ஜைனப்பீ அளித்த தீர்ப்பு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 2, 2022
பார்வையிட்டோர்: 3,483 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருமணப் பத்திரிகையைப் படித்து முடிப்பதற்குள் பொல பொலவென்று நீர் சிந்திய கண்களை ஜைனப்பீ தாவணியின் தலைப்பினால் ஏழாவது தடவை துடைத்துக் கொண்டாள். நெஞ்சின் அடித்தளத்திலிருந்து கொந்த ளித்து எழுந்த நெடுமூச்சு அந்த நங்கையின் உடலை உலுக்கி விட்டது. எந்தப் பிஞ்சு உள்ளம் பல மாதங்க ளாகக் கற்பனைச் சுவர்க்கத்தில் ‘ களிப்புடன் மிதந்ததோ அதே உள்ளம் நடுங்கிக்கொண் டிருந்த விரல்களுக் கிடையே சலசலத்த மஞ்சள் நிறப் பத்திரிகை தெரிவித்த செய்தியினால் துயர சாகரத்தில் மூழ்கிவிட்டது. முகத் தைக் கைகளில் பொதிந்து கொண்டு விசித்து விசித்து அழுத வண்ணம், சிரத்தை ஜன்னல் கம்பிகளின் மீது சிரத்தையின்றி மோதவிட்டாள்.

சுமார் பத்து வருஷங்களுக்கு முன் இப்ராஹிம் சாஹேபின் பெயர் முத்துப்பேட்டையின் சந்து பொந்து களில் அடிபட்டதற்குக் காரணம், அவர் மக்காவிற்கு ‘ஹஜ்’ யாத்திரை செய்துவிட்டு ‘ஹாஜி’ என்ற அடை மொழியைத் தம் நாமகரணத்துடன் சேர்த்துக்கொண்டு தாயகத்துக்குத் திரும்பியதுதான்! அப்பொழுது அவருக் குக் கிடைத்த புகழை மங்கச் செய்து விட்டது ‘ரஜப் மாதம் நிகழ்ந்த நிகழ்ச்சி!

அந்தக் காலத்திலே மரைக்காயர்கள். ராவுத்தர்கள். லெப்பைகள் ஆகிய இவர்களின் குடும்பங்களில் உதித்த காளை யொருவன் பல ‘மக்கர்’கள் காட்டிவிட்டு, பள்ளிக் கூடத்தில் சேர்ந்து, பரீக்ஷை கோதா’வில் இறங்கி, பல்டிகள் பல போட்டுவிட்டு ஆறாவது படிவம் கடந்து விட்டால் போதும். அல்லாவே! ஊரே திமிலோகப்பட்டு விடும். பையன் பாடு ஒரே குஷி! பலவிதப் பணியாரங் களை அருமை மைந்தனின் வயிற்றிலே நாள் பூராவும் அன்பின் காணிக்கைகளாகத் திணிப்பார்கள் பெற்றோர்.

முத்துப்பேட்டை இப்ராஹிம் மகன் நயினா முகம்மது பி. ஏ. பாஸ் பண்ணி விட்டான் என்ற சுபச் செய்தி வந்ததும், ஊரிலுள்ள ஆடவரும் பெண்டி ரும் ஒன்று திரண்டு வந்து அந்தப் ‘பகதூரைக் கண்ணாரக் கண்டு, தரிசித்து, நல்லாசிகள் அருளி, அவ்வீட்டிலே உண்டுவிட்டு நடையிலே திரும்பிப்போக முடியாமல் தடுமாறினர் ! தம் மகன் செய்துவிட்ட ‘ருஸ்தும்’ சாத னையை நினைக்க நினைக்க இப்ராஹிமுக்குத் தலைகால் புரியவில்லை. ஓயாது அலைந்ததனால் அவர் மிதியடிக் கட்டைகள் தேய்ந்து விட்டன.

ரஜப் மாதம் விடைபெற்றுக் கொண்டது. மிக்க சுவாரஸ்யத்துடன் அறந்தாங்கிச் சுருட்டை இழுத்துக் கொண்டு இப்ராஹிம் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.

“என்ன சாயபு! யோசனை பலமாயிருக்கே?” என்று சட்டென்று நடையை நிறுத்திவிட்டு வாசற்படிகளில் ஏறினார் பேட்டை சாம்பசிவையர். தில்லைவிளாகத்தி லிருந்து கத்திரிப் பிஞ்சுகளை வாங்கிக்கொண்டு பேட்டைக் குத் திரும்பிக்கொண் டிருந்தார் அவர்.

“நம்ப புள்ளே ராத்திரி பட்டணம் போவுது” என்றார் இப்ராஹிம். அவர் வதனத்திலே புன்னகை நெளிந் தாடினாலும், கரகரத்த குரலிலே ஏக்கம் தொனித்தது.

“என்ன விசேஷமோ?”

“பி. ஏ . பாஸ் பண்ணிடிச்சுல்லே. அதுக்குப் பட்டம் கொடுக்கிறாங்களாம். அதை வாங்கத்தான் போவுது. ஒரு வாரத்திலே திரும்பிடும்.”

“பின்னே ஏன் கவலைப்படுகிறீர்? சரி …. சாயபு ! உம்ம கிட்டெ ஒரு விஷயம் பேசலாம்னு ரொம்ப நாளா ஆசை.”

“சொல்லுங்கோ.”

நீங்க செய்த புண்ணியம், அவன் பி.ஏ. பாஸ் பண்ணி விட்டான். இந்தத் தஞ்சை ஜில்லாவிலே அதுவும் உங்க சமூகத்திலே இவ்வளவு படித்தவன் வெகு அபூர்வம் சாயபு. சரி…பிள்ளையை என்ன செய்யப் போகிறீர்?”

“அதான் தெரியாமெ முழிக்கிறேன். நம்ம பல சரக்குக் கடையிலே உட்கார வச்சுட்டா என்னான்னு பார்க்கிறேன்”

“அட ராமசந்திரா! இந்த ‘ஒண்டர்புல்’ எண் ணமா வச்சிருக்கிறீர் வேண்டாம் சாய்பு …… வேண்டாம். படிச்ச பையன் அவன். தாலூகா ஆபீஸிலே தள்ளுங்கோ! அடுத்த ஐந்து வருஷத்திலே திருத்துறைப்பூண்டி மாஜிஸ் டிரேட்டாக அவன் வராமல் போனால் கேளுங்கோ”

“நீங்க சொல்றதிலும் நல்லது படுது. இன்ஷால்லா…பார்ப்போம்.”

“பையன் கல்யாணத்துக்கு ஏதாவது பந்தோபஸ்துச் செய்தீர்களா?”

குல்லாவை எடுத்து வழுக்கைத் தலையை நாஸுக் காகத் தடவினார் இப்ராஹிம்.

“சாய்பு சொல்லிவிட்டேன். காலம் பொல்லாத காலம். நம்ப தாவுத் மகன் என்ன செய்தான்? அவனும் படிச்சவன் தான் ! பர்மாக் குட்டி ஒருத்தி போட்ட வலையிலே அந்தக் கோம்பை சிக்கிக்கிட்டு , போன இடமே தெரியவில்லை. ஜாக்கிரதை ! பையன் விஷயத்தை முதலிலே கவனியுங்கோ.”

“நம்ப பையன் அப்படி வழி தப்பிப் போறவன் இல்லிங்கோ”

“எனக்கா சொல்லணும்? நம்ம ஊர் ஷேக் தாவுத் அவுலியா தர்க்காலே ‘பாத்தியா’ பண்ண ஆலத்தம்பாடி ஹமீது சுல்தான் சாயபு குடும்பத்தோடு இங்கே வந்திருக்கிறார். பேட்டையிலேதான் முகாம் போட்டிருக்கிறார். அவருக்கு ஒரே பெண்ணாம்; கிளி மாதிரி இருக்கும்னு என் அகத்துக்காரி சொன்னாள். படிச்சவளாம்” என்று சொல்லிவிட்டு, குட மிளகாய் போன்ற மூக்கிலே ஒரு சிமிட்டா பொடியைத் திணித்தார் சாம்பசிவையர்.

குடும்ப நண்பர் பொடி மட்டையைக் காலி செய்த வண்ணம் பொடி வைத்துப் பேசிய ஆலத்தம்பாடிக் கல் யாண விஷயம் இப்ராஹீமின் மூளையிலே நெடியேறியது.

நண்பர்களின் உரையாடல் வாசலிலே நடந்து கொண் டிருந்த அதே சுப வேளையில் ஆடு திருடின கள்ளன் போல் அங்கும் இங்கும் பார்வையை ஓட்டி விட்டு ஓசைப் படாது அடுப்பங்கரைக்குள் காலடி எடுத்து வைத்தான் நயினா முகம்மது ! வாணாலில் – இரும்புச் சட்டியில் – அகத்திக் கீரையைச் சுண்டிக்கொண் டிருந்த ஜைனப்பீ அவனைக் கண்டதும் எகிறிக் குதித்து ஒதுங்கி நின்றாள்.

“பி.ஏ. படிச்ச நவாபுங்க நீங்க ! இந்தக் கலீஜ் – அசுத்த மான – இடத்திலே கால் வைக்கலாமா?” என்றாள் ஜைனப், புன்சிரிப்புடன்.

“இதைக் கேளு முதல்லே. இன்று ராத்திரி பட்டணம் போறேன் ஜைனப் ” என்று நயினா முகம்மது சொன்னதும் ஜைனப்பின் நெஞ்சு திக்கென்றது.

“ஏனுங்க?” – விழிகளைச் சுழற்றினாள்.

“என் படிப்பு விஷயமாத்தான். ஒரு வாரத்திலே திரும்பிடுவேன். வரும்போது இரண்டு டஜன் ‘ஜிக்னா’ வளையல்கள் கொண்டுவந்து உன் கரங்களிலே பூட்டு

கனிக் கன்னங்களை ஆசையுடன் கிள்ளினான். மேலும் தொடர்ந்து, ‘ஜைனப் … எப்படியோ வாழ்வின் பெரிய பள்ளத்தை ‘அத்தரிபாட்ச்சா கொழுக்கட்டைன்னு சொல்லிக்கொண்டு தாண்டிவிட்டேன். இனி ஒன்று தான் பாக்கி. உன் கழுத்திலே கருவமணி இந்த மாதத் திலேயே விழுந்துவிட வேண்டும், அவ்வளவுதான் “

“நீங்களோ பெரிய பணக்கார வூட்டுப் புள்ளேங்க. உயர்ந்த படிப்புப் படிச்சவங்க. படிச்ச அழகான பெண் களோடு பழகினவங்க. நானோ திக்கற்றவள். ஏழை எதீம்” என்று சொல்லி, உதடுகளைப் பிதுக்கினாள் ஜைனப்பீ .

“இவ்வளவு நாட்களாக உன்னோடு ஒட்டிப் பழகிய பின்பும் என்னை இன்னும் நீ புரிந்து கொள்ளவில்லை. வருஷக் கணக்காக நாகரிகத்தில் மூழ்கிக் கிடந்து, கல்லூ ரிகளில் பருவத்தையும் பெற்றோர் பணத்தையும் பாழ் படுத்தும் நாரீமணிகளை நான் நன்றாகப் பார்த்துவிட்டேன். அவர்களுடன் நீ உன்னை ஒப்பிட்டுக்கொள்வது தமா ஷாவிலும் தமாஷாதான் ! அதெல்லாம் குப்பை! என் ஜைனப் மாணிக்கமாயிற்றே ! உன்னை நான் கைவிட மாட் டேன்” என்று உணர்ச்சியுடன் சொல்லிக்கொண்டு அவளை அணைத்துக்கொண்டான். கரும்புகை சூழ்ந்த அந்த மடவறை அப்போது காதலர் பூங்காவாக மாறிக் காட்சி அளித்தது!

இரண்டாவது உலக யுத்த வெறிக்குப் பர்மா இலக் கான போது அங்கே குடியேறிய தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன்னல்களை விவரிக்கக் கைப் பிடித்த பேனாவே கதறி அழுதுவிடும். ஜப்பான்காரன் ஜபர்தஸ்த் ஒரு புறம் பர்மாக் காரனின் கத்தி விளையாட்டு மற்றொரு புறம். இவர்களு டைய ஜு ஜூ விளையாட்டில் சிக்கிய நூற்றுக் கணக் கான குடும்பங்களில் காதர்பாச்சா குடும்பமும் ஒன்றாகும். முதல் குண்டு வீச்சிலே பெகுவில் இருந்த அவர் வீடு நிர் மூலமானவுடன் அவர் பீவியின் ஆவியும் பறந்தோடி விட்டது. மறு நாளே அவர் கடையை விஷமிகள் சூறை யாடி விட்டார்கள். தன் மகள் ஜைனப்பீயை எப்படியோ தாயகத்துக்குச் செல்லும் கப்பலில் ஏற்றிவிட்டு, காதர் பாச்சா அங்கேயே தங்கி விட்டார். நாகையில் இறங்கிய ஜைனப்பீ முத்துப்பேட்டையை அடைந்து, தன் ஒன்று விட்ட மாமன் வீட்டில் அடைக்கலம் புகுந்ததும் அல்லாமல் நயினா முகம்மதின் உள்ளத்திலும் தஞ்சம் அடைந்தாள்!

“பாழாய்ப் போன சண்டை ஒரு தினுசாக முடிஞ் சுடுச்சாம். ரங்கூனுக்குக் கப்பல் கிளம்புகிறதாம்” என்று கூறிக்கொண்டே தாயக் கட்டையை உருட்டினாள் ஆமீனாபீ .

“வாப்பா என்னவானார்?” என்று ஆவலும் திகிலும் கிளர்ந்த குரலில் கேட்டாள் ஜைனப்பீ .

“அவர் பத்திரமா யிருக்கிறாராம். சேதி வந்திருக்கு.”

தாவணியின் தலைப்பைத் தலையிலே இழுத்துக் கொண்டு, சுபச் செய்திக்காக அல்லாஹுத்தாலா காட் டிய கருணையை நினைத்துத் துவா’ – பிரார்த்தனை – செய்து தன் நன்றியை வெளிக்காட்டினாள் ஜைனப்பீ.

“என்ன … கப்பலேறி ரங்கூன் போயிடலாம்னு நினைக்கிறியா?” என்றாள் ஆமீனாபீ லேசாகச் சிரித்துக்கொண்டு.

“ஆமாம், மாமி…. ஆனால் இருந்து….”

“ஏன் தயங்குறே! சொல்லேன்!”

“இன்னும் கொஞ்சநாள் இருந்துட்டுப் போறேன்.”

“அல்லாவே எங்கே வாப்பா நினைவு வந்துட்டவுடனே பருந்து மாதிரி நீ பறந்துடுவியோன்னு பயந்துட்டேன்.”

“நயினா முகம்மது நிக்காஹ்வைப் பார்த்துட்டு, புலவு சோறு சாப்பிட்டுத்தான் நீ போவணும், ஜைனப்” என்று ஆமீனாபீ சொன்னதும், ஜைனப்பீயின் தலையிலே பேரிடி வீழ்ந்தது. நாடி ஒரு விநாடி நின்று விட்டு மறுபடி அடிக் கத் தொடங்கினது போல் பிரமை உண்டாயிற்று. இருண்ட பாதாளத்தில் தான் உருண்டு வீழ்வது போல் மதிமருண்டு போனாள்.

“ஏன் முகவாட்டமா யிருக்கே , ஜைனப் ரங்கூன் ஞாபகம் வாட்டுது போல் இருக்கு! கேளேன் விசயத்தை! புள்ளே பட்டணத்திலேந்து வந்தவுடனே நிக்காஹ்’ நடக் கிறாப்பிலே உன் மாமூ எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட் டார். பொண்ணு மூக்கும் முழியுமா வெள்ளை வெளேர்னு ‘வக்கா’ மாதிரி இருக்கு. படித்திருக்கு; ஆலத்தம்பாடிக் ‘கொடுவாபட்டிக் குடும்பத்துப் பொண்ணுதான். ஏதோ நம்ப ஊர் அவுலியா துவாவாலே நல்ல இடம் நயினாக்கு அகப்பட்டுச்சு , ஜைனப்”

“நான் ஊருக்குப் போறேன். மாமி” – ஜைனப்பின் கண்கள் கலங்கிக் காட்சியளித்தன.

“என்ன அப்படித் தலைபோகிற அவசரமோ. ஆண்ட வனே ” விரல்களை நொடித்தாள் ஆமீனாபீ .

“அடுத்த வாரம் சின்ன வாப்பா அக்கரைக்குப் போறா ராம். அவரோடு நானும் கப்பலேறிடுறேன் : அப்புறம் ஆள் துணை கிடைக்காது, மாமி.”

“சரியாப் போச்சு, போர் நிக்காஹ்’வும் அடுத்த வாரந்தான் ! வீட்டுக் காரியங்களை ஒன்கிட்டே ஒப் படைக்க நினைச்சேன். ஆட்டுக் குட்டி மாதிரி நீ குதிக்கிறே”

“நான் கிளம்பித்தான் ஆகணும், மாமி. என்னைத் தடுக்காதிங்கோ” என்று ஆவேசத்துடன் சொல்லி , தாயக்கட்டையையும் சோழிகளையும் உதறி விட்டு எழுந்த ஜைனப்பீ விருட்டென்று அறைக்குள் நுழைந்தாள் வறு நிலத்தில் வீழ்ந்த இடிபோல் தடாலென்று கயிற்றுக் கட் டிலின் மீது வீழ்ந்து நெஞ்சு பிளந்து விடும்படி ஓவென்று கதறி யழுதாள்.

ஒரு வாரம் கழிந்தது. ”புள்ளே வந்த நாள் முதல் சரியாகவே பேசமாட்டங் கறது. காலம்பரக்கூடப் பசியாறச் சாப்பிடலாமே தேங் காய்ப் பால் புட்டையும், பிராசாப்பத்தையும் அரை குறை யாய்ச் சாப்பிட்டு எழுந்திடுச்சு. என்னமோ தெரியவில்லை” என்று தன் கணவனிடம் முறையிட்டாள் ஆமீனாபீ.

“நானுந்தான் ஒரு கண்ணு கவனிச்சுட்டு வர்ரேன், என்னைக் கண்டாலே ‘டோகர் ‘ கொடுத்து மறைஞ்சுடு

ஜைனப்பீ அளித்த தீர்ப்பு! 105 றான் அவன்” என்றார் இப்ராஹிம், தாடியை நெருடி விட்டு. பிறகு தொடர்ந்தார்; ”நிக்காஹ்வைப் பற்றி ஏதாச்சும் அவன் காதிலே போட்டியா , புள்ளே?”

“சொன்னேன்.”

“அப்புறம்?”

“இப்படி ஹோ வென்னு மாறிடுச்சு!”

“ஏனாம்?”

“அதுக்குப் புடிக்கல்லே” – முகத்தைச் சுளித்துக் கொண்டாள் ஆமீனாபீ .

“எது? பொண்ணா ?”

“கண்ணாளமே வேண்டாமாம் “

“கட்டணத் தொகை . ‘மஹர் ‘ வரிசை எல்லாம் பேசி முடிச்சுட்டு, பரிசம் போட்டு நிக்காஹ்’ தேதியை நிச்சயம் பண்ணிட்டு, பத்திரிகை போட்டதை உன் மவன் காதிலே ஊதினியா, ஆமீனா?” என்றார் இப்ராஹிம் பொறுமை இழந்தவராக .

“எல்லாம் சொல்லி அழுதாச்சு. இங்கிருந்து ஓடுச்சே அந்தக் குட்டி……

“ஜைனப்பா ! அதுக்கும் இதுக்கும் என்னாம் புள்ளே சம்பந்தம்?” – எரிச்சலுடன் இரைந்தார் இப்ராஹீம்.

“அந்தச் சிறுக்கி பெரிய சூது பண்ணிட்டுப் போயிடுச்சு.”

“என்ன உளர்றே?”

“என்ன சொக்குப் பொடியை எந்த ‘ஆனத் திலே போட்டுப் புள்ளேக்குக் கொடுத்துட்டாளோ , பாவி! அல்லாதான் அறிவான்.”

“விஷயத்தைத் தெளிவாகச் சொல்லித் தொலையும் புள்ளே .”

“அம்மாவை விழுங்கிட்டு, அப்பனையும் பொசுக்கிட்டு வந்த அந்தக் கழுதையைத்தான் கட்டிக்குவேன்னு உங்க புள்ளே நூறு தடவை சொல்லிட்டான்.”

கணவனை நோக்கிப் பேந்தப் பேந்த விழித்தாள் ஆமீனாபீ!

மிதியடிக் கட்டைகளைக் கழற்றிவிட்டு, குல்லாவை மாடத்திலே வைத்துவிட்டு, கயிலியை இறுகக் கட்டிக் கொண்டு நயினா முகம்மதின் அறைக்குள் புகுந்தார் இப்ராஹிம்.

“முகம்மது! உனக்கு நல்ல இடத்திலே ஏற்பாடு செஞ்சா , நீ அம்மாகிட்ட என்னென்னமோ தாறுமாறாகப் பேசினியாம்” என்றார் இப்ராஹிம் கனத்த குரலில், இடுப் பிலே கைகளை வைத்துக்கொண்டு.

“வாப்பா !”

“பிள்ளை நன்மைக்குத் தானே பெற்றவங்க பாடுபட றாங்கோ? உன்னைக் கெடுக்க எங்களுக்கு மனசு வருமா? நீ சொல்லு”

“வாப்பா, இந்த நிக்காஹ் விஷயத்தை நீங்க எனக்கு முன்பே தெரியப்படுத்தி யிருக்கணும்.”

“இப்போ தெரிஞ்சா போதாதா ! உனக்குக் கல்யா ணம் செய்து வைப்பது எங்கள் பொறுப்புத்தானே?”

“எனக்கும் ஒரு வார்த்தை சொல்லிவைப்பது உங்கள் கடமையல்லவா, வாப்பா?”

“வாப்பா. அம்மா சொல்றபடி புள்ளேங்க நடக்க ணும்னு நம் ‘ஹதீஸ்’ சொல்லலியா? நீ நமாஸ் பண்றவன். குரான் பூராவும் படித்தவன்.”

“நான் நியாயமாகத்தான் கேட்கிறேன் “

“பெத்தவன் கிட்டே புள்ளெயே நியாயம் பேசுவது! இந்தத் துனியாவுக்குக் ‘கியாமத்’ – முடிவு – வந்திரிச்சுப் போலிருக்கு.. ஹும்…. உன் கல்யாணம் நிச்சயமாயிடுச்சு ஜைனப்பீ அளித்த தீர்ப்பு! பத்திரிகையும் அனுப்பியாச்சு; ஊராருக்கு ‘தாவத்து’ம் சொல்லியாச்சு, என் மானம், என் ‘இஜ்ஜத்’ – கௌரவம் – எந்த நிலைமையில் இருக்கும்னு நீயே நினைச்சுப் பாரு” சொற்கள் பிரலாபமாக வெளிவந்தன.

“என் மனசிலே ஒன்று இருக்கும் போது நான் எப் படிச் சம்மதிப்பேன்?”

“அப்படி என்னாம் புள்ளே உள்ளுக்குள்ளே ஒளிச்சு வச்சிருக்கே?” பற்களை நறநறவென்று கடித்துக்கொண் டார் இப்ராஹிம்.

“இத்தனை வருஷமா நம்மோடு வாழ்ந்த , அந்தப் பாவம் அறியாத அபலையை நீங்க விரட்டிட்டிங்கோ, வாப்பா.”

“அந்த மூதி. அவளே போயிட்டாள். நாங்கள் என்ன செய்வோம்?”

“எங்கே போனாளோ …… பாவம்!”

“எந்தக் குட்டையிலும் வுளுந்து சாகலே. என் தம்பி வூட்டுக்கு நெருப்பு வைக்கத்தான் பக்கத்துத் தம்பிக் கோட்டைக்குப் போயிருக்காள். உங்க இரண்டு பேரு விஷயம் என் காதுலே விழாமல் இல்லை. உன் மீது எவ்வ ளவு நம்பிக்கை வைத்திருந்தேன் நான்!”

“என் மீது நம்பிக்கை வைத்த அந்த ஜைனப்புக்கு நான் துரோகம் செய்யலாமா வாப்பா?”

“பெரிய மௌலி சாயபு போல வாஸ்’ – உபந்நியாசம் – பண்ணாதே. முகம்மது. எனக்குக் கெட்ட கோபம் வரும். உனக்குக் கொடுத்த அந்த வனா’வாகிற படிப்பு இப்படி உன்னைச் சைத்தான்’ மாதிரி ஆட்டி வைக்குது.”

“வாப்பா !”

“இந்த ஹாஜி’ இவ்வளவு சொல்லியும் நீ இடுக்குப் பண்றே! எனக்குப் புத்திமதி வேறு சொல்ல ஆரம்பிச் சுட்டே. என் பேச்சை நீ மீறத் தீர்மானித்தால், வாசற் கதவு திறந்திருக்கிறது, பார்த்துக்கொள்.”

இப்ராஹிமின் சொற்களில் கண்டிப்பும் ஆவேசமும் சுடர்விட்டன.

“ஜைனப்பை நான் கைவிட முடியாது. வாப்பா” என்று நயினா முகம்மது சொன்னதும், இப்ராஹிம் வெகுண்டு எழுந்தார். பளிச்சென்றது மின்னல்! அதைத் தொடர்ந்தது கட கடவென்ற இடி!

என்று வீடே கிடுகிடுக்கும்படி கர்ஜித்தார் இப்ராஹிம். பேரிரைச்சலைக் கேட்ட ஆமீனாபீ புழக்கடைப் பக்கத்தி லிருந்து ஓடோடி வந்து கணவனுக்கும் மகனுக்கும் நடு விலே நின்று கொண்டாள்.

“புள்ளே மீது சீறி வுளாதிங்கோ! ஏதோ அறியாப் பருவம். புத்தி மோசம் போச்சு” என்று தன் மணவாள னைச் சமாதானப்படுத்தினாள்.

“ஆமீனா இந்தச் சொத்தை யெல்லாம் மசூதிக்கோ மதராஸாவுக்கோ எதிம்கானாவுக்கோ – அநாதை விடுதி – எழுதிவிட்டு, நாம் ஒரே திரியாக ஹஜ்’ போயிடுவோம். உன் மவன் எந்த தோஸக்குள்ளே ‘ – நரகம் – வுளுந்தாலும் சரி. புள்ளேயாம் புள்ளே … தென்னம் புள்ளே.. ஹும். அணிப் புள்ளே ” என்றார் இப்ராஹிம் மிக்க மனம் ஒடிந்த வராய்.

மறுமொழி கூறாது அவ்விடத்தைவிட்டு நீங்கிய நயினா முகம்மது தம்பிக்கோட்டை ஸ்டேஷனில் இறங்கிச் சின்ன வாப்பா வீட்டை அடைந்தான்.

சோகமே உருவெடுத்தாற்போல் கண்ணீரும் கம்பலை யுமாக ஜன்னல் கம்பிகளிலே சிரத்தைச் சாய்த்துக் கொண்டு நின்ற ஜைனப்பீயைக் கண்டதும், நயினா முகம் மதின் சப்த நாடிகளும் ஒடுங்கிவிட்டன. அவள் காலடி யில் கிடந்த திருமணப் பத்திரிகையின் மீது அவன் பார்வை திரும்பியதும் அவன் வெலவெலத்துப் போனான். நெஞ்சு படபடத்தது.

“என் ஆசை ஜைனப் அவ்வளவு ‘பத்மாஷ்’ – மூர்க் கன் – நானென்று நினைத்துவிட்டாயா? குற்ற மற்ற அப் பாவி நான். என் கண்களைக் கட்டி விட்டு நடந்துவிட்டது வேலை, ஜைனப்” என்று நாக்குழற, தடுமாறிக் கொண்டு சொன்னான் நயினா முகம்மது.

“உங்களுக்கு அதிர்ஷ்டம்’ வேறிடத்தில் காத்துக் கொண்டிருக்கும் போது இந்தத் தரித்திரம் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்?” என்றாள் ஜைனப். அவள் நீர் நிறைந்த விழிகள் தரையை நோக்கி வெறிக்கப் பார்த்தன.

“சொற்களை உளியாக மாற்றிக்கொண்டு என் நொந்த நெஞ்சைச் செதுக்கவேறே தொடங்கிவிட்டாய்!”

“இந்தச் சீமைக்குப் பெரிய சலாம் போட்டுவிட்டு, இன்று ராத்திரி நான் நாகப்பட்டினம் போகிறேன் நாளைக்குக் கப்பல் புறப்படுது.”

“நல்ல வேளையாக ஓடோடி வந்தேன்.”

“ஏன் இந்த மனவேதனை! எல்லாம் தக்தீர்’ – விதி – படிதானே நடக்கும்?”

“தக்தீர் தக்தீர்னு சொல்லி மனித சாதி செய்யும் அக்கிரமங்களை மறைக்கப் பார்க்காதே. ஜைனப்? உன் கையைக் கோத்துக்கொண்டு நானும் உன்னோடு கிளம்பி விடுகிறேன். இந்த ஒரே லட்சியத்தோடுதான் நான் இங்கே வந்து சேர்ந்தேன்.”

திகைத்து நின்ற ஜைனப்பீ ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்டாள். கலகலவென்று சிரித்து விட்டாள்.

“இந்த லட்சியமா உங்களுக்கு? சாமான்களை மூட்டை கட்டி எடுத்து வந்தீர்களா?” என்றாள் சாவதானமாக.

“என் மனச் சுமைப் பாரத்தைத் தாங்கி வந்ததே பெரிய காரியம்”

“மாமாவும் மாமியும் சந்தோஷமாக உங்களை வழி அனுப்பினாங்களா?”

“பெற்றவங்க முகங்களைக்கூடத் திரும்பிப் பார்க்கா மல் வந்துவிட்டேன் , ஜைனப்! என் இதய ராணி இங்கே இருக்கும் போது எனக்கு என்ன கவலை? எல்லாம் உதறி விட்டு வந்த என்னை அழைத்துக்கொண்டு எந்தப் பாலை வனத்திற்கோ சென்று விடு” என்று மன்றாடினான் மிக்க உணர்ச்சியுடன்.

பித்துப் பிடித்தவள் போல் சிரித்தாள் ஜைனப்பீ. “இந்த அதிசயத் தீர்மானத்துடன் வந்த உங்களுக்கு ஆண்டவன் நெஞ்சு ‘ ஒன்று வைக்க மறந்துவிட்டான் போலும்!’

நயினா முகம்மது திடுக்கிட்டான்.

தொடர்ந்தாள் அவள் : “இந்த விஷயம் உங்கள் வாப்பா காதில் விழுந்தால் அவர் உயிர் வைத்திருப்பாரா? பத்துப் பெண்டுகளுக்கு முன்னால் மாமி, முகத்தை எப்ப டிக் காட்டு வாங்கோ ! உங்களுக்கு நிச்சயித்த அந்தக் கல்யாணப் பெண்ணின் கதியை நினைச்சுப் பாத்தீங்களா?”

“ஜைனப்”

“இத்தனை வருஷங்களாக உங்கள் வீட்டுச் சோற்றை உண்டதற்கு இந்தப் பாவத்தை நான் சுமந்து செல்ல எனக்குப் புத்தி சொல்ல வந்தீங்களே!’

“ஜைனப்!”

“அடுத்த வாரம் நடக்கப் போகும் உங்க நிக்காஹ்….”

“அது ‘வனாவாகி நாசமாகட்டும் ” என்று கத்தினான் நயினா முகம்மது.

“ஆமீனாக – சுபமாக – முடியட்டும் என்று அந்தப் ‘பர்வாதிகாரி’டம் – ஆண்டவன் – ‘துவா’ – பிரார்த்தனை – செய்கிறேன் நான்.”

“ஜைனப்! இந்த உபதேசங்களைக் கேட்கத்தான் எல்லாவற்றையும் உதறிவிட்டு நான் இங்கே வந்தேனா? மனம் ஒடிந்து வந்த என்னை நீயும் புறக்கணித்துவிட்டாய். இனிமேல் இந்தத் துனியாவும் என்னை வெறுக்கும் போல் தெரிகிறது. உன் இஷ்டப்படி எங்கே வேண்டுமானாலும் நீ போய்விடு. உன் கப்பல் செல்லும் அதே கடலிலே இந்த உடல் மிதந்து கொண்டு எப்படியாவது ரங்கூன் கரையை உன் பின்னால் அடைந்தே தீரும்” என்று உணர்ச்சியுடன் நயினா முகம்மது பகர்ந்ததும், ஜைனப்பீ அசந்துவிட்டாள்.

“இது என்ன பைத்தியக்காரக் கிறுக்குப் பேச்சு ! என் இருதயம் இரு துண்டுகளாகப் பிளந்து, வாழ்வு கசந்து போன போதும் உங்கள் வீட்டை விட்டுக் கிளம்பிய பெண்ணாகிய நான் வாழத்தான் புறப்பட்டேன், சாவதற்கு இல்லை. நீங்கள் ‘ஜவான்’ – ஆண் பிள்ளை – படிச்சவங்க. இஸ்லாத்திலே பிறந்தவங்க. வந்த வழி திரும்பிப் போங் கள். வாப்பா. அம்மா கால்களிலே விழுந்து மன்னிப்புக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகிறவளுடன் சந்தோ ஷமாகக் குடும்பம் நடத்துங்கள். நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன்.”

ஜைனப்பீ பேசிய தோரணையும், நின்ற கோலமும். வீசிய பார்வையும் நயினா முகம்மதைத் திக்குமுக்காடச் செய்தான். அவன் நின்ற கோலத்தைப் பார்க்கப் பரிதாப கரமா யிருந்தது.

“ஜைனப் நீதான் பேசுகிறாயா?”

“இல்லை! மனச்சாட்சி பேசுகிறது.” தொடர்ந்தாள் ஜைனப்பீ : “வண்டி வந்துவிட்டது. உங்கள் கல்யாணப் பந்தலிலே நான் இல்லாதபடி ‘நஸீப்’ சதி செய்து கண்ணா மூச்சி விளையாடினாலும், அந்த நல்ல வேளையிலே கப்ப லிலே இருந்துகொண்டு உங்களுக்காகவும் உங்களுக்கு வரப்போகும் கல்யாணப் பொண்ணுக்காகவும் அல்லா ஹுத்தாலாவிடம் நமாஸ் தொழுது மனம் குளிர்ந்து ‘துவா செய்வேன்.

சாமான்களை ஏற்றிய பின் வில் வண்டியில் ஏறிக் கொண்டாள் ஜைனப்பீ . துப்பட்டியை வண்டியின் பின் புறத்தில் திரையாகத் தொங்கவிட்டுத் தன் உருவத்தை அவள் மறைத்துக்கொண்டதும், நயினா முகம்மதின் கண் களில் அந்தகாரம் சூழ்ந்துகொண்டது. வண்டிக்குள் ளிருந்து வெளிக் கிளம்பிய நெஞ்சை உலுக்கிவிடும் விம்மலைக் கேட்டதும் அவன் ஸ்தம்பித்துவிட்டான்!

வண்டி நகர்ந்தது!

– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

– ‘ஆனந்த விகடனில்’ தோற்றமளித்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *