ஜெனிபர் வாழ்வில் முன்னேற வேண்டுமென மிகக் கடுமையாக உழைக்கும் ஒரு பெண்மணி. சிறு வயது முதற் கொண்டே அம்மாவின் செல்லப் பிள்ளையான அவள் வீட்டு வேலைகளைச் செய்ய அம்மாவுக்கு விருப்பத்துடன் உதவி செய்வாள். தான் வளர்ந்து பெரியவளானதும் தனக்கென அழகிய வீடொன்று இருக்க வேண்டும் என்று விரும்பினாள். அமைதியான குடும்பம் அமைய வேண்டுமென்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது. அதற்கமைய படித்த, உயர் தொழில் புரிகிற கணவனும் அமைந்தான்.
அவர்கள் சிறிது காலம் தாய், தந்தையருடன் வசித்த பின் தமக்கென காணியொன்றை வாங்கி அதில் வீடொன்றைக் கட்ட ஆரம்பித்தனர். அக்காலத்தில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பிறந்ததால் அதனுடன் அவர்கள் திருப்தியடைந்தனர். நாட்கள் கிழமையாகி கிழமைகள் மாதமாகி ஆண்டுகள் பல கடந்தன. பிள்ளைகள் பெரியவர்களாகி பாடசாலை சென்றனர்.
இக்காலத்தில் தமது வீட்டை கணிசமான அளவுக்கு பூர்த்தி செய்திருந்தனர்.
கீழே வீட்டைப் பூர்த்தி செய்திருந்ததுடன் மேல் மாடி ஒன்று அமைக்க கொங்கிறீட் போடப்பட்டு தயாராக இருந்தது.
ஜெனிபர் வேலைக்குப் போகா விட்டாலும் அவளுக்கு வீட்டில் செய்ய தலைக்கு மேல் வேலைகள் இருந்தன. காலை எழுந்தவுடன் தேநீர் தயாரித்து கணவன் பிள்ளைகளுக்குக் கொடுத்த பின் தானும் அருந்தியவுடன் அவளது வேலைகள் ஆரம்பிக்கும். கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் எடுத்துச் செல்வதற்காக உணவு தயாரிக்க வேண்டும். அவர்கள் வீட்டிலிருந்து புறப்படுவது வரை அவள் பம்பரமாகச் சுழல்வாள். அதன் பின்னரும் வேலை ஓயாது. வீட்டைக் கூட்டிப் பெருக்கி சுத்தமாக்கி ஒழுங்குபடுத்த வேண்டும். சமையல் பாத்திரங்களை கழுவ வேண்டும். பிள்ளைகளதும் கணவனதும் துணிகளைத் துவைத்து உலர்த்த வேண்டும்.
இப்படி அவளுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்.
இந்த வேலைப் பளுவுக்கு மத்தியில் அவள் காலைச் சாப்பாட்டை மறந்து போய் விடுவாள். அல்லது அக்கறை எடுக்க மாட்டாள். அநேகமான நாட்களில் காலைச் சாப்பாட்டையும் மத்தியானச் சாப்பாட்டையும் சேர்த்து பிற்பகல் இரண்டு, மூன்று மணிக்குத்தான் சாப்பிடுவாள்.
அன்றும் அப்படித்தான் கணவனும் பிள்ளைகளும் புறப்பட்டுச் சென்ற பின் எல்லா வேலைகளையும் செய்து விட்டு, துணிகளையும் துவைத்து எடுத்துக் கொண்டு மேலே வீட்டு மாடியில் இன்னும் பூர்த்தியாகாமல் இருந்த பகுதிக்குச் சென்று பாதி போடப்பட்டிருந்த கொங்க்றீட் பலகை மீது ஏறினாள்.
அப்போது முற்பகல் பதினொரு மணியிருக்கும் காலைச் சாப்பாடு சாப்பிடாததால் வயிறு குடைந்த போதும் வழக்கம் போல் “”பிறகு சாப்பிடலாம்” என்று மனதுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டாள். அவள் இரண்டு மூன்று துணிகளை எடுத்துக் காயப் போடும் போதே கால்களிலும் உடம்பிலும் தெம்பற்றுப் போவது போல் உணர்ந்தாள். தலை சுற்றுவது போலவும் இருந்தது.
“”பரவாயில்லை கொஞ்சந் துணிகள்தானே போட்டு விட்டே போகலாம்” என்று எஞ்சிய துணிகளையும் கொடியில் எடுத்துப் போட முனைந்தாள்.
சில கணங்களில் அது நடந்து முடிந்து விட்டது. மயக்கமுற்று சுயநினைவில்லாமல் கீழே சாய்ந்த ஜெனிபர் மேற்தட்டின் சீமெந்து கொங்கிறீட்
பலகையின் விளிம்பில் நின்றதால் ஒரு மாடி மேலே இருந்து தரையில் விழுந்தாள். அவளது தலை கீழே இருந்த தரையில் அடிபட்டிருந்தது.
விஷயத்தைத் தெரிந்து கொண்ட அயல்வாசிகள் ஒன்று கூடி அவளை தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவர்கள் அவளின் உயிரைக் காப்பாற்றித் தந்த போதும் அவள் கால் கைகள் விளங்காமல் போய் ஆயுள் முழுவதும் கட்டிலில் விழுந்து கிடக்க வேண்டியதாயிற்று.
உண்மையில் ஜெனிபரின் வாழ்வை பறித்துக் கொண்டது யார்? விதி என்று கூறலாமா.
அவ்வளவு தூரம் புத்திசாலியாக நடந்து கொண்ட ஜெனிபரின் பலவீனம் அவள் வேலைக்குச் சாப்பிடாமல் விட்டதுதான். அத்தனை பேரினதும் பாரத்தைத் தனியாளாக தூக்கிச் சுமந்த ஜெனிபர் ஏனையோருக்குப் பாரமாக இருந்து வாழ்வு முழுவதும் பெருமூச்சு விட வேண்டியதாயிற்று. அவள் உயிருடன் இருந்தாலும் இறந்தவள் தான்.