கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 854 
 

செமஸ்டருக்கென்று ஸ்டடி லீவ் விட்டிருந்தார்கள். ஹாஸ்டல் சாப்பாடு வெறுத்துப் போயிருந்ததால் வீட்டிலிருந்து படிப்போமே என்று ஊருக்கு வந்திருந்தேன்.

ராத்திரி வந்தது முதலே செமதூக்கம்! பத்துமணிக்கு அம்மா, “ஆமா… இப்படித் தூங்கினால் படித்த கிழிச்சாப்லதான்!” என்று சுப்ரபாதம் பாடின பின்பே எழுந்தேன்.

ஹாஸ்டலில் இப்படியெல்லாம் தூங்க முடியாது. கட்டுபாடு, கட்டுப்பாடு! அஞ்சுமணிக்கு எழுணும். ஆறுமணிக்குள் குளியல். அப்புறம் படிப்பு, சாப்பாடு, ஒன்பது மணிக்கு காலேஜ்!

வீட்டில் அந்த பிரச்சனையில்லை. அப்பா செல்லம். அம்மா செல்லம்!”ஒரே பொண்ணு. ஒரே பொண்ணு” என்கிற சுதந்திரம். சலுகை அதிகம். சுகமும அதிகம்.

விரும்பிய நேரத்தில் எழுலாம். முடியை விரித்துப போட்டபடி டேப்பில் மியூசிக் போட்டு ஆடலாம். கேட்பாரில்லை. தனி ரூம் இருக்கிறது. ஷவரில் நனையலாம். வளையலாம்.

ஜன்னல் வழி கடைவீதியில் கண்களைப் பதித்து ஹாயாய் ஈஸிசேரில் நாவல் புரட்டலாம்.

ஆனால்… இப்போது அப்படி முடீயவில்லை. முடியாது. பரீட்சை.. பரீட்சை என்கிற உறுத்தல்! ஜாலி மூடேயில்லை. படிப்பு, படிப்பு!

ஹாஸ்டலில் என்றால் படிப்பு தானே வந்துவிடும். தோழிகளைப் பார்த்துப் பார்த்து போட்டி எழும். அவள் படிக்கிறாளே… இவள் படிக்கிறாளே… என்கிற பொறாமை ஆவேசத்தைக் கிளப்பும்.

வீட்டில் இது ஒரு குறை.

நாமாக படிக்க வேண்டும்.

இப்போதும்…

குளித்து லூஸ் ஹேரில் அமர்ந்திருந்தேன் கையில் பாடப்புத்தகம்! நெட்டுரு போடுவதற்காக நிமிர்ந்தபோது எதிரே டிரஸிங்க டேபிள் கண்ணாடியில் எனது வனப்பு ஈர்த்து. மார்பின் கன பரிமானத்தை பனியன் பறைசாற்றிற்று. வழவழ கன்னம். ரோஸ் கலர் சாயம். செதுக்கின இடுப்பு.

“நிவேதா! உன்னை கட்டிக்கப் போகிறவன் கொடுத்து வெச்சவண்டி!”

தோழிகளின் கிண்டல். ஞாபகத்தில் நாணம் மிதந்தது. என்னைக் கட்டிக் கொள்ளப் போகிறவன் யார்? எப்படி இருப்பான்?

சீ, இப்போ இதுவா முக்கியம்…?

படிப்பு,படிப்பு, படி! கவனம் முழுவதும் அதில்தான் இருக்க வேண்டும். சிந்தையை சிதறவிடாதே! படி!

எத்தனை முயன்றும் கூட முடியவில்லை. மனதில் என்னவோ ஒரு குறை, வெற்றிடம் எதையோ பறிகொடுத்த மாதிரி. என்ன அது?

ஆங்க! மறந்தே போய்விட்டேனே! டானி! எனது செல்ல நாய் வந்திலிருந்து தென்படவே இல்லையே… எங்கேப் போயிற்று?

கதவைத் டிதறந்து, சமையலிலிருந்த அம்மாவிடம், “அம்மா! எங்கே என் டானி?” என்று கத்தினேன்.

“துரத்தி விட்டுட்டோம்!” என்றாள் அசட்டையுடன்.

“துரத்தியா…?”எனக்கு பகீரென்றிருந்தது. “ஏன்… ஏன்?”

“அதுக்கு வெறிபிடிச்சிருச்சு!”

“அப்படின்னு யார் சொன்னது…?”

“பக்கத்துத் தெரு பையனைக் கடிச்சு – ஆபத்தாகிப் போச்சு! அதெல்லாம் உனக்கு ஏன்? நீ போய் படி!”

அம்மாவின் மேல் கோபம் கோபமாய் வந்தது. டானிக்கு வெறியா? நெவர்! இருக்காது. இருக்க முடியாது! பக்கத்துத் தெரு பையனுக்கு ஆபத்தென்றால் அதற்கு டானி என்னப் பண்ணும்? அவன் என்னப் பண்ணினானோ… எதைத் தின்றானோ?

அறைக்குத் திரும்பும்போது மனது கனத்தது. படிப்பில் கவனம் போகவில்லை. டானி!

எத்தனை புத்திசாலியான நாய்! மனித ஜென்மம் எடுக்க வேண்டியது அது. தவறி நாயாகிவிட்டதென்று பலமுறை நினைத்திருக்கிறேன்.

அதற்கு அத்தனை அறிவு. அழகு. ஊருக்கு வந்தால் என் பொழுது அதனுடன் தான் கழியும். ஒரு கோடு கட்டினால் போதும் எளிதில் புரிந்துக் கொள்ளும்.

என்னுடன் வாக் வரும். பந்தடிக்கும். கையில் அரிக்கிறதென்று சொறிந்தால் ஓடிவந்து தன் காலால் சொறிந்துவிடும். லைட் போடும். ஃபேனை அட்ஜஸ்ட் செய்யும். செட்ஸகூட விளையாடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அப்படிப்பட்ட டானிக்கா வெறி…?

சான்ஸே இல்லை. போன மாதம்கூட அதற்கு செக்கப் பண்ணி இன்ஜெக்ஷன் போட்டேனே! அப்புறம் எப்படி…?

யாரோ கதை கட்டி விட்டிருக்கிறார்கள்… எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. டானி… டானி… என்று கண் கலங்கிற்று. இங்கு தானே டானி படுக்கும்! இந்த ஜன்னல் மேல் ஏறிக்கொண்டு குரைக்குமே!

தலைவலி என்றால் மருந்து தேய்ப்பதென்ன, நான் தூங்கும் வரை தானும் தூங்காதே! ஊருக்குப் போகிறேன் என்றால் பஸ் ஸ்டாண்டு வரை வந்து கண் கலங்குமே!

அதற்கெப்படி..?

புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, திருமபச் சமையல்கட்டிற்குப் போனேன்.

“அம்மா! டானி போய் எத்தனை நாளாச்சு?”

“என்ன… நான்கைந்து நாளிருக்கும்!”

“நான்கைந்து நாளாய் அது திரும்பியே வரலியா…?”

“வந்தது. சுடு தண்ணி ஊற்றினேன் பாரு… வீல்… வீல்னு அலறிக்கிட்டு ஓடியே போச்சு!” என்று அம்மா வெற்றிவிழா கொண்டாடாத பெருமிதம்! எனக்குக் கோபம் கோபமாய் வந்தது.

சே! பிள்ளை மாதிரி வளர்த்துவிட்டு கடைசியில் சுடுதண்ணீர்! இத்தனை நாட்கள் அதன் மேல் காட்டின பிரியமெல்லாம் போலியா? ஹம்பக்கா? நாளைக்கு எனக்கும் இந்த நிலமைதானா? எனக்கும் ஏதாவது சீக்கு என்றால் இப்படித்தான் விரட்டிவிட்டு விடுவார்களா…?

டானி. எங்கே -எப்படி கஷ்டப்படுகிறதோ? உடனே அதைப் பார்த்தாக வேண்டம்! எங்கேயென்று போய் தேடுவேன்?

பாவிப் பசங்கள்! சும்மா இருப்பார்களா? வெறி என்றுச் சொல்லி கல்லாயேயே அடித்துக் கொன்று விடுவார்களே… ! அதை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும்.

டிரஸ் பண்ணினேன். முடியை கிளிப் பண்ணினபோது காலனியின் மூளை வீட்டிலிருந்து ‘சியர்ஸ் என்று கத்துவது கேட்டது. உடன் கைதட்டல். விசில்.

பால்கனி வழி எட்டிப் பார்த்தேன். அங்கே ஆட்டோக்களும் சைக்கிளுமாய் குழுமியிருந்தன. தெருவில் ஷாமினா விரித்து, அதன் கீழ் கொடுவாள் மீசையுடன் கோதண்டம் அமர்ந்திருக்க, சுற்றிலும சிங்கிடிகள்! எல்லோருடைய கையிலும் கிளாஸ்கள்!

கோதண்டம் முத்திரை குத்தப்பட்ட ரௌடி ஆளுங்கட்சிக்கு தோஸ்த் அடிதடி, கொலை, ரேப்… என எந்தக் குற்றத்திற்கும் அஞ்சாதவன், வெறியன். அவனைக் கண்டாலே பெண்கள் விலகிப் போவர். அந்தப் பக்கம் சுவாசிப்பது கூட இல்லை.

அவனுடைய வீட்டில் எப்போதும் ஓலமிருக்கும். எம்.எல்.ஏ. யிலிருந்து மந்திரி வரை அங்கு வந்துப் போவர். ராத்திரிரியில் திடீர் திடீரென ஆட்டோ வரும். அதிலிருந்து பெண்கள் மயங்கின நிலையில் இபத்துப் போகப்படுவதை நானே எத்தனையோ முறை பார்த்திருக்கிறன்.

ஏழை பெண்களுக்கு அழகு கூடாது. அழகுடன் இருந்தால் அப்படியே கொத்திக் கொண்டு வந்துவிடுவான். எதிர்க்க முடியாது, கூடாது. முரண்டு பண்ணினால் வெட்டு குத்து! ஆட்சியும் போலீஸும் அவனுக்கு உடந்தை!

அதனால் அவனை எவரும் பகைத்துக கொள்வதில்லை.

நமக்கேன் வம்பு என்று ஒதுங்குபவர்களே அதிகம்.

அவன் யாரையாவது ஏதாவது செய்விட்டுப போகட்டும், நம்மிடம் வராமலிருந்தால் போதும் என்கிற மனோபாவம்!

“நிவேதா! பக்கத்து கடைக்கப் போய் கொஞ்சம் ஏலக்காயும் முந்திரி பருப்பும் வாங்கி வந்துவிடுகிறாயா.?”

நான் பதில் சொல்லவில்லை.

“உனக்கு பிடிக்குமேன்னு காரட் பாயாசம்!”

ஆமாம்! பாயாசம் தான் இப்போ குறைச்சல்! எனக்கு பிடித்த டானியை விரட்டிவிட்டு விட்டுப் பாயாசமாம்!

பர்ஸ் எடுத்துக் கொண்டு, செப்பல் மாட்டப் போனபோது கதவு அவரசமாயும் ஆவேசமாயும் தட்டப்பட்டது.

திறக்க, வெளியே நான்கைந்து பேர் லுங்கியுடனும் அன்டர்வேருடனும் நின்றிருநதனர். அவர்களுடைய கையில் தடி! அரிவாள்! கொடுவாள்! மூக்கில் சாராயம்!

எதுவும் புரியாமல் பார்க்க, “அது இங்கே வந்ததா…?” என்று கண்களால் தேடினர்.

“எது?”

“அதாம்மா, உங்க வீட்டு நாய்!”

அதற்குள் அம்மா ஆஜராகி, “இல்லையே… ஏன்?“ என்றாள்.

“ரெண்டு நாளாய் எங்களுக்கு டகா கொடுத்துகிட்டிருக்கு. கொஞ்ச முன்னாடி இந்த பக்கம் வந்ததாமே…. பார்த்தாச் சொல்லுங்க! அதை விடுவதாயில்லை.”

“ஏன்.?“

“என்னம்மா இப்படி கேட்கறே…? வெறிபிடிச்சதை சும்மாவிடலாமா? கொன்று புதைக்கத்தான்!”

“வேணாம். என் டானியை விட்டிருங்க. கொல்லாதீங்க!” என்று அலறினேன்.

“கொல்லாமல் என்னப் பண்ணுவதாம்? விட்டால் ஆபத்து! எல்லோரையும் கடிக்கும்!”

“கடிக்காது.நான் சொல்வதைக் கேளுங்க. வேணாம். டானி பாவம்.”

அவர்கள் என்னை அலட்சியமாய் பார்த்துவீட்டு “வாங்கனடா போவோம்!” என்று கிளம்பினர். “கடிக்காதாம்! நல்ல கதை!”

“அண்ணே…டேகெ பூச்செடிக்கிடையில் பாருங்க!”

“என்னடா…?”

“டானி!“

“ஆமாண்டோய்… வாங்கனடா! துரத்துங்க!”

“நீ அந்தப்பக்கம் வா! நான் இந்தப் பக்கம்! ஏய்… பார்த்திருசசு. ஓடுது பார்! விடாதே!”

“ஏய்… ஏய… நில்லு! நில்லு!”

அவர்கள் தடியை ஓங்கிக் கொண்டு ஓட, எனது நெஞ்சு துடித்தது. “வேணாம்… வேணாம்! அதை ஒண்ணும் பண்ணிராதீங்க!” என்று அலறிக் கொண்டு பின்னாலேயே ஓடினேன்.

“நிவேதா! இங்கே வா!”

“என்னை விடும்மா!”

“அது வெறி நாய்…! கிட்டேப் போகாதே! கடிச்சிரும்!”

“கடிச்சால் கடிக்கட்டும்!”

“எனக்கென்ன பைத்தியமா…?”

“ஆமாம் டானிக்கு வெறி. எனக்குப் பைத்தியம். என்னையும் அதோடு சேர்த்து அடிச்சு கொன்னிருங்க!”

தடியர்கள் ஆவேசத்துடன் துரத்த டானி காதை சிலிர்த்துக் கொண்டு தாவிற்று. மரத்தை வட்டமிட்டது. முள்வேலியில் அனாயசமாய் பதுங்கி வெளியேறிற்று. உயிரை பிடித்துக் கொண்டு ஓடிற்ற.

அவர்களும் சளைக்கவில்லை. லுங்கி நழுடவினதையும் பொருட்படுத்தர்மல் “விடாதே… ஓடுது!“ என்று துரத்தினர். “உனக்கு அவ்ளோ திமிரா? எங்கே ஓடுவாய் நீ…?”

“வேணாம் வேணாம்…. விட்டிருங்க!”

என் வேண்டுகோட்ள பற்றி எவகுக்கும் பொருட்டில்லை. கவலைப்பட்டதாயும் தெரியவில்லை. மனது டானி… டானி… என்று அஞ்சிற்று. ஓடிவிடு! ஓடித் தப்பித்துவிடு!

டானி…ஏன் இங்கே வந்தாய்?

எங்காவது வெளியூருக்குப் போய் விடுவதுதானே!பாவிகளின் கண்ணில் ஏன் பட்டாய்? எனக்குத்தெரியும். நான் வந்திருப்பது தெரிந்து என்னைப் பார்க்கதான் வந்திருப்பாய்!

அத்தனை விசுவாசம்! அது உனக்கிருக்கிறது. எனக்கிருக்றிது இவர்களுக்கில்லையே… ! பாவிகள்!

ஐயோ! ஓட ஓடத் துரத்துகிறார்களே…. ஐயோ! ஒருத்தன் கொடுவாளை விட்டெறிகிறானே!

“டானி!” என்று நான் காதுகளைப் பொத்திக் கொண்டு கதற, ஒரு இம்மியில் குறி தப்பிற்று. இல்லையென்றால்… இல்லையென்றால் கொடுவாள் போன வேகத்திற்கு இந்நேரம் அது கச்சலாகியிருக்கும்.

தாங்க்காட்!

டானி அதற்கள் ஓடி மறைந்திருக்க, எனக்குச் சமாதானமாயிற்று. அவர்கள் கையை பிசைந்துக் கொண்டு என்னை முறைத்தனர்.

“எல்லாம் உன்னாலதான்! உன்னை யார் இங்கே வரச் சொன்னது?”

“தயவு செஞ்சு என் டானியை விட்டிருங்க!”

“என்னம்மா நீ புரியாமல் பேசிகிட்டு… அதுக்கு வெறி!”

“இல்லை. இருக்காது. இருக்க முடியாது! வெறிபிடிக்கிற அளவிற்கு அதற்று வயசாகிவிடவில்லை. இரண்டு வருட குட்டி தவிர அதற்கு எந்தவித கெட்ட சகவாசமுமில்லை. வெளியே பச்சைத் தண்ணிக்கூட குடிப்பதில்லை. குடிக்கவிடுவதுமில்லை!”

“டேய்! அங்கே என்ன பேச்சு. ! வாடா.!”

அவர்கள், வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு போருக்குப் போகும் சிப்பாய்கள் போல ஓட ஆரம்பித்தனர்.

டானிக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாதே ஆது தப்பித்து விட வேண்டுமே என்று பிரார்த்தித்துக் கொண்டு வீட்டில் நுழைய-அம்மா, “ஏலக்காய் வாங்கி வந்தாயா.?” என்று கர்ஜித்தாள்.

“இல்லை” என்று அறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டு விசும்ப ஆரம்பித்தேன். அவர்களின் துரத்தலும், டானி நாக்கை தொங்கப் போட்டுக கொண்டு ஓடினதும் பரிதாபம் தந்தன.

இதற்காகவ அதை வளர்த்தேன்?

இப்படி அடித்துக் கொல்லவா பிரியமாய் பழகினேன்?

குத்துக்காலிட்டு சோகத்துடன் அமர்ந்திருக்க. கோதண்டத்தின் வீட்டிலிருந்து, “என்னை விடு… என்னை விடு!” என்று பெண் குரல் ஒன்று அலறுவது கேட்டது.

ஐன்னல் திரைச் சீலையை விலக்கிப் பார்த்தேன். அங்கே அவனது வீட்டு வாசலில் வாசல் என்றுக் கூட பார்க்காமல் கோதண்டம் ஏதோ ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து….

அதையும், நான்கு பேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர். சே! மிருகத்தனம். வெறித்தனம். இந்த வெறியனுக்கு முடிவேயில்லையா…?”

பின்பக்கமிருந்து அதற்குள் “ஏய்.. ! விடாதே! அப்படியே வளைத்துப் பிடி! மண்டையை பார்த்துப் போடு!” என்று குரல்கள் ஆர்ப்பரிக்க – சட்டென்று பால்கனிக்கு ஓடினேன்.

அங்கே மரத்தடியில் பயமும் பரிதவிப்புமாய் – களைப்பும் – இளைப்புமாய் டானி பதுங்கி நின்றிருநதது. அதன் கண்கள் செருகி இருந்தன. நாக்கில் வறட்சி. கால்களில் நடுக்கம்.

டானிக்கு அதற்குமேல் ஓடமுடியாதிருக்க வேண்டும். தடிப்பசங்கள் தடியை ஓங்கிக் கொண்டு அப்படியே அதை நெருங்க… நெருங்க…

“டானி! ஓடிவிடு! ஓடிவிடு!” என்கிற எனது அலறல்… அதன் காதுகளில் விழுந்ததா. இல்லை விழுந்ததை அதனால் கிரகிக்க முடியவில்லையா என்று தெரியவில்லை,

அந்தத் தடியர்கள் – ஆவேசத்துடன் ஆயுதங்களை ஓங்கி அதன் தலையில்-

டானி அலறவில்லை. பொத்தென்று சுருண்டு விழுந்தது. நான்தான் “அம்மா…!” என்று அலறிக் கொண்டு ஓடினேன்.

மூளைவீட்டில் இன்னமும் அந்தப் பெண் தன் கற்பை காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள். கோதண்டம் சாராய வெறியுடன் அவளைக் கண்ணாபிண்ணா படுத்திக் கொண்டிருந்தான்.

இங்கே-

நிஜ வெறியன் வெளியே கும்மாள மடிக்கிறான். ஆனால் வாயில்லா என் டானியை அடித்துக் கொன்றுவிட்டார்கள்.

இவர்களால் – இந்த தடிகழுதைகளால் கோதண்டத்தை இதே மாதிரி அடிக்க முடியுமா…வெட்ட முடியுமா? நடுத்தெருவில் வைத்து கொல்ல முடியுமா…? என் மனது அழுதது, கனத்தது, துக்கத்தில் கரைய ஆரம்பித்தது.

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *