கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2013
பார்வையிட்டோர்: 10,580 
 
 

படபடவென வெடிச் சத்தம் ஆரம்பித்தவுடன் எழுதிக் கொண்டிருந்த ஸ்லேட்டை அப்படியே போட்டு விட்டு ஒரே தாவலில் வாசலுக்கு ஓடிய சுனிலைப் பார்த்து அம்மா வியந்து போய் மோவாயில் கை வைத்து “அது இன்னாதான் இருக்கோ. டப்பாஸு சத்தம் கேட்டா உளுந்தடிச்சிகிட்டு ஓட்றான்” என்றாள். அந்த சரம் வெடித்து முடிந்து, புகை மண்டலமும் கலைந்தபின் தான் மனமில்லாமல் உள்ளே வந்தான் பத்து வயது சுனில். காச நோயால் லொக்கிக் கொண்டிருக்கும் அப்பாவிடம் வந்து “எல்லாரும் வெடிக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பா. டப்பாசுக்குக் காசு குடு” என்றான். இருமலுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்த அவர் கையை ஓங்கினார் “போடா. சோத்துக்கே வழியில்லை, அம்மா வக்கீல் வூட்டுக்குப் போய் வந்தப்புறம்தான் தெரியும். இதுல டப்பாசாம், டப்பாஸு”. சுனிலோ விடாமல் “இந்த வீதிலே யல்லாப் பசங்களும் மூணு நாளா வெடிக்கறாங்க. நாளக்குத் தீவாளி. இன்னும் எப்பத்தான் வாங்கறது” என்றான் விவரம் புரியாமல். கொஞ்ச நேரம் புலம்பிட்டு ஒண்ணும் தேறாதுன்னு தெரிஞ்சுண்டு எழுந்து தெரு நெடுகப் போய் வெடிக்காத ‘புஸ்ஸான ” டப்பாஸுகளைப் பொருக்க ஆரம்பித்தான்.

இரண்டு தெரு தாண்டியவுடன் கையிலுருந்த பால் கவரைப் பார்த்தான் – பாதி ரொம்பி இருந்தது. பெரிய வீதிக்குப் போனால் ரொப்பிடலாம்னு அவசரமாக நடந்தான். பெரிய தெருவில்தான், அந்த ஊர் பரம்பரைப் பணக்காரர்கள், வியாபாரிகள் போன்ற மக்கள் வசிப்பதால், எப்பொழுதுமே பெரிய தெருவுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமிருக்கும். இன்றும் சுமாரான சிறுவர் கூட்டம் ஆவலோட வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த்த்து. உயரே போன ராக்கெட் வெடித்தவுடன் ஒரு பெரிய விஸில். குருவி வெடிகளும், லட்சுமி வெடிகளும் காதைப் பிளந்தன. ஓலைப் பட்டாஸும், ஊசி வெடிகளும் கேட்பாரற்றுக் கிடந்தன- எல்லா வெடிகளும் தீர்ந்தப்புறம், தீபாவளிக்கு மறுநாள் தான் இவைகளுக்கெல்லாம் வாழ்வு வரும்- அது வரை அனாதை தான்.
வெடிக்காத பட்டாசுகளை பெரிய தெருப் பிள்ளைகள் எடுக்க மாட்டார்கள்- சுனிலைப் போன்றவர்கள் தான் பாய்ந்து பாய்ந்து எடுப்பார்கள். இன்றும் ஒரு கூட்டம் சுறு சுறுப்பாகப் பொறுக்கிக் கொண்டிருந்தது – சுனிலும் சேர்ந்து கொண்டான். ஒரு எலெக்ட்ரிக் சரம் வெடிக்காததை யாரும் பார்க்காததால், சுனில் ஒதுங்கி தீப்பொறி மேல படாமல் போன போது, எங்கிருந்தோ வந்த ராக்கெட் திசை மாறி அவனை நோக்கியதும் அலறி ஓடினான். பயத்தில் பட்டாசுப் பெட்டிகளின் மேல் காலை வைத்து விழுந்தான். உடனே எழுந்து வெடிக்காத சரத்தை எடுத்த போது கூடவே பக்கத்தில் இருந்த ஒரு ஊசிக் கட்டும் கையில் சிக்கிக் கொண்டது அவனுக்கே தெரியாது. அவனுடைய ஒரே நோக்கு தீ மேல படாமல் ஓடி வெடிக்காததை எடுப்பது,.

அப்படி ஓடியபோது தான் போடேரென்று முதுகில் ஒரு அடி விழுந்தது. “ராஸ்கல். நம்ப தெருலேயே திருடரயா” என்று. அப்பத்தான் அதை கவனித்த சுனில் “சார், சார் நான் திருடல்ல சார்” என்று ஹீனமாக் கத்தியதைக் கேட்க யாருக்கும் நேரமில்லை. தெருவின் முக்கியத்துவத்தால் அவரவர்கள் வந்து ஒரு தர்ம அடி வைத்து, முதுகை பழுக்க வைத்து விட்டார்கள். இதில் கோடி வீட்டு சேட்டுப் பையன் அடுத்த வீட்டு காலேஜ் படிக்கும் பெண்ணுக்கு சீன் காட்டுவதற்க்காக துறத்தி துறத்தி வந்து பெரிய கம்பி மத்தாப்புக் கம்பியால் அடித்தது வலித்தது, சூட்டினால் எரிந்தது. திரும்பி பக்கத்தில் தண்ணீர் வைப்பதற்க்காகக் காலியாய் இருந்த இரும்பு வாளியை எடுத்து ஒரே போடு போட்டதில் சாய்ந்த சேட்டுப் பையன் தலையிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. ‘மாமூலாக’ அந்தப் பக்கம் வந்த ரெண்டு போலிஸ்கார்கள் அவனை இழுத்துப் போய் திருட்டுக் கேஸ் போட்டு அவன் சீர் திருத்தப் பள்ளியிலுருந்து திரும்பிய போது ஊர் மட்டுமில்லை வீடும் மாறி இருந்தது.
இருமலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அப்பா திண்ணையைக் காலி செய்திருந்தார். அம்மாவுக்கு ஜெயிலுக்குப் போன பிள்ளையால் வேலையும் போயிடுத்தாம். பெரிய பஸ் ஸ்டாண்டில் பூ வித்துக் கொண்டிருக்கிறாள். சேட்டு, அடகு வெச்சிருந்த விளை நிலத்தையும் புடுங்கிக் கொண்டாராம். மொத்தத்தில் ஏதோ ஏழ்மையாய் இருந்தாலும் கண்ணியமாக இருந்த குடும்பம் நடு ரோட்டுக்கு வந்து விட்டது. சுனிலுக்கு இன்னமும் அவன் என்ன தப்பு செய்தானென்று புரியவில்லை.

டொக் டொக் என்று சத்தம் கேட்டு அதிர்ந்து இன்நாளுக்கு வந்த சுனில்சேட் ஒரு ஏழைப் பையன் தான் கார்க்கதவை விரலால் தட்டினான் என்று உணர்ந்து கண்ணாடியை தழைத்த போது, அந்தச் சின்னப் பையனின் கிழிந்த ட்ராயர் தெரியவில்லை. ஆனால் “ஸார் டப்பாசுக்குக் காசு குடு சார்” என்றது நெஞ்சைப் பிழிந்தது. தட்டில் விழுந்த நூறு ரூபாயைப் பையன் பார்ப்பதற்க்குள் காரை விரட்டினான்.

வெடிக்காத ஒரு வெடியால் தன் குடும்பமே வெடித்ததில் மனம் வெறுத்த சுனில் யாருக்கும் சொல்லாமல் திருட்டு ரயில் ஏறி , பாவாவிடம் என்ன வேலை என்று கேட்காமல் சோத்துக்காக எந்த வேலையும் செய்யத் துணிந்ததால் சாராயத்திலுருந்து , ஏதோ பாவா கொடுத்த வெள்ளைப் பௌடர் வரை எல்லாவற்றையும் ஊர் ஊராக எடுத்துச் சென்றதில் நல்ல பேரெடுத்தான். இன்று அவன் செய்யும் வேலை அவனுக்கே சிரிப்பு வந்தது. பெரிய போரளிகளிலிருந்து, சின்ன சின்ன நாடுகளிலும் சுனில் சேட்டைத் தான் கேட்பார்கள் “வெடி இருக்கா” என்று. கேட்டு இரண்டே நாளில் கை வெடி குண்டும், நாட்டுத் துப்பாக்கிகளும் கை மாறி அப்படியே கோடீஸ்வரனான். ஆனால் அவனைப் பொருத்தவரை அவன் பழி வாங்கியது ஆயுதங்கள் விற்றதில் இல்லை, கோடீஸ்வரன் ஆனதிலில்லை. அவன் தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்ட ‘சேட்’ தான். அவனைப் பொருத்தவரை அந்தப் பையன் தன்னைத் துரத்தா விட்டால் இதெல்லாம் நடந்திருக்காதாம் !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *