கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 10,826 
 

அந்த அரங்கமே அதிர ஒட்டுமொத்த கூட்டமும் கைதட்டி ஆரவாரம் செய்தது. குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியில் சிரித்து மகிழ்ந்தன.

” நம்ம முருகேசன் ஜோக்கரா வந்தா போதும், இந்த சர்க்கஸ் கூடாரமே அப்படியே ஆர்ப்பரிக்குது. அவன் மொத்த கூட்டத்தையும் கட்டி போட தெரிஞ்ச தெறமசாலி, அவன் வர்ற இந்த இருபது நிமிஷம் போதும். நான் இந்த சர்க்கஸ் நடத்துறதுக்கு” என்று ஏகத்துக்கு பாராட்டினார், சர்க்கஸ் மொதலாளி மோசஸ்.

“என்ன மேனஜர் சார், இன்னும் ஒரு வாரம் நீடிக்கலாம் போல.. ஸ்கூல் திறப்பு வேற தள்ளி போயிருச்சி” என ஒரு கணக்கோடு கேட்டார் மோசஸ்.

” அதான் மொதலாளி என் கணக்கும் ” என்று சொல்லி முடிக்கும்முன், சற்று குரலை தாழ்த்தி.. “நம்ம முருகேசன் கிட்ட கேளுங்க.. அவன் வேற ஊருக்கு போணும்னு ஒத்த காலுல நிக்கிறான்.” என ஓதினார் மேனஜர் குமாரசாமி.

“நம்ம முருகேசன் டா, அவன்”, “அவனுக்கு கூட்டம் வந்தா போதும். குடும்பம், குட்டி எதுவும் வேணாம்.. இங்கேயே இருப்பான். நீ வேணா பாரேன்…” என்றார் மோசஸ். அவருக்கு எப்பவும் முருகேசன் மேல் ஒரு நம்பிக்கை.

“அட நீங்க வேற மொதலாளி, அவன் மொத மாதிரி இல்ல.. ஏதோ புள்ளைக்கு பொறந்த நாளாம்… அதுக்கு போவோணுமாம்.. அவன் நேத்திக்கு தான் சொன்னான்”

“சரி.. நீ எதுவும் கேக்க வேணாம்.. ஷோ முடியட்டும்.. நான் பேசிக்கிறேன், நம்ம பொழப்பு சீசன் பொழப்பு.. காத்தடிக்கும் போதும் தூததிக்கிட்டா தான் உண்டு..” மோசஸ் பேச்சில் சற்று கவலை தெரிந்தது.

அன்று எல்லாம் முடிந்ததும்.. முருகேசனை தனியாக அழைத்து மெல்ல பேச்சு கொடுத்தார் மோசஸ். ” டேய்.. முருகேசா.. இன்னைக்கு உன் ஆட்டம் பிரமாதம் டா.. அந்த ஸ்கூல் வாத்தியார்.. ரொம்ப பேசுனாரு உன்ன பத்தி..”.. ” வர வர உன் வேஷமும், ஆட்டமும் கூட்டதயே அசத்துது..” சற்று அதிகமாகவே புகழ.. முருகேசன் நெளிந்தான்..

“அது ஒன்னும் இல்ல மொதலாளி.. இன்னைக்கு சின்ன புள்ளைங்க கூட்டம் அதிகம்ல.. நான் அதே தான் பண்றேன் ” முருகேசனின் பதில் வழக்கம் போலவே வந்தது…

“ஆமா.. உன் வூட்டுக்கு பேசனும்னு சொன்னியே.. பேசிட்டியா… ? இந்தா பேசு.. என்று போனை கொடுத்து அடுத்த நூல் விட்டு பார்த்தார் மோசஸ்.

கொஞ்சம் தள்ளி போய் பேசினாலும், மோசஸ் குமாரசாமியின் பேச்சை மிக கவனமாக கேட்டார்.

“சொன்னா கேளுடி.. இன்னொரு பத்து நாலுடி…..” , ” அட அவன் கொழந்த.. நீ தான் அத.. இத.. சொல்லி ஏமாத்தனும்….”, ” அடி கழுத… நீ சொன்னா கேக்க மாட்ட… இந்த பொறந்தநாளுக்கு வர முடியாது… எப்படியும் பத்து பதினஞ்சி நாள் ஆகும் புள்ள…”, ” என் புள்ளயா நான் வந்து தேத்திக்கிறேன்.. அவன் கிட்ட சொல்லு.. அப்பா வரும்போது புது சட்ட வாங்கியாரேன்னு…”, “வைக்கிறேன் வை..”.. இப்படி முருகேசன் பேசுவதை மட்டும் கேட்டு ஒரு வழியாக கொஞ்சம் சமாதானமானார் மோசஸ்….

இதை எதயும் கண்டுக்காதது போல… இவரும்.. ” என்ன முருகேசா… என்ன சொல்லுறாவோ.. எல்லாம் சரி தானே… இன்னும் ஒரு ரெண்டு வாரம்… ஊருக்கு போலாம்..” என்று தெளிவாக கேட்டு பார்த்தார்.

“அது ஒன்னும் இல்ல மொதலாளி.. இந்த தடவ.. கொஞ்சம் முன்னால போலாம்னு நெனச்சேன்.. என் மவனுக்கு… அவன் பொறந்தநாளுக்கு.. நான் வெளியே கூட்டி போணும்னு ஒரு ஆசை.. அதான் கொஞ்சம் மனசு சஞ்சல படுது…”, ” ஆனா ந்ம்ம பொழப்பு… கூட்டம் வரும்போது.. நாலு காசு பாத்தாதான்.. அப்பால.. சும்மா வெட்டி ஆபீசர் கணக்கா.. அலயனும்… கிடைக்கிற வேலைக்கு.. ” மெல்லவும் முடியாம.. விழுங்கவும் முடியாம சொல்லி முடித்தான் முருகேசன்..

” அட விடு முருகேசா.. வீட்டுல இப்படி தான் பா…”, ” ஊருல இருக்குற புள்ளைங்க எல்லாம் உண்னப்பாத்து சிரிச்சி ஆனந்த படுது..”, ” உன் மவன.. சிரிக்க வச்சி சமாதான படுத்தவா முடியாது.. ” அதெல்லாம்.. மறந்துடுவான் பா…”

” ஊருக்கு வாத்தியரானாலும்.. அவன் புள்ளைக்கும் வீட்டுக்கு வந்து சொல்லி தானே கொடுக்கணும்..” – அரையும்.. குறையுமா… ஒரு பழமொழி சொன்னான்.. முருகேசன்..

” அப்ப நீயும் வீட்டுக்கு போயி ஆச தீர உன் புள்ளைக்கு ஒரு நாள் வேசம் கட்டு… ” என்று சொல்லி சிரித்துவிட்டு… தான் போட்ட கணக்கு முடித்தவராய் கிளம்பினார்.. மோசஸ்..

” அட.. ஆமா.. நமக்கு இது தோணலியே… என் சிங்க குட்டிக்கு.. ஒரு நாள் வேசம் போட்டு காட்டி.. அவன் குஷி படுத்தனும்.. என்று மனசுக்குள் சொல்லி கொண்டான் முருகேசன். தூக்கம் வராமல், தன் செல்ல மகனோடு.. தன்னுடய ஜோக்கர் வேசம் போட்டு வேடிக்கை காட்ட.. அவன் சிரிக்க… அவன் பொண்டாட்டி பஞ்சவர்ணமும்.. வெக்கபட… மனசுக்குள் நினைத்த படி.. சிரித்து கொண்டான்…

“மொதலாளி.. இன்னைக்கு கொஞ்சம் வெளியே போயிட்டு வரட்டா…”, ” எனக்கு தெரியும்.. நாம கூடாரம் கட்டுற நாளுல.. யாரும் வெளியே போவக்கூடாது… ஆனா.. என் மவனுக்கு இன்னக்கு அஞ்சாவது பொறந்த நாலு…”, “அதான் மனசு கேக்கல..”, ” ஒன்னும் இல்ல .. இந்த தெரு மொனயில இருக்குற ..புள்ளயாருக்கு ஒத்த தேங்காய ஓடச்சிட்டா.. கொஞ்சம்.. மனசுக்கு.. ஒரு ஆறுதலா இருக்கும்…. ” என்று மனசுக்குள் ஒருவித ஏக்கமும், பயமும், ஆசயும், உரிமையும் கலந்து கேட்டான்…

முகத்தில் இறுக்கமும், மனசில் இறக்கமும் கொண்ட மோசஸ்.. ” சரிடா முருகேசா.. போடா.. போடா.. உன் பய பெரிய ஆளா வருவாண்டா… இந்தாடா.. இந்த ரூவா வச்சிக்கோ.. அடுத்த வாரம் ஊருக்கு போவும்போது.. ஏதாவது வாங்கிட்டு போடா..” என்றார்.

” மொதலாளி.. பணம் கூட வேணாம் மொதலாளி.. நான் ஊருக்கு போவும்போது…. இந்த வேசம்….. இந்த துணிங்க.. அப்பால.. இந்த பொம்மைங்க… எடுத்துட்டு போறேன்.. என் பயலுக்கு மட்டும் ஒரு நாள்… கூத்து நடத்தி காட்ட போறேன்….”, ” அடுத்தாப்ல.. வரும்போது.. எடுத்தாரேன்….” என்று சற்று வெட்கததோடு இழுத்தான்..

” அட எடுத்துக்கோ முருகேசா.. ஆனா ஒன்னுடா.. நீ… உன் பய மேல இம்பூட்டு பாசம் வச்சிருக்கியே.. நீ அவன விட சின்ன கொழந்த டா….” , ” சரி கோயிலுக்கு போயிட்டு சட்டுனு வா..”, “இன்னைக்கு ஞாயித்து கெழம வேற… கூட்டம் புல்லா இருக்கும்…” என்று அவன அவசர படுத்தினார் மோசஸ்..

” கூட்டம்.. அதுல குழந்தைகள் அதிகம்.. முருகேசன்.. இன்னைக்கு ஒரு முடிவோட வந்திருந்தான்.. இன்னைக்கு ஏதோ அவன் புள்ளயே கூடாரம் முழுக்க இருப்பதாய் நினைத்து.. மிகவும் ரசித்து.. லயித்து.. சிரித்து.. குலுங்கி.. நடித்து… அந்த சர்க்கஸ் கூடாரமே அதிரும் படி.. வேடிக்கை காட்டி மகிழ்ந்தான். அதிலும்… இவன் யானை பின்னால் வருவது தெரியாமல் .. அது தும்பிக்கையால் தூக்கும் போது.. கை கால்.. ஆகாயத்தில் உதறி நடிப்பான்… அந்த நேரம்.. அந்த கூடாரமே சிரித்து கை தட்டி ஆரவாரம் செய்தது…

முருகேசன்… யானை மேலிருந்து அந்த கூட்டத்தை பார்க்க.. அரங்கமெங்கும்…அவனின் மகன் சிங்காரசுவின் ..சிரித்த முகமே தெரிந்தது… அன்றைய ஷோ.. அவன் மகனுக்காகவே செய்ததாக நினைத்து கொண்டான்.

ஷோ முடித்ததும்.. மோசஸ், முருகேசனை பக்கத்தில் உக்கார வைத்து சேர்ந்து சாப்பிட்டார். சாப்பிடும் போது ஒன்றை சொன்னார்… ” முருகேசா.. என் மனசுல ஒன்னு படுது டா.. இந்த காலத்துல குழந்தைங்க மட்டும் தான் மனசால் சிரிக்கும்.. அதுங்க கடவுளுக்கு சமம்.. அதுங்கல சிரிக்க வைக்க எல்லோராலும் முடியாது.. அது உன்னால் முடியுதுனா அது.. ஒரு வரம்..”

” மொதலாளி… ரொம்ப சந்தோசம்.. இணைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. ஆனா ஒரு சின்ன வருத்தம்.. இவ்ளோ புள்ளைங்கள சிரிக்க வச்சிப்புட்டு.. என் ஒத்த புள்ளய அழ விட்டுட்டேன் இன்னைக்கு.. இன்னைக்கு அவன் பொறந்த நாளு… சத்தியம் பண்ணாத கொறையா சொல்லிப்போட்டு வந்தேன்.. அதான்… வேற ஒண்ணுமில்ல..” சொல்லி முடிக்குமுன் கண்கள் கலங்கினான்.

