வரை ஆனந்தமயமான வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். ஆனால் நான் இல்லாமல் சாந்தா எப்படி வாழ்வாள் என்ற கவலையே என்னை சித்திரவதை செய்தது. வெளியில் தைரியமாகத் தென்பட்டாலும் அவள் மிகவும் மென்மையானவள். நான் அருகில் இருப்பதால்தான் அவள் தைரியமாக இருக்கிறாள். நான் அவள் அருகில் இல்லாத கணம் அவள் பலவீனமாகி விடுவாள்.
திருமணத்தில் அவள் என் பாதத்தை ஒருமுறைதான் தொட்டாள். நான் ஒவ்வொரு கணமும் அவள் பாதத்தை என் தலைமேல் வைத்துப் பூஜிக்கிறேன். அவள் என் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டி வளர்த்த போது நான் அவளை என் இதயத்தில் கோவில் கட்டி ஆராதித்தேன். அவள் இனிய புன்னகைப் பூவின் பரிமளமானால், நான் அந்த பரிமளத்தில் மயங்கித் திரியும் வண்டானேன். அவள் ப்ரகிருதியாக வரவேற்றபோது நான் புருஷனாகப் பரவசமடைந்தேன். அவள் மனைவியாக இரட்டிப்பு காதலோடு அரவணைத்தபோது நான் கணவனாக செய்வதறியாது அவளுக்குள் காணாமல் போனேன். இப்போது உண்மையிலேயே அவளுடைய வாழ்விலிருந்து நான் காணாமல் போகப் போகிறேன்.
கர்வமாக, அதிசயமாக, நீண்டுயர்ந்த கொடியாக, நேராக நின்ற என் சாந்தா, நான் இல்லாமல் இறக்கப்பட்ட கொடிபோல சுருங்கிப் போவதை என்னால் ஊகிக்க முடியவில்லை.
யோசனையில் ஆழ்ந்திருந்தபோது என் கண்ணீர் கூட வெளியில் சோபாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என் தோழிக்கு, என் வாழ்க்கைத் துணைவிக்கு தெரியக் கூடாதென்று நிசப்தமாக கன்னங்களில் வழியத் தொடங்கியது,
அண்மையில் டிஜிட்டல் டெக்னாலஜி வளர்ந்தபின் திரைப்படங்களில் எமன் நேரில் தோன்றி ஜீவர்களின் உயிரை பறித்துச் செல்லும்முன் அற்புதமாகப் பிரகாசித்து தங்கக் கதிர்களாக ஒளிவீசும் பாசக் கயிற்றை வீசுவதைக் காண்பிப்பார்கள். அப்படிப்பட்ட எம பாசம் எப்போது என்னை நோக்கி வீசப்படுமோ என்ற கவலையில் கண்ணை மூடினேன்.
“ஹல்லோ, என்னங்க சார்?”
“எங்கப்பா இறந்துட்டாங்க, ஐயா. ஒரு சவப்பெட்டி அனுப்புங்க”
ஐந்து நிமிடங்களுக்குப் பின்,
“ஹல்லோ! என்ன? அதே வீட்டிலிருந்து கூப்பிடறீங்களா?”
“ஆமாங்க, ஐயா. இன்னொரு சவப்பெட்டி அனுப்புங்க”
“இன்னொன்றா? நீங்க யாரு?”
“அவுங்க மகன். எங்க அம்மாவும் இறந்துட்டாங்க”
– தெலுங்கில் – டாக்டர் பிரபாகர் ஜைனி, தமிழில் – ராஜி ரகுநாதன்
– பெண்மணி இதழில் நவம்பர் 2020 ல் வெளிவந்தது.