ஜெட்லேக்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 9,320 
 

ஒரு வழியாக சென்னையிலிருந்து ந்யூயார்க் செல்லும் விமானதில் அமர்ந்தனர் 72 வயதான சங்கரனும் அவர் மனைவி 65 வயதான ராஜியும். அவர்களுக்கு இரு மகன்கள், ஸ்ரீராம், ஸ்ரீதர். இருவரும் நன்கு படித்து நல்ல வேலையில் சேர்ந்து, பின் அமெரிக்க கம்பெனிகளிலேயே வேலைகள் கிடைத்து திருமணமாகி இருவரும் 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கின்றனர். ஸ்ரீராம் ந்யூயார்கிலும் ஸ்ரீதர் கலிஃபொர்னியாவிலும் அமெரிக்கக் குடிமக்களாக சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். இரு மருமகள்களான நித்யாவும் ப்ரீதியும் தேடிபிடித்த ஸாஃப்ட்வேர் பட்டதாரிகள். அவர்களும் வேலை பார்க்கிறார்கள். ஆனாலும் சங்கரன் மனதில் துளியும் உற்சாகமில்லை.

விமானப் பயணம் ஏர்ஹோஸ்டஸின் இனிய வரவேற்புடன் ஆரம்பித்தது. விமானம் ரன்வேயில் வேகமாக ஓடி ஆஹாயத்தில் எழும்பியது. ஸீட் பெல்டை அவிழ்த்துவிட்டு, மனைவியயைப் பார்த்தார். அவள் கொண்டு வந்திருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்திருந்தாள். இவள் எப்படித்தான் எல்லாவற்றையும் சகஜமாக எடுத்துக்கொண்டிருக்கிறாளோ என்று நினைத்தவாறு சாய்ந்து கண்களை மூடிகொண்டார். அவரின் நினைவுகள் பின்னோக்கிப் பறந்தன.

சங்கரன் தன் குடும்பச்சூழ்னிலையால் டிப்ளமா படிப்பதே கடினமாக இருந்தது. அதனால் தன் பிள்ளைகள் இருவரையும் எஞ்சினீர்கள் ஆக்க வேண்டும் என்பதே குறிிக்கோளாக இருந்தது. ஸ்ரீராம் மெக்கானிகல் எஞ்சினீரிங் நல்ல மதிப்பெண்களுடன் முடித்த போது வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. வேலை தேடிகொண்டே ஒரு முன்னணி சாஃப்ட்வேர் கல்விகூடத்தில் சேர்ந்து தன் தகுதிகளையும் திறமைகளையும் வளர்த்துக்கொண்டான். ஆறு மாதங்களில் நல்ல வேலையில் சேர்ந்தபோது சங்கரனுக்குப் பெருமை பிடிபடவில்லை. அப்பொழுது சாஃப்ட்வேர் படித்த பட்டதாரிகள் அமெரிக்கா பறந்து கொண்டிருந்தார்கள். சங்கரனுக்கு அடுத்து ஸ்ரீராம் எப்பொழுது அமெரிக்கா போவான் என்பதில் ஆர்வம் அதிகமாயிற்று. ஒரு வருடத்தில் அந்த வாய்ப்பும் வந்தது. பார்தவர்களிடம் எல்லாம் ஸ்ரீராம் அமெரிக்காவில் இருப்பதை பெருமையாகச் சொன்னார். அடுத்து ஸ்ரீதரை பீ. ஈ கம்ப்யூட்டர் ஸைன்ஸ் படிக்க வைத்தார். அவன் கல்லூரியில் முதல் மாணவனாக வந்து கேம்பஸ் இன்வர்வ்யூவிலேயே வேலை கிடைத்து அடுத்த ஆறு மாதங்களில் அமெரிக்கா சென்றான். உரிய வயதில் இருவருக்கும் பீ. ஈ பட்டதாரிகளையே மணமுடித்தார். ஸ்ரீராம் தன் குழந்தைகள் அமெரிக்க ப்ரஜையாக இருந்தால் பிற்காலத்தில் அவர்கள் படிப்பிற்கு நல்லது, அதனால் இன்னும் சில வருடங்கள் அங்கேயே இருக்கப்போவதாகச் சொன்னபோது மறுப்பேதும் சொல்லவில்லை. ஸ்ரீதரும் அதையே பின்பற்றினான். அவர்களுக்கு க்ரீன் கார்ட் கிடைத்தபோது சங்கரன் ஸ்வீட் சாப்பிட்டுக் கொண்டாடினார்.

நித்யா எம்.எஸ் படிக்கிற போது, அவளின் இரண்டு குழந்தைகளை பார்த்துக்கொள்ள, பின் ப்ரீதியின் ப்ரசவதிற்கு என நான்கு முறை சென்று அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்து மருமகள்கள் மெச்சிய மாமனார் மாமியாராக திரும்பியிருக்கிறார்கள். அப்பொழுது இருந்த உற்சாகம் இப்பொழுது இல்லை. காரணம் இல்லாமல் இல்லை. கடந்த முறை சென்ற பின் ஐந்து வருடம் கழித்து இப்பொழுதுதான் செல்கிறார்கள். நடுவில் இரு மகன்களும் மூன்று வார விடுமுறையில் வந்தார்கள். வந்தவர்களுக்கு இவர்களுடன் ஒரு வாரம், மனைவி வீட்டில் ஒரு வாரம் நண்பர்கள் பார்க ஷாப்பிங்க் செய்ய ஒரு வாரம் என்று விடுமுறை பறந்தது. பேரன் பேத்திகளுடன் பொழுது போனதே தெரியவில்லை 67 வயது சங்கரனுக்கு. அப்பொழுதே சொல்ல ஆரம்பித்து விட்டார் சீக்கிரமாக இந்தியா வரும் ஏற்பாடுகளைச் செய்யும்படி. அவர்களும், வருவதர்க்கு விரும்புகிறோம் என்றாலும் அங்கு எங்களுக்கு தகுந்த சம்பளத்தில், நல்ல வேலைகள் கிடைக்குமா, குழந்தைகளுக்கும் அங்கு பள்ளிகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள முடியுமா என்பது சந்தேகம்தான், தங்கள் நண்பர்கள் சிலர் இக்காரணங்களினால் இந்தியாவிலிருந்து திரும்பிவிட்டர்கள் என்று ஒவ்வொரு முறை ஒரு காரணம் கூரியபோது கோபமாகத்தான் இருந்தது. ராஜிதான் அவரை பல முறை சமாதானப்படுத்துவாள். அவர்களும் தங்கள் குடும்பம் குழந்தைகள் அவர்களுடைய எதிர்காலம் என்று நினைக்கிறார்கள். அதில் தவறேதும் இல்லை என்பாள்.இருந்தாலும் அவருக்கு பிள்ளைகளில் ஒருவரும் இந்தியாவில் தன்னுடனோ அல்லது நினைத்தால் வந்து பார்க்கக்கூடிய தூரத்திலோ இல்லை என்பது பெரும் குறையாகத்தான் இருக்கிறது. இப்படியே வருடங்கள் கடந்து அவர்களும் அமெரிக்க ப்ரஜைகளாக ஆகிவிட்டர்கள்.அவர்களைப் பார்த்து மூன்று வருடங்கள் ஆகின்றன. ஒரு வருடம் முன்னால் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்த போது இரு மகன்களும் இரண்டு வார விடுப்பில் வந்து ஹாஸ்பிடலிலிருந்து அம்மாவிற்கு தைரியம் சொல்லி எல்லா உதவிகளும் செய்து டிஸ்சார்ஜ் ஆகியபின்தான் சென்றார்கள். போகுமுன் இருவரையும் ஆறு மாதத்தில் அமெரிக்கா வந்துவிடும்படி மிகவும் வற்புறுத்திவிட்டுச் சென்றார்கள். அவர்கள் வராவிட்டால் தாங்கள் மிகுந்த குற்ற உணர்வுக்கு ஆளாவதாகக் வருந்தினார்கள். தினமும் மகனோ மருமகளோ தொலைபேசி மூலம் விசாரிகிறார்கள். இவர்களை வருந்தி வருந்தி அழைத்ததன் பேரில் இதற்கு மேலும் மறுக்க முடியாமல் கிளம்பியிருக்கிறார்கள். இந்த முறை இவர்களுக்கு க்ரீன் கார்ட் அப்ளை செய்வதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அப்படியே தூங்கிப்போனார்.

காலைச் சிற்றுண்டிக்காக ராஜி அவரை எழுப்பினாள். பின்னிரவில் கிளம்பியதால் அசந்து தூங்கிவிட்டார். அவர்கள் இருவரும் ஃப்ரூட் சலாட் மற்றும் ஜூஸ் மட்டும் எடுத்துக்கொண்டு லண்டன் விமான நிலையத்தில் தரையிரங்கக்காத்திருந்த்ார்கள். அங்கு மூன்று மணி நேரம் ஓய்விற்குப்பின் எட்டு மணி நேரப்பயணம். லண்டனில் இறங்கியபோது இந்திய நேரம் காலை மணி பத்து. பசித்தது. கொண்டு வந்திருந்த இட்லியை இருவரும் சாப்பிட்டார்கள். ராஜி கண்களை மூடி ஓய்வெடுதாள். சங்கரன் சிறிது நேரம் செய்திதாள் புரட்டினார். இங்கும் அங்கும் நடந்தார். போர்டிங்கிற்கான அழைப்பு சன்னமான ஒலிபெருக்கியில் கேட்கவும் ராஜியை எழுப்பினார். விமானம் ந்யூயார்க் நகரம் நோக்கி தன் பயணத்தைத் துவங்கியது. விமானம் சீராக பறக்க ஆரம்பித்ததும் ராஜி தூங்குவதர்க்கு ஆயத்தமானாள். சங்கரனுக்கு தூக்கம் வரவில்லை. படிப்பதர்க்கான விளக்கை போட்டுக்கொண்டு புத்தகத்தை பிரித்தார். மனம் லயிக்கவில்லை. மனைவியைப் பார்த்தார். ராஜி இல்லாமல் தன் வாழ்க்கை இவ்வளவு சீராக அமைந்திராது என்ற எண்ணம் நைல் நதியாக அவர் மனதில் ஓடியது. அவரின் பெற்றோரை கடைசி வரை முகம் கோணாமல் பார்த்து பார்த்துச் செய்தாள். அவர்களுக்கு கல்யாணமாகி இரண்டு வருடங்களில் அவரின் தங்கைக்கு கொஞ்சம் அந்தஸ்தான இடத்தில் வரன் அமைந்தது. திருமண செலவுகளுக்கு சங்கரன் யோசித்தபோது தன் வளையல்களை புன்னகை மாறாமல் எடுத்து அளுக்குப் போட்டாள். இன்னும் எவ்வளவோ. அவருடைய எந்த சஞ்சலங்களும் அவளை பாதித்ததாகத் தெரியவில்லை. அலுப்பாக இருந்தது. இந்திய நேரம் நடுப்பகலானதால் அவருக்குத் தூக்கம் வரவில்லை. விமானப்பணிப்பெண் மிகவும் பணிவோடு கொண்டுவந்த உணவில் பிடித்ததை மட்டும் உண்டு, ராஜியை எழுப்ப மனமில்லாமல் ராஜிக்கு பழங்கள் மட்டும் கொண்டுவந்தால் போதும் எனப் பணித்தார். ராஜி எழுந்தபின் பேரனுக்காக ஸ்வெட்டர் பின்னுவதில் ஈடுபட்டாள். சங்கரன் மணி பார்த்தார். இந்திய நேரம் இரவு எட்டு. பசித்தது. ஆனால் விமானத்தில் தேனீர் நேரம் என்பதால் பிஸ்கட் டீ காபி பரிமாரப்பட்டது. வேண்டாவெறுப்பாக சாப்பிட்டு வைத்தார். ராஜி உற்சாகமாக ஏேத்தோ பேசிக்கொண்டு வந்தாள். இன்னும் மூன்று மணி நேரதில் ந்யூயார்கில் இறங்கிவிடலாம், பின் ஒரு மணி நேரப் பயணம். வீடு போய்ச்சேர்ந்து விடலாம்.

எதேச்சையாக ராஜியின் வாட்சைப்பார்த்தார்.10.30 காட்டியது. “முதலில் வாட்சில் டைமை சரியாக வை. ஸ்ரீராம் பார்த்தால் நான் உனக்கு உறுப்படியான வாட்ச் கூட வாங்கித்தரவில்லை என்று நினைப்பான்” என்று சீண்டினார். அதற்கு ராஜி, “நான் சென்னையில் ஏரியதுமே ந்யூயார்க் டைம் செட் பண்ணிக்கொண்டேன், இது ந்யூயார்க் டைம் காண்பிக்கிறது என்றாள்”. ” நீ டைமை மாற்றி வைத்துக்கொண்டால் உடனே ந்யூயார்க் வந்துவிடுமா? பிள்ளையை பார்க்க அவ்வளவு ஆர்வமா?” என்று சற்று கேலியாகக்கேட்டார். இவரைப் பார்த்து புன்னகைத்து, “நேரத்தை மாற்றிக்கொண்டால் ந்யூயார்க் வராது ஆனால் நம் மனமும் மூளையும் அந்த டைமிற்கு போய்ச்சேறுவதர்குள் அட்ஜஸ்ட் ஆகிவிடும், ஜெட்லேக் இல்லாமல் நாம் அங்கு முதல் நிமிஷத்திலிருந்து ஸ்ரீராம், நித்யா குழந்தைகளுடன் குதூகலிக்கலாம்” என்றாள். “ரூம் போட்டு யோசிச்சியோ!!” என்று வடிவேலு பாணியில் கேட்டார்.

“இல்லை பதினைந்து வருடங்களுக்கு முன்பே யோசித்தது. பிள்ளைகளை வேலைக்கு என்று அமெரிக்கா அனுப்பும்போதே என்னை நான் இந்த நேரத்திர்க்குத் தயாராக்கிக்கொண்டேன். உங்கள் அப்பா அம்மா உங்கள் கிராமத்திலெயே இருந்து கொண்டு உங்களை வேலையை விட்டுவிட்டு வா. நாங்கள் இங்குதான் இருப்போம் என்று சொல்லியிருந்தால் நீங்கள் போயிருப்பீர்களா? அவர்கள் நம்மோடு வந்ததால் நான் பார்த்துக்கொள்ள முடிந்தது. அதுபோல் நம் பிள்ளைகளுக்கும் அவர்கள் இருக்க வேண்டிய இடத்தைத் தீர்மானிக்க உரிமை உண்டு. விமானத்தில் நாம் எப்படி பிடித்ததை சாப்பிட்டு முடியாததை விடுத்தோமோ அதுபோல் அங்கும் பிடித்ததை செய்து நாமும் சந்தோஷமாக இருந்து அவர்களையும் சந்தோஷமாக இருக்கச்செய்வோம். நம் பிள்ளைகளும் நம்மை நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.

நித்யாவும் ப்ரீதியும் நல்லவர்கள்தான். கவனிப்பாரில்லாமல் இருக்கும் பெற்றோரை நினைத்துப் பாருங்கள். க்ரீன் கார்ட் கிடைத்தாலும் நமக்கு எங்கு பிடிக்கிறதோ அங்கு இருப்போம். . அவர்கள், நீங்கள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றியபோது எவ்வளவு சந்ெதோஷப்பட்டீர்கள். இப்பொழுது அவர்களை ஏன் அனாவசியமாய் குற்ற உணர்வுக்கு ஆளாக்கவேண்டும்?

ஒரு நாணயத்திற்கு இருபக்கங்கள் உண்டு. எது சரி தவறு என்பதற்கு இடமே இல்லை. உங்கள் நினைவிலிருந்து ஜெட்லேகை நீக்கி இதையும் பரிணாம வளர்ச்சி என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.” என்று இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தவள் போல ஒரே மூச்சாய் சொல்லிமுடித்தாள்,

அவர் எண்ணங்களை துல்லியமாய் அறிந்தவளாக. விமானம் ந்யூயார்க்கில் தரையிரங்கியதும் சங்கரனுக்கு இந்திய நேரப்படி தூக்கம் வந்தாலும் மனம் நன்றாக விழித்துக்கொண்டது. உற்சாகமானார். வாட்சை ந்யூயார்க் டைமிற்கு மாற்றிக்கொண்டார். ராஜிக்குப் புரிந்தது அவர் மனதையும் மாற்றிக்கொண்டார் என்று.

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *