கன்னாட் ப்ளேஸின் நடுவிலுள்ள பார்க்கிலிருந்து சுற்றிலும் நோக்கிய போது தான் ஒரு கூட்டுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது அவனுக்கு.
பார்க்கினுடைய இரும்புக் கிராதிகளைச் சூழும் கருப்புத்தாரிட்ட கரடுமுரடான வட்டத்திற்கந்தப்புறம் உருண்ட பெருந்தூண்கள் வரிசையாக நிற்கின்றன. அதற்கும் பின்னால் பலமான சுவர்கள். சுவர்களிலுள்ள ஜன்னல்களில் பலவிதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.
தான் நிற்கும் நிலத்தைப் ‘பார்க்’ என்று சொல்ல முடியாது. சமமில்லாத ஈரமான நிலத்தில் புல் கட்டற்றுப் படர்ந்திருக்கிறது. இருளிற்குக் கனம் கூட்டுவதற்காகப் பந்தலிட்டு நிற்கும் மரங்களை வளர்த்திருக்கிறார்கள். மரப்பட்டைகளாலான பழைய பெஞ்சுகள் போட்டிருக்கிறார்கள்.
மிகவும் இருட்டியாகிவிட்டது. கடைகளெல்லாம் அடைத்துவிட்டிருந்தன. காலியான ரோடில் அவ்வப்போது ஓரிரு வாகனங்கள் கடந்து சென்றன. கட்டடங்களில் நீலம், சிவப்பு, மஞ்சள் நிற நியான் எழுத்துக்களும் சித்திரங்களும் பளீரிடுவதும், மறைவதுமாக இருந்தன.
பார்க் ஆளற்றிருந்தது.
ஒரு கூண்டில் அகப்பட்டுக் கொண்டவனைப்போல அவன் அங்கே நின்றான். மனதில் இருப்புக் கொள்ளாத, இனமறியாத வேதனை வியாபித்திருந்தது. இங்கே வந்தது முதல் இது மனதில் இருக்கிறது. என்ன காரணம் இதற்கு? ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாட்கள் கழியக்கழிய அதனுடைய ஆழம் அதிகமாகி மிகவும் அலட்டியது.
தான் இக் கூண்டிலிருந்து விடுபடப் போகிறோம். இன்னும் சில மாதங்களே தேவை. அதை நினைத்தபோது சந்தோஷம் உண்டாயிற்று. ஊரில் ஆரம்பிக்கும் மத்ய அரசின் ஒரு கம்பெனியில் தன்னை நியமிக்க சிபாரிசு போயிருக்கிறது.
நான் இங்கிருந்து விடுதலை பெறுகிறேன்!
நகரத்திலிருந்து வெகுதூரத்திலிருந்து ஒரு குன்றுப் பகுதியில் ஃபாக்டரி. ஒதுக்கமான ஒரு வீட்டில் அமைதியான வாழ்க்கை. இழந்த சுகங்களை யெல்லாம் மீண்டும் பெற வேண்டும். அப்போது மனதிற்குச் சமாதானம் கிடைக்குமாயிருக்கும்.
மறந்தாயிற்று என நினைத்திருந்த ஒரு பெண்ணைப் பற்றி சமேபகாலமாக மீண்டும் நினைக்கத் தொடங்கியிருக்கிறான். தன்னுடையவளாயிருந்தாள் அவள். திருமண யோசனைகளை அவள் அத்தனை ஒதுக்கித் தள்ளியதை அறிந்தபோது மகிழ்ச்சியின்மையே உண்டாகிக் கொண்டிருந்தது. யாருக்காக அவள் காத்திருக்கிறாள்? வாழ்நாள் முழுவதும் தன்னைக் குற்றவாளியாக்க……
இப்போது அதில் மகிழ்ச்சி உண்டாகிறது. தன்னுடைய வீட்டை ஆள, தன் குழந்தைகளுக்குத் தாயாக ஆவதற்கு இருப்பவள்.
ஒரு பெஞ்சின்மேல் சுருட்டிக் குவிந்திருந்த கம்பளியின் உள்ளிருந்து பலமான இருமல் எழுந்தது ரங்கசாமி அய்யர். இவர் ஏன் இப்போதும் இங்கே இருக்கிறார் என்று ஆச்சர்யப்படுவதுண்டு. என்ன காரணத்தால்? உற்றார் யாருமில்லை இங்கே. படுக்க இடம்கூட இல்லை. பனிக் காலத்தின் சில்லிட்ட இரவுகளைப் பப்ளிக் பார்க் பெஞ்சில் கழிக்கிறார்.
இருபது வருடங்கள் முன்பு பென்ஷன் வாங்கினார். சமையல்காரனாகத்தான் வந்தார். அரசாங்க சர்வீஸில் அஃபீஷியேட்டிங் அஸிஸ்டெண்டாக ரிட்டயர் ஆனார். இருக்கும் ஒரு மகளை மதுரையில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். மனைவி எப்போதோ இறந்து போய்விட்டாள். இரண்டு வேளைச் சாப்பாட்டுக்குகூடக் காணாத கேவலமான பென்ஷன் மட்டும்தான் வரவு. இருந்தும் ஏன் இந் நகரத்தைவிட்டுப் போவதில்லை?
குளிர்காற்று அடிக்கிறது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அதோடு பனிக்காலம் அதிகாரபூர்வமாக ஆரம்பமாகிறது.
திரும்பிப் பார்த்தபோது மேலே பூரண நிலவு தெளிவாக நிற்கிறது. ஜும்மா மசூதியின் வெண் மார்பிள் ஸ்தூபிகள் நிலவில் பளீரிடுகின்றன.
இந் நகரத்தின் ஆத்மாவை முகல் சரித்திரத்தில்தான் கண்டு பிடிக்க முடியும் என்று தோன்றுகிறது.
சுந்தர் நகரிலுள்ள தனது ஆஃபீஸிலிருந்து பார்த்தால் இந்திரப் பிரஸ்தம் இருந்த இடத்தில் நிற்கும் பெரிய கருங்கற்கோட்டை.
சுயநலத்திற்காகப் பொய் சொல்லலாம்; துரோகம் செய்யலாம்; இரத்த சம்பந்தமுள்ளவர்கள். குருநாதர்கள் இவர்கள் எல்லோருடைய இரத்த்த்தைச் சிந்தலாம்-இவற்றிலெல்லாம் நிறுவப்பட்ட ஒரு நாகரிகமே இங்கே உடல்கொண்ட்து. பெண்கள் சூதாட்ட்த்தில் பணயம், போதையில் சன்மானம் முதலியவற்றிற்கன பொருட்களாயிருந்தனர்
இன்று இங்கே ஒரு மொகலாயாச் சக்ரவர்த்தி வசித்த கோட்டை நிற்கிறது. முகல் வாழ்க்கைக் காலத்திலும் இதெல்லாம்தான். சொந்த சகோதரர்களின் இரத்தம் சிந்துகின்றனர். தகப்பனாரைக் குற்றவாளி யாக்குகிறார்கள். தயவற்று துரோகம் இழைக்கிறார்கள். தமக்குள் ஏமாற்றுகிறார்கள், வஞ்சிக்கிறார்கள். பரஸ்திரிகளைத் தன்னுடைமை யாக்க முயற்சிக்கிறார்கள். அரசுரிமைக்காக, பொருளுக்காக, போக வாழ்க்கைக்காக.
இக் கோட்டையை நோக்கியவாறு சோம்பேறித்தனமாக அமர்ந்திருக் கையில் யோசிப்பதுண்டு. எதுதான் இந் நகரத்தின் ஆத்மா? பக்கத்திலேயே யுவதியான ஸ்டெனாக்ராஃபரை வழிக்குக் கொண்டுவர சப்ராஸி முயற்சி செய்துகொண்டிருக்கிறான். இந்த ஆஃபீஸில், போகட்டும். இந் நகரத்திலேயே வேலை அவசரத்துடன் யார் இருக்கிறார்கள்? கிணற்றிலிருந்து நீரிறைக்கும் காளைகளைப் போல சோம்பேறித்தனமாகவும், பழக்கப்பட்டுவிட்டவர்கள் போலும். உற்சாகமின்றி வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
ஓரிரவு அவன் உடன் பணிபுரியும் ஆபிரகாமுடன் ரிவோலியிலிருந்து ஃபர்ஸ்ட் ஷோ முடிந்து வெளியே வந்துகொண்டிருந்தான். டிஸம்பர் வந்தாயிற்று. கடுமையான குளிராயிருந்தது.
கன்னாட் ப்ளேஸின் நடுவிலுள்ள பார்க்கில் ஒரு பெஞ்சில் சுருண்டு குவிந்திருந்த கம்பளியின் உள்ளிருந்து ரங்கசாமி அய்யரின் இருமல் எழும்பிக்கொண்டிருந்தது. பழகிச் சிதைந்த இந்தக் கம்பளியால் இந்தப் பார்க்கின் கடுங்குளிரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. எத்தனை வருடங்கள் பழகியதாக இருக்கும் இக் கம்பளி! மேலே ஒரு கூரைகூட இல்லாத மனிதன். வருத்தம் தோன்றியது.
ஒரு தடவை இப் பார்க்கில், தான் மாட்டிக்கொண்ட கூட்டைக் குறித்து நினைத்துக் கொண்டிருக்கையில்தான், இருட்டிலிருந்து தெளிவான தென்னிந்திய உச்சரிப்பான இங்கிலீஷில், “சார், ரெண்டு நாளா நான் ஒன்றும் சாப்பிடலை; ஒரு ரூபா தந்தா…..”
அப்படித்தான் ரங்கசாமி ஐயரிடம் பரிச்சயமுண்டாயிற்று. கொஞ்சம் சம்பாதித்திருந்தது மகளின் கல்யாணத்திற்குச் செலவாகி விட்டது. தவிர, கடனும் வாங்கவேண்டி வந்தது. சில வீடுகளில் ட்யூஷன் இருந்தது. உத்யோகஸ்தர்கள் மாற்றலாகிப் போனார்கள். குழந்தைகள் பெரியவர்களானார்கள். ரங்கசாமி அய்யருக்கு வயதாயிற்று. புதிதாக அவரை ஓரிடத்திலும் ட்யூஷனுக்கு நியமிக்கவில்லை. கேவலமான பென்ஷன் மட்டுமே வரவு. சாப்பிடக் காணாது. அப்படியிருக்க வாடகை கொடுப்பது எப்படி? பொதுப் பூங்காவிற்கு வாசம் மாற்றினார்.
பாவம்! இப் பென்ஷனை வைத்துக் கொண்டு ஊரில் நாளை ஓட்ட முடியுமா? முடியாதென்பதே காரணமாயிருக்கும் ஊருக்குப் போகாததற்கு.
கோயம்புத்தூரிலுள்ள நாகப்பன் செட்டியாருக்கு எழுதவேண்டும். அவன் ஒரு வேலை கொடுத்தால் ரங்கசாமி அய்யருக்குப் பெரிய உதவியாக இருக்கும். ஊருக்கும் மகளுக்கும் சமீபமாகப் போகலாம். நாகப்பன் ஏதாவது செய்யாமல் இருக்கமாட்டான். படிக்கும் காலத்தில் நெருங்கிய நண்பர்களாயிருந்தனர். அவன் தகப்பனின் பிசினஸை மேனேஜ் செய்கிறான். நான் அரசாங்க உத்யோகம் பார்த்து அழிகிறேன்.
“நீ லாட்ஜுக்கு வா, தொண்டை நனைக்கலாம்.” ஆப்ரகாம் சொன்னான்.
இவன் சம்மதித்தான்.
ஆப்ரகாம் அங்கே பக்கத்திலேயே இருந்த ஒரு தென்னிந்தியன் மெஸ்ஸில்தான் தங்கியிருந்தான்.
கன்னாட் ப்ளேஸில் அந்நிய நாட்டு மதுக்கடைகளில் இந்த போர்ட் தொங்கியது. “டுமாரோ இஸ் ஃப்ரைடே!” தொண்டை நனைக்க வேண்டுமென்பவர்கள் இன்றே வாங்கிக்கொள்ளுங்கள் என்றே அவை சூசகமாகச் சொல்கின்றன.
ஆப்ரகாம் வாங்கி வைத்திருந்தான். அவனோடு அவ்வறையில் இருப்பவன் ஊரில் இல்லை.
உடம்பில் கொஞ்சம் சூடேறியதும் ஆப்ரகாம் கேட்டான்: “நீ வரியா?”
“எங்கே?”
“லாஜ்பத் நகர்.”
அவன் குறிப்பிடுவது புரிந்தது. அங்கே வசிக்கும் மரியாவின் ஒரு வாடிக்கையாளனாக இருந்தான் அவன்.
“நான் வரலை.”
“மாரியாவின் மகள் கான்வென்ட்டிலிருந்து வந்திருக்கிறதாய்க் கேள்விப்பட்டேன்.” ஆப்ரகாம் தொடர்ந்தான். “மகள் கொஞ்சம் கூட வளரட்டும்; ஒரு வருஷம் கூட ஆகட்டும்னு போன தடவை அவ சொன்னா. இந்த வாட்டி எப்படியாவது சரிக்கட்டணும்.”
இவனுக்கு வெறுப்புண்டாயிற்று. “நீ இன்னுமொரு வேசியை உருவாக்குகிறாய். தாயோ இந்தத் தொழிலில் இறங்கிட்டா. மகளையும் நீ இதில் இறக்கவேண்டுமோ?”
“போடா! நீயும் உன் வேதாந்தமும்!”
ஆப்ரகாம் தொடர்ந்தான்: “ரவி, சத்யசந்தமான பந்தம் இதொண்ணு மட்டுந்தான். அன்பின் அர்த்தமில்லாத வார்த்தைகளில்லை; கவர்ச்சியூட்டல்கள் இல்லை; வஞ்சனை இல்லை; சொந்தம் கொண்டாடலில்லை; நிராசையும் துக்கமும் இல்லை. அவ்வப்போது கணக்குச் சொல்லித் தீர்க்கும் உறவு.”
இதையொன்றும் கேட்டுக்கொண்டிருக்கத் தனக்கு விருப்பமில்லை. அன்பின் வார்த்தைகளில்கூட, கவர்ச்சியூட்டலில்கூட எல்லாவற்றையும் அடைவதே தன்னுடைய குறிக்கோள். தான் அதை ஒரு கலையாக்கி விட்டிருக்கிறோம் – இவன் நம்பினான்.
இறுதியில்…
“என் அப்பாவும் அம்மாவும் இத் திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டாங்க.”
“உங்கள் அன்பு மட்டும் போதும் எனக்கு; எந்தக் கஷ்டத்தையும் பொறுத்துக்கொள்ள நான் தயார்.”
“இல்லையில்லை. கஷ்டத்தை நோக்கி உன்னை நான் அழைத்துப் போகமாட்டேன்.”
இல்லாவிட்டால் வேறு என்னவெல்லாம் சல்ஜாப்புக்கள் உள்ளன. முடிப்பதும் ஒரு கலைதான்.
ஆப்ரகாம் போய்விட்டிருக்கிறான். அறையைப் பூட்டிச் சாவியை மானேஜரிடம் கொடுத்துவிட்டுத் தானும் போகலாம். போகவில்லை. மனதில் ஏனென்றறியாத துக்கம் பொங்கி வழிந்தது.
ஜன்னல் வழியாகத் தெரிந்த நீல வானம் சலனமற்றிருந்தது- கான்வாஸில் தேய்த்த வர்ணம் போல. முழு நிலவை மறைத்தும் வெளிப்படுத்திக்கொண்டும் பிளந்து கிடந்த நீலமேகம் ஒரு சிறுமியின் நிர்வாணமான நிரம்பிய மார்புமீது விழுந்து கிடக்கும் துண்டைப் போலக் காட்சியளித்தது.
அவன் அறையைப் பூட்டிவிட்டுக் கீழே இறங்கினான். சாவியை மானேஜரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான். பழக்கமுள்ள ஒரு பெண்ணிடம்தான் திரும்பிப்போனான். ஒருபோதும் ஒன்றையும் மறுத்தவளில்லை.
அடுத்த நாள் ஆஃபீசில்தான் அதை அறிந்தான். வயதான ஒரு சப்ராஸி. அவன் வசித்தது லாஜ்பத் நகரில்.
அவன் வீட்டுப் பக்கத்தில் ஒரு பெண் தூக்கு மாட்டிக்கொண்டு செத்தாள். அவளுடைய தாயார் அவளுக்குச் செலவிற்கு வேண்டிய பணத்தைப் பல புருஷர்களிடமிருந்து சம்பாதித்திருந்தாள். இதை அவள் தெரிந்துகொண்டது நேற்றுத்தான். நேற்று அவளை ஒரு புருஷனுக்குக் காட்சி வைக்க அவளது தாயார் முயற்சித்தாள். அதுதான் காரணம்.
“தங்கம் போல பொண்ணு.” சப்ராஸி சொன்னான். “என்ன நிறம்!
என்ன அழகு! பதினாறு பதினேழு வயசே ஆகியிருக்கும்.”
சப்ராஸி சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆப்ரகாம் அங்கே வந்தான். இவன் சொன்னான்: “மரியாவின் மகள் தற்கொலை செய்து கொண்டாளாம்.”
“பெண் பிள்ளைகளுக்குப் பகுத்தறிவு இல்லைன்னா என்ன செய்யிறது?” நிராசையுடனும் கோபத்துடனும் அவன் சொன்னான்.
தனக்கு இந் நகரத்தில் எல்லாவற்றின்மேலும் வெறுப்புண்டாகி விட்டது. மனத்தில் துக்கம் மட்டுமே இருக்கிறது. இங்கிருந்து விடுதலை பெற வேண்டும்.
மாலையில் கிளப்பில் கோபாலனைப் பார்த்தபோதும் இவனுடைய மனநிலை மாறியிருக்கவில்லை.
“ஏன் இப்படியிருக்கே? வேண்டியவன் யாரோ செத்ததுபோல!” அவன் கேட்டடான்.
“இங்கே வந்தப்புறம் என் மனம் சமாதானம் என்னங்கிறதை அறியவில்லை.” இவன் கூறலாயினான்: “இங்கேயிருந்து எப்படியாவது போகணும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம்.”
“இந் நகரம் ஒரு பிசாசைப் போன்றது” கோபாலன் சொன்னான்.
“உனது ஆத்மாவிற்காக எப்போதும் உன்னைத் தொந்திரவு பண்ணிக் கொண்டே இருக்கும்.”
“என் ஆத்மாவை நான் காட்சியாக: வைத்தாச்சு”. இவன் மந்தகாசம் புரிந்தான்.
“அப்படியானால் இனிமேல் கதியில்லை. நீ இதன் அடிமையாகியிருக்கிறாய்.”
மனதிற்குள் சிரித்துக்கொண்டான். என்னவெல்லாம் கற்பனைகள்!
பிசாசும், ஆத்மாவும், அடிமைத்வமும். நான் இங்கிருந்து போகையில் என்ன சொல்வான்? இன்னும் சில வாரங்களுக்குள் நான் இங்கிருந்து விடுதலையடையப் போகிறேன். அடிமையாகிவிட்டிருக்கிறேனாம்!
நாகப்பன் செட்டியார் வந்திருந்தான். ஒரு பார்லிமெண்ட் மெம்பரிடம் ஏதோ காரியம் ஆகவேண்டியிருந்தது. பெர்மிட்டோ, லைசென்ஸோ என்னவோ?
ரங்கசாமி அய்யரைக் கூப்பிட்டு வரவழைத்தான். குளிக்க எண்னையும் சோப்பும் கொடுத்தான். தனது ஷர்ட்டையும் வேஷ்டியையும் அணியக் கொடுத்தான்.
நாகப்பனுக்கு ஆர்வம் உண்டாயிற்று. ஏதாவது அந்த மனிதருக்குச் செய்து கொடுக்கிறேன் என்றான். அவர்கள் பல விஷயங்களைக் குறித்தும் பேசிக்கொண்டிருக்கும்போது அய்யர் வெளியே காத்து நின்று கொண்டேயிருந்தார். அவருக்கு மிகவும் சந்தோஷமாயிருக்குமென்று இவன் நினைத்தான்.
விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது செட்டியார் வாசல் வரையிலும் வந்தான். அய்யரிடம் சொன்னான்: “நான் நாளன்னைக்குப் போறேன். என்னோட வந்துடுங்க, ஏதாவது வேலை தரேன். நாளை ஓட்டக் கஷ்டமிராது.”
ஆச்சரியம் உண்டாயிற்று. அய்யர் குழம்பி நின்றிருந்தார், அவ்வளவுதான்.
நாகப்பன் கேட்டான்: “என்ன ஒண்ணும் சொல்லலியே? வரலிங்களா?”
சற்று நேரத்திற்குப் பிறகே அய்யர் சொன்னார்: “நான் விஷயத்தை ஸார் கிட்ட சொல்றேன்.”
“அப்படியே ஆகட்டும்” -செட்டியார் அதை இரசிக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தனக்கும் பிடிக்கவில்லை.
அய்யர் வேகமாகப் போனார்.
விஷயம் சொல்ல ரங்கசாமி அய்யர் வரக்காணோம். ஒரு மாலையில் கன்னாட் ப்ளேஸில் அவரைக் காணநேர்ந்தது. தனது பழகிக் கிழிந்த கம்பளியால் மூடிப் போர்த்திக்கொண்டு பெண்கள் ஆடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு கடையின் முன்னால் அவர் நின்றுகொண்டிருந்தார்.
தன்னுடைய குரல் கேட்டதால் உண்டான இக்கட்டு வெளிப்படையாத் தெரிந்தது- “நீங்க வந்து விவரம் சொல்றேன்னுட்டு அப்புறம் காணுமே.”
ஒரு குற்றவாளியைப் போலவே அவர் பதில் சொன்னார்: “அது வேண்டாம் ஸார்!”
சற்று நேரத்திற்குப்பின் அவர் தொடர்ந்தார்: “இங்கேயே ஏதாவது வேலை கொடுக்க முடிஞ்சா…”
இவன் தன்னையே சமாதானப்படுத்திக்கொள்ள முயற்சித்தான். எதற்காகக் கோபப்படுகிறோம்? இங்கேயிருந்து விடுதலை பெறுவதற்கான வழியைத்தான் காட்டிக்கொடுத்தோம். விடுதலை பெற அவருக்கு இஷ்டமில்லையானால் தான் என்ன செய்வது? தன் காலிலேயே நிற்கிற மனிதர் அவர்.
ஜனவரியின் ஆரம்ப தினங்கள். இந் நகரம் கடுங்குளிரில் உறைந்து போயிருக்கிறது. ஸஃபதர்ஜங் ஏர்போர்ட்டின் தெர்மாமீட்டரில் பாதரசம் பூஜ்யத்திற்கும் கீழே இறங்கியது.
மாலையில் சூப்பர் பஜாருக்குப் போனான். விற்பனைக்கு வரும் புதுப்புது பொருட்களைப் பார்க்கலாம். ஷாப்பிங்கிற்கு வருபவர்களைப் பார்க்கலாம். விற்பனை செய்பவரையும் பார்க்கலாம். திருவிழாவிற்குப் போவதுபோலிருந்தது.
திரும்புகையில் ஆப்ரகாமின் மெஸ்ஸிற்குப் போனான். உடம்பிற்குக் கொஞ்சம் சூடேற்றினான். வெளியே வந்தான்.
கன்னாட் ப்ளேஸின் நடுவிலுள்ள பார்க்கின் பக்கம் வந்தபோது பழக்க தோஷத்தால் பார்த்துவிட்டான், ரங்கசாமி அய்யர் அங்கே இருக்கிறாரோவென்று.
பெஞ்சில் அவருடைய கம்பளி சுருண்டு கிடந்தது. அதனுள்ளிருந்து வழக்கம்போல் இருமல் கேட்கவில்லை. பக்கத்தில் போனபோது பார்த்தான், ஒரு எறும்புச்சாரி கம்பளியின் உள்ளே செல்வதை. கம்பளியின் வழியாக உடம்பு தெரிந்தது. துர்நாற்றம் வீசத்தொடங்கும்போது யாராவது முனிஸிபாலிட்டிக்குத் தெரிவிப்பார்கள்.
மிகவும் துக்கம் உண்டாயிற்று அவனுக்கு. ஆப்ரகாமிடமும் ரங்கசாமி அய்யரின் கதையைச் சொன்னான்.
“இங்கே வந்தால் பிறகு விட்டுப் போவது என்பதில்லை.” ஆப்ரகாம் சொன்னான். சற்றுக் கழித்து அவன் தொடர்ந்தான்:” இந் நகரம் சாமர்த்தியசாலியான ஒரு தேவடியாளைப் போலவாக்கும். இங்கே வருகிறவர்கள் இங்கேயே பற்றிக்கொள்கிறார்கள். அழிகிறார்கள்.”
இது சரியா…?
நடக்கும்போது அவன் தொடர்ந்தான்: “அக்பர் ஆக்ராவிலிருந்து ஒரு சாம்ராஜ்யம் ஸ்தாபித்தார்.அவருடைய பின் தோன்றல்கள் இந் நகரத்தில் குடியேறியது முதல் அவர்களது அழிவு ஆரம்பித்தது. பிரிட்டிஷார் கல்கத்தாவிலிருந்து ஒரு சாம்ராஜ்யம் நிறுவினார்கள். தலைநகரை இந் நகரத்திற்கு மாற்றியகாலத்தில் அவர்களது பிரதாபத்தைக் கொஞ்சம் நினைத்துப் பார். முப்பத்தைந்து வருடங்கள் வேண்டியிருக்கவில்லை எல்லாம் அழிய… உங்களுடைய தர்மபுத்ரன் இல்லையா? குருக்ஷேத்திரத்தில் போரில் ஜெயித்தபோது பெரியவருக்குத் தோன்றிற்று -இந் நகரிலிருந்துதான் தன்னுடைய ராஜ்யத்தை ஆளவேண்டுமென்று. இந்திரனின் அரண்மனைக்கு ஈடான ஒன்றை நிறுவி ஆட்சி தொடங்கினார். பிறகு? அவருடைய வாழ்நாளிலேயே எல்லாம் அழிந்தது.”
இப்படியொரு சாபம் இந் நகரத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறதோ?
யார் இந் நகரத்திற்கு டில்லி என்று பெயரிட்டது? கோபுரத்துவாரம். கொஞ்சங்கூட சாதாரணமாகச் சொன்னால் கதவு. அழிவிற்கான கதவோ? இதனுள்ளே நுழைந்து வந்தவர்கள் இந் நகரின் அடிமைகளாகித் தீர்வார்களோ? விடுதலையடைய முடியாதவர்களாவார்களோ?
சே, இதெல்லாம் வெறும் முட்டாள்தனங்கள். மூட நம்பிக்கைகள்.
நான் இதோ விடுதலையடையப் போகிறேன். இதோ பார்த்துக்கொள். நான் போக வேண்டிய நாளை மட்டுமே நிச்சயிக்கவேண்டும். அது என்றைக்கு வேண்டுமானாலும் ஆகலாம். ஊரிலிருந்து ஒரு நண்பன் விவரம் கேட்டு எழுதியிருந்தான். கம்பெனி தீர்மானம் செய்தாகி விட்டது. விஷயத்தை அரசாங்கத்திற்கு எழுதியும் ஆயிற்று.
ஒரு வேளை நாளையே….
அடுத்த நாள் காலையில் ஆஃபீசுக்குப் போனபோது தெரியவந்தது இதுதான். ஸெக் ஷன் ஆபீசராக நியமிக்கப்படுபவரின் பெயர் வந்திருக்கிறது. சிவசரண் அகர்வாலுடைய பெயர். தன்னுடையதில்லை.
அவர் தன்னைவிட ஜூனியர். கவனத்தோடும் நம்பிக்கையோடும் சீக்கிரம் செய்து தீர்க்கவேண்டிய வேலைகள் எப்போதும் தன்னிடமே ஒப்படைக்கப்பட்டன. அகர்வாலுக்கு முக்கியமான எந்த வேலையையும் கொடுப்பதில்லை. மிகவும் சுலபமான கார்யங்களைக்கூட குழப்பியடிக்க அவனுக்கு விசேஷமான திறமை இருந்தது. அப்படியும் இப்போது…..
“டேய், நீ சரியான அடிமுட்டாள்தான்!” ஆப்ரஹாம் சொன்னான்:
“உங்கிட்டே பெண் இருக்கா. கள் இருக்கா, பிண்ட தைலம் குழம்பு இருக்கா?”
சற்றுப் பின்னர் அவன் தொடர்ந்தான்: “பேரைப் பார்த்தால் நீ இந்தப் பக்கத்துக்காரனும் இல்லை.”
இதெல்லாமா காரணங்கள்? நேரான வழியில் இங்கே ஒன்றும் அடைய முடியாதா?
மனதில் நிராசையும் வேதனையும் அதீதமாக உறுத்தின.
லஞ்ச் முடிந்ததும் அண்டர் ஸெக்ரட்டரி கூப்பிட்டார். இவன் கிளர்ச்சி யுற்றவனாகவே நின்றான். அவர் சொன்னார்: “எதற்காகக் கூப்பிட்டேன் என்று தெரியுமா? சந்தோஷமான ஒரு விஷயம் சொல்லத்தான் ரிஃபைனரியிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. உங்களை நியமிக்க அவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். ஊரில்தான். நல்ல சம்பளம் கிடைக்கும். அதோடு இதெல்லாம் இப்போது அரசாங்க சர்வீஸ் போலத்தான்.
நீங்கள் உண்மையான அதிருஷ்டசாலிதான்.”
அப்போதுதான் அவர் இவனுடைய முகபாவத்தைக் கவனித்தார் என்று தோன்றியது. ” என்ன இது? உங்களுக்கு இது பிடிக்கவில்லையா?
“அது எனக்கு வேண்டாம் ஸார்.”
“என்ன சொல்றீங்க நீங்க?’
“நான் முடிவு செய்தாச்சு.”
“திரும்பி வந்து ஸீட்டில் அமர்ந்தபோது அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்: நான் இங்கே ஒரு சூழ்ச்சி செய்யத் தீர்மானிச்சிருக்கேன்.
– ஜயதேவன்
– சமீபத்திய மலையாளச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1980, தொகுப்பு: எம்.முகுந்தன், மொழிபெயர்ப்பு: ம.இராஜாராம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.
நன்றி: https://www.projectmadurai.org/