” முருகேசா.. என்ன சொல்றதுனு தெரியலடா… போடா.. இன்னும் அஞ்சி நாளுடா… போய் நிம்மதியா படு…”, ” உன் புள்ள எங்க போவ போறான்…” என்று தன் குரல் உடைவதை காட்டாமல் சொல்லிவிட்டு எழுந்தார் மோசஸ்.

வர வேண்டிய நாள் வந்தது.. முருகேசனுக்கு, ஒரு கூடையில் அவனுடய ஜோக்கர் வேஷ துணிகளும், பொம்மைகளும் போட்டு , சம்பளம் தந்து விட்டு.. மோசஸ் முருகேசன் காதில் சொன்னார்… ” கூட ஒரு ஐநூறு ரூவா வச்சிருக்கே.. பயலுக்கு ஏதாவது வாங்கிட்டு போ..”

அவரை கும்பிட்டுவிட்டு கிளம்பினான் முருகேசன்… பஸ்ஸில் வரும்போதே.. யோசித்து விட்டான்.. வீட்டுக்குள் போகும்போதே.. இந்த வேஷம் தான்.. கொல்லபக்கமா போயி, ஜோக்கர் வேசம் போட்டு ஒரு அசத்து அசத்தனும்.. அவன சிரிக்க வச்சி சிரிக்க வச்சி பாக்கனும்.. ஊருல் இருக்குற புள்ளைங்கல சிரிக்க வைக்கிற இந்த ஜோக்கர் நாயி.. என் சிங்காரசுவ மறந்துடுச்சி… அவனுக்குள்ளே பேசிக்கொண்டான்…

மெல்ல… பின் வீட்டு வாசல் வழியே எட்டி வீட்டுக்குள் பார்த்தான்… அவன் மனைவி பஞ்சவர்ணம்.. சிங்காராசுவுக்கு ஏதோ பாடம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தாள்…

சட்டென்று.. ஜோக்கர் வேஷத்தோடு.. வீட்டுக்குள் நுழைந்து.. தன் இடுப்பில் இரண்டு கைகளயும் வைத்து கம்பீரமாக நின்றான். அதை பார்த்து பஞ்சவர்ணம் சிரித்தாள்.

அப்படியே, தன் மகன் பக்கம் திரும்பி…. தன் கோமாளி நடை நடந்தான்.. குட்டி காரணம் போட்டு, வழுக்கி விழுந்து, சாய்ந்து சாய்ந்து நடந்து, தன் தலையில் தானே அடித்து கொண்டு, தன் கைகள் சிக்கி கொள்ள.. அதை எடுக்க முடியாமல் திணற.. அந்த சர்க்கஸ் கூடாரத்தயே.. அசரடித்த.. ஒவ்வொரு சேஷ்டைகளை செய்து கொண்டே சிங்காரசுவை பார்த்தான்…

அவன் சற்றும் சலனமின்றி இவனை பார்த்தவாறு சுவரோடு ஒட்டி கொண்டான். சிங்காராசு கொஞ்சமும் சிரிக்காமல் இருப்பதை பார்த்து முருகேசன் விக்கித்து நின்றான்.

சற்று அருகில் போயி.. என்னடா.. நான் பண்றது என் புள்ளைக்கு புடிககலயா? என் மேல கோவமா? என்று சொல்லியவாறே.. தான் முக மூடியை கழற்றினான்….

அடுத்த கணமே…. ஐ…. அப்பா.. என்று குதூகலித்து… வாயெல்லாம் பல்லாய்.. ஓடி வந்து கட்டி கொண்டான்…. ஒன்றும் விளங்காமல்… அவனை தூக்கி முத்தமிட்டு…. பஞ்சவர்ணம் பக்கம் திரும்பினான்…

பஞ்சவர்ணம், முருகேசனை பார்த்து… லேசாக மட்டும் சிரித்து சொன்னாள்…

” நீ.. ஊருக்கு தான்யா ஜோக்கர்.. நம்ம புள்ளைக்கு அப்பா…”

Print Friendly, PDF & Email

1 thought on “ஜோக்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *