நான்கு காலில் நடந்த அந்த வித்யாசமான ஜீவராசி, இரண்டு கால்களில் நேராக நடந்த மனிதன் ஒருவனை இடுப்பில் சங்கிலி போட்டு இழுத்துக் கொண்டு சென்றது.
போய்க் கொண்டிருக்கும் போது, அதனுடைய நண்பன் அந்த ஜீவனைக் கேட்டது “எங்கடா இந்த மனிதனைக் கொண்டு போற?’
“வீட்டுக்குப் பாதுகாப்பா, நமக்கு ஒரு பொழுதுபோக்கா இருக்கட்டுமேன்னு, பூமியில இருந்து புடிச்சுட்டு வந்து வளர்க்கிறேன்! இப்ப என்னடான்னா பக்கத்து வீட்டுல
வளர்க்கிற பொம்பனை மனுஷியைப் பார்த்து வயலண்ட்டாகுது! ஒரே சத்தம்! அதனால் கொண்டு போய் “ஆண்மை நீக்கம்’ செய்து கொண்டுவர அழைச்சிட்டுப்
போறேன்’ என்றது அந்த ஜீவன்.
“சரி போயிட்டு வா! இதோட பேர் என்ன?’
“மதன்னு பூமியில கூப்பிட்டாங்க!’
கட்டிலில் இருந்து உருண்டு விழுந்தான் மதன். “அப்பப்பா! என்ன பயங்கரக் கனவு!’ மனதிற்குள் எண்ணியபடியே, மறுபடியும் தூங்க ஆரம்பித்தான் மதன்.
காலையில் எழுந்ததும் மனைவி ராஜி கேட்டாள். “ஏங்க, நம்ம ஜுனோவுக்கு கு.க. ஆபரேஷன் பண்ண டாக்டர் கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கினீங்களே, கூட்டிட்டுப் போகலையா?’
“பாவம்டி அது! இயற்கைக்கு எதிரா அதுக்கு கு.க. பண்ணுறது தப்பு! அதோட இயல்பா அது வளரட்டும்!’ என்ற கணவனை கேள்விக்குறியாய் பார்த்தாள் ராஜி.
– வி.சகிதா முருகன் (பிப்ரவரி 1, 2014)